search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமஜெயம்"

    தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் 3-வது கட்டமாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. #DMK #CBI #Ramajeyam
    திருச்சி:

    திருச்சியை சேர்ந்த தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு எம்.எல்.ஏ.வின் சகோதரர் ராமஜெயம். தொழிலதிபரான இவர் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29-ந்தேதி அதிகாலை வீட்டில் இருந்து நடைபயணம் சென்ற போது கடத்தி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக முதலில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால் விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது.

    சம்பவம் நடந்து 6 ஆண்டுகளை கடந்தும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் ராமஜெயம் மனைவி லதா, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சில ஆண்டுகளுக்கு முன் தாக்கல் செய்த மனுவில், சம்பவம் நடந்து 32 மாதங்களாகியும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதன் காரணமாக குடும்பத்தினர் அனைவரும் மிகவும் மன வருத்தத்தில் இருக்கிறோம். எனவே இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என கூறியிருந்தார்.

    மனுவை விசாரித்த நீதிமன்றம், 2015 ஜனவரி 8-ந்தேதிக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டது. அதன்பின் விசாரணை சூடுபிடித்தது. ஆனாலும் குற்றவாளிகளை பிடிக்க முடியவில்லை.

    இருப்பினும் சி.பி.சி.ஐ.டி.க்கு பல முறை கோர்ட்டு அவகாசம் அளித்தது. எனினும் இதில் முன்னேற்றம் ஏற்படாததால் வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 7-ந்தேதி மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


    இதைத்தொடர்ந்து திருச்சியில் ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து சி.பி.ஐ. இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் , முதல் கட்ட விசாரணையை கடந்த ஜனவரி மாதம் 26-ந்தேதி தொடங்கினார். ராமஜெயம் உடல் கிடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அதன்பின்னர் மார்ச் மாதம் அதிகாரிகள் திருச்சி வந்து விசாரணை நடத்தினர். தற்போது கடந்த 16-ந்தேதி திருச்சி வந்த சி.பி.ஐ. அதிகாரிகள், சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் அளித்த ஆவணங்களை கொண்டு ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாக்கிங் சென்றதாக கூறப்படும் இடங்கள் மற்றும் வீடு அமைந்துள்ள இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் தொடர்ந்து ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக 3-வது கட்டமாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #DMK #CBI #Ramajeyam

    ×