search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223297"

    • கூடலூர் நடுவட்டம் இடையே 26-வது மைலில் ஊசிமலை காட்சி முனை உள்ளது.
    • யூகலிப்டஸ் கற்பூர மரசோலைக்கு சென்ற சுற்றுலா பயணிகள் அதனையும் பார்த்து ரசித்தனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கூடலூர்-ஊட்டி சாலையில் கூடலூர் நடுவட்டம் இடையே 26-வது மைலில் ஊசிமலை காட்சி முனை உள்ளது.

    சீசன் காலங்களில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்த காட்சி முனைக்கு வந்து செல்வது வாடிக்கை.

    சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் இந்த பகுதிக்கு நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்திருந்தனர்.

    அவர்கள் காட்சி முனை பகுதியில் இருந்து கூடலூர் நகர பள்ளத்தாக்கு மற்றும் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி, தவளை மலை காட்சி முனை உள்ளிட்ட பல்வேறு இடங்களை கண்டு ரசித்தனர். மேலும் இதன் அருகே உள்ள யூகலிப்டஸ் கற்பூர மரசோலைக்கு சென்ற சுற்றுலா பயணிகள் அதனையும் பார்த்து ரசித்தனர்.

    மரங்களின் நடுவில் ஊடுறுவி வரும் சூரிய கதிர்களின் வெளிச்சத்தில் வானுயரந்து நிற்றும் மரங்களின் பின்னனியில் நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்தும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • ஒரு மாத காலமாக ஒரு வழிப்பாதையாக பயன்படுத்தப்பட்ட மேட்டுப்பாளையம்-குன்னூர் தேசிய நெடுஞ்சாலை நேற்று முதல் திறக்கப்பட்டது.
    • அவதிக்குள்ளாகி வந்த நிலையில் உள்ளூர் வாசிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோடை சீசன் தொடங்கிய நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் ஏப்ரல் மாத இறுதியில் இருந்து குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலை இரு பாதைகளும் ஒருவழிப்பாதைகளாக மாவட்ட நிர்வாகம் சார்பாக மாற்றியமைக்கப்பட்டது,

    கோவை-மேட்டுப்பாளையம் வழியாக ஊட்டி செல்லும் வாகனங்கள் காட்டேரி-குன்னூர் வழியாகவும் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம்-கோவை ஈரோடு என செல்லும் வாகனங்கள் ஊட்டியிலிருந்து கோத்தகிரி வழியாகவும் செல்ல ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் குன்னூர் லெவல் கிராஸ் பகுதியில் வாகனங்களை கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டு, மேட்டுப்பாளையம் மலைப்பாதை மேல் நோக்கி வரும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டது,

    மாவட்டத்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் நிறைவடைந்த நிலையில் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் ஒரு மாத காலமாக ஒரு வழிப்பாதையாக பயன்படுத்தப்பட்ட மேட்டுப்பாளையம்-குன்னூர் தேசிய நெடுஞ்சாலை நேற்று முதல் திறக்கப்பட்டது.

    இதனால் அனைத்து வாகனங்களும் கீழ்நோக்கி செல்ல அனுமதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த ஒரு மாத காலமாக உள்ளூர் வாகனங்கள் கூட செல்ல அனுமதிக்காமல் அவதிக்குள்ளாகி வந்த நிலையில் உள்ளூர் வாசி களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • இதுகுறித்து மேத்யூ மேல்குன்னூர் போலீசில் புகார் அளித்தார்.
    • மேத்யூவின் வீட்டின் அருகே வசித்து வரும் ஆரோக்கிய மேரி என்பவர் தான் நகை, பணத்தை திருடியது தெரிய வந்தது.

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அட்டடி பகுதியை சேர்ந்தவர் மேத்யூ. இவரது உறவினர் ஒருவர் வீட்டில் திருமண நிகழ்ச்சி நடந்தது. இதற்காக மேத்யூ தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு அங்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்திருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டில் உள்ள பீரோவை பார்த்தார்.

    அப்போது அதில் வைத்திருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் மாயமாகி இருந்தது. இவர்கள் வெளியில் சென்றதை நோட்டமிட்டு மர்மநபர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து மேத்யூ மேல்குன்னூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மேத்யூவின் வீட்டின் அருகே வசித்து வரும் ஆரோக்கிய மேரி என்பவர் தான் நகை, பணத்தை திருடியது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, ஆரோக்கிய மேரியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து நகை, பணத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • போதிய உணவு கிடைக்காமல் விலங்குகள் நீர் நிலைகள் தேடி செல்வது வழக்கம்.
    • மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வனங்களில் பசுமை திரும்பியுள்ளதால், விலங்குகள் நாடமாட்டம் அதிகரித்துள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு அதிகமாக காணப்படும். இச்சமயங்களில் மழை பெய்யாமல், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இரவில் பனி கொட்டிவிடும். இதனால், அனைத்து செடி, கொடிகள் மற்றும் மரங்கள் காய்ந்து போய்விடும். மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கடும் வெயில் நிலவும்.

    இந்த சமயங்களில் பெரும்பாலான வனப்பகுதிகள் காய்ந்து போய்விடும்.

    அதேபோல், நீரோடைகளில் முற்றிலும் தண்ணீர் குறைந்து வறண்டு போய் காட்சியளிக்கும். இதனால், போதிய உணவு கிடைக்காமல் விலங்குகள் நீர் நிலைகள் தேடி செல்வது வழக்கம். குறிப்பாக, முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி, பந்திப்பூர் போன்ற பகுதிகளில் உள்ள விலங்குகள் தண்ணீர் உள்ள பகுதிகளை நோக்கி இடம் பெயர்ந்துவிடும்.

    தற்போது நீலகிரியில் மழை பெய்து வருகிறது. இதனால், அனைத்து வனங்களிலும் பசுமை திரும்பியுள்ளது. குறிப்பாக, முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தெப்பக்காடு, கார்குடி, மசினகுடி போன்ற பகுதிகளில் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. அதேபோல், நீரோடைகள் மற்றும் ஆறுகளிலும் தண்ணீர் ஓடுகிறது. இதனால், விலங்குகள் மீண்டும் திரும்ப தொடங்கியுள்ளன.

    இதனால், ஊட்டியில் இருந்து முதுமலை செல்லும் சாலையோரங்களில் காட்டு யானைகள், காட்டு மாடுகள், மான்கள், நீலகிரி லங்கூர் குரங்குகள், மயில் உள்ளிட்ட சில பறவைகள் சாலையோரத்திலேயே சுற்றித் திரிகின்றன.

    சர்வ சாதாரணமாக சாலையோரங்களில் வலம் வரும் விலங்குகளை வாகனங்களில் இருந்தபடியே சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதுடன், புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர். குறிப்பாக, குழந்தைகள் இந்த வன விலங்குகளை கண்டு உற்சாகமடைகின்றன.

    மேலும், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வனங்களில் பசுமை திரும்பியுள்ளதால், விலங்குகள் நாடமாட்டம் அதிகரித்துள்ளது.

    • அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியல் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் உள்ளதா என ஆய்வு செய்யப்படடது.
    • ஆய்வின் போது, ஊட்டி வட்டாட்சியர் ராஜசேகர், ரேஷன் கடை பணியாளர்கள் பலர் உடனிருந்தனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி நொண்டிமேடு, பாம்பே கேசில் பகுதியில் உள்ள கூட்டுறவு நிறுவனம் ரேஷன் கடைகளில், மாவட்ட கலெக்டர்அம்ரித் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதில் முக்கிய பங்காற்றி வரும் பொது விநியோகத் திட்டத்தினை வலுப்படுத்துவதின் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு நேரடியாக உதவ முடியும் என்பதின் அடிப்படையில் தமிழக அரசு ரேஷன் கடைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது.

    இதுகுறித்து, மாவட்ட கலெக்டர், ஊட்டி நொண்டிமேடு மற்றும் பாம்கே கேசில் பகுதியில் உள்ள கூட்டுறவு பண்டகசாலை மற்றும் ரேஷன் கடையில் விற்பனை முனைய எந்திரத்தில் நடப்பு மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை, மீதமுள்ள அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, ராகி, பாமாயில், பொருட்கள் இருப்பு மற்றும் பொருட்களின் தரம், எடை அளவு ஆகியவற்றினை நேரில் பார்வையிட்டு, அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியல் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதா? என்பதனையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது, ஊட்டி வட்டாட்சியர் ராஜசேகர், ரேஷன் கடை பணியாளர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • முதற்கட்டமாக ெரயில்வே, எஸ்.எஸ்.சி, வங்கி பணியிடங்களுக்கான தேர்வுகளுக்கு, ஒருங்கிணைந்த பயிற்சி
    • திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வகுப்புகள் நடத்தப்படும்.

    ஊட்டி,

    'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை இணைந்து நடத்தும் போட்டி தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்பை, உதகை அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.

    இதில், அவர் பேசியதாவது:-

    பள்ளி கல்வித் துறை சார்பில் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, 'நான் முதல்வன்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாடு இளைஞர்கள் மத்திய அரசு போட்டி தேர்வுகளை எளிதாக அணுகுவதற்கு, சிறந்த திறன் பயிற்சியை வழங்குவதை குறிக்கோளாக கொண்டு போட்டித் தேர்வு பிரிவு தொடங்கப்பட்டது.

    முதற்கட்டமாக ரயில்வே, எஸ்.எஸ்.சி, வங்கி பணியிடங்களுக்கான தேர்வுகளுக்கு, ஒருங்கிணைந்த பயிற்சியை மாவட்டந்தோறும் அளிக்க இருக்கிறது.

    அதனடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் இப்பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலமாக 150 மாணவ, மாணவிகளுக்கு 300 மணி நேரம் தனி வழிகாட்டல், 100-க்கும் மேற்பட்ட மாதிரி தேர்வுகள் என 100 நாட்களுக்கு நேரடி வகுப்பறை பயிற்சி அளிக்கப்படுகிறது.

    சிறந்த வல்லுநர்களைக் கொண்டு, திங்கள் முதல் வெள்ளிக்கி ழமை வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வகுப்புகள் நடத்தப்படும். சனிக்கிழமை அன்று மாதிரி தேர்வு நடத்தப்படும் என்றார்.

    நிகழ்ச்சியில், ஊட்டி கோட்டாட்சியர் துரைசாமி, தொழில் நெறி வழிகாட்டு அலுவலர் கஸ்தூரி, அரசுக்கலைக் கல்லூரி முதல்வர் அருள் ஆண்டனி, ஊட்டி அரசு கலைக்கல்லூரி பணியமர்த்தும் அலுவலர் பாலசுப்ரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 27,28 மற்றும் 29-வது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடந்தது.
    • குன்னூர் நகர செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான சரவணகுமார் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    ஊட்டி,

    குன்னூர் நகரில் ஓட்டுப்பட்டறை சுற்றுவட்டார பகுதிகளில் 27,28 மற்றும் 29-வது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைப்பதற்கான பணிகளை எவ்வாறு நடைபெறுகின்றது என்பதனை மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் குன்னூர் எம்.எல்.ஏ சாந்தி ராமு, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் குருமூர்த்தி, கிளை செயலாளர், மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். குன்னூர் நகர செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான சரவணகுமார் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    மூலவயல் பகுதிகளில் அவ்வப்போது ராட்சத உடும்பு நடமாட்டம் உள்ளது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சிக்குள்பட்ட முதல்மைல் மற்றும் மூலவயல் பகுதிகளில் அவ்வப்போது ராட்சத உடும்பு நடமாட்டம் இருந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக வனத் துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனா். இரைதேடி வரும் உடும்பால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். குடியிருப்புப் பகுதியில் நடமாடும் உடும்பைப் பிடித்துசென்று வனத்தில் விட பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். இந்நிலையில், வனச் சரக அலுவலா் ராஜேந்திரன் தலைமையில் வனத் துறையினா் உடும்பை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.25 வரை கொள்முதல் செய்யப்பட்டது
    • அறுவடையும் செய்யும் தனியார் நிறுவனங்களுக்கு குறைந்த விலைக்கு கொடுக்கின்றனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், மேரக்காய், பீன்ஸ், காலிபி ளவர் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் காய்கறிகளை விவசாயிகள் அறுவடை செய்து, மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

    அங்கு இருந்து தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. கோத்தகிரியில் உள்ள ஈளாடா, கதவுத்தொரை, கட்டபெட்டு, குடுமனை, காக்காசோலை, குருக்குத்தி, நெடுகுளா உள்ளிட்ட பகுதிகளில் முட்டைகோஸ் அதிகளவில் பயிரிடப்பட்டு உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக போதிய மழை பெய்து வருகிறது. எனவே காய்கறி பயிர்கள் செழித்து வளர்ந்து உள்ளன.

    மலை காய்கறிகளில் முட்டைகோஸ் 90 முதல் 100 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும். இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கிலோவுக்கு ரூ.25 வரை கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது முட்டை கோசுக்கு கிலோ ரூ.9-க்கு மட்டுமே கொள்முதல் விலை கிடைத்து வருகிறது. இந்த விலை வீழ்ச்சியால் அதை பயிரிட்ட விவசாயிகள் நஷ்டம் அடைந்து உள்ளனர்.

    இதுகுறித்து ஈளாடா கதவுத்தொரை கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ஒரு கிலோ முட்டைகோஸ் விளைவிக்க ரூ.6 செலவாகிறது. இதனை அறுவை செய்து மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு அனுப்ப போக்குவரத்து செலவு, தொழிலாளர் கூலி உள்பட எக்கச்சக்கமாக செலவாகிறது. எனவே முட்டைக்கோஸ் பயிரிட்ட விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைக்கவில்லை. எனவே, நேரடியாக தோட்டங்களுக்கே வந்து கொள்முதல் மற்றும் அறுவடையும் செய்து வரும் தனியார் நிறுவனங்களுக்கு முட்டைகோசை கிலோ ரூ.8க்கு விற்பனை செய்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.

    • கன்னேரி முக்கில் உள்ள ஜான் சலிவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
    • பச்சை தேயிலை மற்றும் தேயிலைத்தூளுக்கு போதிய விலை கிடைப்பது இல்லை.

    நீலகிரி,

    கோவை மாவட்டம் கோத்தகிரிக்கு மேற்கு ஆஸ்திரேலிய சபாநாயகர் மிஷேல் ராபர்ட்ஸ் தலைமையில் எம்.எல்.ஏக்கள் குழுவினர் கோத்தகிரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    அந்த குழுவில் டாக்டர் ஜெகதீஷ், டேவிட் ஹனி, டேவிட் ஸ்கைப் உள்ளிட்டோர் இடம்பெற்று உள்ளனர். இந்த நிலையில் ஆஸ்திரேலிய எம்.எல்.ஏக்கள் குழுவினர் நேற்று கன்னேரி முக்கில் உள்ள ஜான் சலிவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அப்போது அவர்களுக்கு படுகர் இன மக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய எம்.எல்.ஏக்கள் குழுவினர் கோத்தகிரியில் உள்ள தேயிலை தொழிற்சாலைகளை பார்வையிட்டனர். அங்கு உள்ள பல்வேறு வகை தேயிலை தூளின் ரகங்களை அறிந்த அவர்கள், தேநீர் குடித்து வித்தியாசம் அறிந்து கொண்டனர். அதன்பிறகு மேற்கு ஆஸ்திரேலிய சபாநாயகர் மிஷேல் ராபர்ட்ஸ் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    தமிழகம்- ஆஸ்திரேலியா இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளோம். நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தொழில் பிரதானமாக உள்ளது. ஆனால், இங்கு விளையும் பச்சை தேயிலை மற்றும் தேயிலைத்தூளுக்கு போதிய விலை கிடைப்பது இல்லை. எனவே இங்கு உற்பத்தியாகும் தேயிலைத்தூளை இடைத்தரகர் இன்றி நேரடியாக ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்வது குறித்து ஆராய்ந்து வருகிறோம். இதுதவிர தேயிலை ஆலைகளுக்கான தொழில்நுட்ப உதவிகளையும் வழங்க தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் கோத்தகிரியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து படுகர் இன மக்களின் கலாச்சார நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் ஆஸ்திரேலிய எம்.எல்.ஏக்கள் படுகர் இன பாரம்பரிய உடை அணிந்து, இசைக்கேற்ப நடனமாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார்கள். அப்போது ஆஸ்திரேலிய சபாநாயகர் மிஷேல் ராபர்ட்ஸ் படுகா மொழி யில், அனைவரும் நல்லா இருக்கீங்களா என்று கேட்டு ஆச்சரியப்படுத்தினார். இதனை கேட்ட பழங்குடி மக்கள் கைதட்டி வரவேற்ற னர். இதனை தொடர்ந்து மேற்கு ஆஸ்திரேலியஎம்.எல்.ஏக்கள் குழுவினர், பழங்கு டியின மக்கள் வாழ்க்கை மேம்பாட்டுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செய்ய உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர்.

    • போலீசார் உடலை கைப்பற்றி குன்னூர் அரசு லாலி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குன்னூர்,

    குன்னூர் கன்னிமாரியம்மன் கோவில் தெரு அருகே உள்ள வனப்பகுதியில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக குன்னூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு லாலி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் தற்கொலை செய்தவருக்கு 65 வயது இருக்கும், எதற்காக தற்கொலை செய்தார், அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

    பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடல் அடையாளம் தெரிவதற்காக வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குன்னூர் நகரசபை மாதாந்திர கூட்டம் தலைவர் ஷீலா கேத்ரின் தலைமையில் நடந்தது.
    • குன்னூர் நகரசபை கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

    குன்னூர்,

    குன்னூர் நகரசபை மாதாந்திர கூட்டம் தலைவர் ஷீலா கேத்ரின் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் துணைத் தலைவர் வாஷிம் ராஜா, நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ஏகநாதன் உள்பட நகரசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது நகர்மன்ற உறுப்பினர் ராமசாமி பேசுகையில், அதிகாரிகள் மன்றத்தில் பொய்யான தகவல்களை அளிக்க வேண்டாம். என்ன நடந்ததோ அதை பற்றி மட்டும் பேசுங்கள் என்றார்.

    அடுத்தபடியாக நகராட்சி கமிஷனர் ஏகநாதன் பேசும் போது, தூய்மை பணியாளர்கள் அனைத்து பகுதிகளும் சென்று பணிகளை சரிவர செய்ய வேண்டும்.

    இதனை நகர சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் கண்காணிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

    திமுக நகர மன்ற உறுப்பினார் ஜெகநாதன் பேசும் போது, வண்ணார் பேட்டையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது பணிகள் எதுவும் செய்யாமல், வேலை நடந்ததாக கூறி ரூ. 3 லட்சத்துக்கான தொகை அனுமதிக்கப்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். அடுத்த படியாக தி.மு.க. கவுன்சிலர் ஜாகீர் பேசும்போது, சிங்கார பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 2 கடைகள் கட்டப்பட்டு உள்ளது.

    அதற்கு நகராட்சி அனுமதி அளித்து உள்ளதா, அதற்கான வரி வசூலிக்கப்படுகிறதா என்று கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து குன்னூர் நகரசபை கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

    ×