என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோர்ட்"

    • ஹான் டக்-சூ பதவி நீக்கம் தொடர்பான வழக்கு அரசியலமைப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
    • யூன் சுக்-இயோல் விவகாரம் குறித்து இந்த தீர்ப்பில் எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

    சியோல்:

    தென்கொரியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் வடகொரியாவுடன் இணைந்து அரசாங்கத்துக்கு எதிராக சதி செய்வதாக முன்னாள் அதிபர் யூன் சுக்-இயோல் குற்றம்சாட்டினார். இதனையடுத்து கடந்த ஆண்டு ராணுவ அவசர நிலையை அறிவித்தார்.

    இவரது இந்த செயலுக்கு ஆளுங்கட்சியிலேயே எதிர்ப்புகள் கிளம்பின. எனவே அறிவித்த சில மணி நேரத்திலேயே அதனை பின்வாங்கினார்.

    எனினும் அவசர நிலையை செயல்படுத்தியதற்காக யூன் சுக்-இயோல் பதவி விலக கோரி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்தன. இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

    பின்னர் இடைக்கால அதிபராக பிரதமர் ஹான் டக்-சூ நியமிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு எதிராகவும் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானம் நிறைவேறியதால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

    இதற்கிடையே ஹான் டக்-சூ பதவி நீக்கம் தொடர்பான வழக்கு தலைநகர் சியோலில் உள்ள அரசியலமைப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணையில் அவசர நிலை செயல்படுத்திய விவகாரத்தில் அவருக்கு தொடர்பு இல்லை என உறுதியானது.

    எனவே ஹான் டக்-சூ மீதான பதவி நீக்கத்தை ரத்து செய்த கோர்ட்டு அவரை மீண்டும் இடைக்கால அதிபராக நியமித்து உத்தரவிட்டது. அதேசமயம் யூன் சுக்-இயோல் விவகாரம் குறித்து இந்த தீர்ப்பில் எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. எனினும் இந்த தீர்ப்பு யூன் சுக்-இயோல் ஆதரவாளர்கள் இடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பாதுகாப்பு காரணத்தை சுட்டிக்காட்டி சிறை அதிகாரிகள் கொசுவலை தர மறுக்கிறார்கள்.
    • தாதா லக்டவாலாவின் கொசு வலை கோரிக்கை தொடர்பான மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

    மும்பை :

    மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் முன்னாள் கூட்டாளி இஜாஜ் லக்டவாலா. பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவரை கடந்த 2000-ம் ஆண்டு போலீசார் மராட்டிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற தடுப்பு சட்டத்தின் (மோக்கா) கீழ் வழக்குப்பதிவு செய்து நவிமும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைத்தனர்.

    இந்தநிலையில் சிறையில் கொசு தொல்லை மிதமிஞ்சி இருப்பதால், தனக்கு கொசுவலை வழங்க உத்தரவிட கோரி மும்பை செசன்ஸ் கோர்ட்டில் லக்டவாலா மனு செய்து இருந்தார். நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது லக்டவாலா கோர்ட்டில் அஜர்படுத்தப்பட்டார்.

    அப்போது நீதிபதியிடம், "சிறையில் கொசு தொல்லை பொறுக்க முடியவில்லை, இதோ பாருங்கள்... சிறையில் பிடித்த கொசுக்களை கொண்டு வந்து இருக்கிறேன்" என்று பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து வைத்திருந்த செத்துப்போன கொசுக்களை லக்டவாலா காட்டினார்.

    "என்னை போல தான் மற்ற கைதிகளும் கொசு தொல்லையால் அவதிப்பட்டு வருகிறார்கள், ஆனால் பாதுகாப்பு காரணத்தை சுட்டிக்காட்டி சிறை அதிகாரிகள் கொசுவலை தர மறுக்கிறார்கள். சிறையில் கொசுவலை பயன்படுத்த அனுமதிக்க சிறை நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று நீதிபதியிடம் கைதி லக்டவாலா கேட்டுக்கொண்டார்.

    ஆனால் அவரது கோரிக்கைக்கு சிறை நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கைதிகள் தற்கொலை செய்து கொள்ளும் அபாயம் காரணமாக கொசுவலை பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து தாதா லக்டவாலாவின் கொசு வலை கோரிக்கை தொடர்பான மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். கொசு வலைக்கு பதிலாக வேறு கொசு விரட்டிகளை பயன்படுத்தி கொள்ளுமாறு லக்டவாலாவை அறிவுறுத்திய கோர்ட்டு, கொசுக்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறும் சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    முன்னதாக கொசு அடங்கிய பாட்டிலை தாதா லக்டவாலா கோர்ட்டுக்கு கொண்டு வந்து நீதிபதியிடம் காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேவேளையில் தாதாவின் நூதன முயற்சி அவருக்கு பயன் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • எல்லா பிரச்சினைகளுக்கும் போலீசாரால் தீர்வு காண முடியாது.
    • எலிகள் மிகச்சிறியதாகவும், போலீசாருக்கு பயப்படாததாகவும் உள்ளன.

    மதுரா :

    உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் நெடுஞ்சாலை போலீஸ் நிலையம் சார்பில் பல்வேறு சம்பவங்களில் கைப்பற்றப்பட்ட கஞ்சா பொட்டலங்களை செர்கார் கிட்டங்கியில் போலீசார் பாதுகாத்து வந்தனர்.

    இந்த நிலையில் இதுகுறித்த வழக்கு விசாரணை நடந்தபோது, கைப்பற்றப்பட்ட 586 கிலோ கஞ்சாவை கோர்ட்டில் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் கூறிய தகவல்கள், நீதிமன்றத்தை அதிர வைத்தது. "எலிகள் மிகச்சிறியதாகவும், போலீசாருக்கு பயப்படாததாகவும் உள்ளன. அவை 581 கிலோ கஞ்சாவை தின்றுவிட்டன. எல்லா பிரச்சினைகளுக்கும் போலீசாரால் தீர்வு காண முடியாது" என்று அவர் வாதாடினார். இதைக் கேட்ட நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து, "எலிகளை கட்டுப்படுத்தவும், எலிகள் 581 கிலோ கஞ்சாவை சாப்பிட்டதற்கான ஆதாரங்களை வரும் 26-ந்தேதிக்குள் சமர்ப்பிக்கவும்" போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதற்கு முன்பு ஒருமுறை, 195 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டுவிட்டதாக போலீசார் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • தனது தந்தையின் உயிரை காப்பாற்ற தனது கல்லீரலை தந்தைக்கு தானம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
    • தந்தையின் உயிரை காப்பாற்ற சிறுமி நடத்திய சட்ட போராட்டத்தை கோர்ட் சுட்டிக்காட்டியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது கல்லீரல் மாற்றுஅறுவை சிகிச்சை செய்தால் அவரை காப்பாற்றலாம் என்றனர்.

    இதையடுத்து உறுப்பு தானம் பெறுவோர் பட்டியலில் அந்த நபர் பதிவு செய்து காத்திருந்தார். ஆனால் உடனடியாக அவருக்கு கல்லீரல் தானம் கிடைக்கவில்லை. எனவே அவரது 17 வயதே ஆன மகள், தந்தைக்கு கல்லீரல் தானம் செய்ய முன்வந்தார்.

    ஆனால் மருத்துவ சட்டவிதிகளின் படி மைனர் பெண் உறுப்பு தானம் செய்யக்கூடாது. இதனால் டாக்டர்கள், 17 வயது சிறுமியின் உறுப்பை தானமாக பெற மறுத்தனர். இதையடுத்து அந்த சிறுமி, ஐகோர்ட்டில் மனு செய்தார்.

    அதில் தனது தந்தையின் உயிரை காப்பாற்ற தனது கல்லீரலை தந்தைக்கு தானம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார். சிறுமியின் மனுவை பரீசிலித்த கோர்ட்டு சிறுமி அவரது, தந்தைக்கு கல்லீரல் தானம் செய்ய அனுமதி வழங்கியது.

    தந்தைக்கு கல்லீரல் தானம் வழங்க சிறுமிக்கு அனுமதி வழங்கிய கோர்ட்டு அவரை பாராட்டவும் செய்தது. தந்தையின் உயிரை காப்பாற்ற சிறுமி நடத்திய சட்ட போராட்டத்தை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

    மேலும் இதுபோன்ற மகளை பெற அவரது பெற்றோர் கொடுத்து வைத்தவர்கள் என்றும் குறிப்பிட்டது.

    • வழக்கில் 1 ஏக்கருக்கு ரூ.2.50 லட்சம் வழங்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது.
    • கோர்ட் ஊழியர்கள் தீர்ப்பின் நகலை காட்டி ஜப்தி செய்யப் போவதாக தெரிவித்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கடந்த 1985ம் ஆண்டு கட்டப்பட்ட போது இப்பகுதியை சேர்ந்த செட்டிநாயக்கன்பட்டி கிராம மக்களின் 50க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. சுமார் 215 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில் 1 ஏக்கருக்கு ரூ.1500 வழங்க அரசு முடிவு செய்தது.

    ஆனால் இந்த தொகை தங்களுக்கு போதவில்லை எனவும், கூடுதல் இழப்பீடு வழங்கவேண்டும் என 50க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் சப்-கோர்ட்டில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் 1 ஏக்கருக்கு ரூ.2.50 லட்சம் வழங்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் திண்டுக்கல் கோர்ட்டு அறிவித்த தொகையை உறுதிசெய்து கடந்த 2012ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் அந்த தொகையை இதுவரை அரசு வழங்கவில்லை. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    அதனை விசாரித்த நீதிபதிகள் ஏற்கனவே நிர்ணயித்த இழப்பீட்டு தொகையுடன், 30 சதவீதம் ஆறுதல் தொகை, 15 சதவீதம் வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. அந்த தொகையும் வழங்கப்படவில்லை. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் கோர்ட்டு ஊழியர்கள் இன்று திண்டுக்கல் மாவட்ட கலெகடர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்தனர்.

    அப்போது மாவட்ட கலெக்டர், அலுவலகத்தில் இல்லை. மாவட்ட வருவாய் அலுவலர் லதா மற்றும் அதிகாரிகள் இருந்தனர். அவர்களிடம் கோர்ட்டு ஊழியர்கள் தீர்ப்பின் நகலை காட்டி ஜப்தி செய்யப் போவதாக தெரிவித்தனர். கூடுதல் கால அவகாசம் வழங்குமாறு வருவாய் அலுவலர் தெரிவித்தார். இதற்கு பாதிக்கப்பட்டவர்கள் சம்மதிக்காததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    • கடந்த 2010ம் ஆண்டு, குடும்ப பிரச்சினையில் இருவரிடையே தகராறு ஏற்பட்டது.
    • வழக்கு திருப்பூர் ஜே.எம்.எண் 1 கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    மணப்பாறை, சுக்கம்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(48).இவர் திருப்பூர் கோல்டன்நகரில் மனைவி சாந்தியுடன் வசித்து வந்தார்.கடந்த 2010ம் ஆண்டு, குடும்ப பிரச்சினையில் இருவரிடையே தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி கத்தியால் சாந்தியை குத்திக் காயப்படுத்தினார்.இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.இவ்வழக்கு திருப்பூர் ஜே.எம்.எண் 1 கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ஜாமினில் வெளி வந்த கிருஷ்ணமூர்த்தி, 2012ம் ஆண்டுக்குப் பின் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார்.இந்நிலையில் அவருக்கு கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்து, போலீசார் அவரைத் தேடி வந்தனர்.

    இதையறிந்த கிருஷ்ணமூ ர்த்தி, திருப்பூர் ஜே.எம்.எண் 1 கோர்ட்டில் சரணடைந்தார். பின்னர் அவர் திருப்பூர் மாவட்ட சிறையில் அடைக்க ப்பட்டார்.

    • தான் எவ்வளவோ கெஞ்சி பார்த்தும், மனைவி தன்னுடன் வர மறுப்பதால் சிவக்குமாருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
    • பட்டப்பகலில் கோர்ட்டுக்குள் பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் கோவை மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை:

    கோவை ராமநாதபுரம் காவேரி நகரை சேர்ந்தவர் சிவக்குமார்.

    இவருக்கு கவிதா (வயது33) என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.

    கடந்த 2016-ம் ஆண்டு கவிதா பஸ்சில் சென்ற போது, அதே பஸ்சில் பயணித்த பயணி ஒருவரிடம் நகையை திருடியதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக போலீசார் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். மேலும் இது தொடர்பாக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஜே.எம்.1 கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

    இந்நிலையில் ஜெயிலிலில் இருந்து வெளியில் வந்த கவிதாவுக்கு வேறு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதையடுத்து கவிதா தனது கணவரை பிரிந்து, கோவை சூலூர் கண்ணம்பாளையம் பிரிவில் வசித்து வந்துள்ளார்.

    கணவர் பலமுறை தன்னுடன் வந்து சேர்ந்து வாழுமாறு கவிதாவிடம் கூறியும் அவர் மறுத்து வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது.

    இந்நிலையில், கவிதா 2016-ல் நடந்த திருட்டு வழக்கு தொடர்பாக ஆஜராவதற்காக இன்று கோவை கோர்ட்டிற்கு வந்தார்.

    அப்போது அவரை பின் தொடர்ந்து அவரது கணவர் சிவக்குமார் வந்துள்ளார்.

    அவர் தனது மனைவியிடம், நீ பிரிந்து சென்றுவிட்டாய். நானும், குழந்தைகளும் மிகவும் கஷ்டப்படுகிறோம்.

    எனவே நீ எங்களுடன் வந்துவிடு என கூறினார். ஆனால் அவர் பதில் எதுவும் பேசாமல் நின்று கொண்டே இருந்தார்.

    சிவக்குமார் தொடர்ந்து பேசியும், அவர் எனக்கு கோர்ட்டிற்கு நேரமாகிறது என கூறி விட்டு கோர்ட்டிற்குள் சென்றார். சிவக்குமாரும் அவரை பின் தொடர்ந்து கோர்ட்டிற்குள் சென்றார். அங்கு 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இங்கு பேசினால் பிரச்சினை பெரிதாகிவிடும் என நினைத்த கவிதா கணவரை விட்டு நகர்ந்து, ஜே.எம்.1 கோர்ட்டு அருகே சென்று நின்று கொண்டார்.

    தான் எவ்வளவோ கெஞ்சி பார்த்தும், மனைவி தன்னுடன் வர மறுப்பதால் சிவக்குமாருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

    இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற சிவக்குமார் தான் ஏற்கனவே பாட்டிலில் மறைத்து எடுத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து கொண்டு மனைவி நின்ற இடம் நோக்கி நடந்து சென்றார்.


    அவரின் அருகில் சென்றதும் தான் வைத்திருந்த ஆசிட்டை மனைவியின் மீது ஊற்றினார். இதில் அவர் உடல் முழுவதும் ஆசிட் பற்றி அவரது சேலை முழுவதுமாக எரிந்தது.

    இதனை அருகே நின்ற பெண் வக்கீல் ஒருவர் பார்த்து வேகமாக ஓடி சென்று தான் அணிந்திருந்த கருப்பு கோட்டை கழற்றி பெண்ணிண் மீது போட்டார். ஆனால் அதுவும் எரிந்ததுடன், வக்கீலின் கையிலும் காயம் ஏற்பட்டது.

    ஆசிட் வீச்சில் காயம் அடைந்த கவிதா வலி தாங்க முடியாமல் அலறி சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அருகே நின்றிருந்த வக்கீல்கள் அனைவரும் ஓடி வந்தனர்.

    அவர்கள் காயத்துடன் உயிருக்கு போராடிய கவிதாவை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதற்கிடையே சிவக்குமார் அங்கிருந்து தப்பியோட முயன்றார். அவரை அங்கு இருந்த பெண் போலீஸ்காரர் பார்த்து அவரை பிடியுங்கள் என கூறவே வக்கீல்கள் துரத்தி சென்று அவரை பிடித்து சரமாரியாக தாக்கி ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் அவரிடம் எதற்காக ஆசிட் வீசினாய் என விசாரணை நடத்தினர். அதற்கு அவர் தனது மனைவி என்னையும், எனது குழந்தைகளையும் தவிக்க விட்டு சென்றதால் வீசியதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே இந்த சம்பவம் குறித்தும் அறிந்ததும் மாநகர துணை கமிஷனர் சந்தீஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு, அங்கு இருந்தவர்களிடம் விசாணை நடத்தினர்.

    பட்டப்பகலில் கோர்ட்டுக்குள் பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் கோவை மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோர்ட்டு அருகே ரவுடி ஒருவரை 5 பேர் கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் அடங்குவதற்குள், தற்போது கோர்ட்டுக்குள்ளாகவே பெண் ஒருவர் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவமும் கோவை மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது. 

    • திருவையாறில் நடந்த சாலை விபத்தில் அரவிந்த் எதிர்பாராத விதமாக இறந்தார்.
    • கல்வி கடன் வசூல் செய்ய இறந்த மாணவனுக்கு நேட்டிஸ் அனுப்பியது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் அருகே திருமானூர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் விவசாயி. இவரது மகன் அரவிந்த். இவர் பிளஸ்2 தேர்ச்சி பெற்ற பின்பு கரூரிலுள்ள தனியார் கல்லூரியில் என்ஜீனியரிங் படிப்பில் சேர்ந்தார்.

    அப்போது பன்னீர்செல்வம் மகனை தொடர்ந்து படிக்க வைக்க திருமழப்பாடியில் உள்ள வங்கியில் 2013-ம் ஆண்டு ரூ.2 லட்சம் கல்வி கடன் பெற்றுள்ளார். பின்னர் படிப்பை முடித்த அரவிந்தனுக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து அவர் தந்தைக்கு உதவியாக விவசாயம் பார்த்துவந்தார்.

    இதற்கிடையே 2022ம் ஆண்டு திருவையாறில் நடந்த சாலை விபத்தில் அரவிந்த் எதிர்பாராத விதமாக இறந்தார்.

    இருப்பினும் வங்கி நிர்வாகம் கல்வி கடன்களை வசூலிக்க தீவிரம் காட்டியது. இதையடுத்து பன்னீர்செல்வம் வங்கிக்கு சென்று கல்வி கடன் செலுத்த வசதி இல்லை, எனது மகனும் இறந்து விட்டான், கல்வி கடனை ரத்து செய்யவேண்டும் என கோரி மகனின் இறப்பு சான்றிதழ் இணைத்து எழுத்து பூர்வமாக மனு கொடுத்துள்ளார். இந்த மனுவை முதலமைச்சருக்கும், அரசுதுறை அதிகாரிகளுக்கும், வங்கி உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளார்.

    இந்நிலையில் அரியலூரில் உள்ள சப்-கோர்ட்டில் திருமழப்பாடியில் உள்ள வங்கி நிர்வாகம் இறந்த அரவிந்த் அவரது தந்தை பன்னீர்செல்வம் மீது கல்விகடன் வசூல் செய்ய வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது அசல் வட்டி எனக்கணக்கிட்டு ரூ.5லட்சம் கேட்டு சாலை விபத்தில் இறந்த அரவிந்தன் மற்றும் அவரது தந்தைக்கு கோர்ட்டிலிருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    கல்வி கடன் வசூல் செய்ய இறந்த மாணவனுக்கு நோட்டீஸ் அனுப்பியது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
    • வட மாநிலப் பெண் ஒருவர் பண உதவி செய்யுமாறு கூறியுள்ளார்.

    பல்லடம் ூ

    மேற்கு வங்க மாநில த்தைச் சேர்ந்த பஜூலு மண்டல் என்பவரது மகன் ஷாஜி மண்டல்(வயது35). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அருள்புரம் செந்தூரான் காலனியில் வசித்துக் கொண்டு, தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    சம்பவத்தன்று இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட வட மாநிலப் பெண் ஒருவர் வேலையி ல்லாமல் கஷ்டப்படு வதாகவும் , தற்போது மிகவும்சிரமமாக இருப்பதால் பண உதவி செய்யுமாறு கூறியுள்ளார். இதனால் அவருக்கு உதவி செய்வதற்காக அந்தப் பெண் வரச்சொன்ன சின்னக்கரை பஸ் நிறுத்தம் அருகே ஷாஜி மண்டல் சென்றுள்ளார்.

    அப்போது அங்கு காரில் வந்த மர்ம நபர்கள் ஷாஜி மண்டலை கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவரை திருப்பூர் கொண்டு சென்று அங்கு உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்து, அவரை அடித்து மிரட்டி ரூ. 10லட்சம் பணம் கேட்டுள்ளனர். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக்கூறி ஷாஜி மண்டல் அழுதுள்ளார். மீண்டும் அவரை தாக்கிய கடத்தல்காரர்கள் அவர் வைத்திருந்த ஏடிஎம் கார்டு, பணம் ரூ. 5 ஆயிரம், மற்றும் வெள்ளி பிரேஸ்லெட் ஆகியவற்றை பறித்துக்கொ ண்டனர்.

    பின்னர் திருப்பூரில் உள்ள ஏடிஎம். மையத்தில் ஷாஜி மண்டலின் ஏடிஎம். கார்டை பயன்படுத்தி ரூ. 56 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளனர். பின்னர் அவரை திருப்பூர் அரசு மருத்துவமனை அருகே இறக்கி விட்டு, சீக்கிரமாக பணத்தை ரெடி செய், இது குறித்து புகார் செய்ய போலீசுக்கு போனால் குடும்பத்தையே கொலை செய்து விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதையடுத்து தன்னை கடத்தி பணம் பறித்த பெண் உள்ளிட்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர் பல்லடம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பல்லடம் போலீசார் அவரிடம் பேசிய ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அஜித்குமார் என்பவரது மனைவி சுகுலா சர்தார்(35) என்பவரை பிடித்து விசாரணை செய்த போது, அவரும் இன்னும் 4 நபர்களும் சேர்ந்து இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் தனிப்படை அமை க்கப்பட்டு, தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.இந்தநிலையில் இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய நெல்லையை சேர்ந்த ஜெயகுமார் மகன் பாலசுப்பிரமணியன் (18), நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியை சேர்ந்த மோகன் மகன் கிளிண்டன் (23) ஆகிய 2பேர் மதுரை மாவட்டம் திருப்புவனம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடை ந்தனர். அவர்களை நீதிபதி காவலில் வைக்க உத்தர விட்டார். இதையடுத்து 2பேரும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் தொடர்பு டைய மேலும் 2பேரை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர். கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் இதுவரை 100க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களை கடத்தி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜீ, சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு நிலுவையில் உள்ள ஜீவனாம்சம் தொகையை செலுத்த வந்தார்.
    • மனுவை விசாரித்த நீதிபதி, நிலுவைத் தொகையான ரூ. 2 லட்சத்து 18 ஆயிரத்தை ராஜீ வழங்க வேண்டுமென உத்தரவிட்டார்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தேவண்ணக் கவுண்டனூர் கிராமம் கிடையூர் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராஜீ (வயது 57). தனியார் நிறுவனத்தில் கேசியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சாந்தி. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில் சாந்தி, தனது கணவர் ராஜீ என்பவர் தனக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என சங்ககிரி குற்றவியல் நீதிமன்றம் எண்.2-ல் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, ராஜீ தனது மனைவி சாந்திக்கு மாதமாதம் ரூ. 3 ஆயிரம் ஜீவனாம்சம் தொகை வழங்க வேண்டுமென உத்தர விட்டார்.

    அவரது உத்தரவின்பேரில் ராஜீ மாதமாதம் ரூ.3 ஆயிரம் ஜீவனாம்சம் தொகையை சாந்திக்கு வழங்கி வந்தார். இந்த நிலையில் சாந்தி நிலுவையில் உள்ள ஜீவனாம்சம் தொகையையும் வழங்க வேண்டும் என மீண்டும் சங்ககிரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    மனுவை விசாரித்த நீதிபதி, நிலுவைத் தொகையான ரூ. 2 லட்சத்து 18 ஆயிரத்தை ராஜீ வழங்க வேண்டுமென உத்தரவிட்டார். இதையடுத்து, ராஜீ, சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு நிலுவையில் உள்ள ஜீவனாம்சம் தொகையை செலுத்த வந்தார். அப்போது அவர் ரூ. 2 லட்சத்து 18 ஆயிரத்திற்கும் 10 ரூபாய் நாணயங்களாக 11 பைகளில் கட்டிக்கொண்டு வந்து கோர்ட்டில் ஒப்படைத்தார். கூடியிருந்த மக்கள் ஆச்சரியரித்துடன் பார்த்தனர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பெண் நீதிபதிகளுக்கான 53 ஆண்டு கால ஆடைவிதியில் மாற்றம் செய்ய வேண்டும்.
    • கேரள பெண் நீதிபதிகளின் முறையீட்டை கேரள ஐகோர்ட்டு கவனிக்க உள்ளதாக தெரிகிறது.

    திருவனந்தபுரம் :

    தற்போது பெண் நீதிபதிகள், கோர்ட்டில் சேலை, வெள்ளை கழுத்துப் பட்டை, கருப்பு நிற மேலங்கி (கவுன்) அணிய வேண்டியிருக்கிறது.

    ஆனால் இந்த ஆடைமுறை அசவுகரியமாக இருக்கிறது, அதிலும் குறிப்பாக, தற்போதைய கோடைகாலத்தில், நெரிசல் நிறைந்த கோர்ட்டுகளில் இவ்வாறு இறுக்கமாக ஆடை அணிந்து பல மணி நேரம் அமர்ந்திருப்பது மிகவும் சிரமமாக உள்ளது, அதிலும் பல சமயங்களில் மின் தடை ஏற்படும்போது வியர்த்து வழிய வேண்டியுள்ளது என்பது பல பெண் நீதிபதிகளின் மனக்குறை.

    இந்நிலையில் கேரள கோர்ட்டு பெண் நீதிபதிகள் சுமார் 100 பேர் கேரள ஐகோர்ட்டு பதிவாளரை நாடியுள்ளனர். அவரிடம், பெண் நீதிபதிகளுக்கான 53 ஆண்டு கால ஆடைவிதியில் மாற்றம் செய்ய வேண்டும். கோர்ட்டில் பணியின்போது சுடிதார் அணிய அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

    தெலுங்கானா ஐகோர்ட்டு கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 15-ந் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

    அந்த சுற்றறிக்கையில், பெண் நீதிபதிகள் பணியின்போது வழக்கமான சேலையுடன், சல்வார், சுடிதார், நீளமான பாவாடை, பேண்ட் அணியலாம். அவை வெள்ளை, வெளிர் மஞ்சள், சாம்பல், கருப்பு வண்ணத்திலோ, அவற்றின் கலவையிலோ இருக்கலாம் என தெரிவித்திருந்தது.

    கடந்த 1970-ம் ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்த, நீதிபதிகளுக்கான ஆடைவிதியின்படி, பெண் நீதிபதிகள் மிதமான வண்ணத்திலான பிராந்திய ஆடை, மேலங்கியுடன், வெண்ணிறத்திலான கழுத்துப் பட்டை அணிய வேண்டும். அதேபோல ஆண் நீதிபதிகள், கருப்புநிற 'ஓபன் காலர்' கோட்டு, வெண்ணிற சட்டை, வெள்ளை நிறத்திலான கழுத்துப் பட்டையுடன், மேலங்கி அணியலாம்.

    கேரள பெண் நீதிபதிகளின் முறையீட்டை கேரள ஐகோர்ட்டு கவனிக்க உள்ளதாக தெரிகிறது. அதன்பின்தான், இந்த 53 ஆண்டுகால ஆடைவிதியில் மாற்றம் வருகிறதா என்பது தெரியவரும்.

    • வக்கீல்களுக்கும், நீதிபதிகளுக்கும் இலவச மருத்துவ முகாம்
    • பல்வேறு நோய்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் செய்து மருந்துகளும் இலவசமாக வழங்கினர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வக்கீல்களுக்கும், நீதிபதிகளுக்கும் இலவச மருத்துவ முகாம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வக்கீல் சங்க அலுவலகத்தில் இன்று நடந்தது. நாகர்கோவில் வக்கீல் சங்க தலைவர் பால ஜனாதிபதி தலைமை தாங்கினார். மாவட்ட நீதிபதி அருள்முருகன் முகாமை தொடங்கி வைத்தார்.

    முகாமில் வக்கீல் சங்க செயலாளர் ஆதிலிங்கம், இணை செயலாளர் சரவணன், மூத்த நூலகர் சலீம், செயற்குழு உறுப்பினர் ஜாக்குலின் ஆஷா, மூத்த உறுப்பினர்கள் ஜெயச்சந்திரன், பழனி ஜஸ்டின் கிறிஸ்டோபர், முன்னாள் வக்கீல் சங்க தலைவர் மரிய ஸ்டீபன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    முகாமில் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை டாக்டர் குழுவினர் இருதய நோய், கண், காது, மூக்கு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்பட பல்வேறு நோய்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் செய்து மருந்துகளும் இலவசமாக வழங்கினர்.

    ×