என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்வெட்டு"

    • நாழிக்கிணறு தீர்த்தம் உள்பட 24 தீர்த்த கட்டங்கள் உள்ளன.
    • 4 அடி உயரம் கொண்ட கல்வெட்டு ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடல் மற்றும் கடலுக்கு அருகில் நாழிக்கிணறு தீர்த்தம் உள்பட 24 தீர்த்த கட்டங்கள் உள்ளன. தற்போது நாழி கிணறு தீட்டத்த கட்டம் மட்டும் பக்தர்கள் பயன்பாட்டில் உள்ளது.

    பொதுவாக அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் கடல் உள்வாங்குவதும் வெளியே வருவதும் இயல்பு. இந்த நேரங்களில் கடலில் இருந்து ஏதாவது கல்வெட்டுகள், மற்றும் பாறைகள் வெளியே தெரியும்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடல் கரையில் சுமார் 4 அடி உயரம் கொண்ட கல்வெட்டு ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது.

    அதனை அங்கிருந்த பவுர்ணமி சித்தர் என்பவர் அதை கண்டு கல்வெட்டு மீது திருநீறு பூசி அதில் பொறிக்கப் பட்டிருந்த எழுத்துக்களை பார்த்த போது கந்த மாதன தீர்த்தம் என்று எழுதப்பட்டிருந்தது.

    இந்த கல்வெட்டு 24 தீர்த்த கட்டங்களில் ஒன்றாகும். இந்த தீர்த்தத்தில் நீராடுபவர்கள் பாவங்களை நீக்கி அவர்களை பரிசுத்தமாக்கும் என்பது ஐதீகம். இதுவும் அந்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து கோவில் நிர்வாகத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிர்வாகத்தினர் வந்து கல்வெட்டை எடுத்துச் சென்று பாதுகாப்பாக வைத்துள்ளனர்.இந்த கல்வெட்டை ஏராளமான பக்தர்கள் பார்த்து வணங்கி சென்றனர்.

    • தாலுகா அலுவலக கட்டிடத்தை சில மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
    • இன்று காலை அந்த கல்வெட்டை பார்த்து சென்றவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டத்தில் திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் புதிய தாலுகா உருவாக்கப்பட்டது.

    அதன்படி புதிய எல்லைகளுடன் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16-ந்தேதி தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் தாலுகா அலுவலகம் செயல்பட தொடங்கியது. அங்கு அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரில் கல்வெட்டு வைக்கப்பட்டு இருந்தது.

    அதனைத்தொடர்ந்து திசையன்விளை கால்நடை மருத்துவமனை அருகில் ரூ.3 கோடி செலவில் புதிதாக இடம் தேர்வு செய்யப்பட்டு தாலுகா அலுவலக கட்டிடமும் அ.தி.மு.க. ஆட்சி காலத்திலேயே கட்டி முடிக்கப்பட்டது.

    அந்த தாலுகா அலுவலக கட்டிடத்தை சில மாதங்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிலையில் நேற்று இரவு அந்த கட்டிடத்தில் எடப்பாடி பழனிசாமி பெயர் பொறித்த கல்வெட்டை யாரோ பதித்து சென்றுள்ளனர்.

    இன்று காலை அந்த கல்வெட்டை பார்த்து சென்றவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் கல்வெட்டை அங்கிருந்து அகற்றினர். இதற்கிடையே இரவோடு இரவாக அந்த கல்வெட்டை அங்கு கொண்டு வந்து வைத்தது யார்? என திசையன்விளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • அபிராமம் அருகே 15-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
    • இந்த கல்வெட்டு எழுத்தின் அமைப்பை வைத்து பார்க்கும்போது 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள கீழக்கொடு மலூரில் பழமையான எழுத்து பொறித்த கல்வெட்டு இருப்பதாக அந்த ஊரைச் சேர்ந்த கருப்புராஜா கொடுத்த தகவலின்பேரில், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த தாமரைக்கண்ணன், மீனாட்சி சுந்தரம், ஸ்ரீதர் ஆகியோர் அங்கு சென்று கள ஆய்வு செய்தனர். அது விஜயநகர பேரரசு காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு என்பது தெரிய வந்தது.

    இது குறித்து கள ஆய்வு செய்தவர்கள் கூறியதாவது:-

    இந்த கல்வெட்டு கீழக்கொடுமலூரில் வடக்கு பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் தேங்காய் உடைக்கும் படிக்கல்லாக இருந்து வந்துள்ளது. இதனால், கல்வெட்டின் மையப்பகுதி முற்றிலுமாக சிதைந்து காணப்படுகிறது.

    இந்த கல்வெட்டில் 9 வரிகள் இடம் பெற்றுள்ளன. பெரும்பாலான வரிகள் சிதைந்து விட்டது. அவற்றில் சில வரிகள் மட்டும் தெளிவாக தமிழ் எழுத்துகள் இருந்தன. அதில் அந்தராயம் உபயம், மேற்கு, காடு, உட்பட்ட நிலத்தில் பழந்தே அராய்ச்சியும் வெட்டிபாட்ட என்ற வார்த்தைகள் மட்டும் தெளிவாக தெரிகிறது.

    இவற்றை வைத்து பார்க்கும்போது கல்வெட்டில் ஆரம்பமும் முடிவும் இல்லாத ஒரு துண்டு கல்வெட்டில், ஊரின் பெயரும் திசையின் பெயரும் இடத்தின் பெயரும் இடம்பெற்று இருப்பதால், நிலத்தின் 4 எல்லையைக் குறிக்கும் விதமாகவும், அந்த நிலத்தை இறையிலியாக கொடுத்ததற்கான ஆதாரமாக உபயம் என்ற வார்த்தை இடம் பெற்றிருக்கிறது.

    மேலும், கல்வெட்டு இந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு விஜயநகர பேரரசு காலத்தில் நிவந்தம் கொடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த கல்வெட்டு எழுத்தின் அமைப்பை வைத்து பார்க்கும்போது 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஒரு கருங்கல்லில் ஒருபுறம் 10 வரிகள் உள்ள கல்வெட்டும், மறுபுறம் திரிசூலமும் பொறிக்கப்பட்டுள்ளது.
    • ஓரியூர் தேவதானமாக வழங்கப்பட்ட தகவல் திருப்புனவாசல் கோவில் கல்வெட்டுகளில் இல்லை.

    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள ஓரியூர் கீழக்குடியிருப்பில் கல்வெட்டு இருப்பதாக நாகணி ஆசிரியர் அர்ச்சுனன், ஓரியூர் கண்ணன் ஆகியோர் கொடுத்த தகவலின் பேரில் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு அந்த கல்வெட்டை ஆய்வு செய்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

    சிவன் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தின் எல்லையில் திரிசூலம் பொறித்த சூலக்கற்கள் நடுவது வழக்கம். சேதுபதி மன்னர் கால சூலக்கற்களில் பெரும்பாலும் கல்வெட்டு இருக்கும். ஆனால் பாண்டியர் கால சூலக்கற்களில் கல்வெட்டு இருப்பதில்லை. சூலம் மட்டுமே இருக்கும்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன் முறையாக பாண்டியர் கால கல்வெட்டுடன் கூடிய சூலக்கல் ஓரியூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    ஓரியூர் கீழக்குடியிருப்பு கால்வாய் பகுதியில் 2 அடி உயரமும் 1½ அடி அகலமும் உள்ள ஒரு கருங்கல்லில் ஒருபுறம் 10 வரிகள் உள்ள கல்வெட்டும், மறுபுறம் திரிசூலமும் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் சில எழுத்துகள் அழிந்துள்ளன. எனினும் முயன்று படித்து இதன் முழு தகவலும் அறியப்பட்டது.

    அதாவது புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசல் சிவன் கோவிலுக்கு ஓரூரான வானவன் மாதேவி நல்லூர் கீழைக்குறுச்சி தேவதானமாக கொடுக்கப்பட்டுள்ளது. தானமாக கொடுக்கப்பட்ட நிலத்தில் பயிரிடும் உரிமை உலகுய்யவந்த நல்லூரைச் சேர்ந்த நின்ற நிலையன்றாதானான் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இது நிலத்தில் பயிரிடும் உரிமை வழங்கும் காராண்கிழமை கல்வெட்டு ஆகும். இந்த கல்வெட்டில் ஓரியூர் எனப்படும் ஊர் ஓரூரான வானவன் மாதேவி நல்லூர் எனவும், அதன் ஒரு பகுதியான கீழக்குடியிருப்பு கீழைக்குறுச்சி எனவும் குறிப்பிடப்படுகிறது.

    ஓரியூர் தேவதானமாக வழங்கப்பட்ட தகவல் திருப்புனவாசல் கோவில் கல்வெட்டுகளில் இல்லை. இந்த கல்வெட்டின் எழுத்து வடிவத்தை கொண்டு கி.பி.13-ம் நூற்றாண்டின் பிற்பகுதியை சேர்ந்தது எனலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • கல்வெட்டில் 2 வரியில் எழுத்துக்கள் உள்ளன. முதல் வரியில் த, ர போன்ற சில எழுத்துகள் தவிர மற்றவை முழுவதும் சிதைந்துள்ளன.
    • குகையில் வெட்டப்பட்டுள்ள 5 கற்படுகைகளைக் குறிக்க 5 என்ற எண்ணாக 5 கோடுகள் கொஞ்சம் சாய்ந்த நிலையில் மிகவும் தெளிவாக வெட்டப்பட்டுள்ளன.

    திருப்பரங்குன்றம்:

    முருகனின் அறுபடை வீடுகளில் முதன்மையானதாக விளங்குகிறது மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம். இக்குன்று முழுவதும் வரலாற்றுச் சிறப்புடையதாகத் திகழ்கிறது. இக்குன்றில் முற்கால பாண்டியர்களின் பல குடைவரைக் கோவில்கள் உள்ளன.

    திருப்பரங்குன்றம் ரெயில் நிலையம் எதிரில் உள்ள குன்றின் மேற்குச் சரிவில் இயற்கையாக அமைந்த 2 குகைகள் உள்ளன. அதில் மேலே உள்ள குகையில் ஏராளமான கற்படுகைகளும் கி.மு.1 மற்றும் கி.பி.1-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 3 தமிழி கல்வெட்டுகளும் உள்ளன. இவை மத்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    இங்கு சமணர் படுகை உள்ளது. இதன் உள்ளே 5 கற்படுகைகள் உள்ளன. வட்ட வடிவமான இதன் முகப்புப் பகுதியில் மழை நீர் உள்ளே செல்லாதவாறு காடி வெட்டப்பட்டுள்ளது. இக்குகையின் விதானத்தின் மேற்குப் பகுதியில் ஒரு தமிழி கல்வெட்டு உள்ளது. இதனை பாறை ஓவியம், கல்வெட்டு, குடைவரைகள் பற்றி ஆய்வு செய்து வரும் மதுரை தொல்லியல் ஆய்வாளர் வெ.பாலமுரளி கண்டுபிடித்துள்ளார்.

    இதுபற்றி அவர் கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் ஆய்வாளர் உதயகுமார் ஆகியோர் நேரில் சென்று இக்கல்வெட்டை படி எடுத்து, மூத்த தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் உதவியுடன் மீண்டும் படித்தனர்.

    இது பற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, தொல்லியல் ஆய்வாளர் வெ.பாலமுரளி ஆகியோர் கூறியதாவது:-

    இக்கல்வெட்டில் 2 வரியில் எழுத்துக்கள் உள்ளன. முதல் வரியில் த, ர போன்ற சில எழுத்துகள் தவிர மற்றவை முழுவதும் சிதைந்துள்ளன. 2-ம் வரியிலும் சில எழுத்துகள் அழிந்துள்ளன. சில எழுத்துகள் கொஞ்சம் இடைவெளி விட்டு எழுதப்பட்டுள்ளன. முதல் வரியின் தொடர்ச்சியாக அமைந்த இரண்டாம் வரியில் உள்ள எழுத்துகளை 'யாரஅதிறஈத்த/////வதர' என படிக்கலாம். குகையில் வெட்டப்பட்டுள்ள 5 கற்படுகைகளைக் குறிக்க 5 என்ற எண்ணாக 5 கோடுகள் கொஞ்சம் சாய்ந்த நிலையில் மிகவும் தெளிவாக வெட்டப்பட்டுள்ளன.

    இக்கற்படுகைகளை அமைத்துக் கொடுத்தவர் பெயராக 'யாரஅதிற' என்பதைக் கொள்ளலாம். இதன் இறுதியில் உள்ள எழுத்துகளை அதிட்டானம் என முயன்று படிக்கலாம். இதில் 'அ' சிதைந்துள்ளது. அதிட்டானம் என்றால் இருக்கை எனவும் பொருளுண்டு. இது குகையில் வெட்டப்பட்டுள்ள கற்படுகையிலான இருக்கையைக் குறிக்கிறது. அரிட்டாபட்டி, தொண்டூர் ஆகிய ஊர்களில் உள்ள தமிழிக் கல்வெட்டிலும் 3 கற்படுகைகளைக் குறிக்க 3 கோடுகள் செதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கடினமான பாறையிலும் கல்வெட்டு சிதைந்திருக்கும் நிலை "அ" மற்றும் "ர" போன்ற எழுத்துகளின் வடிவமைப்பு, "5" என்ற எண்ணைக் குறிக்க 5 கோடுகளை செதுக்கி வைத்திருக்கும் முறை ஆகியவற்றைக் கொண்டு இதன் மேலே உள்ள 3 குகைக் கல்வெட்டுகளை விட புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இக்கல்வெட்டு காலத்தால் முந்தியது என்பதை அறிய முடிகிறது. எனவே இக்கல்வெட்டை கி.மு.2ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம்.

    இக்கல்வெட்டை மத்திய தொல்லியல் துறையும், தமிழ்நாடு தொல்லியல் துறையும் மேலும் ஆய்வு செய்து இதன் முழு வாசகத்தையும் வெளிக் கொண்டு வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினர்.

    • 1100 ஆண்டுக்கு முன்பே மிகச்சிறந்த ஊராட்சி நிர்வாக முறை இருந்து இருப்பது கல்வெட்டில் கண்டறியப்பட்டுள்ளது.
    • நிர்வாகத்தின் பதவிக்கு போட்டியிடுவதற்கு முன் தங்கள் சொத்துக் கணக்கை தாக்கல் செய்து உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத் அடுத்த பழையசீவரம் கிராமத்தில் வைகுண்டநாதர் பெருமாள் கோவில் உள்ளது. இது 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது ஆகும்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்குள்ள கல்வெட்டு ஒன்றில் 1100 ஆண்டுக்கு முன்பே மிகச்சிறந்த ஊராட்சி நிர்வாக முறை இருந்தது பதிவு செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மரியாதை நிமித்த வாக்கியமான "பெருமக்கள்" என வாரிய பொறுப்பாளரை அழைத்து உள்ளனர். அவர்கள் நிர்வாகத்தின் பதவிக்கு போட்டியிடுவதற்கு முன் தங்கள் சொத்துக் கணக்கை தாக்கல் செய்த தகவலும் உள்ளது. இது ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

    இதுகுறித்து வரலாற்று ஆராய்ச்சியாளர் அஜய்குமார் என்பவர் கூறியதாவது:-

    1100 ஆண்டுக்கு முன்பே மிகச்சிறந்த ஊராட்சி நிர்வாக முறை இருந்து இருப்பது கல்வெட்டில் கண்டறியப்பட்டுள்ளது. நிர்வாகத்தின் பதவிக்கு போட்டியிடுவதற்கு முன் தங்கள் சொத்துக் கணக்கை தாக்கல் செய்து உள்ளனர். இந்த செய்தி கோவிலில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    அதுமட்டுமல்லாது, இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஒருவரின் பதவிக்காலம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு முறை தேர்வு செய்யப்படுபவர் மறுமுறை மீண்டும் போட்டியிட முடியாது. மேலும் வாரியம் செய்வோர் பிற ஊர்களுக்கும் சென்று வாரியம் செய்த செய்தியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏரி வாரியம், சம் வத்சர ஆண்டு வாரியம் என இரண்டு வாரியங்கள் செயல்பட்டு வந்ததும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வாரியப் பெருமக்கள் கணக்கு காட்ட வேண்டும் என்றும், வாரியப் பணிகளை செய்யாமல் இருத்தல் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    விண்ணபுரத்து பெருங்குறி சபையார் சீர்குட்டி அம்பலத்தில் கூடி வாரியஞ்செய்பவரை தேர்ந்தெடுப்பர் என்றும், அவருக்கு 2 கழஞ்சு பொன் அதாவது 10 கிராம் தங்க நகை ஊதியமாக வழங்கி, அவர்கள் லஞ்சம் லாவண்ணியத்தில் சிக்காதவாறு வருமானத்தை அளித்து வந்ததும் உள்ளது.

    10-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பார்த்தி வேந்திராதிபதி மற்றும் முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டுக்கள் இந்த கோவிலில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாகையில் மாணவர்களுக்கு பழங்கால கல்வெட்டு குறித்த பயிற்சி முகாம் நடை பெற்றது.
    • முகாமில் மாணவர்கள் பழங்கால மக்களின் வாழ்வியல் முறைகளையும், அவர்கள் பயன்படுத்திய கருவிகள், கல்வெட்டுகள் ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட அருங்காட்சியகமும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறையும் இணைந்து கல்வெட்டு மற்றும் ஓலைச்சுவடி குறித்த 2 நாள் பயிற்சி முகாம் நடந்தது.

    முதல் நாள் பயிற்சியில்,மாணவ-மாணவிகள் அருங்காட்சியகத்தில் உள்ள பழங்கால மக்களின் வாழ்வியல் முறைகளையும், அவர்கள் பயன்படுத்திய கருவிகள், கல்வெட்டுகள் ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.

    அப்போது அருங்காட்சியக ஊழியர்கள், அங்குள்ள புதைபொருட்கள் பற்றியும், அவை கண்டெடுக்கப்பட்ட இடம், காலம் ஆகியவை குறித்தும் மாணவ - மாணவிகளுக்கு விளக்கம் அளித்தனர்.பின்னர் நாகை காயாரோகண கோவில் சென்று நேரடியாக கல்வெட்டு படி எடுத்தல், ஓலைச்சுவடி அமைப்பு முறை, வடிவம், பராமரிப்பு ஆகியவற்றை மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

    தொடர்ந்து 2-ம் நாள் பயிற்சியில் மதுரை மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியர் மருது பாண்டியர், கல்வெட்டுகள் எழுத்துமுறை, கிரந்த, பிராமி, வட்டெழுத்துக்கள், குறியீடு, கல்வெட்டுகள் தோன்றிய விதம் குறித்து மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

    முகாமில் கல்லூரி முதல்வர் பொன்னி கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். முன்னதாக தமிழ்த்துறை தலைவர் சந்திரசேகர் வரவேற்றார்.

    • ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் ஆரணியார் அணை உள்ளது.
    • ஆரணி ஆற்றில் பழமையான கல்வெட்டு ஒன்று கிடப்பதை அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிலர் பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் ஆரணியார் அணை உள்ளது. இந்த அணை முழுவதுமாக நிரம்பினால் உபரி நீர் ஆரணி ஆற்றில் திறந்து விடப்படுவது வழக்கம். இப்படி திறந்து விடப்படும் தண்ணீர் பிச்சாட்டூர், ராமகிரி, நந்தனம், சுப்பாநாயுடுகண்டிகை, காரணி சுருட்டப்பள்ளி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி வழியாக பாய்ந்து கடலில் கலக்கிறது.

    இந்த நிலையில் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் பழமையான கல்வெட்டு ஒன்று கிடப்பதை அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிலர் பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதுபற்றி அறிந்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று அந்த கல்வெட்டை கைப்பற்றினர். சுமார் 4 அடி உயரம், 3 அடி அகலம் கொண்ட மிகவும் பழமையான அந்த கல்வெட்டில் கால பைரவர் உருவம் இருந்தது.

    மேலும் கால பைரவர் உருவத்தின் கீழ் சில எழுத்துக்கள் பதியப்பட்டுள்ளன. அது எந்த காலத்தில் உள்ள மொழி என்பது தெரியவில்லை.

    இது குறித்து சென்னையில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சி கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் ஆராய்ச்சி செய்த பின்னர்தான் கல்வெட்டு எந்த காலத்தை சேர்ந்தது என்பது தெரியவரும். கண்டெடுக்கப்பட்ட காலபைரவர் கல்வெட்டு தற்போது ஆரணிஆற்றின் கரையில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றுப்புற கிராம மக்கள் ஏராளமானோர் பார்த்து செல்கிறார்கள்.

    • பழங்காலத்தில் உழவர்கள் ஏர்கலப்பை மற்றும் கால்நடை சார்ந்த குறியீடுகளைத்தாங்கி நிற்கின்றது.
    • கல்வெட்டுகள் 85க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன.

    உடுமலை :

    மடத்துக்குளம் அருகே கடத்தூர் கிராமத்தில் சித்திரமேழி கல்வெட்டு உள்ளது. உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் இந்த கல்வெட்டை ஆய்வு செய்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:- கடத்தூரில் உள்ள சித்திரமேழி நாட்டார் கல்வெட்டானது வேளாண்மை சார்ந்தும், அப்போதிருந்த வணிகம் சார்ந்தும் பேசக்கூடிய ஒரு மிகப்பெரிய கல்வெட்டாகும்.சித்திரமேழி என்பது பழங்காலத்தில் உழவர்கள் ஏர்கலப்பை மற்றும் கால்நடை சார்ந்த குறியீடுகளைத்தாங்கி நிற்கின்றது.

    இந்த கல்வெட்டில் வில் அம்பு, பூர்ண கும்பம், வாள், முரசு, அரசனின் மேலிருக்கும் வெண் கொற்றக்குடை, வெண்சாமரம், வெண்சங்கு என அப்போதைய மண்ணின் மைந்தர்கள் பயன்படுத்திய உழவு சார்ந்த கருவிகளும் இந்தக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.உழவுத்தொழில் மேற்கொண்ட குழுக்களை சித்ரமேழி பெரிய நாட்டார் என்றும் அழைக்கப்பட்டனர்.

    கடத்தூர் மருதீசர் கோவிலிலும், அருகிலுள்ள கணியூர், சோழமாதேவி, கண்ணாடிப்புத்தூர் கொழுமம் கோவில்களிலும், நிலக்கொடை சார்ந்த கல்வெட்டுகள் 85க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன.ஆனால் இந்தக் கல்வெட்டு காலத்தால் முந்தைய கல்வெட்டாக உள்ளது. இவ்விடத்தில் மிகப்பெரிய ஒரு கால்நடை சந்தை இருந்துள்ளது. அதைச் சுற்றி பாதுகாப்பாகவும் அகழியாகவும் நீர் அரண் என்ற பாதுகாப்பு இருந்ததால் தான் இந்த கடத்தூர் பகுதியைத் தேர்ந்தெடுத்து கால்நடை மற்றும் வேளாண் வணிகர்கள் பயன்படுத்தியுள்ளனர்.இந்த இடத்தில் கோட்டை இருந்ததையும் தொல்லியல் துறையால் அகழ்வாய்வு செய்தால் வரலாறு தெரிய வரும் என்றனர்.

    • 7 அடி உயரத்துடன் ஒன்றே கால் அடி அகலத்துடன் இருபுறமும் 80 வரிகளில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது
    • குளத்தின் நீரை பயிருக்கு மட்டுமே பாய்ச்ச வேண்டும் என தகவல் பதிவு பொறிக்கப்பட்டுள்ளது

    கந்தர்வக்கோட்டை,

    கந்தர்வக்கோட்டை அருகே கலலுக்காரன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சம்பட்டிப்பட்டியில் கல் பலகை நட்டிருப்பதாக குரும்பூண்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் சேகர் அளித்த தகவலின் பேரில், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தொல்லறிவியல் துறை ஆய்வாளர் ஆ. மணிகண்டன் கல்வெட்டை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறும் போது,

    சம்பட்டிப்பட்டி கல்வெட்டில் 7 அடி உயரத்துடன் ஒன்றே கால் அடி அகலத்துடன் உள்ள பலகைக் கல்லின் இருபுறமும் 80 வரிகளில் எழுதப்பட்டுள்ளது. ராசராச வளநாடு, ராசேந்திர சோழ வள நாடு, அன்பில் எனப்படும் அம்புக் கோவில் தெற்கிலூரில் காணியுடையார் மக்களில் திருமலைராய தொண்டைமானார் என்று குறிப்பிட்டு இருப்பதன் மூலம் தொண்டைமான் மன்னர்களின் பூர்வீகமாக அம்புக்கோவிலை குறிப்பிடுவதை அறிந்து கொள்ள முடிகிறது.

    மேலும் இவ்வூரில் இருக்கும் பகவாந்ராயர் மற்றும் ராசிவராயர் ஆகியோருக்கு சம்பட்டிப்பட்டியில் அமைந்துள்ள பிரமன் வயலை மானியமாக வழங்கிய மன்னின் உத்தரவு, தாமிரத்தில் எழுதி சாசன மாக்கப்பட்டதையும், நிலத்தின் 4 எல்லைகளும் வாமன கோட்டுருவம் பொறிக்கப்பட்ட எல்லைகல் நடப்பட்டதையும் பொது ஆண்டு 1758-ல் பொறிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பிரம்ம குளத்தின் நீரை பயிருக்காக மட்டுமே பாய்ச்ச வேண்டும் என்றும்,

    இதற்கு இடையூறு செய்வோர் தோஷத்துக்கு ஆளாவார்கள் என்று எச்சரிக்கை விடுத்தும் அந்த கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    • புதுக்கோட்டை அருகே 1000 ஆண்டுக்கு முந்தைய நீர்ப்பாசன வசதி அமைப்புக்கான ஆதார கல்வெட்டு கண்டுபிடிக்கபட்டது
    • புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் நிறுவனர் ஆ.மணிகண்டன், தலைவர் கரு.ராசேந்திரன் ஆகியோர் கள ஆய்வு செய்தனர்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் (திருப்பெருந்துறை)குளத்து குடியிருப்பு கிராமத்தில் பழமையான பாலம் இருப்பது குறித்து முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் பூமி. ஞானசிவம் அளித்த தகவலின் பேரில், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் நிறுவனர் ஆ.மணிகண்டன், தலைவர் கரு.ராசேந்திரன் ஆகியோர் அங்கு கள ஆய்வு செய்தனர். அப்போது பாலத்தில் இருந்த கல்வெட்டை படியெடுத்தனர். இதில் திருவாடுதுறை ஆதீனத்தின் காறுபாறாக இருந்த கண்ணப்ப தம்பிான் என்பாரின் உத்தரவுபடிக்கு பாலம் கட்டப்பட்டது என அதில் பதிவு செய்திருப்பது தெரியவந்தது.

    இது குறித்து ஆய்வுக்கழக நிறுவனர் மணிகண்டன் கூறியதாவது, திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் திருப்பெருந்துறை எனும் ஆவுடையார்கோவில் வரலாற்று சிறப்பு மிக்க தலமாகும். ஆதீனத்தின் பதினேழாவது பட்டமாக இருந்த அம்பலவான தேசிகர் காலத்தில் காறுபாறாக இருந்த கண்ணப்ப தம்பிரான் 1889 வருடம் ஆகஸ்டு மாதம் மக்களின் விவசாய பயன்பாட்டிற்காக, வெள்ளாற்றிலிருந்து வாத்தலையை(சிறு கால்வாய்) வெட்டி ஆவுடையார்கோவில் பெரிய கண்மாய்க்கு நீரைக்கொண்டு வந்துள்ளார்.

    குளத்துகுடியிருப்பு கிராம மக்கள் திருப்பெருந்துறை சென்று வருவதற்கு பாலத்தையும், பாலத்திலேயே சிறப்பான பலகை அடைப்பு முறையில் நீரின் போக்கைகட்டு ப்படுத்துவதற்கு கலிங்கு அமைப்பையும் ஏற்படுத்தியுள்ளார், போக்குவரத்து மற்றும் நீர் மேலாண்மை ஆகிய இரு தேவைகளையும் உணர்ந்து ஒரே கட்டுமானத்தில் இதனை நிறைவேற்றி உதவியுள்ளார். இது முழுக்க கருங்கல், செங்கல், சுண்ணாம்பு கொண்டு கட்டப்பட்ட ஒரு கட்டுமானமாக உள்ளது.

    மூன்றரை அடி உயரம் , ஒன்றரை அடி அகலத்துடன் உள்ள பலகைக்கல்லில், 14 வரிகளில் "சிவமயம் 1889 வருசம் ஆகஸ்டு மீ . விரோதி வருசம் ஆவணி மீம் இந்த வாத்தலையும் வெட்டி யிந்த கலுங்கு வேலையும் ட்றஸ்ட்டி கண்ணப்ப தம்பிறான் உத்திரவுபடி கட்டி முடித்தது" என்று பாலத்தின் உட்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கல்வெட்டில் தகவலாக பொறிக்கப்பட்டுள்ளது.ஆதீனம் கல்வி , சமூக ஒற்றுமை , பொதுப்பணி , தமிழ் மொழி வளர்ச்சி என பல்வேறு பணிகளில் ஈடுபடுத் திக்கொண்டுள்ளதையும் , ஆன்மீகப்பணியோடு அறப்பணிகளையும் செய்துள்ளதை இப்புதிய கல்வெட்டு சான்று உறுதி செய்கிறது என்றார். ஆய்வின் போது தொல்லியல் ஆய்வுக்கழக உறுப்பினர் ந.ரமேஷ் குமார் உடனிருந்தார்,

    • அலகாபாத் மியூசியத்தில் இருந்த அந்த தங்க செங்கோல் தற்போது புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் பொருத்தப்பட்டுள்ளது.
    • மருத்துவ முகாம் மற்றும் அறிஞர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    குத்தாலம்:

    நாடு சுதந்திரம் பெற்றபோது அதன் அடையாளமாக திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்து தங்க செங்கோல் செய்யப்பட்டு மவுண்ட்பேட்டனிடம் கொடுத்து அதன் பிறகு அன்றைய பிரதமர் நேருவிடம் வழங்கியதாக வரலாறு.

    அதன் பிறகு அலகாபாத் மியூசியத்தில் இருந்த அந்த தங்க செங்கோல் தற்போது புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் திருவாடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஆதீனங்கள் தனி விமானத்தில் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியிடம் செங்கோலை வழங்கினர்.

    ஆனால், 1947-ம் ஆண்டு இதுபோன்ற நிகழ்வு நடைபெறவில்லை என்றும், இதுகுறித்து மடத்தில் எந்த பதிவேடும் இல்லை என்றும் பல்வேறு தரப்பினர் சர்ச்சைகள் எழுப்பினர்.

    இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், பாராளுமன்றத்தில் செங்கோல் கொடுத்த நிகழ்வை நினைவூட்டும் வகையிலும் குத்தாலம் அருகே உள்ள திருவாவடுதுறை ஆதீன மடத்தில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் இடமான ஒடுக்கத்தின் வெளிச்சுவற்றில் கல்வெட்டாக பொறித்து அதனை திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தனது ஜென்ம நட்சத்திரமான வைகாசி பூரட்டாதியான நேற்று அந்த கல்வெட்டை திறந்து வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து மருத்துவ முகாம் மற்றும் அறிஞர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×