search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ₹35 காணாமல் போனதால், 122 மாணவர்களை அருகில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று சத்தியம் செய்ய வைத்த ஆசிரியர் நீட்டூ குமாரி பணியிடமாற்றம்
    • சத்தியம் செய்தும் ஆசிரியருக்கு பணம் திரும்பக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    பீகார் மாநிலம் பன்கா மாவட்டத்தில் தனது பையிலிருந்த ₹35 காணாமல் போனதால், 122 மாணவர்களை அருகில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று சத்தியம் செய்ய வைத்த ஆசிரியர் நீட்டூ குமாரி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    ஆசிரியரின் இச்செயலை பொறுத்துக்கொள்ளாத மாணவர்களின் பெற்றோர் புகாரளித்த நிலையில் அம்மாநில பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    கடந்த புதன்கிழமை (பிப் 21) பள்ளிக்கு வந்த ஆசிரியர் நீட்டூ குமாரி, தனது பையிலிருந்த தண்ணீர் பாட்டிலை கொண்டு வரச் சொல்லி ஒரு மாணவருக்கு சொல்லியுள்ளார். பின்னர் அவர் தனது பையிலிருந்த 35 ரூபாய் காணாமல் போனதை கண்டுபிடித்துள்ளார்.

    பின்னர் ஒவ்வொரு மாணவர்களிடமும் அவர் பணம் காணாமல் போனதை பற்றி விசாரித்துள்ளார். அதில் மாணவர்கள் சொன்ன பதிலால் திருப்தியடையாத ஆசிரியர், மாணவர்களை பக்கத்தில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று பணம் திருடவில்லை என்று சத்தியம் செய்ய வைத்துள்ளார். சத்தியம் செய்தும் ஆசிரியருக்கு பணம் திரும்பக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • சம்பவம் குறித்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது.
    • தலைமறைவான ஆசிரியர் வெங்கடேசன் ஏ.டி.எம்களில் பணம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுடன் உல்லாசமாக இருந்து வருவதாக தெரிகிறது.

    அகரம்சீகூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஆத்தூர் சாலை பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி தீபா (வயது 42) மாற்றுத்திறனாளியான இவர் பெரம்பலூர் வி. களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

    பெரம்பலூர் குரும்பலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (44). இவரும் அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

    இவர்கள் 2 பேரையும் கடந்த 15-ந் தேதி முதல் காணவில்லை. மேலும் ஆசிரியை தீபா பயன்படுத்தி வந்த காரும் மாயமானது. அதைத்தொடர்ந்து மனைவியை காணவில்லை என தீபாவின் கணவர் பாலமுருகன் வி. களத்தூர் போலீஸ் நிலையத்திலும், கணவரை காணவில்லை என வெங்கடேசனின் மனைவி காயத்ரி பெரம்பலூர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி கோவை பி1 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய கடைவீதி பகுதியில் மாயமான ஆசிரியை தீபாவின் கார் 2 நாட்களாக கேட்பாரற்று நின்று கொண்டிருப்பதாக வி. களத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    பின்னர் போலீசார் விரைந்து சென்று காரைத்திறந்து சோதனையிட்டனர். அப்போது அதில் ரத்தக் கறை படிந்த சுத்தியல், தீபா அணிந்திருந்த தாலி, கொலுசு, அவரின் ஏ.டி.எம். கார்டு வெங்கடேசனின் 2 செல்போன்கள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது.

    இதனிடையே ஆசிரியர் வெங்கடேசன் செல்போனில் இருந்து பாலியல் புரோக்கரான கோவை மதுக்கரை காந்தி நகரைச் சேர்ந்த மோகன் என்பவரை தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது.

    இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தீபா கதி என்ன என்பது குறித்து தனிப்படை கோவை, தேனி, நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. கேரளாவிற்கும் தனிப்படை விரைந்துள்ளது.

    தனிப்படை போலீசார் விசாரணையில் ஆசிரியர் வெங்கடேசன் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. தீபா என்ன ஆனார் என்பது தொடர்ந்து மர்மமாக உள்ளது. இதனிடையே கோவை, மதுரை, தேனி ஆகிய இடங்களில் ஏ.டி.எம்க.ளில் வெங்கடேசன் பணம் எடுத்த போது அங்குள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளில் ஆசிரியர் வெங்கடேசன் மட்டுமே இருப்பது பதிவாகியுள்ளது.

    வெங்கடேசன் தொடர்பு கொண்டு பேசுபவர்களின் செல்போன் எண்களை விசாரிக்கும் போது, அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் என்பது தெரிய வந்தது.

    தலைமறைவான ஆசிரியர் வெங்கடேசன் ஏ.டி.எம் களில் பணம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுடன் உல்லாசமாக இருந்து வருவதாக தெரிகிறது.

    மாயமான ஆசிரியர் வெங்கடேசன், தனது இருப்பிடத்தை போலீசர் அறிந்துவிடுவார்கள் என அவ்வப்போது சிம்கார்டுகளையும், தான் பதுங்கி இருக்கும் இடத்தையும் மாற்றி மாற்றி வருகிறார். இதனால் அவரை நெருங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதனால் தீபாவை வெங்கடேசன் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    வெங்கடேசன் சிக்கினால் மட்டுமே ஆசிரியை தீபா பற்றிய நிலை தெரியவரும் என்பதால் அவரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று சகோதர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் 6-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் 7-ம் வகுப்பு படிக்கும் அண்ணனின் வகுப்பிற்கு சென்று அவரை அடித்ததாக கூறப்படுகிறது.
    • மாணவன் கதறி அழுத நிலையில் இதுகுறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என வகுப்பு ஆசிரியர் மிரட்டியுள்ளார்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே புளியம்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த சகோதரர்கள் 7 மற்றும் 6-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில் சம்பவத்தன்று சகோதர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் 6-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் 7-ம் வகுப்பு படிக்கும் அண்ணனின் வகுப்பிற்கு சென்று அவரை அடித்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து நேற்று பள்ளி யின் 7-ம் வகுப்பு ஆசிரியர் அன்புமணி 6-ம் வகுப்பிற்கு சென்று சம்பந்தப்பட்ட மாணவரின் சட்டையை கழற்ற வைத்து முதுகில் சரமாரியாக அடித்துள்ளார். மாணவன் கதறி அழுத நிலையில் இதுகுறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டியுள்ளார்.

    இந்த நிலையில் வீட்டிற்கு சென்ற மாணவரின் முதுகு வீங்கி இருந்ததை பார்த்த பெற்றோர் விசாரித்தபோது சிறுவன் நடந்தவற்றை கூறியுள்ளான். இதையடுத்து அவனை ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த பெற்றோர் ஆசிரியர் அன்புமணி மீது ஓமலூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து அரசு பள்ளி ஆசிரியர் அன்புமணி மீது தாக்குதல் நடத்துவது, கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

    • தீபா மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். பெரம்பலூர் போலீசார் தீபாவை தேடி வந்தனர்.
    • பெரம்பலூர் போலீசார் கோவையில் முகாமிட்டு விசாரணையை விரைவுப்படுத்தி உள்ளனர்.

    கோவை:

    கோவை உக்கடம் ராமர் கோவில் அருகே உள்ள காய்கறி மார்க்கெட் பின்புறம் கடந்த 3 நாட்களாக ஒரு கார் அனாதையாக நின்றது. சந்தேகம் அடைந்த பொதுமக்கள் இதுபற்றி பெரியகடை வீதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து சென்று காரை சோதனை செய்தனர். அப்போது காரில் பல இடங்களில் ரத்தக்கறை படிந்திருந்தது. ரத்தக்கறையுடன் ஒரு சுத்தியலும் கிடந்தது. மேலும் ஒரு போர்வை, துண்டு ஆகியவையும் இருந்தது.

    ரத்தக்கறையுடன் சுத்தியல் கிடந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக விசாரணையை துரிதப்படுத்தினர். அந்த கார் யாருக்கு சொந்தமானது என விசாரித்தபோது பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருடையது என தெரியவந்தது. பாலமுருகனின் மனைவி தீபா பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த 17-ந் தேதி பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு காரில் புறப்பட்டுச் சென்று இருக்கிறார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. தீபா மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். பெரம்பலூர் போலீசார் தீபாவை தேடி வந்தனர்.

    இந்நிலையில் தான் தீபா வந்த கார் கோவையில் அனாதையாக நின்றது தெரியவந்தது. தீபாவுடன், ஆசிரியர் ஒருவரும் வந்ததாக கூறப்படுகிறது. தீபா பணியாற்றிய அதே பள்ளியில் தான் அவரும் பணியாற்றி இருக்கிறார். தீபா மாயமான அன்று அவரும் மாயமாகி உள்ளார். இதனால் தீபாவையும், அந்த ஆசிரியரையும் போலீசார் தேடி வந்துள்ளனர்.

    தற்போது தீபா வந்த காரில் ரத்தக்கறை படிந்துள்ளதால் போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. தீபாவுக்கும், அவருடன் வந்த ஆசிரியருக்கும் எதாவது பிரச்சினை ஏற்பட்டு அவர்கள் தாக்கிக் கொண்டதில் காரில் ரத்தக்கறை ஏற்பட்டதா அல்லது எதனால் ரத்தக்கறை ஏற்பட்டது என்று தெரியவில்லை. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மேலும் மாயமான ஆசிரியை தீபாவின் கதி என்ன என்று தெரியவில்லை. அவரையும், ஆசிரியரையும் போலீசார் தேடி வருகிறார்கள். இந்த வழக்கை பெரம்பலூர் போலீசார் விசாரித்து வருவதால் கோவை மாநகர போலீசாருக்கு அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பெரம்பலூர் போலீசார் கோவையில் முகாமிட்டு விசாரணையை விரைவுப்படுத்தி உள்ளனர்.

    • இணைய வழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வருகிற 3-ந்தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
    • ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2023-24-ம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர், வட்டார வளமைய பயிற்றுநர் காலிப் பணியிடங்களுக்கு போட்டி தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு விண்ணப்பதாரர்கள் இணைய வழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வருகிற 3-ந்தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் விண்ணப்பதாரர்கள் இணைய வழியாக விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம் கோரியுள்ளதால் இணைய வழி வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி தேதி வருகிற 7-ந்தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர், வட்டார வளமைய பயிற்றுநர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் வருகிற 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் முருகன் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக தெரிகிறது.
    • துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் எனவும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கொசவபட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 50 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக முருகன் (வயது 51) என்பவர் பணிபுரிந்து வருகிறார். பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் முருகன் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக தெரிகிறது.

    இது குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு பள்ளிக்கு வந்தனர். அங்கிருந்த தலைமை ஆசிரியர் முருகனை சரமாரியாக தாக்கினர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    தலைமை ஆசிரியரை சக ஆசிரியர்கள் மீட்டு வேறு ஒரு அறைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் இது குறித்து அம்பிளிக்கை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் தலைமை ஆசிரியரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் எனவும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

    இச்சம்பவத்தால் அரசு பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • புதுக்கோட்டை செல்வதற்காக ஆடுதுறையில் இருந்து ரெயிலில் ஏறி தஞ்சாவூரில் இறங்கினார்.
    • அப்பாஸை கத்தியை காட்டி மிரட்டி பணம் கொடுக்குமாறு கூறினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் ஆடுதுறையை சேர்ந்தவர் அ.அப்பாஸ் (வயது 51). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று புதுக்கோட்டை செல்வதற்காக ஆடுதுறையில் இருந்து ரெயிலில் ஏறி தஞ்சாவூரில் இறங்கினார். பின்னர் அங்கிருந்து புதிய பஸ் நிலையம் செல்வதற்காக இரவில் மேரீஸ் கார்னர் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார் . இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நான்கு பேர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்து இறங்கினர்.

    பின்னர் அப்பாஸை கத்தியை காட்டி மிரட்டி பணம் கொடுக்குமாறு கூறினார். அதற்கு அவர் கொடுக்க மறுத்தார். உடனே நான்கு பேரும் சேர்ந்து அப்பாஸின் சட்டைப்பாக்கட்டில் இருந்து ரூ.6500 ரொக்கம் மற்றும் செல்போனை பறித்து மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்து அப்பாஸ் தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர் . இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அரசு உயர்நிலை பள்ளியில் வரலாறு காணாத வகையில் நிறைய இரட்டையர்கள் படித்து வருகிறார்கள்.
    • சரியான நபரை அடையாளம் காண்பதில் தினமும் திணறுகிறார்கள்.

    கர்நாடக மாநிலம் பந்துவால் தாலுகாவில் உள்ள ஒரு அரசு உயர்நிலை பள்ளியில் வரலாறு காணாத வகையில் நிறைய இரட்டையர்கள் படித்து வருகிறார்கள்.

    தற்போது அந்த பள்ளியில் 9-ம் வகுப்பில் 5 இரட்டையர்கள் உள்ளனர். அந்த 5 இரட்டையர்களும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    பார்ப்பதற்கு அச்சு அசல் ஒரே மாதிரி காட்சி அளிக்கும் அந்த இரட்டையர்கள் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு கடும் சவாலாக உள்ளனர். அவர்களது பெயர்களை ஆசிரியர்கள் நினைவு வைத்திருந்தாலும், சரியான நபரை அடையாளம் காண்பதில் தினமும் திணறுகிறார்கள். இது பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் இன்று வைரலாக பரவியது.

    • ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி வெற்றவர்கள் மீண்டும் ஒரு நியமனத் தேர்வு எழுத வேண்டும்.
    • ஒவ்வொருவருக்கும், குடும்ப சுமையும், சமுதாய சுமையும் கூடிக்கொண்டே போகிறது.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்று கடந்த 10 ஆண்டுகளாக வேலையில்லாமல் தவித்துவரும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு பணி வழங்கிட வேண்டும். 2013-ம் ஆண்டு தேர்ச்சிப் பெற்ற ஆசிரியர்கள் அரசு பணி வழங்ககோரி இதுவரை பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். தற்பொழுது 2013-ம் ஆண்டு முதல் இதுரை தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களின் பதிவு மூப்பின் அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்றும், ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி வெற்றவர்கள் மீண்டும் ஒரு நியமனத் தேர்வு எழுத வேண்டும் என்ற 149-வது அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

    கடந்த ஆட்சியில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப்பெற்றோர் நலச்சங்கம் நடத்திய போராட்டத்தில் திமுக கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளது. அதோடு கடந்த சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் வாக்களித்து வாக்குகளை பெற்று வெற்றியடைந்த பிறகு கொடுத்த வாக்குறுதிகளை நிராகரிப்பது எந்தவிதத்தில் நியாயம்.

    தமிழகம் முழுவதும் ஆசிரியர் பணியிடங்களுக்கு பல்லாயிரக்கணக்கான இடங்கள் காலியாக உள்ள நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்று பணிக்காக காத்திருப்பவர்களுக்கு உடனடியாக தமிழக அரசு பணியினை வழங்க வேண்டும். ஒவ்வொருவருக்கும், குடும்ப சுமையும், சமுதாய சுமையும் கூடிக்கொண்டே போகிறது. தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் தகுதியுள்ள, தகுதிப்பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்

    • காயம்பட்ட நிலையில் பச்சை கிளி ஒன்று ஆசிரியர் பக்தவத்சலம் மடியில் வந்து அமர்ந்துள்ளது.
    • ஆசையாக வளர்த்து வந்த ஆண்டாள் கிளியை ஆசிரியர் பக்தவத்சலம் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் பெரிய மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பக்தவத்சலம். இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கைலாசநாதர் கோவில் அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். சற்று ஓய்வெடுக்க அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்துள்ளார்.

    அப்போது காயம்பட்ட நிலையில் பச்சை கிளி ஒன்று ஆசிரியர் பக்தவத்சலம் மடியில் வந்து அமர்ந்துள்ளது. இதையடுத்து கிளியை மீட்ட ஆசிரியர் அதனை வீட்டில் எடுத்து வந்து சிகிச்சை அளித்தார். மேலும் அதற்கு ஆண்டாள் என பெயரிட்டு ஆசையுடன் வளர்த்தும் வந்தார்.

    இதனிடையே கிளியை வீட்டில் வளர்த்துக்கொள்ள அனுமதி கேட்டு சென்னை முதன்மை வனச்சரக அலுவலருக்கு விண்ணப்பித்தார். இந்த தகவலை அறிந்த மாவட்ட வனத்துறை அதிகாரிகள் நேற்று தாரமங்கலத்தில் உள்ள ஆசிரியர் பக்தவத்சலத்தின் வீட்டிற்கு வந்தனர்.

    கிளியை வீட்டில் வளர்க்க அனுமதி அளிக்க முடியாது என தெரிவித்தனர். மேலும் கிளியை வனத்தில் விட அரசு ஆணை பிறப்பித்த நகலை காண்பித்தனர். இதனை தொடர்ந்து தான் ஆசையாக வளர்த்து வந்த ஆண்டாள் கிளியை ஆசிரியர் பக்தவத்சலம் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். 

    • பயிலும் மாணவ-மாணவிகளை அவதூறாகவும், ஆபாசமாகவும் திட்டி வந்ததாக கூறப்படுகிறது.
    • ஜெயசெல்வி குறித்து தலைமை ஆசிரியை ரத்தின ஜெயந்தியிடம் புகார் அளித்துள்ளார்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள தளபதி சமுத்திரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.

    இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கண்ணநல்லூர் கிராமத்தை சேர்ந்த ஸ்டெல்லா ஜெயசெல்வி என்பவர் வேதியியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    இவர்அங்கு பயிலும் மாணவ-மாணவிகளை அவதூறாகவும், ஆபாசமாகவும் திட்டி வந்ததாக கூறப்படுகிறது. தளபதி சமுத்திரம் கீழுர் பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவரையும், மாணவி ஒருவரையும் ஆபாசமாக திட்டியதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் மாணவரின் பெற்றோர் ஆசிரியை ஜெயசெல்வி குறித்து தலைமை ஆசிரியை ரத்தின ஜெயந்தியிடம் புகார் அளித்துள்ளார்.

    இதையடுத்து தலைமை ஆசிரியை ரத்தின ஜெயந்தி, ஸ்டெல்லா ஜெய செல்வியிடம் விளக்கம் கேட்டு, மெமோ கொடுத்துள்ளார். அப்போது ஆசிரியை ஜெயசெல்வி மெமோவை கிழித்து எரிந்து தலைமை ஆசிரியை ரத்தின ஜெயந்தியை ஆபாசமாக பேசி தாக்கினார்.

    மேலும் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பிடித்து பறித்து கையில் கடித்துள்ளார். இதுகுறித்து ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் விரைந்து சென்று ஆசிரியையிடம் இருந்த தங்க சங்கிலியை மீட்டு தலைமை ஆசிரியையிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வேதியியல் ஆசிரியை ஸ்டெல்லா ஜெயசெல்வி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளியில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவரிடம் கொடுக்க சொல்லியதை தொடர்ந்து, பணம் கொடுத்துவிட்டு சான்றிதழை வாங்கி வந்துள்ளார்.
    • சான்றிதழ் , மாற்று சான்றிதழ் வாங்க வருபவர்களிடம் கட்டாயபடுத்தி பணம் வாங்கி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், அமானி மல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் தான் படித்த பள்ளியான அமானி மல்லாபுரம் அரசு மேல்நிலைபள்ளிக்கு சென்று தமிழ் வழி கல்வி சான்று கேட்டு தலைமை ஆசிரியர் சசிக்குமாரை அணுகி உள்ளார். அப்போது சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால் முதலில் பள்ளிக்கு நோட்டுகள், பேப்பர் பண்டல்கள் வாங்கி தருமாறு தலைமை ஆசிரியர் கேட்டுள்ளார்.

    அதன் பிறகு நோட்டு, பேப்பர் பண்டல்களை நாங்களே வாங்கி கொள்கிறோம் பணமாக கொடுத்து விடுங்கள் எனக்கூறி 300 ரூபாய் பணத்தை பள்ளியில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவரிடம் கொடுக்க சொல்லியதை தொடர்ந்து, பணம் கொடுத்துவிட்டு சான்றிதழை வாங்கி வந்துள்ளார. மேலும் கார்த்திக், பணம் கொடுத்ததை தனது செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார்.

    குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள தலைமை ஆசிரியர் சசிக்குமார், இது போன்று சான்றிதழ் , மாற்று சான்றிதழ் வாங்க வருபவர்களிடம் கட்டாயபடுத்தி பணம் வாங்கி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

    இது தொடர்பாக மாவட்ட கல்வித்துறையும், தமிழக அரசும் உரிய விசாரணை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் மாணவர் கார்த்திக் கோரிக்கை வைத்துள்ளார்.

    ×