என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுச்சூழல்"

    • தாஜ் மகாலை சுற்றிய பாதுகாக்கப்பட்ட தாஜ் ட்ரேபீசியம் மண்டலத்தில் 454 மரங்களை வெட்டினார்.
    • இதை எதிர்த்தே அவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    மரங்களை வெட்டுவது மனிதர்களைக் கொல்வதை விட மோசமானது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

    தாஜ் மகாலை சுற்றிய பாதுகாக்கப்பட்ட தாஜ் ட்ரேபீசியம் மண்டலத்தில் 454 மரங்களை வெட்டிய சிவசங்கர் அகர்வால் என்பவரின் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது. சுற்றுச்சூழல் ஒத்துழைப்பு ஆணையம் (CEC) சிவசங்கர் அகர்வால் வெட்டிய ஒவ்வொரு மரத்துக்கும் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க பரிந்துரைத்திருந்தது. இதை எதிர்த்தே அவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்நிலையில் மனு மீதான விசாரணையின்போது பேசிய நீதிபதிகள், சுற்றுச்சூழல் விஷயத்தில் கருணை காட்டக்கூடாது. அதிக எண்ணிக்கையிலான மரங்களை வெட்டுவது ஒரு மனிதனைக் கொல்வதை விட மோசமானது.

    அனுமதியின்றி வெட்டப்பட்ட 454 மரங்கள் வழங்கி வந்த பசுமையை மீண்டும் உருவாக்க குறைந்தபட்சம் 100 ஆண்டுகள் ஆகும் என்று கூறி, வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்துக்கும் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கும் CEC பரிந்துரையை உறுதி செய்து தீர்ப்பளித்தனர்.

    • முன்னாள் போலீஸ் அதிகாரி வால்டர் தேவாரம் கலந்து கொண்டு விருதினை வழங்கினார்.
    • 12 தன்னார்வளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் வெங்கடாம்பட்டி டிரஸ்ட் சார்பில் வால்டர் தேவாரம் விருது வழங்கும் நிகழ்சி வெங்கடாம்பட்டியில் நடைபெற்றது.

    முன்னாள் போலீஸ் அதிகாரி வால்டர் தேவாரம் கலந்து கொண்டு விருதினை வழங்கினார். இயற்கை விஞ்ஞானி விஜயலெட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் ஆலங்குளத்தில் செயல்பட்டு வரும் பூ உலகை காப்போம் மன்றம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மரக்கன்று நடுதல், பராமரித்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தல் போன்ற பணிகளை செய்து வருகிறார்கள். இவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக குழுவினருக்கு விருது வழங்கப்பட்டது.சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் பூ உலகை காப்போம் மன்ற தலைவர் ராஜா, அதியப்பன், முருகன், சிவா மற்றும் ஆலோசகர் இளங்கோ உட்பட 12 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

    விழா ஏற்பாடுகளை டிரஸ்ட் நிர்வாகி திருமுருகன் செய்திருந்தார்.

    • வாடகைக்கு எடுத்து கூட்ட நெரிசல் இல்லாமல் நகரில் வலம் வருவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
    • பொது போக்குவரத்தை ஊக்குவிப்பதன் மூலம் வாகன பயன்பாட்டால் ஏற்படும் கார்பன் வெளிப்பாட்டை குறைக்க திட்டம்.

    எகிப்து நாடு சுற்றுச்சூழல் மாசுவை கட்டுப்படுத்த சைக்கிள் பயணத்தை ஊக்குவிக்கும் முயற்சியாக கெய்ரோ நகர முக்கிய சாலைகளில் சைக்கிள் ஓட்டிகளுக்கு தனிப்பாதை அமைத்து கொடுத்துள்ளது.

    விருப்பம் உள்ளவர்கள் செல்போன் செயலி மூலம் சைக்கிளை வாடகைக்கு எடுத்து கூட்ட நெரிசல் இல்லாமல் நகரில் வலம் வருவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    மெட்ரோ ரெயில் சேவைகளை மேம்படுத்தி பொது போக்குவரத்தை ஊக்குவிப்பதன் மூலம் வாகன பயன்பாட்டால் ஏற்படும் கார்பன் வெளிப்பாட்டை குறைக்க எகிப்து அரசு திட்டமிட்டுள்ளது.

    • வெளிநாடுகளில் இருந்தும் 186 வகையான பறவைகள் வந்து செல்கின்றன.
    • 17 வது பறவைகள் சரணாலயமாக கடந்த ஏப்ரல் 11 ந் தேதி நஞ்சராயன் குளம் அறிவிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூா் நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயத்தில் வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவா் நிருபர்களிடம் கூறியதாவது :- திருப்பூா் மாநகரில் இருந்து 10 கிலோ மீட்டா் தொலைவில் 125 ஹெக்டா் பரப்பளவில் நஞ்சராயன் குளம் அமைந்துள்ளது. இந்த குளமானது எஸ்.பெரியபாளையம் மற்றும் நெருப்பெரிச்சல் கிராமங்களுக்கு இடையில் உள்ளது. இந்தக் குளத்துக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் 186 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. குளிா் காலங்களில் வெளிநாட்டுப் பறவைகளின் வாழ்விடமாகவும் உள்ளது.

    தமிழகத்தின் 17 வது பறவைகள் சரணாலயமாக கடந்த ஏப்ரல் 11 ந் தேதி நஞ்சராயன் குளம் அறிவிக்கப்பட்டது. இந்த சரணாலயம் அமைப்பதற்காக ரூ.7.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 5 ஆண்டுகளுக்குப் பணிகள் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விரிவான திட்ட அறிக்கையும் தயாா் செய்யப்பட்டுள்ளது. இந்த குளத்தை மேம்படுத்துவதற்காக திருப்பூரில் உள்ள தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் நிதி வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனா். இந்தக் குளம் சுற்றுச்சுழல் மையமாகவும், உதகையைப் போல தாவரவியல் பூங்கா அமைத்து சிறந்த பொழுதுபோக்கு இடமாகவும் மாற்றி அமைக்கப்படும். இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பறவைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்.

    நஞ்சராயன் குளத்துக்குச் சொந்தமான இடம் கடந்த ஆட்சியில் விற்பனை செய்யப்பட்டதா என்பது குறித்து தமிழக முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

    ஆய்வின்போது திருப்பூா் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினா் செல்வராஜ், கோவை மண்டல வனப் பாதுகாவலா் ராமசுப்பிரணியம், மாநகராட்சி மேயா் தினேஷ்குமாா், மாநகராட்சி ஆணையாளா் கிராந்திகுமாா் பாடி, சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    • இந்திய நாட்டில் முதன்முறையாக சுற்றுச்சூழலுடன் சேர்ந்து காலநிலை மாற்றத்திற்கும் ஒரு அமைச்சகத்தை உருவாக்கிய பெருமை நமது ஆட்சியையும் சேரும்.
    • மரங்களை எல்லாம் வெட்டுவதற்கு நீர்வளத் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்வதாக பல்வேறு தரப்புகளில் இருந்து செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.

    காங்கயம்:

    கீழ்பவானி வாய்க்கால் கரையில் உள்ள மரங்களை வெட்டுவது சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பேராபத்தை உருவாக்கும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சருக்கு தி.மு.க. சுற்றுச்சூழல் அணி கடிதம்‌ எழுதியுள்ளது.

    இது குறித்து தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேயசிவசேனாபதி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களின் வழியாக செல்லக்கூடிய கீழ்பவானி வாய்க்காலின் இரு கரைகளிலும் இலட்சக்கணக்கான 50 ஆண்டுகளாக வளர்ந்த பெரிய மரங்கள் இருப்பது அறிந்ததே. பல வருடங்களுக்கு முன்பு ஆய்வு செய்தபோது கூட அம்மரங்களைக் கண்டு ரசித்ததாக கோவையிலே விவசாயிகளிடம் பேசும் போது நீங்கள் கூறினீர்கள். இப்பொழுது இந்த மரங்களை எல்லாம் வெட்டுவதற்கு நீர்வளத் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்வதாக பல்வேறு தரப்புகளில் இருந்து செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. அப்படி வெட்டுவதற்கு உறுதியாக அனுமதிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன் தங்கள் கவனத்திற்கு இச்செய்தியை கொண்டு வருகிறோம்.

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் இருந்து பாசன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், சூழலியலாளர்கள் தொடர்ந்து இரண்டு நாட்களாக நேரிலும் அலைபேசியிலும் மின்னஞ்சல் மூலமும் செய்திகளை அனுப்பி வருகிறார்கள். காலநிலை மாற்றம் என்ற மிகப்பெரிய ஆபத்து மனித குலத்திற்கு இன்று அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு சுற்றுச்சூழலை காக்கும் பொருட்டு இந்திய நாட்டிலேயே தி.மு.க.வின் 18 வது அணியாக கழக சுற்றுச்சூழல் அணியை உருவாக்கியவர் தலைவர் மு.க.ஸ்டாலின்.

    அதேபோல 2021ம் வருடம் ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய நாட்டில் முதன்முறையாக சுற்றுச்சூழலுடன் சேர்ந்து காலநிலை மாற்றத்திற்கும் ஒரு அமைச்சகத்தை உருவாக்கிய பெருமை நமது ஆட்சியையும் சேரும். அதுபோக தமிழ்நாட்டின் பரப்பிலே 33 சதவிகிதம் வனப்பரப்பாக மாற்றியே ஆக வேண்டும் என்ற ஐக்கிய நாட்டின் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு முதல்வர் அயராது பாடுபட்டு வருகின்றார். இச்சூழலிலே வளர்ந்த 60 மற்றும் 70 வருடங்களாக இருக்கக்கூடிய மிகப் பெரிய மரங்களை வெட்டுவது சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பேராபத்தை உருவாக்கும். பல்லுயிர் தன்மை அழியும்.

    ஆதலால் அப்படி ஏதாவது ஒரு திட்டத்தை ஈரோடு பொதுப் பணித்துறை அதிகாரிகள் முன் வைத்தால் அதனை அமைச்சர் நிராகரித்து, இங்கே இருக்கக்கூடிய மரங்களையும், வாழ்வாதாரத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாத்திட வேண்டும். ஈரோடு, கரூர், திருப்பூர் பகுதி விவசாயிகளின் சார்பாகவும் பல லட்சம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் சார்பாகவும் கேட்டுக் கொள்கின்றேன் .இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 4 ஆயிரம் ஏக்கர் உளுந்து மற்றும் பச்சை பயறு பயிரிடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • பயறு வகை பயிர்களை பயிரிடுவதன் மூலம் மண்வளம்மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.

    வேதாரண்யம்:

    தலைஞாயிறு பகுதியில் நெல் அறுவடைக்குப்பின் உளுந்து, பயறு சாகுபடி செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என தலைஞாயிறு வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    5 ஆயிரம் ஏக்கர் இலக்கு தலைஞாயிறு வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் நெல் தரிசில் பயறு சாகுபடியை ஊக்கப்படுத்தும் திட்டத்தின் கீழ் 4 ஆயிரம் ஏக்கர் உளுந்து மற்றும் பச்சை பயறு பயிரிடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    உளுந்து மற்றும் பச்சைபயறு பயிரிடுவதற்கு தேவைப்படும் உயர் விளைச்சல் தரும் சான்று விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட கலவை ஆகியவை மானிய விலையில் கொத்தங்குடி, நீர்முளை, பனங்காடி, தலைஞாயிறு ஆகிய வேளாண்மை கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு, தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

    குறைந்த நாட்களில் அதிக மகசூல் விவசாயிகள் நெல் அறுவடைக்கு பின் பயறு வகை பயிர்களை பயிரிடுவதன் மூலம் மண்வளம்மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.

    இதை சாகுபடி செய்வதால் குறைந்த நாட்களில் விவசாயிகளுக்கு அதிக மகசூல் கிடைக்கிறது. தலைஞாயிறு பகுதியில் தற்போது நெல் அறுவடை பணிகள் நிறைவு பெறும் நிலையில், உளுந்து, பயறு சாகுபடி செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் அருகிலிருந்து விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவிற்கு நடைபெற உள்ளது.
    • வெற்றி பெறுபவர்களுக்கு பரிசும் மற்றும் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

    தஞ்சாவூா்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யூ) கும்பகோணம் மண்டலம் சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாத்திட வேண்டும்.

    பொது போக்குவரத்தை பலப்படுத்திட, விபத்தை தடுத்திட, பொதுத் துறையை பாதுகாத்திட வலியுறுத்தி வருகிற 12-ம் தேதி காலை 6 மணி அளவில் தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் அருகிலிருந்து விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவிற்கு நடைபெற உள்ளது. நுழைவு கட்டணம் ரூ. 200 மட்டும். முன் பதிவிற்கு நாளை (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும். நாளை மாலை 6 மணிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.

    போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசும் மற்றும் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

    மாரத்தானில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவ-மாணவிகள் மற்றும் ஆண்கள், பெண்கள் 9894377805, 7010411396 ஆகிய செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசார தொடக்க விழா நடந்தது.
    • உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை கடச்சனேந்தலில் பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கம் அறக்கட்டளை இணைந்து நடத்தும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் மதுரை கிழக்கு மண்டல மகளிரணி சார்பில், மனித உரிமை ஆர்வலரும், மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனத் தலைவருமான சென்னை காஜா தலைமையில் நடந்தது.

    மாவட்ட அமைப்பாளர் நந்தகுமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நித்யானந்தம், கிழக்கு மண்டல அமைப்பாளர் லூர்துராஜா முன்னிலை வகித்தனர். கிழக்கு மண்டல மகளிரணி அமைப்பாளர் தவமணி வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மதுரை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் குணசேகரன் பங்கேற்று விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தார். விழாவில் பொதுமக்களுக்கு மஞ்சள் துணிப்பையும், இனிப்பும் வழங்கப்பட்டது. இதில் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயத்தில் உலக சுற்றுச்சூழல் விழிப்புணா்வு முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிக்கண்ணா கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் செய்திருந்தாா்.

    திருப்பூர்:

    திருப்பூா் வனச் சரகம், சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் ஆகியவை சாா்பில் நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயத்தில் உலக சுற்றுச்சூழல் விழிப்புணா்வு முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நாட்டு நலப் பணித் திட்டம் அலகு- 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து திருப்பூா் வனச் சரக அலுவலா் சுரேஷ்கி ருஷ்ணா பேசியதாவது:-

    நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தை இப்பகுதியில் வசிக்கக்கூடிய ஒவ்வொரு வருக்கும் சொந்தமானதாக கருத வேண்டும். ஒருமுறை பயன்படு த்தப்பட்ட நெகிழிப்பையை சரணாலயத்துக்குள் போடக்கூடாது. நெகிழி பைகளால் பறவைகளுக்கு பெரும் ஆபத்து ஏற்படுவதுடன், உடல் நலத்துக்கும் கேடு விளைவிக்கும். சரணாலயத்து க்கு வரக்கூடிய பறவைகளைப் பாதுகாக்க வேண்டும், எந்த ஒரு தீங்கையும் விளைவிக்க க்கூடாது. இன்றைய காலகட்டத்தில் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பது மிகவும் அவசியமானது என்றாா். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிக்கண்ணா கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் செய்திருந்தாா்.

    • உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5-ந்தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
    • ஓடைகளை மாணவ-மாணவிகள் துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

    ஊட்டி,

    ஆண்டுதோறும் உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5-ந்தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ மையத்தில் சிறப்பு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதனை கமாண்டா் பிரிகேடியா் எஸ்.கே.யாதவ் தொடங்கி வைத்தாா்.இதில் ராணுவ வீரா்கள், பள்ளி மாணவ-மாணவிகள், தேசிய மாணவா் படை உள்பட பலர் கலந்து கொண்டனா். இதைத் தொடர்ந்து ராணுவ மையம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள போக்குவரத்து சாலைகள் மற்றும் ஓடைகளை மாணவ-மாணவிகள் துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டனா். இங்கு ஒருவார காலத்துக்கு சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெறும், அதன்பிறகு இந்த பகுதியில் சுமாா் 700 மரக்கன்றுகள் நட திட்டமிட்டு உள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
    • முடிவில் ஊராட்சி செயலாளர் ரெங்கராசு நன்றி கூறினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் கிராமத்தில் தேசிய தலித் கண்காணிப்பகம், புதுடெல்லி தலித் மனித உரிமைக்கான தேசிய அமைப்பு, மதுரை காஸ்கோ சேவை நிறுவனம் மற்றும் வெள்ளப்பள்ளம் ஊராட்சி மன்றம் ஆகியவை இணைந்து உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி நடந்தியது. ஊராட்சி தலைவர் துரைசாமி தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார்.

    முன்னதாக பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது, தனிப்பது, பேரிடருக்கான முன்னெச்சரிக்கை தயார்படுத்துவது மற்றும் அரசு செயல்படுத்தி வரும் சமூக பாதுகாப்பு செயல்பாடுகள் குறித்து மாநில அளவிலான பயிற்சியாளர் அன்னப்பூ ரணி, மாநில அளவிலான தேசிய கண்காணிப்பு ஒருங்கிணைப்பாளரும், காஸ்கோ நிறுவனருமான துரைபாண்டி ஆகியோர் பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாகை மாவட்ட தலித் கூட்டமைப்பு தலைவர் முருகேசன் செய்திருந்தார். முடிவில் ஊராட்சி செயலாளர் ரெங்கராசு நன்றி கூறினார்.

    • பிளாஸ்டிக் மாசுபாட்டை வெல்வோம் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக புறப்பட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் , பள்ளிக்கல்வித்துறை மற்றும் கவின்மிகு தஞ்சை இயக்கத்தின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று காலை தஞ்சாவூர் ரெயில் நிலையம் முன்பு பிளாஸ்டிக் மாசுபாட்டை வெல்வோம் என்பதனை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியை நடத்தியது. இப்பேரணியினை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் மாணவ- மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், மண்வளம் காப்போம், துணிப்பையை பயன்படுத்து வோம் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக புறப்பட்டனர்.

    இந்தப் பேரணி ஜூபிடர் தியேட்டர் முன்பு முடிவடைந்தது.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் விஜயபிரியா, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சித்ரா, தாசில்தார் சக்திவேல், மாநகர நல அலுவலர் சுபாஷ் காந்தி, கவின்மிகு தஞ்சை இயக்கம் தலைவர் டாக்டர் ராதிகா மைக்கேல், பொறியாளர் முத்துக்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×