search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருநங்கைகள்"

    • சுவரில் ஓவியம் வரையும் பணியை ‘திருநங்கை தூரிகை குழு’ என்ற குழுவில் உள்ள திருநங்கைகளிடம் ஒப்படைத்தனர்.
    • திருநங்கைகள் தீட்டிய இந்த சுவர் ஓவியங்களை அவ்வழியாக செல்லக்கூடிய பலரும் பாராட்டி ரசித்தும் செல்கின்றனர்.

    திருவொற்றியூர்:

    எண்ணூர் கத்திவாக்கம் பகுதியில் அரசு மேல்நிலை பள்ளியில் படித்த பழைய மாணவர்கள் மற்றும் எண்ணூர் மக்கள் நல சங்கத்தை சேர்ந்தவர்கள் இணைந்து எண்ணூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வெளிப்புற சுவற்றை வர்ணம் தீட்டி அழகுபடுத்த முடிவு செய்தனர்.

    இதையடுத்து, சுவரில் ஓவியம் வரையும் பணியை 'திருநங்கை தூரிகை குழு' என்ற குழுவில் உள்ள திருநங்கைகளிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து திருநங்கைகள் ஸ்மித்தா அபிமுக்தா, வர்ஷா, காஞ்சனா, ஆகியோர் தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் சுவரில் கலை பண்பாட்டினை ஓவியமாக வரைந்து திருநங்கைகள் அசத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து திருநங்கை அபிமுக்தா கூறும்போது,

    எண்ணூர் மக்கள் நல சங்கத்தினர் மூலம் எங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. சமூகத்தில் திருநங்கைகள் என்றாலே பாலியல் தொழில் செய்பவர்கள் அல்லது யாசகம் பெறுபவர்கள் என்ற எண்ணம் பரவி உள்ளது. அதனை மாற்றும் நோக்கத்துடனேயே இவ்வாறு தாங்கள் தொடங்கிய திருநங்கை தூரிகை அமைப்பு மூலம் ஓவியங்கள் வரைவதாக கூறினார். மேலும், பள்ளியின் வெளிப்புற சுவற்றில் தமிழர்களின் ஜல்லிக்கட்டு கலை, திருவள்ளுவர், அவ்வைபாட்டி, பாண்டியர், சேரர், சோழர், தஞ்சை பெரிய கோவில் சித்திரம், கோவில் யானை போன்ற தமிழர்களின் கலாசார இலக்கிய பண்பாடு குறித்த ஓவியங்களை சுவரில் வரைவதன் மூலம் வரும் தலைமுறையினருக்கும் நமது பாரம்பரியத்தை கொண்டு சேர்க்க முடியும் என்றும் தெரிவித்தார். திருநங்கைகள் தீட்டிய இந்த சுவர் ஓவியங்களை அவ்வழியாக செல்லக்கூடிய பலரும் பாராட்டி ரசித்தும் செல்கின்றனர்.

    • காயமடைந்த அனன்யா, மகேஷ் இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
    • 2 திருநங்கைகள் தாக்கப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை துலுக்கர்பட்டியை சேர்ந்தவர் மகேஷ், இவரது தோழி தென்காசி மாவட்டம் கே. ஆலங்குளத்தினை சேர்ந்த அனன்யா.

    திருநங்கையான இவர்கள் இருவரும் கடந்த மாதம் 7-ந்தேதி துலுக்கர்பட்டியில் இருந்து கெச்சிலாபுரத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.

    அப்போது கழுகுமலை ஆறுமுகம் நகர் பகுதியை சேர்ந்த நோவாபூபன் மற்றும் சங்கரன்கோவிலை சேர்ந்த விஜய் இருவரும் வழிமறித்து திருநங்கைகள் இருவரையும் கெச்சிலாபுரத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்றனர்.

    பின்னர் அங்கு வைத்து அவர்களை தாக்கியதோடு அனன்யாவின் தலைமுடியை அறுத்துள்ளனர். மேலும் அதை வீடியோ எடுத்தது மட்டுமின்றி வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டி உள்ளனர்.

    இதில் காயமடைந்த அனன்யா, மகேஷ் இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். அப்போது நோவாபூபன், விஜய் இருவரும் அரசு மருத்துவமனைக்கு வந்து இந்த ஊரில் இருக்கக்கூடாது என்று திருநங்கைகளை அரிவாளை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து திருநங்கைகள் அங்கிருந்து சென்றுள்ளனர்.

    இந்நிலையில் 2 திருநங்கைகள் தாக்கப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

    இதைத்தொடர்ந்து சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் திருநங்கைகளை தாக்கிய நோவாபூபன், விஜய் இருவர் மீது ஆபாசமாக பேசுதல், கொலைமிரட்டல் விடுத்தல், திருநங்கைகள் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    • காலை 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலெக்டர் அலுவலகம் முன்பு வந்தனர்.
    • கடந்த 10 ஆண்டுகளாக திருநங்கைகளாக இருந்து வருகின்றோம். ஆனால் எங்களுக்கு இதுவரை இருப்பிடம் இல்லை. மேலும் வேலை வசதி இல்லாததால் மிகுந்த அவதியடைந்து வருகின்றோம்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்ற வருகின்றது. இன்று காலை 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலெக்டர் அலுவலகம் முன்பு வந்தனர். பின்னர் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், கடந்த 10 ஆண்டுகளாக திருநங்கைகளாக இருந்து வருகின்றோம். ஆனால் எங்களுக்கு இதுவரை இருப்பிடம் இல்லை. மேலும் வேலை வசதி இல்லாததால் மிகுந்த அவதியடைந்து வருகின்றோம்.

    இது மட்டுமின்றி எங்கும் வேலை தர மறுப்பதால் மன உளைச்சலில் இருந்து வருகிறோம். ஆகையால் எங்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்கள்‌. இதனை தொடர்ந்து போலீசார், உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆகையால் சாலை மறியல் போராட்டத்தை கைவிட வேண்டும் என தெரிவித்தனர். அதன் பேரில் திருநங்கைகள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • திருநங்கைகளுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு கிடைக்கும்.
    • அடித்தட்டு மக்கள் கண்ணியத்துடன் வாழ மத்திய அரசு அக்கறை செலுத்துகிறது.

    திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வகை செய்யும் புதிய ஒப்பந்தம், தேசிய சுகாதார ஆணையம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறைகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரி வீரேந்திர குமார் ஆகியோர் பங்கேற்றனர். 


    அவர்கள் முன்னிலையில், தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி ஆர்.எஸ்.சர்மா, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை செயலாளர் ஆர்.சுப்பிரமணியம் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    நிகழ்ச்சியில் பேசிய மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா, இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ், திருநங்கைகளுக்கு சுகாதார சேவைகள் உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார். திருநங்கைகளுக்கான தேசிய இணையதளம் வழங்கிய சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு அனைத்து மருத்துவ சிகிச்சை பயன்களும் கிடைப்பதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்துள்ளதாக அவர் கூறினார். 


    திருநங்கைகளுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு வழங்குவதற்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் நிதி அளிக்கவுள்ளது என்று தெரிவித்தார். ஆயுஷ்மான் பாரத் திட்ட பயன்களுடன் திருநங்கைகளுக்கான பாலியல் அறுவை சிகிச்சை திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் அடிப்படை சமூக மாற்றத்திற்கான ஒரு முக்கியமான தினமாக இது அமைகிறது என்றும், இந்த நடவடிக்கை பாலியல் சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கும் அப்பாற்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்

    பின்னர் பேசிய மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரி வீரேந்திர குமார், சமூகத்தில் அடித்தட்டு மக்கள், கல்வி, கண்ணியத்துடன் வாழ்தல், சுகாதார உதவி, வாழ்வாதாரம் மற்றும் திறன் மேம்பாட்டிற்கான வாய்ப்புகளில் மத்திய அரசு அக்கறை செலுத்தி வருவதாகத் தெரிவித்தார். 

    • ராமநாதபுரம் அருகே பால்குடம் எடுத்து திருநங்கைகள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • முத்துமாரி அம்மனுக்கு முதன் முறையாக முளைக்கொட்டு திருவிழாவை கோலாகலமாக நடத்தி மகிழ்ந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே மாடக்கொட்டான் தில்லை நாயகபுரம் கிராமத்தில் முன் மும்தாஜ் என்ற திருநங்கை வீடு உள்ளது. இந்த வீட்டில் 15 திருநங்கைகள் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும், நாட்டு மக்கள் நோய் நொடியின்றி வாழவும் தங்களது பகுதியில் மணலில் முத்துமாரியம்மன் கோவில் அமைத்து முளைப்பாரித் திருவிழா நடத்த முடிவு செய்தனர்.

    அதன்படி முதலாம் ஆண்டாக முளைப்பாரித் திருவிழாவை நடத்தினர். இதையொட்டி காப்புக்கட்டி விரதம் இருந்து வந்தனர். தினமும் கோவில் முன்பு கும்மி கொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.

    இந்த நிலையில் திருநங்கைகள் மாடக்கொட்டான் பகுதியில் இருந்து 2 கி.மீ. தூரம் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இந்த ஊர்வலத்தில் சென்னை, பெங்களூரு, கோவை, திருப்புவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர். முளைப்பாரி களை ஊர்வலமாக சுமந்து முத்துமாரியம்மன் கோவிலுக்கு எடுத்துச் சென்று சிறப்பு பூஜை செய்தனர்.

    அதனையடுத்து முளைப்பாரிகளை அங்குள்ள காட்டு ஊரணியில் கரைத்தனர். கடந்த ஒரு வார காலமாக பல்வேறு விதமான பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் திருநங்கைகள் பல்வேறு அபிஷேக ஆராதனை நடத்தி முத்துமாரி அம்மனுக்கு முதன் முறை யாக முளைக்கொட்டு திரு விழாவை கோலாகலமாக நடத்தி மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திருநங்கைகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சோலைசேரியை சேர்ந்தவர் ஐவராஜா (வயது28). அவர் கடையநல்லூரை சேர்ந்த திருநங்கை ஹன்சிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இருவரும் குடும்பம் நடத்தி வந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ஐவராஜா சொந்த ஊருக்கு வந்து விட்டார். இந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக ஹன்சிகா மற்றும் திருநங்கைகள் பிருந்தா, முகிலா, செல்லா, தீபா ஆகியோர் சோலைசேரிக்கு வந்தனர்.

    அப்போது ஐவராஜாவின் குடும்பத்தினருக்கும், திருநங்கைகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக வெடித்தது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

    இந்த சம்பவம் குறித்து சேத்தூர் புறக்காவல் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மின்சார ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளிடம் பணம் கேட்டு திருநங்கைகள் அதிகஅளவு தொந்தரவு செய்வதாக ரெயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்தன.
    • ரெயில் பயணிகளிடம் அத்துமீறும் திருநங்கைகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர்.

    ஆலந்தூர்:

    சென்னை கடற்கரை-தாம்பரம் மின்சார ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளிடம் பணம் கேட்டு திருநங்கைகள் அதிகஅளவு தொந்தரவு செய்வதாக ரெயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து பரங்கிமலை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் திருநங்கைகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது ரெயில் பயணிகளிடம் அத்துமீறும் திருநங்கைகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர்.இதில் 40-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர். படித்த மற்றும் தொழில் திறன் உள்ள திருநங்கைகளுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலமாக வேலை கிடைக்க ரெயில்வே போலீசார் ஏற்பாடு செய்து உள்ளனர்.

    • 15 ஆடுகளை வளர்த்து வருகிறேன்.
    • 10 ஆண்டுகளாக வசித்து வருகிறோம்.

    கோவை:

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டுக்குட்டியுடன் வந்து சூலூரை சேர்ந்த திருநங்கைகள் மனு அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் சூலூர் மயிலம்பட்டியில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். ஒரு பொது இடத்தில் கொட்டகை அமைத்து 15 ஆடுகளை வளர்த்து வருகிறேன்.

    ஆனால் பஞ்சாயத்தில் கேட்டுவிட்டுதான் ஆடு வளர்க்க வேண்டும் என்று கூறி எனது கொட்டகையை அப்புறப்படுத்திவிட்டனர். நாங்கள் சொந்தத் தொழில் செய்து வருகிறோம். அதற்கும் அனுமதி கொடுக்காமல் என்னை அழைக்கழிக்கிறார்கள்.எங்களை தொந்தரவு செய்யாமல் இருப்பதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நேற்று தொடங்கிய 10-வது தன்பால் ஈர்ப்பாளர்களுக்கான விளையாட்டு தொடரில் 91 நாடுகளைச் சேர்ந்த சுமார் 13 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். #GayGames #LGBTQ
    பாரீஸ்:

    தன்பால் ஈர்ப்பாளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் ஆகியோர்கள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வு உண்டாக வேண்டும், அவர்கள் மீதான உளவியல் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தன்பால் ஈர்ப்பாளர்கள் விளையாட்டு தொடர் நடந்து வருகிறது.

    இந்நிலையில், 10-வது தன்பால் ஈர்ப்பாளர்கள் விளையாட்டு தொடர் (GayGames) பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று தொடங்கியது. 91 நாடுகளைச் சேர்ந்த சுமார் 13 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்க உள்ளனர். சவுதி, ரஷியா, எகிப்து ஆகிய நாடுகளில் இருந்தும் அதிகமான வீரர்கள் இந்த தொடரில் கலந்து கொள்ள உள்ளனர்.



    நேற்று நடந்த தொடக்க விழாவில் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பல நாடுகள் தன்பால் ஈர்ப்பாளர்கள் திருமணத்தை அங்கீகரித்துள்ள நிலையில், அனைத்து நாடுகளும் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல நாடகங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தொடக்க விழாவில் நடத்தப்பட்டது.
    திருநங்கைகள் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள ரூ. 2 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். #transgenders
    திருவனந்தபுரம் :

    மனம் புண்படக் கூடிய சொற்களால் ஒரு காலத்தில் அழைக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டவர்கள். இன்று ஒருவித பரிணாம வளர்ச்சிப் பெற்று திருநங்கையர் என மதிக்கப்படுவதுடன், மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்கவும் பட்டிருக்கிறார்கள். 

    இந்தநிலையில், கேரள முதல்-மந்திரி பினராயி, பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யும் திருநங்கைகளுக்கு ரூ. 2 லட்சத்தை உதவித்தொகையாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து பினராயி விஜயனின் அலுவலக பேஸ்புக் பக்கத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், சமூக நீதித்துறையின் வழியாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கேரள அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கேரள அரசின் இத்தகைய அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    கேரளாவில் பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உறுப்பு கல்லூரிகளில் அனைத்து பாட பிரிவுகளிலும் திருநங்கைகளுக்காக கூடுதலாக இரண்டு இடங்கள் ஒதுக்கப்படும் என அறிவித்துள்ளது.  மேலும் பல்வேறு துறையிலும் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் முதன்மை மாநிலமாக கேரள இடதுசாரி அரசு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
    ×