search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 226542"

    • ஏரல் சேர்மன் அருணாச்சல சுவாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.
    • தாமிபரணி ஆற்றில் புனித நீராடி பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

    ஆடி அமாவாசை தினமான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது சிறப்பாக கருதப்படுகிறது.

    அதன்படி இன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

    காரையாறு, சொரிமுத்து அய்யனார் கோவிலில் இன்று ஆடி அமாவாசை திருவிழா நடந்தது. இதையொட்டி இன்று அதிகாலை பக்தர்கள் சொரிமுத்து அய்யனார் கோவிலில் பொங்கலிட்டு சுவாமிக்கு படைப்பு செய்தனர்.

    தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது. பின்னர் சொரிமுத்து அய்யனாருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

    அதன்பின்னர் மகாலிங்க சுவாமி, சங்கிலி பூதத்தார், தளவாய் மாடசுவாமி, ஊசிமாடசுவாமி, பேச்சியம்மன், பட்டவராயன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தன.

    பாபநாசம் படித்துறையில் பல்லாயிரக்கணக்கானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். வழக்கமாக சொரிமுத்து அய்யனார் கோவிலில் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவில் லட்சகணக்கான பக்தர்கள் திரள்வார்கள். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டதால் வழக்கத்தை விட அதிக பக்தர்கள் திரண்டனர்.

    இதே போல் ஆடி அமாவாசை தினமான இன்று தாமிபரணி நதிக்கரையில் இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் திரண்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

    பாபநாசம் பாபநாச நாதர் கோவில், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, நெல்லை, குறுக்குத்துறை உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள தாமிரபரணி படித்துறைகளில் பொதுமக்கள் தர்ப்பணம் செய்தனர்.

    இதற்காக தாமிபரணி ஆற்றில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

    நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சியின் போது பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த முழுமையான தடை விதிக்கப்பட்டிருந்தது.

    அதனை கண்காணிக்க பல்வேறு இடங்களில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

    மேலும் தாமிபரணி ஆற்றில் தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சியின் போது பொதுமக்களின் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தாமிபரணி படித்துறை ஓரங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    தூத்துக்குடி தெர்மல்நகர் கடற்கரை பகுதியில் ஏராளமானோர்கள் திரண்டு தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

    இதனால் கடற்கரை முழுவதும் மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது. ஏரல் சேர்மன் அருணாச்சல சுவாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா பிரசித்தி பெற்றதாகும். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் திரண்டு வழிபடுவார்கள்.

    அதன்படி இன்று பல்லாயிரகணக்கான பொதுமக்கள் அதிகாலை முதலே அணிஅணியாக திரண்டு வந்தனர். அவர்கள் தாமிரபரணி ஆற்றில் தர்ப்பணம் செய்தனர்.

    அதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.கா.அ.கருத்தப்பாண்டி நாடார் செய்திருந்தார்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி திரளான பக்தர்கள் இன்று வழிபாடு செய்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள கடற்கரையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

    இதேபோல் நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவில், இசக்கியம்மன் படித்துறை, வண்ணார்பேட்டை பேராச்சி அம்மன் கோவில் உள்ளிட்ட தாமிபரணி ஆற்றங்கரையோரம் உள்ள கோவில்கள், நீர்நிலைகளில் பல்லாயிரகணக்கானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

    • மழை காரணமாக பொதுமக்கள் தர்ப்பணம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது.
    • 22 புனித தீர்த்தங்களில் நீராடவும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    இந்தியாவில் முன்னோர்களுக்கு வழிபாடு செய்யும் முக்கிய புனித ஸ்தலங்களாக காசி, ராமேசுவரம் கருதப்படுகிறது.

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை தினத்தில் பொதுமக்கள் தங்களது முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காக புனித நீராடி வழிபாடு செய்வார்கள். இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை தினம் இன்று என்பதால் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு நேற்று முதலே பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது.

    தென்மாவட்டம் மற்றும் வடமாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இன்று காலை ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். புரோகிதர்கள் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் பிரார்த்தனைகள் செய்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். இதனால் ராமேசுவரம் கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    இந்த நிலையில் காலை 4 மணி முதல் 7 மணி வரை திடீரென மழை பெய்தது. இந்த மழை காரணமாக பொதுமக்கள் தர்ப்பணம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது. இருந்த போதிலும் மழையை பொருட்படுத்தாமல் முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்தனர். தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது மூலம் தங்களது குடும்பம் விருத்தி அடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    இதன் காரணமாக ஆடி அமாவாசையை முன்னிட்டு புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் இன்று பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். வடமாநிலங்களான குஜராத், மும்பை உள்ளிட்ட இடங்களில் இருந்தும் மற்றும் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ஒரு வாரத்திற்கு முன்பே ராமேசுவரம் வந்து தங்கி இருந்தனர்.

    300-க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் தர்ப்பணம் கொடுத்தனர். அவர்கள் கட்டணமாக ரூ.500 முதல் ரூ. 2 ஆயிரம் வரை வசூல் செய்தனர். இதேபோல் தனுஷ்கோடியிலும் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    இலங்கையில் ராவணனை வதம் செய்து விட்டு திரும்பிய ராமபிரான் தனக்கு பிரமஹத்தி தோஷம் ஏற்படாமல் இருப்பதற்காக ராமேசுவரத்தில் மணல் லிங்கம் அமைத்து பூஜை செய்தார் என்பது ஐதீகம். இதனால்தான் ராமேசுவரத்தில் தோஷ நிவர்த்தி பூஜைகள் செய்வது மற்றும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது மிகவும் புண்ணியம் வாய்ந்தது என்று இந்து தர்மம் கூறுகிறது.

    ஆடி அமாவாசையையொட்டி 500-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ராமநாதசுவாமி கோவிலில் அமைந்துள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடவும் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தைவிட பல மடங்கு அதிகமாக இருந்தது.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டு களாக ஆடி அமாவாசையின்போது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.

    • பகவதி அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.
    • ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலி கர்ம பூஜை செய்தார்கள்.

    இந்துக்களின் முக்கிய விசேஷ நாட்களில் ஆடி அமாவாசையும் ஒன்று.இந்த நாளில் இந்துக்கள் அதிகாலையிலேயேஎழுந்து கடல், நதி, ஆறு போன்ற புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

    குறிப்பாக இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்து உள்ள புண்ணிய ஸ்தலமான கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். அதேபோல இந்த ஆண்டு ஆடிஅமாவாசை இன்று கடைபிடிக்கப்படுகிறது.

    இதையொட்டி கன்னியாகுமரி கடலில் புனித நீராடுவதற்காக இன்று அதிகாலை 2 மணியில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கன்னியாகுமரியில் குவியத் தொடங்கினார்கள். அவர்கள் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் புனித நீராடினார்கள்.

    அதன் பிறகு ஈரத்துணியுடன் கரைக்கு வந்து கடற்கரையில் அமர்ந்து இருந்த புரோகிதர்கள் மற்றும் வேதமந்திரம் ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலி கர்ம பூஜை செய்தார்கள். அவ்வாறு பூஜை செய்த பச்சரிசி, எள்ளு, பூக்கள் மற்றும் தர்ப்பை புல் போன்றவற்றை ஒரு வாழை இலையில் வைத்து தலையில் சுமந்து சென்று கடலில் போட்டுவிட்டு மீண்டும் நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தார்கள்.

    பின்னர் கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில், பகவதி அம்மன் கோவில், சன்னதி தெருவில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் ரெயில் நிலைய சந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோவில் மற்றும் விவேகானந்தபுரத்தில் உள்ள சக்கர தீர்த்த காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில் ஆகிய கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்கள்.

    ஆடி அமாவாசையையொட்டி இன்று அதிகாலை முதல் மாலை வரை கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுப்பார்கள். ஆடி அமாவாசையையொட்டி இன்று அதிகாலை 3.30 மணிக்கு கோவில் மூலஸ்தான நடைமட்டும் திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும் நிர்மால்ய பூஜையும் நடந்தது.

    அதன் பிறகு அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து தீபாராதனையும் உஷ பூஜை, ஸ்ரீ பலி பூஜை, நிவேத்ய பூஜை உச்சிகால பூஜை உச்சிக்கால தீபாராதனை போன்ற அனைத்து பூஜைகளும் நடத்தி முடிக்கப்பட்டது.

    அதன் பிறகு 4.30 மணிக்கு வடக்கு பிரதான நுழைவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டார்கள். ஆடி அமாவாசையையொட்டி பக்தர்களின் தரிசனத்துக்காக கோவிலில் சிறப்பு வசதிகள்செய்யப்பட்டு இருந்தன. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    இரவு 8.30 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும்போது பக்தர்கள் வழிநடுகிலும் தேங்காய்பழம் படைத்து திருக்கணம் சாத்தி வழிபடுவார்கள்.

    அம்மன்வீதி உலா முடிந்த பிறகு இரவு 10 மணிக்கு அம்மனுக்கு முக்கடல்சங்கமத்தில்ஆராட்டு நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்குவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    அதன்பிறகு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வர செய்கிறார்கள். பின்னர் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும் அதன்பிறகு அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும்நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்ததால் ஆடி அமாவாசை அன்று கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்படவில்லை.

    இதனால் கடந்த 2 ஆண்டுகளாக ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு பலிகர்மபூஜைசெய்து தர்ப்பணம் கொடுத்தார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கில் முழு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கன்னியாகுமரி கடலில் ஆடி அமாவாசை யான இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனிதநீராடினார்கள்.

    மேலும் ஆடி அமாவா சையையொட்டிஇன்றுகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் அரசு விடுமுறை விடப்பட்டு இருந்தது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவில், வள்ளியூர் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து கன்னியாகுமரிக்கு கூடுதல் அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதார வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    இதேபோல் குழித்துறை தாமிரபரணி ஆற்றிலும் ஏராளமான பொதுமக்கள் நீராடினார்கள்.

    • திருமண தடை மற்றும் பல்வேறு பரிகார பூஜைகள் செய்யப்பட்டன.
    • கூடுதுறையில் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டனர்.

    ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது மிகவும் விசேஷமானது. இன்று ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்பட்டது. தென்னகத்தின் காசி, திரிவேணி சங்கமம், திருநானா என பல்வேறு சிறப்புக்களுடன் அழைக்கப்படும் புகழ் பெற்ற பரிகார ஸ்தலமான பவானி கூடுதுறையில் பவானி, காவேரி மற்றும் அமிர்தநதி ஆகிய 3 ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள சங்கமேஸ்வரர் கோவில் புராணங்களில் பாடப்பெற்ற சிவ ஸ்தலமாகும்.

    இந்த ஸ்தலத்தில் வந்து முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் செய்து வழிபட்டு கூடுதுறையில் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டால் பக்தர்கள் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம். இதுபோல் பரிகாரங்கள் தோச நிவர்த்திக்கான வழிபாடுகள் செய்வதற்கும் சிறந்த இடமாக உள்ளது. இந்நிலையில் இன்று ஆடி அமாவாசையையொட்டி பவானி கூடுதுறைக்கு அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் பொதுமக்கள் வரத் தொடங்கினர்.

    கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடி அமாவாசையையொட்டி பக்தர்களுக்கு புனித நீராட அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இதே போல் பரிகாரம் பூஜை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டு பக்தர்கள் புனித நீராட அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. பரிகார பூஜை செய்வதற்கும் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், நாமக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அதிகாலை முதலே பவானி கூடுதுறையில் குவிய தொடங்கினர். பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து தங்களது முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் கூடுதுறையில் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டனர்.

    இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர் காவல் படையினர் கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். மேலும் கோயில் வளாகம் மற்றும் கூடுதுறை பகுதியில் 72 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. 5 இடங்களில் போலீசாரின் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பக்தர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் கண்காணிக்கப்பட்டது.

    கோவிலை சுற்றிலும் சாதாரண உடையில் போலீசார் கண்காணித்தனர். ஆண்கள் , பெண்கள் புனித நீராட தனித்தனியாக தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. 15 -க்கும் மேற்பட்ட பரிசல்களில் நீச்சல் தெரிந்த உள்ளூர் மீனவர்கள், மற்றும் லைவ் ஜாக்கெட் அணிந்த பவானி தீயணைப்பு படை வீரர்கள் பாதுகாப்புக்காக தயார் நிலையில் இருந்தனர்.

    பெண்கள் விலை உயர்ந்த தங்க நகைகள் அணிந்து வர வேண்டாம் என போலீஸ் சார்பில் ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. பரிகார பூஜைகளுக்கு என்று தனியாக இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அதில் திருமண தடை மற்றும் பல்வேறு பரிகார பூஜைகள் செய்யப்பட்டன. இதேபோல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் இருந்தனர்.

    இதேபோல் ஆடி அமாவாசையையொட்டி கொடுமுடி காவிரி ஆற்றங்கரையிலும் இன்று காலை முதலே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்தனர். இதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து காவேரி ஆற்றில் புனித நீராடி மகுடேஸ்வரரை வழிபட்டனர்.

    கொடுமுடி போலீசார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆண்கள் பெண்கள் புனித நீராட தனித்தனியாக தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையில் இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்தனர். கருங்கல்பாளையம் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆற்றங்கரையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இதே போல் காலிங்கராயன் வாய்க்கால் பகுதிகளிலும் சிலர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    ஆடி அமாவாசையையொட்டி இன்று அதிகாலை முதலே புகழ்பெற்ற பண்ணாரியம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் பண்ணாரி அம்மனை வழிபட்டு சென்றனர். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது விசேஷமானதாக குறிப்பிடப்படுகிறது.
    • ஆடி அமாவாசை நாளில் ஏராளமான மக்கள் தர்ப்பணம் கொடுப்பார்கள்.

    எல்லா மாதங்களிலும் அமாவாசை வந்தாலும் ஆடி மாதம் வரக்கூடிய ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது. இந்த தருணத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது விசேஷமானதாக குறிப்பிடப்படுகிறது. முன்னோர்கள், சொர்க்கம் சென்று நற்கதி அடையும் பொருட்டு செய்யப்படும், இந்த தர்ப்பணம் நிகழ்ச்சிகள் மூலம், முன்னோர்களின் ஆசி அவர்களின் தலைமுறைகளை காப்பாற்றும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை நாளில் ஏராளமான மக்கள் நீர்நிலைப் பகுதிகளில் தர்ப்பணம் கொடுப்பார்கள். இந்த நிலையில், ஆடி அமாவாசை தினமான இன்று ஆறுகள் மற்றும் கடல்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

    சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் கோவில் மற்றும் குளக்கரைகளிலும், திருவள்ளூர் வீரராக சுவாமி கோவிலும் பக்தர்கள் அதிகாலை முதலே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

    கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், தாமிரபரணி ஆற்றில் ஏராளமான மக்கள் புனித நீராடினர்.

    ராமேசுவரம் அக்னிதீர்த்த கடற்கரையில் ஏராளமான மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

    மயிலாடுதுறையில் காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் பூம்புகார் சங்கமுக தீர்த்தத்தில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

    காவிரி ஆறு பாயும் சேலம், திருச்சி, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மக்கள் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

    ஈரோடு பவானி கூடுதுறையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள்.

    • மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம், பித்ரு பூஜை செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கும்.
    • ஆடி அமாவாசை வழிபாட்டுக்கு உகந்த நாளாகக் கூறப்பட்டுள்ளது.

    ஆடி அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்கு உரிய தினம் என்பது அனைவருக்கும் தெரியும்.

    தட்சிணாயண காலத்தில் வரும் ஆடி அமாவாசை, முன்னோர் வழிபாட்டிற்கு முக்கியமான நாள்.ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கிறார்.கடகம், சந்திரனின் ஆட்சிபெற்ற வீடு. சூரியன் சிவ அம்சம், ஆடி அமாவாசையின் போது சிவ அம்சமான சூரியன், சக்தி அம்சமான சந்திரனுடன் ஒன்று சேர்வதால் சந்திரனின் ஆட்சி பலமடைகிறது. ஆகவேதான், ஆடி அமாவாசை விரத வழிபாட்டுக்கு உகந்த நாளாகக் கூறப்பட்டுள்ளது.

    ஆடி அமாவாசையன்று ஏற்படும் மாறுதல்களால் கடல்நீரில் ஓர் புதிய சக்தி ஏற்படுகிறது. எனவே அன்று புனித தலங்களில் கடலில், நீர் நிலைகளில் நீராடுவது உடல்நலத்திற்கு வளம் தரும். மேலும் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம், பித்ரு பூஜை செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கும்.

    அன்று நீர் நிலையில் பித்ருகள்பூஜை செய்து வேதவிற்பன்ன ருக்குரிய சன்மானம் அளித்தபின், அன்னதானம் செய்வதும், மாற்றுதிறனாளிக்கு வசதிக்கேற்ப ஆடை தானம் வழங்குவதும் முன்னோர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அதன் பின் வீட்டிற்கு வந்து முன்னோர்களின் படங்கள் முன் தலைவாழை இலையில் பலவிதமான காய்கறிகளை சமைத்து வடை, பாயாசத்துடன்படையல் போட்டு வழிபட வேண்டும். அவரவர் குல வழக்கப்படி இந்தப் பூஜையை மேற்கொள்ள வேண்டும்.

    இதனால் முன்னோர்களின் ஆசி கிட்டுவதுடன் வீட்டில் தீய சக்தி இருந்தால் அது விலகி ஓடும்.

    அமாவாசை நாட்களில் விரதம் இருந்து பித்ருக்கள் பூஜையை முறையாகச் செய்யாத குடும்பத்தில் குழப்பம், சண்டை, வியாதி, வம்ச விருத்தி இன்மை போன்றவை ஏற்படும்.

    முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை அன்று விரதம் இருந்து சிரார்த்தம், தர்ப்பணம் போன்றவற்றை செய்பவர்களுக்கு நீண்ட ஆயுள், ஆரோக்கியம், கடன்நிவர்த்தி, வம்ச விருத்தி ஏற்படும்.

    • நீர்நிலைகள் இருக்குமிடத்தில் தர்ப்பணம் செய்வது கூடுதல் விசேஷமானது.
    • முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் விடவேண்டும் என்று சாஸ்திரம் வலியுறுத்துகிறது.

    ஆடி அமாவாசையில் ஆண்கள், அதிலும் தாய் அல்லது தந்தையை அல்லது ஒருவரை அல்லது இருவரையும் இழந்தவர்கள் தர்ப்பணம் செய்யவேண்டும் என்றும் எள்ளும் தண்ணீரும் விடவேண்டும் என்றும் சாஸ்திரம் வலியுறுத்துகிறது.

    தாய் தந்தை இல்லாத பெண்கள், அதேசமயம் கணவரை இழந்த பெண்கள், அமாவாசை நாளில் விரதம் இருக்கலாம். 'எனக்கு தாய் தந்தை இல்லை. ஆனால் அண்ணன் தம்பி உண்டு' என்றிருக்கும் பெண்கள், அவர்களுக்கு கணவர் இருக்கும் பட்சத்தில் விரதம் மேற்கொள்ளக்கூடாது.

    'எனக்கு அப்பா அம்மா இல்லை. ஆனால் கணவர் இருக்கிறார்' என்று சொல்லும் பெண்கள், விரதம் இருக்கக் கூடாது.அதேபோல், 'எனக்கு சகோதரர்கள் இல்லை. அப்பாவும் அம்மாவும் இறந்துவிட்டார்கள்' என்று சொல்பவர்கள், அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று ஏதேனும் தானம் கொடுக்கலாம். நான்குபேருக்கு அன்னதானம் செய்யலாம். கணவர் இருப்பவர்கள், அதாவது சுமங்கலிகள் அமாவாசை விரதம் இருக்கக் கூடாது என்பதை மனதில் வையுங்கள்.

    கடல், ஆறு, குளம் முதலான நீர்நிலைகள் இருக்குமிடத்தில் தர்ப்பணம் செய்வது கூடுதல் விசேஷமானது. பலம் வாய்ந்தது. அதேபோல், அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்றும் கொடுக்கலாம்.

    ராமேஸ்வரம், திருச்செந்தூர், திருச்சி காவிரிக்கரை, தஞ்சாவூர் திருவையாறு, நெல்லை தாமிரபரணி, பவானி கூடுதுறை, நெல்லைக்கு அருகில் உள்ள வல்லநாடில் உள்ள தசாவதாரக் கட்டம் அமைந்துள்ள இடம், முன்னோர் வழிபாட்டுக்கு உரிய தலங்கள் முதலான இடங்களில் தர்ப்பணம் செய்யலாம். வீட்டில் ஆச்சார்யரை வரவழைத்தும் தர்ப்பணம் செய்யலாம்.

    தாய் தந்தை இல்லாத எல்லா ஆண்களும் அவர்களைப் போற்றும் வகையில், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, அமாவாசை நாளில் உபவாசம் இருக்கவேண்டும். விரதம் மேற்கொள்ளவேண்டும்.

    ஆச்சார்யரை அழைத்து தர்ப்பணம் செய்யாதவர்கள், அமாவாசை நாளில், காலையில் குளித்துவிட்டு, தூய்மையான நீரையும் கொஞ்சம் எள்ளையும் (கருப்பு எள்ளு) எடுத்துக் கொண்டு, வீட்டில் கால்படாத இடத்தில், காசி விஸ்வநாதரையும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமியையும் நினைத்துக் கொண்டு, இறந்துவிட்ட அப்பா, அம்மாவையும் தாத்தா பாட்டியையும் அவர்களின் முன்னோரையும் நினைத்துக்கொண்டு,ஒவ்வொருவருக்காகவும் மூன்று முறை எள்ளும் தண்ணீருமாக விடவேண்டும்.

    உங்களையும் உங்கள் குடும்பத்தையும் வம்சத்தையும் இந்த முன்னோர் வழிபாடு சிறப்பாகவும் செம்மையாகவும் வாழவைக்கும்!

    • இங்கு அஷ்ட பைரவர்கள் சூழ தனி கோவில் கொண்டு சரபசூழினி அருள்பாலிக்கிறார்.
    • ஆடி அமாவாசை சிறப்பு யாகம் நாளை காலை 10 மணிக்கு நடக்கிறது.

    கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் பிளாஞ்சேரியில் காமாட்சி அம்மன் கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு அஷ்ட பைரவர்கள் சூழ தனி கோவில் கொண்டு சரபசூழினி அருள்பாலிக்கிறார்.

    இந்த கோவிலில் உலக நன்மை வேண்டி ஆடி அமாவாசை சிறப்பு யாகம் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. சிறப்பு பூஜைகளை சரபசூழினி உபாசகர் எஸ். நாகராஜ சிவாச்சாரியார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் செய்கின்றனர்.

    ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் கண்ணன் குருக்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் அப்பர் கயிலாயக்காட்சியை கண்டு தரிசனம் செய்து செல்வார்கள்.
    • நாளை மதியம் திருவையாறு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடக்கிறது.

    திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு அப்பர் கயிலை காட்சி நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அப்பர் கயிலாயக்காட்சியை கண்டு தரிசனம் செய்து செல்வார்கள்.நாளை காலை ஆடி அமாவாசையையொட்டி திருவையாறு காவிரி ஆற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து ஐயாறப்பரை தரிசித்து ஆலயத்தில் வழிபட்டு செல்வார்கள். மதியம் பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு திருவையாறு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடக்கிறது.

    இரவு ஐயாறப்பர் கோவில் தென்கயிலாயம் எனப்படும் அப்பர் சன்னதியில் அப்பருக்கு சிவபெருமான் காட்சி கொடுக்கும் ஆடி அமாவாசை அப்பர் கயிலைக்காட்சி நடைபெறுகிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார்கள். விழா ஏற்பாடுகளை தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர் ஆசியுடன் கோவில் நிர்வாகிகள் அகோரமூர்த்தி, ஆனந்தன் மற்றும் பணியாளர்கள் செய்து உள்ளனர்.

    இந்தநிலையில் திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன், இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் சாமி புறப்படும் இடம், கயிலைக்காட்சி நடக்கும் இடம் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனா். மேலும் மின்விளக்குகள், சுகாதாரம், குடிநீர், அவசர சிகிச்சை உதவி ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறை உதவி போன்றவையை கேட்டறிந்த பிறகு பாதுகாப்பை உறுதி செய்தனர்.

    • கடந்த 25-ந் தேதி முதல் வருகிற 30-ந் தேதி வரை செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • கோவில் பகுதியில் 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    கடந்த 25-ந் தேதி முதல் வருகிற 30-ந் தேதி வரை மலைக்கு செல்ல பத்கர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதல் நாள் முதல் கனிசமான அளவில் பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். நேற்று ஆடி பிரதோஷத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை அடிவாரத்தில் திரண்டனர்.காலை 7 மணி முதல் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

    ஆடி அமாவாசை நாளை வருவதை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு மலை ஏறினர். வனத்துறையினர் பக்தர்களின் உடைமைகளை சோதித்த பின் மலைஏற அனுமதிக்கப்பட்டனர்.

    பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் வேன், கார்களில் சதுரகிரி மலை அடிவாரத்திற்கு வந்து குவிந்தனர். பக்தர்களின் வருகையை முன்னிட்டு கோவில் நிர்வாகம், மடத்தின் சார்பில் மலை அடிவாரம் மற்றும் மலை மேல் கோவில் பகுதியில் 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    பக்தர்கள் மலை அடிவாரத்திற்கு வரவும், அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பவும் பஸ் வசதிகளும் அரசு சார்பில் செய்யப்பட்டிருந்தன. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மலைப்பாதைகளில் மருத்தவ முகாம்கள், போலீஸ் பாதுகாப்பு போன்றவை போடப்பட்டிருந்தது.

    • பவானி கூடுதுறை சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது.
    • தற்போது ஆற்றில் குளிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    பவானி கூடுதுறை சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது. இதனால் இங்கு ஈரோடு மாவட்டமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டு செல்வார்கள்.

    இதேபோல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்வார்கள்.

    ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை அன்று பொதுமக்கள் வந்து காவிரியில் புனிதநீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து சாமியை வழிபட்டு செல்வார்கள்.

    இந்த நிலையில் நாளை (வியாழக்கிழமை) ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் கூடுதுறைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவிலில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    தற்போது ஆற்றில் குளிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் கூடுதுறை காவிரி ஆற்றின் படித்துறையில் கட்டப்பட்டுள்ள தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    ஆற்றில் இறங்கி குளிக்க முடியாதவர்கள் தொட்டி யில் இருந்து தண்ணீர் எடுத்து குளிப்பதற்கு வசதியாக ஷவர் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள் குளிப்பதற்காக தனி தனியாக தடுப்புகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பரிகாரம் மற்றும் திதி தர்ப்பணங்கள் செய்வதற்கு இருந்த தடையையும் நீக்கியுள்ளனர்.

    இதற்காக கோவிலில் ஆங்காங்கே இடங்கள் தயார் நிலையில் உள்ளது. இதேபோல் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் உடமைகளை பாதுகாத்துக் கொள்ளவும் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படை, என்.சி.சி. என 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை வருகிற 28-ந் தேதி வருகிறது.
    • நேற்று முதல் 6 நாள் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை வருகிற 28-ந் தேதி வருகிறது.

    இதையொட்டி நேற்று முதல் 6 நாள் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தாணிப்பாறை வனத்துறை கேட்டில் இருந்து மலை ஏறிச்சென்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அடுத்து வரும் நாட்களில் பக்தர்களின் வருகை பெருமளவு அதிகரிக்கும் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.

    அதன்படி தாணிப்பாறை விலக்கு, மகாராஜபுரம் விலக்கு, தம்பிபட்டி விலக்கு, மாவுத்து உதயகிரிநாதர் கோவில், லிங்கம் கோவில், தாணிப்பாறை அடிவார பகுதிகளில் விருதுநகர் மாவட்ட போலீசார் 1,800 பேரும், தாணிப்பாறை வனத்துறை கேட்டில் இருந்து கோவில் வரை மதுரை மாவட்ட போலீசார் 800 பேரும், வனத்துறையினர் நூற்றுக்கும் மேற்பட்டோரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அதேபோல தீயணைப்புத்துறையினர் 140 பேர், சதுரகிரி கோவிலுக்கு செல்லும் நீரோடை பகுதிகள் மற்றும் மலைப்பாதை, கோவில் வளாகம் என பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களின் வசதிக்காக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களும், டவுன் பஸ்களும் போக்குவரத்து துறை சார்பில் இயக்கப்படுகிறது.

    இன்று ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம், விபூதி உள்பட 18 வகையான அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.

    ×