search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி"

    சாத்தூர் அருகே ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என கூறி நிதி நிறுவனம் நடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார். #FakeSubInspector
    சாத்தூர்:

    சாத்தூரை அடுத்த படந்தால் அருகே தென்றல் நகரில் வசித்து வரும் பழனிசாமி என்பவரது மகன் கண்ணன்(வயது39). இவர் ரெயில்வேயில் சப்-இன்ஸ்பெக்டர் என்று கூறி சாத்தூரில் நிதி நிறுவனம் நடத்தி அதிக வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார்.

    இதனை அறிந்த படந்தால் கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த தகவலின் பேரில் சாத்தூர் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் கண்ணன் கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் என்றும் நிதிநிறுவனத்தில் பணம் பெற்றவர்கள் ஏமாற்றிவிடாமல் இருக்க சப்-இன்ஸ்பெக்டர் என கூறியதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.

    இதனைத்தொடர்ந்து அவர் வசித்து வந்த வீட்டை சோதனையிட்டதில் ரெயில்வே காவலர் உடை மற்றும் அவரது மோட்டார் சைக்கிளில் கண்ணன் ஆர்.பி.எப். என்று எழுதி இருந்ததும் தெரிய வந்தது. காவலர் உடையையும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்த போலீசார், கண்ணனையும் கைது செய்தனர். அவரை சாத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

    திருப்பதி அருகே கலெக்டரின் கார் எண்ணை போலியாக பயன்படுத்தி செம்மர கடத்திய கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    திருமலை:

    திருப்பதி அடுத்த ஸ்ரீவாரிமெட்டு பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் 3 குழுக்களாகப் பிரிந்து கல்யாணி அணைக்கட்டு மற்றும் அதன் அருகில் உள்ள லோடிங் பாயிண்ட், சந்திரகிரி புறவழிச்சாலை ஆகிய இடங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது புற வழிச்சாலையில் இருந்து சந்தேகப்படும்படியாக ஒரு கார் செல்வதைக் கண்டனர். அதன் எண்ணை உடனடியாக மற்ற குழுவினரிடம் தெரிவித்தனர்.

    அந்த காரில் லோடிங் பாயிண்டில் செம்மரக் கட்டைகளை ஏற்றிச் செல்வதை கவனித்தனர். இதையடுத்து காரை மடக்கிப் பிடிக்க முயன்றனர்.

    ஆனால் டிரைவர் காரை வேகமாக ஓட்டி போலீஸ் வாகனத்தின் மீது மோதி விட்டு காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார். உடனே சுதாரித்த போலீசார் சோதனை சாவடிக்கு தகவல் தெரிவித்து காரை மடக்க முயன்றனர். போலீசார் சுற்றி வளைத்ததை உணர்ந்த டிரைவர் காரை நிறுத்தி விட்டு காட்டுப்பகுதிக்குள் தப்பியோடி விட்டார்.

    இதையடுத்து போலீசார் அந்தக் காரையும், அதிலிருந்த 5 செம்மரக் கட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.

    காரின் நம்பர் பிளேட்டில் இருந்த எண்ணை சரிபார்த்ததில் அந்த எண் கலெக்டருக்கு சொந்தமானது என தெரிய வந்தது. இது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கலெக்டரின் கார் எண்ணை போலியாக பயன்படுத்தி செம்மரக்கட்டைகளை அதில் கடத்தி வந்துள்ளனர்.

    இதே போல் பல அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்களின் கார் எண்ணை கடத்தல் காரர்கள் பயன்படுத்தி இருக்கலாம்.

    இனி கூடுதல் கவனத்துடன் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என்று செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. காந்தாராவ் போலீசாருக்கு அறிவுறுத்தி உள்ளார்.


    ×