search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 212048"

    • குழந்தைகள் தான் பல தருணங்களில் நமக்கு பெற்றோர்கள். அவர்கள் தான் மகிழ்ச்சியின் ஊற்றுகள்.
    • குழந்தைகளின் தழுவல்கள் தான் நமது மனக்காயங்களை போக்கும் மருந்துகள்.

    சென்னை :

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    "குழந்தைகள் தான் பல தருணங்களில் நமக்கு பெற்றோர்கள். அவர்கள் தான் மகிழ்ச்சியின் ஊற்றுகள். அவர்களின் தழுவல்கள் தான் நமது மனக்காயங்களை போக்கும் மருந்துகள். என்னைச் சுற்றி குழந்தைகள் இருந்தால் நானே குழந்தையாகி விடுவேன். அவர்களை இந்த நாளில் மட்டுமின்றி எந்நாளும் கொண்டாடுவோம்" என்று கூறியுள்ளார்.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள குழந்தைகள் தின வாழ்த்து செய்தியில், "குழந்தைகள் மீது பேரன்பு காட்டிய பெருந்தகை ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று குழந்தைகள் நாள் ஆகும். குழந்தைகள் தான் வாழும் தெய்வங்கள். கள்ளங்கபடமற்ற உள்ளங்களுக்கு சொந்தக்காரர்கள். இன்றும், என்றும் அவர்களை போற்றுவதுடன், அவர்களைப் போல உளத்தூய்மையுடனும், கவலையின்றியும் வாழ முயல்வோம்" என்று கூறியுள்ளார்.

    • ஜி.கே.மணிக்கு நேற்று முன்தினம் திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.
    • ஜி.கே.மணி சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    சேலம்:

    பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக ஜி.கே.மணி பல ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜி.கே மணி பா.ம.க. கவுரவ தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது தொகுதியான பென்னாகரத்திற்கு அடிக்கடி சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்து நிவர்த்தி செய்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதை அடுத்து அவர் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    ஜி.கே.மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதை கேள்விப்பட்டு, அருள் எம்.எல்.ஏ அவரிடம் நலம் விசாரித்தார். அதே போல கட்சி நிர்வாகிகளும் அவரிடம் உடல் நலம் குறித்து கேட்டு அறிந்து வருகின்றனர். இதற்கு இடையே தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். மேலும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அவரிடம் நலம் விசாரித்தார்.

    • தஞ்சம் தேடி வெளியேறியவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவது அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமையாக அமைந்து விடும்.
    • ஈழத்தமிழர்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டியது ஐ.நா.வின் கடமை.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    நடுக்கடலில் கப்பல் விபத்தில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருந்தபோது சிங்கப்பூர் அரசால் மீட்கப்பட்டு, வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 306 ஈழத்தமிழர்களை மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது மனிதநேயமற்ற செயல்.

    தஞ்சம் தேடி வெளியேறியவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவது அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமையாக அமைந்து விடும். ஈழத்தமிழர்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டியது ஐ.நா.வின் கடமை. 306 ஈழத்தமிழர்களுக்கும் அவர்கள் விரும்பும் நாட்டில் தஞ்சம் பெற்றுத் தர ஐ.நா. அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சிங்களப் படையினரால் கடந்த 27-ந்தேதி கைது செய்யப்பட்ட 7 மீனவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.
    • தமிழக மீனவர்களை இனி கைது செய்யவோ, தாக்கவோ கூடாது என்று இலங்கை அரசை மத்திய அரசு கடுமையாக எச்சரிக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது. அவர்களின் இரு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. சிங்களப் படையினரின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.

    சிங்களப் படையினரால் கடந்த 27-ந்தேதி கைது செய்யப்பட்ட 7 மீனவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. 20-ந்தேதி கைது செய்யப்பட்டு இரு நாட்கள் முன் விடுவிக்கப்பட்ட 3 மீனவர்கள் இன்னும் சொந்த ஊர் திரும்பவில்லை. அதற்குள்ளாக அடுத்த அத்துமீறல் நடந்திருக்கிறது.

    மீனவர்கள் கைது செய்யப்பட்டதை தமிழக அரசும், பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளும் கண்டித்து வருகின்றன. ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டமும் நடத்தியுள்ளனர். அதற்குப் பிறகும் தொடரும் சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு இந்திய அரசு எப்போது முடிவு கட்டப் போகிறது?

    இப்போது கைது செய்யப்பட்ட 15 மீனவர்களையும், ஏற்கனவே சிறைபட்ட 7 பேரையும் உடனடியாக மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்களை இனி கைது செய்யவோ, தாக்கவோ கூடாது என்று இலங்கை அரசை மத்திய அரசு கடுமையாக எச்சரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பெட்ரோல் விற்பனையில் கூடுதல் லாபம் லிட்டருக்கு 6 ரூபாயைத் தாண்டி விட்டது;
    • டீசல் விற்பனையில் இழப்பு லிட்டருக்கு 5 ரூபாய்க்கும் கீழாக குறைந்து விட்டது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகளை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் மறுத்து வருகின்றன.

    சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக சமையல் எரிவாயு உற்பத்திச் செலவும் பெருமளவில் குறைந்துள்ளது. அதன்படி வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 6 மாதங்களில் ரூ.615 குறைத்துள்ளன. ஆனால், வீட்டுப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை ஒரு பைசா கூட குறைக்கப்படவில்லை. மாறாக, மே, ஜூலை காலத்தில் இந்த வகை சமையல் எரிவாயு விலை ரூ.103 உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த பாகுபாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது.

    சர்வதேச சந்தையில் இனிவரும் காலங்களில் கச்சா எண்ணெய் விலைகள் தொடர்ந்து வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் விற்பனையில் கூடுதல் லாபம் லிட்டருக்கு 6 ரூபாயைத் தாண்டி விட்டது; டீசல் விற்பனையில் இழப்பு லிட்டருக்கு 5 ரூபாய்க்கும் கீழாக குறைந்து விட்டது. சமையல் எரிவாயு விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ரூ.22,000 கோடி மானியம் கொடுத்து மத்திய அரசு ஈடு செய்து விட்ட நிலையில், இப்போது எரிவாயு விற்பனையில் ஓரளவு லாபம் கிடைக்கத் தொடங்கியுள்ளது. ஒட்டு மொத்தமாக எரிபொருள் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு லாபம் கிடைக்கும் நிலையில் அதன் பயன்களை வாடிக்கையாளர்களுக்கும் பகிர்ந்தளிக்க முன்வர வேண்டும்.

    விலைவாசி உயர்வால் இந்திய மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வரும் நிலையில், அவர்களின் துயரத்தைப் போக்க வேண்டியது எண்ணெய் நிறுவனங்களின் கடமையாகும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை குறைப்பதன் மூலம் அக்கடமையை எண்ணெய் நிறுவனங்கள் நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழ்நாட்டில் தற்போது தற்காலிக ஊழியர்கள் பணியாற்றும் பணியிடங்களுக்கு இணையான நிரந்தர பணியிடங்கள் இல்லை.
    • அரசாணை எண் 131-ன்படி அவர்கள் தற்காலிக பணியாளர்களாகவே நீடிக்க முடியும்; பணி நிலைப்பு வழங்க முடியாது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்கள் 6 பேரை பணி நிலைப்பு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.

    தற்காலிக பணியாளர்களை பணி நிலைப்பு செய்ய தமிழக அரசு மறுத்த நிலையில், அதை நிராகரித்து அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சமூக நீதி வழங்கியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

    தமிழ்நாட்டில் தற்போது தற்காலிக ஊழியர்கள் பணியாற்றும் பணியிடங்களுக்கு இணையான நிரந்தர பணியிடங்கள் இல்லை. அதனால், அரசாணை எண் 131-ன்படி அவர்கள் தற்காலிக பணியாளர்களாகவே நீடிக்க முடியும்; பணி நிலைப்பு வழங்க முடியாது. அதனால் தற்காலிக ஊழியராக சேர்ந்த ஒருவர் 35 ஆண்டுகள் பணியாற்றினா லும் அதே நிலையில் தான் ஓய்வு பெற வேண்டும்; அவருக்கு ஓய்வுக் கால பயன்கள் உள்ளிட்ட எந்த உரிமையும் கிடைக்காது. இதைவிட மோசமான சமூக அநீதி இருக்க முடியாது.

    எனவே, அரசாணை எண் 131-ல் உள்ள நிபந்த னைகளை தளர்த்தி, சென்னை உயர்நீதிமன்றம் காட்டிய கருணையுடன், பத்தாண்டுகள் பணியாற்றிய தற்காலிக பணியாளர்கள் அனைவருக்கும், அவர்கள் எந்த தேதியில் பத்தாண்டு களை நிறைவு செய் தார்களோ, அந்த நாளில் இருந்து அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அறிவியல் வளர்ச்சியும், தொழில்நுட்பமும் உழவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும்.
    • கடுகு உள்ளிட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட எந்த பயிரும் உழவர்களுக்கு நன்மை செய்யாது; தீமை தான் ஏற்படுத்தும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு பயிரை வணிக நோக்கில் பயிரிட அனுமதிப்பதற்கு முன்னோட்டமாக, அதன் விதைகளை உற்பத்தி செய்ய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு அனுமதி அளித்திருக்கிறது. சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்தால், இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு பயிரின் வணிக நோக்கிலான சாகுபடி அடுத்த இரு ஆண்டுகளில் தொடங்கி விடும். இது ஆபத்தானது.

    மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதை உற்பத்தியும், விதை உற்பத்தியின் போது நடத்தப்படும் கள ஆய்வுகளும் திட்டமிட்டபடி நடைபெற்றால், அடுத்த 2 ஆண்டுகளில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு வணிக அடிப்படையில் சாகுபடி செய்யப்பட்டு, சந்தைக்கு வந்து விடும். அது நிகழ்ந்தால் இந்தியாவில் உணவுப்பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்படக்கூடும்.

    அறிவியல் வளர்ச்சியும், தொழில்நுட்பமும் உழவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். கடுகு உள்ளிட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட எந்த பயிரும் உழவர்களுக்கு நன்மை செய்யாது; தீமை தான் ஏற்படுத்தும். எனவே, மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு வகையின் விதை உற்பத்திக்கு மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு அளித்துள்ள அனுமதிக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தீப ஒளி, பொங்கல் போன்ற திருவிழாக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட வேண்டுமானால் அந்த காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும்.
    • அடுத்தக்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தீப ஒளி திருநாளுக்கு முந்தைய நாளில் ரூ.259 கோடிக்கு மது விற்பனையாகியிருக்கிறது. தீபஒளி நாளன்று ரூ.300 கோடிக்கும் கூடுதலாக மது விற்பனை செய்யப்படக்கூடும் என்று டாஸ்மாக் தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    கடந்த ஆண்டு தீபஒளி திருநாளுக்கு முதல் நாளில் ரூ.205 கோடிக்கும், தீப ஒளி நாளில் ரூ. 225 கோடிக்கும் மது விற்பனையான நிலையில், அதை விட இந்த ஆண்டு அதிகமாக மது விற்பனையாகியிருக்கிறது. மது விற்பனை அதிகரித்திருப்பது எந்த வகையிலும் சாதனையல்ல.... அவமானம். இரு நாட்களில் மதுவுக்காக செலவிடப்பட்ட சுமார் ரூ.600 கோடி ஆக்கப்பூர்வமாக செலவிடப்பட்டிருந்தால், லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்களின் குழந்தைகளுக்கு புத்தாடைகளும், இனிப்புகளும் கிடைத்திருக்கும். லட்சக்கணக்கான குடும்பங்களின் மகிழ்ச்சியை மது பறித்திருப்பது வேதனையானது.

    தீப ஒளி, பொங்கல் போன்ற திருவிழாக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட வேண்டுமானால் அந்த காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும். அடுத்தக்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்தியக் கடற்படையினரின் துப்பாக்கிச் சூடு கண்டிக்கத்தக்கது.
    • காயமடைந்த மீனவர் வீரவேலின் வாழ்வாதார பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு அவருக்கு மத்திய-மாநில அரசுகள் ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    கோடியக்கரை அருகே வங்கக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் தவறுதலாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் வீரவேல் என்ற மீனவர் படுகாயம் அடைந்திருக்கிறார். இந்தியக் கடற்படையினரின் துப்பாக்கிச் சூடு கண்டிக்கத்தக்கது.

    மீனவர்களின் படகை நிறுத்தும்படி கடற்படையினர் விளக்குகள் மூலம் சைகை காட்டியதாகவும், அதன்பிறகும் சம்பந்தப்பட்ட படகு நிற்காததால் தான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கடற்படை தரப்பில் கூறப்படுகிறது. கடற்படையினரின் இந்த விளக்கம் ஏற்க முடியாதது. காயமடைந்த மீனவர் வீரவேலின் வாழ்வாதார பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு அவருக்கு மத்திய-மாநில அரசுகள் ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கைதாகியுள்ள தமிழர்கள் குற்றவாளிகள் அல்ல அவர்களை பாதிக்கப்பட்டவர்களாகவே பார்க்க வேண்டும்.
    • பணம், உழைப்பு, நிம்மதி, எதிர்காலம் உள்ளிட்ட அனைத்தையும் இழந்து நிற்கும் அவர்களை ரூ.43,500 அபராதம் செலுத்தும்படி தாய்லாந்து அரசு கட்டாயப்படுத்துவது நியாயமல்ல.

    சென்னை:

    இந்தியாவில் இருந்து தமிழர்கள் உள்பட பலர் தாய்லாந்துக்கு வேலை வாய்ப்பு நிறுவனங்கள் மூலம் வேலைக்கு சென்றனர். அங்கு அவர்களை மோசடி கும்பல் மியான்மாருக்கு கடத்தி சென்று சட்டவிரோத செயலில் மிரட்டி ஈடுபட வைத்தது.

    இது குறித்து தகவல் வெளியானதையடுத்து மோசடி கும்பலிடம் சிக்கி உள்ளவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் சிலர் மீட்கப்பட்டு நாடு திரும்பினர்.

    இந்த நிலையில் மோசடி கும்பலுக்கு மியான்மர் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து 8 தமிழர்கள் உள்பட சிலரை மோசடி கும்பல் துப்பாக்கி முனையில் மியான்மரில் இருந்து தாய்லாந்துக்கு படகு மூலம் கடத்தி சென்றுள்ளது. இது தொடர்பாக வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.

    இதற்கிடையே முறையான விசா இல்லாததால் தமிழர்களை தாய்லாந்து போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியானது.

    இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    மியான்மரில் சட்ட விரோத கும்பலிடம் இருந்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீண்ட தமிழகத்தைச் சேர்ந்த 8 பேரும், கேரளத்தைச் சேர்ந்த ஒருவரும் தாய்லாந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. கைதாகியுள்ள தமிழர்கள் எந்த குற்றமும் செய்யவில்லை. அவர்களின் விசா காலாவதியாகிவிட்டது என்பது தான் அவர்கள் மீதான குற்றச்சாட்டு. குறுகிய கால விசாவில் சென்றவர்கள் சட்டவிரோத கும்பலிடம் சிக்கிக் கொண்டதால் தான் விசா காலத்தை அவர்களால் நீட்டிக்க முடியவில்லை.

    கைதாகியுள்ள தமிழர்கள் குற்றவாளிகள் அல்ல அவர்களை பாதிக்கப்பட்டவர்களாகவே பார்க்க வேண்டும். பணம், உழைப்பு, நிம்மதி, எதிர்காலம் உள்ளிட்ட அனைத்தையும் இழந்து நிற்கும் அவர்களை ரூ.43,500 அபராதம் செலுத்தும்படி தாய்லாந்து அரசு கட்டாயப்படுத்துவது நியாயமல்ல.

    சட்டவிரோத கும்பலிடம் சிக்கிய அவர்களின் நிலை தெரியாமல் தவிக்கும் குடும்பத்தினரின் மன உளைச்சலை மேலும் அதிகரிக்கக் கூடாது. மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தில் தலையிட்டு தாய்லாந்தில் சிறை பிடிக்கப்பட்டுள்ள 8 தமிழர்கள் உள்ளிட்ட 9 பேரையும் உடனடியாக மீட்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பழங்குடியின சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை என்பதற்காக இனியும் ஒரு தற்கொலை நிகழக்கூடாது.
    • பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்குவதற்கான நடைமுறைகளை எளிமையும், செம்மையும் படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டரில் பதிவில் கூறியிருப்பதாவது:-

    கொண்டாரெட்டி, மலைக்குறவர் ஆகிய இரு சாதிகளும் பழங்குடியினர் பட்டியலில் முறையே 12, 23 ஆகிய இடங்களில் உள்ளன. விண்ணப்பித்த ஒரு மாதத்தில் சாதி சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என விதி உள்ள நிலையில், சாதி சான்றிதழ் மறுக்கப்படுவது தான் தற்கொலைகளுக்கு காரணம் ஆகும்.

    பழங்குடியின சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை என்பதற்காக இனியும் ஒரு தற்கொலை நிகழக்கூடாது. இதைக் கருத்தில் கொண்டு பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்குவதற்கான நடைமுறைகளை எளிமையும், செம்மையும் படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அறிவியலுக்கும், பகுத்தறிவுக்கும் ஒவ்வாத அனைத்தும் மூட நம்பிக்கைகள் தான்.
    • மூட நம்பிக்கைகளால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை மக்களும், பெண்களும் தான்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கேரள மாநிலம் எலந்தூர் கிராமத்தில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா என்ற பெண் உட்பட இரு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன.

    அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ந்து விட்ட இந்த காலத்தில், இந்த கொடுமை அரங்கேற்றப்பட்டிருப்பதை பார்க்கும் போது மனித குலம் எங்கே சென்று கொண்டிருக்கிறது? என்ற அச்சமும், கவலையும் ஏற்படுகிறது.

    கேரளத்தை கடந்து நரபலி உள்ளிட்ட மூட நம்பிக்கைகள் அதிகம் நிகழும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக திகழ்கிறது. கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தஞ்சாவூர் மல்லிப்பட்டினத்தில் தாத்தாவின் உடல்நிலை சரியாக வேண்டும் என்பதற்காக 6 மாத பெண் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து நரபலி கொடுத்த கொடுமை நடந்தது. நரபலி மட்டுமே மூட நம்பிக்கை அல்ல. பில்லி சூனியம் வைத்தல், பேய் ஓட்டுதல் போன்ற செயல்களும் அந்த வகையை சேர்ந்தவை தான்.

    அறிவியலுக்கும், பகுத்தறிவுக்கும் ஒவ்வாத அனைத்தும் மூட நம்பிக்கைகள் தான். மூட நம்பிக்கைகளால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை மக்களும், பெண்களும் தான். சமூக வளர்ச்சிக்கு எந்த வகையிலும் பயனளிக்காத, பிற்போக்குத்தனத்தை திணிப்பதற்கு மட்டுமே பயன்படும் மூட நம்பிக்கை தமிழ்நாட்டில் கண்டிப்பாக ஒழிக்கப்பட வேண்டும்.

    அதற்காக தமிழ்நாட்டில் மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை வரும் 17-ந் தேதி தொடங்கவுள்ள சட்டப் பேரவை கூட்டத்தில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்; அதற்கு கால அவகாசம் இல்லை என்றால், கூட்டத்தொடருக்கு பிறகு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும். மூட நம்பிக்கையை நாடு தழுவிய அளவிலும் கட்டுப்படுத்த வேண்டிய தேவை இருப்பதால் மத்திய அரசும் மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×