search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 212048"

    • பசுமைத் தாயகம் சார்பில் இதுவரை 50 லட்சத்திற்கும் கூடுதலான மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன.
    • நடுவதற்கு தேவையான மரக்கன்றுகளை வனத்துறையிடம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாட்டாளி மக்கள் கட்சியினரால் மறக்க முடியாத நாள்களில் பசுமைத் தாயகம் நாள் முதன்மையானது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 25-ஆம் நாள் தான் பசுமைத்தாயகம் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    சுற்றுச்சூழலையும், இயற்கை வளங்களையும் காக்கவும், ஏரிகள், உள்ளிட்ட நீர்நிலைகளை மேம்படுத்தவும் பசுமைத்தாயகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் ஏராளம்.

    பசுமைத்தாயகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் நான் மிகவும் விரும்புவது சுற்றுச்சூழலைக் காப்பதற்காக மரக்கன்றுகளை நடுவதைத் தான். பசுமைத் தாயகம் சார்பில் இதுவரை 50 லட்சத்திற்கும் கூடுதலான மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன.

    உலகம் முழுவதும் புவி வெப்பயமாதலின் தீய விளைவுகள் மக்களை வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ள நிலையில், அது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பசுமைத் தாயகம் நாளை நடப்பாண்டில் இன்னும் சிறப்பாக கொண்டாட வேண்டும். கடந்த ஆண்டுகளில் நடப்பட்டதை விட இந்த ஆண்டில் இன்னும் அதிக மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என்பது தான் எனது ஆசையாகும்.

    தமிழ்நாடு முழுவதும் குறைந்தது 2 லட்சம் மரக்கன்றுகளாவது நடப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.

    மொத்தம் 443 நாட்களில் 3283 பேர் தங்களின் பிறந்தநாள் மற்றும் திருமண நாளுக்காக 28 ஆயிரத்து 6 மரக்கன்றுகளை நட்டிருக்கின்றனர். அவர்கள் தான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என்னை மகிழ்வித்து வருகின்றனர்.

    பசுமைத் தாயகம் நாளுக்கு இன்னும் 78 நாட்கள் உள்ளன. பா.ம.க.வினர் 10 பேர் இணைந்து ஒரு மரக்கன்று நட்டு வளர்த்தாலும் கூட ஒரு வாரத்தில் 5 லட்சம் மரக்கன்றுகளை நட்டு விட முடியும். ஆனால், அவை எங்கு நடப்படும், எவ்வாறு நடப்படும், எவ்வளவு காலம் பராமரிக்கப்படும்? என்பதற்கு எந்தவகையான உறுதியும் கிடையாது. எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், நடப்படும் மரக்கன்றுகள் அனைத்தும் அடுத்த பத்தாண்டுகளில் அவற்றுக்குரிய பயனை வழங்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அதனால் தான் நடப்பாண்டில் மரக்கன்று நடுவதற்கான இலக்கு குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மரக்கன்றுகளை நடும் பணிகளை பசுமைத்தாயகம் அமைப்பு ஒருங்கிணைக்கும். ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு ஒன்றியம், நகரம், பேரூர், சிற்றூர்களில் எவ்வளவு மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என்பதும், ஒவ்வொரு ஊரிலும் அவை எங்கெங்கு நடப்பட வேண்டும் என்பதும் முன்கூட்டியே திட்டமிடப்பட வேண்டும். மரக்கன்றுகள் நடப்பட்ட பிறகு அவற்றை யார், யார் பராமரிப்பது என்பதும் தீர்மானிக்கப்பட்டு, பொறுப்பாளர்கள் அமர்த்தப்பட வேண்டும்.

    நடப்பட்ட மரங்களின் எண்ணிக்கை, அவற்றின் வகைகள், நடப்பட்ட ஊர்கள், அவற்றை பராமரிப்பவர்களின் பெயர், விவரம், முகவரி ஆகியவை பதிவு செய்து மாவட்ட வாரியாக ஆவணம் ஆக்கப்பட்டு கட்சித் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.

    பசுமைத்தாயகம் நாளில் நடுவதற்கு தேவையான மரக்கன்றுகளை வனத்துறையிடம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். அதற்கு வாய்ப்பில்லாத இடங்களில் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம்.

    எனவே, பசுமைத்தாயகம் நாளில் மண்ணுக்கு மரக்கன்றுகளை பரிசளிப்ப தற்கான பணிகளை இப்போதிலிருந்தே தொடங்கும்படி பாட்டாளி சொந்தங்களாகிய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • டி.என்.பி.எஸ்.சி.யை துண்டாடக் கூடாது.
    • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இப்போதிருப்பதைப் போலவே தனித்தன்மையுடன் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அரசுத்துறை பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை (டி.என்.பி.எஸ்.சி) இரண்டாக பிரிக்கவும், சார்புநிலைப் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக புதிய தேர்வு வாரியத்தை அமைக்கவும் அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அரசு பணியாளர் தேர்வு முறையை வலுவிழக்கச் செய்யும் இந்த கருத்துரு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேரை தேர்வு செய்வதாக இருந்து, அதற்கு பணிச்சுமை அதிகமாக இருந்தால், இன்னொரு அமைப்பை உருவாக்குவது குறித்து ஆராயலாம். ஆனால், அரசுப் பணியாளர் தேர்வாணையம் அண்மைக்காலங்களில் ஆண்டுக்கு சராசரியாக 6000 முதல் 7000 பேரை மட்டுமே தேர்வு செய்கிறது. இது தேர்வாணையத்திற்கு எந்தவித பணிச்சுமையையும் ஏற்படுத்தாது.

    ஆவின், மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக்கழகங்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களையும் அரசுப் பணியாளர் தேர்வாணையமே தேர்ந்தெடுக்க வகை செய்யும் சட்டம் கடந்த 2021-ம் ஆண்டு திசம்பர் மாதத்தில் இயற்றப்பட்டது. அப்போது கூட அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு பணிச்சுமை எதுவும் இருப்பதாக தெரிவிக்கப்படவில்லை. அவ்வாறு இருக்கும்போது இப்போது புதிய வாரியம் அமைக்க வேண்டிய தேவை என்ன?

    டி.என்.பி.எஸ்.சி.யை துண்டாடக் கூடாது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இப்போதிருப்பதைப் போலவே தனித்தன்மையுடன் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். புதிய தேர்வு வாரியம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • விலை வீழ்ச்சியிலிருந்து உழவர்களை பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு.
    • தக்காளி சாறு தயாரிப்பதற்கான நடமாடும் ஆலைகளை அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தக்காளி, கத்தரிக்காய் போன்ற காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சியடைந்திருப்பதால் அவற்றை உழவர்கள் சாலையோரங்களிலும், குப்பை மேடுகளிலும் கொட்டுவதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைக்காதபோது அவை குப்பையில் கொட்டப்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்ட நிலையில், அச்சிக்கலுக்கு இன்னும் தீர்வு காணப்படாதது வேதனையளிக்கிறது.

    விலை வீழ்ச்சியிலிருந்து உழவர்களை பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு. காய்கறிகளுக்கு கொள்முதல் விலை நிர்ணயிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை தமிழகத்தை இப்போது ஆளும் தி.மு.க.வும் ஏற்றுக்கொண்டிருக்கிறது; கடந்த காலங்களில் வலியுறுத்தியுள்ளது. எனவே, இனியும் காலம் கடத்தாமல் வேளாண் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதற்காக வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்தையும், விளைபொருட்களை அரசே கொள்முதல் செய்வதற்கு விளைபொருள் கொள்முதல் வாரியத்தையும் அமைக்க வேண்டும். அத்துடன் வேளாண் விளைபொருட்கள் அதிகமாக விளையும் காலங்களில் அவற்றை சேமித்து வைப்பதற்காக குளிர்பதனக் கிடங்குகளை அமைக்கவும், தக்காளி சாறு தயாரிப்பதற்கான நடமாடும் ஆலைகளையும் அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • காலம் காலமாக இந்த சட்டத்திற்கு எதிரான செயலை கர்நாடகம் செய்து கொண்டிருக்கிறது.
    • காவிரியில் கழிவுகளை கலந்ததற்காக ரூ.2,400 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி கடந்த 2017-ம் ஆண்டே உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டிற்கு வரும் காவிரி ஆற்றில் கர்நாடகம் மிகப்பெரிய அளவில் கழிவுகளை கலக்கச் செய்வதாகவும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கர்நாடக தலைமைச் செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். இது பாராட்டப்பட வேண்டிய நடவடிக்கை ஆகும்.

    காவிரியிலும், தென்பெண்ணையாற்றிலும் கர்நாடகம் கழிவுநீரை கலப்பது ஒன்றும் புதிதல்ல. காலம் காலமாக இந்த சட்டத்திற்கு எதிரான செயலை கர்நாடகம் செய்து கொண்டிருக்கிறது.

    கர்நாடகத்தின் இந்த அத்துமீறலை தமிழகம் வேடிக்கை பார்க்கக் கூடாது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு கர்நாடகத்திடமிருந்து இழப்பீடு பெற வேண்டும். காவிரியில் கழிவுகளை கலந்ததற்காக ரூ.2,400 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி கடந்த 2017-ம் ஆண்டே உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது.

    கிடப்பில் உள்ள அந்த வழக்கை விரைவுபடுத்தவும், 2017-ம் ஆண்டுக்கு பிறகு கலந்த கழிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கிட்டு அதற்கான இழப்பீட்டையும் சேர்த்து பெறுவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவில் மதுவுக்கு அடுத்தபடியாக மிக அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துவது புகையிலை தான்.
    • தமிழ்நாட்டில் குட்கா உள்ளிட்ட மெல்லும் புகையிலைப் பொருட்களை தடை செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும்.

    சென்னை

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் குட்கா உள்ளிட்ட மெல்லும் புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை செல்லாது என்ற சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. தமிழ் நாட்டில் குட்கா, போதைப் பாக்குகள் உள்ளிட்ட மெல்லும் புகையிலைப் பொருட்களை மீண்டும் தடை செய்வதற்கு வழிவகை செய்யும் சுப்ரீம்கோர்ட்டின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது ஆகும்.

    அந்தத் தீர்ப்பை செயல்படுத்தி, குட்கா விற்பனைக்கும், நடமாட்டத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குட்கா உள்ளிட்ட மெல்லும் புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால் நுரையீரல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், கணையப் புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய், சிறுநீர்ப்பை புற்றுநோய் உள்ளிட்ட பல வகை புற்றுநோய்களும், ஆஸ்துமா, நீரிழிவு நோய் உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

    இந்தியாவில் மதுவுக்கு அடுத்தபடியாக மிக அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துவது புகையிலை தான். புகையிலை பழக்கத்தால் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் அனைத்து வகையான புகையிலைப் பொருட்களின் உற்பத்திக்கும், விற்பனைக்கும் தடை விதிக்க வேண்டியது கட்டாயமாகும்.

    தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டிருந்த காலத்திலேயே ஆண்டுக்கு 3,000 டன்னுக்கும் கூடுதலாக குட்கா விற்பனை செய்யப்படுவதாக கடந்த கால மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இப்போதும் கூட தமிழக அரசால் ஆண்டுக்கு இருமுறை குட்கா மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க காவல்துறை தீவிர ஆய்வுகளை நடத்தும் போதிலும் கூட, தமிழகத்தில் குட்கா விற்பனை தடையின்றி நடைபெறுகிறது.

    எனவே, தமிழ்நாட்டில் குட்கா உள்ளிட்ட மெல்லும் புகையிலைப் பொருட்களை தடை செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும். அத்துடன் சட்டவிரோதமாக குட்கா விற்கப்படுவதையும் முற்றிலுமாக தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழைத்தேடி இயக்கத்தின் நோக்கங்கள் விரிவானவை.
    • குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப்பெயர்கள் ஆகிய பதாகைகளை அதிக எண்ணிக்கையில் அமைக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழை வளர்ப்பதாக இருந்தாலும், சிதைவிலிருந்து மீட்பதாக இருந்தாலும், தமிழில் தேவைக்கு ஏற்ற புதிய சொற்களை கண்டறிவதாக இருந்தாலும் அது தனிமனிதர்களால் மட்டுமே சாத்தியமாகும் செயல் அல்ல. இந்தப் பணிகளை குழுவாக செய்யும்போது அவை வேகம் பெறும். அதுவே இப்பணிகளை இயக்கமாக மாற்றும்போது, அதன் முன்னேற்றம் புயலை விட அதிக வேகம் கொண்டதாக இருக்கும்.

    கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் ஓரளவுக்காவது தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளன என்றால் அதற்கு காரணம் பா.ம.க சார்பிலும், தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பிலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தான்.

    தமிழைத்தேடி இயக்கத்தின் நோக்கங்கள் விரிவானவை. கடைகளின் பெயர்ப்பலகைகளை தமிழில் எழுதுவதில் தொடங்கி, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பயிற்றுமொழியாக தமிழ் அறிவிக்கப்பட வேண்டும் என்பது வரை எண்ணற்ற மாற்றங்களை நாம் செய்ய வேண்டியுள்ளது.

    மாவட்ட அளவில் குறைந்தது 10 பேர் கொண்ட குழுக்களை அமைத்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கூடி, தமிழ் வளர்ச்சிக்கான பணிகளையும், பரப்புரைகளையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டும். முதற்கட்டமாக தமிழைத் தேடி இயக்கம் வடிவமைத்து வெளியிட்டுள்ள தனித்தமிழ் சொற்கள் அறிவோம், குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப்பெயர்கள் ஆகிய பதாகைகளை அதிக எண்ணிக்கையில் அமைக்க வேண்டும்.

    உங்கள் குடும்ப உறுப்பினர்களில் தொடங்கி, நீங்கள் பணி செய்யும் இடம், நண்பர்கள், உறவினர்கள், பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் தனித்தமிழிலேயே உரையாடுங்கள். ஊர்கூடித் தான் தேர் இழுக்க வேண்டும். எனவே, தமிழறி ஞர்களே, தமிழ் உணர்வாளர்களே, தமிழ் ஆர்வலர்களே, தமிழ் ஆசிரியர்களே வாருங்கள்... ஒன்றாக கைக்கோர்ப்போம். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலையை விரைவில் உருவாக்குவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நந்தன் கால்வாயில் பல இடங்களில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட வேண்டும்.
    • சில இடங்களில் மட்டும் கால்வாய்க் கரைகள் மீது தார்ச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட உழவர்களின் கனவான நந்தன் கால்வாய் சீரமைப்புத் திட்டம் நூற்றாண்டுகளைக் கடந்தும் இன்னும் கனவாகவே தொடருகிறது. நந்தன் கால்வாயில் அவ்வப்போது சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும், அவை எதுவும் நந்தன் கால்வாய் பாசனப் பகுதிகளின் தேவையையும், எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றவில்லை என்பது தான் உண்மையாகும்.

    நந்தன் கால்வாய் முழுமையாக சீரமைக்கப்பட வேண்டும். கீரனூர் அணையில் தொடங்கும் நந்தன் கால்வாய் பனைமலை ஏரியில் முடியும் வரை சில இடங்களில் மட்டும் கால்வாய் மீது சிமிட்டி பூச்சு பூசப்பட்டுள்ளது; சில இடங்களில் மட்டும் கால்வாய்க் கரைகள் மீது தார்ச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பிற இடங்களில் மண் பூச்சும், மண் சாலைகளும் தான் உள்ளன. இந்த நிலையை மாற்றி கால்வாயின் தொடக்கம் முதல் இறுதி வரை சிமிட்டி பூச்சும், தார் சாலைகளும் அமைக்கப்பட வேண்டும்.

    நந்தன் கால்வாயில் பல இடங்களில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட வேண்டும். நந்தன் கால்வாய் தொடக்கம் முதல் இறுதி வரை உள்ள 37.60 கி.மீ நிலப்பரப்பும் ஒரு மாவட்ட நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டும். மேற்கண்ட அனைத்துக் கோரிக்கைகளும் விரைந்து நிறைவேற்றப்பட வேண்டும். இதை வலியுறுத்தி பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் விரைவில் திருவண்ணாமலை-விழுப்புரம் மாவட்டங்களில் விழிப்புணர்வு பரப்புரை பயணம் மேற்கொள்வார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆற்றுநீர் பகிர்வு ஒப்பந்தத்திற்கு எதிரான அத்துமீறலை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது.
    • தமிழக முதலமைச்சர் சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை உடனடியாக கைவிடும்படி வலியுறுத்த வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

    கேரளத்தில் உள்ள சிறுவாணி ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் அணை கட்டப்பட்டதன் நோக்கமே கோவைக்கு குடிநீர் வழங்குவது தான். ஆனால், அதற்கு மாறாக சிறுவாணி அணைக்கும், தமிழ்நாட்டில் உள்ள பில்லூர் அணைக்கும் இடையே 3 தடுப்பணைகளை கேரள அரசு கட்டுவதன் நோக்கம் அட்டப்பாடி பகுதியில் தண்ணீரைத் தேக்கி உழவு செய்வது தான் எனத் தெரிகிறது. ஆற்றுநீர் பகிர்வு ஒப்பந்தத்திற்கு எதிரான இந்த அத்துமீறலை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது.

    எனவே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடர்பு கொண்டு சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை உடனடியாக கைவிடும்படி வலியுறுத்த வேண்டும். கேரள அரசின் இந்த அத்துமீறல் குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்று சிறுவாணியின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ் மொழியின் உரிமைகளை ஒவ்வொன்றாக போராடிப் பெறும் நிலை கூடாது.
    • அன்னைத் தமிழ் மொழிக்கு அதற்குரிய அனைத்து உரிமைகளும், மரியாதையும் வழங்கப்பட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வகைப் பணியாளர் தேர்வுகளும், ஒருங்கிணைந்த மேல்நிலைப் பணியாளர் தேர்வுகளும் இனி தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மத்திய அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

    மத்திய அரசு நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளையும், நுழைவுத் தேர்வுகளையும் தமிழ் மொழியில் நடத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகிறது. அதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சாதகமான உறுதிமொழிகளைப் பெற்றுக்கொடுத்தது. பாட்டாளி மக்கள் கட்சியின் தமிழ்மொழியில் போட்டித் தேர்வு கனவு நனவானதில் மகிழ்ச்சி.

    தமிழ் மொழியின் உரிமைகளை ஒவ்வொன்றாக போராடிப் பெறும் நிலை கூடாது. அன்னைத் தமிழ் மொழிக்கு அதற்குரிய அனைத்து உரிமைகளும், மரியாதையும் வழங்கப்பட வேண்டும். அதற்காக தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளும் மத்திய அலுவல் மொழியாக்கப்பட வேண்டும். அந்த இலக்கை அடைவதற்காக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து போராடும். வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.
    • குற்றம் செய்தவர்கள் உடனுக்குடன் தண்டிக்கப்பட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றவழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை விரைவாக விசாரித்து முடிப்பதற்கு வசதியாக சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் போதிய எண்ணிக்கையில் ஏற்படுத்தப்படாதது ஏமாற்றமளிக்கிறது; பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி வழங்க இது உதவாது.

    ஒரு மாவட்டத்தில் 300-க்கும் கூடுதலான 'குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்' குறித்த வழக்குகள் நிலுவையில் இருந்தால், அங்கு இரு சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் 300-க்கும் கூடுதலான வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அங்கு கூடுதல் சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் இன்னும் அமைக்கப்படவில்லை.

    தருமபுரி, திண்டுக்கல், தேனி, திருவள்ளூர் மாவட்டங்களில் சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று கடந்த 2021-ம் ஆண்டில் தமிழ்நாடு அரசு அறிவித்தது. ஆனால், அதன் பின் இரு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இன்று வரை அந்த நீதிமன்றங்கள் அமைக்கப்படவில்லை. இதனால் அந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட மனித மிருகங்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும்; அப்போது தான் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைச் செய்ய மற்றவர்கள் அஞ்சுவார்கள் என்ற தத்துவத்தின் அடிப்படையில் தான் வழக்குகளை விரைந்து விசாரிக்க வசதியாக சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்படுகின்றன. ஆனால், அதை புரிந்து கொள்ளாமல் சி்றப்பு நீதிமன்றங்களை அமைக்க தாமதிப்பது சரியல்ல. இது குற்றவாளிகள் தப்பிக்கவும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருகுவதற்கும் மட்டுமே வகை செய்யும்.

    தமிழ்நாடு குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலமாக மாற வேண்டும். இந்த இலக்கை எட்ட வேண்டுமானால், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறைய வேண்டும்; குற்றம் செய்தவர்கள் உடனுக்குடன் தண்டிக்கப்பட வேண்டும். அதற்கு வசதியாக அனைத்து மாவட்டங்களிலும் போதிய எண்ணிக்கையில் சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • அகற்றப்பட்ட பெயர்ப்பலகைகளை மீண்டும் வைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
    • பாமகவின் கோரிக்கை ஏற்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு பெருந்தலைவர் காமராசர் பெயரையும், பன்னாட்டு முனையத்திற்கு அறிஞர் அண்ணா பெயரையும் தாங்கிய பெயர்ப்பலகைகள் பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வைக்கப்பட்டிருக்கின்றன. விமான நிலையங்கள் ஆணையத்தின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

    விமான நிலையங்களின் முனையங்களுக்கு வைக்கப்பட்டிருந்த தலைவர்களின் பெயர்கள் பத்தாண்டுகளுக்கு முன் அகற்றப்பட்ட நிலையில், மீண்டும் அப்பெயர்களை சூட்ட வேண்டும்; அகற்றப்பட்ட பெயர்ப்பலகைகளை மீண்டும் வைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. பாமகவின் கோரிக்கை ஏற்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி.

    விமான நிலையங்களின் முனையங்களுக்கு பெயர் சூட்டப்பட்டிருப்பதைப் போல ஒட்டுமொத்த விமான நிலையத்திற்கு தமிழர்களின் வீரத்தை உலக நாடுகளுக்கு உணர்த்திய பல்லவ மாமன்னன் மாமல்லனின் பெயரைச் சூட்டுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; இதற்காக தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சிறப்பாசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு நடத்தப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.
    • நான்கு ஆண்டுகளுக்கு முன்பே முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டன.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, தையல், ஓவியம், இசை ஆகிய பாடங்களுக்கு 1325 சிறப்பாசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை கடந்த 26.7.2017-ம் நாள் வெளியிடப்பட்டு, 23.9.2017-ம் நாள் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டன.

    அதன் அடிப்படையில் தையல், ஓவியம், இசை ஆகிய பாடங்களுக்கான சிறப்பாசியர்கள் கடந்த 2019-ம் ஆண்டும், உடற்கல்வி சிறப்பாசிரியர் பணியிடங்கள் 2020-ம் ஆண்டும் நிரப்பப்பட்டன. ஆனால், தமிழ்வழியில் படித்தவர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 229 பேருக்கு மட்டும் 5 ஆண்டுகளுக்கும் மேலாகியும் பணி ஆணை வழங்காமல் தேர்வு வாரியம் தாமதித்து வருகிறது.

    ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இவ்வளவு நீண்ட தாமதத்திற்கு எந்த நியாயமான காரணமும் இல்லை. சிறப்பாசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு நடத்தப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பே முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டன.

    அதன் படி தங்களுக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையும் ஏற்படுத்தப்பட்டுவிட்டது. ஆனால், திடீரென ஒரு நாள் அந்தப் பட்டியல் திரும்பப் பெறப்பட்டு விட்டது. புதிய பட்டியல் தயாரித்து வெளியிடப்பட்டால், அதிலும் தங்களின் பெயர் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையும் உள்ளது. இத்தகைய சூழலில் வேறு போட்டித் தேர்வுகளையும் எழுத மனமில்லாமல், ஐந்தாண்டுகளாக தேர்வர்கள் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    எனவே, தமிழ் வழியில் கற்று சிறப்பாசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 229 பேரின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும். அவர்களுக்கான பணியமர்த்தல் ஆணைகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×