search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரவேற்கத்தக்கது"

    தூத்துக்குடி சம்பவம் குறித்து ரஜினி கூறியுள்ள துணிச்சலாக கருத்து வரவேற்கத்தக்கது என்று பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #rajinikanth #thoothukudiprotest #tamilisaisoundararajan
    கோவை:

    மத்திய அரசின் 4 ஆண்டு சாதனைகளை விளக்க மத்திய மந்திரிகள் நாடு முழுவதும் பயணம் மேற்கொள்கின்றனர். அதன் ஒரு பகுதியாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி ராஜ்வர்தன் ரத்தோர் இன்று கோவை வந்தார்.

    அவினாசி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று பேசுகிறார். இதில் பங்கேற்பதற்காக பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை வந்தார். அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசால் பல நல்ல திட்டங்கள் தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதை தமிழகம் முழுவதும் மத்திய மந்திரிகள் விளக்க இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை தமிழகத்தில் நேர்மறையான அரசியல் வர வேண்டும்.

    தூத்துக்குடி சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது. இதுகுறித்து எதிர்கருத்துகள் வந்தால் அதை தாங்கி கொள்ளாமல் மிக மோசமான விமர்சனம் செய்யும் சூழ்நிலை தமிழகத்தில் நிலவி வருகிறது.

    பொதுமக்கள் போராட்டத்தை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் அவர்களது போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி போராட்டத்தை திசைதிருப்பி வரம்பு மீறச் செய்து அதை அபாயக்கட்டத்தில் கொண்டு போய் விடுவதைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம்.

    போராட்டத்தின் போது சமூக விரோதிகள் கலந்திருக்கிறார்கள் என்ற பா.ஜ.க. மற்றும் ரஜினி சொல்லும் போது மற்ற கட்சிகள் ஏன் எதிர்த்து பாய்கிறார்கள் என்று தெரியவில்லை. நாங்கள் மக்களை கொச்சைப்படுத்துவதாக சொல்லி கொந்தளிக்கிறார்கள்.

    பஸ் மீது, கலெக்டர் அலுவலகம் மீது தீ வைத்தது மற்றும் ஆயுதம் ஏந்தி போராடியதெல்லாம் மக்கள் தானா? அப்படியென்றால் நீங்கள் தான் மக்களை கொச்சைப்படுத்துகிறீர்கள் என்று என்னால் சொல்ல முடியும். போராட்டம் மட்டுமே வாழ்க்கை என்று தி.மு.க. உள்ளிட்ட பிற கட்சிகள் பேசி வருகிறார்கள். இது தவறு.



    ஸ்டெர்லைட்டில் அபாயம் இருப்பதற்கு காரணம், 40 ஆயிரம் டன் காப்பர் உற்பத்தி செய்வதற்கு அனுமதி கொடுத்து விட்டு தி.மு.க. காங்கிரஸ் ஆட்சியின் போது ஸ்டெர்லைட் நிர்வாகம் பெற்ற ஊக்கம் தான். அதுதான் அவர்களை 4 லட்சம் டன் காப்பரை உற்பத்தி செய்ததன் விளைவு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இதை தி.மு.க. ஒப்புக்கொள்ள வேண்டும்.

    முதல்-அமைச்சர் சொன்னது போல தி.மு.க., காங்கிரஸ் ஆட்சியில் அவர்களுக்கு பல உதவிகள் கிடைத்தது உண்மை தான். அதை மறைக்க அவர்கள் பல போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    போராட்டம் மட்டுமே தமிழகத்தில் சோறு போடும் என எல்லா கட்சிகளும் சொல்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அமைதியாக வாழக்கூடிய உரிமை அனைவருக்கும் உண்டு. சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்யும் நாடகத்தை எல்லா கட்சிகளும் நடத்தினால் தமிழக மக்கள் அதை புறக்கணிப்பார்கள். மிக மோசமான முன் உதாரணத்தை தமிழக அரசியலில், சட்டமன்ற வரலாற்றில் ஸ்டாலின் படைத்து வருகிறார். இப்படி வெளிநடப்பு செய்தால் தமிழக மக்கள் நலன் புறக்கணிப்படுகிறது.

    ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 1996-ம் ஆண்டில் இருந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது போராட்டம் இந்த நிலைக்கு மாறியது சமூக விரோதிகளால் தான். தற்போது எனக்கு கடுமையாக விமர்சனங்கள் வருகிறது. தொலைபேசியில் மிரட்டல்கள் வருகின்றன.

    யாரெல்லாம் சமூக விரோதிகளை சொன்னால் கோபப்படுகிறார்களோ அவர்கள் எல்லாம் சமூக விரோதிகளை ஊக்குவிக்கிறார்கள். ரஜினி துணிச்சலாக ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார். அவரது கருத்து வரவேற்கத்தக்கது. உடனே அவர் பின்னால் பா.ஜ.க., அ.தி.மு.க. இருக்கிறது என்று சொல்லக் கூடாது. சினிமாவில் வேண்டும் என்றால் அவருக்கு டப்பிங் பேசலாம். உண்மையான அரசியலில் அப்படி இருக்க முடியாது.

    ஸ்டெர்லைட் ஆலை வருவதற்கு காரணம் தி.மு.க., காங்கிரஸ் தான். அதற்கு முழு பொறுப்பை அவர்கள் ஏற்க வேண்டும். காவிரி, ஸ்டெர்லைட் விவகாரம் முடிந்த பிறகு வேறு எந்த பிரச்சினையை தேடலாம் என்று எதிர்கட்சிகள் யோசிப்பார்கள். இதனால் தான் தமிழகத்தில் பல நிறுவனங்கள் மூடி இருக்கின்றன. இனிமேல் தான் தமிழகத்தில் வேலை வாய்ப்புகள் உருவாக வேண்டும்.

    விஞ்ஞான பொருளைக் கண்டுபிடிக்கக்கூடிய நியூட்ரினோ திட்டத்தை எதிர்க்கிறார்கள். கெயில் திட்டத்தை கேரள அரசு சிறப்பாக செயல்படுத்தி உள்ளது. தமிழகத்தை சுடுகாடாக மாற்றத்தான் பல போராட்டங்கள் இருக்கின்றன. ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக ப.சிதம்பரம் பல உதவிகளை செய்தார். மக்களுக்கு பாதிக்கப்படுகின்ற திட்டங்களை மத்திய அரசு ஒப்புக் கொள்ளாது.

    தமிழகத்தில் பா.ஜனதா வளர்ந்து விடும் என்பதால் சமூக வலைதளங்களில் மன உளைச்சலை ஏற்படுத்தும் விதமாக ஒரு பெண் தலைவர் என்று கூட பார்க்காமல் வரம்பு மீறி தரக் குறைவாக விமர்சனங்களை செய்கின்றனர்.

    இதை நாங்கள் யாரும் கண்டுகொள்ள மாட்டோம். எங்கள் வேலையை திறம்பட செய்வோம். என்னை பற்றி வரம்பு மீறி பேசினால் அதை மற்றவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #rajinikanth #thoothukudiprotest #tamilisaisoundararajan

    ×