search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223297"

    • போலீசார் வெலிங்டன் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
    • தடை செய்யப்பட்ட 12 மூட்டைகள் குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

    குன்னூர்,

    நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தசாமி, வெலிங்டன் இன்ஸ்பெக்டர் ஆனந்த நாயகி மற்றும் போலீசார் வெலிங்டன் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட 12 மூட்டைகள் குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

    அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.அவற்றை கடத்தி வந்த வெலிங்டன் பகுதியைச் சேர்ந்த ஜாபர் அலி (45), அப்துல் மஜீத் (54) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் இவர்கள் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து குட்கா வாங்கி வந்து குன்னூரில் விற்பனை செய்ய திட்டமிருந்தது தெரியவந்தது.

    • சுகாதாரமற்ற மற்றும் கெட்டுப்போன சிக்கன் சுமார் 15 கிலோ கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது.
    • துருப்பிடிக்காத பாத்திரங்களை மட்டுமே சமையலுக்காக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை விடுமுறை காரணமாக ஊட்டியில் நிலவக்கூடிய இதமான கால நிலையை அனுபவிக்க தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து தினமும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    இதனை தொடர்ந்து உணவகங்களில் வழங்கப்படும் உணவு பொருட்களின் தரம் குறைவாக இருப்பதாக பொதுமக்களிடம் இருந்து வந்த புகார்களின் அடிப்படையில் நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள உணவகங்களில் திடீர் ஆய்வு செய்து உணவு தரத்தினை உறுதி செய்யுமாறு மாவட்ட உணவு பாதுகாப்புத் துறைக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டார்.

    இதன் அடிப்படையில் மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகுமார் மற்றும் சிவராஜ் ஆகியோர் அடங்கிய குழு ஊட்டி கமர்சியல் ரோடு மற்றும் அதை சுற்றியுள்ள உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண் டனர்.

    இந்த ஆய்வில் சுகாதாரமற்ற மற்றும் கெட்டுப்போன சிக்கன் சுமார் 15 கிலோ கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும், சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த 6 உணவகங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் என மொத்தம் ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. உணவுப் பாதுகாப்புத்துறையின் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கூறிய உணவகங்கள் தங்கள் சமையலறை உள்ளிட்ட இடங்களில் தூய்மைப்படுத்தும் பணியினை தொடர்ந்து வருகின்றனர்.

    இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உணவகங்களில் அனைத்தும் தூய்மையான குடிநீர் மற்றும் நல்ல தரத்துடன் கூடிய உணவு பொருட்களை மட்டுமே பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். மேலும், அனைத்து உணவகங்களும் தங்களது உணவுப் பொருட்கள் தயாரிக்கும் இடத்தை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். துருப்பிடிக்காத பாத்திரங்களை மட்டுமே சமையலுக்காக பயன்படுத்த வேண்டும். மேலும், சமையலுக்காக பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெயை ஒரு முறைக்கு மேல் பயன்படுத்த கூடாது எனவும் அறிவுறுத்தினார்.

    உணவு பொருட்களை பரிமாறுவதற்கு செய்தி தாள்களை பயன்படுத்து வதை தவிர்க்குமாறும், இறைச்சி கடைகளில் பொட்டலமிட நெகிழி பொருட்களை பயன்படுத்த கூடாது எனவும் அறிவுறுத்தினார். மேலும் தவறு செய்பவர்கள் மீது உணவுப் பாதுகாப்பு தரங்கள் நிர்ணய சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

    • உள் தணிக்கை குழு அமைத்து ஆய்வு நடந்து வருகிறது.
    • தும்மனட்டி, டி.மணிஹட்டி (கலிங்கனட்டி) சாலையில் நடைபெற்ற சாலை பணிகள் குறித்து ஆய்வு நடந்தது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை பணிகள் தொடர்பான உள் தணிக்கையில் அதிகாரிகள் குழுவினர் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடக்கும் சாலை மற்றும் பாலம் கட்டுமான பணிகள் தொடர்பாக உள் தணிக்கை குழு அமைத்து ஆய்வு நடந்து வருகிறது.

    இதன்படி, ஊட்டி கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்ய, நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் கண்காணிப்பு பொறியாளர் சரவணன் தலைமையில், கோவை திட்டங்கள் உதவிப் கோட்டப் பொறியாளர் உமா சுந்தரி மற்றும் உதவிப் பொறியாளர்கள் விக்னேஷ்ராம், ஸ்ரீபிரியா ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தும்மனட்டி, டி.மணிஹட்டி (கலிங்கனட்டி) சாலையில் நடைபெற்ற சாலை பணிகள் குறித்து ஆய்வு நடந்தது. இதில் சாலையின் தரம், உறுதித் தன்மை, அளவுகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வில் ஊட்டி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளர் குழந்தைராஜ், ஊட்டி உதவிக் கோட்டப் பொறியாளர் ஜெயப்பிரகாஷ், உதவிப் பொறியாளர் ஸ்டாலின் மற்றும் ஊட்டி தரக்கட்டுப்பாட்டு உதவிப் பொறியாளர் சங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

    • 2022-23 ம் நிதியாண்டில் கூடுதலாக 1748 உறுப்பினர்களுக்கு ரூ. 12.54 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
    • 64 நியாய விலைக்கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ தரச் சான்று வழங்கப்பட்டு உள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்ட கூட்டுறவு துறையின் கீழ் 2 கூட்டுறவு நகர வங்கிகள், 38 பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கங்கள், 14 பிரதம கூட்டுறவு பண்டகசாலைகள், 2 கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள் மற்றும் 2 கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் பிரதான நோக்கம் மாவட்டத்தில் உள்ள சங்க உறுப்பினர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குதல் மற்றும் நியாய விலைக்கடைகள் மூலம் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    கடந்த 2022-23 ஆம் நிதியாண்டில், கூட்டுறவு நகர வங்கிகள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கங்கள் மூலம் கீழ்கண்ட கடன்கள் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    கூட்டுறவு நகர வங்கியின் மூலம் முந்தைய நிதியாண்டை காட்டிலும் 2022-23 ம் நிதியாண்டில் கூடுதலாக 1748 உறுப்பினர்களுக்கு ரூ. 12.54 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கங்கள் மூலம் முந்தைய நிதியாண்டை காட்டிலும் 2022-23 ஆம் நிதியாண்டில் கூடுதலாக 583 உறுப்பினர்களுக்கு ரூ. 77.78 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்ட தோட்ட தொழிலாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தின் மூலம் நகைக்கடன் முந்தைய நிதியாண்டை காட்டிலும் 2022-23 ஆம் நிதியாண்டில் கூடுதலாக 12,116 உறுப்பினர்களுக்கு ரூ. 62.57 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் 2022-23 ஆம் நிதியாண்டில் 64 நியாய விலைக்கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ தரச் சான்று வழங்கப்பட்டு உள்ளது.

    02 அரசு மருந்தகம் மற்றும் 04 கூட்டுறவு மருந்தகத்தின் மூலம் 2022-23-ம் நிதியாண்டில் ரூ 3.84 கோடி விற்பனை செய்து இதுவரை ரூ 0.26 கோடி அளவிற்கு பொது மக்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மற்றும் நீலகிரி கூட்டுறவு நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் முந்தைய நிதியாண்டை காட்டிலும் 2022-23 நிதியாண்டில் கூடுதலாக ரூ 0.66 கோடி அளவிற்கு அந்தியாவசிய மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    பிரதம கூட்டுறவு பண்டகசாலைகளின் மூலம் முந்தைய நிதியாண்டை காட்டிலும் 2022-2023 நிதியாண்டில் கூடுதலாக ரூ 0.18 கோடி அளவிற்கு அத்தியவாசிய மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட் டுள்ளது.

    நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மூலம் முந்தைய நிதி யாண்டை காட்டிலும் 2022-2023 நிதியாண்டில் கூடுதலாக ரூ 24.77 கோடி அளவிற்கு உரம் மற்றும் விதைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.
    • 207 பேர் ஒருநாள் ஒட்டு மொத்தமாக விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஊட்டி,

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் தங்களது 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று ஒரு நாள் ஒட்டு மொத்த விடுப்பு எடுத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நீலகிரி மாவட்டம் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு திணிக்கப்படும் பணி நெருக்கடிகள், விடுமுறை தின, இரவு நேர, வாட்ஸ்-அப், காணொலி ஆய்வுகளைக் கைவிடுதல், ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்குதல், விடுபட்ட மருத்துவ விடுப்பு. ஈட்டிய விடுப்பு, சிறப்பு நிலை, தேர்வுநிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குதல், கணினி ஆபரேட்டர்களை பணிவரன் முறை செய்தல், அனைத்து பணியிடங்களையும் உடனே நிரப்புதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல், அவுட் சோர்சிங் முறையை கைவிடுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என மொத்தம் 207 பேர் ஒருநாள் ஒட்டு மொத்தமாக விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதன் காரணமாக 4 வட்டாரம் 1 தலைமையிடம் ஆகிய இடங்களில் ஒட்டு மொத்த விடுப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவ லகங்கள், அலுவலர்கள் யாருமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.

    • ஏலக்காய், காபி, பாக்கு உள்ளிட்ட பயிர்களை கடந்த சில வாரங்களாக தினமும் சேதப்படுத்தி வருகிறது.
    • சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல தோன்ற மரங்களை சேதப்படுத்தி உள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஸ்ரீமதுரை பகுதியில் காட்டு யானை விவசாய நிலத்துக்குள் புகுந்து ஏலக்காய், பாக்கு மரங்களை சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ஸ்ரீமதுரை ஊராட்சி பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். முதுமலை வனப்பகுதியில் இருந்து தினமும் இரவு 2 காட்டு யானைகள் வெளியேறி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    ஊராட்சிக்குட்பட்ட ஓடக்கொல்லி பகுதியில் ஏலக்காய், காபி, பாக்கு உள்ளிட்ட பயிர்களை கடந்த சில வாரங்களாக தினமும் சேதப்படுத்தி வருகிறது.

    நேற்று முன்தினம் இரவு ஜார்ஜ் உள்ளிட்ட சில விவசாயிகளின் பயிர்களை 2 காட்டு யானைகள் நாசம் செய்தது. இதில் சுமார் 20-க்கும் மேற்பட்ட பாக்கு மரங்களை உடைத்து தின்றது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- முதுமலை வனத்திலிருந்து வெளியேறி தினமும் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து வருகிறது. இது தொடர்பாக வனத்துறையினருக்கு பல முறை தகவல் தெரிவித்தும் நேரில் வருகின்றனர். ஆனால் காட்டு யானைகளை விரட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதில்லை. காட்டு யானைகள் வருகை குறித்து தகவல் கொடுத்தும் எந்த பலனும் இல்லை.

    இதனால் தொடர்ந்து பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல தோன்ற மரங்களை சேதப்படுத்தி உள்ளது. இதனால் விவசாய பயிர்களை பாதுகாக்க முடியாத நிலை உள்ளது. எனவே விவசாயத்தில் உள்ள பல்வேறு சிரமங்களை கருத்தில் கொண்டு வனத்துறையினர் காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பாதாள சாக்கடை மற்றும் நடைபாதை புதுப்பிக்கும் பணி ரூ.9.95 லட்சம் செலவில் தொடங்கியது.
    • நகராட்சி கமிஷனர் ஏகராஜ் மற்றும் நகர மன்ற தலைவர் வாணிஸ்வரி மேகநாதன் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட 21-வது வார்டு பகுதியில் அமைந்துள்ள இரட்டை பிள்ளையார் கோவில் தெருவில் பாதாள சாக்கடை மற்றும் நடைபாதை புதுப்பிக்கும் பணி ரூ.9.95 லட்சம் செலவில் தொடங்கியது.

    இதனை நகராட்சி கமிஷனர் ஏகராஜ் மற்றும் நகர மன்ற தலைவர் வாணிஸ்வரி மேகநாதன் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் அப்பகுதியில் கடை வைத்திருக்கும் உரிமையாளர்கள் நகராட்சி கமிஷனர் மற்றும் நகர மன்ற தலைவரை சந்தித்து அப்பகுதியில் இருக்கும் குறைகளை கூறினார்கள்.

    • கஞ்சாவை முற்றிலுமாக ஒழிக்க ஆபரேஷன் 4.0 என்ற பெயரில் கஞ்சா வேட்டை நடத்தப்பட்டது.
    • போலீசார் 3.5 கிலோ கஞ்சா மற்றும் 4 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் தலைமையில் மாவட்டத்தில் கஞ்சாவை முற்றிலுமாக ஒழிக்க ஆபரேஷன் 4.0 என்ற பெயரில் கஞ்சா வேட்டை நடத்தப்பட்டது.

    இளைய சமுதாயத்தை சீரழிக்கும் கஞ்சாவை விற்பனை செய்பவர்களை பாரபட்சம் பார்க்காமல் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் கோத்தகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுமான் கான் தலைமையிலான போலீசார் முஜாஹிர், சுரேந்தர் ஆகியோர் கட்டபெட்டு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். அவரை பிடித்து விசாரித்ததில் அவர் பீகாரை சேர்ந்த கஞ்சன்குமார் என்பதும், பேண்ட் பாக்கெட்டில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப் பட்டது.

    கஞ்சன்குமார் பீகாரில் இருந்து கோத்தகிரிக்கு தேயிலை தொழிற்சாலையில் பணிபுரிய வந்துள்ளார். இங்கு அவருக்கு போதிய வேலை கிடைக்கவில்லை. இதனால் குறுக்குவழியில் பணம் சம்பாதிக்க அவர் ஆசைப்பட்டார். இதையறிந்த பீகாரைச் சேர்ந்த அவரது நண்பரான பங்கஜ் குமார், ஊருக்கு சென்று விட்டு கிலோ கணக்கில் கஞ்சாவை கடத்தி வந்துள்ளார். அந்த கஞ்சாவை கஞ்சன்குமாரிடம் கொடுத்து விற்கச் சொல்லியுள்ளார். அவ்வாறு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட போது தான் போலீசாரிடம் கஞ்சன்குமார் சிக்கிக் கொண்டார்.

    போலீசார் கஞ்சன்குமாரையும், பங்கஜ்குமாரையும் கைது செய்தனர். போலீசார் அவர்களிடத்தில் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 3.5 கிலோ கஞ்சா மற்றும் 4 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பிடி பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.4 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்த னர்.

    • கழக உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி வினோத் தலைமை தாங்கினார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள தனியார் அரங்கில் அ.தி.மு.க சார்பில் கழக உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், இளைஞர்கள் இளம்பெண் பாசறை மகளிர் குழு அமைப்பது சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி வினோத் தலைமை தாங்கினார். இதில் கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அர்சுணன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சாந்திராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் கம்பட்டி குமார், தப்பகம்பை கிருஷ்ணன், ஸ்டீபன் என்ற வேலு, பேரூராட்சி செயலாளர் நஞ்சு என்ற சுப்பிரமணி ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.

    உடன் கலைபிரிவு மாவட்ட செயலாளர் உயிலட்டி கிருஸ்ணமூர்த்தி ஆகியோர் கலந்துக் கொண்டனர். மேலும் ஒன்றிய, பேரூராட்ச்சி நிர்வாகிகள் மகளிரணி, சார்பு அணி நிர்வாகிகள், நகர, ஒன்றிய, கிளைக்கழக செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • இந்த தொழிற்சாலையில் 2000 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    • இந்த கட்டிடத்தில் இது முதல்முறை தீ விபத்து அல்ல கடந்த ஆண்டும் இதே போல் தீ விபத்து ஏற்பட்டது.

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் இந்திய ராணுவத்திற்கு தேவையான வெடிபொருட்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் 2000 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் தொழிற்சாலையில் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் உள்ள சிடி பிரிவில், 3 வி.கே பகுதியில் உள்ள கட்டிடத்தில் ரோலிங் எந்திரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    அந்த எந்திரத்தில் சிறிய புகை ஏற்பட்டவுடன் அங்கிருந்த தொழிலாளர்கள் அந்த கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

    அப்போது அங்கு தீ விபத்து ஏற்பட்டதில் அங்கு தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதமும், யாருக்கும் எந்த காயமும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இந்த கட்டிடத்தில் இது முதல்முறை தீ விபத்து அல்ல கடந்த ஆண்டும் இதே போல் தீ விபத்து ஏற்பட்டது. அப்போதும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதன் தொடர்ச்சியாக நேற்றும் அதே கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

    இதைப் பற்றி தொழிற்சாலை நிர்வாகம் எதையும் கண்டு கொள்ளாமல் உள்ளது. தொடர்ந்து அந்தப் பகுதியில் தொழிலாளர்களை பணியாற்றி வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என்று தொழிற்சங்கங்த்தினர் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • ஊர்வலத்தில் காளி வேடமணிந்து 5 அடி வேல் குத்தி வந்தது அனைவரையும் கவர்ந்த்து.
    • நிறைவாக மாவிளக்கு ஊர்வலம் மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நடைபெற்றது.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள பாக்கிய நகர் மாரியம்மன் கோவிலில் 46-ம் ஆண்டு தேர் திருவிழா மற்றும் பறவை காவடி பூங்குண்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் அக்கினி சட்டி, பால் குடத்துடன் ஊர்வலம் நடத்தி அழகு குத்தி பறவை காவடியுடன் கோவிலை வந்தடைந்தனர். ஊர்வலத்தில் காளி வேடமணிந்து 5 அடி வேல் குத்தி வந்தது அனைவரையும் கவர்ந்த்து.

    மாலையில் பொது மேடையில் உள்ளூர் மாணவ, மாணவிகள் மற்றும் சிறுவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. நிறைவாக மாவிளக்கு ஊர்வலம் மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நடைபெற்றது.

    • பலத்த காயமடைந்த விஜய நிர்மலாவை கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.
    • போலீசார் மற்றும் வனத்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் யானை, காட்டெருமை, காட்டுப் பன்றி, முயல், கடமான் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு, விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    கூடலூர் அருகே குந்தலாடி பகுதியை சேர்ந்தவர் விஜய நிர்மலா (வயது 51). இந்நிலையில் அவர் தனது சொந்த வேலை காரணமாக வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் கூடலூர்-குந்தலாடி வழியாக அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    சிறிது தூரம் சென்ற நிலையில், அப்பகுதிக்கு திடீரென காட்டு யானை ஒன்று வந்தது. இதை சற்றும் எதிர்பாராத அவர் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்தார். அப்போது அந்த காட்டுயானை அவரை திடீரென தாக்கியது. இதில் கீழே விழுந்த அவர் படுகாயம் அடைந்தார்.

    இதையடுத்து பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை காயமடைந்த அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து கூடலூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×