search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாடிக்கையாளர்"

    மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கிகளில் பொதுமக்கள் டெபாசிட் செய்துள்ள பணம் 100 சதவீதம் பாதுகாப்பாக உள்ளதாக மத்திய மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்தார். #PublicMoney #PiyushGoyal
    புதுடெல்லி:

    மத்திய மந்திரி பியூஸ் கோயல் டெல்லியில் நேற்று நடந்த 13 பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    பின்னர் நிருபர்களை சந்தித்த அவரிடம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி ரூ.14 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு மோசடி செய்ததால் பொதுத்துறை வங்கிகளில் வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொகைக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறப்படுகிறதே? என்று கேள்வி எழுப்பப்பட்டது.



    அதற்கு பதில் அளித்த பியூஸ் கோயல், “மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கிகளில் பொதுமக்கள் டெபாசிட் செய்துள்ள பணம் 100 சதவீதம் பாதுகாப்பாக உள்ளது. இதை மீண்டும் உறுதிபட கூறுகிறேன். மத்திய அரசு எப்போதும் பொதுத்துறை வங்கிகளுக்கு துணை நிற்கும். பொதுத்துறை வங்கிகளை சிறப்பான முறையில் கட்டுப்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது” என்றார்.  #PublicMoney #PiyushGoyal #Tamilnews 
    சென்னை அண்ணா நகரில் ஓட்டலில் வாடிக்கையாளர்கள் தவற விட்டு சென்ற ரூ.25 லட்சத்தை ஓட்டல் ஊழியர் போலீசில் ஒப்படைத்தார். அவருடைய நேர்மைக்கு பாராட்டுகள் குவிகின்றன.
    கோயம்பேடு:

    சென்னை அண்ணாநகர், 6-வது நிழற்சாலை சந்திப்பில் சரவண பவன் ஓட்டல் உள்ளது. அந்த ஓட்டலுக்கு நேற்று முன்தினம் காலை 2 பேர் சாப்பிட வந்தனர். அப்போது அவர்கள் கொண்டு வந்த ஒரு பையை, தாங்கள் அமர்ந்து சாப்பிட்ட மேஜைக்கு அருகில் வைத்து விட்டு ஞாபக மறதியாக சென்றனர்.

    அவர்களுக்கு உணவு பரிமாறிய ஓட்டல் ஊழியர் ரவி அந்த பையை எடுத்து பார்த்தார். அதில் பணம் இருந்ததால் ஓட்டலின் கிளை மேலாளர் லோகநாதனிடம் அதை கொடுத்தார். அவர் அந்த பையை திறந்து பார்த்தபோது, அதில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக ரூ.25 லட்சம் இருப்பது தெரியவந்தது.

    அதை தவற விட்டுச்சென்ற வாடிக்கையாளர்கள் திரும்ப வந்து அதை பெற்றுக்கொள்வார்கள் என நினைத்து அவர்கள் காத்திருந்தனர். ஆனால் அந்த பணத்தை உரிமை கோரி யாரும் வரவில்லை.

    இதனால் அண்ணாநகர் இணை கமிஷனர் சுதாகருக்கு நேற்று தகவல் கொடுத்தனர். பின்னர் மேலாளர் லோகநாதன், ஊழியர் ரவி இருவரும் வாடிக்கையாளர் விட்டுச்சென்ற ரூ.25 லட்சத்தை அண்ணாநகர் போலீஸ் நிலையத்துக்கு சென்று இன்ஸ்பெக்டர் சரவணனிடம் ஒப்படைத்தனர். மேலும் அங்கு பதிவான கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளையும் போலீசில் கொடுத்தனர்.

    ஏழ்மை நிலையில் ஓட்டல் ஊழியராக வேலை பார்த்தாலும், பணத்தை பார்த்து அதற்கு ஆசைப்படாமல் நேர்மையுடன் போலீசில் ஒப்படைத்த ரவியை, இன்ஸ்பெக்டர் சரவணன் பாராட்டினார். மேலும் தன்னுடைய கைக்கெடிகாரத்தை இன்ஸ்பெக்டர் சரவணன், ரவிக்கு பரிசாக அளித்தார். அப்போது ஓட்டல் மேலாளரிடம், ரவிக்கு பதவி உயர்வு வழங்கவும் கேட்டுக்கொண்டார்.

    பணம் காணாமல் போனது குறித்து இதுவரை யாரும் போலீசில் புகார் அளிக்கவில்லை. எனவே ஓட்டலில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து பணத்தை விட்டுச்சென்றவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பணத்தை சம்பந்தப்பட்டவர்கள் வந்து பெறாத பட்சத்தில் தாசில்தார் மூலம் அரசு கருவூலத்தில் அந்த பணம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    ஓட்டல் ஊழியர் ரவியின் சொந்த ஊர் திருச்சி மாவட்டம் துறையூர் ஆகும். அவர் அந்த ஓட்டலில் 15 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். ரவியின் நேர்மைக்கு பரிசாக ஓட்டல் நிர்வாகம் அவருக்கு மேற்பார்வையாளர் பதவியை வழங்கியது.

    போலீசார் மட்டும் அல்லாமல் பொதுமக்கள் தரப்பிலும் ரவிக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்தவண்ணம் உள்ளன. 
    வங்கி ஏடிஎம்-ல் அரைகுறையாக அச்சிடப்பட்ட 500 ரூபாய் நோட்டு வந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Newrupees

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகில் உள்ள பாலப்பட்டியில் இந்தியன் வங்கி ஏ.டி.எம்.-ல் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் இன்று காலையில் தனது ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.5 ஆயிரம் பணம் எடுத்தார்.

    அப்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 2 மற்றும் 500 ரூபாய் நோட்டு 1 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் 5 என மொத்தம் ரூ.5 ஆயிரம் ஏ.டி.எம்.-ல் இருந்து வந்தது. இதில் 500 ரூபாய் நோட்டு மட்டும் ஒரு பக்கத்தில் ஓரமாக அச்சடிக்கப்படாமல் இருந்தது. இதைக்கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    சரியாக அச்சிடப்படாமல் இருந்ததால் அவர் கள்ள நோட்டாக இருக்குமோ? என சந்தேகம் அடைந்தார். இந்த பணத்தை அங்கிருந்த பொது மக்களிடம் காண்பித்து சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் பணத்தை மாற்றி தருமா? என கேட்டார். அதற்கு அவர்கள், பணத்தை நேராக வங்கிக்கு கொண்டு சென்று காண்பியுங்கள். அவர்கள் பணத்தை மாற்றி தருவார்கள் என ஆலோசனை கூறினார்கள்.

    இதையடுத்து அவர், 500 ரூபாய் நோட்டை எடுத்துக்கொண்டு நேராக சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வாடிக்கையாளருக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த சம்பவம் அமைந்து உள்ளதால் சரியாக அச்சடிக்கப்படாத 500 ரூபாய் நோட்டை கவனிக்காமல் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் வைத்தவர் யார்? என்பதை கண்டுபிடித்து விசாரித்து அவர் மீது தக்க நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #Newrupees 

    ×