search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காட்டுத்தீ"

    • ரஷியாவில் காட்டுத்தீயில் சிக்கி 21 பேர் உயிரிழந்தனர்.
    • காட்டுத்தீ ஏற்பட்ட பகுதிகளில் அவசர நிலை உத்தரவை பிறப்பித்தது.

    மாஸ்கோ:

    ரஷியா மற்றும் சைபீரியாவின் எல்லையில் அமைந்துள்ள யூரல் மலைப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால் ரஷியாவின் குர்கான் மற்றும் சைபீரியாவின் டியூமென், ஓம்ஸ்க் ஆகிய மாகாணங்களில் உள்ள பல கிராமங்கள் தீப்பிடித்தன.

    இதில் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள், ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் இந்த தீ விபத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

    காட்டுத்தீ ஏற்பட்ட பகுதிகளில் அவசர நிலை உத்தரவை பிறப்பித்து அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

    • கொளுந்து விட்டும், வேகமாகவும் தீ பரவி வருகிறது.
    • காட்டுத் தீயில் 1458 ஹெக்டேர் பகுதி எரிந்து நாசமாகி இருக்கிறது.

    கனடா நாட்டில் உள்ள ஆல்பர்ட்டா பகுதியில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. கொளுந்து விட்டும், வேகமாகவும் தீ பரவி வருகிறது. இதனால் பல அடி உயரத்துக்கு புகை மண்டலம் எழும்பி உள்ளது. காட்டுத் தீயில் 1458 ஹெக்டேர் பகுதி எரிந்து நாசமாகி இருக்கிறது. தீயை அணைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். காட்டுத் தீயில் சிக்கி ஏராளமான வீடுகள் எரிந்துள்ளன.

    காட்டுத் தீ காரணமாக மேற்கு கனடாவில் வெப்பம் அதிகரித்துள்ளது. ஆல்பர்ட்டாவில் சில பகுதிகளில் தீயின் சீற்றத்தால் பனி உருகுவதால் பிரிட்டிஷ் கொலம்பியா உட்புற பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஆறுகளின் கரைகள் உடைந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்தது.

    வெப்பம் காரணமாக பனி உருகுவது அதிகமாகியுள்ளது. இது ஆறுகள், சிற்றோடைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தியது என்று அவசரகால மேலாண்மை அமைச்சகம் தெரிவித்தது. காட்டுத்தீ, வெப்பம் காரணமாக 13 ஆயிரம் பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    • சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் ஊத்துமலை ஸ்ரீ பாலசுப்ரமணியர் கோவில் உள்ளது.
    • இரவு திடீரென காட்டுத் தீ பற்றியது. தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் தீ வேகமாக பரவியது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் ஊத்துமலை ஸ்ரீ பாலசுப்ரமணியர் கோவில் உள்ளது. இப்பகுதியில் உள்ள கரட்டில் நேற்று இரவு திடீரென காட்டுத் தீ பற்றியது. தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் தீ வேகமாக பரவியது.

    இதனால் அப்பகுதி முழுவதும் ஒரே புகை மூட்டமாக காட்சியளித்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த திடீர் தீ விபத்திற்கு காரணம் என்ன? மலைப் பகுதியில் ஆடு , மாடு மேய்ப்பவர்கள் பீடி, சிகரெட் துண்டுகளை வீசி சென்றனரா? அல்லது சமூக விரோதிகள் செயலா? என பல கோணங்களில் விசாரணை நடத்தப்படுகிறது. மேலும் கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் மலையில் உள்ள காய்ந்த இலைகள், சருகுகள் பற்றி எரிந்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுவாக கோடை காலங்களில் காட்டுத் தீ விபத்து ஏற்படும்.
    • களக்காடு தலையணையில் தீயணைப்பு, வனத்துறையினருக்கு கூட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

    களக்காடு:

    களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் கடும் வெப்பம் நிலவுகிறது.

    பொதுவாக கோடை காலங்களில் காட்டுத் தீ விபத்து ஏற்படும் அபாயம் நிலவும் என்பதால் அதனை தடுக்க வனத்துறையினர் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது வழக்கம். அதன்படி களக்காடு தலையணையில் காட்டுத் தீ விபத்தை தடுப்பது குறித்து தீயணைப்பு, வனத்துறையினருக்கு கூட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் நாங்குநேரி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய வீரர்கள், களக்காடு வனத்துறை ஊழியர்கள், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கோடை காலத்தில் ஏற்படும் காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வருவது பற்றியும், தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்தும், தீ ஏற்படாமல் தடுப்பது பற்றியும் கூட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

    மேலும் கள பயிற்சியும் கொடுக்கப்பட்டது. நாங்குநேரி தீ அணைப்பு நிலைய அதிகாரி பாபநாசம், களக்காடு வனசரகர் பிரபாகரன் கலந்து கொண்டனர்.

    • கடந்த 11-ந் தேதி மாலையில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது.
    • பயர் டிரேசிங் முறையிலும் தீயை கட்டுப்படுத்தும் பணிகள் நடந்தது

    கோவை,

    கோவை வன கோட்டத்திற்கு உட்பட்ட மதுக்கரை வனச்சரகத்தில் உள்ள நாதே கவுண்டன்புதூர் அருகே உள்ள மலையில் கடந்த 11-ந் தேதி மாலையில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது.

    இது குறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் மதுக்கரை வனச்சரக ஊழியர்கள் கொண்ட குழுவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், தீயை அணைக்கும் பணியில் விமானப்படையின் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது.

    இதன்மூலம் தீ கட்டுப்படுத்த நிலையில் 2 மண்டலங்களில் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. அதன்படி90 சதவீதம் தீ அணைக்கப்பட்டது.

    நேற்று 7-வது நாளாக தீயை அணைக்கும் பணி நடந்தது. இப்பணியில்வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் உள்பட சுமார் 200 பேர் ஈடுபட்டனர்.

    காற்றின் வேகம் அதிகமாக இருந்ததாலும், புற்கள் அதிகளவில் இருந்ததாலும் காட்டு தீ நேற்று காருண்யா பின்புறம் உள்ள மலைப்பகுதி வரை பரவியது. இதையடுத்து, தீ தடுப்பு கோடுகள் அமைத்தும், பயர் டிரேசிங் முறையிலும் தீயை கட்டுப்படுத்தும் பணிகள் நடந்தது.தீயை அணைக்கும் பணியில் கோவை வனத்துறையினர் மட்டுமின்றி நீலகிரி, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்களும் ஈடுபட்டனர்.

    7 நாட்களாக வனத்துறையினர் தொடர்ந்து மேற்கொண்ட நடவடிக்கையால் காட்டுத்தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

    • தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரித்து உள்ளதால் காட்டு தீயானது அருகே உள்ள வனப்பகுதிகளில் பரவியது.
    • தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை, மான், புலி, சிறுத்தை, கரடி உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. மேலும் அடர்ந்த வனப்பகுதியான இங்கு அரிய வகை மரங்கள் உள்பட செடி, கொடிகள் நிறைந்து காணப்படுகிறது.

    இந்த நிலையில் மாவட்டத்தில் கடந்த 1 மாதமாக சுமார் 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் 107, 109 டிகிரி என வெயில் பதிவாகி வருகிறது.

    இதனால் சத்தியமங்கலம் வனப்பகுதிகளில் வறட்சி நிலகிறது. மேலும் செடி, கொடி, மரங்கள் காய்ந்து ஒன்றோடு ஒன்று உரசி வருகிறது. இந்நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கமும் காற்றின் மாறுபாடும் அதிகமாக காணப்படுகிறது. இதனால் மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசி காட்டுத்தீ ஏற்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் கம்பத்து ராயன் கிரிமலைப்பகுதியில் திடீரென தீ விபத்து தீப்பற்றி எரிந்தது. காட்டுத்தீயானது தொடர்ந்து மளமளவென பரவியதால் சுமார் 20 ஏக்கருக்கு மேல் காட்டு மரங்கள் எரிந்து நாசமாகியது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனச்சரகர் பழனிச்சாமி தலைமையில் 20 பேர் கொண்ட குழுவுடன் சென்று கம்பத்து ராயன்கிரி மலையில் ஏற்பட்ட தீயை அனைத்தனர்.

    தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரித்து உள்ளதால் காட்டு தீயானது அருகே உள்ள வனப்பகுதிகளில் பரவியது. இதையடுத்து தீ மெல்ல மெல்ல பரவி சத்தியமங்கலம் புளியங்கொம்பை மேல் பகுதியிலும் பெரியகுளம் மேல் உள்ள மலைப்பகுதியிலும் நேற்று காட்டுத்தீ பரவியது.

    இதில் பல விதமான விலை உயர்ந்த மரங்களும், அரிய வகை மூலிகை செடிகளும் எரிந்து நாசமாகியது. காட்டு தீ பரவுவதால் அந்த பகுதியில் உள்ள வனவிலங்குகள் சத்தம் போட்டப்படியே அங்கும், இங்கும் திரிகிறது. வன விலங்குகளின் சத்தம் அதிகமாக உள்ளது என அடிவாரத்தில் உள்ள பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்த நிலையில் இன்றும் 3-வது நாளாக சத்தியமங்கலம் அடுத்த வனப்பகுதிகளில் காட்டு தீ பரவி பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. இந்த தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    • ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் தெளித்து கட்டுப்படுத்தவும் வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
    • மாவட்ட நிர்வாகம் மூலம் விமான படைக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    வடவள்ளி:

    கோவை மாவட்டம் ஆலாந்துறை ஊராட்சிக்குட்பட்ட நாதேகவுண்டன் புதூர், மச்சினாம்பதி, பெருமாள்பதி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 11-ந் தேதி காட்டுத்தீ ஏற்பட்டது.

    அங்குள்ள காய்ந்த புற்கள், சருகுகளில் தீ பற்றி எரிந்து வருகிறது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோவை மாவட்ட வனத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இருந்த போதிலும் தீ வனம் முழுவதும் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

    இன்று 5-வது நாளாக வனத்தில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.

    தீயை கட்டுப்படுத்தும் பணியில் உடுமலை, பொள்ளாச்சி, ஆனைமலை புலிகள் காப்பகம், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த வன பணியாளர்கள், மதுக்கரை, போளுவாம்பட்டி, கோவை வனசரக பணியாளர்கள் என மொத்தம் 300 பேர் ஈடுபட்டுள்ளனர்.

    தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால், அவர்களில் சிலருக்கு கண், கால்களில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. அதற்கு உடனடியாக சிகிச்சையும் எடுத்து கொண்டு, தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையே 5 நாட்களாக பற்றி எரியும் காட்டுத்தீயை ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் தெளித்து கட்டுப்படுத்தவும் வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக வனத்துறையினர் விமானப்படையின் உதவியை கோரியுள்ளனர்.

    இது தொடர்பாக வனத்துறையினர் கூறியதாவது:-

    தரைப்பகுதியில் உள்ள புற்கள், காய்ந்த சருகுகளில் தீ பரவி வருகிறது. வனத்தில் உள்ள சில மூங்கில் மரங்கள் தீயில் எரிந்துள்ளன.

    குறிப்பிட்ட இடங்களில் தீ தடுப்பு கோடுகளை அமைத்து, எதிர் தீ வைத்து தீ மேற்கொண்டு பரவாமல் தடுக்கப்பட்டு வருகிறது.

    காட்டுத்தீ காரணமாக வனவிலங்குகள் எதுவும் பாதிக்கப்படவில்லை.

    தற்போது ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் தெளித்து தீயை கட்டுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகம் மூலம் விமான படைக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    ஹெலிகாப்டர் வந்தால் பக்கெட் மூலம் தண்ணீர் எடுத்து செல்ல வசதியாக அருகிலேயே ஒரு குட்டையும், நீச்சல் குளமும் உள்ளது. நீச்சல் குளத்தில் தண்ணீர் நிரப்பி வைத்துள்ளோம்.

    அனுமதி கிடைத்தால் இன்று அல்லது நாளைக்குள் தீயை அணைக்கும் ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்படலாம். வன எல்லைப்பகுதியை தாண்டி தீ பரவாமல் தடுக்க தீயணைப்பு துறையினரும் தயார் நிலையில் உள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தென்கொரியாவின் கங்வான் மாகாணம் கங்னியுங் நகரில் உள்ள காட்டுப்பகுதியில் திடீரென தீப்பிடித்தது.
    • தீ அருகில் உள்ள கிராமங்களுக்கு பரவாமல் இருக்க குழிகளை தோண்டி தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    சியோல்:

    தென்கொரியாவின் கங்வான் மாகாணம் கங்னியுங் நகரில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று திடீரென தீப்பிடித்தது. இந்த தீ சிறிது நேரத்தில் மளமளவென காட்டின் மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதனையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் 300-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்தன. 6 ஹெலிகாப்டர்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டன. எனினும் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தீ அருகில் உள்ள கிராமங்களுக்கு பரவாமல் இருக்க குழிகளை தோண்டி தடுப்பு நடவடிக்கை ஏற்படுத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே மீட்பு படையினர் அங்கிருந்து சுமார் 300 பேரை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர். இந்த தீ விபத்தில் 44 வீடுகள் எரிந்து சாம்பலாகின.

    • தெய்வ மலை மற்றும் தவள மலை வனப்பகுதியில் பயங்கர காட்டு தீ பரவியது.
    • சிறு வன உயிரினங்கள் தீயில் எரிந்து சாம்பலானது.

    கூடலூர்

    கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம் பேரூராட்சி உள்ளது. இதை சுற்றிலும் அடர்ந்த வனங்கள் உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு மலைப்பாதையில் உள்ள தெய்வ மலை மற்றும் தவள மலை வனப்பகுதியில் பயங்கர காட்டு தீ பரவியது.

    இதைக் கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஊட்டி வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர், ஆனால் சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் வராததால் காட்டுத்தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது. இதனிடையே தெய்வமலை கிராம மக்கள் அச்சமடைந்தனர்.

    தொடர்ந்து வன ஊழியர்கள் அப்பகுதிக்கு வந்து காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர், இருப்பினும் அரிய வகை மூலிகைகள், தாவரங்கள் மற்றும் சிறு வன உயிரினங்கள் தீயில் எரிந்து சாம்பலானது. காட்டுத் தீயால் சேதமடைந்த வனத்தின் பரப்பளவு குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை.

    • கடந்த 5ம் தேதி முதல் கோவாவின் வனப்பகுதிகளில் காட்டுத் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
    • கோவாவில் காட்டுத் தீயை கட்டுப்படுத்த இந்திய விமானப்படை களமிறங்கி உள்ளது.

    பனாஜி:

    கோவாவில் காட்டுத் தீயை கட்டுப்படுத்த இந்திய விமானப்படை களமிறங்கி உள்ளது.

    கோவாவின் வனப்பகுதிகளில் கடந்த 5-ம் தேதி முதல் ஆங்காங்கே காட்டுத் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தீயணைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், கோவாவில் இந்திய விமானப்படையும் தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளது. எம்.ஐ.-17 ரக ஹெலிகாப்டர் மூலம் காட்டுத் தீ பரவும் பகுதிகளில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்ட காட்சிகள் வெளியாகின.

    • கொடைக்கானல் வனப்பகுதியில், கடும் வெப்பம் நிலவி வருகிறது.
    • கோடை காலத்தில் வனப்பகுதியில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்படும்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் வனப்பகுதியில், கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் அரசு, தனியார் தோட்டங்கள் மற்றும் வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இதனை வனத்துறையினர் அணைத்து வருகின்றனர்.

    இந்தநிலையில் கருவேலம்பட்டி, கோம்பைப்பட்டி ஆகிய இடங்களில் மீண்டும் தீப்பிடித்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. காட்டுத்தீயில் அந்த பகுதியில் உள்ள அரிய வகை மரங்கள், மூலிகை செடி எரிந்து நாசமாகின. மேலும் வனவிலங்குகள் வெளியேறி வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்து வருகின்றன.

    இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் மலைக்கிராம மக்கள் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த காட்டு தீயானது, கொடைக்கானல்-பழனி பிரதான மலைப்பாதைக்கும் பரவி எரிந்து வருகிறது.

    வழக்கமாக, கோடை காலத்தில் வனப்பகுதியில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்படும். இந்த ஆண்டு அவை அமைக்கப்படாததால்தான் காட்டுத்தீ வேகமாக பரவுகிறது என்றும், தீயை கட்டுப்படுத்துவதற்கு நவீன உபகரணங்கள் வாங்குவதற்கு வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நீலகிரி மாவட்டத்திலும் பகலில் கோடை வெப்பமும், இரவில் அதிக பனிப்பொழிவும் நிலவுகிறது.
    • கார்குடி உள்பட அனைத்து பகுதிகளிலும் வனத்துறையினர் தீத்தடுப்பு கோடுகளை அமைத்தனர்.

    ஊட்டி,

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    குளு, குளு காலநிலையை கொண்ட நீலகிரி மாவட்டத்திலும் பகலில் கோடை வெப்பமும், இரவில் அதிக பனிப்பொழிவும் நிலவுகிறது.

    கூடலூர், முதுமலை, மசினகுடி, பந்தலூரில் அனல் காற்று வீசுகிறது. மேலும் வனப்பகுதியில் உள்ள பசும்புற்கள், புதர்கள் காய்ந்து விட்டது. மரங்களில் உள்ள இலைகள் உதிர்ந்து காணப்படுகிறது. இதனால் காட்டுத்தீ பரவாமல் இருக்க முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு, கார்குடி உள்பட அனைத்து பகுதிகளிலும் வனத்துறையினர் தீத்தடுப்பு கோடுகளை அமைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று மசினகுடி அருகே மரவகண்டி ஏரி, ஆச்சக்கரை பகுதியில் பயங்கர காட்டுத்தீ பரவியது.

    அப்பகுதியில் மூங்கில்கள் அதிகமாக இருந்ததால் தீ கொழுந்து விட்டு எரிந்தது.எங்கு பார்த்தாலும் தீ மற்றும் புகை மண்டலமாக காணப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார், வருவாய், வனத்துறையினர் விரைந்து வந்து அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

    இதனால் கூடலூரில் இருந்து தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டனர். நாலாபுறமும் தீ வேகமாக பரவிக்கொண்டே இருந்ததால் தீயணைப்புத் துறையினராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

    தொடர்ந்து 10 ஏக்கர் பரப்பளவில் மூங்கில்கள், புதர்கள் எரிந்து சாம்பலானது. மொத்தத்தில் கூடலூர், மசினகுடி பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதி காட்டு தீயால் எரிந்து நாசமானது.இதேபோல், குன்னூர், கோத்தகிரி பகுதியில், பல இடங்களில் பரவிய காட்டுத்தீயை, தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் அணைத்தனர்.

    மலைப்பாதை மற்றும் வனப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள் புகை பிடித்து வீசுவது. இடத்தை ஆக்கிரமிக்க தீ வைப்பது போன்றவை காட்டுத்தீ ஏற்பட முக்கிய காரணமாக அமைந்துள்ளதால், வருவாய், வனம், உள்ளாட்சி நிர்வாகத்தினர், போலீசார் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க நீலகிரி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    ×