search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தர்ப்பணம்"

    • மகாளய அமாவாசையயொட்டி இன்று அதிகாலை 4-30 மணிக்கு பகவதி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும் நிர்மால்ய பூஜையும் நடந்தது.
    • கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. மகேஷ்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

    கன்னியாகுமரி:

    இந்துக்களின் முக்கிய விசேஷ நாட்களில் புரட்டாசி மாத மகாளய அமாவாசையும் ஒன்று. இந்த நாளில் இந்துக்கள் அதிகாலையிலேயே எழுந்து கடல், நதி, ஆறு போன்ற புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

    குறிப்பாக இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள புண்ணிய ஸ்தலமான கன்னியாகுமரியில் முக்கட லும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை அன்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். அதே போல இந்த ஆண்டு புரட்டாசி மாத மகாளய அமாவாசை இன்று கடை பிடிக்கப்படுகிறது.

    இதையொட்டி கன்னியாகுமரி கடலில் புனித நீராடுவதற்காக இன்று அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கன்னியாகுமரியில் குவியத் தொடங்கினார்கள். அவர்கள் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் புனித நீராடினார்கள். அதன் பிறகு ஈரத்துணியுடன் கரைக்கு வந்து கடற்கரையில் அமர்ந்து இருந்த புரோகிதர்கள் மற்றும் வேதமந்திரம் ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலி கர்ம பூஜை செய்தார்கள்.

    அவ்வாறு பூஜை செய்த பச்சரிசி, எள்ளு, பூக்கள் மற்றும் தர்ப்பைபுல் போன்றவற்றை ஒரு வாழை இலையில் வைத்து தலையில் சுமந்துகொண்டு சென்று கடலில் போட்டு விட்டு மீண்டும் நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தார்கள்.

    பின்னர் கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில், பகவதி அம்மன் கோவில், சன்னதி தெருவில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் ரெயில் நிலைய சந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோவில் மற்றும் விவேகானந்தபுரத்தில் உள்ள சர்க்கர தீர்த்த காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில் ஆகிய கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்கள். மகாளய அமாவாசையையொட்டி இன்று அதிகாலை முதல் மாலை வரை கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்தார்கள்.

    மகாளய அமாவாசையயொட்டி இன்று அதிகாலை 4-30 மணிக்கு பகவதி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும் நிர்மால்ய பூஜையும் நடந்தது. அதன் பிறகு அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து தீபாராதனையும் உஷ பூஜை, ஸ்ரீ பலி பூஜை, நிவேத்ய பூஜை உச்சிகால பூஜை உச்சிக்கால தீபாராதனை போன்ற பூஜைகள் நடந்தது.

    மகாளய அமாவாசையையொட்டி காலை 11 மணிக்கு அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. 11.30 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. வடக்கு பிரதான நுழைவு வாசல் வழியாக பக்தர்கள் கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்தனர்.

    மகாளய அமாவாசையையொட்டி பக்தர்களின் தரிசனத்துக்காக கோவிலில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனையும் இரவு 8.30 மணிக்கு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வர செய்கிறார்கள். பின்னர் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும், அதன் பிறகு அத்தாழபூஜை யும், ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள். கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதார வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. மகேஷ்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

    • மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளய பட்சம் என்று கருதப்படுகிறது.
    • மகாளய அமாவாசை அன்று முன்னோர்கள் எல்லோரும் பூமிக்கு வந்து செல்வதாக ஐதீகம்.

    சென்னை:

    மகாளய என்றால் `கூட்டாக வருதல்' என்பது பொருள். மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளய பட்சம் என்று கருதப்படுகிறது. மற்ற அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்துவிட்டாலோ அல்லது அதற்கான வாய்ப்பு இல்லாமல் தவற விட்டவர்கள், இந்த மகாளய அமாவாசையன்று திதி கொடுத்தால், அது அதற்கான முழுப் பயனையும் அளிக்க வல்லதாகும். மகாளய அமாவாசை அன்று முன்னோர்கள் எல்லோரும் பூமிக்கு வந்து செல்வதாக ஐதீகம்.

    நாம் அவர்களுக்கு அளிக்கும் திதி, அவர்கள் செய்த பாவங்களில் இருந்தெல்லாம் விடுவித்து அவர்களை சொர்க்க வாழ்விற்கு கொண்டு செல்லும் என்பது நம்பிக்கை. அன்றைய தினம் ஏதாவது ஒரு புனித நதியில் நீராடுவது, தான தர்மங்கள் செய்வது போன்றவற்றை செய்தால் நல்லது.

    இந்நிலையில், தஞ்சை, நாமக்கல், கடலூர், திருச்சி, திருவண்ணாமலை உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். அவர்கள் மகாளய அமாவாசையை முன்னிட்டு புனித நீராடி மறைந்த முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர்.

    • மகாளய என்றால் `கூட்டாக வருதல்’ என்பது பொருள்.
    • முன்னோர்கள் எல்லோரும் பூமிக்கு வந்து செல்வதாக ஐதீகம்.

    மற்ற அமாவாசையைக் காட்டிலும் மகாளய அமாவாசை ஏன், அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை நாம் இந்த மகாளய அமாவாசை தினத்தில் அறிந்துகொள்வதும் ஒரு வகையில் சிறப்புதான். அமாவாசை முதலான முக்கிய நாட்களில் நமது முன்னோர்கள், பூமிக்கு வந்து தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த நாட்களில் சிரத்தையோடு அவர்களை வழிபட்டால், தீர்க்க ஆயுள், புகழ், செல்வம், உடல் ஆரோக்கியம், இன்பம் போன்ற அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    மகாளய என்றால் `கூட்டாக வருதல்' என்பது பொருள். மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளய பட்சம் என்று கருதப்படுகிறது. மற்ற அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்துவிட்டாலோ அல்லது அதற்கான வாய்ப்பு இல்லாமல் தவற விட்டவர்கள், இந்த மகாளய அமாவாசையன்று திதி கொடுத்தால், அது அதற்கான முழுப் பயனையும் அளிக்க வல்லதாகும். மகாளய அமாவாசை அன்று முன்னோர்கள் எல்லோரும் பூமிக்கு வந்து செல்வதாக ஐதீகம்.

    நாம் அவர்களுக்கு அளிக்கும் திதி, அவர்கள் செய்த பாவங்களில் இருந்தெல்லாம் விடுவித்து அவர்களை சொர்க்க வாழ்விற்கு கொண்டு செல்லும் என்பது நம்பிக்கை. அன்றைய தினம் ஏதாவது ஒரு புனித நதியில் நீராடுவது, தான தர்மங்கள் செய்வது போன்றவற்றை செய்தால் நல்லது.

    பல தெய்வீக நூல்களில் மகாளய பட்சத்தின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய யுகங்களில் மறைந்த முன்னோரைக் கண்ணால் காணும் பாக்கியம் மக்களுக்கு கிடைத்திருக்கிறது. நாம் கலியுகத்தில் வாழ்வதால், அது சாத்தியமில்லாமல் போய்விட்டது. மகாளய கால நாட்களில் நம் முன்னோர்கள் நமக்கு ஆசி வழங்குவதற்காகவே பிதுர் லோகத்தில் இருந்து, பிதுர்தேவதைகளிடம் அனுமதி பெற்று நம்மைப் பார்க்க பூலோகத்திற்கு வருகின்றனர்.

    இந்நாட்களில் நம் வீடுகளை மிகத்தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சைவம் மட்டுமே உண்ண வேண்டும். வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிடக்கூடாது. வீணான பொழுதுபோக்கு அம்சங்களை அறவே தவிர்த்து, உள்ளத்தையும், உடலையும் தூய்மையாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம்.

    இந்த பதினான்கு நாட்களும் முன்னோர் வழிபாட்டினைச் செய்வது சிறப்பு. புண்ணிய நதிக்கரைகள், தீர்த்தக்கரைகள், ராமேஸ்வரம் போன்ற கடற்கரைத்தலங்களுக்கு ஒருநாளாவது செல்ல வேண்டும். முடியாதவர்கள் காகத்திற்கு அன்னமிடலாம். பசுவுக்கு புல், பழம் கொடுக்கலாம்.

    ஸ்ரீமந்நாராயணனே ராமாவதார, கிருஷ்ணாவதார காலங்களில் பிதுர்பூஜை செய்து முன்னோர்களை வழிபாடு செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எதுவும் செய்ய இயலாதவர்கள் முன்னோரின் பெயர்களை உச்சரித்து, `காசி காசி' என்று சொன்னபடியே, வீட்டு வாசலிலேயே எள்ளும் தண்ணீரும் விட்டு கூட திதி பூஜையைச் செய்யலாம். பின்னர், பூஜையறையில் நம் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த எளிய பூஜை அளவற்ற நன்மைகளைத் தரக்கூடியது.

    சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால், மகாளயபட்ச அமாவாசை தினத்தில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் ஏனைய அனைவருக்கும் இன்றைய தினத்தில் தர்ப்பணம் கொடுப்பதே மகாளய அமாவாசையின் தனி பெரும் சிறப்பாக திகழ்கிறது.

    • வெங்காயம், பூண்டு, வாசனைத் திரவியங்களைத் தவிர்ப்பது நல்லது.
    • பித்ரு மகிமை பற்றிய பல்வேறு தகவல் மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ளன.

    1. உலக மக்கள் பித்ரு காரியங்கள் செய்வதற்காகவே கங்கை நதி பூமிக்கு வந்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    2. பித்ரு மகிமை பற்றிய பல்வேறு தகவல் மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ளன.

    3. கங்கை நதியில் முதன்முதலில் புனித நீராடி பித்ரு காரியங்கள் செய்தவர் பகீரதன். இவர் தான் பல ஆண்டுகள் சிவனை நோக்கி தவம் இருந்து கங்கையில் பித்ரு காரியம் செய்யும் சிறப்பைப் பெற்றார்.

    4. உயிர் நீத்த நம் மூதாதையர்கள் ஆத்ம சாந்தி அடைய மகாளயபட்ச நாட்களில் சிரார்த்தம் செய்ய வேண்டியது அவசியமாகும்.

    5. ஒரு வருடம் நாம் பித்ருபூஜை செய்யா விட்டாலும் மனவருத்தம் ஏற்படும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    6. மகாளய பட்ச 15 நாட்களில் நாம் தினமும் தர்ப்பணம், புனித நீராடல், படையல், அன்னதானம் போன்றவை செய்தால் பித்ருக்களின் ஆசியை பெற முடியும்.

    7. மகாளயபட்ச நாட்களில் பித்ருக்கள் பூமியில் உள்ள திருத்தலங்களுக்கு வந்து நாம் அளிக்கும் எள் நீரை ஏற்றுச் செல்கிறார்கள்.

    8. தர்ப்பணங்களை எப்போதும் காலை 7 மணிக்குள் கொடுத்து விடுவது நல்லது.

    9. அதிகாலை பிரம்ம முகூர்த்தத்துக்கு முன்பே எழுந்து அதிகாலைக்குள் தர்ப்பணம் கொடுப்பது நல்லது.

    10. தர்ப்பணங்கள் குறித்து கருட புராணத்தில் ஸ்ரீமகாவிஷ்ணு விரிவாக கூறியுள்ளார்.

    11. எள்ளுடன் தண்ணீரும் கலந்து அளிக்கப்படும் தர்ப்பணம் பித்ருக்களுக்கு அமிர்தமாக கருதப்படுகிறது.

    12. பித்ரு காரியத்துக்குள் தர்ப்பைப் புல் பயன்படுத்துவது நல்லது. தர்ப்பைப் புல்லில் சூரிய ஒளி ரூபத்தில் பித்ருக்கள் வந்து அமர்வதாக ஐதீகம்.

    13. நாம் கொடுக்கும் தர்ப்பணங்களை சுவதாதேவி, தர்ப்பைப்புல் மூலம்தான் பித்ருலோகத்துக்கு எடுத்து செல்வதாக ஐதீகம்.

    14. புண்ணிய நதிகளின் கரைகளில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு எப்போதுமே சக்தி அதிகமாகும்.

    15. பித்ரு உலகம் தென் திசையில் உள்ளது. எனவே மறைந்த நம் முன்னோர்கள் "தென் புலத்தார்" என்றழைக்கப்படுகிறார்கள்.

    16. பித்ருக்களுக்கு செய்யப்படும் தர்ப்பணம் தமிழில் நீத்தார் கடன் தீர்த்தல் என்று சொல்லப்படுகிறது.

    17. நம் முன்னோர்கள் மரணம் அடைந்த நேரம், திதியை மறக்காமல் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அந்த திதியில் பித்ரு தர்ப்பணம் செய்வது மிகுந்த பலன்களை தரும்.

    18. தர்ப்பணம் செய்யும் போது தாய், தந்தை வழியில் 6 தலைமுறைக்கு முன்பு மறைந்த முன்னோர்களுக்கும் சேர்த்து செய்தால், அவர்களது ஆசிகளும் கிடைக்கும்.

    19.அமாவாசை, சூரியன் மற்றும் சந்திர கிரகணங் களின் போது செய்யப்படும் தர்ப்பணத்துக்கு மிக அதிக சக்தி உண்டு.

    20. மகாளய அமா வாசை தினத்தன்று பித்ருக்கள் அனை வரும் சூரிய சந்திர உலகில் கூடுவதாக ஐதீகம்.

    21. பித்ரு தர்ப்பணம் செய்ய பூமிக்கு வந்த கர்ணன் மீண்டும் மேல் உலகம் செல்லும் போது 14 நாட்களுக்கான உணவு அபரிமிதமாக இருந்தது. அந்த 14 நாட்கள் தான் மகாளயபட்ச தினமாக கருதப்படுகிறது.

    22. மகாளயபட்ச நாட்களில் அன்னதானம் செய்ய வேண்டியது மிக, மிக முக்கியமாகும்.

    23. மறைந்த முன்னோர்கள் நல்லவர்களாக இருந்தாலும் சரி, கெட்டவர்களாக இருந்தாலும் சரி, மகாளயபட்ச நாட்களில் ஆசி வழங்க நம்மை நிச்சயம் தேடி வருகிறார்கள். இதை புரிந்து கொண்டு அவர்களது ஆசிகளைப்பெற வேண்டியது நமது பொறுப்பாகும்.

    24. தர்ப்பணத்தை சரியான நேரத்தில் உரிய முறைப்படி செய்தால் நம் வாழ்வில் கஷ்டங்கள் என்பதே வராது.

    25. மறைந்த முன்னோர்களின் தேதி, நேரம், திதி போன்றவை தெரியாவிட்டால், கவலைப்பட வேண்டாம். மகாளயபட்சத்தில் சிரார்த்தம், தர்ப்பணம் செய்தாலே போதும் பித்ருக்கள் திருப்தி பெறுவார்கள்.

    26. பித்ரு தேவதைகள் வசு, ருத்ர, ஆதித்ய ரூபத்தில் நம்மை காக்கின்றனர்.

    27. மகாளயபட்ச நாட்களில் மறைந்த நம் முன்னோர்கள் ஏதாவது ஒரு உருவத்தில் நம் அருகே வந்து செல்லலாம்.

    28. பித்ருக்களுக்கு நாம் செய்யும் தர்ப்பணமானது பல யாகங்களுக்கு சமமானது.

    29. கன்யா ராசியில் சூரியன் இருக்கும்போது செய்யப்படும் சிரார்த்தம் பித்ருக்களை ஓராண்டு காலத்துக்கு திருப்தி அடைய செய்யும்.

    30. தர்ப்பணம் செய்யாதவன் சண்டாளனாக பிறப்பான் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    31. ஒரு ஆண்டில் ஒருவர் 96 தடவை தர்ப்பணங்கள் செய்ய வேண்டும்.

    32. புண்ணிய ஆத்மாக்களுக்கு நாம் கொடுக்கும் தர்ப்பணம் அவர்கள் மேலும் இறையருள் பெற உதவும்.

    33. தர்ப்பணம், சிரார்த்தம் செய்யாவிட்டாலும், நம் பித்ருக்கள், நமக்கு உதவுவார்கள். ஆனால் தர்ப்பணம் கொடுத்தால் பித்ருக்களின் முழுமையான ஆசி கிடைக்கும்.

    34. பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நாட்களில் வெங்காயம், பூண்டு, வாசனைத் திரவியங்களைத் தவிர்ப்பது நல்லது.

    35. பித்ரு தர்ப்பணங்களை சும்மா, பெருமைக்காக, மற்றவர்கள் புகழ வேண்டும் என்ற எண்ணத்தில் கொடுக்ககூடாது. முன்னோர்களை ஆத்மார்த்தமாக மனதில் நிறுத்தி தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

    • பித்ருக்களுக்குக் கிடைக்க வேண்டிய உணவு கிடைக்காமல் போகும்.
    • நமது முன்னோர்களின் ஆத்மாக்கள், ஒன்று சேர்ந்து, நம்மை ஆசீர்வதிக்கும்

    நமது முன்னோர்கள் யாராவது முக்தி அடைந்திருந்தால், நமது சிரார்த்தத்தின் பலனை அந்த இறைவனே ஏற்று அருள் புரிகிறார். பொதுவாக, நாம் செய்யும் தர்ப்பணம், சிரார்த்தம் முதலியவற்றின் புண்ணிய பலன், சேமித்து வைக்கப்பட்டு, தக்க நேரத்தில் நம்மை வந்தடையும்.

    ஆனால், மகாளய பட்சத்தில், நமது முன்னோர்களின் ஆத்மாக்கள், ஒன்று சேர்ந்து, நம்மை ஆசீர்வதிக்க வருவதால், அந்த நேரத்தில் செய்யும் சிரார்த்த கர்மாக்களின் பலன்கள், உடனடியாக அவர்களிடம் சேர்ப்பிக்கப்பட்டு, பலனும் உடனடியாக நமக்குக் கிடைத்து, நம் தீராத, நாள்பட்ட பிரச்சினைகள் உடனடியாகத் தீர்வுக்கு வருவதை நம் கண்முன் காணலாம். இது மகாளய அமாவாசை வழிபாட்டின் தனிசிறப்பு.

    இந்த மகாளய பட்சத்தில், ஒருவர், மறைந்த, தம் தாய் தந்தையர், தாத்தா, பாட்டி ஆகியோர்களுக்கு மட்டுமில்லாமல், குழந்தை இன்றி இறந்து போன தம் தாயாதிகளுக்கும் சேர்த்துத் தர்ப்பணம் செய்யலாம். அதன் பலனாக அவர்களின் ஆசிகளையும் பெறலாம்.

    மிகுந்த தெய்வ பக்தி உடையவர்கள், வேதம், தமிழ் மறைகள் ஓதியவர்கள், நீதி நேர்மையுடன் வாழ்ந்தவர்கள், பித்ரு சரீரம் அடையும் போது, மிகுந்த நன்மை செய்பவர்களாகிறார்கள். அவர்களுடைய சரீரம் ஒளி பொருந்தியது. அவர்களுக்குச் செய்ய வேண்டிய சிரார்த்தம், தர்ப்பணம் முதலியவற்றைச் சரியாகச் செய்யும் போது, குடும்பத்தில் இருக்கும் தீராத நோய், கடன், பகை, எதிர்பாராத விபத்துக்கள், குழந்தையின்மை போன்ற பல பிரச்சினைகள் நீங்குகின்றன. மாறாக, இது தவிர்க்கப்பட்டால், தலைமுறைகள் தாண்டியும் பிரச்சினைகள் தொடரும்.

    இறைவழிபாட்டின் மூலம் கிடைக்கும் வரங்களை, பித்ரு சாபம் தடுக்கும் வல்லமையுடையது. ஆனால் நமது முன்னோர்கள் ஒரு போதும் நம்மைச் சபிக்க மாட்டார்கள். இப்பூவுலகில், ஒருவர் செய்ய வேண்டிய சிரார்த்தம் தடைபட்டால், அதனால், பித்ருக்களுக்குக் கிடைக்க வேண்டிய உணவு கிடைக்காமல் போகும். அதனால் அவர்கள் அடையும் இன்னலே சாபமாக மாறி நம்மை அடைகிறது.

    • தர்ப்பை புல்லால் செய்யப்பட்ட பவித்திரத்தை அணிந்து கொள்ளுதல் அவசியம்.
    • தெற்கு நோக்கி 12 முறை விழுந்து வணங்குதல் வேண்டும்.

    1. சுத்தமான நீரில் தலை முழுவதாக நனையும்படி நீராடி உலர்ந்த ஆடையை அணிந்து நெற்றியில் அவரவர்களின் குலவழக்கத்திற்கு ஏற்றபடி விபூதியோ, திருமண்ணோ, கோபிச்சந்தனமோ, செந்தூரமோ அணிந்து கொண்டு கிழக்கு அல்லது வடக்கு நோக்கியபடி மனைப்பலகை அல்லது தர்ப்பைப்பாய் போட்டு அதன்மேல் பத்மாசனம் இட்டு அமர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

    2. வலது கை மோதிர விரலில் தர்ப்பை புல்லால் செய்யப்பட்ட பவித்திரத்தை அணிந்து கொள்ளுதல் அவசியம்.

    3. சுத்தமான பித்தளை தாம்பாளத்தில் கட்டை தர்ப்பையை 7 எண்ணிக்கை விரித்து அதன்மேல் கூர்ச்சம் கிழக்கு நுனியாக வைத்து நமது முன்னோர்களாகிய பித்ருக்களை அதில் ஆவாகனம் செய்தல் வேண்டும்.

    4. முன்னோர் பெயரையும் வம்சாவளி கோத்திரம் தெரிந்தால் சொல்லிக் கொண்டு (தெரியாதவர்கள்) சிவ அல்லது விஷ்ணுகோத்திரம் என்று சொல்லிக் கொண்டு வலது உள்ளங்கையில் எள்ளை வைத்துக்கொண்டபடி வலது ஆள்காட்டி விரல் கட்டைவிரல் இடையில் நீரும் எள்ளும் கலந்தபடி தர்ப்பைமேல் விழுமாறு விடவேண்டும்.

    5. தர்ப்பணம் முடிந்த பிறகு பித்ருக்கள் வசிக்கின்ற பித்ருலோகம் உள்ள திசை எனப்படும் தெற்கு நோக்கி 12 முறை விழுந்து வணங்குதல் வேண்டும்.

    6. தர்ப்பணத்தை கிழக்கு நோக்கி செய்தல் மிகச் சிறப்பான பலன்களைத்தரும். ஒவ்வொரு திசைக்கும் வெவ்வேறு வகை பலன்கள் சிரார்த்தாங்க- தர்ப்பணம் விதியில் சொல்லப்பட்டுள்ளது.

    7. தர்ப்பண நீரை சிறிதளவு குடும்பத்தார் தன் தலையில் தெளித்துக் கொண்டு பிறகு கால் படாத இடமான வில்வம், அரசு, மற்றும் பூச் செடிகளின் வே ரில் ஊற்றிவிட வேண்டும்.

    8. தர்ப்பண தினத்தில் தன்னால் முடிந்த அளவு அன்னதானம் செய்தல் அவசியம். சன்னியாசி ஒருவருக்கு மட்டுமாவது அன்னதானம் செய்தல் வேண்டும்.

    9. மந்திரங்கள் முறையாகத் தெரியவில்லையே என்று சிலர் இந்த தர்ப்பணத்தைச் செய்யாமல் விட்டு விடுகின்ற நிலை உள்ளது. அதைத்தவிர்க்க ஒரு எளிய தமிழ்க்கூறு உள்ளது. தர்ப்பைச் சட்டத்தை அமைத்து அதன்மேல் எள்ளும் நீரும் விட்டு, விண்ணில் இருக்கும் முன்னோரே....(பெயர்) மண்ணில் வந்து நிற்கும் நீவிர்.... (திதிநாளில்) என்னால் இடப்படும் எள்ளும் நீரும் சேர்ந்திட வேணும் நன்றாய் வாழ வாழ்த்து வீரே-நல்லருள் பெற வேண்டுகிறேன் என்று 16 முறை தர்ப்பணம் இடவேண்டும் உறுதியாக இப்படிச் செய்யப்படும் எளிய தர்ப்பணம் அவர்களைச் சென்றடைந்து அவர்கள் ஆசீர்வாதத்தைப் பெற்றுத்தந்து விடும்.

    10. வடமொழியில் கூறப்படும் ஊர்ஜம் வகந்தீ என்ற மந்திரத்தின் பொருள் கடைசியில் திருப்யத...தருப்யத...த்ருப்யத என்று முடியும்.

    • ஆத்மாக்கள் நற்கதியடைய நான் பிரார்த்திக்கிறேன்.
    • அடுத்த பிறவியில் எல்லா நன்மைகளும் பெற நான் பிரார்த்திக்கிறேன்.

    பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் போது வேத விற்பன்னர்கள் சொல்லும் ஸ்லோகங்கள், மந்திரங்கள் மற்றவர்களுக்கு புரியாமல் இருக்கலாம். எனவே தர்ப்பணம் கொடுக்கும் போது கீழ்கண்டவாறு மனதுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள் போதும்...

    "என் தாயார், என் தந்தை, என் சகோதரர், என் உறவினர் என்ற எந்த வகையான உறவுக்கும் உட்படாத- என் கோத்திரப் பிரிவுக்குள்ளும் வராத- எனக்குத் தெரியாத எத்தனையோ ஆத்மாக்கள் இந்த பூவுலகத்தில் இருந்து போயிருக்கின்றன. எந்த விதிக்கணக்கிலோ, இயற்கையாகவோ, வியாதியாலோ, விபத்தினாலோ இந்த உலகைவிட்டு பிரிந்திருக்கக்கூடிய ஆத்மாக்கள் எல்லாம் நற்கதியடைய நான் பிரார்த்திக்கிறேன்.

    மேலுலகில் எந்தவித துன்பங்களும் அனுபவிக்காமல், மீண்டும் புது உடலோடு எடுக்கும் அடுத்த பிறவியில் எல்லா நன்மைகளும் பெற நான் பிரார்த்தித்துக் கொள்கிறேன். எள்ளும் தண்ணீரும் கொண்டு நான் செய்யும் இந்த தர்ப்பணத்தால் அந்த எல்லா ஆத்மாக்களும் திருப்தி அடையட்டும். நம் முன்னோர்கள் மற்றும் நமக்குத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், நண்பர்கள், நம்முடன் வாழ்ந்து அமரர் ஆனவர்கள் அனைவருக்கும் இம்மந்திர வழிபாட்டினால் நற்கதி கிட்டுமென்று சாஸ்திரம் கூறுகிறது.

    • காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுத்து விடுவது நல்லது.
    • சூரியன் மறைந்த பிறகு தர்ப்பணம் செய்யக்கூடாது.

    தர்ப்பணம் செய்ய வேண்டிய நாள் அன்று அதிகாலையில் எழுந்துவிட வேண்டும். குளித்து, சுத்தமான ஆடை அணிந்து மூதாதையர்களை நினைத்துக்கொண்டே தர்ப்பணம் செய்ய வேண்டும். காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுத்து விடுவது நல்லது. முடியாதவர்கள் காலையில் சீக்கிரம் தர்ப்பணத்தை முடித்து விடவேண்டும். ஏனெனில் நாம் கொடுக்கும் எள் கலந்த நீரை பித்ருக்கள் ஏற்றுக்கொள்ளும் நேரம் என்பது மிக, மிக புனிதமானது. எனவே நாம் அதில் கவனமாக இருக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் சூரியன் மறைந்த பிறகு தர்ப்பணம் செய்யக்கூடாது.

    நாம் தர்ப்பணம் செய்ததும் அதை பெற்றுக் கொள்ளும் ஸ்வதா தேவி கண் இமைக்கும் நேரத்துக்குள் அதை நம் பித்ருக்களிடம் ஒப்படைத்து விடுவாள். எனவே தர்ப்பணம் செய்யும் போது`1ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி'' என்று சொல்ல மறந்து விடக்கூடாது.

    பொதுவாக நம் வீட்டு பெரியவர்கள் இயற்கையாக மரணம் அடையும் போது, இறந்த நேரம், திதி ஆகியவற்றை ஒரு டைரியில் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அந்த திதியில் தர்ப்பணம், சிதார்த்தம் உள்ளிட்டவைகளை செய்தல் வேண்டும்.

    பெரும்பாலானவர்கள் இந்த திதி தினத்தை முறையாக செய்வதில்லை. கணிசமானவர்களுக்கு அந்த திதி என்றாலே என்ன என்ற விவரம் கூட தெரியாமல் உள்ளது. ஆதிகாலத்தில் தமிழர்கள் "நீத்தார் வழிபாடு'' நடத்தி பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய எல்லா கடமைகளையும் செய்தனர்.

    அதை செஞ்சோற்று கடனாக நினைத்தனர். இப்போதும் பித்ருகாரியம் செய்கிறார்கள். ஆனால் அதை முறையாக, பித்ருக்கள் திருப்திபடும்படி செய்வதில்லை. அதனால்தான் குடும்பங்களில் மங்கள காரியங்கள் நடப்பது தடைபடுகிறது அல்லது தாமதமாகிறது.

    புத்திர சுகம் கிடைக்காமல் போய் விடுகிறது. எனவே நம் வம்சம் விளங்க வேண்டுமானால் நம்மை வளர்த்து ஆளாக்கிய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யப்பட வேண்டும். அமாவாசை, மாதப்பிறப்பு, கிரகண நாட்களில் அவசியம் தர்ப்பணம் செய்தல் வேண்டும்.

    முடியாதவர்கள் மகாளயபட்சத்தின் 15 நாட்களும் தர்ப்பண பூஜைகளை கட்டாயமாக செய்ய வேண்டும். உங்கள் முன்னோர்கள் எல்லாருமே பித்ருலோகத்தில் நல்ல நிலையில் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. சிலருக்கு அவர்கள் செய்த கர்ம வினைகள் தொடரக்கூடும்.

    அப்படிப்பட்டவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் தர்ப்பணம்தான் தாகம் தணிப்பதாக இருக்கும். தாத்தாவுக்கு அப்பா எல்லாம் மறுபிறவி எடுத்திருப்பார். எனவே அவருக்கு ஏன் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று சிலர் நினைக்கலாம். உங்கள் முன்னோர்கள் மறுபிறவி எடுத்திருந்தாலும் கூட நீங்கள் கொடுக்கும் தர்ப்பணம் அவர்களுக்கு பெரும்பலனை கொடுக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.

    எனவே நீங்கள் முன்னோர் வழிபாட்டை ஆழ்ந்த நம்பிக்கையுடன் செய்தல் வேண்டும். நீங்கள் வழிபாடு செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்தான் பித்ருலோகத்தில் இருந்து மகாளய பட்சத்தின் 15 நாட்களும் உங்களோடு இருக்க உங்கள் முன்னோர்கள், உங்கள் வீடு தேடி வருகிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

    • முன்னோர் பெயரைச் சொல்லி அதில் எழுந்தருள்க என்று சொல்ல வேண்டும்.
    • ஏழைகளுக்கு அன்னம் இடலாம்.

    மறைந்த அப்பா, அம்மா படத்தை எடுத்து சுத்தம் செய்து உரிய திதி நாளில் துளசி, மலர்மாலை சாற்றி பொட்டு வைத்து அதற்கு முன்பாக ஒரு தாம்பளத்தை வைத்து தர்ப்பை மூலம் சட்டம் போட வேண்டும். அதன்மேல் முன்னோர் பெயரைச் சொல்லி அதில் எழுந்தருள்க என்று சொல்ல வேண்டும். அதாவது, எனது தாயே எழுந்தருள்க! தந்தையே எழுந்தருள்க! என்று எள்ளும் தண்ணீரும் விட வேண்டும். பிறகு சிவ (அல்லது) விஷ்ணு கோத்ரத்தை சேர்ந்தவருக்கு தர்ப்பணம் செய்கிறேன் என்று கூறி 3 முறை நீர் எள் விடவும், அடுத்ததாக, எனது தந்தையின் தந்தைக்கு தர்ப்பணம் செய்கிறேன், என்று 3 முறை எள் தீர்த்தம் விடுக.

    மூன்றாவதாக எனது பாட்டனார்க்கு தர்ப்பணம் விடுகிறேன் என்று மூன்றுமுறை எள், தண்ணீர் விடவும். அடுத்ததாக, எனக்கு தெரியாமல் என் வம்சாவழியில் வருகின்ற பித்ருக்களுக்கு (காருணீக பித்ரு) தர்ப்பணம் செய்கிறேன் என்று எள் நீர் விடவும். இதன் பொருட்டு தேவர்களும், தேவ ருலக வாசிகள் அனைவரும் எனது தர்ப்பண வழிபாட்டால் திருப்தி அடையட்டும் திருப்தியக;என்று 3 முறை கூறுக. இது தான் எளிய தர்ப்பண பூஜை முறை.

    பிறகு எழுந்து நின்று கையில் எள் நீர் எடுத்துக்கொண்டு மூன்று முறை தன்னையே சுற்றிக்கொண்டு முட்டி போட்ட நிலையில், கட்டி கொண்டுள்ள வேட்டி துணியால் எள் தீர்த்தத்தை தொட்டு கண்களில் ஏற்றிக்கொள்ள வேண்டும். அதில் உள்ள கூர்ச்ச முடிச்சை அவிழ்த்து எடுத்து எள்ளை சேர்த்துக் கொண்டு குலம் உறவினர்கள் தழைக்க தர்ப்பணம் செய்தேன். உலக மக்கள், என் மக்கள் நலன் காக்கப்பட்டும் என்று மூன்று முறை சொல்ல வேண்டும். பிறகு யாருக்கு தர்ப்பணம் செய்தோமோ அவருக்கு பிடித்தமான பண்டத்துடன், தேங்காய், வாழைப்பழம் வைத்து மலர் துளசி போட்டு நெய் தீபம் காட்ட வேண்டும்.

    தர்ப்பண நீரை அருகில் உள்ள நீர் நிலைகளில் அல்லது செடிகளில் விட்டுவிட வேண்டும். கால்படும் இடங்களில் எள் தண்ணீரை ஊற்றக்கூடாது.

    தர்ப்பணம் கொடுத்து முடிந்ததும் ஒரு பிடி சாதத்தை உருண்டையாகப் பிடித்து எள் நீர் விட்டு சிறிது பருப்பு கலந்து காக்கையை அழைத்து அது சாதத்தை எடுத்த பிறகு கயா....கயா... கயாதிதி சமர்ப்பணம் என்று மூன்று முறை கூறிய பின் விளக்கில் உள்ள திரியை மட்டும் மாற்றி தீபம் ஏற்றி விட்டு பிறகு வீட்டு தெய்வத்திற்கு பூஜை செய்த பிறகு குடும்பத்தில் உள்ளவர்கள் உணவு சாப்பிட வேண்டும்.

    பித்ருக்களும் தேவர்களும் காக்கை வடிவில் உணவு எடுக்க வருவதாக சாஸ்திரம் கூறுவதால் காக்கைக்கு அன்னமிட்டு கயாவில் சிரார்த்தம் செய்தது போல இந்த தர்ப்பணம் செய்தேன் என்று கூறுகிறோம்.

    பித்ரு தர்ப்பண பூஜை செய்வதால் மனிதர்களுக்கு உணவு, மற்ற தானங்கள், காக்கைக்கும் பசுவுக்கும் பிண்ட உணவு இறைகின்ற அரிசி எள் முதலியவற்றுக்கு உணவு என்று இயற்கையாகவே உயிரோம்புதல் நடைபெறுகிறது.

    சில கடுமையான பணி நிமித்தமாக வெளியூரில் இருப்பவர்களே தனக்கு சக்தி இல்லாமை காரணமாக தடை வந்து செய்ய முடியாவிட்டால் மட்டும் அதற்கு வேறு வழி கூறப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு அன்னம் இடலாம். எள் மற்றும் காசு வைத்து தானம் கொடுக்கலாம். அதுவும் முடியவில்லை எனில் கட்டை விரலை ஈரம் செய்து அதில் ஒட்டிய எள்ளை தானம் தந்து பித்ருக்களை நினைக்கலாம்.

    பசுவுக்கு புல் எடுத்துப்போட்டு அதை தர்ப்பணமாக ஏற்கும்படி பித்ருக்களை வணங்கி கேட்கலாம். அதுவும் முடியாதவர்கள் ஆகாயத்தை அன்னாந்து பார்த்து ஏ பித்ருக்களே! எனக்கு எதுவும் செய்ய இயலவில்லை வேண்டுகிறேன், திருப்தி பெறுவீர்களாக என்று வேண்டி விழுந்து வணங்கலாம்.

    • நாளை காலை 9 மணிக்கு விநாயகர் வழிபாடு.
    • முன்னோர்களுக்கு தர்ப்பணம் இடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    பழந்தண்டலம், நாகாத்தம்மன் கோவிலில் உள்ள நல்லாங்கண்ணி திருக்குளம் பகுதியில் நாளை (12-ந்தேதி) பித்ரு தோஷம் நீக்கும் ஜரத்காரு மகரிஷி பூஜை நடை பெறுகிறது.

    துவாபர யுகத்தில் தர்மம் நேர்மை தவறாது வாழ்ந்த ஜரத்காரு முனிவரை நினைத்து குருபூஜை செய்து நெய் மற்றும் நல்லெண்ணை கலந்த தீபமிட்டு அவரது துதி கூறி பிரார்த்தனை செய்தால் பித்ருதோஷம், பல ஆண்டுகளாக திதி விட்ட தோஷங்கள் முழுவதும் விலகி குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது.

    இதையொட்டி நாளை காலை 9 மணிக்கு விநாயகர் வழிபாடு, ஆல விருட்சத்தில் மகரிஷி வர்ணனை, கலச பூஜை ஆவாகனம் நடைபெறுகிறது.

    தொடர்ந்து காலை 10 மணிக்கு 108 மூலிகைகளால் மகரிஷி யாகம், மலர் அர்ச்சனை, ஜரத்காரு மகரிஷி திருக்கதை பாராயணம், மற்றும் மோட்ச தீபம் ஏற்றி கூட்டாக முன்னோர்களுக்கு தர்ப்பணம் இடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மேலும் பக்தர்கள் பழந்தண்டலத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஐராவதீஸ்வரர் சிவன்கோவில் நிர்வாகிகள் செய்து உள்ளனர்.

    • அனைத்துவித சுப காரியங்கள் செய்ய மிகவும் உகந்த மாதம் ஆவணி மாதம்.
    • வாசலை சுத்தம் செய்யலாம் ஆனால் கோலம் போடக்கூடாது.

    ஆவணி அமாவாசை தினத்தில் பெற்றோர்கள் இல்லாத ஆண் எள்ளும், தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்வது அவசியம். முன்னோர்களுக்கு தர்ப்பணம், காகத்திற்கு உணவளிப்பதால் ஏழ்மை விலகி உங்கள் அனைத்து முயற்சிக்கும் நல்ல வெற்றி ஏற்படும். அனைத்துவித சுப காரியங்கள் செய்ய மிகவும் உகந்த மாதம் ஆவணி மாதம். இந்த அற்புத மாதத்தில் ஆவணி அவிட்டம், விநாயகர் சதுர்த்தி, ஆவணி அவிட்டம், ஆவணி அமாவாசை, பௌர்ணமி போன்ற தெய்வீக சிறப்புகள் பொருந்திய பல விசேஷங்கள் அடங்கியது.

    அதிலும் குறிப்பாக ஆவணி அமாவாசை எல்லா அமாவாசைகளைப் போல முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து, முன்னோர் வழிபாடு செய்ய மிகவும் உகந்த தினம். இந்த அற்புத நாளில் உங்கள் முன்னோர்களை நினைத்து பித்ருக்கள் வழிபாடு தர்ப்பணம் கொடுப்பதோடு, காக்கைக்கு உணவளித்து அவர்களின் ஆசி பெற உகந்த தினம். பித்ருக்களுக்கு தர்ப்பணம், கொடுப்பதன் மூலம் பித்ரு சாபம் நீங்கி, உங்கள் வாழ்வில் பெருமகிழ்ச்சியுடன் வாழலாம்.

    ஆவணி அமாவாசை தினத்தில் என்ன செய்யலாம்?

    ஒவ்வொரு அமாவாசை தினமும் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க உகந்த நாள். இந்த நாளில் முன்னோர்களுக்கு கருப்பு எள், தண்ணீர் விட்டு தர்ப்பணம் கொடுப்பதோடு, கருப்பு எள் மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு வைப்பதன் மூலம், முன்னோர்களின் ஆசி பெற்றிடலாம்.

    இந்த தினத்தில் பெற்றோர்கள் இல்லாத ஆண் எள்ளும், தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்வது அவசியம். இந்த நாளில் காலையில் வீட்டு வாசலை சுத்தம் செய்யலாம் ஆனால் கோலம் போடக்கூடாது. வீட்டில் முன்னோர்களின் படங்களுக்கு பூக்கள் வைத்து, சந்தனம், குங்கும திலகமிடுங்கள். தீப, தூப ஆராதனை செய்யுங்கள்.

    விரதம் இருந்து முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து, அன்று வீட்டில் நீங்கள் சமைத்த உணவை முன்னோர்களுக்கு படைப்பதோடு, அந்த உணவை காகத்திற்கு வைத்து அதன் பின்னர் உணவருந்தவும். முன்னோர்களின் ஆசி பெறுவது, குலதெய்வத்தை வணங்குதல், தினமும் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதால், வீட்டில் இருக்கும் தரித்திர நிலை நீங்கும். திருமண தாமதம், ஏழ்மை விலகி உங்கள் அனைத்து முயற்சிக்கும் நல்ல வெற்றி ஏற்படும்.

    • அறைக்குள் விளக்காக இருக்கும் முன்னோர்களை திருப்திப்படுத்த வழிபட வேண்டிய நாள்.
    • புரட்டாசி மாதம் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை.

    மறைந்தவர்களுக்கு மகாளய அமாவாசை என்று சொல்வது வழக்கம். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட நீங்கள் முன்னோர்களை வழிபட வேண்டிய நாள், இந்த மகாளய அமாவாசையை மறந்துவிடாதீர்கள். முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டிய தேதியை மறந்தவர்கள், திதி கொடுக்க மறந்தவர்கள் அன்றைய தினத்தில் திதி கொடுத்தால் அதை முன்னோர்கள் மனதார ஏற்றுக்கொள்வர்.

    அறைக்குள் விளக்காக இருக்கும் முன்னோர்களை திருப்திப்படுத்த வழிபட வேண்டிய நாள் அமாவாசை ஆகும். எல்லா மாதங்களிலும் அமாவாசை வந்தாலும் தை மாதம் வரும் அமாவாசையை 'தை அமாவாசை' என்றும், ஆடி மாதம் வரும் அமாவாசையை 'ஆடி அமாவாசை' என்றும், புரட்டாசி மாதம் வரும் அமாவாசையை 'மகாளய அமாவாசை' என்றும் சிறப்பு வாய்ந்ததாக சொல்வா்.

    புரட்டாசி மாதம் 27-ந் தேதி (14.10.2023) சனிக்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினம் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வதன் மூலமும், பித்ருக்களுக்கு திதி கொடுப்பதன் மூலமும் முன்னேற்றங்களை வரவழைத்துக் கொள்ள இயலும். திதி கொடுத்தால் விதி மாறும் என்பது முன்னோர் வாக்கு. தடைக் கற்களை படிக்கற்களாக மாற்றுவது இந்த முன்னோர் வழிபாடுதான்.

    ×