search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 212048"

    • முன்னாள் எம்.எல்.ஏ. ரவிராஜ் பா.ஜ.க.வில் இருந்து விலகி பா.ம.க.வில் இணைந்தார்.
    • ரவிராஜ் தாயைத் தேடி வந்து விட்டார்.

    திண்டிவனம் :

    திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் திருத்தணி முன்னாள் எம்.எல்.ஏ. ரவிராஜ் பா.ஜ.க.வில் இருந்து விலகி பா.ம.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் ரவிராஜ் தனது ஆதரவாளர்களுடன் தன்னை பா.ம.க.வில் மீண்டும் இணைத்துக்கொண்டார்.

    இதை தொடர்ந்து அவரை வரவேற்று, டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

    தாய் வீட்டுக்கு வந்துள்ள பா.ம.க. சொந்தங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். திருவள்ளூர் மாவட்டத்தை பா.ம.க.வின் கோட்டையாக மாற்றி காட்டியவர், சில மாதங்களாக பா.ம.க.வில் இல்லை என்பது வருத்தம் தான். ஆனால் அவர் நெஞ்சத்தில் நானும், என்னுடைய நெஞ்சில் அவரும் உள்ளார்.

    டாக்டர் அன்புமணியின் ஆட்சி அமைய செய்ய வேண்டிய பணிகள் அதிகமாக இருக்கிறது. சரியான தருணத்தில் தான், ரவிராஜ் தாயைத் தேடி வந்து விட்டார். அவரது மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட வரவேற்கிறேன்.

    திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் ரவிராஜ் தலைமையில் இணைந்து பணி செய்து 10 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கல்வி கற்பிப்பதன் நோக்கம் கற்றல் திறன் குறைவாக இருப்பவர்களையும் கல்வியில் சிறந்தவர்களாக முன்னேற்றுவது தான்.
    • மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்க தமிழக அரசின் சார்பில் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மூன்றாம் வகுப்பு மாணவர்களில் 20 விழுக்காட்டினரால் தான் தமிழ் சொற்களை புரிந்து கொள்ள முடிகிறது; 23 விழுக்காட்டினரால் தான் அடிப்படை கணிதத்தை மேற்கொள்ள முடிகிறது என ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. தமிழக மாணவர்களின் கற்றல் குறைபாடு நீண்டகாலமாக நீடிக்கும் பிரச்சினை தான் என்றாலும், அதை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படாதது கவலையளிக்கிறது.

    கல்வி கற்பிப்பதன் நோக்கம் கற்றல் திறன் குறைவாக இருப்பவர்களையும் கல்வியில் சிறந்தவர்களாக முன்னேற்றுவது தான். ஆனால், அந்த அதிசயம் பெரும்பாலான காலங்களில் நடைபெறுவதில்லை என்பது தான் வேதனையான உண்மை. இயல்பாகவே கற்றல் திறன் அதிகமாக உள்ள மாணவர்கள் நன்றாக படித்து முன்னேறு கின்றனர். பள்ளிகள் அவர்களுக்கானவை அல்ல. 10 சதவீதம் மதிப்பெண் எடுக்கத் தடுமாறும் மாணவர்களை 60 சதவீதம் எடுக்கும் நிலைக்கு முன்னேற்றுவதும், 50 சதவீதம் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை 90 சதவீதத்துக்கும் கூடுதலான மதிப்பெண்களை எடுக்கும் நிலைக்கு உயர்த்துவதும் தான் அரசு பள்ளிகளின் நோக்கமாக இருக்க வேண்டும். அப்போது தான் தமிழகம் கல்வியில் சிறக்கும்.

    ஆனால், தமிழ்நாட்டு பள்ளிகள் இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில்லை என்பது தான் வேதனையான உண்மை. இதற்கான முதன்மைக் காரணம் கற்றல் கட்டமைப்பு வலிமையாக இல்லாததும், ஆசிரியர்கள் பற்றாக்குறையும் தான். அண்மையில் தமிழக அரசின் தொடக்கக்கல்வித்துறை வெளியிட்ட புள்ளிவிவர அறிக்கை ஒன்றின்படி 3,800 தொடக்கப்பள்ளிகளில் 5 வகுப்புகளைக் கையாள்வதற்கு தலா ஓர் ஆசிரியர் மட்டுமே உள்ளனர். மீதமுள்ள 25,618 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 2.5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். 8-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு 2 முதல் 3 ஆசிரியர்களை மட்டும் வைத்துக்கொண்டு எவ்வாறு தரமான கல்வியை வழங்க முடியும்?

    மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்க தமிழக அரசின் சார்பில் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், அவை மட்டுமே போதாது. அரசு பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலமே மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த முடியும். அதைக் கருத்தில் கொண்டு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மட்டுமின்றி, வகுப்புக்கு ஓர் ஆசிரியர் வீதம் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ஆசிரியர்கள் நியமனத்தை ஓர் இயக்கமாக கருதி மேற்கொள்ள தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விவசாயிகள் வியர்வை சிந்தி சாகுபடி செய்த பயிர்கள் யாருக்கும் பயனின்றி அழிக்கப்படுவது வேதனையளிக்கிறது.
    • கடந்த சில நாட்களாக நெல்லை சந்தையில் ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.2 என்ற மிகக்குறைந்த விலைக்கே கொள்முதல் செய்யப்படுகிறது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வெண்டைக்காய், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு சந்தைகளில் உரிய விலை கிடைக்காததால் சாலைகளில் கொட்டி அழிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் வியர்வை சிந்தி சாகுபடி செய்த பயிர்கள் யாருக்கும் பயனின்றி அழிக்கப்படுவது வேதனையளிக்கிறது.

    கடந்த சில நாட்களாக நெல்லை சந்தையில் ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.2 என்ற மிகக்குறைந்த விலைக்கே கொள்முதல் செய்யப்படுகிறது. அதனால் அதிர்ச்சியடைந்த உழவர்கள் சந்தைக்கு கொண்டு வந்த பல்லாயிரம் கிலோ வெண்டைக்காய்களை சாலையில் கொட்டி அழித்திருக்கின்றனர்.

    கொள்முதல் விலை வீழ்ச்சியால் உழவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க காய்கறிகள்-பழங்களுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயிக்கவும், அவற்றை கூட்டுறவு அமைப்புகள் மூலம் அரசே கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கூடுதலாக வேளாண் விளைபொருட்கள் அதிகமாக விளையும் காலங்களில் அவற்றை சேமித்து வைப்பதற்காக குளிர்பதனக் கிடங்குகளை அமைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தேர்வர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, விடைக்குறிப்புகளில் தேர்வர்கள் சுட்டிக்காட்டிய பிழைகள் அனைத்தும் கல்வியாளர்களைக் கொண்டு சரிபார்க்கப்பட வேண்டும்.
    • சரியான விடைக் குறிப்புகளை வெளியிட்டு, அதனடிப்படையில் தான் முதல்நிலைத்தேர்வின் விடைத்தாள்கள் திருத்தப்பட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையம், டி.என்.பி.எஸ்.சி, நடத்திய குரூப் 1 பணிகளுக்கான முதல்நிலை தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அவற்றில் பல விடைகள் தவறாக உள்ளன. முதல் தொகுதி போட்டித் தேர்வுகளில் குளறுபடிகள் நிகழ்ந்திருப்பதும், முதன்மை தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவோர் விகிதம் குறைக்கப்பட்டிருப்பதும் நியாயமற்றவையாகும்.

    தமிழ்நாட்டில் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கு தமிழில் மூல வினாக்கள் தயாரிக்கப்பட்டு, ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்படுவது தான் நியாயம். அதற்கு மாறாக ஆங்கிலத்தில் வினாக்களை தயாரித்து, அதை தமிழில் தவறாக மொழி பெயர்த்து விட்டு, அதன் பாதிப்புகளை தேர்வர்கள் தான் அனுபவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிப்பது தமிழ் வழியில் படித்து போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

    எனவே, தேர்வர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, விடைக்குறிப்புகளில் தேர்வர்கள் சுட்டிக்காட்டிய பிழைகள் அனைத்தும் கல்வியாளர்களைக் கொண்டு சரிபார்க்கப்பட வேண்டும்; சரியான விடைக் குறிப்புகளை வெளியிட்டு, அதனடிப்படையில் தான் முதல்நிலைத்தேர்வின் விடைத்தாள்கள் திருத்தப்பட வேண்டும். முதல்நிலைத் தேர்வை எழுதியவர்களில் இருந்து 1:50 என்ற விகிதத்தில் முதன்மைத் தேர்வுக்கு தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இப்போதும் நிலுவையில் உள்ளது.
    • விசாரணை முடியும் வரை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடக முதல்-அமைச்சர் பசவராஜ் பொம்மை டெல்லியில் நேற்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு தேவையான சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதிகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

    கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், அதையொட்டி அரசியல் லாபம் தேடும் நோக்குடன் கர்நாடக முதல்-அமைச்சர் பசவராஜ் பொம்மை விடுத்துள்ள கோரிக்கை சட்ட விரோதமானது.

    தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இப்போதும் நிலுவையில் உள்ளது. விசாரணை முடியும் வரை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வர இருக்கும் நிலையில், காவிரி ஆணையக் கூட்டத்தில் இனி எந்த காலத்திலும் மேகதாது அணை குறித்து விவாதிக்கக் கூடாது என ஆணையிட வேண்டும் என்று கோரி கடந்த 21-ந்தேதி தமிழக அரசு மனுத்தாக்கல் செய்திருக்கிறது.

    எனவே, மத்திய அரசே நினைத்தாலும் மேகதாது அணைக்கு அனுமதி அளிக்க முடியாது. இத்தகைய சூழலில் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு அனுமதி கோரியிருப்பது அரசியல் லாபம் தேடும் நாடகம் என்பதை தவிர வேறில்லை.

    அதே நேரத்தில் கர்நாடகத்தை இப்போது ஆளும் கட்சி, அதன் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள மேகதாது அணையை தான் முக்கிய கருவியாக நம்பிக் கொண்டிருக்கிறது.

    அதனால், விதிமுறைகள், மரபுகள் ஆகியவற்றை புறந்தள்ளிவிட்டு, மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக மத்திய அரசு எந்த முடிவை வேண்டுமானாலும் எடுக்கலாம்.

    எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். எத்தகைய நிலையிலும், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதியளிக்கக் கூடாது என்று மத்திய அரசிடம் தமிழகம் வலியுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாணவர்கள் தான் நாட்டின் எதிர்காலத் தூண்கள் ஆவர்.
    • மாணவர்களின் எதிர்காலம் கருதி அவர்களை நல்வழிப்படுத்துவதற்கு என்னென்ன நடவடிக்கைகள் தேவையோ, அவை அனைத்தையும் வழங்கப்பட வேண்டும். 

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை அசோக் நகரில் உள்ள மத்திய அரசு பள்ளியில் அண்மையில் புதுச்சேரியை சேர்ந்த மாணவர் ஒருவர் பத்தாம் வகுப்பில் புதிதாக சேர்ந்தார். அதே வகுப்பில் பயிலும் மாணவர்கள் 12 பேர் ஒன்றாக சேர்ந்து அந்த மாணவனை வன்கேலி செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    ஒன்றரை மாதங்களுக்கு மேலாக நீடித்த வன்கேலி பற்றி பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த மற்ற மாணவர்கள், பாதிக்கப்பட்ட மாணவனை பாலியல் ரீதியாகவும் வன்கொடுமை செய்துள்ளனர்.

    அசோக் நகர் பள்ளியில் மாணவருக்கு ஒன்றரை மாதங்களாக தொடர்ந்து இழைக்கப்பட்ட கொடுமை ஆசிரியர்களுக்கு தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. தொடக்கத்திலேயே இந்த சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டிருந்தால் மாணவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை தடுத்திருக்கலாம். ஆனால், அதை செய்ய மத்திய அரசு பள்ளி நிர்வாகம் தவறிவிட்டது.

    மாணவர்கள் தான் நாட்டின் எதிர்காலத் தூண்கள் ஆவர். அதற்கான பாதையிலிருந்து அவர்கள் திசை மாறாமல் காக்க அனைத்து பள்ளிகளிலும், அனைத்து வகுப்புகளிலும் நீதிபோதனை வகுப்புகள் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

    இவை அனைத்திற்கும் மேலாக, மாணவர்களின் எதிர்காலம் கருதி அவர்களை நல்வழிப்படுத்துவதற்கு என்னென்ன நடவடிக்கைகள் தேவையோ, அவை அனைத்தையும் வழங்கப்பட வேண்டும். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • என்.எல்.சி நிறுவனம் நிலத்தடி நீர்வளத்தையும், சுற்றுச்சூழலையும் சூறையாடிக் கொண்டிருக்கிறது.
    • சைமாவின் சாயக்கழிவு ஆலைக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பரங்கிப்பேட்டை சைமா சாயக்கழிவு ஆலை அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தால், அது மிகப்பெரிய சுற்றுச்சூழல் சீர்கேடாக அமையும். அதனால் நிலத்தடி நீர்மட்டம் மிக மோசமாக பாதிக்கப்படும்.

    மற்றொருபுறம், முழுமையாக சுத்திகரிக்கப்படாத ஒரு கோடி லிட்டர் சாயக்கழிவு நீர் தினமும் கடலில் கலக்கவிடப்பட்டால் மீன்வளம் பாதிக்கப்படும். நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் கடல்நீர் உட்புகுந்து 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்படும். மீன்வளம் குறைவதால் ஏராளமான மீனவ கிராமங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும்.

    ஒருபுறம் என்.எல்.சி நிறுவனம் நிலத்தடி நீர்வளத்தையும், சுற்றுச்சூழலையும் சூறையாடிக் கொண்டிருக்கிறது. மற்றொருபுறம் கடலூர் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள வேதி ஆலைகள் அவற்றின் நச்சுக்கழிவுகளை வெளியேற்றி சுற்றுச்சூழலையும், இயற்கை வளத்தையும் சிதைத்துக் கொண்டிருக்கின்றன.

    இன்னொருபுறம் சாயக்கழிவு ஆலை கடல் வளத்தையும், நிலத்தடி நீர்வளத்தையும் சுரண்டுவதற்கு அனுமதிக்கப்பட்டால் கடலூர் மாவட்டம் பாலைவனமாகி விடும். அப்படி ஒரு நிலை ஏற்படுவதற்கு அரசே துணை போகக்கூடாது.

    எனவே, பரங்கிப்பேட்டை பகுதியில் சாயக்கழிவு ஆலை அமைப்பதற்கான சைமா அமைப்பின் முயற்சிகளுக்கு தமிழக அரசு எந்த வகையிலும் ஆதரவளிக்கக்கூடாது. மாறாக, சைமாவின் சாயக்கழிவு ஆலைக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பழைய ஓய்வூதியத் திட்டம் சாத்தியமானது தான் என்பது பல்வேறு மாநிலங்களில் அத்திட்டம் செயல்படுத்தப்பட்டதிலிருந்தே உறுதியாகியுள்ளது.
    • பழைய ஓய்வூதியத் திட்டத்தை தாமதப்படுத்தாமல், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளின் மூலம் உடனடியாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பஞ்சாப் மாநிலத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் பழைய ஓய்வூதியத்தை செயல்படுத்தும் மாநிலங்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ள நிலையில், இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்க வேண்டிய தமிழ்நாடு அதற்கான நடவடிக்கைகளை எடுக்காதது வருத்தமளிக்கிறது.

    ராஜஸ்தான், சத்தீஸ்கர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு முன்பாகவே தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து பரிந்துரைக்க 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ந்தேதி மூத்த அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு அதன் அறிக்கையை 27.11.2018 அன்று அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அளித்தது. ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    பழைய ஓய்வூதியத் திட்டம் சாத்தியமானது தான் என்பது பல்வேறு மாநிலங்களில் அத்திட்டம் செயல்படுத்தப்பட்டதிலிருந்தே உறுதியாகியுள்ளது. எனவே, இனியும் ஏதேனும் காரணங்களைக் கூறி பழைய ஓய்வூதியத் திட்டத்தை தாமதப்படுத்தாமல், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளின் மூலம் உடனடியாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • புதுவை அரசின் ஏ, பி பிரிவு பணிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது பெரும் சமூக அநீதி.
    • வாக்களித்த மக்களை ஏமாற்ற நினைக்கக் கூடாது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசின் ஏ, பி பிரிவு பணிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது பெரும் சமூக அநீதி. இது தொடர்பான புதுவை மக்களின் உணர்வை பாட்டாளி மக்கள் கட்சி அறவழிப் போராட்டத்தின் மூலம் அரசுக்கு உணர்த்தியிருக்கிறது.

    புதுவை மக்களின் உணர்வுகளை அம்மாநில அரசு உணர வேண்டும்; மதிக்க வேண்டும். புதுவையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து நிலைகளிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தான் முழுமையான சமூகநீதி. வாக்களித்த மக்களை ஏமாற்ற நினைக்கக் கூடாது.

    பா.ம.க.வின் சமூக நீதிக்கான போராட்டம் தொடக்கமாக இருக்க வேண்டுமா.... நிறைவாக இருக்க வேண்டுமா? என்பதை புதுவை அரசு தான் முடிவு செய்ய வேண்டும். அனைத்து நிலைகளிலும் எம்.பி.சி இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய அரசு தவறினால் நானே களமிறங்கி போராடுவேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • முதற்கட்டமாக அறிவிக்கப்பட்ட 58 மருத்துவக் கல்லூரிகளிலும், இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்ட 24 மருத்துவக் கல்லூரிகளிலும் தமிழகத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி கூட கிடைக்கவில்லை.
    • கடந்த முறை ஒதுக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளை குறித்த காலத்தில் கட்டமைத்து வகுப்புகளைத் தொடங்கியதும் தமிழ்நாடு தான்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவில் மருத்துவக் கல்வி வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கத்துடன், நாடு முழுவதும் மேலும் 100 மருத்துவக் கல்லூரிகளை மாநில அரசுகளுடன் இணைந்து அமைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. அத்துடன் மத்திய அரசு நிதியுதவியுடன் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 157 மருத்துவக் கல்லூரிகளில் செவிலியர் கல்லூரிகளையும் தொடங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் நிதியுதவியுடன் இதுவரை 157 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு குறைந்தது 16 மருத்துவக் கல்லூரிகளாவது கிடைத்திருக்க வேண்டும். ஆனால், 11 மருத்துவக் கல்லூரிகள் மட்டும் தான் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

    முதற்கட்டமாக அறிவிக்கப்பட்ட 58 மருத்துவக் கல்லூரிகளிலும், இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்ட 24 மருத்துவக் கல்லூரிகளிலும் தமிழகத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி கூட கிடைக்கவில்லை. மூன்றாவது கட்டமாக அறிவிக்கப்பட்ட 75 மருத்துவக் கல்லூரிகளில் தமிழகத்திற்கு 15 கல்லூரிகளை ஒதுக்க வேண்டும் என்று 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நான் வலியுறுத்தினேன். அதையடுத்து முந்தைய அ.தி.மு.க. அரசு மேற்கொண்ட முயற்சியால் தமிழகத்திற்கு 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் கிடைத்தன. ஆனால், அனைத்து மாவட்டங்களிலும் ஓர் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற இலக்கை எட்டுவதற்கு அது போதுமானதல்ல. அதற்கு இன்னும் 6 மருத்துவக் கல்லூரிகள் தேவை.

    தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில், அவற்றைத் தொடங்க 6 கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று தி.மு.க. அரசின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டாலும் கூட, அனைத்து கல்லூரிகளும் ஒதுக்கப்பட்டு விட்டதால், அதற்கு வாய்ப்பில்லை என மத்திய அரசு கூறி விட்டது.

    இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் உயர்கல்வி கற்பது தமிழ்நாட்டில் தான்; அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் 12-ம் வகுப்புத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதும் தமிழகத்தில் தான்; அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் மருத்துவம் பயில விரும்புவதும் தமிழகத்தில் தான்; கடந்த முறை ஒதுக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளை குறித்த காலத்தில் கட்டமைத்து வகுப்புகளைத் தொடங்கியதும் தமிழ்நாடு தான். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, புதிய மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை பெறும் தகுதி தமிழ்நாட்டுக்கு உண்டு.

    எனவே, மத்திய அரசின் நிதியுதவியுடன் புதிதாக அமைக்கப்படவுள்ள 100 மருத்துவக் கல்லூரிகளில், இதுவரை மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படாத மாவட்டங்களுக்கு 6, கடலூர் மாவட்டத்திற்கு ஒன்று என மொத்தம் 7 மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு இப்போதிலிருந்தே மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • காவிரி பாசன மாவட்டங்களிலும், பிற மாவட்டங்களிலும் 40 சதவீதத்துக்கும் குறைவான விவசாயிகள் மட்டும் தான் சம்பா பயிருக்கு காப்பீடு செய்துள்ளனர்.
    • சம்பா பயிர்க்காப்பீட்டுக்கான காலக்கெடுவை இரு வாரங்களுக்கு, அதாவது நவம்பர் மாத இறுதி வரை நீட்டிக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் பிரதமர் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான காலக்கெடு நாளையுடன் நிறைவடைவதாக தமிழக வேளாண் துறை அறிவித்திருக்கிறது. காப்பீடு செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் போதுமானது அல்ல. தமிழ்நாட்டில் சம்பா நடவு மற்றும் விதைப்புப் பணிகள் இப்போது தான் தீவிரம் அடைந்து வருகின்றன. பருவமழை காரணமாக பல இடங்களில் நடவுப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. சம்பா நடவுப் பணிகள் முடிவடைவதற்கு முன்பாகவே காப்பீட்டுக்காக அவகாசத்தை முடித்துக் கொள்வது சமவாய்ப்பு ஆகாது.

    காவிரி பாசன மாவட்டங்களிலும், பிற மாவட்டங்களிலும் 40 சதவீதத்துக்கும் குறைவான விவசாயிகள் மட்டும் தான் சம்பா பயிருக்கு காப்பீடு செய்துள்ளனர். கால அவகாசம் நீட்டிக்கப்படா விட்டால் 60 சதவீதத்துக்கும் கூடுதலான விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு மறுக்கப்படும். இது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும். வடகிழக்கு பருவமழையால் விவசாயிகள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்கால பாதிப்புகளை சமாளிக்க பயிர்க்காப்பீடு அவசியம் ஆகும். இதைக் கருத்தில் கொண்டு சம்பா பயிர்க்காப்பீட்டுக்கான காலக்கெடுவை இரு வாரங்களுக்கு, அதாவது நவம்பர் மாத இறுதி வரை நீட்டிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    • குழந்தைகள் தான் பல தருணங்களில் நமக்கு பெற்றோர்கள். அவர்கள் தான் மகிழ்ச்சியின் ஊற்றுகள்.
    • குழந்தைகள் தான் வாழும் தெய்வங்கள். கள்ளங்கபடமற்ற உள்ளங்களுக்கு சொந்தக்காரர்கள்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    "குழந்தைகள் தான் பல தருணங்களில் நமக்கு பெற்றோர்கள். அவர்கள் தான் மகிழ்ச்சியின் ஊற்றுகள். அவர்களின் தழுவல்கள் தான் நமது மனக்காயங்களை போக்கும் மருந்துகள். என்னைச் சுற்றி குழந்தைகள் இருந்தால் நானே குழந்தையாகி விடுவேன். அவர்களை இந்த நாளில் மட்டுமின்றி எந்நாளும் கொண்டாடுவோம்" என்று கூறியுள்ளார்.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள குழந்தைகள் தின வாழ்த்து செய்தியில், "குழந்தைகள் மீது பேரன்பு காட்டிய பெருந்தகை ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று குழந்தைகள் நாள் ஆகும். குழந்தைகள் தான் வாழும் தெய்வங்கள். கள்ளங்கபடமற்ற உள்ளங்களுக்கு சொந்தக்காரர்கள். இன்றும், என்றும் அவர்களை போற்றுவதுடன், அவர்களைப் போல உளத்தூய்மையுடனும், கவலையின்றியும் வாழ முயல்வோம்" என்று கூறியுள்ளார்.

    ×