search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாய்"

    • ரைஸ் மில்லில் உள்ள வளாகத்தில் மீன் கடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
    • பூனை பால் குடித்துவிட்டு மகிழ்ச்சியுடன் சுற்றி திரிகிறது.

    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்-போளூர் நெடுஞ்சாலையில் தனியார் ரைஸ் மில் ஒன்று இயங்கி வருகிறது.

    இந்த ரைஸ் மில்லில் உள்ள வளாகத்தில் மீன் கடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சமூக விரோதிகள் யாராவது உள்ளே நுழையாமல் இருப்பதற்காக பூனை மற்றும் நாயை வளர்த்து வருகின்றனர்.

    இங்குள்ள பூனை, நாயுடன் ஒன்றாக சேர்ந்து கொஞ்சி விளையாடி வருகிறது.

    அந்த நாயும் பாசத்துடன் பூனைக்கு பால் கொடுக்கிறது.

    இதனால் பூனை பால் குடித்துவிட்டு மகிழ்ச்சியுடன் சுற்றி திரிகிறது. சில நாய்கள் தன்னுடைய குட்டிகளுக்கு பால் கொடுக்க மறுக்கிறது. ஆனால் இங்குள்ள நாய் பூனைக்கு பால் கொடுப்பதை அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

    • இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை நாய் துரத்தி துரத்தி கடித்தது. இதில் 7 பேர் காயமடைந்தனர்.
    • 15 பேரை வெறிநாய் கடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது பற்றி பொதுமக்கள் புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை என்று கூறப்படுகிறது.

    இந்தநிலையில் ரெட்டியார்பாளையம் பகுதியில் நேற்று இரவு 10.30 மணியளவில் வெறிநாய் ஒன்று சுற்றித்திரிந்தது. அப்பகுதியில் சாலையில் நடந்து சென்றவர்கள், இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை நாய் துரத்தி துரத்தி கடித்தது. இதில் 7 பேர் காயமடைந்தனர்.

    ரெட்டியார்பாளையம் பகுதியில் இருந்து கம்பன் நகர், மூலக்குளம் பகுதிக்கு சென்ற அந்த நாய், பொதுமக்களை கடித்து குதறியது. நேற்று ஒரே நாளில் மொத்தம் 15 பேரை அந்த நாய் கடித்துள்ளது.

    காயமடைந்த அனைவரும் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு வெறிநாய் கடி தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரும் வீடு திரும்பினர். 15 பேரைவெறிநாய் கடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


    • தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
    • தெரு நாய்களை பிடிக்க பயன் படுத்தப்படும் வாகனம் அடிக்கடி பழுதாகி விடுகிறது

    ராயபுரம்:

    சென்னை ராயபுரத்தில் கடந்த வாரம் தெருநாய் ஒன்று 28 பேரை கடித்தது. தொடர்ந்து பலரை கடிக்க முயன்றதால் அப்பகுதி மக்கள் அந்த நாயை அடித்து கொன்றனர்.

    தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டோர் அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பினர்.

    கொல்லப்பட்ட நாயை வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று நோய் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டன. அதில் 28 பேரை கடித்த தெரு நாய்க்கு வெறிநோய் (ரேபிஸ்) பாதிப்பு இருந்தது உடல் பிரேத பரிசோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்டது.

    இதற்கிடையில் நாய் கடித்தவர்களுக்கு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டு தலின்படி வெறிநாய் கடிக்கான தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.

    தெரு நாய் கடித்ததில் சிலர் வகை 2 ஆகவும், சிலர் வகை 3 ஆகவும் பிரிக்கப்பட்டுள்ளனர். அதன்படி அவர்களுக்கு வெறிநாய் தடுப்பூசி 5 டோஸ் போட வேண்டியிருக்கும். அதனை பின்பற்றி தடுப்பூசி போடப் படுவதாக ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து மாநாகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்து மீண்டும் அந்த இடத்திலேயே விடப்படுகிறது. சென்னையில் ஒரு லட்சம் தெருநாய்கள் இருக்க கூடும் என தோராயமாக கணக்கிடப்படுகிறது. தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டு 16 ஆயிரம் தெருநாய்களுக்கும், இந்த வருடம் 17,813 தெரு நாய்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் 13,486 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு உள்ளது.

    பெரும்பாலான நாய்களுக்கு தடுப்பூசி போடப்படுவதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.

    ஆனாலும் தங்கள் பகுதியில் உள்ள தெரு நாய்களின் செயல்பாட்டில் மாறுபாடு ஏற்பட்டால் மாநகராட்சியின் 1913 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மேலும் தெரு நாய்களை சமூக ஆர்வலர்கள் தத்தெடுக்க முன்வரலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே ராயபுரம், கல்மண்டபம், எம்.சி. ரோடு, ஜி.கே.ரோடு ஆகிய பகுதிகளில் தெரு நாய்கள் 2 நாட்களாக பிடிக்கப்பட்டு வருகின்றன. நேற்று 25 நாய்கள் பிடிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தெரு நாய்களை பிடிக்க பயன் படுத்தப்படும் வாகனம் அடிக்கடி பழுதாகி விடுகிறது. கடந்த ஒரு மாதமாக தேனாம்பேட்டையில் உள்ள நாய் வாகனம் பழுதாகி விட்டது. அதனால் தெருநாய்களை பிடிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

    தவுட்டுப்பாளையம் பகுதியில் நாய் தொல்லை

    வேலாயுதம் பாளையம்,

    கரூர் மாவட்டம் நஞ்சை புகழூர் தவுட்டுப்பாளையம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.

    அதிக அளவில் நாய்கள் தெருக்களில் சுற்றி வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஏராளமான நாய்கள் தவிட்டுப்பாளையம் பகுதியில் உள்ள கருக்கள் காவிரி பகுதி பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கும்பலாக சுற்றி திரிவதால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், முதியோர்கள், பெண்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர்.

    இருசக்கர வாகனத்தில் செல்பவர்களையும், ஆற்றுக்கு குளிக்க வருபவர்களையும் நாய்கள் ஒன்று சேர்ந்து துரத்துவதும், கடிப்பதுமாக உள்ளதால் தெருநாய்களை பிடித்து நாய்கள் காப்பகத்தில் ஒப்படைக்க கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • அரியலூரில் சுற்றி திரியும் வெறிநாய்களால் பொதுமக்கள் அச்சத்தில் சிக்கி தவிக்கின்றனர்
    • நாய்களை பிடித்து செல்ல கோரிக்கை எழுந்துள்ளது

    அரியலூர், 

    அரியலூர் நகரில் அதிகளவில் சுற்றித்திரியும் நாய்களால் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்பட்டு வருகிறது.  இந்த நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவதுடன், உணவு பொருட்களை கையில் எடுத்து செல்லும் பொதுமக்களை விரட்டவும் செய்கின்றனர். குழந்தைகளுடன் செல்பவர்கள், பெரும் அச்சத்துடன் நாய்களை கடந்து செல்கின்றனர். எனவே நாய்களை பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
    • குறுக்கே திடீரென நாய் புகுந்து விடுவதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வரும் சம்பவமும் நடக்கிறது

    நாகர்கோவில், நவ.6-

    வடசேரி பஸ் நிலை யம், அண்ணா பஸ் நிலையம், கலெக்டர் அலுவலக சந்திப்பு, செட்டிகுளம் சந்திப்பு, பறக்கை, கோட்டாறு, ஆசாரிபள்ளம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் தெருநாய்கள் அதிக அளவில் கூட்டமாக சுற்றித்திரிகின்றன.

    தற்போது தெருநாய்களின் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் உணவு கிடைக்காத வேளைகளில் அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், இரு சக்கர வாகனத்தில் செல்வோரை தூரத்தி செல்கிறது. அப்போது சிலர் சாலைகளில் தவறி விழுந்து விபத்தில் சிக்குகிறார்கள். சிலரை தெரு நாய்கள் கடித்தும் உள்ளது.

    இது ஒரு புறம் இருக்க, சாலைகளின் குறுக்கே திடீரென நாய் புகுந்து விடுவதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வரும் சம்பவமும் நடக்கிறது. மேலும் சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்கள் முடிகள் உதிர்ந்த நிலையில் நோய் வாய்பட்டும், காயங்களுடனும் காணப்படுகிறது. இவ்வாறு நோய்கள் பாதித்த நாய்கள் பொதுமக்கள் அருகில் வரும்போது அவர்கள் கூடுதல் அச்சம் அடைகின்றனர்.

    தெருநாய்களின் தொல்லை அதிகம் உள்ள பகுதி வழியாக பொதுமக்கள் செல்ல அச்சம் அடைந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அந்த சாலையை விட்டு விட்டு தெருநாய்கள் தொல்லை இல்லாத சாலை வழியாக சுற்றி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • எங்கள் நம்பிக்கையே, நேர்மையே, விசுவாசமே, எங்கள் காவலரே என குறிப்பிட்டு ஆள் உயரத்துக்கு நாயின் படம் இடம் பெற்றிருந்தது.
    • பேனர் வைக்கக்கூடாது என எச்சரித்து பேனரை எடுத்துச் செல்ல அறிவுறுத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை நகரின் அனைத்து பகுதிகளிலும் அரசின் அனுமதியின்றி அரசயில்கட்சியினரால் பேனர்கள் வைக்கப்படுகிறது.

    முக்கிய சிக்னல் சந்திப்புகளில் வைக்கப்படும் பேனர்களால் உயிர் பலி ஏற்படுகிறது. இந்த நிலையில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ராஜீவ்காந்தி சதுக்கத்தில் நாய்க்கு பிறந்தநாள் வாழ்த்து பேனர் வைத்துள்ளனர்.

    அதில், எங்கள் நம்பிக்கையே, நேர்மையே, விசுவாசமே, எங்கள் காவலரே என குறிப்பிட்டு ஆள் உயரத்துக்கு நாயின் படம் இடம் பெற்றிருந்தது. இது குறித்து தகவல் அறிந்த கோரிமேடு போலீசார் விரைந்து வந்து அந்த பேனரை அகற்றினர்.

    மேலும் பேனர் வைத்த அமைப்பின் நிறுவனர் அசோக்ராஜ் உட்பட நிர்வாகிகளை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இதுபோல் பேனர் வைக்கக்கூடாது என எச்சரித்து பேனரை எடுத்துச் செல்ல அறிவுறுத்தினர்.

    இதுகுறித்து அசோக்ராஜ் கூறுகையில், ஆதரவற்ற, தெருவோர செல்ல பிராணிகளை மீட்டு வளர்த்து வருகிறோம். சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெருநாய்களை காப்பாற்றியுள்ளோம். நோணாங்குப்பத்தில் 4 ஆண்டுக்கு முன் மிக மோசமான நிலையில் மீட்டெடுக்கப்பட்ட நாய்க்கு பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட முடிவு செய்தோம்.

    கலெக்டர், புதுவையில் பேனர் வைக்க தடையில்லை என கூறியுள்ளதால் ராஜீவ்காந்தி சிக்னலில் யாருக்கும் பாதிப்பின்றி பேனர் வைத்தோம். ஆனால் நாய்க்கு பேனர் வைக்கக் கூடாது என போலீசார் அகற்றிவிட்டனர் என்றார்.

    ராஜீவ்காந்தி சிக்னலில் பெரியளவில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அதை போலீசாரும், அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    • பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுத்தை காணப்படுவது இது முதல் முறையல்ல.
    • கடந்த ஆண்டும் புறநகரில் சிறுத்தை நடமாட்டம் குறித்த காட்சிகள் பலமுறை பதிவாகி இருந்தன.

    பெங்களூரு:

    பெங்களூரு பொம்மனஹள்ளி அருகே கூட்லு கேட் பகுதி வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இதனால் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அடிக்கடி காணப்படுகிறது.

    இந்த நிலையில் கூட்லு கேட் பகுதியில் இருந்து நகர பகுதியான ஓசூர் சாலையில் சிறுத்தை ஒன்று நடமாடிய காட்சி அங்கிருந்த வீட்டில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதில் ஒரு வீட்டின் அருகே சாலையில் சிறுத்தை ஒன்று தென்படுகிறது.

    அப்போது அந்த சாலையில் உள்ள தெருநாய்கள் விரட்டியதும் சிறுத்தை அங்கிருந்து தப்பி விடுகிறது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் கூட்லு கேட் பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

    இதனை தொடர்ந்து சிறுத்தையை பிடிக்க தென்கிழக்கு பெங்களூருவில் உள்ள ஏஇசிஎஸ் லேஅவுட், சிங்கசந்திரா, குட்லு கேட் ஆகிய பகுதிகளில் வனத்துறை அதிகாரிகள் குழு தேடுதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், சிறுத்தை இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அது பெரிய பூனையாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை. நேற்றிரவு ஒரு குழுவை சம்பந்தப்பட்ட பகுதிக்கு அங்கு அனுப்பியிருந்தோம். பின்னர் மேலும் ஒரு குழு அங்கு குவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தியுள்ளோம் என்றனர்.

    இதனிடையே பரப்பன அக்ரஹாரா போலீசாரும் சிறுத்தை இருப்பதை உறுதி செய்தனர். பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுத்தை காணப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டும் புறநகரில் சிறுத்தை நடமாட்டம் குறித்த காட்சிகள் பலமுறை பதிவாகி இருந்தன. 

      வெள்ளகோவில்:

      வெள்ளகோவில் பகுதியில் கடந்த சில மாதங்களாக கரட்டுப்பாளையம், நாச்சிபாளையம், கச்சேரிவலசு, இந்திரா நகர், அய்யனூர், குமாரவலசு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் அப்குதிகளில் இதுவரை நாய்கள் கடித்து 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளன. இந்நிலையில் வெள்ளகோவில் அருகே உள்ள பாப்பம்பாளையத்தை சேர்ந்த மணி என்பவரது மகன் தங்கவேல் (வயது 37) என்பவர் ஆடுகளை வளர்த்து ஜீவனம் செய்து வருகிறார். சம்பவத்தன்று தங்கவேல், வழக்கம் போல் தனது ஆடுகளை மேய்த்து பட்டியில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் அடுத்த நாள் காலையில் பட்டிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு ஆடுகளின் நிலைமையை கண்டு தங்கவேல் பதறி போனார். 6 செம்மறி ஆடுகள், 2 வெள்ளாடுகளை நாய்கள் கடித்து குதறி இறந்து கிடந்தன, இதனால் தங்கவேல் மிகுந்த வேதனை அடைந்தனர். மேலும் இப்பகுதியில் தொடர்ந்து தெருநாய்கள், ஆடுகளை கடித்து இறப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

      • ‘நூரி’ என்ற வார்த்தை இஸ்லாமிய புனித நூலான குரானுடன் தொடர்புடையது.
      • ராகுல் காந்தி தனது முகநூல் பக்கம், யூடியூப் பக்கத்தில் நாயின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார்.

      பிரயாக்ராஜ்:

      காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது தாயார் சோனியாவுக்கு அளித்த நாய்க்கு 'நூரி' என்று பெயர் வைத்ததை எதிர்த்து அவர் மீது உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார்.

      'நூரி' என்ற வார்த்தை இஸ்லாமிய புனித நூலான குரானுடன் தொடர்புடையது, குரானில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது என்று வழக்குத் தொடுத்துள்ள மஜ்லிஸ் கட்சித் தலைவர் முகமது பர்கான் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

      இது தொடர்பாக முகமது பர்கானின் வக்கீல் முகமது அலி கூறுகையில், 'ராகுல் காந்தி மீது இந்திய தண்டனைச் சட்டம் 295 ஏ (மத உணர்வுகளைப் புண்படுத்துதல்) பிரிவின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம்.

      ராகுல் காந்தி தனது முகநூல் பக்கம், யூடியூப் பக்கத்தில் நாயின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், செய்தித்தாள்களிலும் இது தொடர்பான செய்திகள் வந்துள்ளன. அவற்றை ஆதாரமாக காட்டியுள்ளோம்' என்றார்.

      உலக விலங்குகள் தினத்தையொட்டி கடந்த 4-ந்தேதி தனது தாயார் சோனியாவுக்கு 'நூரி' என்று பெயரிடப்பட்ட நாய்க்குட்டியை ராகுல் காந்தி பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

      • தீயணைக்கும் படை வீரர்கள் அதிரடி நடவடிக்கை
      • அந்த நாய் தண்ணீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது.

      கன்னியாகுமரி :

      கன்னியாகுமரி அருகே உள்ள தெற்கு குண்டல் பகுதியை சேர்ந்தவர் மிதுன் தாஸ். கூலி தொழிலாளி. இவரது வீட்டு நாய் தெற்கு குண்டல் மெயின் ரோட்டின் அருகில் உள்ள 40 அடி ஆழ பஞ்சாயத்து கிணற்றில் தவறி விழுந்தது. அந்த நாய் தண்ணீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது.

      இதுகுறித்து கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) பாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் உயிருக்கு போராடி கொண்டிருந்த அந்த நாயை உயிருடன் மீட்டனர். பின்னர் அந்த நாயை தீயணைக்கும் படை வீரர்கள் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

      • சாக்கடை கால்வாயில் அதிகாலையில் நாய் ஒன்று விழுந்துள்ளது
      • தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து நாயை உயிருடன் மீட்டனர்

      திருச்செங்கோடு:

      நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வாலறைக்கேட் அருகே பண்ணக்காடு பகுதியில் அதிக ஆழமுள்ள சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த சாக்கடை கால்வாயில் அதிகாலையில் நாய் ஒன்று விழுந்துள்ளது. பின்னர் சாக்கடையில் இருந்து வெளியே வரமுடியாததால் தொடர்ந்து சத்தமிட்டு கொண்டே இருந்தது. இதை பார்த்த அந்த வழியாக சென்ற கணேஷ் புவன் என்பவர் திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து தீயணைப்பு அலுவலர் குணசேகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சதீஷ்குமார், ஹரிஹரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து நாயை உயிருடன் மீட்டனர். இதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறை வீரர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

      ×