search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 225467"

    • சகல பாவங்களும் நீங்குவதுடன் புண்ணியங்களும் நம்மை வந்து சேரும்.
    • சிவசக்தியின் பேரருள் கிடைக்கும் என்பது அடியார்களது நம்பிக்கை.

    கார்த்திகை மாதம் துவாதசி நாளில், துளசி தேவி மகா விஷ்ணுவைத் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம். எனவே, கார்த்திகை மாதம் முழுவதும் விரதம் இருந்து துளசி தளைகளால் மகா விஷ்ணுவை அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால், ஒவ்வொரு துளசி தளைக்கும் ஒவ்வொரு அஸ்வமேதயாகம் செய்த பலன் உண்டு என்பர். துளசி மாலை அணிபவர்களிடம், மகாலட்சுமி எப்போதும் வாசம் செய்வாள் என்று சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.

    கார்த்திகை மாத துவாதசி நாளில், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால், கங்கைக் கரையில் ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட பலன் கிடைக்கும். மகாவிஷ்ணுவை கஸ்தூரியால் அலங்கரித்து, தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தேவாதி தேவர்களால் பெற முடியாத பாக்கியத்தைக் கூட பெறலாம்.

    விஷ்ணுவின் சந்நிதிக்கு நேரே அமர்ந்து கொண்டு, பகவத் கீதையின் விபூதி யோகம், பக்தி யோகம், விஸ்வரூப யோகம் ஆகியவற்றை பாராயணம் செய்தால், சகல பாவங்களும் நீங்குவதுடன் புண்ணியங்களும் நம்மை வந்து சேரும்.

    நவக்கிரக மூர்த்திகள் விரதம் அனுஷ்டித்து, வரம் பெற்ற கார்த்திகை ஞாயிறு விரதத்தை, முதல் ஞாயிறு தொடங்கி பன்னிரெண்டு வாரங்கள் கடைப்பிடித்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி, சிவசக்தியின் பேரருள் கிடைக்கும் என்பது அடியார்களது நம்பிக்கை.

    தன்னைப் பிரிந்த திருமகளுடன் மீண்டும் சேருவதற்காக மகாவிஷ்ணு தவம் மேற்கொண்டு, சிவபெருமானது அருளைப் பெற்ற திருத்தலம் ஸ்ரீவாஞ்சியம். இங்குள்ள குப்த கங்கை தீர்த்தத்தில் நடைபெறும் கார்த்திகை ஞாயிறு நீராடல் உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில், அதிகாலை 5 முதல் 6 மணிக்குள் சிவபெருமானும் பார்வதிதேவியும் அஸ்திர தேவரோடு பிரகார வலம் வந்து, குப்த கங்கையின் கிழக்குக் கரையில் ஆசி வழங்கி அருளுகின்றனர்.

    கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த குப்த கங்கையில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம், திருடுவதால் வரும் பாவம் மற்றும் மனச் சஞ்சலத்தால் ஏற்பட்ட பாவங்கள் ஆகியவை நீங்கி விடும் என்று பிரும்மாண்ட புராணம் கூறுகிறது.

    கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களிலும், அதிகாலையில் நீராடி, விரதம் இருந்து சிவவிஷ்ணு பூஜைகள் மற்றும் தீப தானம் செய்து, வீட்டின் எல்லா இடங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வழிபட்டால், குறைவற்ற மகிழ்ச்சி உண்டாகும் என்று புராணங்கள் கூறுகின்றன.

    • பெருமாளை வழிபட உகந்த நாட்களில் ஒன்று, ஏகாதசி.
    • ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது.

    பெருமாளை வழிபட உகந்த நாட்களில் ஒன்று, ஏகாதசி. இந்த நாளில் பெருமாளை வழிபாடு செய்தால் பலன்கள் இரு மடங்காகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மாதம் இரண்டு ஏகாதசிகள் என்று, வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வரும். சில வருடம் 25 ஏகாதசிகள் கூட வருவதுண்டு. இந்த ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. அந்த வகையில் இந்த மாதம் ஐப்பசியில் வரும் ஏகாதசிகளுக்கு பாபாங்குசா ஏகாதசி, இந்திர ஏகாதசி என்று பெயர். இந்த ஏகாதசி விரதங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

    இந்திர ஏகாதசி

    ஐப்பசி மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசியை, 'இந்திர ஏகாதசி' என்பார்கள். இந்த ஏகாதசி விரதம், நாரதர் மூலமாக வெளிப்பட்டது. புராண காலத்தில் இந்திரசேனன் என்ற மன்னன், மாஹிஷ்மதி என்ற நகரை ஆட்சி செய்தான். ஒருநாள் அவனது அரசவைக்கு நாரத முனிவர் வருகை தந்தார். அவரை வரவேற்று அமரச் செய்த மன்னன், நாரதர் வந்ததற்கான காரணத்தைக் கேட்டறிந்தான். அதற்கு நாரதர், "நான் எமலோகம் சென்றிருந்தபோது, உன்னுடைய தந்தையை சந்தித்தேன். அங்கு நரகத்தில் அவர் கடும் துன்பத்தை அனுபவிக்கிறார். அவர் என்னிடம், 'என் மகனிடம் கூறி, இந்திர ஏகாதசி விரதத்தை மேற்கொள்ளச் செய்யுங்கள். அப்படிச் செய்தால், நான் இந்த நரகத்தில் இருந்து விடுபடுவேன். என்னை கரையேற்றும்படி அவனிடம் கூறுங்கள்' என்று சொல்லியனுப்பினார். அதற்காகவே நான் வந்தேன்" என்றார்.

    அதைக் கேட்ட மன்னன், தந்தையின் நிலை அறிந்து வருந்தினான். தொடர்ந்து தன் தந்தையின் ஆன்மா துன்பத்தில் இருந்து விடுபடுவதற்காக, இந்திர ஏகாதசி விரதம் மேற்கொள்ள முடிவு செய்தான். அதற்கான வழிமுறைகளை நாரத முனிவரிடம் இருந்துகேட்டு, அதன்படியே செய்தான். இதனால் அவனது தந்தை நரக வேதனையில் இருந்து விடுபட்டு சொர்க்கம் சென்றார். இந்த இந்திர ஏகாதசி விரதத்தை மேற்கொண்டால், முன்னோர்களின் ஆசி நமக்குக் கிடைக்கும். மேலும் முன்னோர்களின் ஆன்மா, நரகத்தில் துன்பம் அனுபவித்து வந்தால், அவர்களின் சந்ததியினர் செய்யும் இந்திர ஏகாதசி விரதத்தின் காரணமாக, அந்த துன்பத்தில் இருந்து விடுபடுவார்கள்.

    பாபாங்குசா ஏகாதசி

    ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு, 'பாபாங்குசா ஏகாதசி' என்று பெயர். ஒருவருடைய பாவத்தை அகற்றும் அங்குசம் போன்றது என்பதால், இந்தப் பெயர் வந்தது. இந்த விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு, கங்கை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால், யாகங்கள், உயர்ந்த தான - தர்மங்கள் செய்தால் என்ன பலன் கிடைக்குமோ, அந்த பலன்கள் அனைத்தும் கைவரப்பெறும். இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், நரக வேதனையை அனுபவிக்க மாட்டார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன. ஐப்பசி ஏகாதசி நாளில், ஏகாதசி விரதத்தை கடைப்பிடிக்கும் வழிமுறை தெரியாமலோ, அல்லது மற்றவர்கள் வியந்து பார்க்க வேண்டும் என்றோ, எப்படிச் செய்தாலும், இந்த விரதத்திற்கான பலன் கிடைக்கப்பெறும் என்பதே, பாபாங்குசா ஏகாதசி விரதத்தின் மேன்மையாகும்.

    • ஸ்ரீமகாவிஷ்ணு இன்று (வெள்ளிக்கிழமை) துயில் எழுகிறார்.
    • ஸ்ரீவிஷ்ணு துயில் எழுப்பும் பாட்டுகளைப்பாடி ஸ்ரீமகாவிஷ்ணுவை எழுப்ப வேண்டும்.

    ஐப்பசி மாதத்தில் வருகிற வளர்பிறை ஏகாதசிக்கு உத்தான ஏகாதசி, பிரபோத ஏகாதசி, பாசாங்குச ஏகாதசி என்று பல பெயர்கள் உண்டு. ஸ்ரீமகாவிஷ்ணு இன்று (வெள்ளிக்கிழமை) துயில் எழுகிறார். ஆகவே இன்றைய ஏகாதசிக்கு பிரபோத ஏகாதசி, உத்தான ஏகாதசி எனப் பெயர்.

    இன்று அதிகாலை ஸ்ரீமகாவிஷ்ணு சன்னதியில் தீபம் ஏற்றி வைத்து பழம், பூக்கள், மஞ்சள், குங்குமம், பசுமாடு, கறிகாய்கள், தங்கம், ரத்னங்கள் போன்ற மங்கள திரவியங்களை வைத்து, சாத்திய கதவின் முன்பாக பக்தியுடன் ஸ்ரீவிஷ்ணு ஸ்தோத்ரம் - சுப்ரபாதம் சொல்லி அல்லது ஸ்ரீவிஷ்ணு துயில் எழுப்பும் பாட்டுகளைப்பாடி ஸ்ரீமகாவிஷ்ணுவை எழுப்ப வேண்டும்.

    அதன்பிறகே பூஜை அறையின் கதவைத் திறக்க வேண்டும். பிறகு விஷ்ணுவிற்கு நிவேதனம் செய்து கற்பூரம் காட்டி வணங்க வேண்டும். இதனால் சகல செல்வங்களையும் தரும் ஸ்ரீவிஷ்ணுவின் அருள் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலவும்.

    இன்றைய ஏகாதசிக்கு பாசாங்கு ஏகாதசி என்றும் பெயர் உண்டு.

    இந்த ஏகாதசிக்கு அனைத்துப் பாவங்களையும் போக்கும் சக்தி உண்டு. எனவே இந்த ஏகாதசியில், பத்மநாப மூர்த்தியை பூஜிக்க வேண்டும். இந்த ஏகாதசி விரதம் உலகத்தில் உள்ள எல்லா புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய பலன் தரும். ஏகாதசி அன்று இரவு, ஹரிநாம சங்கீர்த்தனம் செய்ய வேண்டும்.

    இந்த ஏகாதசி விரதம் இருப்பவர்கள் எமலோகத்தை மிதிக்க மாட்டார்கள். விரதம் இருந்து அன்னம், நீர், குடை, பாதரட்சை ஆகியவற்றை தானம் செய்வது சிறந்த பலனை அளிக்கும். ஏகாதசி முடிந்து நாளை மறுநாள் துவாதசி பாரணை செய்ய வேண்டும். இந்த துவாதசிக்கு பிருந்தாவன துவாதசி என்று பெயர். நாளைய மறுநாள் துளசி பூஜை செய்வது மிகச் சிறப்பு.

    • இந்த விரதம் இருந்து ஆத்ம சாதனையில் முன்னேறினார் என்று சொல்லப்படுகிறது.
    • பஞ்சகம் என்றால் ஐந்து.

    இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பவுர்ணமி தினம் வரை 5 நாட்கள் இருக்க வேண்டிய விரதம் பீஷ்ம பஞ்சக விரதம். பஞ்சகம் என்றால் ஐந்து. பீஷ்மர் 5 நாட்கள் இந்த விரதத்தில் இருந்தார் என்பதால் பீஷ்ம பஞ்சக விரதம் என்று அழைக்கப்படுகிறது. பீஷ்மர் இந்த விரதம் இருந்து ஆத்ம சாதனையில் முன்னேறினார் என்று சொல்லப்படுகிறது. இந்த விரதத்தை கடைபிடிப்பதன் மூலமாக, மனஉறுதியும் தெளிவும் ஆன்மீக முன்னேற்றமும் பெறலாம்.

    பிஷ்ம பஞ்சங்க நாட்களில் பல பக்தர்கள் முழுமையான விரதம் இருப்பார்கள். அதாவது நிர்ஜலம் நீர் கூட அருந்தால் விரதம் இருப்பவர்கள் (இது ஒருவருடைய உடல்நிலை பொருத்து கடைபிடிக்க வேண்டும்) அல்லது இந்த ஐந்து நாட்களில் ஒவ்வொரு நாள் ஒருமுறை ஒரு சிறிய தேக்கரண்டி அளவிற்கு பஞ்ச காவ்யத்தில் ஏதாவது ஒன்றை குடிக்கலாம் வேறு எதையும் உண்ணக்கூடாது.

    முதல் நிலை விரதம் அனுஷ்டிக்க முடியாதவர்கள் இந்த 5 நாட்களில் பழங்களும்(கொய்யா பழம், மாதுளம் பழம் போன்ற நிறைய உள்ள பழங்களை தவிர்த்தல் நல்லது) பேரிச்சம் பழம், உலர்ந்த திராட்சை போன்றவை எடுத்து கொள்ளலாம். வாழைக்காய், கிழங்கு வகைகளும் வேகவைத்து பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்து பின் அந்த மகாபிரசாதத்தை உண்டு விரதத்தை கடைபிடிக்கலாம்.

    • இந்த விரதத்தை, ஆண், பெண் பேதமில்லாமல் அனைவரும் கடைப்பிடிக்கலாம்.
    • இந்த விரதமானது நம் உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தும்.

    'காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை; ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை' என்பது ஆன்றோர் வாக்கு. விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம். ருக்மாங்கதன், அம்பரீஷன் ஆகியோர் ஏகாதசி விரதமிருந்து, விஷ்ணுவின் அருள் பெறும் பேறு பெற்றார்கள். பொதுவாக, ஒவ்வொரு மாதத்துக்கும் இரண்டு ஏகாதசிகள் வரும். ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அமாவாசைக்கு அடுத்து வரும் ஏகாதசி சுக்லபட்ச ஏகாதசி (வளர்பிறை ஏகாதசி) என்றும்; பௌர்ணமிக்கு அடுத்து வரும் ஏகாதசி கிருஷ்ணபட்ச ஏகாதசி (தேய்பிறை ஏகாதசி) என்றும் பெயர். சித்திரை மாத தேய்பிறை ஏகாதசிக்கு 'பாப மோசனிகா ஏகாதசி' என்று பெயர். பாவங்கள் அனைத்தையும் போக்கும் ஏகாதசி என்ற பொருளில் இந்த ஏகாதசிக்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. இன்று விரதமிருந்து பெருமாளை வணங்கினால் பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். தவறவிடக் கூடாத விரத நாள் இது. இந்த விரதத்தை, ஆண், பெண் பேதமில்லாமல் அனைவரும் கடைப்பிடிக்கலாம். மேலும், இந்த விரதமானது நம் உடலையும் உள்ளத்தையும் தூய்மைப் படுத்தும்.

    பாப மோசனிகா ஏகாதசியன்று விரதமிருந்து சாபம் நீங்கப் பெற்ற மஞ்சுகோஷை என்ற தேவகன்னியின் கதையை அறிந்துகொள்வோம்.

    சைத்ரதம் என்பது ஓர் அழகிய வனம். அங்கு முனிவர்கள் பலர் தனிக் குடில் அமைத்துத் தவம் செய்துகொண்டிருந்தார்கள். அப்போது மஞ்சுகோஷை எனும் அழகிய தேவகன்னி வானுலகில் வலம் சென்றுகொண்டிருந்தபோது, சைத்ரதத்தின் வனப்பைக் கண்டு கீழே இறங்கினாள். அங்கு தவம் செய்துகொண்டிருந்தவர்களில் மேதாவி எனும் முனிவரைக் கண்டாள். அழகிய முகம், திரண்ட தோள், அடர்ந்த கூந்தல் ஆகியவற்றுடன் விழிகளை மூடித் தவம் செய்துகொண்டிருந்த மேதாவியைப் பார்த்ததுமே காதலில் விழுந்துவிட்டாள்.

    மஞ்சுகோஷை, தவம் செய்துகொண்டிருந்த மேதாவியைத் தனது இனிமையான குரலில் அழைத்தாள். யாழின் இசையையும் பழிக்கும்படி ஒலித்த அவளுடைய குரலில் மயங்கிய மேதாவி, மெள்ள விழிகளைத் திறந்தார். அவளுக்கு முன் நின்றுகொண்டிருந்த மஞ்சுகோஷையின் அழகிய வனப்பில், பார்த்ததுமே சொக்கிப்போனார். ஆனானப்பட்ட விசுவாமித்திரரே மேனகையின் அழகில் மயங்கியபோது, மேதாவியைப் பற்றிச் சொல்ல வேண்டுமா என்ன. மஞ்சுகோஷையின் பேரழகில் மனதைப் பறிகொடுத்தவர், தவம் செய்வதை விடுத்து, அவளுடன் சேர்ந்து தனது குடிலிலேயே வசிக்கத் தொடங்கினார். ஆண்டுகள் பல கடந்தன. தான் தேவருலகம் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டபடியால், மேதாவியின் பாதங்களைப் பணிந்து வணங்கி, "தான் மேலுலகம் செல்ல வேண்டும். விடைகொடுங்கள் சுவாமி" என்று வேண்டினாள். ஆனால், அவளுடைய அழகிலும் அவளிடம் கொண்டிருந்த மோகத்திலும் சிக்குண்ட மேதாவி காலம் கடந்ததை உணராதவராய், "நீ இப்போதுதானே வந்தாய், அதற்குள் என்ன அவசரம்? இன்னும் சிறிது காலம் என்னுடன் இருந்துவிட்டுப் போ" என்று தெரிவித்தார் .

    மீண்டும் இருவரும் சேர்ந்து வாழத் தொடங்கினார்கள். மேலும் பல ஆண்டுகள் கடந்தன. ஒரு நாள் அவளுடைய மடியில் தலை சாய்த்துப் படுத்துக்கொண்டிருந்தபோதுதான் ஞானோதயம் ஏற்பட்டது மேதாவிக்கு. ஓடிச்சென்று, சந்தியாவந்தனம் செய்துகொண்டு வந்தார். மஞ்சுகோஷைக்கு எதுவும் புரியவில்லை. அவள், "இத்தனை ஆண்டுகளாக எதையும் கடைப்பிடிக்காத தாங்கள் இப்போது அவசரமாகச் சந்தியாவந்தனம் செய்கிறீர்களே" என்று வினவியபோதுதான் மேதாவிக்குப் புரிந்தது.

    தனது தவம் கலைந்தமைக்கும் இத்தனை ஆண்டுகளாகச் சுயநினைவை இழந்து வாழ்ந்தமைக்கும் காரணம் மஞ்சுகோஷைதான் என்று நினைத்த மேதாவி, "உன் அழகிய உருவம் மறைந்து பேயாக மாறுவாயாக..." என்று கோபத்தில் சபித்துவிட்டார். அதன் பிறகு, இதில் தனது தவறும் இருக்கிறது என்பதை உணர்ந்தவர், "சித்திரை மாதம் தேய்பிறை சர்வ ஏகாதசியன்று விரதமிருந்து பெருமாளை வணங்கினால் உனது சாபம் விலகும்" என்று அருள்புரிந்தார்.

    மஞ்சுகோஷையும் தான் அறிந்தோ அறியாமலோ செய்த தவற்றைப் பாப மோசனிகா ஏகாதசியன்று விரதமிருந்து போக்கி, சுய உருவத்தை அடைந்தாள். தவற்றினால் தனது தவ வலிமையை இழந்துவிட்டதைத் தன் தந்தையிடம் கூறி வருத்தப்பட்டார் மேதாவி. அவருடைய தந்தையும், இதே பாப மோசனிகா ஏகாதசி விரதத்தின் பெருமையைக் கூறி அதையே உபாயமாகத் தெரிவித்தார். மேதாவியும் அந்த விரதத்தை மேற்கொண்டு தனது தவ வலிமையை மீண்டும் பெற்றார்.

    நாம் தெரிந்தும் தெரியாமலும்; அறிந்தும் அறியாமலும் செய்யும் பாவங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமையுடையது இந்த ஏகாதசி விரதம்.

    ஏகாதசி விரதத்துக்கு பாவங்களைப் போக்கும் சக்தி எப்படியுண்டோ, அதே மாதிரி எண்ணிய காரியங்களை நிறைவேற்றும் சக்தியும் உண்டு. அசுவமேத யாகம் செய்த பலனை ஏகாதசி விரதத்தால் பெற முடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்று கூறுகின்றன புராணங்கள்.

    ஏகாதசி விரதமிருப்பவர்கள் முதல் நாளான தசமியன்று ஒரு பொழுது மட்டுமே உணவு உண்ண வேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும் உறங்காமலும் விரதமிருந்து நாராயண நாமத்தைப் பாடியபடி, பெருமாளுக்குத் துளசி மாலையிட்டு வழிபட வேண்டும். மறுநாள் துவாதசியன்று சூரியோதயத்துக்குள் நீராடி துளசி தீர்த்தத்தை அருந்த வேண்டும். அதன் பிறகு 'பாரணை' என்னும் பல்வகை காய்கறிகளுடன்கூடிய உணவை உண்ண வேண்டும். உணவில் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் இருப்பது அவசியம். பெருமாளுக்கு நைவேத்யம் செய்து அதை ஒரு ஏழைக்குத் தானம் செய்த பிறகு உணவு உட்கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால் பாவங்கள் அனைத்தும் விலகி நன்மை ஏற்படும் என்பது ஐதிகம்.

    • ஒரு வருடத்துக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகிறது.
    • ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோர் பிறவி துயர் நீங்கி வைகுண்ட பதவியை அடைவர்.

    ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் இருந்து 11-ஆம்நாள் ஏகாதசி வருகிறது. ஒரு வருடத்துக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகிறது. அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்து வழிபடுவோர் பிறவி துயர் நீங்கி வைகுண்ட பதவியை அடைவர்.

    புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி "பத்மநாபா'' ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அன்று விரதம் இருப்பதன் மூலம் இந்திரன் மற்றும் வருணனின் வரத்தை பெறலாம். நமக்கு எந்த விதத்திலும் தண்ணீர் பற்றாக்குறை வராது நமது வீட்டில் இருக்கும் கிணறு, ஆழ் குழாய்களில் தண்ணீர் வற்றாமல் பெருக்கெடுக்கும். புரட்டாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி "அஜா'' ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.

    இந்த நாளில்தான் அரிச்சந்திரன் விரதம் இருந்து தாம் இழந்த நாடு , மனைவி மற்றும் மக்களை திரும்ப பெற்று பல ஆண்டுகள் ஆட்சி செய்தான். எனவே நாமும் இவ்விரதநாளில் விரதம் கடைபிடித்தால், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கலாம். புரட்டாசி மாத ஏகாதசியன்று கண்டிப்பாக தயிர் உபயோகிக்க கூடாது. அதில் மட்டும் கவனமாக இருங்கள்.

    • மகாவிஷ்ணு அருளால் சிறந்த கல்வி அறிவு ஏற்படும்.
    • இன்று செய்யும் நற்செயல்கள் அனைத்தும் பல மடங்கு அதிகமான பலனைத் தரும்.

    செவ்வாய்க்கிழமையும், அஸ்வினி நட்சத்திரமும் ஒன்றாக சேரும் நாள் பவுமாஸ்வினி எனப்படும். இன்று (செவ்வாய்க்கிழமை) செய்யும் நற்செயல்கள் அனைத்தும் பல மடங்கு அதிகமான பலனைத் தரும்.

    குறிப்பாக ஸ்ரீ மகாவிஷ்ணு அருள் பெறுவதற்காக தயிர் சாதத்தை ஊறுகாயுடன் சேர்த்து ஆழ்வார்கள் சன்னதியில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வழங்கலாம்.

    இதனால் மகாவிஷ்ணு அருளால் சிறந்த கல்வி அறிவு ஏற்படும். ஜாதகப்படி சனி கிரகத்தால் ஏற்படும் கஷ்டங்கள் விலகி நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் உண்டாகும்.

    • ஒவ்வொரு ஏகாதசி திதியும் தனித்துவம் வாய்ந்தது.
    • அஜா ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பவர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கும்.

    புரட்டாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசிக்கு "அஜா ஏகாதசி" என்று பெயர். "அஜா" என்றால் வருத்தத்தை நீக்குவது என்று பொருள். உயிர்களின் வருத்தத்தை நீக்கி, உயர்நிலைக்குக் கொண்டு செல்லுகின்ற ஆற்றலைத் தருகிறது இந்த ஏகாதசி.

    இந்த ஏகாதசியை பெருமாளுக்குரிய புரட்டாசி மாதத்தில், நம்மால் இயன்ற அளவு அனுஷ்டித்தால், நாம் இழந்ததை மீண்டும் பெறலாம். இதனால் மன கவலை நீங்கும்.

    அஜா ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பவர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கும். பொதுவாக விரத முறைகள் வழிபாடுகள் அனைத்தையும் கடைப்பிடிக்க வாய்ப்பில்லாதவர்கள் இந்த அஜா ஏகாதசி அன்று வெறும் உபவாசம் இருந்தாலே முழு விரத பலன்களைப் பெறுவார்கள்.

    அஜா ஏகாதசி விரதத்தின் பெருமைகளைத் தமக்கு விளக்கி அருளுமாறு யுதிஷ்டிரர் பகவான் கிருஷ்ணனிடம் கேட்கிறார். கிருஷ்ணரும் அஜா ஏகாதசி விரதத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கிறார்.

    "தர்ம புத்திரரே, அஜா ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பவர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கும். பொதுவாக விரத முறைகள் வழிபாடுகள் அனைத்தையும் கடைப்பிடிக்க வாய்ப்பில்லாதவர்கள் இந்த அஜா ஏகாதசி அன்று வெறும் உபவாசம் இருந்தாலே முழு விரத முறையையும் ஆச்ரயித்த பலன்களைப் பெறுவார்கள். மேலும் ரகுவம்சத்தில் தோன்றிய ஹரிச்சந்திரன் இந்த விரதத்தை அனுஷ்டித்து தன் துன்பம் நீங்கப் பெற்றான்" என்று ஹரிச்சந்திரனின் கதையினை எடுத்துக்கூறினார்.

    உலகம் போற்றும் சத்தியசந்தனாக விளங்கிய ஹரிச்சந்திர மகாராஜா தன் முன்வினைப்பயன்களால் தன் நாட்டை இழந்தான். மேலும் தன் மனைவி, மகனையும் பிரியும் நிலை வந்தது. ஆனாலும் தன் இயல்பில் மாறாது சுடுகாட்டைக் காக்கும் வேலையைச் செய்து சத்தியத்தையே கடைப்பிடித்துவந்தான். ஒருநாள் ரிஷி கௌதமரை சந்தித்தான். ரிஷியின் பாதங்களைப் பணிந்த ஹரிச்சந்திரன் தன் வாழ்க்கையில் நடந்த துயரங்களை எடுத்துக்கூறினான். அவற்றைக் கேட்ட முனிவர் மிகவும் மனம் வருந்தி, "நல்லவர்களும் துன்பப்படுகிறார்கள் என்றால் அதன்காரணம் அவர்களின் முன்வினைப்பயன்தான்.

    அதை அழிக்கும் சக்தியுடைய விரதம் அஜா ஏகாதசி விரதம். அடுத்து வரும் ஏகாதசி அஜா ஏகாதசிதான். அந்த நாளில் நீ முழு உபவாசம் இருந்து, ஹரியை நாள்முழுவதும் மனதாலும் வாக்காலும் துதிப்பாயாக. அப்படிச் செய்வதன் மூலம் ஹரி மகிழ்ந்து உன் வினைப்பயன்களை நீக்குவார். மேலும் நீ விரைவில் நன்னிலை அடைவாய். நீ அடையும் நன்னிலையே இந்த ஏகாதசி விரதத்தின் மகிமையை உலகுக்கு எடுத்துச் சொல்லும்" என்று உபதேசித்தார்.

    ஹரிச்சந்திரனும் அதன்படி விரதமிருந்து உபவாசம் அனுஷ்டிக்க விரைவில் அவன் வினைப்பயன்கள் நீங்கின. அவனோடு வாதம் செய்தவர் தோற்றார். அவன் துன்பங்கள் யாவும் நீங்கின. தன் பிள்ளையோடும் மனைவியோடும் இணைந்தான். அவன் ராஜ்ஜியம் மீண்டது என்று பகவான் கிருஷ்ணர் அவற்றை எடுத்துரைத்தார்.

    மேலும் அஜா ஏகாதசியின் சிறப்புகளை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறினாலும் அதைக் கேட்டாலும் சகல நன்மைகளும் உண்டாகும். கலியுகத்தில் சில யாகங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட யாகங்களில் ஒன்று அஸ்வமேத யாகம். அந்த யாகம் செய்வதால் உண்டாகும் புண்ணிய பலனை நாம் அஜா ஏகாதசி விரத்தைக் கடைப்பிடித்து, அதன் பலனை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதன் மூலம் பெறலாம் என்கிறது ஏகாதசி புராணம்.

    இத்தகைய சிறப்புகளையுடைய அஜா ஏகாதசி இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. எனவே தவறாமல் இந்த நாளில் உபவாசம் இருந்து ஹரியை வழிபட வேண்டும். இந்த நாளைத் தவறவிடாமல் பகவான் விஷ்ணுவை வழிபட்டு சகல நலன்களையும் பெறுவோம்.

    • இன்று பெருமாளை வழிபட்டால் கூடுதல் பலன்களைப் பெற முடியும்.
    • ஆலயங்களில், வாமன ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்படும்.

    இன்று (புதன்கிழமை) மகாவிஷ்ணுவுக்கு மிகச் சிறந்த உகந்த தினமாகும். ஏனெனில் வாமன அவதாரம் நிகழ்ந்த தினமாகும். எனவே இன்று பெருமாளை வழிபட்டால் கூடுதல் பலன்களைப் பெற முடியும். இன்று அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும், குறிப்பாக உலகளந்த பெருமாள் சந்நிதி இருக்கக் கூடிய ஆலயங்களில், வாமன ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்படும்.

    வாமன அவதாரத்தை வணங்கினால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகமாகும். வாமன அவதாரத்தில் மகாபலி சக்கரவர்த்தியை அழிக்கவில்லை. அவனுடைய அகந்தையை மட்டும் அழித்து அருள்புரிந்தார். தன்னுடைய பக்தனாக மகாபலி சக்கரவர்த்தியை மாற்றி, பாதாள உலகத்தை ஆளும்படி முடிசூட்டினார். எனவே முழுமையான அனுக்கிரகம் தரும் அவதாரமாக வாமன அவதாரம் போற்றப்படுகிறது.

    • இன்று மாலை லட்சுமி, மகாவிஷ்ணுவுக்கு பசும்பால் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.
    • பரிவர்த்தன ஏகாதசி விரதம் இருப்பதால் சகல தோஷங்களையும் போக்கிக் கொள்ள முடியும்.

    சயன ஏகாதசி தினத்தன்று படுக்கையில் படுத்த மகா விஷ்ணு சற்று புரண்டு படுப்பதை பரிவர்த்தனை ஏகாதசி என்று சொல்வார்கள். இன்று (செவ்வாய்க்கிழமை) பரிவர்த்தன ஏகாதசி தினமாகும். இன்று மாலை லட்சுமியுடன் மகாவிஷ்ணுவுக்கு பசும்பால் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.

    இந்த ஏகாதசி திதியில்தான் பகவான் வாமன அவதாரம் எடுத்தார். எனவே இன்று அவசியம் எல்லோரும் ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது நல்லது. விஷ்ணுவின் அனுக்கிரகத்தை பெற்றுத் தரும் இந்த பரிவர்த்தன ஏகாதசி விரதத்தை குழந்தைகள், முதியவர்கள், ஆண்கள், பெண்கள், திருமணம் ஆகாதவர்கள், திருமணம் ஆனவர்கள், துறவிகள் என அனைவரும் அனுஷ்டிக்கலாம்.

    இதற்கு பத்ம ஏகாதசி என்றும் ஒரு பெயர் உண்டு. இன்று மாலை 4.46 மணி வரை பூராட நட்சத்திரத்தில் வருவதால் ஸ்ரீமகாலட்சுமி தாயாரையும் அர்ச்சனை செய்து வணங்க வேண்டும். இன்று பரிவர்த்தன ஏகாதசி விரதம் இருப்பதால் சகல பாவங்களையும், தோஷங்களையும் போக்கிக் கொள்ள முடியும்.

    ஏகாதசி இரவு பெருமாள் ஆலயங்களுக்கு சென்று வணங்கி, ஸ்ரீமத் பாகவதம், விஷ்ணு புராணம் முதலிய நூல்களை வாசித்து, அடுத்த நாள் (புதன்கிழமை) துவாதசியில் தூய்மையான உணவு சமைத்து, பெருமாளுக்கு படைத்து விட்டுச் சாப்பிட வேண்டும்.

    இதற்கு துவாதசி பாரணை என்று பெயர். ஏகாதசி விரதம், துவாதசி பாரணையோடுதான் முடிகிறது. இந்த துவாதசி, சகல வெற்றிகளையும் கொடுப்பது என்பதால், விஜய துவாதசி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

    • சுதர்சன சக்கரத்தின் ஆற்றலை அளவிட முடியாதது.
    • விஷ்ணு சுதர்சன சக்கரத்தை ஆள்காட்டி விரலில் வைத்துக் கொண்டிருக்கிறார்.

    கிருஷ்ணரின் கையில் உள்ள சுதர்சன சக்கரம் மகிமை வாய்ந்தது அதன் ஆற்றல் அளவிட முடியாதது. சுதர்ஷன் என்றால் மங்களகரமானது என்று பொருள் 'சக்ரா' என்றால் எப்பொழுதும் செயல்பாட்டில் இருப்பது என்று அர்த்தம். எல்லா ஆயுதங்களைக் காட்டிலும் இது ஒன்றே எப்பொழுதும் சுழன்று கொண்டிருக்கிறது.

    சாதாரணமாக 'சுதர்சன சக்கரம்' கிருஷ்ணனின் சுண்டு விரலில் காணப்படும். ஆனால் விஷ்ணுவோ ஆள்காட்டி விரலில் வைத்துக் கொண்டிருக்கிறார். யார் மீதாவது ஏவும் பொழுது கிருஷ்ணனும், ஆள்காட்டி விரலில் இருந்து தான் ஏவுகிறார்.

    எதிரிகளை அழித்த பின் சுதர்சனசக்கரம் மறுபடியும் அதன்இடத்திற்கே திரும்பி விடுகிறது. சுதர்சன சக்கரம் ஏவப்பட்ட பிறகும் ஏவி விட்டவனின் கட்டளைக்கு அது கீழ்ப்படிந்து நடக்கிறது.

    எவ்வித அழுத்தமும் இல்லாத சூன்யப்பாதையில் செல்வதால் சுதர்சன சக்கரத்தால் எந்த இடத்திற்கும் கண்மூடி கண் திறக்கும் நேரத்திற்குள் செல்ல முடிகிறது.

    ஏதாவது தடை எதிர்பட்டால் சுதர்சன சக்கரத்தின் வேகம் அதிகரிக்கிறது. சுழலும் போது அது சத்தம் எழுப்புவதில்லை.

    அதனுடைய உருவம், வடிவம் எத்தகையது என்றால் சின்னஞ்சிறு துளசி தளத்தில் அடங்கக்கூடியது. அதே சமயம் இப்பிரபஞ்சம் அளவு பரந்து விரிந்தது.

    • இன்றைய தினம் அசூன்ய சயன விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.
    • இந்த விரதம் அனுஷ்டித்தால் ஒரு போதும் தம்பதிகள் பிரிய மாட்டார்கள் என்பது ஐதீகமாகும்.

    ஆடி மாத தேய்பிறை துவிதியை தினத்தில் ஸ்ரீகிருஷ்ணர், மகாலட்சுமியுடன் சுகமாக தூங்கும் நாள் ஆகும். இன்று (சனிக்கிழமை) இந்த துவிதியை திதி தினம் வருகிறது. இன்றைய தினம் அசூன்ய சயன விரதம் அனுஷ்டிக்க வேண்டும். அன்று மாலை பூஜை அறையில் ஸ்ரீகிருஷ்ணர் சிலை அல்லது படத்தை வைத்து தம்பதிகளாக பூஜை செய்து வழிபட வேண்டும் கிருஷ்ணருக்கு காய்ச்சிய வாசனையுள்ள பசும்பால் நிவேதனம் செய்ய வேண்டும்.

    புதிதாக வாங்கப்பட்ட பஞ்சுமெத்தை தலையணை போர்வையுடன் கூடிய படுக்கையில் ஸ்ரீகிருஷ்ணரையும், மகாலட்சுமியையும் படுக்க வைக்க வேண்டும். பிறகு கிருஷ்ணா, எவ்வாறு மகாலட்சுமியுடன் எப்போதும் தாங்கள் சேர்ந்தே இருக்கி றீர்களோ அப்படியே நானும் எனது மனைவியுடன்-கணவனுடன் என்றும் இணைபிரியாமல் ஒன்று சேர்ந்தே இருக்க அருள்புரிய வேண்டும் என்னும் சுலோகம் சொல்லி பிரார்த்தித்துக்கொள்ள வேண்டும்.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை மறுபடியும் ஸ்ரீகிருஷ்ணர், லட்சுமி விக்ரகங்களுக்கு பூஜை செய்ய வேண்டும். கிருஷ்ணரை படுக்க வைத்த அந்த புதிய படுக்கையை தானம் தந்துவிட வேண்டும். இவ்வாறு செய்பவர் வீட்டில் ஸ்ரீகிருஷ்ணர் அருளால் படுக்கை எப்போதும் கணவன்-மனைவியுடன் சேர்ந்ததாகவே இருக்கும். ஒரு போதும் தம்பதிகள் பிரிய மாட்டார்கள் என்பது ஐதீகமாகும்.

    ×