search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 212048"

    • இந்தியாவில் மட்டும் 880 மொழிகள் பயன்பாட்டில் இருக்கிறது.
    • இந்திய அளவில் 220 மொழிகள் அழிந்து விட்டதாக மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது.

    திருச்சி:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் தமிழைத் தேடி விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை நடத்தி வருகிறார். இந்த பயணம் கடந்த 21-ந்தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழன்னை சிலையுடன் கூடிய அலங்கார ஊர்தியுடன் தொடங்கியது.

    இந்தப் பயணம் மேல் மருவத்தூர், புதுச்சேரி, சிதம்பரம், தஞ்சாவூர் வழியாக திருச்சி வந்தடைந்தது. அதைத் தொடர்ந்து திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு அறக்கட்டளை தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். இதில் பா.ம.க. நிறுவனரும், பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனருமான டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    உலகில் 7,015 மொழிகள் உள்ளன. இந்தியாவில் மட்டும் 880 மொழிகள் பயன்பாட்டில் இருக்கிறது. உலகில் 2,000 மொழிகளை ஆயிரத்துக்கும் குறைவானவர்கள் தான் பேசுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இந்திய அளவில் 220 மொழிகள் அழிந்து விட்டதாக மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது.

    இந்த நிலையில் நூறு ஆண்டுகளில் அழிந்து விடும் வாய்ப்பு உள்ள மொழிகளில் தமிழ் 8-வது இடத்தில் உள்ளதாக ஒரு கூட்டம் அவதூறு பரப்புகிறது. ஆனால் அது போன்ற ஒரு தகவலை யுனெஸ்கோ அமைப்பு வெளியிடவில்லை. உலகில் ஆங்கிலம், இந்தி, ரஷ்யா உள்ளிட்ட 13 மொழிகள் தான் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் பேசுகிறார்கள். அந்த 13 மொழிகளில் தமிழ் இடம் பெறவில்லை.

    ஆனால் உலகம் முழுவதும் தமிழர்களின் எண்ணிக்கை 10 கோடி பேர் வரை இருக்கும். அழிவில் இருந்து தமிழ் மொழியை மீட்க இனிமேல் அனைவரும் தமிழில் பேச வேண்டும். தமிழில் பேசாதவர்களையும் பேச வைக்க வேண்டும்.

    திருச்சி மாவட்ட வணிகர்கள் தங்களது கடைகளுக்கு முன்பு தமிழில் பெயர் பலகை வைத்தால் அடுத்த முறை நான் திருச்சிக்கு வரும்போது அந்த வணிகர்களுக்கு மலர் கொத்து வழங்குவேன். தமிழக வணிகர்கள் கடைகளில் முன்பு பெயர் பலகையை தமிழில் எழுதுங்கள்.

    அப்படி இல்லை என்றால் ஒரு திங்கள் இடைவெளி விட்டு அழிப்பதற்காக தமிழகம் முழுவதும் நாங்கள் கருப்பு மை கலந்த வாளி மற்றும் ஏணியை தூக்கிக் கொண்டு வந்து விடுவோம். எங்களை அந்த நிலைக்கு தள்ளி விடாதீர்கள். ஏனென்றால் தமிழை காக்க எங்களுக்கும் வேறு வழி இல்லை. ஆனால் வேறு எந்த மொழிகளுக்கும் நாங்கள் எதிரி கிடையாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் பாவாணர் தமிழ் இயக்க அமைப்பாளர் திருமாறன், உலக திருக்குறள் பேரவை துணைத் தலைவர் முருகானந்தம், திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க தலைவர் ஜவகர் ஆறுமுகம், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர்கள் மா.பிரின்ஸ், உமாநாத், திலீப் மற்றும் திரளான தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழை தனது பெயரிலேயே வைத்திருக்கும் கவர்னரும் இதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
    • கவர்னர் தமிழிசை தமிழ் மீது பற்று கொண்டவர்.

    புதுச்சேரி:

    விடுதலை சிறுத்தை கட்சி எம்.பி. ரவிக்குமார் புதுவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் பல ஆய்வாளர்களை உருவாக காரணமாக இருந்தது. இதில் பெரிய பல பேராசிரியர்கள் பணியாற்றினார்கள்.

    தற்போது பேராசிரியர், இயக்குநர் இல்லாமல் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் தமிழ் மீது பற்று கொண்டவர்.தமிழுக்காக போராட்டக்களத்தில் இருந்தவர்.

    அவரது ஆட்சிக்காலத்தில தமிழுக்காக இருந்த நிறுவனம மூடப்பட்டது என்ற அவபெயர் வரக்கூடாது.

    எனவே புதுவை மொழியில் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை மீண்டும் புதுப்பிக்க அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழை தனது பெயரிலேயே வைத்திருக்கும் கவர்னரும் இதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

    கவர்னர் தமிழிசை தமிழ் மீது பற்று கொண்டவர். அவரது தந்தையும் தமிழ் மீது பெரும் பற்று கொண்டவர். அவரது காலததில் இந்த நிறுவனம் மூடப்பட்டால் அவருக்கும் அது பெரும் அவபெயராக இருக்கும், எனவே அவரும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

    பா.ம.க. நிறுவனர் ராமதாசு தமிழை தேடி என்ற பயணத்தை மேற்கொண்டுள்ளார். தமிழுக்காக யார் எதை செய்தாலும் அதை வரவேற்கிறோம். அவரது நோக்கம் நிறைவேற வாழ்த்துகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சிலம்பாட்ட மாணவர்கள் சிலம்பம், குஸ்தி, சுருள் வாள் உள்ளிட்ட சிலப்பக்கலைகளை சுற்றி சிறப்பு வரவேற்பு அளித்தனர்.
    • மூவரின் சிலைகளு–க்கு செய்யப்ப ட்டிருந்த சிறப்பு அலங்கா ரத்தினை பார்வையிட்டு வணங்கினார்.

    சீர்காழி:

    பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழைத்தேடி விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை கடந்த 23-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கி 28-ம் தேதி மதுரையில் விழிப்புணர்வு பயணத்தை நிறைவு செய்கிறார்.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 4-வது நாளான வெள்ளிக்கிழமை டாக்டர் ராமதாஸ்க்கு மாவட்ட ஆரம்ப எல்லையான கொள்ளிடத்தில் பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்களால் சிறப்பு வரவேற்பு
    அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து சீர்காழி தமிழிசை மூவர் மணிமண்டபத்திற்கு வருகை புரிந்து டாக்டர்.ராமதாஸ் வாகனத்திலிருந்தவாறே, முத்து தாண்டவர், அருணாச்சல கவிராயர், மாரிமுத்தா பிள்ளை உள்ளிட்டமூவரின் சிலைகளுக்கு செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரத்தினை பார்வையிட்டு வணங்கினார்.

    மூவர் மணிமண்டபம் எதிரே கூடியிருந்த அறக்கட்டளை உறுப்பினர்கள் லண்டன்.ரெ.அன்பழகன், சின்னையன், நகர்மன்ற உறுப்பினர் வேல்முருகன், ஜி.வி.முருகவேல், பாலதண்டாயுதம், தேனூர்.ரவி மற்றும் தமிழ் ஆர்வலர்கள் வரவேற்பு அளித்தனர். முன்னதாக சிலம்பாட்ட மாணவர்கள் சிலம்பம், குஸ்தி, சுருள் வாள் உள்ளிட்ட சிலப்பக்கலைகளை சுற்றி சிறப்பு வரவேற்பு அளித்தனர்.

    • எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற பொதுவுடைமை தான் கார்ல் மார்க்சின் கொள்கையாகும்.
    • கார்ல் மார்க்ஸ் குறித்து முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் ஆளுநர் அவதூறுகளை பரப்பக்கூடாது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    செருமானிய தத்துவ அறிஞர் கார்ல் மார்க்சின் கொள்கைகள் இந்தியாவுக்கு எதிரானவை; அவை இந்திய வளர்ச்சிக்கு தடையாக இருந்தன என்று ஆளுநர் ரவி கூறியிருப்பது தவறு, கண்டிக்கத்தக்கது. கார்ல் மார்க்ஸ் எந்த நாட்டுக்கும் எதிராகச் செயல்படவில்லை; அது அவரது கொள்கையும் அல்ல. கார்ல் மார்க்சின் கருத்துகளை ஆளுநர் நன்றாக படிக்கவில்லை என்பதையே அவரின் கருத்துகள் காட்டுகின்றன.

    எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற பொதுவுடைமை தான் கார்ல் மார்க்சின் கொள்கையாகும். அவரின் கொள்கைகளையும், மூலதனம் நூலையும் உலகமே பாராட்டுகிறது. பா.ம.க.வின் கொள்கை வழிகாட்டிகளில் மார்க்சும் ஒருவர். கார்ல் மார்க்ஸ் குறித்து முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் ஆளுநர் அவதூறுகளை பரப்பக்கூடாது. அது அவருக்கு வழங்கப்பட்ட பணியும் அல்ல. கார்ல் மார்க்ஸ் குறித்து தவறான தனது விமர்சனத்தை ஆளுநர் திரும்பப்பெற வேண்டும்!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழகத்தில் தமிழ் கட்டாய பாடமாக இயற்றப்பட்டு அமலுக்கு வரவே இல்லை.
    • பிற மொழி கலப்பு இல்லாமல் தமிழை பேசுங்கள். இதை உங்கள் வீடுகளில் இருந்தே தொடங்குங்கள்.

    புதுச்சேரி:

    அழிவின் விளிம்பிலிருந்து அன்னை தமிழைக் காப்பதற்காக டாக்டர் ராமதாஸ் 8 நாள் தமிழைத்தேடி என்ற விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

    இந்த பயணத்தின் 3-ம் நாள் பரப்புரை கூட்டம் புதுவை கம்பன் கலையரங்கில் இன்று காலை நடைபெற்றது. பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை தலைவரும் பா.ம.க. கவுரவ தலைவருமான ஜி.கே. மணி தலைமை தாங்கினார். புதுவை தமிழ் சங்க தலைவர் முத்து முன்னிலை வகித்தார், பொறுப்பாளரும் பா.ம.க. மாநில அமைப்பாளருமான கணபதி வரவேற்றார்.

    சென்னையை விட புதுவையில் தமிழ் சங்கங்கள் அதிகம், அதற்காக புதுவை தமிழ் அறிஞர்களை பாராட்டுகிறேன். புரட்சி கவிஞர் பாரதிதாசனின் பாடல்களை படிக்கும்போது நமக்கு உத்வேகம் வரும், அதுபோல் பாரதியார் ஆங்கிலேயர்களை எதிர்த்து, அவர்களது பொய் வழக்குகளால் அவர் 10 ஆண்டு காலம் புதுவையில் தங்கியிருந்தார்.

    அப்போதுதான் குயில்பாட்டு, பெண் விடுதலை பாடல்கள் ஆகியவற்றை பாடினார். பாரதியார் சுதந்திர பற்றை வளர்த்தார்.

    பாரதிதாசன் தமிழ் பற்றை வளர்த்தார். தமிழகத்தை ஒப்பிடும்போது புதுவையில் பிற மொழிகலப்பு குறைவு தனித்தமிழ் இயக்கங்கள் தோன்றிய முன்னோடியான இடம் புதுவை. அதனால் இதனை சவாலாக எடுத்துக்கொண்டு தமிழை மீட்க அறிஞர்கள் பணியாற்ற வேண்டும். தமிழகத்தில் தமிழ் கட்டாய பாடமாக இயற்றப்பட்டு அமலுக்கு வரவே இல்லை. அதே நிலை தான் புதுவையிலும் உள்ளது.

    திரைப்படங்களிலும் தமிழில் ஓரிரு வார்த்தைகள் தான் பயன்படுத்தப்படுகிறது, முழுமையான தமிழ் வசனங்களுடன் திரைப்படங்கள் வர வேண்டும். தமிழை வளர்க்க நாங்கள் பாடுபட்டதை பட்டியலிட்டால் அது நீண்டு கொண்டே போகும், தமிழ் இசையை வளர்க்கவும் நாங்கள் பாடுபட்டு வருகிறோம்.

    பிரான்ஸ் நாட்டிற்குள் ஒரே ஒரு ஆங்கில சொல் நுழைந்துவிட்டது. பிரெஞ்ச் இளைஞர்கள் கொதித்து போனார்கள் அந்த சால் தேங்க்யூ அதற்கு பதிலாக மெர்சி என கூறி நன்றியை தெரிவிக்கின்றனர். தமிழில் பெயர் பலகை இல்லாவிட்டால் கருப்பு மையை கையில் எடுங்கள், ஆனால் அதற்கு 15 நாட்களுக்கு முன்பே அதை தெரிவித்துவிடுங்கள்.

    பெயர் பலகையில் எப்படி எழுத வேண்டும் என வழிகாட்டுங்கள் அதற்கு பிறகும் தமிழ் இல்லை என்றால், நானும் உங்களோடு சேர்ந்து கருப்பு மை பூச வருகிறேன், பிற மொழி கலப்பு இல்லாமல் தமிழை பேசுங்கள். இதை உங்கள் வீடுகளில் இருந்தே தொடங்குங்கள். நாம் பிற மொழிக்கு எதிரி அல்ல. தமிழை மீட்போம்.

    பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிர்வாகிகள் வடிவேலு, ஜெயக்குமார், மதியழகன், பிரபாகரன் தேவமணி, புதுவை தமிழ் சங்க துணைத்தலைவர் ஆதிகேசவன், புதுவை தமிழ் இலக்கிய ஆய்வுக் கழக நிறுவனர் வேல்முருகன், தமிழர் தேசிய முன்னனி துரை மாலிறையன், தனித்தமிழ் கழக சீனு அரிமாப் பாண்டியன், தனித்தமிழியக்கம் தமிழ்மல்லன், தமிழர் தேசிய முன்னனி தமிழ்மணி, இலக்கியப் பொழில் இலக்கிய மன்றம் பூங்கொடி பராங்குசம் , பாரதிதாசன் அறக்கட்டளை தலைவர் பாரதி கலைமாமணி ராசன் பாவலர் பயிற்சி பட்டறை இலக்கியன், என்.ஆர். இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் உள்பட ஏராளமான தமிழறிஞர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.

    • வருகிற 23-ந்தேதி அன்று புதுச்சேரியில் ராமதாசின் பிரசார பயணம் நடைபெறுகிறது.
    • புதுவையில் இருந்து கடலூர் வரையில் 3-ம் நாள் பிரசாரத்தை டாக்டர் ராமதாஸ் மேற்கொள்கிறார்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 'தமிழை தேடி' என்ற பெயரில் பிரசார பயணத்தை தொடங்கப் போவதாக அறிவித்து இருந்தார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிவிப்பில் தமிழகத்தில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதுதான் ஒரு காலத்தில் முழக்கமாக இருந்தது. ஆனால் இன்று பள்ளிகள், பெயர் பலகைகள், உயர்நீதிமன்றத்தில் தமிழ் இல்லை.

    எனவே அழிவின் விளிம்பில் இருந்து அன்னை தமிழை மீட்டெடுக்க வேண்டும், அனைத்து இடங்களிலும் தமிழே ஆட்சி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை முதல் மதுரை வரை தமிழை தேடி பயணத்தை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்திருந்தார்.

    இதன்படி டாக்டர் ராமதாசின் தமிழை தேடி பிரசார பயணம் தொடக்க விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே இன்று காலை தொடங்கியது. இதில் ஏராளமான பா.ம.க.வினர் திரண்டனர்.

    பொங்குதமிழ் அறக்கட்டளை தலைவரும் பா.ம.க. கவுரவ தலைவருமான ஜி.கே.மணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி வரவேற்று பேசினார். முன்னாள் அம்பத்தூர் நகர்மன்ற தலைவர் கே.என்.சேகர், மு.ஜெயராமன், ஈகைதயாளன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ் அறிஞர்கள் அரு கோயிலன், தமிழண்ணல் கோ.பெரியண்ணன், புலவர் சுந்தரராசன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். நிகழ்ச்சியில் டாக்டர் ராமதாஸ் எழுதிய 'எங்கே தமிழ்' என்ற நூலை சீர்காழி சிவ சிதம்பரம் வெளியிட்டார். முதல் பிரதியை புஷ்பவனம் குப்புசாமி பெற்றுக்கொண்டார். இதைதொடர்ந்து டாக்டர் ராமதாஸ் தமிழை தேடி பிரசார பயணத்தை தொடங்கினார்.

    முதல்நாளான இன்று நுங்கம்பாக்கத்தில் தொடங்கி மறைமலைநகர் வரையில் ராமதாசின் பிரசார பயணம் நடைபெற்றது. வாகனத்தில் அமர்ந்திருந்தபடியே ராமதாஸ் பிரசார பயணத்தை மேற்கொண்டார்.

    2-வது நாளான நாளை (22-ந்தேதி) மதுராந்தகத்தில் இருந்து பிரசார பயணத்தை தொடங்கும் ராமதாஸ் திண்டிவனத்தில் முடிக்கிறார்.

    வருகிற 23-ந்தேதி அன்று புதுச்சேரியில் ராமதாசின் பிரசார பயணம் நடைபெறுகிறது. புதுவையில் இருந்து கடலூர் வரையில் 3-ம் நாள் பிரசாரத்தை டாக்டர் ராமதாஸ் மேற்கொள்கிறார்.

    24-ந்தேதி அன்று சிதம்பரத்தில் இருந்து மயிலாடுதுறை வரையிலும், 25-ந்தேதி தஞ்சை குத்தாலத்தில் இருந்து கும்பகோணம் வரையிலும் ராமதாசின் பிரசார பயணம் நடைபெறுகிறது.

    25-ந்தேதி தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் ராமதாஸ் தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்து விரிவாக பேசுகிறார்.

    வருகிற 27-ந்தேதி வல்லத்தில் இருந்து பிரசார பயணத்தை தொடங்கும் ராமதாஸ் திருச்சியில் முடிக்கிறார். கடைசி நாளான 28-ந்தேதி திண்டுக்கல்லில் இருந்து ராமதாசின் பிரசார பயணம் தொடங்குகிறது. அன்று மாலையில் மதுரையில் தமிழை தேடி பிரசார பயணத்தை ராமதாஸ் நிறைவு செய்கிறார்.

    இதில் தமிழ் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. நிறைவு நாள் அன்று டாக்டர் ராமதாஸ் தமிழ் வளர்ச்சி தொடர்பாக முக்கியமான அறிவிப்புகளையும் வெளியிட உள்ளார்.

    இன்று முதல் 8 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பிரசார பயணத்தையொட்டி அந்தந்த பகுதிகளில் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் பங்கேற்று பேசுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டிருந்த அறிவிக்கையின்படி, ஜூலை மாதம் நடத்தப்பட்ட நான்காம் தொகுதி தேர்வுக்கான முடிவுகள் கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.
    • அரசுப்பணி என்பது தான் தமிழ்நாட்டில் இன்று லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவாக உள்ளது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு 7301 பேரை தேர்வு செய்வதற்கான நான்காம் தொகுதி தேர்வு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30-ந்தேதி அறிவிக்கப்பட்டு, கடந்த ஜூலை 24-ந்தேதி நடத்தப்பட்டது.

    டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டிருந்த அறிவிக்கையின்படி, ஜூலை மாதம் நடத்தப்பட்ட நான்காம் தொகுதி தேர்வுக்கான முடிவுகள் கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். அதே மாதத்தில் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டு, நவம்பர் மாதத்தில் அவை சரி பார்க்கப்பட்டு, கலந்தாய்வு நடத்தி பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவை எதுவுமே நடக்கவில்லை.

    ஜனவரி மாத இறுதியில் தான், நியமனம் செய்யப்பட வேண்டிய நான்காம் தொகுதி பணியிடங்களின் எண்ணிக்கை 9801 ஆக உயர்த்தப்படுவதாகவும், பிப்ரவரியில் முடிவுகள் அறிவிக்கப் படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி அறிவித்தது.

    குரூப்-4 தேர்வை 18.50 லட்சத்திற்கும் மேலானவர்கள் எழுதினார்கள். இவ்வளவு இளைஞர்களின் எதிர்காலம் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கைகளில் இருக்கும் நிலையில், அதற்கேற்ற பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ள அரசுப் பணியாளர் தேர்வாணையம் தவறிவிட்டது.

    அரசுப்பணி என்பது தான் தமிழ்நாட்டில் இன்று லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவாக உள்ளது. ஒரு போட்டித் தேர்வை எழுதிய மாணவர்கள், அதன் முடிவை அறிந்தால் தான் அடுத்தப் போட்டித் தேர்வுக்கு முழு மனதுடன் தயாராக முடியும். இத்தகைய சூழலில் ஒரு தேர்வை அறிவித்து, நடத்தி, முடிவுகளை அறிவிப்பதற்கு ஓராண்டை பணியாளர் தேர்வாணையம் எடுத்துக் கொள்வது மாணவர்களுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும். அவர்களின் உணர்வுகளை தேர்வாணையம் மதிக்க வேண்டும்.

    நான்காம் தொகுதி பணிகளுக்கான போட்டித் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உடனடியாக வெளியிட வேண்டும். அதுமட்டுமின்றி, இனிவரும் காலங்களில் ஓர் அடுக்கு கொண்ட போட்டித்தேர்வுகளுக்கான அறிவிக்கை வெளியிடுவதில் தொடங்கி பணி நியமன ஆணை வழங்குவது வரையிலான அனைத்து நடைமுறைகளும் 5 மாதங்களில் முடிக்கப்பட வேண்டும்.

    ஈரடுக்கு தேர்வு கொண்ட முதல் மற்றும் இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை வெளியிடுவதில் தொடங்கி நியமன ஆணை வழங்குவது வரையிலான அனைத்து நடைமுறைகளும் 9 மாதங்களில் முடிக்கப்படுவதை அரசுப் பணியாளர் தேர்வாணையம் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தமிழ்நாடு அரசிற்கு முதுகெலும்பாக திகழ்வது வருவாய்த்துறை தான்.
    • சுமார் 150 உயர்பதவிகள் காலியாக உள்ளது.

    சென்னை :

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறையில் மட்டும் 31 மாவட்ட வருவாய் அலுவலர் பணியிடங்களும், 117 துணை ஆட்சியர் (சப்-கலெக்டர்) பணியிடங்களும் காலியாக இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. இதனால் வருவாய் நிர்வாகம் சார்ந்த பணிகள் முடங்கிக் கிடக்கின்றன.

    டி.என்.பி.எஸ்.சி. முதல் தொகுதி தேர்வுகளை (குரூப்-1) ஆண்டுக்கு ஒருமுறை நடத்தாதது, வட்டாட்சியர்களுக்கு துணை ஆட்சியராகவும், துணை ஆட்சியர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலராகவும் பதவி உயர்வு வழங்காதது ஆகியவை தான் இவ்வளவு காலியிடங்கள் ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.

    தமிழ்நாடு அரசிற்கு முதுகெலும்பாக திகழ்வது வருவாய்த்துறை தான். அத்துறையில் சுமார் 150 உயர்பதவிகள் காலியாக இருப்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இதன் காரணமாக வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது தமிழகத்தின் வளர்ச்சியையும் பாதிக்கும்.

    காலியிடங்களில் சுமார் 100 துணை ஆட்சியர் பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. முதல் தொகுதி தேர்வு மூலம் தான் நிரப்ப முடியும் என்பதால், உடனடியாக அத்தேர்வை அறிவிக்க வேண்டும். அதேபோல், தகுதியான வட்டாட்சியர், துணை ஆட்சியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ் கட்டாயப்பாடத்தை எதிர்த்து சிறுபான்மை பள்ளிகள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை முன்கூட்டியே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும்.
    • உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை சிறப்பாக நடத்தி, அடுத்த ஆண்டில் இருந்தாவது 10-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப்பாடமாக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாய பாடமாக்கி 17 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை மேலும் ஓராண்டிற்கு தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்திருக்கிறது.

    தமிழ் கட்டாயப்பாடத்தை எதிர்த்து சிறுபான்மை பள்ளிகள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை முன்கூட்டியே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால், நடப்பாண்டில் இருந்து பத்தாம் வகுப்பு வரை தமிழ்க் கட்டாயப்பாடமாக்கப்பட்டிருக்கும். ஆனால், அதை செய்ய அரசு தவறிவிட்டது.

    தமிழ்நாடு அரசு வழங்கும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் ஆங்கிலம், அறிவியல் உள்ளிட்ட பாடங்களின் பெயர்கள் அப்படியே அச்சிடப்படும் நிலையில், தமிழ் என்று இருக்க வேண்டிய இடத்தில் மட்டும் மொழிப்பாடம் என்று குறிப்பிடப்படுவதை காண சகிக்கவில்லை.

    இந்த நிலை மாற்றப்பட வேண்டும். அதற்காக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை சிறப்பாக நடத்தி, அடுத்த ஆண்டில் இருந்தாவது 10-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப்பாடமாக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இன்று எங்கே தமிழ்? என்று கேட்கும் நிலை உருவாகியிருக்கிறது.
    • தமிழ் மொழிதான் நமது அடையாளம்

    சென்னை :

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட கடித வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    'எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்' என்பதுதான் ஒரு காலத்தில் முழக்கமாக இருந்தது. ஆனால், இன்று எங்கே தமிழ்? என்று கேட்கும் நிலை உருவாகியிருக்கிறது.

    உலகம் முழுவதும் வாழும் 10 கோடி தமிழர்களின் முதன்மை அடையாளம் தமிழ் மொழிதான். அந்த அடையாளத்தை நாம் இழந்து விட்டால், நம்மிடம் உள்ள அனைத்தையும் இழந்துவிடுவோம். இந்த அடிப்படை உண்மையை உணராமல் நம்மால் அன்னை தமிழை காக்க முடியாது.

    தமிழ் மொழிதான் நமது அடையாளம்; அதை எதற்காகவும் இழக்கக்கூடாது என்ற உணர்வு நமக்குள் உருவாகி விட்டால், தமிழ்மொழி தழைத்தோங்கிவிடும்.

    அரசு அலுவலகங்கள், பள்ளிகள், வணிக நிறுவனங்கள், ஆலயங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தமிழ் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் உண்மை தான். இவற்றை மாற்றுவதற்கு பெரும் போராட்டங்கள் தேவையில்லை. ஒற்றை உறுதி ஏற்பு போதுமானது.

    அன்னை தமிழை யாரெல்லாம் மதிக்கவில்லையோ, அவர்களையெல்லாம் நாம் மதிக்கத்தேவையில்லை என்று உறுதிமொழியேற்றுக்கொண்டால் போதுமானது. நமது துணையும், ஆதரவும் எங்கெல்லாம் தேவையோ, அங்கெல்லாம் தமிழ் செழிக்கத்தொடங்கிவிடும். அதனால் அன்னை தமிழை மீட்பதற்கான முயற்சி நம்மிடம் இருந்துதான் தொடங்க வேண்டும். அதன்பிறகு நாம் கொடுக்கும் அழுத்தத்தால் அனைத்து இடங்களிலும் அன்னை தமிழ் அரியணை ஏறும் என்பதில் எந்த ஐயமும் தேவையில்லை.

    'தமிழ் கூறும் நல்லுலகு' என்பதுதான் நாம் வாழும் மண்ணுக்கான பெருமை. அதுதான் நமது அடையாளம். அந்த பெருமை இப்போது நமது மண்ணுக்கு இருக்கிறதா? என்ற ஐயம் என்னை வாட்டுகிறது. அந்த பெருமையை மீண்டும் அடையவேண்டும் என்ற வேட்கை என்னுள் துடித்துக்கொண்டிருக்கிறது.

    இது குறித்தெல்லாம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான், பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் 'தமிழை தேடி...' என்ற தலைப்பில் உலக தாய்மொழி நாளான பிப்ரவரி 21-ந் தேதி சென்னையில் தொடங்கி பரப்புரை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறேன்.

    8 நாட்கள் நடைபெறும் இந்த பயணம் வரும் 28-ந் தேதி மாலை சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் நிறைவடைகிறது. அன்னை தமிழைக் காப்பதற்காக நடத்தப்படும் இந்த பயணத்தில் அரசியலுக்கு இடமில்லை. பிரிக்கும் அரசியலை ஒதுக்கி வைத்து விட்டு, மொழிக்காக நாம் இணைவோம். அரசியல், மதம், சாதி உள்ளிட்ட அனைத்து எல்லைகளையும் கடந்து தமிழ் மொழியை காப்பதற்காக நடத்தப்படும் தமிழை தேடி பரப்புரை பயணத்தில் அனைவரும் வாய்ப்புள்ள இடங்களில் கலந்துகொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அன்னை தமிழை காக்க அனைவரும் கைகோர்ப்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மக்களுக்கு நன்மைகளை செய்வதிலும், முன்னோடித் திட்டங்களை செயல்படுத்துவதிலும் தமிழ்நாடு தான் முதன்மை மாநிலம்.
    • அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசின் சான்றிதழ்களைப் பெறவும், நலத்திட்ட உதவிகளைப் பெறவும் பொதுமக்களை அலையவிடக்கூடாது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளார். மக்களுக்கு அரசின் சேவைகள் தாமதமின்றி கிடைக்க வேண்டும் என்ற முதல்-அமைச்சரின் அக்கறை பாராட்டத்தக்கது.

    பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் அரசின் சேவைகள் குறித்த நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றால், அதற்கான ஒரே தீர்வு பொதுச்சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்றுவது மட்டும் தான். இந்த சட்டம் அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட 20 மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. அந்த 20 மாநிலங்களையும் விட தமிழ்நாட்டில் தான் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தேவை மிக அதிகமாக உள்ளது.

    தமிழ்நாட்டில் பொதுச்சேவை சட்டம் இயற்றப்பட்டால், சாதிச்சான்றிதழ், பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, திருமண பதிவுச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, நில ஆவணங்களின் நகல்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மக்களுக்கு வழங்கப்படுவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படும்.

    குறித்த காலத்தில் சேவை கிடைக்காத மக்களுக்கு ரூ.10,000 வரை இழப்பீடு வழங்கவும் வகை செய்யப்படும். அதனால், அதிகாரிகள் குறித்த நேரத்தில் சேவை வழங்குவார்கள்.

    பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் தமிழ்நாட்டிற்கு கட்டாயம் தேவை; தமிழ்நாட்டில் பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டிருந்தால் அரசு அலுவலகங்களில் ஊழல்கள் கணிசமாக குறைந்திருக்கும் என்று சில ஆண்டுகளுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.

    எனவே அதை செயல்படுத்துவதற்கு அரசு சிறிதும் தயங்கக்கூடாது என்பதே பாட்டாளி மக்கள் கட்சியின் கருத்து. இதற்காக பா.ம.க. கடந்த காலத்தில் பல்வேறு இயக்கங்களையும், போராட்டங்களையும் நடத்தியிருக்கிறது.

    மக்களுக்கு நன்மைகளை செய்வதிலும், முன்னோடித் திட்டங்களை செயல்படுத்துவதிலும் தமிழ்நாடு தான் முதன்மை மாநிலம் என்று அரசுத் தரப்பில் பெருமிதம் தெரிவிக்கப்படுகிறது. அது உண்மை என்றால், ஏற்கனவே 20 மாநிலங்களில் நடைமுறையில் இருக்கும் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை தமிழ்நாட்டில் கொண்டு வந்து செயல்படுத்துவதில், தமிழக அரசுக்கு என்ன தயக்கம் இருக்க முடியும்?

    அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. அதற்காக பொதுச் சேவை பெறும் உரிமை சட்ட முன்வரைவை மார்ச் மாதம் நடைபெறவுள்ள சட்டப் பேரவைக் கூட்டத்தில் அரசு தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • உலக தாய்மொழி நாளான பிப்ரவரி 21-ம் நாள் சென்னையில் தொடங்கும் இந்த பயணம் பிப்ரவரி 28-ம் நாள் மதுரையில் நிறைவடையவுள்ளது.
    • பா.ம.க. இணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஏ.கே.மூர்த்தி பெற்றுக் கொண்டார்.

    சென்னை:

    பா.ம.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் தமிழ்நாட்டில் தமிழை வளர்த்தெடுப்பதற்கான தேவையை வலியுறுத்தி "தமிழைத் தேடி...'' என்ற தலைப்பில் பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

    உலக தாய்மொழி நாளான பிப்ரவரி 21-ம் நாள் சென்னையில் தொடங்கும் இந்த பயணம் பிப்ரவரி 28-ம் நாள் மதுரையில் நிறைவடையவுள்ளது. இந்த பயணத்திற்காக பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் இலட்சினை தயாரிக்கப்பட்டுள்ளது.

    இந்த இலட்சினையை டாக்டர் ராமதாஸ் இன்று காலை வெளியிட்டார். இதனை பா.ம.க. இணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஏ.கே.மூர்த்தி பெற்றுக்கொண்டார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×