என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சருமம்"
- கீரையை சமைத்து சாப்பிடுவதுபோல் ஜூஸாக தயாரித்தும் பருகலாம்.
- இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு கலந்த பானத்தை பெண்கள் பலரும் தவறாமல் பருகுவார்கள்.
அழகான, பளபளப்பான சருமத்தை விரும்பாதவர்கள் எவரும் இல்லை. சரும அழகை பேணுவதற்கு ரசாயன அழகு சாதன பொருட்களை பலரும் சார்ந்திருக்கிறார்கள். அவை எல்லோருடைய சருமத்திற்கும் ஒத்துக்கொள்வதில்லை.
சரும பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் காய்கறி, பழங்களின் சாறுகளை தொடர்ந்து பருகி வந்தால் நிவாரணம் பெறலாம். அவை இயற்கையாகவே சரும நலன் காக்க உதவுவதோடு பளபளப்பான, பளிச் தோற்றத்திற்கும் வித்திடும்.
ஒரு டம்ளர் பழ ஜூஸ் அல்லது காய்கறி சாறு சருமத்தில் என்ன மாற்றத்தை ஏற்படுத்திவிடப்போகிறது என்று யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா? உண்மை என்னவென்றால், பழங்கள் மற்றும் காய்கறிகள் இரண்டிலும் ஆன்டிஆக்சிடெண்டுகள் உள்ளன. அவை சருமத்திற்கு சேதம் விளைவிக்கும் ப்ரீ ரேடிக்கல்களை அகற்ற உதவும். வீட்டிலேயே எளிதாக தயாரித்து பருகிவிட முடியும்.
வெள்ளரிக்காய் சாறு சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும். பளபளப்பான தோற்ற பொலிவுக்கும் வித்திடும். அதில் உள்ளடங்கி இருக்கும் அஸ்கார்பிக் அமிலம் மற்றும் காபிக் அமிலம் சருமத்தில் நீர் தேங்கி நிற்பதை தடுக்கும்.
இதனால் முகம் வீங்கி இருப்பது தவிர்க்கப்பட்டு பொலிவுடன் காட்சி அளிக்கும்.
கீரையை சமைத்து சாப்பிடுவதுபோல் ஜூஸாக தயாரித்தும் பருகலாம். இதில் வைட்டமின் கே மற்றும் இரும்பு சத்து நிறைந்துள்ளது. இவை சரும அழகை மேம்படுத்தும். கீரை ஜூஸ் சுவையாக இருக்காது என்பதால் பலரும் அதனை விரும்புவதில்லை. அதனை பருகுவது உடலில் தீங்கு விளைவிக்கும் வைரஸ்களை எதிர்த்துப் போராடுவதற்கு துணை புரியும்.
கேரட் மற்றும் பீட்ரூட் ஜூஸ் இவற்றை தனியாகவோ அல்லது ஒன்றாகவோ தயாரித்து பருகி வரலாம். இந்த ஜூஸை தொடர்ந்து பருகிவந்தால் முகப்பரு, பொலிவற்ற, மென்மையற்ற சரும தோற்றம் போன்ற பிரச்சினைகளை மறந்துவிடலாம். சருமம் சார்ந்த அனைத்து பிரச்சினைகளையும் விரட்டியத்து மென்மையாகவும், பொலிவாகவும் உணர வைக்கும்.
இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு கலந்த பானத்தை பெண்கள் பலரும் தவறாமல் பருகுவார்கள். இந்த சாற்றில் பொட்டாசியம் மற்றும் நியாசின் அதிகம் கலந்திருக்கும். மேலும் முக்கியமான தாதுக்களை தக்கவைத்து, சருமத்தை மேம்படுத்த உதவும்.
- கொத்தமல்லியில் வைட்டமின் ஈ அதிக அளவில் உள்ளது.
- கொத்தமல்லியை எந்தெந்த சருமப் பிரச்சினைகளுக்கு எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
கருப்பாக இருந்தாலும் சிவப்பாக இருந்தாலும் முகம் பளிச்சென்று பளிங்கு போல இருக்க வேண்டுமென்று தான் அதிகம் விரும்புவார்கள். அதற்கு வீட்டில் சமைக்க வைத்திருக்கும் ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை போதும்.
கொத்தமல்லி இலையில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதன் தண்டு, இலை, விதை ஆகியவற்றில் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்திருக்கும் கொத்தமல்லியில் வைட்டமின் ஈ யும் அதிக அளவில் நிறைந்திருக்கிறது. இது சருமப் பராமரிப்புக்கு மிகவும் மிகுந்தது.
மாசுக்கள் மற்றும் தூசுகளால் சருமப் பிரச்சினைகள் அதிகம் உண்டாகின்றன.சூரிய ஒளியின் அதிகப்படியான வெப்பத்தால், புறஊதாக் கதிர்களின் தாக்கத்தால் சருமம் பாதிப்படைகிறது.சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதனால் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் உண்டாகும்.
இந்த பிரச்சினைகளைச் சரிசெய்ய கொத்தமல்லி இலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கொத்தமல்லி இலையை எந்தெந்த சருமப் பிரச்சினைகளுக்கு எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
மூக்கு, வாய்க்குக் கீழ்ப்பகுதி மற்றும் நெற்றியில் அதிக அளவில் கரும்புள்ளிகள் இருக்கும். அவற்றைக் குறைக்க கொத்தமல்லி பெரிதும் உதவும்.
2 ஸ்பூன் கொத்தமல்லி சாறெடுத்து அதனுடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறைக் கலந்து முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் அப்ளை செய்து, 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். வாரத்தில் இதை இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் கரும்புள்ளிகள் குறையும்.
சருமத்தில் கருந்திட்டுக்கள், முகம் முழுக்க ஒரே நிறமாக இல்லாமல் அன் ஈவன் டோனுடன் இருப்பவர்கள் சருமத்தின் நிறத்தைக் கூட்டவும் கருந்திட்டுக்களைக் களையவும் கொத்தமல்லி இலை சருமத்தில் சிறப்பாகச் செயலாற்றும்.
கொத்தமல்லி இலையின் சாறுடன் சிறிது கற்றாழை ஜெல்லும் அதனுடன் தயிரும் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து நன்கு வட்ட வடிவில் மசாஜ் செய்யுங்கள். பின்பும் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ முகம் நல்ல கலராகும். குறிப்பாக, எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த பலனைக் கொடுக்கும்.
ஒரு மிக்ஸி ஜாரில் சுத்தம் செய்த 1 கப் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்துச் சாறு பிழிந்து கொள்ளுங்கள்.
அடுத்து அதில் (1 ஸ்பூன்) எலுமிச்சை சாறும், (1 ஸ்பூன்)கற்றாழை ஜெல், (1 ஸ்பூன்)ரோஸ் வாட்டர் ஆகியவற்றைக் கலந்து பேஸ்ட்டாக்கி முகத்தில் அப்ளை செய்து, 20 நிமிடங்கள் வரை உலர விடுங்கள். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள். முதல் முறை பயன்படுத்தியதுமே நல்ல வித்தியாசத்தை உங்களால் உணர முடியும்.
- கண்ணுக்கு கீழ் கருவளையம் இருப்பவர்கள் மனஅழுத்தத்தைக் குறைப்பது அவசியம்.
- வாரம் ஒரு முறை சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்குவது அவசியம்.
திருமணத்துக்கு தயாராகும் மணப்பெண்கள் அனைவரும் சந்தோஷம், பரபரப்பு, எதிர்பார்ப்பு, குழப்பம் என பல்வேறு உணர்வுகள் கலந்த மனநிலையில் இருப்பார்கள். மேலும் திருமணத்துக்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஏற்படும் அலைச்சல் மற்றும் பணிச்சுமை ஆகியவையும் சிரமத்தை தரும். இந்த பாதிப்புகள் அவர்களின் சருமத்தில் பிரதிபலிக்கக்கூடும். எனவே, 3 மாதத்திற்கு முன்பாகவே, சருமப் பராமரிப்பில் முழுக்கவனம் செலுத்த வேண்டும்.
இதோ சில சரும பராமரிப்பு முறைகள்:
* சருமப் பராமரிப்பில் முதலில் செய்ய வேண்டியது, நிறைய தண்ணீர் குடித்தல் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ளுதல் ஆகும். இதன் மூலம் உடலில் தேங்கி இருக்கும் நச்சுத்தன்மை மற்றும் கழிவுகள் வெளியேறி சருமம் பொலிவு பெறும்.
* தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் மென்மையான, ரசாயனம் சேர்க்காத சோப்பு கொண்டு முகத்தைக் கழுவிய பின்பு டோனர் அல்லது ரோஜா பன்னீரை சுத்தமான பஞ்சில் நனைத்து முகம் முழுவதும் துடைக்கவும். இது முகத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்கும். அதன் பின்னர் மாய்ஸ்சுரைசர் அல்லது கற்றாழை ஜெல் தடவி முகத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருப்பது அவசியம்.
* வாரம் ஒரு முறை சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்குவது அவசியம். காபி தூளுடன் தேங்காய் எண்ணெய் கலந்து சருமத்தில் மென்மையாக மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து குளிக்கவும். தண்ணீரில் ஊற வைத்தக் கொண்டைக்கடலையுடன் தேங்காய் எண்ணெய் கலந்து கொரகொரப்பாக அரைத்து, அதனை முகத்தில் தடவி 5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யவும். இதனால் இறந்த செல்கள் அகன்று புதிய செல்கள் உருவாகி சருமத்தை பொலிவுடன் வைத்திருக்க உதவும்.
* கண்ணுக்கு கீழ் கருவளையம் இருப்பவர்கள் மனஅழுத்தத்தைக் குறைப்பது அவசியம். இரவில் 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் முக்கியமானது. கூடுதலாக 'ஐ கிரீம்' பயன்படுத்தலாம் அல்லது கற்றாழை ஜெல்லை கண்களைச் சுற்றி உள்ள சருமத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவி விடலாம். இது கருவளையங்கள் நீங்கி கண்கள் பளிச்சிட உதவும். திருமணம் நெருங்கும் நாட்களில், சரும பராமரிப்பு முறைகள் மற்றும் மேக்கப் போன்றவற்றில் எதையும் புதிதாக முயற்சி செய்து பார்க்க வேண்டாம். சந்தைகளில் கிடைக்கும் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதாக இருந்தால், 3 மாதத்திற்கு முன்பாகவே பயன்படுத்த ஆரம்பிப்பது நல்லது.
- வைட்டமின் ஈ நிரம்பிய பொருட்கள் சரும சுருக்கங்களை கட்டுப்படுத்தும்.
- வயதுக்கு ஏற்பவே புரதங்களை சருமம் உற்பத்தி செய்கிறது.
30 வயதை கடந்ததுமே சருமத்தில் சுருக்கங்கள் எட்டிப்பார்க்கக் கூடும். வயதுக்கு ஏற்பவே கொலாஜன் மற்றும் எலாஸ்டின் என்ற புரதங்களை சருமம் உற்பத்தி செய்கிறது. அவை சருமத்தை குண்டாகவும், இறுக்கமாகவும், மீள்தன்மையுடனும், இளமையுடனும் வைத்திருக்க உதவுகிறது. வயது அதிகரிக்கும்போது இவற்றின் உற்பத்தி குறைந்துவிடும். அதனால் சருமம் மெல்லியதாக மாறிவிடக்கூடும். அதுவே சுருக்கங்கள் எட்டிப்பார்க்க காரணமாகிவிடுகிறது.
ஒருசில முக பயிற்சிகள் மற்றும் உணவு பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் விரைவாகவே சருமத்தில் சுருக்கங்கள் தோன்றுவதை தவிர்த்துவிடலாம். கண்களைச் சுற்றியுள்ள தோல் முகத்தின் மற்ற பகுதிகளை விட மெல்லியதாக இருப்பதால், முதுமைக்கான அறிகுறிகளான சுருக்கங்களை சட்டென்று வெளிப்படுத்த தொடங்கிவிடும்.
பயிற்சி 1: தாடை எலும்பை உறுதியாக வைத்துக்கொண்டு, இரு கண்களையும் வலமிருந்து இடமாகவும், பின்பு இடமிருந்து வலமாகவும், மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் சுழலவிடவும். கண்களைச் சுற்றியுள்ள சுருக்கங்களைத் தடுக்க உதவும் இந்த பயிற்சியை ஒவ்வொரு திசையிலும் ஐந்து முறை செய்யவும்.
பயிற்சி 2: இரு விரல்களை கண்களின் உள் மற்றும் வெளிப்புற மூலைகளிலும், மற்ற விரல்களை தாடைப்பகுதியிலும் வைக்கவும். பின்பு கண்களை மூடி இறுக்கமாக அழுத்தவும். இதற்கிடையில், விரல்களை பயன்படுத்தி, கண்களின் வெளிப்புற மூலைகளை வெளிப்புறமாகவும் சற்று மேல்நோக்கியும் அழுத்தி தேய்க்கவும். இந்த நிலையில் சுமார் 5-10 விநாடிகள் வைக்கவும். பின்பு ஓய்வெடுக்கவும். அது போன்று 10 முதல் 25 முறை செய்யவும்.
மல்லார்ந்த நிலையில் தூங்குவது முக தசைகளுக்கு அழுத்தம் கொடுப்பதை தவிர்க்க உதவும். சுருக்கங்களும் எட்டிப்பார்க்காது. மென்மையான தலையணையையும் உபயோகிக்கலாம். பட்டு துணியிலான தலையணை சிறந்தது.
சுருக்கங்களை தடுக்கும் உணவுகள்: வெண்ணெய், ஆளிவிதை, சோயாபீன் போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலம் கொண்ட உணவு பொருட்கள், கருப்பு எள், பூசணி விதை போன்ற சருமத்தை அழகுபடுத்தும் ஊட்டச்சத்துக்கள், குறைந்த கொழுப்புள்ள பாலாடைக்கட்டி, பருப்பு வகைகள், முட்டைகள் மற்றும் கரும் பச்சை இலை கீரைகள், மிளகுத்தூள், ஆரஞ்சு, பப்பாளி மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற வைட்டமின் சி உள்ளடங்கிய பொருட்கள், ஆலிவ் எண்ணெய், முழு கோதுமை, பாதாம், காலே போன்ற வைட்டமின் ஈ நிரம்பிய பொருட்களை உட்கொள்வதன் மூலம் சரும சுருக்கங்களை கட்டுப்படுத்தலாம்.
சருமத்திற்கான மசாஜ்: தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வரலாம். கற்றாழை ஜெல்லையும் சருமத்திற்கு உபயோகிக்கலாம். முட்டையின் வெள்ளைக்கருவை சருமத்தில் தடவுவதும் சுருக்கங்களை விரட்டக்கூடும். வாழைப்பழத்தை மசித்து சருமத்தில் தடவலாம். வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி 'பேஸ் பேக்'காக பயன் படுத்தலாம். காய்ச்சாத பாலில் பருத்தி பஞ்சுவை முக்கியும் சருமத்தில் பூசி வரலாம்.
சரும சுருக்கத்தை தடுக்கும் வழிகள்: சருமத்தை எப்போதும் ஈரப்பதமாக வைத்திருங்கள். சருமம் எண்ணெய் பசை தன்மையுடன் இருந்தால் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துங்கள். அது உங்கள் சரும வகைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். வெளியே செல்லும்போது குறிப்பாக வெயிலின் ஆதிக்கம் நிலவும் சமயங்களில் மறக்காமல் சன்ஸ்கிரீனை உபயோகியுங்கள். கெட்டுப்போகாத ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள். உடலில் போதுமான அளவு நீர்ச்சத்தை பேணுங்கள். மதுப்பழக்கம், புகைப்பழக்கத்தை தவிருங்கள். அடிக்கடி முகம் சுளிப்பது, பற்களை கடிப்பது போன்ற பழக்கங்களை தவிருங்கள்.
- வெட்டிவேர் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
- சருமத்தின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தருகிறது.
பழுப்பு நிறமும், பரவசமூட்டும் நறுமணமும் கொண்ட வெட்டிவேரின் வேர்ப்பகுதி மட்டுமே மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
கோடை காலமோ, குளிர்காலமோ ஒரு சிலருக்கு எப்போது பார்த்தாலும் வியர்த்து, எண்ணெய் வழியும். இதனால் பருக்களும் அதிகமாக இருக்கும். அவர்களுக்கு வாசனையான பேக் போடலாம். வெட்டிவேர், ரோஜா மொட்டு, மகிழம்பூ, செண்பகப்பூ, சம்பங்கி விதை.. இவற்றை சம அளவு எடுத்து மெஷினில் கொடுத்து அரைத்து சலித்து வைத்துக்கொள்ளுங்கள். இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து முகத்தில் பூசி, கழுவுங்கள். வெட்டிவேர் முகத்தில் உள்ள தேவையற்ற எண்ணெய் பசையை எடுத்துவிடும். சம்பங்கி விதை முகத்துக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். சோர்வைப் போக்கி நிறத்தைக் கொடுக்கிறது ரோஜா மொட்டு. மகிழம்பூவும், செண்பகப்பூவும் வியர்வை நாற்றத்தைப் போக்கி வாசனையை கொடுக்கிறது.
வெட்டி வேர் (vettiver) எண்ணெய்யை கொண்டு நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் வடுக்கள் மீது தடவி வந்தால் அவை மறைந்துவிடும். இந்த எண்ணெய்யை உடலில் தேய்த்து தினமும் குளிக்கலாம்.
வெட்டி வேர் தூளுடன் தண்ணீர் சேர்த்து குலைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் உலரவிட வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவி மென்மையான பருத்தித் துண்டால் துடைக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இப்படி 'பேக்' போட்டு வந்தால் பருக்கள் நீங்கி முகம் வசீகரமாகும்.
சுத்தமான தேங்காய் எண்ணெயுடன், வெட்டி வேர் சேர்த்து ஊறவைத்து தலைமுடிக்கு தேய்த்துவர வேண்டும். தலைமுடியின் வேர்க்கால்களில் படும்படி தேய்க்க வேண்டும். இதனை வாரம் ஒரு முறை இப்படி செய்து வந்தால் முடி உதிர்வது குறைந்து கருமையாக முடி வளரும். கண்களும் குளிர்ச்சியடையும்.
தலைக்கு தேய்த்து குளிக்கும் சீயக்காய்க்கு பதிலாக வெட்டி வேர் பவுடரை பயன்படுத்தலாம். வெட்டி வேர் தூளை தலைக்கு தேய்த்து குளிப்பதால், முகத்தில் எண்ணெய் வழியாது. முகம் கூடுதல் அழகுடன் காணப்படும்.
வெட்டி வேரை சிறு சிறு துண்டுகளாக்கி, அதனுடன் கொட்டை நீக்கிய கடுக்காய் ஒன்றையும் முதல் நாள் இரவே கொதிநீரில் ஊறவைக்க வேண்டும். மறுநாள் அதை அரைத்து விழுதை பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் இருந்த வடுவே தெரியாமல் அழிந்து விடும்.
பாசிப்பயறு 100 கிராம் ,வெட்டிவேர் 50 கிராம் எடுத்து அந்த இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். இந்தப் பவுடரை உடலுக்கு தேய்த்துக் தினமும் குளித்து வந்தாலே உடம்பில் வரும் சிறு சிறு உஷ்ணக் கட்டிகளும் , உடல் விரிவதனால் ஏற்படும் வரிகளும் மறைந்து போகும்.
வெட்டி வேர், ரோஜா மொட்டு, மகிழம்பூ, செண்பகப்பூ, சம்பங்கி விதை இவற்றை சம அளவு எடுத்து மெஷினில் கொடுத்து அரைத்து கொள்ளுங்கள். இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து முகத்தில் பூசி வர இயற்கையாக முகம் அழகு பெறும்.
வெட்டிவேரினை சிறு துண்டுகளாக்கி ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்துக்கொள்ளவும். கொட்டை நீக்கிய கடுக்காய் ஒன்றை எடுத்துக்கொள்ளவும். இரண்டையும் முதல்நாள் இரவே கொதிக்கும் நீரில் ஊறவைக்கவும். மறுநாள் காலையில் நன்றாக மைய அரைத்து அந்த விழுதினை பருக்கள் மீது மறைப்பதுபோல பூசவும். ஒரு நாள் விட்டு ஒருநாள் இப்படிச் செய்து வந்தாலே பருக்கள் உதிர்ந்துவிடும். பருக்கள் இருந்த வடுவும் தெரியாது.
பருக்கள் வந்து காய்ந்தாலும் ஒரு சிலருக்கு தழும்புகள் மட்டும் போகாது. இதனாலேயே முகம் கரடு முரடாக மாறிவிடும். அந்த தழும்புகள் மறைய ஒரு பிடி வெட்டிவேரை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் போட்டு மூடுங்கள். ஒரு இரவு இது ஊறட்டும். மறுநாள் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடுங்கள். முந்தின நாள் ஊறவைத்த வெட்டிவேரையும் தண்ணீரையும் தனியே பிரித்து வையுங்கள். இப்போது கொதிநீரில் வெட்டிவேரைப் போட்டு ஆவி பிடியுங்கள். அப்படியே முகத்தைத் துடைக்காமல், வெட்டிவேர் ஊறின தண்ணீரில் சுத்தமான வெள்ளைத் துணியை அமிழ்த்தி பிழிந்து முகத்தை ஒற்றி எடுங்கள். வாரம் இரு முறை இப்படிச் செய்து வந்தால், தழும்புகள் மறைந்துவிடும்.
- முகப்பரு போன்ற சரும பிரச்சினைகளும் ஏற்படாமல் இருக்கும்.
- சருமத்தை பிளீச்சிங் செய்வதற்கு சாத்துக்குடியை பயன்படுத்தலாம்.
'சுவீட் லைம்' என அழைக்கப்படும் சாத்துக்குடி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டது. இனிப்பு, புளிப்பு என இரு வகை சுவை கொண்ட இந்த பழத்தில் பொட்டாசியம், இரும்பு, கால்சியம், வைட்டமின்கள் ஏ, சி மற்றும் பி 1 ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பி உள்ளன. சருமத்திற்கு நலம் சேர்க்கும் தாதுக்களும் அதில் நிரம்பியுள்ளன.
சருமத்தை உறுதியாகவும் வலுவாகவும் வைத்திருக்க உதவும் புரதமான கொலாஜன் தயாரிக்க வைட்டமின் சி அவசியம். சாத்துக்குடியில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் அது சரும பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும். மேலும் ஆன்டி ஆக்சிடென்டுகளும் அதிகம் உள்ளன. வயது அதிகரிக்கும்போது சருமத்தில் ஏற்படும் மாற்றங்களை எதிர்த்து போராடவும் உதவும்.
சாத்துக்குடியில் பிளாவனாய்டுகளின் அளவும் அதிகம் உள்ளது. இவை செரிமான நொதிகள், அமிலங்கள் மற்றும் பித்தங்களின் சுரப்பை அதிகரிக்கச் செய்யக்கூடியவை. அதனால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு தொய்வின்றி நடைபெறும். மேலும் வயிற்றில் உற்பத்தி செய்யப்படும் அமில செரிமான நொதிகளை நடுநிலையாக்கும்.
உடலில் இருக்கும் நச்சுகளை அகற்றும் செயல்முறை சீரான இடைவெளியில் நடக்க வேண்டியது அவசியமானது. அப்படி நடந்தால்தான் சருமத்திற்கு சரியான ஊட்டம் கிடைக்கும். சருமத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. முகப்பரு போன்ற சரும பிரச்சினைகளும் ஏற்படாமல் இருக்கும்.
சாத்துக்குடியில் உள்ளடங்கி இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகள் கண்புரை உருவாகும் அபாயத்தை குறைக்க உதவும். சாத்துக்குடி ஜூஸை பருகுவதோடு சருமத்திற்கு பேஷியலாகவும் உபயோகப்படுத்தலாம். சருமத்தில் படியும் கறைகளை அகற்ற உதவும். சருமத்தை பிளீச்சிங் செய்வதற்கும் சாத்துக்குடியை பயன்படுத்தலாம்.
- சருமத்தை எவ்வித பக்க விளைவுகள் இன்றி அழகாக மாற்றலாம்.
- சிவப்பு சந்தனத்தை எப்படி, எதனுடன் சேர்த்து பயன்படுத்துவது என்று காண்போம்.
சிவப்பு சந்தனத்தில் சருமத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் ஏராளமாக நிறைந்துள்ளன. எனவே இவற்றைக் கொண்டு தினமும் முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், சருமத்தில் ஏற்படும் பல பிரச்சினைகளைத் தடுக்கலாம்.
• உங்கள் சருமம் ஆரோக்கியமான முறையில் காட்சியளிக்க வேண்டுமானால், சரும செல்களுக்கு போதிய ஊட்டச்சத்துக்களை வழங்க வேண்டியது அவசியம். அச்செயலை சிவப்பு சந்தனம் சிறப்பாக செய்யும். எனவே 2 தேக்கரண்டி சிவப்பு சந்தனப் பொடியை தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, தினமும் முகம், கை, கால்களுக்கு தடவி வர, உங்கள் சருமம் நன்கு ஆரோக்கியமாக காட்சியளிக்கும்.
• உங்கள் முகம் எப்போதும் பொலிவிழந்து சோர்வாக காணப்படுகிறதா? அதைத் தடுக்க சிவப்பு சந்தனத்தைப் பயன்படுத்துங்கள். அதற்கு ஒரு பௌலில் 2 தேக்கரண்டி தயிர் அல்லது பாலை ஊற்றி, அதில் 1 தேக்கரண்டிசிவப்பு சந்தனப் பொடி மற்றும் 1/2 தேக்கரண்டிமஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
• பருக்களால் வந்த தழும்புகள் முக அழகைக் கெடுக்கும். அதனை சிவப்பு சந்தனம் கொண்டு எளிதில் போக்கலாம். அதற்கு 4 தேக்கரண்டி தேங்காய் பாலில், 2 தேக்கரண்டி பாதாம் எண்ணெய் மற்றும் 4 தேக்கரண்டி சந்தனப் பொடி சேர்த்து கலந்து தினமும் முகத்திற்கு தடவி வந்தால், சருமத்தில் உள்ள தழும்புகள் விரைவில் மறையும்.
• சிலருக்கு முகத்தில் எண்ணெய் அதிகம் வழியும். அத்தகையவர்கள் அந்த எண்ணெய் பசையை நீக்க, 1 தேக்கரண்டிசிவப்பு சந்தனப் பொடியில், 1 எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் சருமத் துளைகள் இறுக்கமடைந்து, எண்ணெய் பசை நீங்கும்.
• வெயிலில் அதிகம் சுற்றி சருமம் கருமையாக இருந்தால், அதனை எளிதில் நீக்க சிவப்பு சந்தனம் உதவும். அதற்கு தினமும் 2 தேக்கரண்டி சந்தன பொடியில், தயிர் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து, முகம், கை, கால்களில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து கழுவுங்கள். இதனால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
• சிலர் முகப்பருவால் அதிகம் அவஸ்தைப்படுவார்கள். அத்தகையவர்கள் தினமும் சிவப்பு சந்தனப் பொடியை நீர் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி ஊற வைத்து கழுவி வர, அப்பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.
- சிலருக்கு முகத்தில் அங்கும் இங்குமாக பல இடத்தில் கருந்திட்டுகள் இருக்கும்.
- கருந்திட்டுகள் பிரச்சனைக்கு சித்த மருத்துவத்தில் நிரந்தர தீர்வு உண்டு.
முகத்தில் உள்ள கருமை நிறத் திட்டுகள் நீங்க உதவும் சித்த மருந்து குங்குமாதி லேபம். இதை இரவு நேரங்களில் முகத்தில் பூசி வர வேண்டும். அடுத்து, ஒரு ஜாதிக்காய், 2 பாதாம் பருப்பு எடுத்து நன்றாக பொடி செய்து அரைத்து அதை கருந்திட்டு உள்ள இடத்தில் பூசி வர வேண்டும்.
ஜாதிக்காயிலுள்ள 'மிரிஸ்டிசின்' என்னும் சத்து, தோல் கருமை, தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுத்து, முதுமையிலும் இளமையான தோற்றத்தை தரும். வாரம் இருமுறை சோற்றுக் கற்றாழை ஜெல்லுடன் எலுமிச்சைச் சாறு கலந்து, முகத்தை மசாஜ் செய்ய வேண்டும். இது முகத்திற்கு இயற்கை சூரிய எதிர்ப்பு கவசமாகத் திகழும். இதனால் முகத்தில் ஏற்படும் கருந்திட்டுகள் மறையும்.
100 மில்லி அளவு தேங்காய் எண்ணெய் எடுத்து அதில் குங்குமப்பூ ஒரு கிராம் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். சூரியக்கதிர்கள் உடலில் படும் இடங்களான முகம், கழுத்து, கை, கால்களில் இதை தினமும் தடவி வர வேண்டும். இதன்மூலம் சூரியக் கதிரினால் வரும் கருமையை நீக்கி தோலுக்கு இளமையான வசீகரத்தைப்பெறலாம்.
வைட்டமின் ஏ சத்துள்ள உணவுகள் தோலின் கொலாஜன் மற்றும் எலாஸ்டிக் தன்மையை அதிகப்படுத்தும். இவற்றிலுள்ள ரெட்டினாய்டுகள் தோலுக்கு பளபளப்பைக் கொடுக்கும். ஆகவே, வைட்டமின் ஏ சத்து நிறைந்த மாம்பழம், பப்பாளி, கேரட், முருங்கைக்காய், கீரை, முட்டை, மீன், இறைச்சி, பால் மற்றும் தர்ப்பூசணி பழம், வெள்ளரிக்காய் இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். முகத்தை அடிக்கடி தண்ணீரில் கழுவி வர வேண்டும்.
சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)
மின்னஞ்சல்: doctor@dt.co.in,
வாட்ஸ் அப்: 7824044499
- சருமத்தில் சுருக்கங்கள் குறையும்.
- முடி கொட்டுவதும் நிற்கும்.
பாசிப்பருப்பு, கடலை மாவு, ரோஜா மொட்டு, வெட்டி வேர், கோரைக் கிழங்கு மற்றும் கஸ்தூரி மஞ்சளுடன் ஆவாரம்பூவைச் சம அளவு சேர்த்துச் சிறிதளவு வசம்பும் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். சோப்புக்குப் பதில் இந்த மூலிகைக் கலவையைத் தேய்த்துக் குளிப்பதன்மூலம் சருமம் பொன் நிறமாக மாறும். அத்துடன் சருமம் சுத்தமடைந்து தேமல், கரும்புள்ளிகள் மறையும். தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சருமத்தில் சுருக்கங்கள் குறையும்.
ஆவாரம் பூ பொடியை மேனிக்கு பயன்படுத்தினால் மேனி பொன் நிறமாகும். இதனை குளியல் பொடியுடன் சேர்த்து பயன்படுத்தலாம். அல்லது ஆவாரம் பூ தேநீர் குடித்தாலும் இரத்தம் சுத்தமாகி மேனி தங்க நிறம் பெரும்.
ஆவாரம் பூவுடன் ஊறவைத்த பாசிப்பயறு சேர்த்து அரைத்து குளித்தால் நமைச்சல் துர்நாற்றம் நீங்கும்.
ஆவாரம் பூவுடன் சிறு வெங்காயம், பருப்பு சேர்த்து கூட்டு செய்து வாரம் ஒரு முறை உண்டு வர உடல் அழகு பெறும். வடிக்கட்டி வைத்துள்ள ஆவாரம் பூவின் தண்ணீரைக் கொண்டு முடியை அலச பளபளவென்றிருக்கும். இதனால் உடல் நிறமும் கூடுவதுடன் புத்துணர்வாகவும் இருக்கும்.
ஒரு கைப்பிடி அளவு ஆவாரம் பூவை அரைத்து சாறெடுத்து, சுண்ட காய்ச்சி அத்துடன் தேங்காய் எண்ணெய் கலந்து தினமும் தடவி வர தலையில் வழுக்கை ஏற்படுவதைத் தடுத்து முடி நன்கு வளர தொடங்கும். முடி கொட்டுவதும் நிற்கும்.
ஆவாரம்பூ நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். அதனையும் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால் சருமம் பொலிவு பெறும்.
பெண்களுக்கு முகத்திலுள்ள தேவையில்லாத முடிகளை நீக்க, கோரைக்கிழங்கு, உலர்ந்த ஆவாரம் பூ, பூலான் கிழங்கு இம்மூன்றையும் சம அளவு எடுத்து பசை போன்று செய்து தினமும் முகத்தில் தேய்த்து குளித்து வர முகத்திலுள்ள தேவையில்லாத முடிகள் உதிர்ந்து பார்ப்பதற்கு வசீகரமாக இருக்கும்.
ஆவாரம் பூவுடன் வெள்ளரி விதை, கசகசா, பால் சேர்த்து உடலில் தேய்த்து உலர்ந்த பின் கடலைமாவைக் கொண்டு கழுவி வர உடலில் உள்ள வறட்சி நீங்கி மென்மையாகவும், பளிச்சென்றும் இருக்கும்.
- சிவப்பு சந்தனம் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எளிதில் நீக்க வல்லது.
- சரும பிரச்சனைகளுக்கு ரத்த சந்தனத்தை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
இயற்கை பொருள்களை வைத்து சருமத்தை எவ்வித பக்க விளைவுகள் இன்றி அழகாக மாற்றலாம். சிவப்பு சந்தனம் (red sandalwood) சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எளிதில் நீக்க வல்லது. அனைத்து விதமான சரும பிரச்சனைகளையும் தீர்க்கும் சிவப்பு சந்தனத்தை எப்படி, எதனுடன் சேர்த்து பயன்படுத்துவது என இங்கு காண்போம்.
* சிவப்பு சந்தனம் (red sandalwood) சருமத்தில் சொரசொரவென்று இருக்கும் இறந்த செல்களை வெளியேற்றி சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.
* பருக்களால் வந்த தழும்புகள் முக அழகைக் கெடுக்கும். அதனை சிவப்பு சந்தனம் கொண்டு எளிதில் போக்கலாம்.
* வெயிலில் அதிகம் சுற்றி சருமம் கருமையாக இருப்பவர்கள் சிவப்பு சந்தனத்தை பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும்.
* முகப்பரு மற்றும் அதனால் உண்டாகும் பருக்களால் அவதியுறுபவர்கள் சிவப்பு சந்தனத்தை தொடர்ந்து பயன்படுத்த வர விரைவில் சரியாகும்.
* சருமத்தை புத்துணர்ச்சியுடன் வெளிக்காட்ட ஒரு டேபிள் ஸ்பூன் சிவப்பு சந்தனத்தை 2 டேபிள் ஸ்பூன் மசித்த பப்பாளியுடன் சேர்த்து முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
* எண்ணெய் பசையை நீக்க 1 டேபிள் ஸ்பூன் சிவப்பு சந்தனப் பொடியில், 1 எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் சருமத் துளைகள் இறுக்கமடைந்து எண்ணெய் பசை நீங்கும்.
* பாதாம் ஆயில், தேங்காய் எண்ணெய், சிவப்பு சந்தன பவுடர் சேர்த்து கலந்து முகத்தில் போட்டு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடவும். இந்த பேக் சருமத்தை பொலிவாக்கும்.
* சரும பிரச்சனைகளை போக்க ஆரஞ்சு தோல் பவுடர் 1 டீஸ்பூன், சிவப்பு சந்தன பவுடருடன் கலந்து அதில் ரோஸ்வாட்டர் ஊற்றி பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவி விடவும்.
* 4 டீஸ்பூன் சிவப்பு சந்தனப் பொடியில் 2 டீஸ்பூன் சீமைச்சாமந்தி டீ சேர்த்து கலந்து முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.
* சிவப்பு சத்தனம் பவுடர், வேப்பிலை பவுடர் சமஅளவில் எடுத்து கலந்து அதில் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவி விடவும். இந்த பேக் பருக்கள் மற்றும் பருவால் வரும் தழும்பு, கரும்புள்ளிகளை நீக்கும்.
* வறண்ட சருமம் உள்ளவர்கள் சிவப்பு சந்தனத்துடன் (red sandalwood) பால், தேன் சேர்த்து கலந்து முகத்தில் போட்டு 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும்.
* ஒரு டீஸ்பூன் சிவப்பு சந்தனதூளுடன், சிறிது காய்ச்சாத பச்சைப்பால் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசி உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் முகம் கழுவவும். இதனை தொடர்ந்து செய்து வந்ததால் வெயிலில் கருத்த தோலின் நிறம் பொலிவு பெறும். வறண்ட தோல் மென்மையாகும்.
* கோடை வெயிலில் கருத்த சருமத்தில் வெள்ளரிச்சாறு அல்லது தயிருடன் சிவப்பு சந்தனதூள் கலந்து பூசி வந்தால் கருமை குறைந்து தோல் பொலிவு பெறும்.
- ஜாதிக்காய் சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்க வைக்க உதவுகிறது.
- உங்கள் சருமம் அழகாகவும் பொலிவாகும் மாறுகிறது.
சருமத்தில் உண்டாகும் நிறமாற்றம் மற்றும் நிறமிழப்பை குறைக்கும் தன்மை ஜாதிக்காய்க்கு உண்டு என்பது இதன் அற்புத நன்மைகளில் ஒன்றாகும். சருமம் மற்றும் கூந்தலுக்கு ஜாதிக்காய் சிறந்த நன்மைகளை வழங்குகிறது.
சருமத்தில் உண்டாகும் கருந்திட்டுகள், நிறமிழப்பு, சூரிய ஒளியில் இருந்து வெளிப்படும் புறஊதா கதிர்களால் உண்டாகும் கட்டிகள் , ஹார்மோன் மாற்றம், வயது முதிர்வு, மருத்துகளால் உண்டாகும் பக்க விளைவுகள் மற்றும் இதர சரும பிரச்சனைகளுக்கு ஜாதிக்காய் மிகச் சிறந்த தீர்வைத் தருகிறது.
ஜாதிக்காய் சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்க வைக்க உதவுகிறது. இதனால் சருமம் சோர்வடையாமல் தடுக்கிறது. மேலும் வயது முதிர்விற்கான அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.
ஆர்கானிக் பால் அல்லது தேங்காய் பால் ஜாதிக்காய் தூள் இந்த இரண்டு மூலப்பொருட்களையும் ஒன்றாகக் கலந்து முகத்திற்கு தடவவும். பாலில் இருக்கும் லாக்டிக் அமிலம் சருமத்திற்கு மிருதுவான தன்மையை அளிக்க உதவுகிறது. உங்கள் சருமம் அழகாகவும் பொலிவாகும் மாறுகிறது.
ஜாதிக்காயில் அன்டி ஆக்சிடென்ட் மற்றும் வயது முதிர்வைத் தடுக்கும் தன்மை உண்டு. மேலும் அணுக்களை சேதப்படுத்தும் கூறுகளுடன் இது போராட உதவுகிறது.
முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் நீங்கி இளமையான தோற்றம் பெறவும், முகத்தில் இருக்கும் பருக்கள் மறையவும் ஜாதிக்காயை பாலுடன் குழைத்து முகத்திற்கு பயன்படுத்துவார்கள்.
எண்ணெய் சருமத்திற்கு ஜாதிக்காய் பேக்
செய்ய தேவையான பொருட்கள்:
ஜாதிக்காய் தூள்,
தேன்.
செய்முறை: இரண்டு மூலப்பொருட்களையும் ஒன்றாகக் கலந்து உங்கள் சருமத்தில் தடவவும். பத்து நிமிடங்கள் இந்தக் கலவை உங்கள் முகத்தில் இருக்கட்டும். தேன் மற்றும் ஜாதிக்காய் ஆகிய இரண்டிற்கும் கிருமி எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இது சருமத்தை அழுக்கு மற்றும் கட்டிகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
- சில குளிர்கால பழங்கள் சரும வறட்சியை போக்கி ஈரப்பதத்தை தக்க வைக்கும் தன்மை கொண்டவை.
- சரும சுருக்கங்களை குறைக்கும்.
குளிர் காலத்தில் நிலவும் குளிர்ந்த வெப்பநிலையும், குளிர் காற்றும், குறைந்த ஈரப்பதமும் பல்வேறு சரும பிரச்சினைகளுக்கு வித்திடும். சரும வறட்சி, நீரிழப்பு, முகப்பரு போன்றவை எட்டிப்பார்க்கும். சில குளிர்கால பழங்கள் சரும வறட்சியை போக்கி ஈரப்பதத்தை தக்க வைக்கும் தன்மை கொண்டவை. சருமத்திற்கு கூடுதல் பளபளப்பு சேர்க்கக்கூடியவை.
1. பப்பாளி
கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் பாப்பைன் என்ற நொதி நிறைந்த பழங்களுள் ஒன்று பப்பாளி. மேலும் இதில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ மற்றும் சருமத்திற்கு தேவையான ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளன. அவை சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தையும், ஊட்டச்சத்தையும் வழங்கும் ஆற்றல் கொண்டவை. முன்கூட்டியே முதுமை பருவம் எட்டிப்பார்ப்பதை தடுக்கும். இந்த பழம் இயற்கையாகவே உடலின் வெப்பநிலையை அதிகரிக்கக்கூடியது. அதனால் குளிர்கால வானிலையை எதிர்த்து போராடி உடல் போதுமான வெப்பநிலையை தக்க வைத்துக்கொள்ள உதவும்.
2. மாதுளை
இந்தப் பழம் புத்துணர்ச்சியூட்டும் சக்தி கொண்டது. சரும துளைகளை போக்கவும் உதவும். சரும சுருக்கங்களையும் குறைக்கும். விரைவில் சருமம் முதுமை தோற்றத்திற்கு ஆளாகுவதை தள்ளிப்போடும். மாதுளை பழ ஜூஸ் பருகுவது சருமம் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ள உதவும். சருமத்திற்கு போதுமான ஊட்டச்சத்தையும் வழங்கும். இதில் இருக்கும் நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் சருமத்திற்குள் ஆழமாக ஊடுருவி சரும வளர்ச்சிக்கு வித்திடும்.
3. அன்னாசி
இதில் புரோமைலின் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இவை குளிர்காலத்தில் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியவை. குளிர்காலத்தில் உடலை சூடாகவும், சருமத்தை எண்ணெய் பசைத்தன்மையுடனும் வைத்திருக்க துணை புரியும். மேலும் இதில் உள்ளடங்கி இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் முகப்பரு, தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளை போக்க உதவும். சரும துளைகளை ஆழமாக சுத்தப்படுத்தி சருமத்திற்கு பளபளப்பு சேர்க்கும்.
4. கிவி
இந்த பழத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் பருக்கள், தடிப்புகள் மற்றும் தோல் அழற்சியைக் குறைக்கக்கூடியவை. சருமத்தை சுத்தம் செய்யவும் உதவக்கூடியவை. கிவியில் வைட்டமின் சி அதிக அளவு உள்ளது. இது வலுவான சருமத்தை உருவாக்க உதவும். மேலும் இந்த பழத்தில் உள்ள வைட்டமின் ஈ, சருமத்தை பளபளப்பாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க வழிவகுக்கும்.
5. வாழைப்பழம்
பொட்டாசியம், வைட்டமின்கள் சி, ஈ ஆகியவை வாழைப்பழத்தில் நிறைந்துள்ளன. இவை சருமத்தின் பளபளப்பு தன்மையை மேம்படுத்தக்கூடியவை. இறந்த செல்களை நீக்கி சருமத்தை பிரகாசமாக்கும். குளிர்காலத்தில் சரும வறட்சியை குறைத்து ஈரப் பதத்தை தக்கவைத்துக்கொள்ள உதவும்.
6. ஆரஞ்சு
குளிர்காலத்தில் ஆரஞ்சு பழங்களை உட்கொள்வது சரும பாதிப்புகளை சரிசெய்ய உதவும். ஆரஞ்சுப் பழத்தில் உள்ள கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் சருமத்தின் இளமைப் பொலிவையும், பளபளப்பான தோற்றத்தையும் தக்கவைத்துக்கொள்ள உதவும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்