search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எருமப்பட்டி"

    எருமப்பட்டி அருகே கோவில் திருவிழாவை நடத்த ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
    எருமப்பட்டி:

    எருமப்பட்டி அருகே கஸ்தூரிபட்டியில் பகவதியம்மன் கோவில் திருவிழா நடைபெறுகிறது. ஒரு தரப்பினர் மட்டும் தனியாக இந்த கோவிலை கட்டி தற்போது முதன்முதலாக திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதையொட்டி நேற்று காலை அவர்கள் மாவிளக்கு பூஜை, பூந்தேர் ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்தனர்.

    இதனிடையே அந்த கிராமத்தில் மற்றொரு தரப்பை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து, பூந்தேரை ஊர்வலமாக சாலைக்கு எடுத்து வர திடீரென எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

    இது குறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், சேந்தமங்கலம் தாசில்தார் பிரகாசம், எருமப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது திருவிழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்ற தரப்பை சேர்ந்த பொதுமக்கள் கூறும் போது, ‘ஊருக்கு சொந்தமான பொது கோவிலாக பாலாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானதாகும். அதை திறக்க விடாமல் தனியாக கோவில் கட்டி ஒரு தரப்பினர் மட்டும் திருவிழா நடத்து கிறார்கள். ஊருக்கு சொந்தமான கோவிலை திறந்து திருவிழா நடத்த வேண்டும். இந்த பொது கோவிலில் பிரச்சினை ஏற்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை. அதற்கு தீர்வு கண்டபின்பு இந்த கோவில் திருவிழாவை நடத்துவது குறித்து முடிவு செய்ய வேண்டும்’ என்றார்கள்.

    இது குறித்து இருதரப்பை சேர்ந்தவர்களிடமும் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாவிளக்கு மற்றும் பொங்கல் பூஜை படையல் போட்டு ஒரு தரப்பினர் வழிபாடு செய்து கொள்வது என்றும், தேர் கோவிலை மட்டும் சுற்றிவர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து கோவிலில் மாவிளக்கு பூஜை செய்யப்பட்டது. பின்னர் தேர்த்திருவிழா முடிந்தபிறகு பொது கோவில் திருவிழா பற்றி அனைவரும் கலந்து பேசி முடிவு செய்து கொள்ளுமாறு போலீசார் சமாதானம் செய்தனர்.

    இதையடுத்து பூந்தேர் வீதிஉலா நடைபெறாமல் கோவிலை சுற்றி மட்டும் கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 
    ×