search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடியிருப்புகள்"

    மதுரை துணைக்கோள் நகரத்தில் 10 ஆயிரம் குடியிருப்புகள் கட்டப்படும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார். #TNMinister #RBUdhayakumar
    மதுரை:

    மதுரையில் இருந்து நெல்லைக்கு நடத்துனர் இல்லாத விரைவு பஸ் சேவையை திருமங்கலத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று தொடங்கி வைத்தார்.

    திருமங்கலத்தில் இருந்து 6 விரைவு பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்த ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் விரைவு பஸ் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் நடத்துனர் இல்லாத பஸ் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    மதுரையில் இருந்து திருமங்கலம் வழியாக நெல்லைக்கு 6 விரைவு பஸ் சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த பஸ்களில் நடத்துனர்கள் அதற்குரிய ஸ்டே‌ஷன்களில் இருப்பார்கள். இந்த பஸ் சேவை மூலம் மக்கள் விரைவாகவும், பாதுகாப்புடனும் செல்ல முடியும்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவல்துறை மானிய கோரிக்கையின் போது தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பராமரிக்கப்படுவதை புள்ளி விவரங்களுடன் எடுத்துக்கூறினார்.

    சட்டம், ஒழுங்கை காப்பாற்றக்கூடிய இந்த அரசின் யுக்தியை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். ஆனால் மாற்றுக்கொள்கை, லட்சியம் உள்ளவர்கள் இதை ஏற்றுக் கொள்வார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது.

    எந்த ஒரு கட்சிக்கும் லட்சியம், கொள்கை, எதிர் பார்ப்பு இருக்கும். அதில் தவறு இல்லை. தங்களது கட்சி தொண்டர்களை திருப்திப்படுத்துவதற்காக லட்சியங்களையும், கொள்கைகளையும், எதிர்பார்ப்புகளையும் அவர்களிடம் எடுத்துச் சொல்வது மரபு. அது தான் வாடிக்கை.

    அந்த வாடிக்கையே சில சமயங்களில் வேடிக்கையாகவும் அமைவது உண்டு.

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைந்ததில் 7 கோடி தமிழர்களுக்கும் பங்கு உண்டு. வருவாய்த்துறை அமைச்சர் என்ற முறையில் அதற்கு உரிய நிலத்தை ஆர்ஜிதம் செய்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்ற பணியில் மன நிறைவோடு செயல்பட்டுள்ளேன்.


    எய்ம்ஸ் அருகே துணைக்கோள் நகரம் அமைய இருக்கிறது. இது மறைந்த முதல்-அமைச்சர் அம்மா கண்ட கனவு திட்டம் ஆகும்.

    இந்த துணைக்கோள் நகரத்தில் குடிசை மாற்று வாரியம் மூலம் 5 ஆயிரம் வீடுகளும், வீட்டு வசதி வாரியம் மூலம் 5 ஆயிரம் குடியிருப்புகளும் மொத்தம் 10 ஆயிரம் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன.

    மேலும் பள்ளி, கல்லூரிகளும் அங்கு வர உள்ளது. அதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    பஸ் போர்ட்டும் அமைவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. கோவை, சேலம், அடுத்து மதுரைக்கு பஸ் போர்ட் வருகிறது. அதற்குரிய இடம் தேர்வு செய்யப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    துணைக்கோள் நகரம் அமைப்பதற்கு தேவையானதை விட கூடுதல் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன.

    இந்த திட்டங்களை செயல்படுத்தும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் வருவாய் அதிகாரி குணாளன், நிர்வாகிகள் வெற்றிவேல், ஜான் மகேந்திரன், அய்யப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  #TNMinister #RBUdhayakumar
    ×