search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 221298"

    பொத்தனூர், பாண்டமங்கலம் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்ததில் 50 ஆயிரம் வாழை மரங்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டத்தில் வாழை விவசாயம் பிரதானமாக உள்ளது. குறிப்பாக பொத்தனூர், பாண்டமங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் வாழைகள் பயிரிட்டு உள்ளனர்.

    தோட்டத்தில் வெட்டப்படும் வாழைக்குலைகளை பரமத்திவேலூரில் உள்ள மண்டிகளுக்கு மொத்தமாக எடுத்து வந்து ஏலத்தின் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு வாழை குலைகள் அனுப்பி வைக்கப்படுகிறது. குறிப்பாக சென்னைக்கு அதிக அளவில் கொண்டு செல்லப்படுகிறது.

    நேற்று முன்தினம் பகலில் பரமத்திவேலூர், பாண்ட மங்கலம், பொத்தனூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வழக்கம்போல் வெயில் கொளுத்தி வந்த நிலையில் மாலை 6 மணிக்கு திடீரென மழையுடன் கூடிய பலத்த காற்று வீசியது.

    இதில் பொத்தனூர் காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் ஏக்கர் கணக்கில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த வாழைகள் அடியோடு முறிந்து விழுந்தன. இதே போல் பாண்டமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழைகளும் பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் முறிந்து விழுந்தன.

    வாழைகளுக்கு நாட்டப்பட்டிருந்த கம்புகளும் காற்றில் பெயர்ந்து கீழே சாய்ந்தது. அதுபோல் கயிறுகள் அறுந்து வாழைகள் கீழே சாய்ந்தன. பலத்த காற்றில் என சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சேதம் அடைந்ததாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

    சாகுபடி செய்யப்பட்ட பூவன், கற்பூரவள்ளி, ரஸ்தாலி, மொந்தன், பச்சநாடான் போன்ற வாழை குலைகள் பிஞ்சிலேயே சேதம் அடைந்ததால் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×