search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரங்கசாமி"

    • கவர்னரிடம் காருடனான தனது அனுபவங்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி பகிர்ந்து கொண்டார்.
    • கார் செயின்ட் லூயிஸ் சாலை, பட்டேல்சாலை, கடற்கரை சாலை, துய்மா வீதி வழியாக மீண்டும் கவர்னர் மாளிகை வந்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி கடந்த 1997-ம் ஆண்டு முதன் முதலில் அம்பாசிடர் கார் வாங்கினார்.

    வெள்ளை நிற அம்பாசிடர் காரை 20 ஆண்டுகள் வரை அவர் பயன்படுத்தி வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு கார் பழுதானதால் அதை பயன்படுத்தாமல் நிறுத்தி வைத்தார். இந்த நிலையில் ராசியான தனது காரை மீண்டும் பயன்படுத்த முடிவெடுத்தார்.

    இதற்காக காரை தூத்துக்குடிக்கு அனுப்பி சுமார் ரூ.5 லட்சம் செலவில் புதுப்பித்தார். புதுப்பிக்கப்பட்ட அம்பாசிடர் கார் புதுச்சேரி கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து உள்ளூர் நிகழ்வுகளில் தனது விருப்பமான பழைய காரையே அவர் பயன்படுத்துகிறார்.

    இந்த நிலையில் இதை அறிந்த புதுவை கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் அந்த காரை பார்க்க விரும்பினார். அதையடுத்து நேற்று மாலை தனது அம்பாசிடர் காரில் ராஜ் நிவாஸ்க்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி சென்றார். அங்கு சிறிது நேரம் கவர்னருடன் ஆலோசித்த ரங்கசாமி காரை பார்க்க கவர்னரை அழைத்து வந்தார்.

    காரை வந்து பார்த்த கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் காரை பற்றிய விவரங்களை கேட்டறிந்தார். கவர்னரிடம் காருடனான தனது அனுபவங்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி பகிர்ந்து கொண்டார்.

    பின்னர் இருவரும் அம்பாசிடர் காரின் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்தனர். கார் செயின்ட் லூயிஸ் சாலை, பட்டேல்சாலை, கடற்கரை சாலை, துய்மா வீதி வழியாக மீண்டும் கவர்னர் மாளிகை வந்தது. அங்கு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை இறக்கி விட்டு முதல்-அமைச்சர் ரங்கசாமி புறப்பட்டு சென்றார்.

    இதுபற்றி முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கேட்டதற்கு காரில் சென்றபோது புதுச்சேரி மாநிலத்தை சிறப்பான நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பது பற்றி பேசினோம். எனது மிக ராசியான வண்டியில் பயணம் செய்வது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

    • முதலமைச்சர் ரங்கசாமி வீட்டிற்கு வந்து, ஜிப்மரில் சிகிச்சை பெறும் வெளிமாநிலத்தினர் உதவி கேட்பது வழக்கம்.
    • சம்காஷி முதலமைச்சர் ரங்கசாமி வீட்டுக்கு சென்று தனது நிலைமையை எடுத்து கூறினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் வீடு, கோரிமேடு அப்பா பைத்தியம் சாமி கோவில் அருகில் அமைந்துள்ளது. கோவிலில் தினசரி அன்னதானமும், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று வாழையிலை போட்டு அறுசுவை உணவும் அளிக்கப்பட்டு வருகிறது.

    இதன் மூலம், சுற்றுவட்டார பகுதி ஆதரவற்றவர்கள், ஜிப்மருக்கு சிகிச்சைக்கு வரும் வெளிமாநிலத்தினர் பயன்பெறுகின்றனர்.

    மேலும், தினமும் முதலமைச்சர் ரங்கசாமி வீட்டிற்கு வந்து, ஜிப்மரில் சிகிச்சை பெறும் வெளிமாநிலத்தினர் உதவி கேட்பது வழக்கம். அவர்களுக்கு தேவையான பண உதவிகள் செய்வதை முதலமைச்சர் ரங்கசாமி வழக்கமாக கொண்டுள்ளார்.

    இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சம்காஷி என்ற பெண் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற புதுச்சேரிக்கு வந்திருந்தார். அவர் கோரிமேடு பகுதியில் வீடு வாடகை எடுத்து தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

    தினமும் அவர் அப்பா பைத்தியம் சாமி கோவிலில் வழங்கப்படும் அன்னதானத்தை வாங்கி சாப்பிட்டு வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2 மாதம் வீட்டு வாடகை கொடுத்து வந்த இவர் 3-வது மாதத்துக்கு வீட்டு வாடகை கொடுக்க பணம் இல்லாமல் தவித்து வந்தார்.

    முதலமைச்சர் ரங்கசாமி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் வெளிமாநில நோயாளிகளுக்கு பண உதவி செய்வதை மேற்கு வங்க பெண் சம்காஷி கேள்விப்பட்டார். இதையடுத்து சம்காஷி முதலமைச்சர் ரங்கசாமி வீட்டுக்கு சென்று தனது நிலைமையை எடுத்து கூறினார்.

    உடனே முதலமைச்சர் ரங்கசாமி அந்த பெண்ணுக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்து உதவி செய்து உடல் நலம் பெற ஆசி வழங்கினார். இதனை அந்த பெண் வீடியோவில் பதிவிட்டு இருந்தார்.

    இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. முதலமைச்சர் ரங்கசாமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    • புதுச்சேரி மக்கள் ஆர்வத்தோடு வாக்களித்து வருவதாக தகவல் கிடைத்தது.
    • கடந்த தேர்தலைவிட அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு புதுச்சேரியில் இன்று நடைபெற்று வருகிறது.

    புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி கோரிமேட்டில் அப்பா பைத்தியம் சாமி கோவில் வளாகத்தில் உள்ள வீட்டில் இருந்தார். அங்கிருந்து கார் மூலம் திலாசுப்பேட்டையில் உள்ள பழைய வீட்டுக்கு வந்தார். அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் அதே தெருவில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்தார்.

    அங்கு காலை 8.45 மணிக்கு தனது வாக்கை பதிவு செய்தார். தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் கோரிமேடு அப்பா பைத்தியம் சாமி கோவிலுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி சென்றார்.


    வி.மணவெளியில் உள்ள வாக்குச்சாவடியில் பா.ஜனதா வேட்பாளர் நமச்சிவாயம், தனது மனைவி வசந்தியுடன் வந்து வாக்களித்தார். பின்னர் அங்கிருந்து காரில் கோரிமேடு அப்பா பைத்தியம் சாமி கோவிலுக்கு வந்தார்.

    அங்கு முதல்-அமைச்சர் வருகைக்காக காத்திருந்தனர். முதல்-அமைச்சர் ரங்கசாமி சிறிது நேரத்துக்குள் அங்கு வந்து சேர்ந்தார். பின்னர் அப்பா பைத்தியம் சாமிக்கு ரங்கசாமி தீபாராதனை காண்பித்து பூஜை செய்தார்.

    தொடர்ந்து வேட்பாளர் நமச்சிவாயத்துக்கு திருநீறு பூசி ஆசி வழங்கினார். அவர் ரங்கசாமி காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். தொடர்ந்து பக்தர்களுக்கு ரங்கசாமி திருநீறு வழங்கினார்.

    பின்னர் முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    காலை 8.45 மணிக்கு எனது வாக்கை பதிவு செய்தேன். புதுச்சேரி மக்கள் ஆர்வத்தோடு வாக்களித்து வருவதாக தகவல் கிடைத்தது. மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசும், புதுச்சேரியில் ஆளும் எங்கள் அரசும் செய்துள்ள வளர்ச்சி திட்டங்கள், நலத்திட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

    அமைச்சர் நமச்சிவாயம் வெற்றி பெறுவது உறுதி. மத்தியில் மீண்டும் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும். கடந்த தேர்தலைவிட அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி மிஷன் வீதியில் உள்ள வ.உ.சி. பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் மடுகரை கம்பத்தம் வீதியில் உள்ள அரசு பள்ளி வாக்குச் சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

    அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்வேந்தன் வீராம்பட்டினத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

    • எங்கள் ஆட்சியில் முழுமையாக எல்லா திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம்.
    • அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம். பிரசாரத்தின்போது பெரிய குறை என மக்கள் எதையும் கூறவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா சார்பில் அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார்.

    அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி தொகுதிதோறும் திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.

    காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களில் பிரசாரத்தை முடித்துவிட்டு புதுச்சேரியில் தீவிர பிரசாரத்தை தொடங்கியுள்ள முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    எங்கள் ஆட்சியில் முழுமையாக எல்லா திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம். பிரசாரத்தின்போது பெரிய குறை என மக்கள் எதையும் கூறவில்லை. இலவச அரிசி கொடுங்கள் என எல்லா இடத்திலும் தாய்மார்கள் கேட்டுள்ளனர்.

    என்.ஆர். காங்கிரஸ் அரசின் கொள்கை மாநில அந்தஸ்து புதுவைக்கு வேண்டும் என்பதுதான். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்கான அனைத்து முயற்சியையும் எங்கள் அரசு எடுக்கும்.

    எங்கள் அரசின் செயல்பாடுகள் புதுவை மக்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் உள்ளது. எனவே தேர்தலுக்காக நாங்கள் புதிதாக எந்த வியூகமும் அமைக்க வேண்டியதில்லை. புதுவை அரசு சொன்னதை செய்து கொண்டிருக்கிறது. மத்தியில் எந்த ஆட்சி உள்ளதோ அந்த ஆட்சியின் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் புதுவை மாநிலத்துக்கு பயனுள்ளதாக அமையும் என்பது எனது ஆணித்தரமான எண்ணம்.

    எனவேதான் பா.ஜனதா வேட்பாளருக்கு கூட்டணியில் தொகுதியை வழங்கினோம். பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு எனது ஆட்சியை கலைத்து விடுவார்கள் என்று அ.தி.மு.க. உள்பட எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால் எனது ஆட்சிக்கு எந்த சிக்கலும் இல்லை. இன்னும் 2 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி நடக்கும். மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சொத்து விபரங்களை அவர் கூறினால் நன்றாக இருக்கும்.
    • நம்ம புதுச்சேரியிலும் இவ்வளவு பெரிய பணக்காரர் இருக்கிறார் என்ற பெருமை கிடைக்கும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பா.ஜனதா வேட்பாளர் நமச்சிவாயம் ரூ.1000 கோடி அளவுக்கு சொத்து வைத்துள்ளார் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பிரசாரத்தில் திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறினார்.

    இந்த நிலையில் உப்பளம் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து வாக்கு சேகரித்த முதலமைச்சர் ரங்கசாமி, நாராயணசாமியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்து பிரசாரம் செய்தார்.

    பா.ஜனதா வேட்பாளரும், உள்துறை அமைச்சருமான நமச்சிவாயத்துக்கு ரூ.1000 கோடி சொத்து உள்ளதாக நாராயணசாமி கூறியுள்ளார். இவருக்கு ரூ.1000 கோடி சொத்துன்னா, அவருக்கு எத்தனை ஆயிரம் கோடி சொத்து இருக்கும்?


    அவர் முதலமைச்சர், மத்திய அமைச்சர், பிரதமர் அலுவலக இணை அமைச்சர், 15 ஆண்டு ராஜ்யசபா எம்.பி.யாக இருந்துள்ளார். அப்படியென்றால் அவரிடம் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும்? அவரிடம் உள்ள சொத்து விபரங்களை அவர் கூறினால் நன்றாக இருக்கும்.

    நம்ம புதுச்சேரியிலும் இவ்வளவு பெரிய பணக்காரர் இருக்கிறார் என்ற பெருமை கிடைக்கும், எங்களுக்கும் சந்தோஷமாக இருக்கும். அவர் எதையாவது சொல்லனும் என போகிற போக்கில் சொல்லிக் கொண்டே போகிறார்.

    இவ்வாறு ரங்கசாமி பேசினார்.

    • போலீசார் கல் வீசிய மர்ம நபரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பாராளுமன்ற பா.ஜனதா வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி கடந்த 27-ந் தேதி முதல் தொகுதி வாரியாக சென்று திறந்த ஜீப்பில் பொது மக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்.

    அதன்படி புதுவை முத்தியால்பேட்டை சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி நேற்று போலீஸ் நிலையம் எதிரே உள்ள பொன்னுமாரியம்மன் கோவிலில் இருந்து திறந்த வாகனத்தில் நின்றபடி தேர்தல் பிரசாரம் செய்தார்.

    இந்தநிலையில் முத்தியால்பேட்டை மந்தை வெளி மாரியம்மன் கோவில் அருகே அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி பேசிக்கொண்டிருந்த போது திடீரென பிரசார வாகனத்தின் மீது எங்கிருந்தோ வீசப்பட்ட கல் ஒன்று வந்து விழுந்தது. இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இருப்பினும் தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி தனது பேச்சை தொடர்ந்தார். அதன்பின் பிரசாரத்தை முடித்துவிட்டு அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதுதொடர்பாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் சென்று சோதனை நடத்தினார்கள். மேலும் வீட்டின் மாடிகளில் யாரும் உள்ளார்களா? எனவும் டார்ச் லைட் மூலமாக அடித்து பார்வையிட்டனர்.

    இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    முத்தியால்பேட்டை பகுதியில் கடந்த மாதம் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த விவகாரத்தில் அதிருப்தியில் இருந்த மர்ம நபர் யாரேனும் முதலமைச்சர் பிரசார வாகனம் மீது கல் வீசி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் கல் வீசிய மர்ம நபரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    • தேர்தல் விதிமுறைகள் நடை முறைக்கு வந்துள்ளதால், புதுவை சட்டசபைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
    • தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் மந்தமாக இருப்பது அந்த கூட்டணி கட்சிகளின் தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலையொட்டி சட்டசபை வளாகத்தில் உள்ள முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் அலுவலகங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் சட்டசபை வளாகம் வெறிச்சோடி காணப்படுகிறது. தேர்தல் விதிமுறைகள் நடை முறைக்கு வந்துள்ளதால், புதுவை சட்டசபைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மட்டும் வந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுடன் வெளிநபர்கள், கட்சி நபர்கள், தொகுதி மக்கள் வர அனுமதி கிடையாது.

    இதையடுத்து சட்டசபை நுழைவு வாயிலை மூடி பாதுகாப்பு பணியில் ஈடுபடுமாறு சட்டசபை செயலாளர் தயாளன் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் சட்டசபை காவலர்கள், நுழைவு வாயிலை மூடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சட்டசபை ஊழியர்கள் அடையாள அட்டை காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

    தேர்தல் முடியும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என சட்டசபை அலுவலகம் அறிவித்துள்ளது.

    அதேநேரத்தில் சட்ட சபையில் அமைச்சர்கள், சில எம்.எல்.ஏ.க்கள் ரிலாக்சாக அமர்ந்து அரசியல் குறித்த கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

    அதுபோல் முதல்-அமைச்சர் ரங்கசாமி நேற்று காலை வீட்டிலிருந்து சட்டசபைக்கு வரும் முன்பு, நேரு வீதியில் காரை நிறுத்தி விட்டு தனது நண்பரின் வாட்ச் கடைக்கு சென்றார். அங்கு சுமார் 1 மணி நேரம் வாட்ச் கடையில் ரிலாக்ஸாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். பாதுகாவலர்களும் தங்களின் வாகனங்களுடன் அங்கு நின்றிருந்தனர்.

    இதுகுறித்து முதல்-அமைச்சரின் ஆதரவாளர்கள் கூறும்போது,

    சட்டசபைக்கு சென்றாலும் மக்களை சந்திக்க முடியாது. அதனால் வழக்கமாக வரும் தனது நண்பர் கடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி தரப்பில் கூறுகையில், புதுச்சேரி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா போட்டியிடுகிறது. இம்முடிவு அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன நிலையிலும் வேட்பாளர் அறிவிப்பதில் தாமதம் நிலவி வருகிறது. பா.ஜனதாவினர் வேட்பாளர் அறிவிப்பில் மும்முரமான முயற்சியில் இருக்கின்றனர்.

    தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் பொதுமக்கள் சட்டசபைக்கு வர அனுமதி இல்லை. இதனால் முதல்-அமைச்சர் ரங்கசாமி தற்போது ரிலாக்ஸாக உள்ளார்" என்று தெரிவித்தனர்.

    மற்ற மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தல் சூடுபிடித்த நிலையில் அரசியல்வாதிகள் சுறுசுறுப்பாக தேர்தல் பணியாற்றி வருகின்ற வேளையில் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் மந்தமாக இருப்பது அந்த கூட்டணி கட்சிகளின் தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2 முறை அவரது பதவி ஏற்பு தள்ளி வைக்கப்பட்ட நிலையில், இன்று திருமுருகன் பதவியேற்றுக்கொண்டார்.
    • பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பெண் அமைச்சர் சந்திர பிரியங்கா கடந்த அக்டோபர் மாதம் நீக்கப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து கடந்த 4 மாதமாக புதிய அமைச்சர் நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி காரைக்கால் வடக்கு தொகுதியை சேர்ந்த என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகன் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி ஒப்புதல் பெற்று அரசாணை வெளியிடப்பட்டது.

    இதையடுத்து திருமுருகன் இன்று அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அமைச்சர் பதவியேற்பு விழா கவர்னர் மாளிகை வளாகத்தில் நடந்தது. தேசியகீதம், தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு விழா தொடங்கியது. திருமுருகன் அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்த ஆணையை தலைமை செயலாளர் சரத்சவுகான் வாசித்தார்.

    தொடர்ந்து கவர்னர் தமிழிசை, திருமுருகனுக்கு அமைச்சர் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பின்னர் தேசியகீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவடைந்தது.

    அமைச்சராக பதவியேற்ற திருமுருகன் முதலமைச்சர் ரங்கசாமி காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார்.

    தொடர்ந்து கவர்னர் தமிழிசை அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். கவர்னர் தமிழிசைக்கு அமைச்சர் திருமுருகன் சால்வை அணிவித்து, பூங்கொத்து வழங்கினார்.

    அமைச்சர் திருமுருகனுக்கு முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து தெரிவித்தனர். 

    • காரைக்கால் வடக்கு தொகுதியை சேர்ந்த என்.ஆர்.காங்கிரசின் எம்.எல்.ஏ. திருமுருகன் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
    • புதுவை அமைச்சராக திருமுருகனை நியமிக்க ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான இந்த ஆட்சியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 அமைச்சர்களும், பா.ஜனதாவை சேர்ந்த 2 அமைச்சர்களும் பதவி வகித்து வந்தனர்.

    இதில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் காரைக்கால் நெடுங்காடு (தனி) தொகுதி எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்ற சந்திர பிரியங்கா போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார். அவர் துறைகளை சரியாக கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் சந்திரபிரியங்கா பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

    இந்தநிலையில், காரைக்கால் வடக்கு தொகுதியை சேர்ந்த என்.ஆர்.காங்கிரசின் எம்.எல்.ஏ. திருமுருகன் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். புதுவை அமைச்சராக திருமுருகனை நியமிக்க ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார். புதிய அமைச்சராக திருமுருகன் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு சட்டசபை வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பதவியேற்க உள்ளார். பதவி ஏற்ற பின், அவருக்கான துறை ஒதுக்கப்படும்.

    • தமிழ்நாட்டில் இருந்து ஆதினம் செங்கோலை மோடியிடம் கொடுத்தது குறிப்பிடதக்கது.
    • பா.ஜ.க, அ.தி.மு.க-வை தோற்கடித்து தருமபுரி மாவட்டத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவேண்டும்.

    தருமபுரி:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற தேர்தல் தயாரிப்பு பேரவை கூட்டம் தருமபுரி பெரியார் மன்றத்தில் நடைபெற்றது.

    இதில் மாவட்ட செயலாளர் குமார் தலைமை வகித்தார். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் மற்றும் மூத்ததலைவர் கலந்து கொண்டு பேசினர்.

    கூட்டத்திற்கு பின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்னணி ஊழியர்கள் வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் தமிழ்நாடு முழுவதும் நடந்து வருகிறது. பா.ஜ.க-வின் தலைவர் அண்ணாமலை பேசும் போது அரசியல் அநாகரிகமாக பேசக்கூடாது.

    அவர் குறிப்பாக தி.மு.க கூட்டணி கட்சியினரை தரம் தாழ்த்தி பேசிவருகிறார். தமிழகத்தில் பா.ஜ.க 40 தொகுதிகளிலும் தோற்பது, தேர்தலுக்கு முன்னரே உறுதியாகிவிட்டது. மேலும் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க-வை டெபாசிட் இழக்க வைப்போம்.

    மேலும் அவர்கள் ஆபாச படத்தை வெளியிடுவதாக கூறி தருமபுரம் ஆதினத்தை மிரட்டுகின்றனர். போலீசார் விசாரணையில், அவரை மிரட்டுவதே பா.ஜ.க கட்சியினர் என தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து ஆதினம் செங்கோலை மோடியிடம் கொடுத்தது குறிப்பிடதக்கது. அவருக்கே அந்த நிலை என்றால் மக்கள் யோசித்து பார்க்க வேண்டும்.

    பா.ஜ.க ,அ.தி.மு.க-வை தோற்கடித்து தருமபுரி மாவட்டத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவேண்டும். சாதிய கூட்டணியை தோற்கடிக்க கிராமங்கள் தோறும் சென்று பிரச்சாரம் செய்யவேண்டும்.

    தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து 2 சீட் கொடுத்துள்ளனர். அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் எந்த தொகுதி என்பது முடிவாகும், தி.மு.க கூட்டணி தேர்தல் கால கூட்டணி அல்ல, மதச்சார்பின்மையை பாதுகாக்க, உருவான கொள்கை கூட்டணி.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வேட்பாளர் தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது.
    • புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி வேட்பாளரை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது.

    வேட்பாளர் பட்டியலில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், கவர்னர் தமிழிசை, பா.ஜனதா ஆதரவு எம்.எல்.ஏ. சிவசங்கரன், கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ., ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.

    வேட்பாளர் பட்டியலில் அமைச்சர் நமச்சிவாயத்தின் பெயர் முதலிடத்தில் இருந்தாலும் அவர் பாராளுமன்ற தேர்தலில் நிற்க விரும்பவில்லை. உள்ளூர் அரசியலிலேயே தொடர்ந்து ஈடுபட விரும்புகிறார்.

    இதனால் வேட்பாளர் தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது.

    இந்த நிலையில் புதுவை கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை பள்ளியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று காலை நடந்தது.

    முகாமை முதலமைச்சர் ரங்கசாமி ஒரு குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார்.

    அப்போது முதலமைச்சர் ரங்கசாமியிடம் நிருபர்கள் புதுவை எம்.பி. தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணியில் யார் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என கேள்வி எழுப்பினர். அதற்கு முதலமைச்சர் ரங்கசாமி புதுவை எம்.பி. தொகுதி எங்கள் கூட்டணியில் பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் யார் என்பதை அக்கட்சி தலைமை விரைவில் அறிவிக்கும் என்றார்.

    • காரைக்கால் மீனவர்களது படகுகள் விடுவிக்கப்படவில்லை.
    • காரைக்கால் மீனவர்கள் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில் படகுகளை இலங்கை அரசிடம் இருந்து மீட்டு தர வேண்டும்.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்பாராத வகையில் சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடிக்கும்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ளன. காரைக்கால் மீனவர்கள் கைது செய்யப்படும்போது மத்திய வெளியுறவுத்துறை தலையீட்டின் மூலம் அவர்களை இலங்கை அரசு விடுவிக்கிறது.

    ஆனால் காரைக்கால் மீனவர்களது படகுகள் விடுவிக்கப்படவில்லை. கடந்த 2019-ம் ஆண்டு முதல் காரைக்கால் மீனவர்களது 11 படகுகளை இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளது.

    மோட்டார் பொருத்தப்பட்ட இந்த படகுகள் தலா ரூ. 1 கோடிக்கு மதிப்புள்ளவை. இதனால் மீனவர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, காரைக்கால் மீனவர்கள் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில் படகுகளை இலங்கை அரசிடம் இருந்து மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு முதலமைச்சர் ரங்கசாமி கடிதத்தில் கூறியுள்ளார்.

    ×