என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேஷன் கடை"

    • திருப்பூர் மாவட்டத்தில் 1,135 ரேஷன் கடைகள் உள்ளன.
    • கடைகளில் காலியாக உள்ள, 186 விற்பனையாளர்; 54 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில், கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன்கடைகளில் 240 காலி பணியிடங்கள் உள்ளன. இப்பணிக்காக இதுவரை ஆறாயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    திருப்பூர் மாவட்டத்தில், 1,135 ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றில், 1,099 கடைகள், கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த கடைகளில் காலியாக உள்ள, 186 விற்பனையாளர்; 54 உதவியாளர் என, மொத்தம் 240 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் இப்பணியிடங்களுக்கு பலரும் மிகுந்த ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். கூட்டுறவு த்துறை அதிகாரிகள் கூறுகையில், 'திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ரேஷன் கடை பணியிடங்களுக்காக, இதுவரை, ஆறாயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். வரும் 14ம் தேதி கடைசிநாள் என்பதால், மேலும் ஏராளமானோர் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.

    • தற்போது ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு மூலம் பொருட்கள் வழங்கப்படுகிறது.
    • விண்ணப்பித்த 15 நாட்களில் ரேஷன் கார்டு வழங்கப்படும்.

    திண்டுக்கல் :

    திண்டுக்கல்லில் நடந்த கூட்டுறவு வாரவிழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு பேசியதாவது:-

    கூட்டுறவு சங்கங்களுக்கு தி.மு.க. ஆட்சியில் தான் சொந்த கட்டிடம் கட்டித்தரப்பட்டது. தற்போது 6 ஆயிரத்து 500 பேருக்கு கூட்டுறவுத்துறையில் வேலை உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவிலேயே 2-வது இடமாக கொடைக்கானலில் கூட்டுறவு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைய இருக்கிறது.

    தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சொந்த கட்டிடம் கட்டப்படும். விண்ணப்பித்த 15 நாட்களில் ரேஷன் கார்டு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்து இருந்தார்.

    அதன்படி மாநிலம் முழுவதும் 13 லட்சத்து 50 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும் புதிதாக விண்ணப்பித்து உள்ளவர்களில் தகுதியான அனைவருக்கும் ரேஷன் கார்டு வழங்கப்படும்.

    தற்போது ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு மூலம் பொருட்கள் வழங்கப்படுகிறது.

    ஆனால் கூலி வேலைக்கு செல்வோர், முதியவர்களின் விரல் ரேகை சரியாக பதிவு ஆகாததால், பொருட்கள் வாங்குவதில் சிரமம் இருக்கிறது.

    இந்த சிரமத்தை தவிர்க்கும் வகையில் கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கும் முறை தமிழகம் முழுவதும் விரைவில் அமலுக்கு வர இருக்கிறது.

    இதன் முன்னோட்டமாக சென்னையில் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. மேலும் ரேஷன் கடைக்கு வர இயலாதவர்கள் உரிய படிவத்தை பூர்த்தி செய்து வழங்கினால், பிற குடும்ப உறுப்பினர்கள் மூலம் பொருட்களை வாங்கி கொள்ளலாம்.

    இவ்வாறு அமைச்சர் சக்கரபாணி பேசினார்.

    • அனுமதி சீட்டில் தெரிவிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
    • தகுதி பெற்ற வி்ண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டுள்ளது.

    திருப்பூர் : 

    திருப்பூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மற்றும் ஆள்சேர்ப்பு நிலைய தலைவருமான சொ.சீனிவாசன் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-  திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்களில் விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்காக தகுதி பெற்ற வி்ண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு வரு–கிற 15-ந்தேதி முதல் 21-ந் தேதி வரை–யும், கட்டுனர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு 22-ந் தேதியும் திருப்பூர் பல்லடம் ரோட்டில் சின்னகரை பகுதியில் பார்க் கல்லூரியில் (தன்னாட்சி) நடைபெற உள்ளது.

    எனவே நேர்முகத்தேர்வுக்கான அனுமதி சீட்டு திருப்பூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் (www.drbtiruppur.net) என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் நேர்முகத்தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதி, முன்னுரிமை தகுதி மற்றும் இதர தகுதிகளுக்கான அசல் மற்றும் சுய ஒப்பமிட்ட 2 நகல்கள், 2 பாஸ்–போர்ட் அளவு புகைப்படம், விண்ணப்பக்கட்டணம் செலுத்தியதற்கான ரசீது ஆகியவற்றை சமர்ப்பிப்பதுடன் அனுமதி சீட்டில் தெரிவிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

    மேலும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் 0421-2971173 மற்றும் drbtiruppur2022@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உடன்குடி பகுதியில் பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார்.
    • அமைச்சர், அதிகாரிகளிடம் வாரத்தில் ஒரு நாள் கந்தபுரத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்துக் கொடுக்க முயற்சி செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.

    உடன்குடி:

    தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உடன்குடி பகுதியில் பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். அப்போது மூதாட்டி ஒருவர் அமைச்சரை நேரில் சந்தித்து எனது ஊர் கந்தவபுரம் நான் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள உதிர மாடன் குடியிருப்புக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதனால் வாரத்தில் ஒரு நாள் எங்கள் ஊரிலே ரேஷன் கடை திறந்து ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார். கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அமைச்சர் உடனடியாக அதிகாரிகளிடம் கலந்துரையாடல் நடத்தி வாரத்தில் ஒரு நாள் கந்தபுரத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்துக் கொடுக்க முயற்சி செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.

    அப்போது உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், துணை சேர்மன் மீராசிராசுதீன், உடன்குடிகிழக்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் இளங்கோ, உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அஸ்ஸாப் அலி, செட்டியாபத்து ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன், இளைஞரணி பாய்ஸ் மற்றும் அரசு அதிகாரிகள், தி.மு.கவினர் உடன் இருந்தனர்.

    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரெயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
    • நெல் அரவை செய்யப்பட்டு, பொது வினியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சி யமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரெயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

    இந்த நெல் அரவை செய்யப்பட்டு, பொது வினியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இதுதவிர தஞ்சை மாவட்ட த்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.

    அதன்படி இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 1,250 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

    பின்னர் சரக்கு ரெயிலில் 21 வேகன்களில் 1,250 டன் புழுங்கல் அரிசி ஏற்றப்பட்டு திருநெல்வேலிக்கு பொது வினியோக திட்டத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    • 240 ரேசன் கடை பணியிடங்களுக்கான நேர்காணல் தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
    • 186 விற்பனையாளர், 54 கட்டுனர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 240 ரேசன் கடை பணியிடங்களுக்கான நேர்காணல் தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இது குறித்து கூட்டுறவு சங்க அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம்,திருப்பூர்,ஊத்துக்குளி,அவிநாசி, மடத்துக்குளம், தாராபுரம்,உடுமலை, காங்கேயம், வெள்ளகோயில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கூட்டுறவு துறையின் கீழ் உள்ள ரேசன் கடைகளில் 186 விற்பனையாளர், 54 கட்டுனர்கள் என மொத்தம் 240 பணியிடங்கள் காலியாக உள்ளன. காலியாக உள்ள இந்தப்பணிகளுக்கு 8222 விற்பனையாளர்,1429 கட்டுனர்கள் என மொத்தம் 9651 பேர் வேலை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். பணியிடங்களை நிரப்ப விண்ணப்பதாரர்களிடம் நேர்காணல் பல்லடம் அருகே உள்ள சின்னக்கரை தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் 28 அதிகாரிகள் கொண்ட குழுவினர் விண்ணப்பதாரரின் கல்வி உள்ளிட்ட சான்றுகளை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தினசரி 1400 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர் இந்த நேர்காணல் 22.12.22 வரை நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • லாரியில் மூட்டை மூட்டையாக கோதுமை, அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் இறக்கிவைக்கப்பட்டன.
    • உணவுப் பொருட்களை வாங்க வரும் பொதுமக்களிடம் அடுத்த மாதத்துக்கானது என்று சொல்வதால் அவா்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாநகரில் உள்ள நியாய விலைக் கடைகளில் தரமான உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலாளா் செ.முத்துகண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூா் மாநகராட்சி 60-வது வாா்டு இந்திரா காலனி, முத்தனம்பாளையத்தில் உள்ள நியாய விலைக் கடையில் இந்த மாதத்துக்கான கோதுமை இருப்பில் இல்லை என்று விற்பனையாளா் தெரிவித்தாா். ஆனால், அப்போது லாரியில் மூட்டை மூட்டையாக கோதுமை, அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் இறக்கிவைக்கப்பட்டன.

    இதுகுறித்து கேட்டபோது அடுத்த மாதத்துக்கான இருப்பு என்பதால் அதனை வழங்க முடியாது என்று விற்பனையாளா் தெரிவித்தாா். இந்த மாதத்துக்கான உணவுப் பொருட்களை வாங்க வரும் பொதுமக்களிடம் அடுத்த மாதத்துக்கானது என்று சொல்வதால் அவா்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனா்.

    இதனால் அரசின் திட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாக தெரிகிறது. அதே வேளையில், அந்தக் கடையில் வழங்கப்பட்ட பச்சரிசியில் புழுக்கள் இருந்ததால் அதனை உணவுக்காக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

    ஆகவே நியாய விலைக் கடைகளில் போதிய அளவு உணவுப் பொருட்களை இருப்பு வைத்து தரமான முறையில் வழங்க கூட்டுறவுத் துறை மற்றும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மேற்கண்ட துறைகளை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • அக்ரி.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த வெள்ளூர் குஜால்பேட்டை யில் நேற்று இப்பகுதியில் வசிக்கும் 223 குடும்ப அட்டைதாரர்கள் வசதிக்காக பகுதி நேர ரேசன் கடை தொடக்க விழா நடைபெற்றது.

    இந்த விழாவில் போளூர் தொகுதி அக்ரி. கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, ரேசன் கடையை திறந்து வைத்து ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்து பேசினார்.

    இதில் முன்னாள் எம் எல் ஏ ஜெயசுதா, போளூர் ஒன்றிய குழு முன்னாள் தலைவர்கள் செல்வன், ராஜன், முன்னாள் கவுன்சிலர்கள் கண்ணபிரான், ராஜாபாபு சந்தவாசல் முன்னாள் தலைவர் வெங்கடேசன் படவேடு முன்னாள் தலைவர் வெற்றிவேலன், சந்தவாசல் கிராம நிர்வாக அலுவலர் ஜோதிமுருகன, படவேடு ரேணுகாம்பாள் கோவில் முன்னாள் அறங்காவலர் லோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் சந்தவாசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் சசிகுமார் நன்றி கூறினார்.

    • தமிழகம் முழுவதும் 13 திறந்தவெளி நெல் சேமிப்பு கிட்டங்கிகள் உள்ளன.
    • நெல் மூட்டைகள் மழையால் சேதம் அடைவதை தவிர்க்க ரூ.238 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2 லட்சத்து 86 ஆயிரத்து 450 டன் நெல் சேமிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை மாவட்டம் சாணம்பட்டியில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் 2 கோடியே 10 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, ரொக்க பணம் வழங்கப்படும். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் 100 சதவீதம் அரசியல் தலையீடு எதுவும் இருக்காது. தமிழகம் முழுவதும் 13 திறந்தவெளி நெல் சேமிப்பு கிட்டங்கிகள் உள்ளன.

    நெல் மூட்டைகள் மழையால் சேதம் அடைவதை தவிர்க்க ரூ.238 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2 லட்சத்து 86 ஆயிரத்து 450 டன் நெல் சேமிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் விவசாயிகள் தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவர் அவர் கூறினார்.

    • துறையூர் அருகே புதிய ரேஷன் கடை திறக்கப்பட்டது
    • நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், கட்சி பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வரதராஜபுரம் ஊராட்சி, ராஜபுரம் பகுதி மக்கள் தங்களது பகுதியில் புதிய ரேஷன் கடை அமைத்து தருமாறு துறையூர் தொகுதி எம்.எல்.ஏ. ஸ்டாலின் குமாரிடம் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கையின் படி அப்பகுதியில் புதிய ரேஷன் கடையை எம்.எல்.ஏ. ஸ்டாலின் குமார் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன், துறையூர் ஒன்றிய குழு தலைவர் சரண்யா மோகன்தாஸ், துறையூர் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, ஊராட்சி மன்ற தலைவர் மதுபாலன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், கிளைச் செயலாளர்கள் ராமராஜ், கோபி, மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, விவசாய அணி செல்லமுத்து, ஒன்றிய கவுன்சிலர் அசோகன், வட்ட வழங்கல் அலுவலர் தமிழ்ச்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், கட்சி பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


    • பழைய முறைப்படி விற்பனை முனைய எந்திரத்தில் அரிசி, இதர பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
    • புதிய நடைமுறையால் ரசீது எழுதுவது, பொருட்கள் வினியோகத்தில் காலதாமதம் ஏற்படுவதாக ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    திருப்பூர் : 

    தமிழகத்தில் 34,790 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 2 கோடியே 23 லட்சத்து 30 ஆயிரத்து 605 ரேஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. ரேஷன் கடைகளில் முன்னுரிமை கார்டுக்கு (பி.எச்.எச்.,) அனைத்து பொருட்களும், முன்னுரிமை அந்தியோதயா அன்ன யோஜனா கார்டுக்கு (பி.எச்.எச்., ஏ.ஏ.ஒய்.,), 35 கிலோ அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வழங்கப்படுகிறது. முன்னுரிமையற்ற கார்டுக்கு (அரிசி அட்டை) அனைத்து பொருட்களும், (சர்க்கரை அட்டை) அரிசி தவிர மற்ற அனைத்து பொருட்களும், பொருட்களில்லா அட்டை என 5 வகைகள் உள்ளன.

    இந்த 5 வகை கார்டுகள் அடிப்படையிலேயே பொருட்கள் வினியோகிக்கப்படுகின்றன. மத்திய, மாநில அரசு ஒதுக்கீடு செய்யும் அரிசி பிரிக்கப்படாமல் ஒரே மாதிரியாக வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் அரிசியின் அளவை தனித்தனியாக பிரித்து பில் போட்டு பொதுமக்களுக்கு வழங்கும் முறை கடந்த 1ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.  அதன்படி அரிசி வினியோகிக்கும் போது ஒதுக்கீடு பிரித்து வழங்கும் வகையில் இரண்டு ரசீதுகள் போடப்படுகிறது.

    பி.எச்.எச்., கார்டுகளில் பெரியவர் ஒருவருக்கு மொத்த ஒதுக்கீடு 12 கிலோ அரிசி. இதில் மத்திய அரசின் ஒதுக்கீடான 5 கிலோ, மாநில ஒதுக்கீடு 7 கிலோவுக்கு தனித்தனியாக ரசீது போட வேண்டும். ஒரு பெரியவர், ஒரு குழந்தை உள்ள கார்டுக்கு மத்திய அரசு 10 கிலோ, மாநில அரசு 4 கிலோ, இரு பெரியவர் உள்ள கார்டுக்கு மத்திய அரசு 10 கிலோ, மாநில அரசு 6 கிலோவும்,இரு பெரியவர், ஒரு குழந்தைக்கு 15 கிலோ மத்திய அரசும், 3 கிலோ மாநில அரசும் ஒதுக்கீடாக உள்ளது.

    3 பெரியவர்கள் உள்ள கார்டுக்கு மத்திய அரசின் 15 கிலோவும், மாநில அரசுடையது 5 கிலோ மற்றும் இதர பொருட்களும் உள்ளன. 4 பெரியவர் கார்டுக்கு 20 கிலோ, 5 பெரியவருக்கு 25 கிலோ, 6 பெரியவருக்கு 30 கிலோ , 7பெரியவருக்கு 35 கிலோ அரிசி மத்திய அரசு வழங்குகிறது. இந்த கார்டுகளுக்கு மாநில அரசு வாயிலாக இதர பொருட்கள் மட்டும் வழங்கப்படுகிறது.வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களது கார்டுகளுக்கு மத்திய அரசு சார்பில் 35 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.

    இதுவரை மத்திய அரசின் ஒதுக்கீடு குறித்து மக்களுக்கு தெரியாமல் இருந்தது. இந்த புதிய நடைமுறையால் மத்திய அரசின் ஒதுக்கீடு மக்களுக்கு தெரிய வந்துள்ளது. இந்த புதிய நடைமுறையால் ரசீது எழுதுவது, பொருட்கள் வினியோகத்தில் காலதாமதம் ஏற்படுவதாக ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    இந்நிலையில் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க மாவட்ட துணை தலைவர் ஜெகநாதன், துணை செயலாளர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் கூறுகையில், பழைய முறைப்படி விற்பனை முனைய எந்திரத்தில் அரிசி, இதர பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:- கடந்த 1ந் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகம் செய்ய புதிய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.அதன்படி இந்த கார்டுகளுக்கு மத்திய அரசு வழங்கும் அரிசிக்கு தனி ரசீதும், மாநில அரசு வழங்கும் அரிசி மற்றும் இதர பொருட்களுக்கு தனி ரசீது என இரண்டு ரசீதுகள் போட வேண்டியுள்ளது.ரேஷன் கடைகளில் உள்ள எந்திரத்தில் பதிவு செய்து பொருட்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. சர்வர் பிரச்சினை ஏற்பட்டால் மக்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.இதனால் பொதுமக்கள், கடை ஊழியர்களிடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க அரசு பழைய நடைமுறையில் ரசீது வழங்க வேண்டும் என்றனர்.   

    • நியாய விலைக்கடைகளில் தரமற்ற அரிசி, பருப்பு விநியோகம் செய்யப்படுகிறது.
    • நியாய விலைக் கடைகளில் தரமான அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காளம்பாளையத்தைச் சோ்ந்த ஜீவானந்தம் என்பவா் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:- திருப்பூரை அடுத்த பொங்குபாளையம் பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளில் தரமற்ற அரிசி, பருப்பு விநியோகம் செய்யப்படுகிறது. இங்கு விநியோகிக்கப்படும் அரிசியில் துா்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஆகவே, பொங்குபாளையம் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் தரமான அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×