search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாமல்லபுரம்"

    • வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
    • சுற்றுலா பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை தொல்லியல் துறை நிர்வாகம் விதித்துள்ளது.

    உலக புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக மாமல்லபுரம் திகழ்ந்து வருகிறது. இங்கு பல்லவ மன்னர்கள் உருவாக்கிய சிற்பங்களை பார்க்க இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

    மாமல்லபுரத்தில் பாறைகளை குடைந்து அழகாக உருவாக்கப்பட்ட கடற்கரை கோவில், அர்ஜுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, ஐந்து ரதம் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கிறார்கள். மேலும் சுற்றுலா பயணிகள் கேமரா, டிரோன் ஆகியவை மூலம் புகைப்படம் மற்றும் வீடியோவும் எடுக்கிறார்கள்.புதிதாக திருமணமான தம்பதிகள், திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடிகள் கடற்கரை கோவில் வளாகத்தில் போட்டோ ஷூட் நடத்துகிறார்கள். மேலும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், ஐடி நிறுவன ஊழியர்கள் வாகனங்களில் கூட்டமாக வந்து புல்தரைகளில் அமர்ந்து அத்துமீறும் சம்பவங்கள் சமீபகாலமாக நடந்து வருகிறது.

    சில காதல் ஜோடிகள் கடற்கரை கோவிலில் அத்துமீறி ஏறி, தங்களுக்கு பிடித்தவர்களின் பெயர்களை எழுதி அலங்கோலப்படுத்தும் செயல்களிலும் ஈடுபடுகிறார்கள்.

    இதையடுத்து மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை தொல்லியல் துறை நிர்வாகம் விதித்துள்ளது. அதன்படி மாமல்லபுரத்தில் வணிக நோக்கங்களுக்காக புகைப்படம் எடுத்தல், திருமணத்துக்கு முன் போட்டோ ஷூட் எடுத்தல், விஐபி, விவிஐபி வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன.

    மேலும் வியாபாரிகள் வியாபாரம் செய்வது, காதலர்கள் சிற்பங்களின் மீது ஏறுவது, பிடித்தவர்களின் பெயர்களை எழுதுவது, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்வது, பொதுக்கூட்டம் நடத்துவது, பொது விளம்பரம் செய்வது ஆகிய செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் டிரோன் கேமரா பறக்க விடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கான நோட்டீஸ் கடற்கரை கோவில் நுழைவு தூணில் ஒட்டப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

    • சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
    • ஐந்துரதம் மற்றும் அர்ஜூனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்கள் பகுதியில் ஒளி அலங்காரம் அமைக்கப்படுகிறது.

    மாமல்லபுரம்:

    மத்திய அரசின் கலாசார அமைச்சகம் சார்பில், 75-வது சுதந்திர தினவிழாவின் ஒரு பகுதியாக, புராதன சின்னங்களை பாதுகாக்கும் வகையில் புதிய லோகோ வடிவமைக்கப்பட்டு அதை இந்தியா முழுவதும் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள 75 புராதன சின்னங்களில் டிஜிட்டல் முறையில் புரொஜக்டர் மூலம் சிற்பங்களில் ஒளி அமைக்கப்பட்டு வருகிறது.

    மாமல்லபுரத்தில் நேற்று இரவு வெண்ணெய் உருண்டைக்கல் பாறை, கடற்கரை கோவில் பகுதியில் பகுதியில் இரவு 9 மணி வரை, ஓளி அலங்காரத்துடன் டிஜிட்டல் லோகோ ஒளி அமைக்கப்பட்டது. இதை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். மேலும், வரும் நாட்களில் கடற்கரை கோவில், ஐந்துரதம் மற்றும் அர்ஜூனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்கள் பகுதியில் ஒளி அலங்காரம் அமைக்கப்படுகிறது

    • புயல் தாக்கத்தால் மாமல்லபுரத்தில் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக கனமழை பெய்தது
    • அனைத்து வழித்தடங்களில் இருந்தும் பஸ்கள் இயங்கி வருவதால் இயல்பு நிலை திரும்பி சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கி உள்ளனர்.

    "மிச்சாங்" புயல் தாக்கத்தால் மாமல்லபுரத்தில் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை இன்றி மாமல்லபுரம் புராதன சின்னம் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    தற்போது அனைத்து வழித்தடங்களில் இருந்தும் பஸ்கள் இயங்கி வருவதால் இயல்பு நிலை திரும்பி சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கி உள்ளனர். அதனால் கடற்கரை கோவில் சாலை, ஐந்துரதம், அர்ச்சுனன்தபசு, வெண்ணெய் உருண்டைக்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வைத்திருந்த சாலையோர கடைகள் திறக்கப்பட்டது.

    கடைகளின் உள்ளே மழையால் ஈரமான தொப்பி, பொம்மைகளை வியாபாரிகள் வெயிலில் காயவைத்து வருகின்றனர். பக்கிங்காம் கால்வாயில் தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கால்வாய் கரையோர தெருக்கள் மற்றும் அப்பகுதி கட்டிடங்கள் இன்னும் மழை வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன.

    • தொல்லியல்துறை ஊழியர்கள் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.
    • மழை இல்லாததால் வெள்ளம் வெளியேறி வருகிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் பகுதியில் மிச்சாங் புயல் காரணமாக பலத்த மழை கொட்டித்தீர்த்தது.

    இதனால் புராதன சின்னங்களான, கடற்கரை கோவில், அர்ச்சுனன்தபசு, ஐந்துரதம், கிருஷ்ணர் மண்டபம், முற்றுப்பெறாத பெரிய சிற்பக்காட்சி பாறை, புலிக்குகை உள்ளிட்ட பகுதிகள் மழைநீர் தேங்கியது. தொல்லியல்துறை ஊழியர்கள் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

    கிழக்கு கடற்கரை சாலையோர பக்கிங்காம் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் அருகில் உள்ள சிற்பக்கூடங்கள் நீரில் மூழ்கியது. அங்குள்ள இறால் பண்ணைகளும் மூழ்கி உள்ளன. தற்போது மழை இல்லாததால் வெள்ளம் வெளியேறி வருகிறது.

    மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிழக்கு கடற்கரைசாலையில் சமீபத்தில் நான்கு வழி சாலைக்காக போடப்பட்ட புதிய சாலை சேதமடைந்தது. இதனால் அவ்வழியே கல்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி செல்லும் அரசு பஸ்களும், தனியார் வாகனங்களும் நிறுத்தப்பட்டு இருந்தன. போர்க்கால அடிப்படையில் சாலைகள் சீரமைக்கபட்டு இன்று காலையில் இருந்து அவ்வழியே வாகனங்கள் சென்று வருகிறது.

    மாமல்லபுரத்தில் மூன்று நாட்களுக்கு பிறகு இன்று இயல்பு நிலை திரும்பி வருவதால் சுற்றுலா பயணிகள் வழக்கம் போல வரும் நிலை உருவாகி உள்ளது.

    • சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
    • சிலர் ஆர்வமாக அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    மாமல்லபுரம்:

    ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா மாகாணத்தின் சபாநாயகர் நகமோட்டா டகாஷி, சபை செயலாளர் ஒகாவா மோடோஷி மற்றும் எம்.பி.க்கள் உள்ளிட்ட 9பேர் கொண்ட குழுவினர், தமிழக அரசுடன் தொழில் சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதற்காக சென்னை வந்தனர். பின்னர் அவர்கள் மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றி பார்ப்பதற்காக சென்றனர்.

    அவர்களுக்கு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் வெங்கடேசன், சுற்றுலா அலுவலர் சக்திவேல் ஆகியோர் கழுத்தில் மாலை அணிவித்து தமிழ் பாராம்பரிய முறைப்படி மேள தாளத்துடன், புலியாட்டம், கரகாட்டம், மயிலாட்டம் என கலை நிகழ்ச்சியுடன் கடற்கரை கோவிலுக்கு அழைத்து சென்றனர். இந்த கலை நிகழ்ச்சியை ஆர்வத்துடன் பார்த்து ரசித்து அவர்களிடம் நடனமாடும் முறையை பற்றி கேட்டறிந்தனர். பின்னர் உற்சாகத்துடன் கலைஞர்களிடம் இருந்த கரகத்தை வாங்கி தலையில் வைத்து மேளதாளம் வாசிக்க கரகாட்டம் ஆடி மகிழ்ந்தனர். சில எம்.பி.க்கள் குத்தாட்டமும் போட்டனர்.

    இதை அங்கு வந்த சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். சிலர் ஆர்வமாக அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    • மாணவர்கள் புதிய அனுபவமாக நினைத்து மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
    • சிற்பங்களை தொட்டுப்பார்த்து பழமையான சிலையின் வடிவமைப்புகளை உணர்ந்தனர்.

    மாமல்லபுரம்:

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் புதிய "ஏசி வால்வோ" பஸ் சுற்றுலாவை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார். இதில் முதல் பயணமாக சென்னை பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோர் அரசு மேல்நிலை பள்ளி, தாம்பரம் காது கேளாதோர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோர் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் 80 பேரை, கல்வி சுற்றுலாவாக மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்க்க சுற்றுலாத்துறை அழைத்து வந்தது.

    அவர்களுக்கு மாற்றுத்திறனாளி கல்வி ஆசிரியர்கள் அவர்களது பாடமொழியில் சிற்பங்களை காண்பித்து அதன் சிறப்பு மற்றும் வரலாற்று விபரங்களை எடுத்து கூறினார்கள். மாணவர்கள் புதிய அனுபவமாக நினைத்து மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

    பார்வையற்றோர் பள்ளி மாணவர்கள் புராதன சின்னம் சிற்பங்கள் இருக்கும் பகுதிக்கு பாறைமேல் நடந்து சென்று அதை உணர்ந்து, சிற்பங்களை தொட்டுப்பார்த்து பழமையான சிலையின் வடிவமைப்புகளை உணர்ந்தனர். இதனை பார்த்து அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

    • பேரூராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    • தொடர்ந்து தவறுகள் நடந்தால் குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்தார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.1.15 கோடிசெலவில் நடைபெற்று வரும் புரனமைப்பு பணிகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் மாமல்லபுரம் பஸ் நிலையம், கடற்கரை சாலை மற்றும் கடலோர பகுதிகளை பார்வையிட்டு தொடங்க இருக்கும் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் குறித்து சுற்றுலாத்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, உணவுத்துறை, மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் கலெக்டர் ராகுல்நாத் கூறும்போது, மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணம் என்ற பெயரில் பல இடங்களில் அடாவடியாக வாகனங்களை நிறுத்தி வசூலிப்பதாக புகார் எழுந்து உள்ளது. நுழைவு கட்டணம் வசூலிப்பதில் அடாவடி நடந்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும்படி மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரனுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தொடர்ந்து தவறுகள் நடந்தால் குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்தார்.

    • இந்தியா முழுவதும் மத்திய தொல்லியல் துறை சார்பில் நவம்பர் 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை உலக பாரம்பரிய வாரம் கடை பிடிக்கப்படுகிறது.
    • பள்ளி மாணவர்களும் அதிக அளவில் இலவச அனுமதியை பயன்படுத்தி சுற்றுலா வந்த அவர்கள் ஆர்வமுடன் புராதன சின்னங்களை கண்டுகளித்து சென்றனர்.

    மாமல்லபுரம்:

    சர்வதேச நாடுகளில் உள்ள சரித்திர கால பாரம்பரிய கலைச்சின்னங்கள் அந்த பகுதியின் பழமை, கலாசாரம், வாழ்க்கை முறையை உணர்த்துகின்றன. அத்தகைய நினைவு சின்னங்களை வருங்கால தலைமுறையினர் அறியவும், அவற்றின் முக்கியத்துவம் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றன.

    அவற்றை பாதுகாப்பது குறித்து ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் மத்திய தொல்லியல் துறை சார்பில் நவம்பர் 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை உலக பாரம்பரிய வாரம் கடை பிடிக்கப்படுகிறது. பாரம்பரிய வாரம் நேற்று நாடு முழுவதும் தொடங்கப்பட்டது.

    பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை நேற்று ஒரு நாள் மட்டும் நுழைவுக்கட்டணம் இன்றி சுற்றுலா பயணிகள் இலவசமாக கண்டுகளிக்கலாம் என மாமல்லபுரம் தொல்லியல் துறை அறிவித்து இருந்தது.

    அதன்படி நேற்று காலை 8 மணி முதல் சுற்றுலா வந்த வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் நுழைவு கட்டணம் எடுக்காமல் கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணெய் உருண்டைக்கல், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்த்து ரசித்தனர். பள்ளி மாணவர்களும் அதிக அளவில் இலவச அனுமதியை பயன்படுத்தி சுற்றுலா வந்த அவர்கள் ஆர்வமுடன் புராதன சின்னங்களை கண்டுகளித்து சென்றனர்.

    குறிப்பாக ஜப்பான் நாட்டு சுற்றுலா பயணிகள் 50 பேர் நேற்று குழுவாக சுற்றுலா வந்தனர். அவர்கள் தலா ஒருவருக்கு ரூ.600 கட்டணம் செலுத்தாமல் இலவசமாக சுற்றி பார்த்துவிட்டு சென்றனர். இலவச அனுமதியால் அந்த ஜப்பான் நாட்டு குழுவினருக்கு மொத்தம் ரூ.30 ஆயிரம் மிச்சமானது. இலவச அனுமதியால் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

    மாமல்லபுரம் பாரம்பரிய சின்னங்களை கண்டுகளிக்க உள்நாட்டு பயணிகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.40-ம், வெளிநாட்டு பயணிகளுக்கு தலா ரூ.600-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கதாகும். நேற்று மாலை 6 மணியுடன் இலவச அனுமதி முடிவுற்றது என்றும், இன்று (திங்கட்கிழமை) முதல் வழக்கம் போல் சுற்றுலா வரும் பயணிகள் ரூ.40 நுழைவு கட்டணம் செலுத்திதான் புராதன சின்னங்களை காண முடியும் என்றும் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

    • நவம்பர் 19-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை உலக பாரம்பரிய வாரமாக அறிவித்து ஆண்டுதோறும் தொல்லியல்துறை விழாவாக நடத்தி வருகிறது.
    • மாமல்லபுரத்தில் பாரம்பரிய வாரம் துவக்க நாளான நாளை ஒருநாள் மட்டும், அனைத்து சுற்றுலா பயணிகளும் அங்குள்ள புராதன சின்னங்களை இலவசமாக பார்க்கலாம்.

    மாமல்லபுரம்:

    நவம்பர் 19-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை, உலக பாரம்பரிய வாரமாக அறிவித்து அந்த நாட்களில் புராதன சின்னங்கள் குறித்து கட்டுரை, ஓவியம் போன்ற கலைத்திறன் போட்டிகள் நடத்தி ஆண்டுதோறும் தொல்லியல்துறை விழாவாக நடத்தி வருகிறது.

    மாமல்லபுரத்தில் பாரம்பரிய வாரம் துவக்க நாளான நாளை ஒருநாள் மட்டும், அனைத்து சுற்றுலா பயணிகளும் அங்குள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டைக்கல், புலிக்குகை, ஐந்துரதம் பகுதிகளை இலவசமாக பார்க்கலாம் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

    • சுற்றுலா வளர்ச்சி கழகம் 7,736 சதுர அடி இடத்தை தேர்வு செய்து உள்ளது.
    • விரைவில் அர்ச்சுனன் தபசு பற்றியும் அதில் உள்ள சிற்பங்கள் பற்றியும் 3டி லேசர் ஒலி, ஒளி காட்சியில் ரசிக்கலாம்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள புராதன சின்னங்களை பார்த்து வியந்து செல்கிறார்கள். அர்ச்சுனன் தபசு சிற்பத்தில் உள்ள சிலைகளில் ஆன்மீக வரலாறு, இயற்கை, கால்நடைகள் மற்றும் 1,300 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர் காலத்து நிகழ்வுகள் சிற்பக்கலை மூலமாக சிலையாக செதுக்கப்பட்டு இருக்கும். இதை பார்த்து ரசிக்கவும், கதையை அறிந்து கொள்ளவும், உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டுவர்.

    இவர்களின் வசதிக்காக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அர்ச்சுனன் தபசு அருகே உள்ள தலசயன பெருமாள் கோவில் இடத்தில் ரூ.5கோடி மதிப்பீட்டில் "3டி" லேசர் ஒளி-ஒலி காட்சிக்கூடம் அமைக்க முடிவு செய்து உள்ளது. இதற்காக சுற்றுலா வளர்ச்சி கழகம் 7,736 சதுர அடி இடத்தை தேர்வு செய்து உள்ளது. எனவே விரைவில் அர்ச்சுனன் தபசு பற்றியும் அதில் உள்ள சிற்பங்கள் பற்றியும் 3டி லேசர் ஒலி, ஒளி காட்சியில் ரசிக்கலாம். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

    • பஞ்சபாண்டவர் மண்டபத்தின் மேல்பகுதியில் வலுவிழந்து விரிசல் ஏற்பட்டு உள்ளது.
    • மண்டபத்தின் மேற்பகுதியில் ஏற்பட்டு உள்ள விரிசலின் அளவு, கல்லின் தன்மை, உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இங்குள்ள புராதன சின்னங்களான ஐந்துரதம், கடற்கரை கோவில், வெண்ணை உருண்டை பகுதி, அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட இடங்களை பார்க்க தினந்தோறும் வெளிநாட்டினர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கிறார்கள்.

    இதையடுத்து புராதன சின்னங்கள் உள்ள பகுதிகளில் சுற்றுலாபயணிகளின் வசதிக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இரவு நேரத்தில் புராதன சின்னங்களை மின்விளக்கு ஒளியில் ரசிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    அர்ச்சுணன் தபசு பகுதியை பார்க்க செல்லும் சுற்றுலா பயணிகள் அதன் அருகே உள்ள பஞ்சபாண்டவர் மண்டபத்தையும் ரசிப்பது வழக்கம். இந்நிலையில் பஞ்சபாண்டவர் மண்டபத்தின் மேல்பகுதியில் வலுவிழந்து விரிசல் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே தொல்லியல்துறையினர் மண்டபத்தின் மேற்பகுதியில் அவ்வப்போது ரசாயன சிமெண்ட் கலவை வைத்து பராமரித்து வந்தனர். தற்போது விரிசல் அதிகமாகி மண்டபத்தின் உள்ளே மழைநீர் ஒழுகும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. மழை பெய்யும் போது பஞ்சபாண்டவர் மண்டபத்தில் ஒதுங்கி நிற்கும் சுற்றுலா பயணிகள் விரிசல் வழியாக வரும் மழை நீரில் வழுக்கி விழும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    இதுகுறித்து உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தொல்லியல்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். சிலர் இணையதளம் வழியாக டெல்லியில் உள்ள தொல்லியல் துறையின் தலைமை அலுவலகத்திற்கும் புகார் அனுப்பினர்.

    இதையடுத்து சென்னை தலைமை செயலக வளாகத்தில் உள்ள மத்திய தொல்லியல்துறை தொல்பொருள் ஆய்வாளர்கள், பழங்கால கட்டிட கட்டமைப்பு பாதுகாப்பு என்ஜினீயர்கள் பஞ்சபாண்டவர் மண்டபத்தில் திடீர் ஆய்வு செய்தனர். மண்டபத்தின் மேற்பகுதியில் ஏற்பட்டு உள்ள விரிசலின் அளவு, கல்லின் தன்மை, உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து விரிசலை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    • மாமல்லபுரம் சுற்றுலா வரும் பார்வையாளர்கள் அங்குள்ள கலங்கரை விளக்கம் மற்றும் கப்பல் அருங்காட்சியகத்தை பார்த்து ரசித்து செல்வது வழக்கம்.
    • மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் சுற்றுலா வரும் பார்வையாளர்கள் அங்குள்ள கலங்கரை விளக்கம் மற்றும் கப்பல் அருங்காட்சியகத்தை பார்த்து ரசித்து செல்வது வழக்கம்.

    மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கலங்கரை விளக்கம், கப்பல் அருங்காட்சியகம் இன்று முதல் பராமரிப்பு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது.

    மறு உத்தரவு வரும்வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    ×