search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223297"

    • ரூ.5 கோடி மதிப்பீட்டில் படகு இல்லம் பகுதியில், உணவகம் கட்டுமான பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டார்.
    • நடப்பாண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை சுமார் 29 லட்சம் பேர் வருகை தந்து உள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்துவது என்று தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.

    இதன் ஒரு பகுதியாக படகு இல்லத்தில் சாகச விளையாட்டு அமைய உள்ளது. இதற்காக தமிழக அரசு ஏற்கெனவே நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. இந்த நிலையில் தமிழக சுற்றுலா அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் ஊட்டிக்கு வந்திருந்தார். அப்போது அவர் ஊட்டி படகு இல்லத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

    அப்போது ஊட்டி படகு இல்லத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில், தனியார் பொது கூட்டு திட்டத்தின் கீழ் அமைய உள்ள ஜிப் லைன், ஜிப் மிதிவண்டி, பங்கி ஜம்பிங், தொங்கு பாலம் ஆகிய பணிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அடுத்தபடியாக ரூ.5 கோடி மதிப்பீட்டில் படகு இல்லம் பகுதியில், உணவகம் கட்டுமான பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டார்.

    இதனை தொடர்ந்து ரூ.3.25 மதிப்பீட்டில் தயாராகி வரும் கெம்ப்ளிங் சாகசம், மரவீடு ஆகியற்றின் கட்டுமான பணிகளும் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது மேற்கண்ட பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து, சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

    இதனை தொடர்ந்து தமிழக சுற்றுலா அமைச்சர் கா. ராமச்சந்திரன் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டம் ஊட்டி தலைசிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. எனவே இங்கு ஆண்டுதோறும் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஊட்டிக்கு சுற்றுலா வரும் பயணிகளை மேலும் குஷிப்படுத்தும் வகையில், சுற்றுலா வளர்ச்சி பணிகளை மேம்படுத்த வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் அறிவு றுத்தி உள்ளார்.

    இதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், சுற்றுலா வளர்ச்சி அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு கடந்த 2022-வது ஆண்டு சுமார் 24 லட்சம் சுற்றுலாப்பணிகள் வருகை தந்தனர். ஆனால் நடப்பாண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை சுமார் 29 லட்சம் பேர் வருகை தந்து உள்ளனர்.

    ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில், சாகச பூங்கா அமைப்பதற்காக ரூ.10 கோடியும், கோடப்ப மந்து கால்வாய் பணிக்காக ரூ.10 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஊட்டி படகு இல்லத்தில், சாகச சுற்றுலா ரூ.5 கோடி மதிப்பீட்டில் தனியார் பொது கூட்டு திட்டத்தின் கீழ் அமைய உள்ளது.

    இங்கு சாகச விளையாட்டுகளான இழைவரிக்கோடு (நிப் லைன்), விதானப் பயணம் (கேனோபி டூர்), இழைவரி சுழற்சி (ஜிப் சைக்கிள்), மாபெரும் ஊஞ்சல் (ஜெயண்ட் ஸ்விங்), ரோலர் கோஸ்டர் ஜிப்லைன் , பங்கீ ஜம்பிங், ராக்கெட் எஜேக்டர் ஆகிய பணிகள் நடந்து வருகின்றது. அடுத்தபடியாக ஊட்டி கூடுதல் படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.3.25 லட்சம் மதிப்பீட்டில், சாகச மற்றும் கெம்ப்ளிங், மரவீடு உணவகம், வாகனம் நிறுத்தும் வசதி ஆகியவை அமைய உள்ளன. இதன் மூலம் ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இனிவரும் காலத்தில் மேலும் அதிகரிக்கும்.

    ஊட்டியை மேலும் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதற்கான பணிகள் முடிந்த பிறகு நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் மென்மேலும் வளர்ச்சி அடையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட சுற்றுலா அதிகாரி உமா சங்கர், உதவி செயற்பொறியாளர் குணசேகரன், ஊட்டி படகு இல்ல மேலாளர் சாம்சன் கனகராஜ் உட்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

    • மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    • 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மார்க்கெட் திடலில் இந்திய மாணவர் கூட்டமைப்பு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகியவை சார்பில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த பாஜக எம்.பி பிரிட்ஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யக்கோரியும், நீதி கேட்டு போராடிய வீராங்கனைகளை தாக்கிய டெல்லி போலீசாரைகண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    அப்போது மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் யோகராஜ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் மணிகண்டன், இடைகமிட்டி தலைவர் சுகந்தன் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • 10 நிமிட தாமதத்திற்கு பிறகு ஊட்டி புறப்பட்டு சென்றது.
    • 25-க்கும் மேற்பட்ட காட்டு எருமைகள் நின்று கொண்டு இருந்தன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தின் அடையாளமாக மலை ெரயில் சேவை திகழ்ந்து வருகிறது. இது அடா்ந்த வனப் பகுதி வழியாக குறைந்த வேகத்தில் செல்லும். எனவே மலை ரெயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா்.

    இந்த நிலையில் அந்த ரெயில் நேற்று காலை குன்னூரில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்டது. அப்போது டிரைவர் கணேசன் ரெயிலை இயக்கினார். குன்னூரில் இருந்து புறப்பட்ட மலை ரெயில் வெலிங்டன் மேம்பாலப் பகுதி அருகே வந்தது. அப்போது, தண்டவாளத்தின் குறுக்கே 25-க்கும் மேற்பட்ட காட்டு எருமைகள் நின்று கொண்டு இருந்தன. இதனை தற்செயலாக பார்த்த டிரைவர் கணேசன் அதிர்ச்சி அடைந்தார். எனவே அவர் உடனடியாக பிரேக் போட்டு மலை ெரயிலை நிறுத்தினாா். அதன்பிறகு அவா் ரயிலில் இருந்து இறங்கி சென்று தண்டவாளத்தின் குறுக்கே நின்ற காட்டு எருமைகளை காட்டு ப்பகுதிக்குள் விரட்டி னாா். அதன்பிறகு குன்னூ ரில் இருந்து புறப்பட்ட மலை ரெயில், சுமார் 10 நிமிடம் தாமதமாக ஊட்டி க்கு புறப்பட்டு சென்றது.

    • ரோஜா கண்காட்சி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
    • தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது

    ஊட்டி

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுவது வழக்கம்.

    கோடை விழாவையொட்டி ஊட்டியில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மலர் கண்காட்சி நடந்த 5 நாட்களில் மட்டும் 1½ லட்சம் பேரும், ஏப்ரல், மே என கோடை சீசனில் மொத்தம் 8½ லட்சம் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகை தந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 31-ந் தேதியுடன் கோடை சீசன் நிறைவு பெற்றது. தமிழகத்தில் வருகிற 7-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் சீசன் முடிந்த பின்னரும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தருகின்றனர்.

    தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அங்கு மலர் மாடம் மற்றும் கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ள பல வண்ண மலர்களை கண்டு ரசித்தனர். பின்னல் பெரிய புல்வெளி மைதானத்தை குழந்தைகளுடன் விளையாடி பொழுதை கழித்தனர். ஒரே நாளில் 20 ஆயிரம் பேர் வருகை தந்தனர்.

    ஊட்டி படகு இல்லத்தில் மிதி படகுகள், மோட்டார் படகுகள், துடுப்பு படகுகளில் சுற்றுலா பயணிகள் தங்களது குழந்தைகளுடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். காட்சி மாடத்தில் நின்ற படி ஊட்டி ஏரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.

    இதேபோல் ஊட்டி ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைச்சிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது.

    ஊட்டியில் சூட்டிங்மட்டம், பைன்பாரஸ்ட், பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பயணிகள் குவிந்தனர். அவர்கள் தங்களது வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு சுற்றுலா தலங்களுக்கு சென்றதால், அந்த வழியாக வந்த வாகனங்கள் நெரிசலில் சிக்கி தவித்தது.

    இதையடுத்து போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். கோடை சீசன் முடிந்தும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் ஊட்டிக்கு வருகை தந்தனர். இதனால் லோயர் பஜார், சேரிங்கிராஸ் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பஸ் நிலையம் பகுதியில் பல கிலோமீட்டர் தூரத்துக்கு சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதனால் சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் அவதியடைந்தனர்.

    • கேரள பதிவு எண் கொண்ட கார் ஊட்டியில் இருந்து கூடலூர் வந்தது.
    • இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    கூடலூர்

    கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாக ஊட்டிக்கு சுற்றுலா செல்கின்றனர். பி

    ன்னர் மீண்டும் ஊருக்கு திரும்பி செல்லும் போது வாகனங்களை ஓட்டிச் செல்வதில் போதிய கவனம் செலுத்துவதில்லை. இதனால் கட்டுப்பாட்டை இழக்கும் வாகனங்கள் கூடலூர் நகரில் விபத்துக்குள்ளாகி வருகிறது. நேற்று முன்தினம் கேரள பதிவு எண் கொண்ட கார் ஊட்டியில் இருந்து கூடலூர் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பழைய பஸ் நிலையம் அருகே உள்ள நடைபாதையில் இரும்பு கம்பிகளை உடைத்துக்கொண்டு புகுந்தது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடமாக இருந்தாலும், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து கூடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரிய சூண்டியில் இரவு காட்டு யானை ஊருக்குள் புகுந்தது.
    • மேற்கூரைகள் முழுமையாக சேதம் அடைந்தது.

    கூடலூர்

    கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பெரிய சூண்டியில் இரவு காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். இந்தநிலையில் நள்ளிரவு அதே பகுதியை சேர்ந்த சண்முகேஸ்வரன் என்பவரது வீட்டை காட்டு யானை முற்றுகையிட்டது.

    பின்னர் வீட்டின் அருகே இருந்த கூடாரத்தை காட்டு யானை உடைத்து தள்ளியது. இதில் அதன் மேற்கூரைகள் முழுமையாக சேதம் அடைந்தது. அந்த சமயத்தில் வீட்டில் இருந்த சண்முகேஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அச்சத்தில் வீட்டின் பின்பக்கம் வழியாக வெளியேறி உறவினர் வீட்டில் தங்கினர். தகவல் அறிந்த ஓவேலி வனத்துறையினர் விரைந்து வந்து பட்டாசுகளை வெடித்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அதன் பின்னர் காட்டு யானை அங்கிருந்து சென்றது.

    • தண்ணீர் சுத்திகரிப்பு கருவி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
    • பழங்குடியினர் வீடுகளில் பொருத்தப்பட்ட தண்ணீர் சுத்திகரிப்பு கருவியை கலெக்டர் பார்வையிட்டார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை கிராமத்தில் நீலகிரி ஆதிவாசி நல சங்கம் சார்பில் பாபா அணு ஆராய்ச்சி நிலைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மின்சாரம் இல்லாமல் குறைந்த விலையில் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    இதனை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி தெப்பக்காடு யானைகள் முகாம் கூட்டரங்கில் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் அம்ரித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பாபா அணு ஆராய்ச்சி நிலைய தொழில் நுட்பத்தில் தயாரான நீர் சுத்திகரிப்பு கருவிக்கான நண்ணீர் கிராம திட்டம்-2.0 வை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அம்ரித் பேசும்போது கூறியதாவது:-

    தெப்பக்காடு பகுதியில் உள்ள யானைப்பாடி, தேக்குபாடி, கார்குடி, லைட்பாடி ஆகிய 4 கிராமங்களில் 350 வீடுகள் உள்ளன. அங்கு இதுவரை 200 வீடுகளுக்கு தண்ணீர் சுத்திகரிப்பு கருவி இலவசமாக வழங்கப்பட்டு உள்ளது.

    இங்கு வசிக்கும் குழந்தைகளை பெற்றோர் அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அங்கு இவர்களின் உயரம், எடை ஆகியை கணக்கெடுக்கப்பட்டு, அதற்கு தேவையான சத்துணவுகள் வழங்கப்படுகின்றன. இதுதவிர தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இதனை பழங்குடி மகக்கள் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக மசினக்குடி பழங்குடியினர் கிராமத்தில் உள்ள பழங்குடியினர் வீடுகளில் பொருத்தப்பட்டு உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு கருவியை கலெக்டர் பார்வையிட்டார்.

    அடுத்தபடியாக அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து நன்னீர் 1.0 திட்டத்தின் கீழ் செயல்படுத்திய பணிகள் குறித்த புகைப்படத்தை பார்வையிட்ட கலெக்டர் நன்னீர் கிராம திட்ட அறிக்கையை வெளியிட்டார்.

    நிகழ்ச்சியில் கள இயக்குநர் (முதுமலை புலிகள் காப்பகம்) வெங்கடேஷ், கூடலூர் வனஅதிகாரி கொம்மு ஒம்காரம், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் அண்ணாதுரை, குமார், நாவா தலைவர் சண்முகம், செயலாளர் ஆல்வாஷ், திட்ட அதிகாரி பூவிழி (நன்னீர் கிராமம்) நாவா பொருளாளர் சுப்பிரமணி மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பைப்புகள் சுமார் ஒரு மாதத்துக்கும் மேல் அங்கு வீணாக கிடக்கிறது.
    • பஞ்சாயத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கை இல்லை

    அரவேணு,

    கோத்தகிரி தாலுகா, நடுஹட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெட்டெட்டி கிராமத்தில் அம்பேத்கர் நகர், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் பழைய பைப் லைன்களை மாற்றுவதற்காக, புதிய பைப் குழாய்கள் கொண்டுவரப்பட்டது.

    ஆனால் அங்கு பணிகள் இன்னமும் தொடங்கவில்லை. எனவே அந்த பைப்புகள் சுமார் ஒரு மாதத்துக்கும் மேல் அங்கு வீணாக கிடக்கிறது. இதற்கிடையே பழைய பைப் லைன்களில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாகி வருகிறது.

    இதுகுறித்து பஞ்சாயத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கை இல்லை, எனவே அங்கு உள்ள வீடுகளுக்கு புதிய தண்ணீர் குழாய் வசதி ஏற்படுத்தி தர முடியவில்லை. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு, எங்கள் பகுதியில் புதிய பைப் லைன் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    சாலைகளில் குப்பைகளை வீசுபவர்களை கண்காணித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஊட்டி,

    ஊட்டி நகராட்சி நிர்வாகம் சார்பாக தினம்தோறும் காலை,மாலையில் என நகராட்சி குப்பை வாகனங்களில் வந்து குப்ைப பெற்று செல்கின்றனர். இருப்பினும் இரவு நேரங்களில் வாகனங்களில் எங்கெங்கிருந்தோ வந்து மூட்டை, மூட்டையாக குப்பைகளை தினம்தோறும் வீசி செல்கின்றனர்.

    பிளாஸ்டிக் மற்றும் வாழை இலைகள் அதிகமாக காணப்படுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் இதற்கு தீர்வு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் மற்றும் இதுபோல் சாலைகளில் குப்பைகளை வீசுபவர்களை கண்காணித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனசமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • முருக பெருமான் பிறந்த நாள் பெருவிழாவாக வைகாசி விசாகம் அனுசரிக்கப்படுகிறது.
    • டானிங்டன் விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் 108 பால் குடங்களை ஏந்தி ஊர்வலமாக சென்று சக்திமலைக்கு வந்தனர்.

    அரவேனு,

    கோத்தகிரி சக்திமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருநாளையொட்டி பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலமாக சென்றதுடன், கோவிலில் முருகக் கடவுளுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

    முருக பெருமான் பிறந்த நாள் பெருவிழாவாக வைகாசி விசாகம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் திருவிழா கொண்டாட்டங்கள் தடபுடல்படும்.

    வைகாசி விசாகத்தையொட்டி பக்தர்கள் விரதம் இருந்து பால்குடம் எடுத்து சென்று முருக பெருமானை வணங்குவது வழக்கம். இதன் ஒருபகுதியாக கோத்தகிரி சக்திமலை முருகன் கோவிலில் வைகாசி விசாகம் கொண்டாடப்பட்டது. அப்போது டானிங்டன் விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் 108 பால் குடங்களை ஏந்தி ஊர்வலமாக சென்று சக்திமலைக்கு வந்தனர்.

    அங்கு அவர்கள் சுவாமிக்கு நல்லெண்ணெய், பால், பச்சரிசி மாவு, பஞ்சாமிர்தம், திருநீறு அபிஷேகம் செய்து பக்திப்பரவசத்துடன் வழிபட்டனர். அப்போது கோவிலில்,ஐந்து முக விளக்கு ஏற்றி, அதில் 5 வித எண்ணை ஊற்றி, 5 வகை புஷ்பம் சமர்ப்பித்து, சுவாமிக்கு 5 வகை பச்சரிசி மாவு, பஞ்சாமிர்தம், பழங்கள் மற்றும் ளை படைத்து, கந்தனுக்கு பிடித்த அப்பமான கந்தரப்பத்தையும் வைத்து அலங்கார பூஜை நடத்தப்பட்டது.

    இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கந்த கவச பாராயணம் செய்து முருகப்பெருமானை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • தடுப்பு பலகைள் வைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.
    • இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

    ஊட்டி,

    ஊட்டி ரெயில் நிலையம் அருகே உள்ள சாலையில் பாதாள சாக்கடை செல்கிறது. இந்த பாதாள சாக்கடையானது கடந்த ஒரு மாத காலமாக திறந்தே கிடக்கிறது. இதனால் அங்கு தடுப்பு பலகைள் வைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து தடுப்பு பலகை வைக்கப்பட்டது.

    ஆனால் தடுப்பு பலகைகள் வைத்தும் அந்த இடத்தில் அசம்பாவிதங்கள் நடந்த வண்ணம் இருக்கிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் மற்றும் சைக்கிளில் வந்தவர் விபத்தில் சிக்கினர்.

    அது மட்டுமல்லாமல் இரவு நேரங்களில் பாதசாரிகள் கவனமாக செல்லவில்லை என்றால் பாதாள சாக்கடைக்குள் விழும் நிலை உள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

    தற்போது பள்ளிகள் திறக்க இருப்பதால் பள்ளிக் குழந்தைகள் அந்தப் பாதையை தான் பயன்படுத்துவார்கள் எனவே அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படும் முன்னர் சம்பந்தப்பட்ட துறை மக்களின் நலன் கருதி உடனடியாக அதனை சீரமைத்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இங்கு 100-க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
    • தினமும் காலை 6, 8 மணி, மதியம் 1 மணி, மாலை 5 மணி, இரவு 9 .15 மணிவரை பஸ்கள் இயக்கப்படும்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், குன்னூரில் இருந்து 16 கி.மீ. தொலைவில் பக்காசூரன் மலைக் கிராமம் உள்ளது.

    இங்கு 100-க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள மாணவ, மாணவிகளில் பலர் குன்னூரில் படிக்கின்றனர்.

    கிராமத்தினரும் அடிக்கடி வேலைக்கு சென்று திரும்புகின்றனர். பக்காசூரன் கிராமத்தில் போதிய சாலை வசதிகள் இல்லை. எனவே அங்கு வசிக்கும் மக்கள், பல கிலோ மீட்டா் தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது.

    எனவே பக்காசூரன் மலைகிராமத்துக்கு அரசு பஸ் விடவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் அங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, நெடுஞ்சாலைத்துறை சார்பில் போக்குவரத்து சாலை அமைக்கப்பட்டது.

    இருப்பினும் அங்கு பஸ் சேவை தொடங்கவில்லை.. இதுகுறித்து உலிக்கல் பேரூராட்சி, மாவட்ட நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பியது.

    இதனை தொடர்ந்து பக்காசூரன் மலைக்கு பஸ் சேவை தொடங்குவது என்று போக்குவரத்துத் துறை முடிவு செய்தது.

    இதன்படி அங்கு நேற்று முதல் அரசு பஸ் சேவை தொடங்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பக்காசூரன் கிராமத்துக்கு தினமும் காலை 6, 8 மணி, மதியம் 1 மணி, மாலை 5 மணி, இரவு 9 .15 மணிவரை பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனா. உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட பக்காசூரன் கிராமத்தில் 5 ஆண்டுகளுக்கு பிறகு அரசு பஸ் சேவை தொடங்கப்பட்டு இருப்பது பொதுக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    ×