search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெடிகுண்டு"

    • போலீஸ் நிலையத்திற்கு வெடிகுண்டு வைக்கப்போவதாகவும் அந்த மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.
    • காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த செல்போன் எண்ணின் சிக்னலை போலீசார் ஆய்வு செய்தனர்.

    நெல்லை:

    சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் போலீஸ் அவசர உதவி எண் 100-க்கு மர்மநபர் ஒருவர் போன் செய்துள்ளார்.

    அதில் போலீசுடன் பேசிய மர்ம நபர், பூலித்தேவன் ஜெயந்திவிழாவையொட்டி தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள நெற்கட்டும் செவலில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வந்தால் அவர் மீது வெடிகுண்டு வீசுவோம் என்று கூறியுள்ளார்.

    மேலும் புளியங்குடி போலீஸ் நிலையத்திற்கு வெடிகுண்டு வைக்கப்போவதாகவும் அந்த மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் உடனே போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

    அந்த நபர் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த செல்போன் எண்ணின் சிக்னலை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது அந்த சிக்னல் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை காண்பித்தது. இதனால் தனிப்படையினர் அங்கு விரைந்து சென்று சிக்னல் மூலமாக அந்த நபரை கண்டுபிடித்தனர். அந்த நபர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள தலைவன்கோட்டை மெயின்ரோட்டை சேர்ந்த பூசைப்பாண்டியன் என்பவரது மகன் வெள்ளத்துரை (வயது 32) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை தனிப்படையினர் பிடித்து தென்காசிக்கு கொண்டு வந்தனர். அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த நபர் ஏற்கனவே கடந்த ஆண்டும் இதேபோல் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்ட வெள்ளத்துரை மீது புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    இதுபோன்று பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாக செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் எச்சரித்துள்ளார்.

    • ‘உல்பா’ அமைப்பு குறிப்பிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனா்.
    • வெடிபொருள்களின் தன்மையை அறிய தடயவியல் துறைக்கு வெடிமருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன.

    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தில் 78-வது சுதந்திர தின விழாவில் மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தேசிய கொடியை ஏற்றி வைத்து தனது உரையை முடித்த சில நிமிடங்களில் 'உல்பா' அமைப்பு ஊடகங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், 'அசாம் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நேற்று அதிகாலை முதல் பிற்பகல் வரை குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடத்த திட்டமிடப்பட்டி ருந்ததது. ஆனால், சில தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடிக்கவில்லை' எனத் தெரிவித்தனா்.

    மேலும், அதனுடன் 19 குண்டுகள் வைக்கப்பட்ட சரியான இடங்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய பட்டியலை 'உல்பா' அமைப்பு வெளியிட்டது. ஆனால், மீதமுள்ள 5 இடங்களை சுட்டிக்காட்ட முடியவில்லை என மின் அஞ்சலில் தெரிவித்தனா்.

    இதையடுத்து, ராணுவம் உள்பட பாதுகாப்புப் படையினா் மற்றும் வெடி குண்டு செயலிழப்பு படைகள் இணைந்து மாநிலம் முழுவதும் 'உல்பா' அமைப்பு குறிப்பிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

    அதில், குண்டு வெடிப்பு நடத்த திட்டமிடப்பட்ட 24 இடங்களில் கவுகாத்தியில் உள்ள 8 இடங்களில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன என போலீசாா் தெரிவித்தனா்.

    இதில், அசாம் முதல்வா், பிற அமைச்சர்களின் அதிகாரபூா்வ இல்லங்களுக்கு அருகில் உள்ள இடங்களிலும் வெடி குண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், அந்த வெடிகுண்டுகளை வெடிக்க வைக்கும் சாதனங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றும் வெடிபொருள்களின் தன்மையை அறிய தடயவியல் துறைக்கு வெடிமருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன என்றும் காவல் துறையினா் தெரிவித்தனா்.

    தொழில்நுட்ப கோளாறால் வெடிகுண்டுகள் வெடிக்காததால் உல்பா அமைப்பே மறைத்து வைத்திருந்த வெடிகுண்டு தகவலை அளித்ததால், வெடிகுண்டுகளை காவல் துறையினா் கண்டெடுத்தனா். இதனால் பெரும் நாசவேலை தவிா்க்கப்பட்டது.

    • எனது பையில் வெடிகுண்டு இருக்கிறதா என்று மனோஜ் அதிகாரிகளைப் பார்த்துக் கேட்டுள்ளார்.
    • வெடிகுண்டு பற்றி இவர் பேசுகிறார் என்று பதறிய பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கைது கைதுசெய்துள்ளனர்.

    கேரளாவில் உள்ள கொச்சி சர்வதேச விமானநிலையத்தில் வழக்கமான பாதுகாப்பு சோதனைகள் நடைபெற்று வந்தது. பயணிகளின் உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் சோதனை செய்து அவர்களை அனுப்பிவைத்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது, கொச்சியில் இருந்து மும்பை செல்வதற்காக ஏர் இந்தியா விமானதில் ஏற  விமான நிலையத்துக்கு வந்த 42 வயதான மனோஜ் குமார் என்பவரது பையையும் அதிகாரிகள் சோதித்துள்ளனர். எந்த பிரச்சனையும் இல்லை என்று பாதுகாப்பு அதிகாரிகள் முடிவுசெய்தபோது, எனது பையில் வெடிகுண்டு இருக்கிறதா என்று மனோஜ் அதிகாரிகளைப் பார்த்துக் கேட்டுள்ளார்.

    அவர் எதோ ஜோக் அடிப்பது போல் இதைக் கேட்டிருந்தாலும், வெடிகுண்டு பற்றி இவர் பேசுகிறார் என்று பதறிய பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கைது கைதுசெய்துள்ளனர். மேற்கொண்டு அவரிடம் விசாணை நடந்த அவரை உள்ளூர் போலீசிடம் பாதுகாப்பு அதிகரிகள் ஒப்படைத்தனர்.

    • டி.என்.டி. வெடிகுண்டைவிட 2.01 மடங்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும்.
    • புதிய வெடிகுண்டை இந்திய கடற்படை சமீபத்தில் வெற்றிகரமாக சோதனை செய்தது.

    புதுடெல்லி:

    உலக நாடுகளில் உள்ள ராணுவங்களில் தற்போது டி.என்.டி, ஆர்.டி.எக்ஸ். மற்றும் டைனமைட் உள்ளிட்ட பல வகைகளை சேர்ந்த வெடிகுண்டுகள் பயன் படுத்தப்படுகின்றன. இந்த நிலையில் மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்த 'எகானமிக் எக்ஸ்ப்ளோசிவ்ஸ்' என்ற நிறுவனம் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து செபெக்ஸ் 2 என்ற புதிய வெடிகுண்டை தயாரித்து உள்ளது.

    இது உலகின் மிகவும் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளில் ஒன்றாகும். இது டி.என்.டி. வெடிகுண்டைவிட 2.01 மடங்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த வகை வெடிகுண்டுகளை பிரம்மோஸ் ஏவுகணை உள்பட இந்தியாவின் அனைத்து வகை ஏவுகணைகளிலும் பயன்படுத்த முடியும். மேலும் பீரங்கி, போர் விமானம், போர்க்கப்பல், நீர்மூழ்கி கப்பலில் இருந்தும் தாக்குதல் நடத்த முடியும்.

    இந்த புதிய வகை வெடிகுண்டு குறித்து இந்திய பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் கூறியதாவது:-

    இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளில் ஹெமெக்ஸ் வெடிமருந்து பயன்படுத்தப்படுகிறது. இது டி.என்.டி. வெடிகுண்டைவிட 1.5 மடங்கு சக்திவாய்ந்தது ஆகும். இந்தியாவின் பினாகா ஏவுகணைகளில் டென்டெக்ஸ், டார்பெக்ஸ் வெடிமருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை டி.என்.டி. வெடிகுண்டைவிட 1.3 மடங்கு சக்திவாய்ந்தது ஆகும். தற்போது சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் நாக்பூரை சேர்ந்த தனியார் நிறுவனமான 'எகானமிக் எக்ஸ்ப்ளோசிவ்ஸ்', செபெக்ஸ் 2 என்ற புதிய வகை வெடிகுண்டை தயாரித்து உள்ளது. இது டி.என்.டி. வெடிகுண்டைவிட 2.01 மடங்கு சக்தி வாய்ந்தது ஆகும். இந்த புதிய வெடிகுண்டை இந்திய கடற்படை சமீபத்தில் வெற்றிகரமாக சோதனை செய்தது.

    டி.என்.டி. வெடிகுண்டை விட செபெக்ஸ் 2 வெடிகுண்டில் 20 சதவீதம் அளவுக்கு அதிக வெப்பம் வெளியாகிறது. குண்டு வெடித்து சிதறும்போது ஏற்படும் விட்டம் 35 மடங்கு அதிகமாக இருக்கிறது. டி.என்.டி. வெடிகுண்டைவிட செபெக்ஸ் 2 வெடிகுண்டின் பாதிப்பு 28 சதவீதம் அதிகமாக உள்ளது. நாக்பூர் ஆலையில் செபெக்ஸ் வெடிகுண்டுகள் தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டு இந்தியாவின் முப்படைகளுக்கும் வழங்கப்பட உள்ளன. இதன்மூலம் இந்திய முப்படைகளின் பலம் பன்மடங்கு அதிகரிக்கும்.

    செபெக்ஸ் 2 வெடிகுண்டு தயாரிப்பு மூலம் இந்தியா புதிய சாதனையை படைத்து உள்ளது. இந்த வெடிகுண்டுகளை வாங்க இப்போதே பல்வேறு நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. எதிர்காலத்தில் இவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

    இவ்வாறு பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    • ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வீசி ஒத்திகை பார்த்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.
    • போலீசார் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் அதிகரித்து வரும் கஞ்சா, வெடிகுண்டு கலாச்சாரத்தால் கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் பாகூரில் உள்ள பழமையான மூல நாதர் கோவிலின் பின்புறம் உள்ள சுற்றுசுவரில் ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசி வெடிக்க செய்து சோதனை செய்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

    அந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என தெரியவில்லை. அந்த வீடியோவை வெளியிட்டுள்ள நபர் வெடிகுண்டு வீசும் கும்பலுக்கு ஆதரவாக ஒருவர் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

    பாகூர் மக்கள் மத்தியில் இந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இந்த நிலையில் செல்போனில் பரவும் வீடியோ வைத்து 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரியில் இதே போல் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வீசி ஒத்திகை பார்த்த சம்பவமும் வில்லியனூரில் வெடிகுண்டு வீசி ஒத்திகை பார்த்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.

    தொடரும் இதுபோன்ற சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். போலீசார் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    • நேற்று காலை 6.50 மணிக்கு 172 பயணிகளுடன் சென்னையில் இருந்து டெல்லி-க்கு புறப்பட்டது இண்டிகோ விமானமான 6E-5314.
    • ஒரே வாரத்தில் இண்டிகோ நிறுவனத்துக்கு இது இரண்டாவது மிரட்டலாகும்.

    நேற்று காலை 6.50 மணிக்கு 172 பயணிகளுடன் சென்னையில் இருந்து டெல்லி-க்கு புறப்பட்டது இண்டிகோ விமானமான 6E-5314. அதைத்தொடர்ந்து விமானத்தில் ஒரு ரிமோட் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது. இதனை அந்த விமானத்தின் விமானி மும்பை ஏர் டிராபிக் கண்ட்ரோலுக்கு தகவலை கூறினார்.

    இக்காரணத்தினால் விமானத்தை உடனடியாக அவசரமாக மும்பை நிலையத்தில் தலையிறக்கப்பட்டது. அதன் பிறகு அவசரமாக அனைத்து பயணிகளையும் விமானத்தில் இருந்து அப்புறபடுத்தி வெடிகுண்டு எதேனும் இருக்கிறதா என பாம்ப் ஸ்குவாட்-ஐ வைத்து பரிசோதித்தனர் ஆனால் விமானத்தில் சந்தேகிக்கும் அளவு எதுவும் தென்படவில்லை.

    ஒரே வாரத்தில் இண்டிகோ நிறுவனத்துக்கு இது இரண்டாவது மிரட்டலாகும். மே 28 ஆம் தேதி டெல்லியில் இருந்து வாரணாசிக்கு புறப்பட்ட விமானத்திலையும் இதேப் போல் வெடி குண்டு மிரட்டல் நடந்தது குறிப்பிடத்தக்கது.

    • 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 30 முதல் 35 வயது இருக்கும் என தகவல்.

    பெங்களூருவில் பிரபல ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் இன்று மதியம் வெடிகுண்டு வெடித்தது.

    இந்த சம்பவத்தில், 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ஓட்டலுக்கு வந்த மர்ம நபர் ஒருவர் வைத்து சென்ற பையில் இருந்த வெடிகுண்டு வெடித்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக உபா மற்றும் வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் பெங்களூருவின் எச்ஏஎல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 30 முதல் 35 வயது இருக்கும் என அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

    ரவை இட்லி வாங்கிக் கொண்டு அதை சாப்பிடாமால் பையை மட்டும் விட்டுச் சென்றுள்ளதாகவும் கூறினார்.

    • தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாநகர காவல் ஆணையர் விரைந்து ஆய்வு.
    • 10 விநாடிகளில் இரண்டு முறை வெடி சத்தம் கேட்டதாக தகவல்.

    கர்நாடகா மாநிலம், பெங்களூரு வைட் பீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. வெடி விபத்தில், உணவகத்தில் இருந்த 3 ஊழியர்கள் மற்றும் ஒரு வாடிக்கையாளர் என 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாநகர காவல் ஆணையர் விரைந்து ஆய்வு செய்தார். மேலும், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் ஆய்வு நடத்தியுள்ளனர்.

    இதில், சிலிண்டர் வெடிக்கவில்லை என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 10 விநாடிகளில் இரண்டு முறை வெடி சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம், கை கழுவும் இடத்தில் நடந்துள்ளதாக தகவல் வெளியானது. வாடிக்கையாளர் விட்டுச் சென்ற பையில் வெடித்ததாக உணவகத்தின் உரிமையாளர் கூறியதாக எம்.பி தேஜஸ்வி சூர்யா எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயம் அடைந்தவர்களிடமும் தேசிய புலனாய்வு முகமே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்தது குண்டுவெடிப்புதான் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர்,"முதற்கட்ட விசாரணையில் மேலோட்டமாக பார்க்கும் போது IED குண்டு வெடிப்பு போல் தெரிகிறது. ஆனால், இது சிலிண்டர் இல்லை. காவல்துறை முறையான அறிக்கை வழங்கிய பிறகுதான் எந்த தகவலும் தெரிவிக்க முடியும்" என்றார்.

    • விஜய் என்பவர் மது போதையில் தகராறு செய்தார்.
    • இரவு தூங்கிக்கொண்டிருந்த போது திடீரென வெடி சத்தம் கேட்டது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே ஜம்புதுரைக்கோட்டை ஜல்லிப்பட்டியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது37). திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார்.

    இவர் அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    எங்கள் பகுதியில் பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது. அப்போது விஜய் என்பவர் மது போதையில் தகராறு செய்தார். அது குறித்து போலீசில் புகார் தெரிவித்தேன். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை எச்சரித்து காலையில விசாரணைக்கு வருமாறு கூறினர்.

    பின்னர் நிலக்கோட்டையில் வக்கீலாக பணிபுரியும் எனது சகோதரர் உதயகுமார் எங்கள் வீட்டிற்கு வந்தார். முன்பகையை மனதில் வைத்துக் கொண்டு விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் எங்களை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    பின்னர் இரவு தூங்கிக்கொண்டிருந்த போது திடீரென வெடி சத்தம் கேட்டது. நாங்கள் சென்று பார்த்தபோது வீட்டுக்குள் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு பைப் சேதம் அடைந்தது தெரிய வந்தது. அப்போது விஜய் குடும்பத்தினர் காட்டுக்குள் ஓடி மறைந்து விட்டனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இருக்கையின் கீழ் வெடிகுண்டு இருப்பதாக தெரிவித்தார்.
    • விமானம் முழுக்க தீவிர சோதனை நடத்தப்பட்டது.

    மும்பையில் இருந்து லக்னோ நோக்கி புறப்பட வேண்டிய இன்டிகோ விமானம் பயணி ஒருவரால் தாமதமாக கிளம்பி சென்ற சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பயணம் செய்வதற்காக இன்டிகோ விமானத்தில் ஏறிய பயணி ஒருவர், தனது இருக்கையின் கீழ் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.

    குடியரசு தினமான ஜனவரி 26-ம் தேதி மாலை வேளையில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக பயணி தெரிவித்ததை அடுத்து, அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. வெடிகுண்டு புகாரை அடுத்து விமானம் முழுக்க தீவிர சோதனை நடத்தப்பட்டது.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 


    விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைத்ததும், மும்பை காவல் துறை மற்றும் விமான நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையை மேற்கொண்டனர். விமானத்தில் நடத்தப்பட்ட தீவிர சோதனையில், சந்தேகத்திற்குரிய வகையில் எந்த பொருளும் கிடைக்கப்பெறவில்லை.

    இதைத் தொடர்ந்து வெடிகுண்டு இருப்பதாக குற்றம்சாட்டிய 27 வயதான பயணி மீது காவல்துறையினர் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • விமான நிலையத்திற்கு வெளியே கூடுதல் செக்போஸ்ட்கள் வைத்து பாதுகாப்பை பலப்படுத்தினர்.
    • நாசவேலை தடுப்பு சோதனை மற்றும் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு படை சோதனையும் நடத்தப்பட்டது.

    கர்நாடக மாநிலம் மங்களூரு விமான நிலையத்துக்கு வந்த மின்னஞ்சலில் இங்குள்ள ஒரு விமானத்தில் மற்றும் விமான நிலையத்தின் உள்ளே வெடிபொருட்கள் உள்ளது. அவை சில மணி நேரங்களில் வெடித்துவிடும். நான் உங்கள் அனைவரையும் கொன்றுவிடுவேன் என்றும், நாங்கள் பன்னிங் (வேடிக்கை) என்ற பயங்கரவாத குழுவை சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த மின்னஞ்சலை கவனித்த விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக நகர போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதைதொடர்ந்து மங்களூரு நகர போலீசார் மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டனர். விமான நிலையத்திற்கு வெளியே கூடுதல் செக்போஸ்ட்கள் வைத்து பாதுகாப்பை பலப்படுத்தினர்.

    நாசவேலை தடுப்பு சோதனை மற்றும் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு படை சோதனையும் நடத்தப்பட்டது. மேலும் இன்ஸ்பெக்டர் பாஜ்பே தலைமையில் விமான நிலைய அதிகாரிகளுடனான ஒருங்கிணைப்பு கூட்டமும் நடைபெற்றது. மேலும் விமான நிலைய அதிகாரிகளின் புகாரின் பேரில் உள்ளூர் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்ற பிறகு இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மின்னஞ்சல் அனுப்பியவர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
    • டிபன் பாக்ஸ் வடிவில் மர்ம பொருளை கண்டெடுத்தனர்.

    சென்னை:

    சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள தமிழக டி.ஜி.பி. அலுவலகத்திற்கு நேற்று மாலை மர்ம நபர்கள் மூலம் மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில் சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என குறிப்பிட்டிருந்தது. குறிப்பாக பொது மக்கள் அதிகம் கூடும் இடமான எலியட்ஸ் கடற்கரை மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களில் வெடி குண்டுகள் வெடிக்கப் போவதாக கூறப்பட்டு இருந்தது.

    இதையடுத்து சென்னையில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு அந்தந்த காவல் நிலைய எல்லைக்குள் காவலர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

    அதேபோல் மக்கள் அதிகம் கூடும் இடங்களான மெரினா கடற்கரை, சென்ட்ரல் ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர சோதனை ஈடுபட்டனர்.

    மேலும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் உள்ள நினைவுச் சின்னம் அருகே டிபன் பாக்ஸ் வடிவில் மர்ம பொருளை கண்டெடுத்தனர். அதில் வெடிகுண்டு இருக்கிறதா என்பது குறித்து மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு கண்டு பிடிக்கும் கருவிகளைக் கொண்டு சோதனையில் ஈடுபட்டனர். விடிய விடிய இந்த சோதனை நடந்தது.

    பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புடன் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் கடற்கரை முழுவதும் சோதனை நடத்தினர். மர்ம பொருள் வெடிகுண்டு இல்லை என்பது உறுதியானது.

    மேலும் டி.ஜி.பி. அலுவலகத்தில் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் எலியட்ஸ் கடற்கரை தவிர மற்ற 29 இடங்களில் உள்ள வெடிகுண்டுகளை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் 2500 பிட்காயின் அனுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    100-க்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டும் எந்த வெடி பொருளும் சிக்காததால் காவல் துறையினர் சோதனையை முடித்துக் கொண்டு திரும்பிச் சென்றனர். இருப்பினும் சென்னை போலீசாரை வெடிகுண்டு மிரட்டல் கலங்கடித்துவிட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×