search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்நடை"

    • பூவளத்தூரில் அரசு சார்பில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
    • கால்நடை வளர்பவர்களுக்கு கால்நடை வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.

    பரமக்குடி

    பரமக்குடி அருகே பூவளத்தூர் கிராமத்தில் அரசு சார்பில் கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் தலைமை வகித்தார். ஒன்றிய குழு துணைத்தலைவர் பூமிநாதன் முன்னிலை வகித்தார்.

    முகாமினை போகலூர் ஒன்றிய குழு தலைவர் சத்யா குணசேகரன் தொடங்கி வைத்தார். கால்நடை மருத்துவர்கள் நந்தினி, ரஜினி ஆகியோர் குடற்புழு நீக்கம், மலடு நீக்க சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை உள்ளிட்ட சிகிச்சைகளை அளித்தனர்.

    இந்த முகாமில் சிறந்த கால்நடை பராமரிப்பாளர் மற்றும் கன்றுகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை ஊராட்சி மன்ற தலைவர் ராமமூர்த்தி வழங்கினார். மேலும், ஊட்டச்சத்து குறைபாடுடைய கால்நடை களுக்கு தாது உப்பு கலவைகளும், ஊறுகாய் புற்களும் வழங்கப்பட்டது.

    கால்நடை வளர்பவர்களுக்கு கால்நடை வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.

    முகாமில் வழக்கறிஞர் பரமசிவம், கால்நடை ஆய்வாளர் சுப்புகாளிமுத்து, ஊராட்சி செயலர் பயனா ளிகளும்,பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    • கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
    • சிறந்த கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கீழச்சாக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மேலமானாங்கரை கிராமத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கீழச்சாக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரி முகாமை தொடங்கி வைத்தார். கால்நடை உதவி மருத்துவர்கள் அகத்தியன், சுந்தரமூர்த்தி, கால்நடை ஆய்வாளர் இளமதி, கால்நடை உதவியாளர்கள் அன்னலட்சுமி, தங்கராசு ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

    193 மாடுகளும், 486 வெள்ளாடுகளுக்கும், 235 செம்மறியாடுகளுக்கும், 38 நாய்களுக்கும், 415 கோழிகளுக்கும் சிகிச்சை தரப்பட்டது. சிறந்த கிடேரி கன்று வளர்த்த உரிமையாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சிறந்த கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    • வெயில் தோன்றும் வரை கால்நடைகளை தோட்டம் மற்றும் திறந்த வெளியில் மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • மாடுகளுக்கு நிமோனியா காய்ச்சல் வர வாய்ப்புள்ளதால் வெயில் தோன்றிய பின்னரே மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்ல வேண்டும்.

    உடுமலை :

    தற்போது பனிக்காலம் என்பதால் உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில் காலை 8 மணி வரை குளிர் நிலவுகிறது.இதனால் அதிகாலையில், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    சில பகுதிகளில் கால்நடைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவதால் அவற்றை அருகில் உள்ள மருத்துவமனைக்கு, சிகிச்சைக்கு அழைத்துச்செல்லப்படுவதும் அதிகரித்துள்ளது.இந்நிலையில் வெயில் தோன்றும் வரை கால்நடைகளை தோட்டம் மற்றும் திறந்த வெளியில் மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து கால்நடை டாக்டர்கள் கூறியதாவது:- குளிரில் இருந்து கால்நடைகளை பாதுகாப்பதன் வாயிலாக பல்வேறு நோய் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க முடியும்.குறிப்பாக கோழிகளுக்கு மழை, குளிர் காலங்களில் வெள்ளைக்கழிச்சல் நோய் தாக்கப்படும் என்பதால் 4 மாதத்துக்கு ஒருமுறை தடுப்பூசி போட வேண்டும்.ஆடுகளை திறந்த வெளி பட்டியில் அடைக்காமல் கூரை அல்லது நான்கு புறமும் பனிச்சாரல் வீசாத வகையில் தார்ப்பாய் போட்டு மூடி பாதுகாக்க வேண்டும்.மாடுகளுக்கு நிமோனியா காய்ச்சல் வர வாய்ப்புள்ளதால் வெயில் தோன்றிய பின்னரே மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்ல வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மேய்ச்சல் நிலங்கள் குறைந்து விட்ட இன்றைய நிலையில் கால்நடைகளுக்கான தீவனச்செலவு என்பது மிக அதிகமாக உள்ளது. வருவாயில் பெரும்பகுதியை தீவனங்களுக்கே செலவழிக்கும் நிலையிலிருந்து விவசாயிகளை மீட்டெடுத்து அள்ள அள்ளக்குறையாத ஆரோக்கிய தீவனத்தை வழங்கக் கூடிய அட்சய பாத்திரமாக அசோலா உள்ளது. பெரிய முதலீடு இல்லாமல் தொடங்கக் கூடிய தீவன உற்பத்தித் தொழிற்சாலை என்று அசோலாவை சொல்லலாம்.

    நிழலான பகுதியில் 2 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலத்துக்கு செங்கல்லை வரிசையாக அடுக்கி தொட்டி போன்ற அமைப்பை உருவாக்க வேண்டும்.அதனுள் பழைய பிளாஸ்டிக் சாக்குகளை விரித்து, அதன் மீது தார்பாலின் ஷீட்டை விரிக்க வேண்டும். அதன் மீது 15 கிலோ அளவுக்கு வளமான மண்ணைப் பரப்பிவிடவேண்டும். இந்த தொட்டிக்குள் ஒரு கிலோ பசும் சாணியையும், 20 கிராம் ராக்பாஸ்பேட் (கல்மாவு) அல்லது சூப்பர் பாஸ்பேட்டை 10 லிட்டர் தண்ணீரில் கரைத்துவிட வேண்டும்.தொட்டியின் உள்பகுதியில் 10 செ.மீ உயரத்துக்கு தண்ணீர் இருந்தால் ஊற்றி அதில் 500 கிராம் அசோலாவை போடவேண்டும்.

    இதனையடுத்து 10 முதல் 15 நாட்களில் தினமும் அரை கிலோவிலிருந்து ஒரு கிலோ வரை அசோலா அறுவடை செய்யலாம். மேலும் 5 நாட்களுக்கு ஒருமுறை 10 கிராம் சூப்பர் பாஸ்பேட், அரை கிலோ சாணத்தை கரைத்து அந்த தொட்டியில் ஊற்ற வேண்டும்.இதனால் தொடர்ச்சியாக சீரான அளவில் அசோலா அறுவடை செய்ய முடியும். இவ்வாறு அசோலா உற்பத்தி செய்வதற்கு ஒரு கிலோவுக்கு ரூ.1-க்கும் குறைவாகவே செலவு பிடிக்கும். அதேநேரத்தில் கறவை மாடுகளுக்கு அதிக பால் உற்பத்தி, ஆடுகளுக்கு அதிக இறைச்சி, கோழிகளுக்கு அதிக இறைச்சி மற்றும் சத்தான முட்டை உற்பத்திக்கும் அசோலா கைகொடுக்கிறது.

    இதுதவிர மீன், பன்றி, முயல் போன்றவற்றுக்கும் அசோலா சிறந்த உணவாக இருக்கும்.மனிதர்களும் வடை, போண்டா போன்ற உணவுப் பண்டங்களில் அசோலாவை கீரை போன்று பயன்படுத்தலாம்.அசோலா வளர்க்கும் இடங்களில் கொசுத் தொல்லை குறைவாக இருக்கும் என்பதால் கொட்டகைக்கு அருகிலேயே நிழற்பாங்கான இடத்தில் அசோலா தொட்டிகளை அமைக்கலாம். நெல் வயலில் தேங்கியிருக்கும் நீரில் அசோலா பயிரிடுவதால் சிறந்த நுண்ணுயிர் உரமாக செயல்படுகிறது.

    மேலும் தண்ணீர் ஆவியாவதைக் குறைப்பதுடன் களையைக் கட்டுப்படுத்தி அதிக மகசூலுக்கு உதவுகிறது.கறவை மாடுகளுக்கு தினசரி 1.5 கிலோ முதல் 2 கிலோ வரையும், கறிக்கோழிகளுக்கு 20-30 கிராமும், ஆடுகளுக்கு 300-500 கிராமும் அசோலா உணவாகக் கொடுக்கலாம். கால்நடைகளுக்கு அதிக பால், இறைச்சி, முட்டை உற்பத்தி மட்டுமல்லாமல் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியும் தரக்கூடிய அற்புத உணவாக அசோலா உள்ளது.


    • கால்நடை விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • சிறந்த கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் யூனியன் செய்யாமங்கலம் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. பரமக்குடி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் சிவகுமார், மேலக்கொடுமலூர் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், கால்நடை உதவி மருத்துவர்கள் சுந்தரமூர்த்தி, வினிதா, கால்நடை ஆய்வாளர் முனீஸ்வரி, வீரகேசரி, கால்நடை உதவியாளர் அழகுமீனாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் 142 மாடுகள், 483 வெள்ளாடுகள், 892 செம்மறியாடுகள், 21 நாய்கள், 386 கோழிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறந்த கிடேரி கன்று வளர்த்த உரிமையாளர்களுக்கு பரிசுகளும், சிறந்த கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    • மதுரை பேச்சிக்குளத்தில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • சிறந்த முறையில் கால்நடைகளை பராமரித்த உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்டம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பேச்சிக்குளம் அய்யனார்புரத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மாவட்ட கால்நடை துறை இயக்குநர் சரவணன் மற்றும் இணை இயக்குநர் நடராஜன் ஆகியோரின் ஆலோசனைப்படி சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    கால்நடை மருத்துவர்கள் தேன்மொழி, சிந்து, ராமலட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினர். பேச்சிக்குளம் ஊராட்சி தலைவர் ராஜலட்சுமி வாசு, துணைத்தலைவர் கார்த்திக் பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த முகாமில் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசியும், கோழிகளுக்கு வெள்ளை கழிதல் தடுப்பூசியும், கன்று மற்றும் ஆடுகளுக்கு குடற்குழு நீக்கம் மருந்து கொடுத்தும் பரிசோதனை செய்யப்பட்டது.

    மேலும் கால்நடைகளுக்கு எந்த மாதிரியான தீவனங்களை வழங்க வேண்டும் என்றும் கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர். சத்து மாவு,பதப்படுத்திய புல் கால்நடைகளுக்கு வழங்கப்பட்டது. இது தவிர சிறந்த முறையில் கால்நடைகளை பராமரித்த உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

    முகாமில் ஊமச்சிகுளம், பேச்சிக்குளம், வீரபாண்டி ஊராட்சி போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட கால்நடைகள் பங்கேற்றன. முகாமில் பங்கேற்று பரிசோதனை செய்யப்பட்டு கால்நடைகளுக்கு மருந்துகள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கால்நடை ஆய்வாளர்கள் கலைவாணி,கோவிந்தன், சுகப்பிரியா, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கலாவதி, ஜெயதேவி,உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இலம்பி நோய், ஆட்டு கொல்லி நோய்க்கு 300 மாடுகள், 700 ஆடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
    • மருத்துவ குழுவில் டாக்டர் ராமலிங்கம் மண்டல இணை இயக்குனர் தொடங்கி வைத்தார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி வட்டம் ஜாம்புவானோடை ஊராட்சி வீரன்வயல் பகுதியில், தமிழ்நாடு கால்நடை கோட்டம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், வேளாண்மை அறிவியல் நிலையம் நீடாமங்கலம் இணைந்து சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    இலம்பி நோய், ஆட்டு கொல்லி நோய்க்கு 300 மாடுகள், 700 ஆடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. டாக்டர் மகேந்திரன் தலைமையிலான மருத்துவ குழுவில் டாக்டர் ராமலிங்கம் மண்டல இணை இயக்குனர் தொடங்கி வைத்தார்.

    டாக்டர் சபாபதி, ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய கவுன்சிலர்,ஊராட்சி மன்ற உறுப்பினர் நளினி,கவிதா,டாக்டர் ராதாகிருஷ்ணன் திட்ட ஒருங்கிணைப்பாளர் கால்நடை உதவியாளர் பிரசன்னா, மாதவன், மகாலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • உலர் தீவனமான வைக்கோல், மக்காச்சோளத்தட்டு ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு அதிகரிக்கிறது.
    • உலர் தீவன கிடங்கு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் .

    உடுமலை : 

    உடுமலை சுற்றுப்பகுதிகளில் பால் உற்பத்திக்காக மாடுகள் அதிக அளவு வளர்க்கப்படுகின்றன. இவ்வகை மாடுகளுக்கு விளைநிலங்களில் விளையும் பசுந்தீவனமும், வைக்கோல் உட்பட உலர் தீவனங்களும் வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் பசுந்தீவன உற்பத்தி குறையும் போது, உலர் தீவனமான வைக்கோல், மக்காச்சோளத்தட்டு ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு அதிகரிக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மாடுகளுக்கு முறையான தீவனம் கிடைக்காமல் பால் உற்பத்தி குறைந்தது. மேலும், குறைந்த விலைக்கு மாடுகளை விற்கும் அவல நிலையும் ஏற்பட்டது.இப்பிரச்சினைக்கு தீர்வாக அரசு உலர் தீவன கிடங்கு திட்டத்தை 2014ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

    உடுமலை வட்டாரத்தில் கால்நடைத்துறை சார்பில், அதிகபட்சமாக 5 மாடுகளுக்கு 105 கிலோ வீதம் ஒரு கிலோ வைக்கோல் 2 ரூபாய்க்கு இத்திட்டத்தில் வழங்கப்பட்டது.கால்நடைத்துறை சார்பில் 2 லட்சம் கிலோ வரை வைக்கோல் கொள்முதல் செய்யப்பட்டு கால்நடை வளர்ப்போருக்கு வினியோகிக்கப்பட்டது.

    சில ஆண்டுகள் மட்டுமே இத்திட்டம் செயல்பாட்டில் இருந்தது. இந்நிலையில் உலர் தீவன கிடங்கு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உடுமலை பகுதியில் பல வகையான பசுந்தீவனங்கள் கிடைத்தாலும் வைக்கோலுக்காக பழனி உட்பட பல்வேறு பகுதிகளுக்குச்செல்ல வேண்டியுள்ளது. அதிக வாடகை அளித்து வைக்கோலை எடுத்து வர வேண்டியிருப்பதால் கட்டுபடியாவதில்லை.குறைந்த விலையில் அனைத்து கால்நடை மருந்தகம் மற்றும் கிளை நிலையங்களில் வைக்கோலை விற்பனை செய்தால் பயனுள்ளதாக இருக்கும்.அனைத்துப்பகுதிகளிலும் நெல் அறுவடை சீசன் துவங்கியுள்ள நிலையில் உடனடியாக இத்திட்டம் குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்என கால்நடை வளர்ப்போர் தெரிவிக்கின்றனர்.

    • 2½ வயது முதல் 8 வயது வரை உள்ள பசு மற்றும் எருமை மாடுகளுக்கு காப்பீடு செய்யலாம்.
    • குமரி மாவட்ட கலெக்டர் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் 300 கால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள கால்நடை வளர்ப்பவர்களுக்கு 70 சதவீத மானியமும், வறுமை கோட்டிற்கு மேல் உள்ள கால்நடை வளர்ப்பவர்களுக்கு 50 சதவீத மானியமும் வழங்கப்படும்.

    இத்திட்டத்தின் கீழ்2½ வயது முதல் 8 வயது வரை உள்ள பசு மற்றும் எருமை மாடுகளுக்கு காப்பீடு செய்யலாம். அதிகப்பட்சமாக ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய மானியம் வழங்கப்படுகிறது.

    ஓராண்டு காப்பீடு கட்டணமாக கால்நடையின் மதிப்பில் 1.45 சதவீதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரூ.35 ஆயிரத்துக்கு மேல் காப்பீடு செய்யப்படும் கால்நடைகளுக்கு அதிகப்படியான காப்பீடு கட்டணம் கால்நடை உரிமையாளர்களால் செலுத்தப்பட வேண்டும்.

    ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக 5 கால்நடைகள் இத்திட்டத்தில் காப்பீடு செய்யலாம். கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய விருப்பம் உள்ள கால்நடை வளர்ப்போர் அருகே உள்ள கால்நடை மருத்துவமனை மற்றும் கால்நடை மருந்தகத்தை அணுகி பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • திருமங்கலம் அடுத்த எஸ். புளியங்குளம் கிராமத்தில் கால்நடை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • இதனைத்தொடர்ந்து சிறந்த கால்நடை வளர்ப்போர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    மதுரை

    திருமங்கலம் அடுத்த எஸ். புளியங்குளம் கிராமத்தில் கால்நடை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் திருமங்கலம் கோட்ட கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநர் ரவிச்சந்திரன், மதுரை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் கிரிஜா, விடத்தகுளம் உதவி மருத்துவர் கஜேந்திரன், கால்நடை ஆய்வாளர்கள் பிரபாகரன், சீனிவாச பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த முகாமில் 300-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், செயற்கை கருவூட்டல், சினை பரிசோதனை மற்றும் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து சிறந்த கால்நடை வளர்ப்போர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    • ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கால்நடை விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • சிறந்த முறையில் கால்நடைகள் வளர்த்த விவசாயிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியதில் உள்ள கிழவனேரி கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் பரமக்குடி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் டாக்டர் சிவகுமார், கிழவனேரி பஞ்சாயத்து தலைவர் ராமலட்சுமி, துணைத்தலைவர் கார்த்திக், உதவி மருத்துவர்கள் சுந்தரமூர்த்தி, மோகன், ஆய்வாளர் வீரன் மற்றும் கால்நடை உதவியாளர்கள் செந்தில்வேல், விஜயராணி கலந்து கொண்டனர்.

    இந்த முகாமில் 105 விவசாயிகள் பயனடைந்தனர். 116 மாடுகளுக்கும், 416 வெள்ளாடுகளுக்கும், 524 செம்மறியாடுகளுக்கும், 16 நாய்களுக்கும், 286 கோழிகளுக்கும் சிகிச்சை தரப்பட்டது. சிறந்த முறையில் கால்நடைகள் வளர்த்த விவசாயிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    • 16-ந் தேதி மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
    • 19-ந் தேதி கால்நடை மருத்துவ முகாம்.

    தஞ்சாவூர்:

    கூட்டுறவு வார விழாக்குழு தலைவரும், தஞ்சாவூர் மண்டல இணைப்பதிவாளருமான தமிழ்நங்கை வெளியிட்டு ள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    69-வது அகில இந்திய கூட்டுறவு வார விழா தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று தொடங்கியது. வருகிற 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    விழாவின் முதல் நாளான இன்று கொடியேற்றுதல், உறுதிமொழி எடுத்தல் மற்றும் மரம் நடும் விழா நடைபெற்றது.

    நாளை 15-ந் தேதி விற்பனை மேளா, 16-ந் தேதி மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, 17-ந் தேதி உறுப்பினர் கல்வி திட்டம் மற்றும் கருத்தரங்கம், 19-ந் தேதி கால்நடை மருத்துவ முகாம், 20-ந் தேதி விற்பனையாளர், வாடிக்கையாளர் சந்திப்பு முகாம் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற உள்ளது.

    மாவட்ட அளவிலான கூட்டுறவு வார விழா வருகிற 18-ந் தேதி மாலை 4 மணி அளவில் கும்பகோணம், மூர்த்தி கலையரங்கத்தில் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கால்நடைகளுக்கு தேவையான தீவனப்புல் வளர்க்க விதைத் தொகுப்பு வாங்க மானியம் வழங்கப்படும் என கலெக்டர் கூறினார்.
    • கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு தேவைப்படும தீவனப்புல் வளர்க்க விதைத் தொகுப்பு மற்றும் புல்கறனைகள் வாங்குவதற்கு மானியம் வழங்குவதற்கான அரசாணை வரப்பெற்றுள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18-65 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் தீவனப்புல் மற்றும் புல்கறனைகள் வளர்க்க ஆர்வமுள்ளவர்கள் கால்நடை உதவி மருத்து வரிடம் பரிந்துரை பெற்று விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

    ஆதி திராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். பயனாளிகளுக்கு விதைத் தொகுப்பு, புல்கறனைகளுடன் தீவனங்களை வளர்க்க தேவையான பயிற்சி, கையேடுகள் மற்றும் களப்பயிற்சி ஆகியவற்றின் செலவினங்கள் ஒரு பயனாளிக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் என்ற மானிய தொகைக்கு உட்பட்டு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

    தீவன விதைகள் ஆவின் நிறுவனம், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும்.

    இந்த திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள ஆதிதிராவிடர் பயனாளிகள் https:/ /application.tahdco.com என்ற இணையதளத்திலும், பழங்குடியின பயனாளிகள் https://fast.tahdco.com என்ற இணையதளத்திலும் பதிவு செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×