search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாகுபடி"

    • டெல்டா விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும் குறுவை தொகுப்பு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
    • மாற்றுப்பயிர்களான சிறுதானியங்கள், பயறுவகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விதைகள் அடங்கிய தொகுப்பாக மானியத்துடன் வழங்கப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொ ன்ராஜ் ஆலிவர் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு நடப்பு குறுவை பருவத்தில் சாகுபடி பரப்பினை அதிகப்படுத்தவும், நடப்பு தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வரவும், பல்வகை பயிர் சாகுபடியை ஊக்குவித்திடவும், பரிந்துரைக்கப்பட்ட உயர் விளைச்சல் நவீன தொழில் நுட்பங்களை கொண்டு நெல் உற்பத்தி திறனை அதிகப்படுத்திடவும், டெல்டா விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலா ளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும் குறுவை தொகுப்பு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இந்த திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டத்திற்கு ரூ.16 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நெல் சாகுபடியை ஊக்குவித்திட 50 சதவீதம் மானியத்தில் சான்று பெற்ற நெல் விதைகள் மற்றும் 100 சதவீத மானியத்தில் ரசாயன உரங்கள் மற்றும் மானியத்தில் மாற்றுப்பயிர் சாகுபடிக்கு இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளன.தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் ஒரு பயனாளிக்கு ஒரு ஏக்கருக்கு மட்டும் ஒரு மூட்டை யூரியா, ஒரு மூட்டை டி.ஏ.பி. மற்றும் ½ மூட்டை பொட்டாஷ் ஆகிய உரங்கள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. மேலும் குறுவை பருவத்தில் மாற்றுப்பயிர்களான சிறுதானியங்கள், பயறுவகை மற்றும் எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விதைகள் அடங்கிய தொகுப்பாக பொதுப்பிரிவினருக்கு 50 சதவீதம் மானியம், ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 70 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது. உழவன் செயலி மூலம் இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் பட்டா, சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை ஆகியவற்றுடன் உழவன் செயலி மூலம் பதிவு செய்து கொள்ளலாம். அல்லது வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி உரிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். இதற்காக அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் குறுவை தொகுப்பு திட்ட உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விளைநிலங்களில், தனிப்பயிராகவும், தென்னந்தோப்புகளில் ஊடுபயிராகவும் வாழை சாகுபடி செய்து வருகின்றனர்.
    • நல்ல விலை கிடைக்கும் செவ்வாழை ரகத்துக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

    உடுமலை :

    உடுமலை சுற்றுப்பகுதியில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை பொழிவு காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. இதையடுத்து காய்கறி மற்றும் இதர சாகுபடி பரப்பு கடந்த சீசனில் அதிகரித்தது.அதே போல், நீர் வளம் மிகுந்த பகுதிகளில்வாழை சாகுபடி செய்ய விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். விளைநிலங்களில், தனிப்பயிராகவும், தென்னந்தோப்புகளில் ஊடுபயிராகவும் வாழை சாகுபடி செய்து வருகின்றனர்.

    முன்பு நேந்திரன் மற்றும் இலைத்தேவைக்கான வாழை ரகங்களே உடுமலை பகுதி விவசாயிகளின் தேர்வாக இருந்தது.தற்போது பிற ரகங்களையும் சாகுபடி செய்ய திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக நல்ல விலை கிடைக்கும் செவ்வாழை ரகத்துக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் செவ்வாழை ரகங்களுக்கான கன்றுகள் போதுமான அளவு கிடைப்பதில்லை. எனவேவிவசாயிகள் தேவையறிந்து பிற மாவட்டங்களில் இருந்து கன்றுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

    அதில் தேனி மாவட்டம் வருஷநாடு பகுதியிலிருந்து கொண்டு வந்து ஒரு கன்று 120 ரூபாய் என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.விவசாயிகள் கூறுகையில், 'அதிக நீர் தேவையுள்ள வாழை சாகுபடியை இந்தாண்டு பலர் தேர்வு செய்துள்ளனர். சீசனுக்கேற்பதோட்டக்கலை பண்ணை வாயிலாக வாழைக்கன்று உற்பத்தி செய்து, மானிய விலையில் விற்பனை செய்யலாம். இதனால் அனைத்து விவசாயிகளும் பயன்பெறுவார்கள் என்றனர்.

    • கரும்பு சாகுபடி குறித்த பயிற்சி முகாம் கொண்டரசம்பாளையம் கிராமத்தில் நடைப்பெற்றது.
    • அதிக மகசூல் தரும் நீடித்த, நவீன கரும்பு சாகுபடி முறையை விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கினார்.

    பரமத்தி வேலூர்:

    பரமத்தி வட்டாரம், சித்தம்பூண்டி, கொண்டரசம்பாளையம் கிராம கரும்பு விவசாயிகளுக்கு 'நீடித்த நிலையான கரும்பு சாகுபடி'' குறித்து தொழில்நுட்ப பயிற்சி நடைப்பெற்றது. பயிற்சியில் பரமத்தி வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி, கரும்பில் இருந்து சர்க்கரை மட்டும் தயாரித்த காலம் போய் தற்போது கரும்புச்சாறு கழிவில் மொலாசஸ், சாக்லெட் மற்றும் கரும்பு சக்கையில் இருந்து மின்சாரம், இயற்கை உரம், காகிதம் என கரும்பின் அனைத்து பாகங்களும் பயன்படுகிறது. குறைந்த அளவு விதை நாற்று, குறைந்த அளவு தண்ணீரை உபயோகித்து அதிக மகசூல் தரும் நீடித்த, நவீன கரும்பு சாகுபடி முறையை பயன்படுத்தி பயன் பெற விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கினார்.

    பொன்னி சுகர்ஸ் நிறுவன கரும்பு ஆய்வாளர் பழனிச்சாமி, மற்றும் மேலாண்மை அலுவலர் அல்லிமுத்து ஆகியோர் பயிற்சி வழங்கினர். பயிற்சியில் துணை வேளாண்மை அலுவலர் குழந்தைவேல், உதவி வேளாண்மை அலுவலர் கௌசல்யா, அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ் ஆகியோர் விவசாயிகளுக்கு நன்றி கூறி பயிற்சியினை ஏற்பாடு செய்திருந்தனர்.

    • விவசாயிகள் மாற்றுப் பயிர்களைத் தேடத் தொடங்கியுள்ளனர்.
    • தென்னை மரங்களுக்கிடையில் படர விட்டு சாகுபடி செய்துள்ளனர்.

    உடுமலை:

    புதிய மாற்றங்கள் போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில் புதிய முயற்சிகள் மூலமாகவே வெற்றியடைய முடியும் என்ற நிலை உள்ளது. இது விவசாயத்துக்கும் பொருந்துவதாகவே உள்ளது. பல்வேறு சிக்கல்களால் சவால் நிறைந்ததாக மாறியுள்ள விவசாயத்தில் புதிய ரக விதைகள், புதிய விவசாயக் கருவிகள், புதிய சாகுபடி முறைகள் என பல்வேறு மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கிறது.

    இந்தநிலையில் உடுமலை பகுதியில் மாற்றங்களை விரும்பும் விவசாயிகள் இந்த பகுதியில் ஏற்கனவே விளைவிக்கப்படாத புதிய ரகங்களை சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.தக்காளி, சின்ன வெங்காயம், பீட்ரூட் என குறிப்பிட்ட சிலவகை காய்கறிகள் மற்றும் மா, வாழை, கொய்யா என குறிப்பிட்ட சிலவகை பழங்கள் என்று சாகுபடி செய்து வந்த விவசாயிகள் மாற்றுப் பயிர்களைத் தேடத் தொடங்கியுள்ளனர்.

    அந்தவகையில் பேஷன் ப்ரூட் எனப்படும் தாட் பூட் பழங்களை சோதனை முயற்சியாக உடுமலை பகுதியில் சாகுபடி செய்துள்ளனர்.குளிர்ச்சியான மலைப் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் இந்தவகை பழங்கள் உடுமலை பகுதியில் நிலவும் குளிர்ந்த வானிலையால் வெற்றிகரமான சாகுபடிப் பயிராக மாறும் வாய்ப்பு உள்ளது. இந்தப் பழத்தை கையால் அழுத்தித் தொட்டால் பட்டாசு வெடிப்பது போல சத்தம் வருவதால் இதனை பட்டாசுப்பழம் என்றும் அழைப்பார்கள்.

    தாட்பூட் பழங்கள் எளிதில் அழுகுவதில்லை என்பதால் விற்பனையாளர்கள் அதிக நாட்கள் இருப்பு வைத்து விற்பனை செய்ய முடியும். ரத்த அழுத்தம், புற்று நோய், ஆஸ்துமா மற்றும் சர்க்கரை நோய்களுக்கு சிறந்த மருந்தாக இந்த பழம் உள்ளது என்று மக்கள் நம்புவதால் அதிக அளவில் விரும்பி வாங்குகின்றனர்.புளிப்பு கலந்த இனிப்பு சுவை கொண்ட இந்த பழத்தை குளிர் பானங்கள் தயாரிக்க பயன்படுத்துகிறார்கள். மேலும் இந்த பழத்திலிருந்து ஜெல்லி மிட்டாய், சாலட், சர்பத், ஐஸ்கிரீம், ஜூஸ் போன்றவையும் தயாரிக்கப்படுகின்றன. இதன் விதைகளில் இருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. தோலை உரமாக்கலாம் மற்றும் இலைகள் மருத்துவ குணம் கொண்டதாக உள்ளதால் ஐரோப்பிய நாடுகளில் மருந்து உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது. வெளி நாட்டுப் பழங்களை விரும்பி உண்பது பேஷனாகி வரும் இன்றைய நிலையில் பேஷன் ப்ரூட் சாகுபடி விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் தரக்கூடியதாக இருக்கும்.

    கொடி வகைப் பயிரான இதனை தற்போது தென்னை மரங்களுக்கிடையில் படர விட்டு சாகுபடி செய்துள்ளனர்.சோதனை முயற்சியாக சாகுபடி செய்யப்பட்டுள்ள பேஷன் ப்ரூட் நன்கு காய்க்கத் தொடங்கியுள்ளது.எனவே தோட்டக்கலைத்துறை மூலம் பந்தல் அமைத்து சாகுபடி செய்வதற்கான வழிகாட்டல்களை வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • ஆனால் விவசாயிகள் கொண்டு வரக்கூடிய நெல்லை 4 அல்லது 5 நாட்கள் காத்திருக்க வைத்து தான் கொள்முதல் செய்கின்றனர்.
    • தற்போது அடிக்கடி இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் காய்ந்த நெல்மணிகள் நனைந்து வீணாகும் நிலை உள்ளது.

    அம்மாப்பேட்டை:

    சாலியமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் பம்பு செட் உதவியுடன் பல நூறு ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற் பயிர்கள் தற்போது அறுவடை பருவத்தை எட்டியுள்ள நிலையில் விவசாயிகள் தற்போது அறுவடைசெய்யும் பணியில் மும்ரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    அறுவடை செய்யக்கூடிய நெல்லை அருகில் உள்ள நெடுஞ்சாலையில் நன்கு உலர வைத்து பின்னர் உலர்ந்த நெல்லை சாலியமங்கலம் அரசு நெல் நேரடி கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் விவசாயிகள் கொண்டு வரக்கூடிய நெல்லை 4 அல்லது 5 நாட்கள் காத்திருக்க வைத்து தான் கொள்முதல் செய்கின்றனர்.

    தற்போது அடிக்கடி இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் காய்ந்த நெல்மணிகள் நனைந்து வீணாகும் நிலை உள்ளது. எனவே நெல்லை தாமதம் இன்றி உடனுக்கு உடன் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தற்போதைய சூழலில், எந்தவொரு விளைபொருளுக்கும் கட்டுபடியாகும் விலையில்லை.
    • மாநிலங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகள் அதிகளவில் சந்தைக்கு வரும் வாய்ப்பு ஏற்படும்.

    குடிமங்கலம்,

    உடுமலை, குடிமங்கம் மற்றும் மடத்துக்குளம் உள்ளிட்ட நீர்ப்பாசனம் அதிகம் உள்ள பகுதிகளில் சின்ன வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறி பயிர், நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட மானாவாரி பயிர்களும் விளைவிக்கப்படுகின்றன.

    இருப்பினும் நடப்பு வைகாசி பட்டத்தில் தேங்காய், சின்ன வெங்காயம் விலை கணிசமாக குறைந்திருக்கிறது. விவசாயிகளிடம் இருந்து ஒரு தேங்காய் 5.50 ரூபாய்க்கும், ஒரு கிலோ சின்ன வெங்காயம்20 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படுவதால், விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர் கொண்டுள்ளனர்.அதே நேரம் யூரியா தவிர பொட்டாஷ் உள்ளிட்ட உரங்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால், சின்ன வெங்காயம் சாகுபடியில் ஈடுபடுவதை விவசாயிகள் பலர் தவிர்த்துள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    தற்போதைய சூழலில், எந்தவொரு விளைபொருளுக்கும் கட்டுபடியாகும் விலையில்லை. ஆனால் அனைத்து உரங்களின் விலையும் கணிசமான அளவு உயர்ந்து விட்டது.இதனால் பெரும்பாலான விவசாயிகள் சாகுபடியை குறைத்துக்கொண்டுள்ளனர். பல ஏக்கர் நிலங்கள் தரிசாக விடப்பட்டுள்ளன.எனவே, உரத்தின் விலையை, அரசு இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும். சாகுபடி பரப்பு குறைவதால்கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகள் அதிகளவில் சந்தைக்கு வரும் வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நாற்றுகளை வாங்கி நடவு செய்ய அனைத்து தரப்பினரும் ஆர்வம் காட்டினர்.
    • சத்து நிறைந்ததால் இக்காய்கறிக்கு தற்போது மவுசு ஏற்பட்டுள்ளது.

    உடுமலை:

    சமையலில் பயன்படும் முக்கிய காய்கறிகளில் ஒன்றாக, கறிப்பலா உள்ளது. சமவெளி பகுதிகளில் இது பயிரிடப்படுவதில்லை. மலைப்பாங்கான பகுதிகளில் இக்காய்கறி விளையும்.இதை சமவெளியிலும் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டத்துவங்கியுள்ளனர்.மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலை வாசஸ்தலங்களில், கறிப்பலா மரங்கள் அதிகளவு உள்ளன. அங்கிருந்து ஒவ்வொரு சீசனுக்கும்கறிப்பலா, விற்பனைக்காக சமவெளிப்பகுதிக்கு கொண்டு வரப்படுவது வழக்கமாகும்.இந்நிலையில் அரசு தோட்டக்கலை பண்ணைகளில், கறிப்பலா நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

    வீடுகளிலும், விளைநிலங்களில், காற்று தடுப்பானாக வரப்புகளிலும், இவ்வகை நாற்றுகளை வாங்கி நடவு செய்ய அனைத்து தரப்பினரும் ஆர்வம் காட்டினர்.நீர் வளம் மிகுந்த மலையடிவார விளைநிலங்களில்வணிக ரீதியாக, கறிப்பலா மரங்களை சிலர் பராமரிக்க துவங்கியுள்ளனர். நாற்று நடவு செய்து 5 முதல் 6 ஆண்டுகளில் காய்களை அறுவடை செய்யலாம். இவ்வாறு உடுமலை பகுதியில் தற்போது அறுவடை செய்யப்படும் கறிப்பலா கிலோ 25 ரூபாய் வரை, சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது.மக்களும் இக்காய்கறியை விரும்பி வாங்க ஆரம்பித்துள்ளனர். சத்து நிறைந்ததால் இக்காய்கறிக்கு தற்போது மவுசு ஏற்பட்டுள்ளது.

    ×