search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சின்னமுட்டம்"

    கன்னியாகுமரி சின்னமுட்டத்தில் மீனவர்கள் கோஷ்டி மோதல் தொடர்பாக பெண்கள் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி சின்ன முட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தின் பங்கு பேரவைக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடை பெற்றது.

    இந்த பங்கு பேரவை தேர்தலையொட்டி இரு தரப்பினர் இடையே பிரச் சினை ஏற்பட்டு முன் விரோதம் உருவானது. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் இந்த பிரச்சினை தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த மீனவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இது கோஷ்டி மோதலாகவும் மாறியது.

    இதன்காரணமாக இரு தரப்பை சேர்ந்த மீனவர்களும் மற்றவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இரும்பு கம்பி, கம்புகளுடன் வீடு புகுந்தும் தாக்கினார்கள். கல் வீச்சில் பல வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இதனால் வீடுகளில் இருந்த பெண்களும், குழந்தைகளும் அலறியடித்துக் கொண்டு ஓட்டம்பிடித்தனர்.

    இந்த மோதல் காரணமாக அந்த பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்தது. மேலும் பதட்டமான சூழ்நிலையும் உருவானது.

    இந்த கோஷ்டி மோதல் பற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக அங்கிருந்து போலீஸ் படையினர் சின்னமுட்டத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் கோஷ்டி மோதலை தடுத்து நிறுத்தினார்கள். மேலும் அங்கு மோதல் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இந்த கோஷ்டி மோதலில் இருதரப்பையும் சேர்ந்த 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் இந்த மோதல் தொடர்பாக இருதரப்பை சேர்ந்தவர்களும் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தனர்.

    சின்னமுட்டம் சர்ச் தெருவை சேர்ந்த கஸ்பின் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சவுந்தர்ராஜன், வர்கீஸ், ஜார்ஜ், சேகர், கனிஸ்கர் உள்பட 50 பேர் மற்றும் கண்டால் தெரியும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது.

    மேலும் சேகர், கனிஸ்கர், சிலுவை, ஜோனல் அயன் சிங், லியோன் என்ற பட்டு, ராஜன், சுமதி, பூங்காவனம், மேக்னா, ராணி ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல ஜேசுபுத்திரன் கொடுத்துள்ள புகாரில் தமிழ், சில்வஸ்டர், லாரன்ஸ், காட்வின், உட்பின், சுபின் உள்பட 15 பேர் மற்றும் கண்டால் தெரியும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் கொடுத்துள்ள புகாரில் வீடுகள் மீது கற்கள் வீசப்பட்டதாகவும், வீடுகளுக்குள் அத்துமீறி புகுந்து இரும்பு கம்பி, கட்டைகளால் தாக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.

    சின்னமுட்டத்தில் இன்று 2-வது நாளாக பதட்டம் நீடிப்பதால் அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் தொடர்ந்து குவிக்கப்பட்டு உள்ளனர். விடிய, விடிய போலீசார் ரோந்துப்பணியிலும் ஈடுபட்டனர்.


    ×