search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொத்து"

    • சொத்து சம்பந்தமாக சகோதரர்கள் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
    • வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறியது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள புள்ளியப்பம்பாளையத்தை சேர்ந்த சகோதரர்கள் பாலசுப்ரமணியம், வேல்மணி.இருவருக்கும் இடையே சொத்து தகராறு இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று சொத்து சம்பந்தமாக இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறிய நிலையில் பாலசுப்பிரமணியத்தின் உதட்டை வேல்மணி கடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த அவர் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • பிரதமர் மோடியிடம் எந்த அசையா சொத்தும் இல்லை. வாகனமும் இல்லை.
    • கடன் பத்திரங்கள், பங்குகள், பரஸ்பர நிதியம் ஆகியவற்றில் எந்த முதலீடும் இல்லை.

    புதுடெல்லி :

    கடந்த மார்ச் 31-ந் தேதி வரையிலான கடந்த நிதி ஆண்டுக்கான பிரதமர் மோடியின் சொத்து விவரம், பிரதமர் அலுவலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முந்தைய ஆண்டை விட அவரது அசையும் சொத்துகள் ரூ.26 லட்சத்து 13 ஆயிரம் உயர்ந்துள்ளது. தற்போதைய சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 23 லட்சம். அவற்றில் பெரும்பாலானவை வங்கி டெபாசிட்கள் ஆகும்.

    கடந்த 2002-ம் ஆண்டு, குஜராத் மாநில முதல்-மந்திரியாக இருந்தபோது, காந்திநகரில் வேறு 3 பேருடன் சேர்ந்து ஒரு வீட்டு மனையை மோடி வாங்கி இருந்தார். அதில் 4 பேருக்கும் சமபங்கு உள்ளது. தனது ஒரே அசையும் சொத்தான அந்த நிலத்தில் தனது பங்கை அவர் நன்கொடையாக அளித்து விட்டார். அதனால் அவரிடம் எந்த அசையா சொத்தும் இல்லை. வாகனமும் இல்லை.

    கடன் பத்திரங்கள், பங்குகள், பரஸ்பர நிதியம் ஆகியவற்றில் எந்த முதலீடும் இல்லை. கைவசம் ரொக்கமாக ரூ.35 ஆயிரத்து 250 வைத்துள்ளார். அஞ்சலகத்தில் ரூ.9 லட்சத்து 5 ஆயிரம் மதிப்புள்ள தேசிய சேமிப்பு பத்திரங்களும், ரூ.1 லட்சத்து 89 ஆயிரம் மதிப்புள்ள எல்.ஐ.சி. பாலிசிகளும், ரூ.1 லட்சத்து 73 ஆயிரம் மதிப்புள்ள 4 தங்க மோதிரங்களும் வைத்துள்ளார்.

    ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தனக்கு ரூ.2 கோடியே 54 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துகளும், ரூ.2 கோடியே 97 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துகளும் இருப்பதாக கணக்கு சமர்ப்பித்துள்ளார்.

    • நாங்கள் 50 ஆண்டுகளாக விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் 4 மகள்கள் உள்ளனர்.
    • தான செட்டில்மெண்ட் என்ற பெயரில் என்னுடைய பட்டா நிலத்தை அவரது பெயரில் எழுதிக் கொண்டார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள ராயர் பாளையம் பகுதியை சேர்ந்த கூத்தன் மற்றும் அவரது மனைவி செல்லம்மாள் ஆகியோர் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் 50 ஆண்டுகளாக விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் 4 மகள்கள் உள்ளனர். எனது 2-வது மகன் வெங்கடேசன் எனக்கு உதவியாக விவசாயத்தை கவனித்து வந்தார்.

    இதற்கிடையே விவசாய செலவிற்கு கடன் பெறுவதற்காக நிலத்தை அடமானம் வைக்க வேண்டும் என்று என்னிடம் கூறி வெங்கடேஷ் கெங்கவல்லி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றார். பின்னர் தான செட்டில்மெண்ட் என்ற பெயரில் என்னுடைய பட்டா நிலத்தை அவரது பெயரில் எழுதிக் கொண்டார்.

    பின்னர் வெங்கடேசனும் அவரது மனைவியும் சேர்ந்து அனைத்து நிலங்களையும் அவர்கள் பெயரில் எழுதிக் கொண்டு எங்களை அடித்து வெளியேற்றி விட்டனர் .இதனால் நாங்கள் மூத்த மகன் ராமசாமி வீட்டில் வசித்து வருகிறோம். எனவே இந்த பத்திர பதிவை ரத்து செய்து எங்களுக்கு உதவ வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையால் பயனடைந்தவர்களில் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தகவல் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் உத்தரவின்படி சரக போலீஸ் டி.ஐ.ஜி. மயில்வாகனன் அறிவுறுத்தலின்பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்றுமுன் தினம் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக அதிரடி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மொத்த மாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்ததாக 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டு 16 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

    இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 49 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 85 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களிடம் இருந்த ரூ.6 லட்சத்து 60ஆயிரம் மதிப்பிலான 66 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும், கஞ்சா வியாபாரிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு நிதி சார்ந்த புலன் விசாரணை மேற்கொண்டு அவர்களின் வங்கி கணக்குகள் மற்றும் அதனால் பயன் அடையும் அவர்களது குடும்பத்தினரின் வங்கி கணக்குகள் என மொத்தம் 54 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, கடந்த காலங்களில் இதுபோன்று கஞ்சா மற்றும் போதைப்பொருள் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் அதனால் பயன் அடைந்த அவர்களது குடும்பத்தாரின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை முடக்கவும் தற்போது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த அதிரடி நடவடிக்கை தொடரும். கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்கள் மற்றும் பதுக்கி வைப்பவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் எனது பிரத்யேக செல்போன் எண்ணான 7603846847 மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை 04567-230759 ஆகிய தொலைபேசி எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் 15 கோடி ரூபாய் சொத்துக்காக கூலிப்படையினருடன் சேர்ந்து கணவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். #wifenkillsMan #Rs15crproperty
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் கல்யான் டவுன்ஷிப் பகுதியை சேர்ந்தவர் ஷங்கர் கைக்வாட்(44). இவரது மனைவி ஆஷா கைக்வாட்(40), தனது கணவரை கடந்த மே மாதம் 18-ம் தேதியில் இருந்து காணவில்லை என்று போலீசில் புகார் அளித்திருந்தார்.

    இதுதொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்த நிலையில் ஷங்கர் கைக்வாட் மாயமானதில் அவரது மனைவிக்கு தொடர்பு இருக்கலாம் என ஷங்கரின் உறவினர்கள் தெரிவித்தனர். போலீசார் இந்த கோணத்திலும் விசாரிக்க தொடங்கியபோது, ஆஷா கெய்க்வாட்டின் கைபேசி அழைப்புகளை ஆய்வு செய்தனர்.

    தனக்கு சொந்தமாக இருந்த ஏராளமான சொத்துகளை ஆஷாவின் பெயருக்கு ஷங்கர் ஏற்கனவே எழுதி வைத்திருந்தார். அவரிடம் இருந்த 15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தையும் தனது பெயருக்கு மாற்றித்தருமாறு ஆஷா வற்புறுத்தி வந்துள்ளார்.

    அது தந்தையின் மூலம் தனக்கு கிடைத்த சொத்து என்பதால் அதை ஆஷாவுக்கு எழுதித்தர ஷங்கர் மறுத்து விட்டதாக தெரிகிறது. எனவே, அந்த சொத்தினை அடைய ஆசைப்பட்ட ஆஷா, கூலிப்படையினரின் துணையுடன் கணவர் ஷங்கரை கொன்றுவிட திட்டம் தீட்டினார்.

    இதற்காக, கூலிப்படையை சேர்ந்த ஹிமான்ஷு துபே என்பவரை தொடர்புகொண்ட ஆஷா, கணவரை தீர்த்துக்கட்ட 30 லட்சம் ரூபாய் பேரம்பேசி, 4 லட்சம் ரூபாயை முன்பணமாக தந்தார்.

    கடந்த மே மாதம் 18-ம் தேதி கணவர் ஷங்கரை ஆட்டோ ரிக்‌ஷா மூலம் பாதல்பூர் பகுதிக்கு அழைத்துச் சென்று, குளிர் பாணத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார். ஷங்கர் சுயநினைவை இழக்க தொடங்கியவுடன், ஹிமான்ஷு துபே மற்றும் அவருடன் வந்த 4 பேர் உதவியுடன் ஷங்கரை இரும்புக் கம்பிகளால் தாக்கிக் கொன்ற ஆஷா, அவரது உடலை ஒதுக்குப்புறமான பகுதியில் தூக்கிவீசினார்.

    பிறகு, ஒன்றும் தெரியாததுபோல் கல்யான் டவுன் ஷிப் பகுதியில் உள்ள வீட்டுக்கு வந்துசேர்ந்த ஆஷா, தனது கணவர் காணாமல் போனதாக போலி நாடகமாடியும் போலீசில் புகாரும் அளித்த உண்மைகளை, ஆஷாவின் கைபேசி அழைப்புகள் மூலம் போலீசார் கண்டுபிடித்தனர்.

    இதைதொடர்ந்து, ஆஷா மற்றும் இந்த கொலையில் உடந்தையாக இருந்த ஹிமான்ஷு துபே ஆகியோரை கைது செய்து பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருக்கும் ஹிமான்ஷு துபேவின் கூட்டாளிகள் 4 பேரை தேடி வருகின்றனர். #wifenkillsMan #Rs15crproperty 
    ×