search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இராமேஸ்வரம்"

    ராமேசுவரத்தை சிறந்த சுற்றுலா தலமாக மாற்றிடும் வகையில் ரூ. 31 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப்பணிகளை செயல்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
    ராமநாதபுரம்:

    ராமேசுவரம், ராமநாத சுவாமி கோவில் கிழக்கு கோபுரவாசல் அருகே உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் சார்பில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மேளா நடந்தது. கலெக்டர் நடராஜன் தலைமை தாங்கினார். அமைச்சர் மணிகண்டன் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவுப் பொருட்களை வழங்குவது குறித்து உணவு வணிகர்களுக்கும், உணவு விடுதிகள் மற்றும் குளிர்பான கடைகளில் உணவுப்பொருட்களை வாங்கி உட்கொள்ளும் போது விழிப்புடன் கவனிக்க வேண்டிய வி‌ஷயங்கள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதுதொடர்பாக விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களும் பொதுமக்கள் மற்றும் உணவு வணிகர்களுக்கு வழங்கப்பட்டது. மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க ஏதுவாக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் சார்பாக 94440 42322 என்ற “வாட்ஸ்அப்” எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்புகார் எண் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    பாதுகாப்பான உணவு மற்றும் பாதுகாப்பற்ற உணவு மாதிரிகள் குறித்து பொதுமக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் செயல்முறை விளக்க அரங்குகள் அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு அரங்குகளை அமைச்சர் மணிகண்டன் பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராமேசுவரம் பழைமை வாய்ந்த புனித தலமாகவும், சுற்றுலா பயணிகளை அதிகளவில் ஈர்த்திடும் சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. ராமேசுவரத்துக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள், அருகே உள்ள தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்ளிட்ட பகுதிகளுக்கும் குடும்பத்தினருடன் சென்று மகிழ்ச்சியாக பொழுது போக்கும் சூழ்நிலை இருந்து வருகிறது.

    அதன் அடிப்படையில் ராமேசுவரத்தில் சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்த்திடும் வகையில் மத்திய அரசின் சுவதேஷ் தர்‌ஷன் திட்டத்தின் கீழ் ரூ. 15.86 கோடி மதிப்பில் ராமேசுவரம் நகராட்சியின் மூலம் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.

    குறிப்பாக ஜெ.ஜெ. நகர் பகுதியில் ரூ. 1.51 கோடி மதிப்பில் வாகன நிறுத்துமிடம், சங்கு அணி கலன்கள் கடை அமைத்தல் போன்ற பணிகளும், வாகன நிறுத்துமிட வளாகத்தில் ரூ. 65 லட்சம் மதிப்பில் நவீன கழிப்பறைகளும், அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில் ரூ. 37.15 லட்சம் மதிப்பில் எல்.இ.டி. பல்புகளுடன் தெரு மின் கம்பங்கள் மற்றும் ரூ. 35.45 லட்சம் மதிப்பில் நவீன ஒளிரும் தகவல் பலகைகள் அமைத்தல், ரூ. 20.90 லட்சம் மதிப்பில் உடை மாற்றும் அறைகள் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அதேபோல் தனுஷ்கோடி பகுதிகளில் உள்ள புராதன கட்டிடங்களை அதன் பழைமை மாறாமல் புனரமைத்திட ரூ.1.37கோடி மதிப்பிலும், இ-சைக்கிள், இ-ரிக்ஷா, மினி பஸ் என வாகன வசதிகளுக்கு ரூ.95 லட்சம் மதிப்பிலும், எம்.ஆர்.சத்திரம் பகுதியில் ரூ.80 லட்சம் மதிப்பில் மொபைல் டாய்லெட் மற்றும் ரூ.80 லட்சம் மதிப்பில் பொருட்கள் வைப்பு அறை கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.4.37 கோடி மதிப்பில் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

    இது தவிர தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக ரூ.4.52 கோடி மதிப்பில் ஒளி-ஒலி காட்சிகள் அமைத்திடவும், ரூ.6.18 கோடி மதிப்பில் ராமாயண சுற்றுத்தொடர் பணிகள் என மொத்தம் ரூ.30.93 கோடி மதிப்பில் பல்வேறு பணிகளும் செயல்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

    விரைவில் தமிழ்நாடு அரசின் ஒப்புதல் பெற்று, ராமேசுவரத்தை சிறந்த சுற்றுலா தலமாக ஏற்படுத்திடும் வகையில் அனைத்து பணிகளும் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திர போஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    ×