என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சத்குரு"
- கால்பந்தாட்ட சீசன் வேளையில், வளமான மண்ணை நாம் இழந்து கொண்டு இருக்கிறோம்.
- வளமான நிலம் பாலைவனமாகி கொண்டு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
உலக மண் தினமான இன்று, மண் காப்போம் இயக்கம் சார்பில் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உலகளாவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை சத்குரு தொடங்கி வைத்தார். கால்பந்தை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களின் வாயிலாக மண் வளப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பது இப்பிரச்சாரத்தின் நோக்கமாகும்.
உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்றும் இவ்வேளையில் இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் தங்களுடைய சிறந்த கால்பந்தாட்ட வீடியோவை #ScoreForSoil என்ற ஹாஸ் டேக்கை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் பதிவிடலாம். மேலும், அந்த வீடியோவில் மண் வளப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் அவர்கள் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
நிகழ்ச்சியில் சத்குரு கூறுகையில், நாம் கடந்த 25 ஆண்டுகளில் மட்டும் உலகின் மண் வளத்தை 10 சதவீதம் இழந்துவிட்டோம். கால்பந்தாட்ட சீசன் நடைபெறும் இவ்வேளையில், உலகளவில் ஒவ்வொரு 5 வினாடியும் ஒரு கால்பந்தாட்ட மைதானம் அளவிற்கு வளமான மண்ணை நாம் இழந்து கொண்டு இருக்கிறோம்; வளமான நிலம் பாலைவனமாகி கொண்டு இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்
எனவே, மண் அழிவை தடுத்து, இழந்த மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக நாம் மண் காப்போம் இயக்கத்தை கடந்த மார்ச் மாதம் தொடங்கினோம். இவ்வியக்கம் தொடங்கப்பட்ட பிறகு உலகளவில் மண் தொடர்பான பார்வை மாறியுள்ளது. கடந்தாண்டு க்ளாகோவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மாநாட்டில் பருவநிலை மாற்றத்தில் முக்கிய பங்காற்றும் மண் குறித்து யாரும் பேசவில்லை.
ஆனால், மண் காப்போம் இயக்கத்தின் பிரச்சாரத்தால் இந்தாண்டு எகிப்தில் நடைபெற்ற மாநாட்டில் மண் வளம் குறித்த முக்கிய கலந்துரையாடல்கள் நிகழ்ந்துள்ளது. எனவே, மண் வள மீட்டெடுப்பு கொள்கைகள் உலகளவில் கட்டாயம் உருவாக்கப்படும் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், அது எந்த வேகத்தில் நடக்கும் என்பது மட்டுமே என்னுடைய கவலையாக இருக்கிறது.
எனவே, இந்த வேகத்தை துரிதப்படுத்துவதற்கு மக்கள் அனைவரும் பல்வேறு வழிகளில் மண் குறித்து தொடர்ந்து இடைவிடாமல் பேசி கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பெங்களூருவில் மண் வளப் பாதுகாப்பு தொடர்பான மோட்டார் சைக்கிள் பேரணியிலும் சத்குரு பங்கேற்றார்.
- பாரத கலாச்சாரத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி திருநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது.
- தெளிவு என்னும் ஒளியை ஏற்றினால் அறியாமை இருள் தானாக மறைந்துவிடும் என சத்குரு வாழ்த்து தெரிவித்தார்.
கோவை:
பாரத கலாச்சாரத்தின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி திருநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சத்குரு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
கலாச்சார ரீதியாக தீபாவளி தினமானது நரகாசூரனை கிருஷ்ணர் வதம் செய்த தினமாகவும், வனவாசம் முடித்து அயோத்தியாவிற்கு திரும்பிய ராமரை மக்கள் தீபங்களுடன் வரவேற்ற தினமாகவும் கொண்டாடப்படுகிறது. அடிப்படையில், இந்நாள் அறியாமையை வீழ்த்தி தெளிவு என்னும் வெற்றியைப் பெறும் சாத்தியத்தைக் குறிக்கும் நாளாகும்.
தீபம் என்றால் வெளிச்சம். பொதுவாக வெளிச்சம் தெளிவோடும், இருள் அறியாமையோடும் ஒப்பிடப்படுகிறது. இருள் என்பது வெளியில் இருந்தாலும், நமக்குள் இருந்தாலும் நம் கண் முன் இருப்பதே நமக்கு புரியாது. தீபாவளி என்பது வெறும் வீட்டில் விளக்கேற்றும் தினம் கிடையாது. நமக்குள்ளும் விளக்கு ஏற்ற வேண்டும்.
வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு சில குறிப்பிட்ட காரணங்கள் இருக்கிறது. மின் விளக்குகள் இல்லாத காலத்தில் எண்ணெய் விளக்கு என்பது மிகவும் முக்கியமான விஷயமாக இருந்தது. அப்போது சூரியன் மறைந்த பிறகு விளக்கின் தேவை அத்தியாவசியமானதாக இருந்தது. அதன் முக்கியத்துவத்தை நீங்கள் உணர வேண்டுமென்றால், தீபாவளி நாளன்று மின் விளக்குகளுக்கு பதிலாக எண்ணெய் விளக்குகளை வீட்டில் ஏற்றுங்கள். அப்படி செய்தால், அதன் தாக்கத்தையும் ஆனந்தத்தையும் நீங்கள் உணருவீர்கள். அது வீட்டின் சூழ்நிலையையே மாற்றிவிடும். பூஜை அறையில் தினமும் எண்ணெய் விளக்குகளை ஏற்றினால், உங்கள் ஆரோக்கியமும் மேம்படும்.
வெளியில் மட்டுமின்றி, உங்களுக்குள்ளும் வெளிச்சம் வரவேண்டும். உங்களுக்குள் தெளிவை ஏற்படுத்த ஈஷாவின் மூலம் பல யோக கருவிகளை நாங்கள் இலவசமாக வழங்குகிறோம். அதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அறியாமை என்னும் இருளை நீக்குவதற்கு அதனுடன் நீங்கள் போராடக் கூடாது. இருள் நிறைந்த ஒரு இடத்தில் ஒரு ஒளி விளக்கை ஏற்றினால், இருள் காணாமல் போய்விடும். அதேபோல், தெளிவு பிறந்தால் அறியாமை இல்லாமல் போய்விடும். இந்த தீபாவளி திருநாள் உங்கள் வாழ்வில் ஒரு மகத்தான நாளாக இருக்க வேண்டும் என்னுடைய ஆசை, என்னுடைய அருள் என தெரிவித்துள்ளார்.
- கர்நாடக முதல் மந்திரி சிக்கபல்லாபூரில் உள்ள ஈஷா மையத்தில் நாக மண்டபத்தை திறந்து வைத்தார்
- இந்த நாக மண்டபம் அக்டோபர் 10-ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிக்கபல்லாபுராவின் புறநகரில் ஈஷா யோகா மையம் அமைந்துள்ளது.
இந்நிலையில், முதல் மந்திரி பசவராஜ் பொம்மை சிக்கபல்லாபுராவின் புறநகரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சத்குரு முன்னிலையில் நாக மண்டபத்தை நேற்று திறந்து வைத்து, ஈஷா அறக்கட்டளையின் ஆன்மீகப் பணிகளை துவக்கி வைத்தார்.
தொடக்க விழாவின் ஒரு பகுதியாக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை, சுகாதாரத் துறை மந்திரி கே.சுதாகர் ஆகியோர் ஆரத்தி செய்து மலர்களை அர்ப்பணித்தனர்.
அப்போது பேசிய முதல் மந்திரி பசவராஜ் பொம்மை, மண்ணைப் பாதுகாப்பதற்கான சத்குருவின் சமீபத்திய விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம் உலகம் முழுவதும் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது. கர்நாடகாவில் விவசாயிகளுக்கு நன்மை தருகின்ற வகையில் மண்ணின் தரத்தைப் பாதுகாக்க மாநில அரசு உறுதிபூண்டுள்ளது. சத்குரு நமது விவசாயிகளின் இதயங்களில் இருக்கிறார் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சத்குரு, சிக்கபல்லாப்பூர் அருகே உள்ள மையத்தில் 112 அடி ஆதியோகி சிவன் சிலை, எட்டு நவக்கிரக கோவில்கள் மற்றும் தனித்துவமான பைரவி கோவில் ஆகியவை அமைக்கப்படும். இந்த செயலில் மக்கள் அனைவரும் ஈடுபட வேண்டும்.
ஒருவரது வாழ்க்கையில் காணப்படாத தடைகளை அகற்றுவதில் நாகத்தின் அருள் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எனவே உலகெங்கிலும் உள்ள அனைத்து கலாச்சாரங்களும் பாம்பு வழிபாட்டைக் கொண்டுள்ளன என குறிப்பிட்டார்.
புதிதாக கட்டப்பட்டுள்ள நாக மண்டபம் அக்டோபர் 10-ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும்.
- சத்குரு பிறந்த நாளான செப்டம்பர் 3-ம் தேதி நதிகளுக்கு புத்துயிர் ஊட்டும் தினமாக அனுசரிக்கப்படுகிறது
- சத்குருவுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.
கோவை:
சத்குரு அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 3-ம் தேதி நதிகளுக்கு புத்துயிர் ஊட்டும் தினமாக அனுசரிக்கப்படுகிறது. சத்குருவின் பிறந்த தினம் இன்று ஈஷா யோகா மையத்திலும், அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மேலும் சத்குருவுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.
மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ்சிங் சவுகான், கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை, உத்தரகாண்ட் முதல் மந்திரி புஷ்கர் சிங் தமி, காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கமல்நாத், மத்திய மந்திரிகளான நிதின் கட்கரி, ஷோபா, ஹர்ஷ்வர்தன் உள்ளிட்ட பலவேறு துறை மந்திரிகளும், பல்வேறு மாநில அமைச்சர்களும், அரசியல் பிரமுகர்களும் மற்றும் திரைத்துறை பிரபலங்களான கங்கனா ரனாவத், பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி, பாரம்பரிய நடனக்கலைஞர் சோனல் மான்சிங், நடிகர் சந்தானம், நடிகை குஷ்பு உள்ளிட்ட பலரும் தங்களது டுவிட்டர் பக்கங்களில் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
பிரபலங்கள் மட்டுமல்லாமல் ஈஷா தன்னார்வலர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கான மக்கள் டுவிட்டரில் #HappyBirthdaySadhguru #RiverRevitalizationDay ஆகிய ஹேஷ்டேக் உடன் சத்குருவை வாழ்த்தி டுவீட் செய்தனர். இது தேசிய அளவில் முதல் இடத்தில் டிரெண்டிங் ஆனது.
30 வருடங்களுக்கு முன்பு ஈஷா யோகாவை துவங்கி யோகாவை உடல், மன, ஆன்மீக நலத்திற்கான கருவியாக வெகுஜன மக்களுக்கு தொடர்ந்து கொண்டு சென்று கொண்டிருப்பவர் சத்குரு. மேலும் சமூக பங்களிப்பாக 'கிராம புத்துணர்வு இயக்கம்', கிராமப்புற ஏழை குழந்தைகளின் கல்வி மேம்பட 'ஈஷா வித்யா பள்ளிகள்', சூழலியல் மேம்பாட்டிற்கென 'பசுமைக்கரங்கள் இயக்கம்', உழவர் நலனுக்காகவும், விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் 'உழவன் உற்பத்தியாளர் நிறுவனங்கள்' மற்றும் 'இயற்கை விவசாய இயக்கம்', நதிகளை மீட்டெடுக்க 'நதிகளை மீட்போம்' மற்றும் 'காவிரி கூக்குரல் இயக்கம்' என சத்குருவின் தொலைநோக்குப் பார்வையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் சமூக நலனுக்கான பல்வேறு திட்டங்களால் உலகெங்கும் கோடிக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர்.
தனது ஆன்மீக மற்றும் சமூக பணிகளுக்காக சத்குரு இந்திய நாட்டின் உயரிய விருதான பத்ம விபூஷண் விருதினை கடந்த 2017-ம் ஆண்டு பெற்றார். ஒரே நாளில் அதிக மரங்களை நட்டு கின்னஸ் சாதனை, நதிகளை மீட்பதற்கான இந்தியா முழுக்க மிகப்பெரிய விழிப்புணர்வு பயணம், சமீபத்தில் மண் காப்போம் இயக்கத்திற்காக உலக நாடுகளைக் கடந்து 100 நாள் பைக் பயணம் என உலக மக்களின் கவனத்தை சூழலியல் மேம்பாட்டின் பக்கம் திருப்பியவர். இவரின் பேச்சுக்களை 100 கோடிக்கும் அதிகமான மக்கள் பார்ப்பதாக புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. இவர் முன்னெடுத்துள்ள 'மண் காப்போம்' இயக்கம் 300 கோடிக்கும் அதிகமானோரைச் சென்றடைந்துள்ளது. ஒரு சமூக நலன் சார்ந்த விஷயம் ஒருமித்த குரலுடன் இத்தனை பெரிய ஆதரவோடு நிகழ்வது குறிப்பிடத்தக்கது.
- கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் விவசாய நிலங்களில் 2.5 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளது.
- நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்தி, மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்துகின்றனர்.
கோவை:
சத்குருவின் பிறந்த நாளான செப்டம்பர் 3, நதிகளுக்கு புத்துயிர் ஊட்டும் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் செப்டம்பர் 1ம் தேதி முதல் டிம்பர் மரங்களை நட்டு வருகின்றனர். மொத்தம் 130 விவசாயிகளின் பண்ணைகளில் 2 லட்சத்து 52 ஆயிரம் மரங்கள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 3-ம் தேதி வரையில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன.
இதே போன்ற மரம் நடும் நிகழ்வுகள் நம்மாழ்வார், நெல் ஜெயராமன், மரம் தங்கசாமி போன்றோரின் பிறந்த நாளிலும் பெரிய அளவில் தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது.
காவிரி நதிக்கு புத்துயிர் ஊட்டும் வகையில் விவசாயிகள் மூலமாக மரம் நடும் பணியில் காவேரி கூக்குரல் இயக்கம் ஈடுபட்டு வருகிறது. காவேரி வடிநில பகுதிகளில் 242 கோடி மரங்களை நடும் இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் விவசாய நிலங்களில் 2.5 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தமிழகத்தில் மட்டும் 1 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 35 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளது.
தேக்கு, மலைவேம்பு, கருமருது, வேங்கை, மஞ்சள் கடம்பு, சந்தனம், செஞ்சந்தனம், குமிழ், மகாகனி போன்ற பல்வேறு டிம்பர் மரங்கள் வளர்ப்பதன் மூலம் விவசாயிகளின் வருவாய் பல மடங்கு அதிகரிப்பதுடன் மண் வளமும், நீர் வளமும் அதிகரிக்கிறது. மேலும் நடப்பு மழைக்காலத்தில் அதிக அளவில் மரங்கள் நடுவதற்கு தேவையான நாற்று உற்பத்தி மற்றும் மரம் நடுவதற்குத் தேவையான ஆயத்தப் பணிகளையும் காவேரி கூக்குரல் இயக்கம் செய்து வருகிறது.
மேலும் மரம் சார்ந்த விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரங்களிலும் ஈட்டு வருகிறது. இதற்காக பல்வேறு வகுப்புகள் நேரடியாகவும் இணைய வழியிலும் நடத்தி வருகிறது. காவேரி கூக்குரல் இயக்கத்தின் களப்பணியில் உள்ள தன்னார்வலர்கள் ஒவ்வொரு விவசாயியையும் சந்தித்து, அவர்களின் மண்ணுக்கேற்ற மரங்களை பரிந்துரைத்து, நடவு செய்ய ஆலோசனை வழங்கி உடனிருக்கின்றனர். நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்தி, மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்துகின்றனர்.
கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இத்தகைய செயல்களை செய்து வரும் ஈஷா தமிழகத்தின் 37 மாவட்டங்களிலும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஆயிரக்கணக்கான விவசாயிகளை ஒருங்கிணைத்து இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சிகளை நடத்தி வருகிறது. சமீபத்தில் புதுக்கோட்டை, கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் மாபெரும் பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
- ஜனாதிபதி திரௌபதி முர்முவை சத்குரு மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
- மண் காப்போம் இயக்கத்தின் விழிப்புணர்வு பயணத்தில் 30,000 கி.மீ. மோட்டார் சைக்கிள் பயணம்
கோவை:
16-வது இந்திய ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் திரௌபதி முர்முவை, ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு, டெல்லி ராஷ்டிரபதி பவனில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இது குறித்து சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில், 'மாண்புமிகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களை சந்தித்ததில் மிக்க பெருமை & பெருமிதம். ராஷ்டிரபதி பவனில் வழங்கப்பட்ட அன்பான வரவேற்புக்கு மனமார்ந்த நன்றி' என்று பதிவிட்டுள்ளார்.
சத்குரு அவர்கள் சமீபத்தில் மண் காப்போம் இயக்கத்தின் விழிப்புணர்வு பயணத்தில் 30,000 கிலோ மீட்டர்கள் தனி நபராக மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். அதில் பல நாடுகளின் தலைவர்களையும், இந்திய பிரதமர் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள், முக்கிய அமைச்சர்கள், பொதுமக்கள் என அனைவரின் ஆதரவையும மண் காப்போம் இயக்கத்திற்காக பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளின் பிடியில் இறப்போரின் உடல்களை அடக்கம் செய்யும் பெண் காவலர்கள்
- உங்கள் மனிதநேயத்தின் நெகிழ்ச்சியூட்டும் வெளிப்பாடு இது என்று சத்குரு பாராட்டியுள்ளார்.
கோவை:
கோவை மாவட்டத்தின் இரண்டு பெண் காவலர்கள் சாலையோரங்களில் கிடக்கும் ஆதரவற்றோரின் இறந்த உடல்களை முறையாக அடக்கம் செய்யும் சேவையை பல வருடங்களாக செய்து வருகின்றனர். இதனை பாராட்டும் விதமாக, சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
'பிரவீனாவுக்கும் அமீனாவுக்கும் வணக்கம், துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளின் பிடியில் இறப்போருக்கு கண்ணியம் வழங்கப்படுவதை உறுதிசெய்யும் உங்களது கருணைமிக்க அர்ப்பணிப்புக்கு தலைவணங்குகிறோம். உங்கள் மனிதநேயத்தின் நெகிழ்ச்சியூட்டும் வெளிப்பாடு இது' என்று நெகிழ்ந்து பாராட்டியுள்ளார்.
பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் பிரவீனா, கடந்த 7 வருடங்களாகவும், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பணிபுரியும் அமீனா என்கிற பெண் காவலர் கடந்த 4 வருடங்களாகவும் 'ஜீவ சாந்தி ட்ரஸ்ட்' எனும் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து உடல்களை அடக்கம் செய்யும் சேவையை செய்து வருகிறார்கள். கொரோனா லாக் டவுன் காலத்தில் கூட பாதுகாப்பு கவசம் அணிந்து உடல்களை அடக்கம் செய்ததாக அவர்கள் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
- மனிதர்கள் உள்நிலையில் அமைதியாக, ஆனந்தமாகவும் இல்லாமல் பொருளாதார வளர்ச்சியால் பயன் இருக்காது.
- நாடு முன்னேற வேண்டுமானால், அனைவரின் இதயங்களிலும் தேசப் பற்று உணர்வு துடிக்க வேண்டும் என சத்குரு பேச்சு
கோவை:
"சுதந்திரத்திற்கு முன்பு பல கொடுமையான பஞ்சங்களை சந்தித்த நம் பாரதம் வெறும் 75 ஆண்டுகளில் உலகிற்கே உணவு அளிக்கும் தேசமாக வளர்ந்துள்ளது" என ஈஷா சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சத்குரு பெருமிதத்துடன் கூறினார்.
ஆதியோகி முன்பு நடைபெற்ற சுதந்திர தின விழாவில் காமென்வெல்த் பொதுச் செயலாளர் பெட்ரிசியா ஸ்காட்லாந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
இவ்விழாவில் சத்குரு பேசுகையில், "பஞ்சத்தில் தவித்த நம் தேசம் இப்போது உலகிற்கே உணவு அளிக்கும் நிலையை அடைந்துள்ளது. உலகில் அரிசி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதன்மை நாடாக நம் நாடு உருவெடுத்துள்ளது. உலகின் 30 சதவீத அரிசி ஏற்றுமதி இந்தியாவில் இருந்து நடக்கிறது.
அதேபோல், 1947-ல் நம் நாட்டு மக்களின் சராசரி ஆயுள் காலம் வெறும் 28 ஆண்டுகளாக இருந்தது. ஆனால், இப்போது அது 70 ஆண்டாக உயர்ந்துள்ளது. 2030-க்குள் இது 80 ஆக அதிகரிக்கும் என கணக்கிடப்படுகிறது. 140 கோடி மக்கள் தொகை கொண்ட நம் தேசத்தில் இத்தகைய மாற்றங்கள் நிகழ்வது சாதாரணமான விஷயம் அல்ல. பலருடைய தியாகங்களாலும், அர்ப்பணிப்பு மற்றும் உறுதியாலும் இந்த வளர்ச்சி சாத்தியமாகி உள்ளது.
உலகளவில் பொருளாதார வளர்ச்சியே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஆனால், மனிதர்கள் உள்நிலையில் அமைதியாக, ஆனந்தமாகவும் இல்லாமல் பொருளாதார வளர்ச்சியால் பயன் இருக்காது. அது நமக்கும் நம்மை சுற்றியுள்ள உயிரினங்களுக்கும் அழிவை மட்டுமே உருவாக்கும். எனவே, பொருளாதாரம், வணிகம் மற்றும் அரசியல் என எதுவாக இருந்தாலும், அது மக்களின் நல்வாழ்வை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும்" என்றார்.
பிரதமரின் வேண்டுகோள்படி, சமூக வலைத்தளங்களில் தேசிய கொடியை ஏற்றுவது குறித்து உங்கள் கருத்து என்ன என நிருபவர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சத்குரு பதில் கூறுகையில், "தேசப் பற்று உணர்வு நம் இதயங்களிலும் மனங்களிலும் துடிக்க வேண்டும். இந்த உணர்ச்சி இல்லாவிட்டால் நாம் நம் நாட்டை ஒன்றாக வைத்திருக்க முடியாது. உங்களுக்கும் எனக்கும் இடையே உள்ள ஒற்றுமையே நாம் இந்தப் பாரத தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தான். எனவே இந்த நாடு முன்னேற வேண்டுமானால், அனைவருடைய இதயங்களிலும் தேசப் பற்று உணர்வு துடிக்க வேண்டும்." என்றார்.
காமென்வெல்த் பொதுச் செயலாளர் திருமதி. பெட்ரிசியா ஸ்காட்லாந்த் பேசுகையில், "இந்திய வரலாற்றில் மகாத்மா காந்தி, அம்பேத்கர், சர்தார் பட்டேல் ஆகிய தலைவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. இந்தியா உலகின் மிக முக்கியமான ஜனநாயக நாடாக திகழ்கிறது. இந்தியாவில் 2 பெண்கள் குடியரசு தலைவர்களாகவும், ஒருவர் பிரதமராகவும், ஏராளமான பெண்கள் முதலமைச்சர்களாகவும் பதவி வகித்துள்ளனர். மற்ற பழமையான ஜனநாயக நாடுகளில் கூட இது இன்னும் சாத்தியமாகவில்லை.
உலகளவில் பருவநிலை மாற்றம் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. அதை எதிர்கொள்வதில் இந்தியாவின் தலைமையை காவென்வெல்த் எதிர்ப்பார்க்கிறது. அந்த வகையில் சத்குரு தொடங்கியுள்ள 'மண் காப்போம்' இயக்கத்தை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். அவர் மேற்கொண்ட 100 நாள் மோட்டார் சைக்கிள் பயணம் உலகளவில் மாபெரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது" என்றார்.
இவ்விழாவில் ஜி 20 மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும் வெளியுறவுத் துறை முன்னாள் செயலாளருமான ஹர்ஸ் வர்தன் ஸ்ரிங்லா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் பேசுகையில், "இந்தியா பொருளாதார ரீதியாக மிக வேகமாக வளர்ந்து வருகிறது. காவென்வெல்த் பொதுச் செயலாளர் குறிப்பிட்டதை போல், உலகின் 6-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. இன்னும் 4 ஆண்டுகளுக்குள் நாம் 5 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்டிவிடுவோம். இந்தாண்டு ஜி 20 மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்த உள்ளது. இதற்காக, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சுமார் 190 சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்த பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். அதில் ஒரு நிகழ்ச்சி ஈஷாவில் நடக்க உள்ளது" என்றார்.
இவ்விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரளாக பங்கேற்றனர். ஈஷா சம்ஸ்கிரிதி மற்றும் ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
- ஈஷாவின் தலைமைப் பண்பு மேம்பாட்டு நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் சிறப்புரை
- மனிதர்களை வெறும் வளமாக பார்த்தால் அவர்களின் புத்திசாலித்தனத்தை வெளிக்கொணர முடியாது என்றார் சத்குரு
கோவை:
ஈஷா லீடர்ஷீப் அகாடமி சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் 'Human Is Not a Resource' என்ற பெயரிலான 3 நாள் தலைமைப் பண்பு மேம்பாட்டு நிகழ்ச்சி கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று தொடங்கியது. இதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வர்த்தக தலைவர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தலைமை பொறுப்புகளில் இருப்பவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் இன்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
அவர் பேசுகையில், "ஒரு நிறுவனம் அல்லது அமைப்பு வெற்றி பெற வேண்டுமானால், அதற்கென்று நன்கு கட்டமைக்கப்பட்ட வழிமுறைகள் இருக்க வேண்டும். இதற்கு மேற்கு இந்திய கிரிக்கெட் அணியையும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியையும் உதாரணமாக சொல்லலாம். ஆஸ்திரிலேயாவில் கிரிக்கெட்டிற்கென்று அகாடமி உள்ளது. அவர்கள் வீரர்களின் திறமைகளை நன்கு ஊக்குவிக்கிறார்கள். இன்றும் கூட அந்நாட்டில் ஒருவருக்கு 38 வயது ஆகியிருந்தாலும் அவரிடம் திறமை இருந்தால், அவர் ஆஸ்திரேலிய அணிக்காக ஆட முடியும். அவர்கள் வயதை ஒரு தடையாக பார்க்கவில்லை. அதனால் தான் அவர்கள் தொடர்ந்து நிலையான வெற்றியை தக்க வைத்து கொண்டுள்ளார்கள்.
இதேபோல், உங்கள் நிறுவனத்தில் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய ஒருவர் தற்போது சவாலான கட்டத்தில் தவிக்கிறார் என்றால் நீங்கள் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். உதாரணத்திற்கு கோலியை கூறலாம். உங்கள் நிறுவனத்தில் இருக்கும் அவரை போன்றவர்கள் மீண்டும் வெற்றியின் உச்சத்தை தொடுவதற்கு நீண்ட கயிறை(வாய்ப்பினை) வழங்க வேண்டும். நிறுவனம் வெற்றி பெற வேண்டுமானால், எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஒரு அளவுகோலை பின்பற்ற கூடாது" என்றார்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சத்குருவின் அறிமுக வீடியோ ஒளிப்பரப்பப்பட்டது. அதில் சத்குரு கூறுகையில், "மனிதர்களை ஒரு வளமாக பார்க்க கூடாது. மனிதர்களை ஒரு சாத்தியமாக பார்க்க வேண்டும். சாத்தியத்திற்கும் எதார்த்ததிற்கும் இடையே ஒரு இடைவெளி எப்போதும் இருக்கும். நாம் அந்த சாத்தியத்தை வெளிகொணர்கிறோமா இல்லையா என்பதை பொறுத்தே மனிதர்களின் வளர்ச்சி இருக்கும்.
மனிதர்கள் ஒரு விதையை போன்றவர்கள். வளமான மண்ணை கண்டறியும் போது தான் அந்த விதை அதன் சாத்தியத்தை உணரும். சரியான வளமான மண்ணில் விதைக்கப்படும் ஒரு விதையால் இந்தப் பூமி முழுவதையும் பசுமை ஆக்க முடியும். எனவே, மனிதர்களை நீங்கள் சாத்தியமாக பார்க்காமல் வெறும் வளமாக பார்த்தால் அவர்களின் புத்திசாலித்தனத்தை உங்களால் வெளிகொணர முடியாது" என்றார்.
முதல் நாள் நிகழ்ச்சியில் ஓரியண்டல் ஹோட்டலின் இயக்குநர் நினா சட்ரத், டிரெண்ட் லிமிட்டெட் (Trent Limite) நிறுவனத்தின் தலைவர் சஞ்சய் ரஸ்தோகி, 'ட்ரூநார்த் கன்சல்டிங்' நிறுவனர் ருச்சிரா சவுத்ரி உள்ளிட்ட வர்த்தக தலைவர்கள் மற்றும் ஆலோசகர்கள் தங்களது ஆலோசனைகளை வழங்கினர்.
ஆகஸ்ட் 7-ம் தேதி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் எச்.எல்.இ. க்லாஸ்கோட் நிறுவனத்தின் அதிகாரி அமித் கல்ரா, ஆல் கார்கோ நிறுவனத்தின் துணை தலைவர் வி.எஸ். பார்த்தசாரதி உள்ளிட்டோர் உரை நிகழ்த்த உள்ளனர்.
- நீங்கள் விழிப்புணர்வாக இல்லாவிட்டால் எதையும் உணர மாட்டீர்கள்.
- நீங்கள் விழிப்புணர்வுடன் இல்லாவிட்டால் மூச்சு விடுகிறீர்கள் என்பது கூட உங்களுக்கு தெரியாது.
யோக கலாச்சாரத்தில் ஆதியோகியான சிவன், ஆதி குருவாக மாறிய பெளர்ணமி நாள் குரு பெளர்ணமியாக கொண்டாடப்படுகிறது.
குரு பெளர்ணமி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கோவை ஈஷா யோகா மையத்திற்கு நேற்று வருகை தந்தனர்.
தியானலிங்கம், லிங்க பைரவி, ஆதியோகி ஆகிய இடங்களுக்கு சென்று அவர்கள் தரிசனம் செய்தனர். மாலையில் நந்தி முன்பாக பழங்குடி மக்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சியும், லிங்க பைரவி யாத்திரையும் நடைபெற்றது.
ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இந்நாளில் சத்குருவின் சிறப்பு சத்சங்கம் நேற்று நடைப்பெற்றது. இதில் அமெரிக்காவில் உள்ள ஈஷா உள்நிலை அறிவியல் மையத்தில் இருந்து சத்குரு பேசியதாவது:
வருடத்தில் மற்ற எல்லா நாட்களையும் விட குரு பெளர்ணமி நாளில் சந்திரன் பூமிக்கு மிக நெருக்கமாக உள்ளது. அதனால், சந்திரனுடைய ஈர்ப்பு சக்தியின் தாக்கம் நம் மீது அதிகமாக இருக்கும். இன்றைய தினம் கடல் அலைகள் அதிகளவில் மேல் எழும்பும்.
அதேபோல், நம் உடலில் உள்ள திரவங்களும் மேல் நோக்கி நகரும். இன்று நீங்கள் எந்த மாதிரியான மன நிலையில் இருக்கிறீர்களோ, அது பெருகும். நீங்கள் கோபமாகவோ, வருத்தமாகவோ இருந்தால் அந்த உணர்வு அதிகரிக்கும். மகிழ்ச்சியாகவோ,
சந்தோசமாகவோ, ஆனந்தமாகவோ இருந்தால் அதுவும் அதிகரிக்கும். மனிதர்கள் பல்வேறு விதமான கட்டாயங்களின் கலவையாகவும், விழிப்புணர்வின் கலவையாகவும் இருக்கிறார்கள். இந்த கட்டாயங்கள் பிழைப்புணர்வை சார்ந்ததாக உள்ளது; இனப் பெருக்க உணர்வை சார்ந்ததாகவும் உள்ளது.
மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் என பல்வேறு வித கட்டுப்பாடுகளில் மனிதர்கள் வாழ்கிறார்கள். இவையனைத்தும் அவர்களின் வாழ்நாள் முழுவதையுமே ஆட்டி படைக்கிறது.
பெரும்பாலான மனிதர்கள் விழிப்புணர்வாக இருப்பதற்கு மிக நெருக்கமாக கூட வருவதில்லை. நீங்கள் விழிப்புணர்வாக இல்லாவிட்டால் எதையும் உணரமாட்டீர்கள். இது காற்றை போல. நீங்கள் விழிப்புணர்வுடன் இல்லாவிட்டால் நீங்கள் மூச்சு விடுகிறீர்கள் என்பது கூட உங்களுக்கு தெரியாது.
இந்த பூமியில் எத்தனை மனிதர்கள் 24 மணிநேரத்தில் 5, 10 நிமிடங்களாவது அவர்கள் மூச்சு விடுகிறார்கள் என்ற விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்? ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்பட்டு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால் ஒழிய அவர்கள் மூச்சை கவனிப்பது இல்லை. நீங்கள் 2 நிமிடங்கள் மூச்சு விடுவதை நிறுத்தினாலும் உங்கள் உயிர் பிரிந்துவிடும். இருந்தும் மூச்சை நீங்கள் கவனிப்பது இல்லை.
விழிப்புணர்வு என்பது நீங்கள் சுவாசிக்கும் காற்றை விட அடிப்படையானது; அத்தியாவசியமானது. பெரும்பாலான மக்கள் வெறும் பிழைப்பு செயல்முறையிலேயே காலம் காலமாக மூழ்கி இருக்கிறார்கள். அவர்கள் பல விதங்களில் வாழ்வதற்கு இறந்து கொண்டு இருகிறார்கள்.
வாழ்வதற்காக ஏங்கி ஏங்கியே இறந்து கொண்டு இருக்கிறார்கள். இப்படி இருக்க கூடாது. நீங்கள் முழுமையாக வாழ்ந்து ஒரு நாள் இறந்து போக வேண்டும். வாழ்வதற்காகவே தினமும் இறக்க கூடாது. நீங்கள் விழிப்புணர்வாக இருந்தால் அனைத்து கட்டுப்பாடுகளும் தானாகவே கீழே விழுந்துவிடும்.
இவ்வாறு சத்குரு கூறினார்.
- சென்னை ரெயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின் விளக்குகள் ஒளிரவிடப்பட்டன
- மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவு அளித்துள்ள அனைத்து மக்களுக்கும் சத்குரு நன்றி தெரிவித்தார்
உலகின் மிக உயரமான கட்டிடமாக விளங்கும் துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவில் மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவாகவும், மண் அழிவை தடுக்க உலகின் கவனத்தை ஈர்க்கவும் சிறப்பு லேசர் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
2 நிமிட லேசர் ஷோவில் மண் அழிவு குறித்தும் அதை உடனே சரி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் சத்குரு பேசியுள்ள செய்தி மற்றும் அவருடைய 100 நாள் மோட்டார் சைக்கிள் பயண காட்சிகள், மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள சர்வதேச தலைவர்கள், விஞ்ஞானிகள், பிரபலங்களின் காணொளிகளும் ஒளிபரப்பப்பட்டன.
இது தொடர்பான நிகழ்ச்சியில் சத்குரு அவர்கள் ஆன்லைன் வாயிலாக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், "மண் வளத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தொலைநோக்கும் பார்வையும், செயல்களும் பாராட்டுக்குரியதாக உள்ளது. மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவு அளித்துள்ள அனைத்து மக்களுக்கும் நன்றிகள்.
சவாலான மோட்டர் சைக்கிள் பயணம் முடிந்துவிட்டது. ஆனால், உண்மையில் கடினமான வேலை இப்போது தான் தொடங்கியுள்ளது. மண் வளத்தை மீட்டெடுக்கும் கொள்கைகள் எவ்வளவு வேகமாக நாம் நடைமுறைப்படுத்த போகிறோம் என்பது தான் இப்போதைய முக்கிய சவால்.
மண் காப்போம் இயக்கம் உலகம் முழுவதும் 'மண்' குறித்த பார்வையை மாற்றியுள்ளது. இவ்வியக்கத்தின் தாக்கத்தால் மக்களும், அரசாங்கங்களும் மண் வளத்தை மீட்டெடுக்கும் கொள்கைகளை உருவாக்குவது குறித்து கலந்துரையாடல் நிகழ்த்த தொடங்கியுள்ளன. இத்திட்டங்களுக்கான நிதிகளும் ஒதுக்கப்பட தொடங்கியுள்ளன. இருப்பினும், அந்த சட்டங்கள் களத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் வரை நம்முடைய பணி நிறைவு பெற போவதில்லை" என்றார்.
Actyv.ai நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உலக சி.இ.ஓ திரு. ரகு சுப்பிரமணியன் மற்றும் 1Digi Investment Management நிறுவனம் இந்நிகழ்ச்சியை நடத்த நன்கொடை வழங்கியது. இது குறித்து திரு. ரகு சுப்பிரமணியன் கூறுகையில், "சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம் ஆகிய மூன்றும் எங்கள் வர்த்தகத்தின் முக்கிய அம்சங்கள். சத்குரு தலைமையிலான மண் காப்போம் இயக்கத்துடன் இணைந்து செயலாற்றுவதில் Actyv.ai நிறுவனம் பெருமை கொள்கிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திருமதி. மரியம் பிண்ட் முகமது அல்ஹெரி பேசுகையில், "எங்களுடைய அரசு மண் காப்போம் இயக்கத்திற்கு முழு ஆதரவு அளித்துள்ளது. இவ்வியக்கத்துடன் இணைந்து நாங்கள் செய்ய உள்ள பணிகள் எதிர்கால சந்ததியினருக்காக மதிப்புமிக்க மண்ணை பாதுகாக்கும் பணியின் தொடர்ச்சியாக இருக்கும்" என்றார்.
புர்ஜ் கலிஃபா மட்டுமின்றி, நயாகரா நீர் வீழ்ச்சி, ஜெனிவாவில் உள்ள ஜெட் டியோ, தி மோண்ட்ரியல் ஒலிம்பிக் மைதானம், டொரோண்டோ டிவி டவர், மும்பை மாநகராட்சி கட்டிடம், சென்னை மற்றும் ஹூப்ளி ரயில் நிலையங்கள் என 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவாக மின் விளக்குகள் ஒளிரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சுற்றுச்சூழல் இயக்கமான மண் காப்போம் இயக்கத்திற்கு இதுவரை 74 நாடுகளும், ஐ.நா அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இவ்வியக்கம் கடந்த 3 மாதங்களில் 390 கோடி மக்களை சென்றடைந்துள்ளது. மேலும், 8 இந்திய மாநிலங்கள் இவ்வியக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளன.
- அனைத்து நாடுகளும் மண் வளப் பாதுகாப்பிற்கான கொள்கைகளை உருவாக்க அழுத்தம் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக சத்குரு தகவல்.
- ஆதியோகி முன்பு நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
கோவை:
மண் வளப் பாதுகாப்பை வலியுறுத்தி 100 நாட்களில் 27 நாடுகளுக்கு ஆபத்தான மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்ட சத்குரு, வெறும் 4 நாட்கள் இடைவெளிக்கு பிறகு அடுத்த ஒன்றரை மாதத்தில் 21 நாடுகளுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஆதியோகியில் நேற்று (ஜூன் 21) இரவு நடந்த நிறைவு நிகழ்ச்சியில் சத்குரு பேசியதாவது:
இந்த 100 நாள் மோட்டார் சைக்கிள் பயணத்தில் நான் பல ஆபத்தான தருணங்களை கடந்து வந்துள்ளேன். பைக் ஓட்டும்போது கவனம் மிக மிக அவசியம். ஒவ்வொரு நொடியும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, அதிவேகமாக பைக் ஓட்டும் போது ஒரு நொடி கவனம் சிதறினாலும், விளைவு மிக மோசமாக இருக்கும். துபாய் போன்ற பாலைவன நாடுகளில் பைக் ஓட்டும் போது வெயில் 54 டிகிரி சுட்டெரித்தது. குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் செல்லும் போதும் வெயில் அதிகமாக இருந்தது. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பிறகு குளிர்ச்சியான சூழலை இங்கு தான் அனுபவிக்கிறேன்.
உங்களுடைய அன்பு மற்றும் ஆதரவின் மூலம் இந்த 100 நாள் மோட்டார் சைக்கிகள் பயணம் நிறைவு அடைந்துவிட்டது. ஆனால், இனிமேல் தான் உண்மையில் கடினமான வேலை தொடங்க உள்ளது. 'மண் காப்போம்' இயக்கத்தின் அடுத்த கட்டமாக, 4 நாட்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் எனது பயணத்தை தொடங்க உள்ளேன்.
அடுத்த ஒன்றரை மாதத்தில் அமெரிக்கா, ஐரோப்பா, கரிபீயன் நாடுகளில் உள்ள 21 முதல் 22 நாடுகளுக்கு பயணம் செய்து அந்நாடுகள் மண் வளப் பாதுகாப்பிற்கு சட்டங்கள் இயற்றுவதற்கு வலியுறுத்த உள்ளேன். அதுமட்டுமின்றி, அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் மண் வளப் பாதுகாப்பிற்கான கொள்கைகளை உருவாக்க அழுத்தம் கொடுக்க திட்டமிட்டுள்ளோம்.
எனவே, இந்த 100 நாள் பயணம் முடிந்துவிட்டது என நீங்கள் நினைத்து அமைதியாகவிட கூடாது. உலக நாடுகள் அனைத்து உரிய சட்டங்கள் இயற்றும் வரை நீங்கள் தொடர்ந்து இதற்கு குரல் கொடுக்க வேண்டும். ஒவ்வொருவரும் அடுத்த ஒரு வருடத்திற்கு தினமும் குறைந்தப்பட்சம் 15 நிமிடங்களாவது மண் வளப் பாதுகாப்பு குறித்து பேச வேண்டும். இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இதை செய்ய வேண்டும். சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தெரியாதவர்கள் மற்றவர்களுடன் நேரில் இது குறித்து பேச வேண்டும்.
இவ்வாறு சத்குரு பேசினார்.
மேலும், இப்பயணம் வெற்றி பெற உறுதுணையாக இருந்த மக்களுக்கு நன்றி கூறும் விதமாக சத்குரு வெளியிட்டுள்ள பதிவில், "நம் காலத்தின் அதிமுக்கியமான #SaveSoil இயக்கத்தை நிகழ்த்த வியக்கத்தக்க அர்ப்பணிப்புடனும் நோக்கத்துடனும் உலகெங்கும் ஒன்றிணைந்த ஈஷா குழுவிற்கு மகத்தான நன்றிகள். உங்கள் பிராந்தியங்களில் மண் காக்கும் கொள்கைகள் இயற்றப்படும் வரை முழுவீச்சில் தொடருமாறு உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
ஆதியோகி முன்பு நடந்த இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் பங்கேற்றனர். முன்னதாக, தமிழ்நாடு எல்லையான பண்ணாரியில் இருந்து ஆதியோகி வரை வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
'மண் காப்போம்' இயக்கத்துடன் இதுவரை இந்தியாவின் 8 மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளன. 74 நாடுகளும் பல்வேறு ஐ.நா அமைப்புகளும், 320 கோடி மக்கள் சமூக வலைத்தளங்கள் மூலமும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்