search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 212048"

    • மத்திய அரசு அதிகாரிகளுடன் பேச தமிழக அரசு அதிகாரிகள் குழு விரைவில் தில்லி செல்லும் என்று உணவு அமைச்சர் அறிவித்தும் கூட அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
    • மற்றொருபக்கம் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்ய முடியாததால் பல ஊர்களில் அடிமாட்டு விலைக்கு நெல்லை விற்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி பாசன மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக விற்பனைக்காக கொள்முதல் நிலையங்களுக்கு உழவர்கள் கொண்டு வந்துள்ள நெல் மணிகள் நனைந்து ஈரமாகியுள்ளன. அதனால், அனுமதிக்கப்பட்ட அளவை விட ஈரப்பதம் அதிகரித்திருப்பதால், அரும்பாடுபட்டு விளைவித்த நெல்லை, தேவைக்கு ஏற்ப விற்பனை செய்ய முடியாத நிலைக்கு உழவர்கள் தள்ளப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.

    தீபஒளி திருநாளுக்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ளன. அதற்குள்ளாக நெல் மூட்டைகளை அவர்கள் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்தால் மட்டும் தான் அவர்களால் தீபஒளிக்கான தேவைகளை நிறைவேற்றி கொண்டாட முடியும். ஆனால், ஈரப்பதத்தின் அளவை அதிகரித்து நெல்லை கொள்முதல் செய்ய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படுவதாக தெரியவில்லை. இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகளுடன் பேச தமிழக அரசு அதிகாரிகள் குழு விரைவில் தில்லி செல்லும் என்று உணவு அமைச்சர் அறிவித்தும் கூட அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    மற்றொருபக்கம் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்ய முடியாததால் பல ஊர்களில் அடிமாட்டு விலைக்கு நெல்லை விற்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த விஷயத்தில் தாமதிக்கப்படும் ஒவ்வொரு மணி நேரமும் மிக நீண்ட காலமாகும். இந்த அவசரத்தையும், உழவர்களின் நலனையும் புரிந்து கொண்டு, மத்திய அரசின் அனுமதியை விரைவாகப் பெற்று ஈரப்பதம் அதிகம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மருத்துவக் கல்வி, பொறியியல் படிப்பு, கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைகளில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு இல்லை.
    • கடந்த 10 மாதங்களில் அறிவிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளிலும் வன்னியர் இடஒதுக்கீடு இல்லை என்ற உங்களின் கவலைக்குரல்கள் என் காதுகளை எட்டாமல் இல்லை.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் கல்வியும், வேலைவாய்ப்பும் மறுக்கப்பட்டு, சமுதாய படிநிலையின் அடித்தட்டில் தள்ளப்பட்ட பாட்டாளி மக்கள், தங்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளைக் கேட்டு போராடியதற்காக காவல்துறையினரால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டதன் 35-வது நினைவு நாள் நாளை.

    இந்தியாவின் சமூகநீதி வரலாற்றில் ஈடு இணையற்ற தியாகம் செய்த, காவல்துறையினரின் துப்பாக்கி குண்டுகளை துணிச்சலுடன் மார்பில் தாங்கிய இடஒதுக்கீட்டுப் போராட்ட தியாகிகள் 21 பேருக்கும் நான் எனது வீரவணக்கங்களை செலுத்துகிறேன்.

    2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கொண்டு வந்து நிறைவேற்றியது.

    அதன்பின் ஆட்சிக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அந்த இடஒதுக்கீட்டை நடைமுறைக்கு கொண்டு வந்தது.

    ஆனால் 50 அமைப்புகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. நீதிமன்றம் வழக்கை விசாரித்து வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கியது செல்லாது என்று தீர்ப்பளித்தது.

    வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நானே மேல்முறையீடு செய்தேன். தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வன்னியர் ஒட ஒதுக்கீட்டுக்கு மீண்டும் உயிர்கொடுக்க போராடியது.

    வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க எந்தவித தடையும் இல்லை; அதற்கான சட்டத்தை நிறைவேற்றலாம் என்று உச்சநீதிமன்றம் பச்சைக்கொடி காட்டி விட்டது.

    உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து ஐந்தரை மாதங்கள் கடந்து விட்டன. மருத்துவக் கல்வி, பொறியியல் படிப்பு, கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைகளில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு இல்லை. கடந்த 10 மாதங்களில் அறிவிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளிலும் வன்னியர் இடஒதுக்கீடு இல்லை என்ற உங்களின் கவலைக்குரல்கள் என் காதுகளை எட்டாமல் இல்லை.

    கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னிய சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும் என்ற வேட்கையின் காரணமாகத் தான் 21 தியாகிகள் ஒரே போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்தனர். அவர்கள் சிந்திய ரத்தம் ஒருபோதும் வீண் போகாது. வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை எப்பாடுபட்டாவது வெகுவிரைவில் வென்றெடுத்தே தீருவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடப்பாண்டில் முதலாம் ஆண்டில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்களை சேர்க்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
    • உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதத்தில் 51.40 விழுக்காட்டுடன் தமிழகம் முதலிடத்தில் இருப்பது உண்மை.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் நேரடியாக 163 கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்ட 41 கல்லூரிகள் என மொத்தம் 204 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தொடக்கம் முதலே அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 163 கல்லூரிகளில் மட்டும் 5 லட்சத்திற்கும் கூடுதலான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

    நடப்பாண்டில் முதலாம் ஆண்டில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்களை சேர்க்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 10,079 ஆகும். இவற்றில் சுமார் 7,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இது ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களில் ஏறத்தாழ 70 சதவீதம் ஆகும்.

    ஒப்புதல் அளிக்கப்பட்ட உதவிப் பேராசிரியர் பணி இடங்களிலேயே கிட்டத்தட்ட 70 சதவீத இடங்கள் காலியாக இருக்கும் போது, அரசு கலைக் கல்லூரிகளின் மாணவர்களுக்கு தரமான கல்வியை எவ்வாறு வழங்க முடியும்?

    உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதத்தில் 51.40 விழுக்காட்டுடன் தமிழகம் முதலிடத்தில் இருப்பது உண்மை. ஆனால், இந்தப் பெருமை மட்டுமே போதாது. அரசு கல்லூரிகளின் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட வேண்டும்.

    இதற்கு வசதியாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை-அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணி இடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும். அவ்வாறு நிரப்பும் போது 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தகுதியுள்ள கவுரவ விரிவுரையாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பல்லாயிரம் முறை நான் கூறியவாறு நீட் விலக்கு தான் மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க ஒரே தீர்வு ஆகும்.
    • நீட் சட்டத்திற்கு விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நீட் தேர்வில் மூன்றாவது முறையாக தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம் காரணமாக தென்காசி மாவட்டம் குலசேகரமங்கலத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது குடும்பத்திற்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். மாணவி ராஜலட்சுமி ஏற்கனவே இரு முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். இப்போது மூன்றாவது முறை. இந்த முறையும் அவரால் போதிய மதிப்பெண்கள் எடுக்க முடியாது என்றால், கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு எவ்வளவு கடினமானது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

    நடப்பாண்டில் சென்னை சூளைமேடு தனுஷ், ஓசூர் முரளிகிருஷ்ணா, அரியலூர் நிஷாந்தி ஆகிய மூவர் ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டனர். ராஜலட்சுமி நான்காவது உயிரிழப்பு. வரும் 7-ந் தேதி நீட் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், இனியும் தற்கொலைகள் நிகழாமல் அரசு தடுக்க வேண்டும்.

    ஏற்கனவே பல்லாயிரம் முறை நான் கூறியவாறு நீட் விலக்கு தான் மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க ஒரே தீர்வு ஆகும். இதை புரிந்து கொண்டு நீட் சட்டத்திற்கு விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும். மத்திய அரசு இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கிரீமிலேயர் வரம்பை கணக்கிடுவதில் ஊதியத்தையும் சேர்க்கலாம் என்ற யோசனை எழுப்பப்பட்டபோது, அதை எதிர்த்து தமிழகத்திலிருந்து முதல் குரலை எழுப்பியது நான் தான்.
    • மாநில அளவிலும், தேசிய அளவிலும் பல்வேறு அமைப்புகள் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்ததால், வல்லுனர் குழு பரிந்துரை மீது முடிவெடுப்பதை மத்திய அரசு முதலில் கிடப்பில் போட்டது; பின்னர் நிராகரித்து விட்டது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தேசிய அளவில் மத்திய அரசு கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ள நிலையில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரீமிலேயர் வருமான வரம்பு இன்று வரை உயர்த்தப்படவில்லை.

    பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் உயர்கல்வி வாய்ப்புகளை உறுதி செய்வதற்கான இந்த நடவடிக்கையை மத்திய அரசு தாமதப்படுத்துவது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

    கிரீமிலேயர் வரம்பை கணக்கிடுவதில் ஊதியத்தையும் சேர்க்கலாம் என்ற யோசனை எழுப்பப்பட்டபோது, அதை எதிர்த்து தமிழகத்திலிருந்து முதல் குரலை எழுப்பியது நான் தான்.

    அதன்பின் மாநில அளவிலும், தேசிய அளவிலும் பல்வேறு அமைப்புகள் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்ததால், வல்லுனர் குழு பரிந்துரை மீது முடிவெடுப்பதை மத்திய அரசு முதலில் கிடப்பில் போட்டது; பின்னர் நிராகரித்து விட்டது.

    அதனால், கிரீமிலேயர் வருமான வரம்பை இப்போது உயர்த்துவதற்கு எந்தத் தடையும் கிடையாது. எனவே, 2020-ம் ஆண்டில் கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்படாத நிலையில், அடுத்த ஆண்டுக்கான தவணையையும் சேர்த்து கிரீமிலேயர் வரம்பை ரூ.15 லட்சம் ஆக உயர்த்த வேண்டும்.

    அதன்மூலம் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சமூகநீதியை மத்திய அரசு காக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழக அரசு ஐ.டி.ஐ.களிலும் இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது.
    • டி.என்.எஸ்.வி.டி. வழங்கும் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றவர்களையும் டி.என்.பி.எஸ்.சி அனுமதிக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள கள அளவையர் உள்ளிட்ட பணிகளுக்கு 1089 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையில் தேசிய தொழிற்கல்வி மையம் வழங்கிய ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றவர்கள் மட்டும் தான் விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    டி.என்.எஸ்.வி.டி. சான்றிதழை மத்திய அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகம் உள்ளிட்ட பல தேசிய, சர்வதேச அமைப்புகள் அங்கீகரித்துள்ளன. தமிழக அரசு ஐ.டி.ஐ.களிலும் இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது.

    எனவே கள அளவையர் உள்ளிட்ட பணிகளுக்கு டி.என்.எஸ்.வி.டி. வழங்கும் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றவர்களையும் டி.என்.பி.எஸ்.சி அனுமதிக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க அவகாசம் முடிந்து விட்ட நிலையில், திருத்தப்பட்ட ஆள் தேர்வு அறிவிக்கையை டி.என்.பி.எஸ்.சி வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மாணவச் செல்வங்களுக்கு கற்பிக்கும் கவுரவ விரிவுரையாளர்கள், தங்களின் கோரிக்கைகளுக்காக சாலையில் இறங்கி போராடும் நிலையை அரசே உருவாக்கக்கூடாது.
    • இனியும் தாமதிக்காமல், கவுரவ விரிவுரையாளர்களில் தகுதியுடைய அனைவரையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஒவ்வொரு ஆண்டும் எழுப்பப்பட்டு வருகிறது.

    தமிழ்நாட்டில் 108 நேரடி அரசு கல்லூரிகளில் 4083 கவுரவ விரிவுரையாளர்களும், பல்கலைக் கழகங்களுடன் இணைக்கப்பட்டுள்ள 41 அரசு கல்லூரிகளில் 1500 கவுரவ விரிவுரையாளர்களும் பணியாற்றி வருகின்றனர். மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் அவர்களின் நிலை கவுரவமாக இல்லை; மாறாக, மிகவும் பரிதாபமாக உள்ளது.

    ரூ.10,000 ஊதியத்தில் பத்தாண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்த அவர்களுக்கு படிப்படியாக ஊதியம் உயர்த்தப்பட்டு, நடப்பாண்டு முதல் தான் ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. அதிலும் கூட, மே மாதம் தவிர்த்து ஆண்டுக்கு 11 மாதங்கள் மட்டும் தான் ஊதியம் வழங்கப்படுகிறது.

    புதிய அரசு பதவியேற்ற பிறகு கவுரவ விரிவுரையாளர்கள் பணி வரன்முறை செய்யப்படுவர் என்று அமைச்சர் பொன்முடி வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் பல மாதங்களாகியும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

    மாணவச் செல்வங்களுக்கு கற்பிக்கும் கவுரவ விரிவுரையாளர்கள், தங்களின் கோரிக்கைகளுக்காக சாலையில் இறங்கி போராடும் நிலையை அரசே உருவாக்கக்கூடாது.

    தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பல்லாயிரக்கணக்கான காலியிடங்கள் உள்ளன. எனவே, இனியும் தாமதிக்காமல், கவுரவ விரிவுரையாளர்களில் தகுதியுடைய அனைவரையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதன் மூலம் அவர்களுக்கு நீண்ட காலமாக தாமதிக்கப்பட்டு வரும் நீதியை, இனியும் தாமதிக்காமல் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் காற்றாலை மின்னுற்பத்தி குறையத் தொடங்கியுள்ள நிலையில், மின்சார சந்தையில் மின்சாரத்தை வாங்க முடியாவிட்டால் தமிழகத்தில் கடுமையான மின்தட்டுப்பாடு ஏற்படக்கூடும்.
    • பொதுமக்களின் வாழ்க்கையை மட்டுமின்றி, தொழில் உற்பத்தி மற்றும் வணிகத்தையும் இது பாதிக்கக்கூடும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    மின்சார சந்தையில் வாங்கிய மின்சாரத்திற்காக மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.926 கோடியை செலுத்தத் தவறியதால், மின்சந்தையில் இருந்து மின்சாரம் வாங்கவும், விற்கவும் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது பெரும் பின்னடைவு ஆகும்.

    தமிழகத்தின் தேவையில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே தமிழக அரசால் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மத்திய அரசு, தனியார் நிறுவனங்களிடம் வாங்குவது தவிர, மின் சந்தையிலிருந்து மின்சாரத்தை வாங்கி தான், தமிழ்நாட்டின் மின்சார தேவையை மின்வாரியம் சமாளித்து வருகிறது.

    தமிழகத்தில் காற்றாலை மின்னுற்பத்தி குறையத் தொடங்கியுள்ள நிலையில், மின்சார சந்தையில் மின்சாரத்தை வாங்க முடியாவிட்டால் தமிழகத்தில் கடுமையான மின்தட்டுப்பாடு ஏற்படக்கூடும். பொதுமக்களின் வாழ்க்கையை மட்டுமின்றி, தொழில் உற்பத்தி மற்றும் வணிகத்தையும் இது பாதிக்கக்கூடும்.

    மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கான நிலுவையை மின்வாரியம் உடனடியாக செலுத்தி தடையை விலக்கச் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் மின்தடை ஏற்படாமல் இருப்பதை தமிழக அரசும், மின்சார வாரியமும் உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இலங்கை அரசின் செயல் மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம்.
    • இலங்கையின் சீன பாசத்திற்கு இது தான் எடுத்துக்காட்டு.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவின் அழுத்தத்தைத் தொடர்ந்து சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி மறுத்த இலங்கை அரசு, இப்போது அதன் நிலையை மாற்றிக் கொண்டு நாளை மறுநாள் சீன உளவுக்கப்பல் அம்பாந்தோட்டை துறை முகத்திற்கு வர அனுமதித்திருக்கிறது. இலங்கை அரசின் செயல் மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம்.

    சீன கப்பல் இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப் பட்டால், தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் உளவு பார்க்கப்படும். இந்திய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் என எச்சரித்த பிறகும் சீன கப்பலுக்கு இலங்கை அனுமதி அளித்துள்ளது. இலங்கையின் சீன பாசத்திற்கு இது தான் எடுத்துக்காட்டு.

    இலங்கையின் வேண்டு கோளை ஏற்று அந்நாட்டிற்கு டோர்னியர் 228 வகை போர் விமானத்தை இந்தியா நாளை இலவசமாக வழங்குகிறது. இப்படியாக ராணுவ உதவி, பொருளாதார உதவி அனைத்தையும் பெற்றுக் கொண்டு தான் இந்தியாவுக்கு இலங்கை துரோகம் செய்கிறது. இது தான் அதன் குணம்.

    இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் வெளியுறவுக் கொள்கையை வகுக்க வேண்டும். இந்தியாவின் பாதுகாப்பு கருதி, இலங்கைக்கு இலவசமாக வழங்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப் பெறுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பொதுத்துறை உர நிறுவனங்களை தனியார்மயமாக்குவது, அவற்றை வாங்கும் பெரு நிறுவனங்களைத் தவிர வேறு யாருக்கும் பயனளிக்காது.
    • சென்னை உர நிறுவனம் உள்ளிட்ட 3 பொதுத்துறை உர நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மணலியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சென்னை உர நிறுவனம் உள்ளிட்ட 3 பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்படவிருப்பதாகவும் தெரியவருகிறது. இந்தியாவின் வேளாண் வளர்ச்சிக்கு துணை புரியும் உர நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைப்பதை ஏற்க முடியாது.

    இந்தியாவில் அனைத்து வகையான உரங்களுக்கும் இப்போது மானியம் வழங்கப்பட்டு வருகிறது. உரங்கள் மீது விலைக் கட்டுப்பாடும் உள்ளது. காலப்போக்கில் மத்திய அரசின் மானியம் ரத்து செய்யப்பட்டால், உர நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்களாக இருந்தால் மட்டும் தான் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரங்களை வழங்க முடியும்; தனியாரிடமிருந்தால் உரங்களின் விலை கடுமையாக உயர்த்தப்படும் என்பதால், தனியார்மயமாக்கல் உழவர்களை கடுமையாக பாதிக்கும். 3 பொதுத்துறை உர நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் உரிமைகளும் காலப்போக்கில் பறிக்கப்படக்கூடும்.

    பொதுத்துறை உர நிறுவனங்களை தனியார்மயமாக்குவது, அவற்றை வாங்கும் பெரு நிறுவனங்களைத் தவிர வேறு யாருக்கும் பயனளிக்காது. இதைக் கருத்தில் கொண்டு சென்னை உர நிறுவனம் உள்ளிட்ட 3 பொதுத்துறை உர நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முடிவை மத்திய அரசு கை விட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சமூக நீதியில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழ்நாடு திகழ்கிறது.
    • இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45 ஆகவும் உயர்த்த தமிழ்நாடு அரசு உடனடியாக ஆணையிட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் மாவட்ட துணை ஆட்சியர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்கான வயது வரம்பு உயர்த்தப்பட வேண்டும் என்ற தேர்வர்களின் கோரிக்கை மீண்டும் நிராகரிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

    முதல் தொகுதி தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். தமிழக அரசும் அதையேற்று 2018-ஆம் ஆண்டில் 2 ஆண்டுகளும், 2021-ஆம் ஆண்டில் இரு ஆண்டுகளும் வயது வரம்பை உயர்த்தியுள்ளது. ஆனால், உயர்த்தப்பட்ட வயது வரம்புக்கும், தேர்வர்கள் கோரும் வயது வரம்புக்கும் இடையிலான வித்தியாசம் மலைக்கும், மடுவுக்கும் இடையிலானது ஆகும். இந்த இடைவெளியை குறைக்க வேண்டியது தமிழக அரசின் கடமையும், பொறுப்பும் ஆகும்.

    இந்தியாவில் 11 மாநிலங்களில் குரூப் 1 தேர்வுகளில் பங்கேற்பதற்கான வயது வரம்பு தமிழகத்தை விட அதிகம் ஆகும். தமிழ்நாட்டில் மட்டும் வயது வரம்பை உயர்த்த அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொடர்ந்து மறுத்து வருவது அநீதி.

    சமூக நீதியில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழ்நாடு திகழ்கிறது. அது முதல் தொகுதி தேர்வுக்கான வயது வரம்பிலும் எதிரொலிக்க வேண்டும். மாறாக, வயது வரம்பை கடைபிடிப்பதில் உறுதியைக் காட்டி, தேர்வர்களுக்கு வாய்ப்புகளை மறுக்கக் கூடாது. இதை உணர்ந்து தமிழ்நாட்டில் முதல் தொகுதி தேர்வுகளை எழுதுவதற்கான வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு 40 ஆகவும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45 ஆகவும் உயர்த்த தமிழ்நாடு அரசு உடனடியாக ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சொத்துகள் முடக்கப்படாத நிலையில் முதலீட்டாளர்களுக்கு அவர்களின் முதலீட்டை மீட்டெடுத்து வழங்குவதற்கான வாய்ப்புகளும் குறைவு ஆகும்.
    • பொதுமக்களிடம் வாங்கிக்குவித்த முதலீடுகள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் சென்னை, வேலூர், திருச்சி ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த 3 நிதி நிறுவனங்கள், அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி, மாநிலம் முழுவதும் 2 லட்சம் பேரிடமிருந்து ரூ.8,625 கோடி வசூலித்து மோசடி செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

    அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு மோசடி நிறுவனங்களிடம் மக்கள் மீண்டும் மீண்டும் ஏமாறுவதும், அத்தகைய மோசடி நிறுவனங்களை முளையிலேயே கிள்ளி எறிய காவல்துறை தவறுவதும் மிகுந்த கவலை அளிக்கின்றன.

    3 நிதி நிறுவனங்களும் மோசடி செய்த தொகையில் ௧௦ சதவீதம்கூட இன்னும் மீட்கப்படவில்லை; அவற்றின் சொத்துகளும் முடக்கப்படவில்லை. மோசடி நிறுவனங்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 420 போன்ற சாதாரண பிரிவுகளில் தான் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இதிலிருந்து அந்நிறுவன உரிமையாளர்கள் எளிதாக தப்பிவிடக்கூடும்.

    சொத்துகள் முடக்கப்படாத நிலையில் முதலீட்டாளர்களுக்கு அவர்களின் முதலீட்டை மீட்டெடுத்து வழங்குவதற்கான வாய்ப்புகளும் குறைவு ஆகும். மோசடி நிதி நிறுவனங்கள் மீது இன்னும் கடுமையான பிரிவுகளில் வழக்குகள் தொடரப்பட வேண்டும். தமிழ்நாட்டிலும், மற்ற மாநிலங்களிலும் மோசடி நிறுவனங்கள் குவித்துள்ள அனைத்து சொத்துகளும் முடக்கப்பட வேண்டும்.

    பொதுமக்களிடம் வாங்கிக்குவித்த முதலீடுகள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்காக அமலாக்கப்பிரிவின் மூலமும் விசாரணை நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×