search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுட்டுக்கொலை"

    • பைக்கில் வந்த சிலர் தர்லோஜன் சிங் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றனர்.
    • போலீசார் தர்லோஜனை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்ற கும்பலை தேடி வருகின்றனர்.

    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவடம் ஹனா பகுதி இகொலனா கிராமத்தை சேர்ந்தவர் தர்லோஜன் சிங் (வயது 60). இவர் ஹனா பகுதி ஆம் ஆத்மி விவசாய பிரிவு தலைவராக செயல்பட்டு வருகிறார்.

    இந்நிலையில், ஆம் ஆத்மி நிர்வாகியான இவர் தனது தோட்டத்தில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த சிலர் தர்லோஜன் சிங் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றனர்.

    இந்த துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த தர்லோஜன் சிங்கை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தர்லோஜன் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தர்லோஜனை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்ற கும்பலை தேடி வருகின்றனர்.

    • எல்லைக்கோடு அருகே குறைந்தது 3-4 பயங்கரவாதிகள் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
    • ராணுவத்தால் முறியடிக்கப்பட்ட இரண்டாவது ஊடுருவல் முயற்சி இதுவாகும்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே இன்று (ஜூலை 18) பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

    தொடர்ந்து நடந்த நடவடிக்கையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ள பகுதியில் குறைந்தது 3-4 பயங்கரவாதிகள் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

    ஒரு வாரத்திற்குள் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் ராணுவத்தால் முறியடிக்கப்பட்ட இரண்டாவது ஊடுருவல் முயற்சி இதுவாகும்.

    வடக்கு காஷ்மீர் மாவட்டத்தின் கெரான் செக்டரில் உள்ள கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகில் என்கவுன்டர் தொடங்கியதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

    துப்பாக்கிச் சூடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் மேற்கொண்டு தகவல்கள் இனி வெளிவரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பாகிஸ்தான் எல்லையில் இருந்து பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்றனர்.
    • பயங்கரவாதிகள் கொண்டு வந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் கிரண் கிராமம் அருகே உள்ள சர்வதேச எல்லையில் எல்லை பாதுகாப்புப்படையினர் இன்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

    அப்போது பாகிஸ்தான் எல்லையில் இருந்து பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்றனர். இதையடுத்து, சுதாரித்துக்கொண்ட பாதுகாப்புப்படையினர், பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    மேலும், பயங்கரவாதிகள் கொண்டு வந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    • பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் என்கவுன்ட்டர்.
    • போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது என்கவுன்ட்டர்.

    புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பகுதியில் திருச்சி எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த பிரபல ரவுடி துரைசாமி போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

    துரைசாமி மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளது.

    துரைசாமி, போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    வம்பன் காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த ரவுடியை பிடிக்கச் சென்றபோது சம்பவம் நடந்துள்ளது.

    ஏற்கனவே ஒரு முறை ரவுடி துரையை போலீசார் துப்பாக்கியில் சுட்டுப்பிடித்துள்ளனர்.

    ரவுடி துரை என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே நேரில் ஆய்வு செய்துள்ளார்.

    • தூதரகத்துக்கு வில்-அம்புடன் நபர் ஒருவர் வந்தார்.
    • நபர் குறித்த விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.

    செர்பியா நாட்டு தலைநகர் பெல்கிரேடில் இஸ்ரேல் தூதரகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் தூதரகத்துக்கு வில்-அம்புடன் நபர் ஒருவர் வந்தார்.

    அவர் திடீரென்று அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது தாக்குதல் நடத்த முயன்றார். அங்கிருந்த போலீஸ்காரர் மீது அம்பை எய்தாா். இதில் கழுத்தில் அம்பு பாய்ந்து காவலா் காயமடைந்தாா். உடனே போலீஸ்காரர் தற்காப்புக்காக அம்பு வைத்திருந்த நபரை நோக்கி துப்பாக்கியால் சுட்டாா். இதில் அந்த நபா் உயிரிழந்தாா்.

    தாக்குதலில் காயமடைந்த போலீஸ்காரரை மருத்துவ மனையில் சேர்த்தனர். அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தாக்குதலில் ஈடுபட்ட நபர் குறித்த விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.

    காசாவில் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் இஸ்ரேலுடன் சொ்பியா நட்புறவை பேணி வரும் சூழலில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக செர்பியா பிரதமர் மிலோஸ் வுசெவிக் கூறும்போது, `இது கொடூரமான பயங்கரவாத செயல். இது எந்த மதத்திற்கும் எந்த தேசத்திற்கும் காரணமாக இருக்க முடியாது. இது ஒரு தனிநபரின் குற்றம்' என்றார்.

    இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, `செர்பியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் அருகே பயங்கரவாதத் தாக்குதலுக்கு முயற்சிக்கப்பட்டுள்ளது. தூதரகம் மூடப்பட்டுள்ளது மற்றும் தூதரகத்தின் எந்த ஊழியரும் காயமடையவில்லை. தாக்குதல் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது' என்று தெரிவித்தார்.

    • புளோரிடாவின் தம்பா நகரில் உள்ள ஒரு ஓட்டலில் பூலியோ தங்கி இருந்தார்.
    • ஓட்டலின் கார் நிறுத்தம் அருகே மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் பூலியோ என்ற சார்லஸ் ஜோன்ஸ் (வயது 26). பிரபல ராப் பாடகரான இவரை சமூகவலைதளத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். இவர் சமீபத்தில் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடினார். இதற்காக புளோரிடாவின் தம்பா நகரில் உள்ள ஒரு ஓட்டலில் அவர் தங்கி இருந்தார்.

    இந்தநிலையில் ஓட்டலின் கார் நிறுத்தம் அருகே மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பூலியோ ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். மேலும் 3 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல ராப் பாடகரான பூலியோ கொல்லப்பட்ட சம்பவம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

    • இரு பெண்களும் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் விழுந்தனர்.
    • துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் கவுரவ் சிங் கில் என்பது தெரியவந்தது.

    வாஷிங்டன்:

    இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டம் நூர் மஹால் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்விர் கவுர் (வயது 29). இவர் தனது கணவருடன் அமெரிக்கா வின் நியூஜெர்சி மாகாணத்தில் கார்டரெட் பகுதியில் ரூஸ்வெல்ட் அவென்யூ என்ற இடத்தில் வசித்து வந்தார். ஜஸ்விர் கவுருடன் அவரது உறவுக்கார பெண் ககன்தீப் கவுர் (வயது 20) என்பவரும் தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் ஜஸ்விர் கவுர் வீட்டுக்குள் புகுந்த வாலிபர் ஒருவர், அங்கிருந்த ஜஸ்விர் கவுர், ககன்தீப் கவுரை துப்பாக்கியால் சுட்டார். இதில் இரு பெண்களும் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் விழுந்தனர். உடனே அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இரண்டு பெண்களையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஆனால் சிகிச்சை பலனின்றி ஜஸ்விர் கவுர் உயிரிழந்தார். ககன்தீப் கவுருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் கவுரவ் சிங் கில் (வயது 19) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். இவர் பஞ்சாப்பின் நகோதர் நகரை சேர்ந்தவர். அவர் எதற்காக தாக்குதல் நடத்தினார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலீசார் அங்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் 140 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வட-மத்திய பகுதியில் ஆயுதமேந்திய கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. இவர்கள் அடிக்கடி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் வேஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குள் நள்ளிரவில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கும்பல் புகுந்தது. அவர்கள் வாசின் ஜுராக் சமூகத்தில் உள்ள கிராம மக்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் 40 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.

    பின்னர் அக்கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. தகவல் அறிந்து போலீசார் அங்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. இந்த பிராந்தியத்தில் நாடோடி மேய்ப்பர்கள்-கிராம விவசாயிகளுக்கு இடையே நீர், நிலம் தொடர்பாக பிரச்சனை இருந்து வருகிறது. இதில் இருதரப்புக்கு மோதல் ஏற்பட்டு வன்முறை சம்பவங்களும் நடந்தன.

    இதுபோன்ற தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகி உள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் 140 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நக்சலைட்டுகள் கண்மூடித்தனமாக அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
    • ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் நக்சல்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

    மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் இன்று சி-60 கமாண்டோக்களுடன் நடந்த என்கவுன்டரில் இரண்டு பெண்கள் உட்பட 3 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    பெரிமிலி தாலம் என்ற பெயரில் நக்சலைட்டுகள் ஆயும் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மகராஷ்டிராவில் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள கட்டரங்கட்டா கிராமத்தின் அருகே நக்சலைட்டுகள் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், கட்சிரோலி காவல்துறையின் சிறப்புப் போர்ப் பிரிவான சி-60 கமாண்டோக்களின் இரண்டு பிரிவுகள் உடனடியாக அப்பகுதியில் தேடுதலுக்காக அனுப்பப்பட்டன.

    பிரவுகள் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டபோது, நக்சலைட்டுகள் கண்மூடித்தனமாக அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதற்கு சி -60 வீரர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

    துப்பாக்கிச் சூடு நிறுத்தப்பட்டதை அடுத்து, அந்த இடத்தில் இருந்து ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் நக்சல்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

    கொல்லப்பட்ட நக்சல்களில் ஒருவரான பெரிமிலி தாலத்தின் பிரதேசக் குழு உறுப்பினர் மற்றும் பொறுப்பாளர் கம்மாண்டர் வாசு கோர்ச்சா ஆவர்.

    அந்த இடத்தில் ஏகே 47 ரக துப்பாக்கி, கார்பைன், இன்சாஸ் துப்பாக்கி, நக்சல் புத்தகம் மற்றும் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டன.

    • சிறுவன் கத்தியுடன் போலீசாரை நோக்கி வந்தான்.
    • சிறுவன் தொடர்ந்து தாக்குதல் நடத்த முயன்றதால் அவனை போலீசார் சுட்டனர்.

    ஆஸ்திரேலியாவின் பெர்த்தின் புறநகர் பகுதியான வில்லெட்டனில் 16 வயது சிறுவன் ஒருவன் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டான். பொதுமக்களை கத்தியால் குத்தி தாக்கினான். இதையறிந்ததும் போலீசார் அங்கு விரைந்தனர்.

    அப்போது அந்த சிறுவன் கத்தியுடன் போலீசாரை நோக்கி வந்தான். அவனை கத்தியைக் கீழே போடுமாறும், சரண் அடையும்படியும் போலீசார் தெரிவித்தனர்.

    ஆனால் அதற்கு மறுத்த சிறுவன் தொடர்ந்து தாக்குதல் நடத்த முயன்றதால் அவனை போலீசார் சுட்டனர். பின்னர் அவனை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்தான். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கிழக்கு பாக்தாத்தின் ஜோயோனா மாவட்டத்தில் உள்ள தனது வீட்டு முன்பு காரில் ஓம் பகத் அமர்ந்திருந்தார்.
    • ஓம் பகத் மர்ம நபரால் சுடப்படும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

    பாக்தாத்:

    ஈராக்கை சேர்ந்த டிக்-டாக் பெண் பிரபலம் ஓம் பகத். பாப் இசைக்கு நடனமாடும் வீடியோக்களை டிக்-டாக்கில் பகிர்ந்து வந்தார்.

    மேலும் பல்வேறு வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார். இவரை சமூக வலைதளங்களில் 5 லட்சம் பேர் பின்தொடருகிறார்கள்.

    இந்த நிலையில் ஓம் பகத், மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். கிழக்கு பாக்தாத்தின் ஜோயோனா மாவட்டத்தில் உள்ள தனது வீட்டு முன்பு காரில் ஓம் பகத் அமர்ந்திருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென்று துப்பாக்கியால் ஓம் பகத்தை நோக்கி சுட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் அந்த மர்ம நபர் தப்பி சென்றார்.

    ஓம் பகத் மர்ம நபரால் சுடப்படும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இது சமூக வலைதளங்களில் பரவியது. இக்கொலை தொடர்பாக விசாரிக்க ஒரு குழுவை அமைத்துள்ளதாக ஈராக்கின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ஓம் பகத்தின் இயற்பெயர் குப்ரான் சவாதி. கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவரது வீடியோக்களில் பொது ஒழுக்கத்தை குறைக்கும் அநாகரீகமான பேச்சு இருப்பதாக கூறி ஓம் பகத்துக்கு 6 மாத சிறைத் தண்டனையை கோர்ட்டு விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • காரில் சென்றபோது அவரை மர்ம நபர்கள் சுட்டுக்கொன்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
    • சிராஜ் அந்தில் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சி நடந்து வருகிறது.

    ஒட்டாவா:

    அரியானா மாவட்டம் சோனிபட் மாவட்டத்தை சேர்ந்தவர் சிராஜ் அந்தில் (வயது 24). இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு உயர்படிப்புக்காக கனடா நாட்டுக்கு சென்றார். அங்கு அவர் எம்.பி.ஏ. படித்து முடித்த பின் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    சிராஜ் அந்தில் கனடா நாட்டின் வான்கூர் நகரில் வசித்து வந்தார். சம்பவத்தன்று இவர் தனது சொகுசு காரில் வெளியில் சென்றார்.

    இந்த நிலையில் அவர் காருக்குள் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக கனடா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    காரில் சென்றபோது அவரை மர்ம நபர்கள் சுட்டுக்கொன்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருந்தபோதிலும் அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிராஜ் அந்தில் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சி நடந்து வருகிறது. இதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    சிராஜ் அந்தில் சகோதரர் ரோஹித் கூறும்போது எனது அண்ணனுக்கு யாருடனும் பகை கிடையாது. எல்லோரிடமும் அவர் பாசமாக தான் பழகுவார். அவருடன் நான் தினமும் செல்போனில் பேசுவேன். சம்பவத்தன்று இரவு கூட நான் பேசினேன். அதற்குள் இப்படி நடந்து விட்டது என சோகத்துடன் தெரிவித்தார்.

    ×