search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்வெட்டு"

    • மின்துறை, வருவாய்த்துறை, ஊராட்சி நிர்வாகம் இடையே ஏற்பட்ட குழப்பத்தால் சீர் முடியாத நிலையில் உள்ளது.
    • மின் மோட்டார்களை இயக்க முடியாததால் நெல் வயல்கள், தென்னந்தோப்புகள் தண்ணீர் இன்றி காய்வதாக விவசாயிகளும் வேதனையுடன் தெரிவித்தனர்.

    சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால், திருப்புவனம் அருகே உள்ள தட்டான் குளம் கிராமத்தில் மின்சாரம் இன்றி பொதுமக்கள் 10 நாட்களாக இருளில் மூழ்கியுள்ளனர்.

    பலத்த காற்று மழையால் ஆல மர கிளை விழுந்து மின் வயர்கள் அறுந்து விழுந்ததால் 2 மின்கம்பங்கள் சேதம் அடைந்தது. முறிந்து விழுந்த மரக்கிளைகளை அகற்றும் செலவை யார் ஏற்பது? என மின்துறை, வருவாய்த்துறை, ஊராட்சி நிர்வாகம் இடையே ஏற்பட்ட குழப்பத்தால் சீர் முடியாத நிலையில் உள்ளது.

    இதனால், 10 நாட்களாக மின்சாரம் இல்லாததால் குடிநீர் இன்றி, தூக்கம் தொலைத்து நிற்பதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும், மின் மோட்டார்களை இயக்க முடியாததால் நெல் வயல்கள், தென்னந்தோப்புகள் தண்ணீர் இன்றி காய்வதாக விவசாயிகளும் வேதனையுடன் தெரிவித்தனர்.

    • தமிழ்நாட்டில் 17,970 மெகாவாட் அனல் மின் திட்டங்களை அடுத்த 10 ஆண்டுகளில் செயல்படுத்தப் போவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
    • மக்களுக்கு மின்சாரம் வழங்குவதில் தமிழக அரசும், மின்சார வாரியமும் தோல்வியடைந்து விட்டதையே காட்டுகிறது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களைத் தவிர்த்து, மீதமுள்ள மாவட்டங்களில் தொடர்ந்து அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், மயிலாடுதுறை, சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தினமும் ஒரு மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    தமிழ்நாட்டின் மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து 21 ஆயிரம் மெகாவாட் என்ற அளவைத் தொட்டுள்ளது. மத்திய மின் தொகுப்புகள், தனியார் மின்னுற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றிடம் இருந்து மின்சாரம் வாங்கினாலும் தினமும் 300 முதல் 400 மெகாவாட் வரை மின்சாரம் பற்றாக்குறை ஏற்படுவதாகவும், அதை சமாளிக்கவே மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது மக்களுக்கு மின்சாரம் வழங்குவதில் தமிழக அரசும், மின்சார வாரியமும் தோல்வியடைந்து விட்டதையே காட்டுகிறது.

    தமிழ்நாட்டில் 17,970 மெகாவாட் அனல் மின் திட்டங்களை அடுத்த 10 ஆண்டுகளில் செயல்படுத்தப் போவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், அதிலும் எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை. நிலுவையில் உள்ள மின்திட்டங்கள் அனைத்தும் விரைவாக செயல்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டுக்கான மின் தொகுப்பில் சேர்க்கப்பட வேண்டும். அதன் மூலம் தமிழ்நாட்டில் மின்வெட்டைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கடலூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பலத்த இடி மின்னனுடன் மழையும் பெய்து வருகின்றது.
    • மாவட்டம் முழுவதும் பரவலாக விடிய விடிய மழை பெய்தது.

    கடலூர்:

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி பகுதிகளிலும் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் தொடங்கி அக்னி நட்சத்திரம் முடியும் வரை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்த நிலையில், தற்போதும் கடலூர் மாவட்டத்தில் 100 டிகிரிக்கு மேல் வெயில் அளவு பதிவாகி கடும் பாதிப்பை ஏற்படுத்திவந்தது.

    இதற்கிடையே ஒருபுறம் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் கடலூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பலத்த இடி மின்னனுடன் மழையும் பெய்து வருகின்றது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி ,குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, விருத்தாச்சலம், சிதம்பரம், புவனகிரி காட்டுமன்னார்கோவில் ஸ்ரீமுஷ்ணம், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பரவலாக விடிய விடிய மழை பெய்தது. இந்த நிலையில் குறிஞ்சிப்பாடி, வடலூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 6 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் தூக்கமின்றி தவித்தனர்.

    கடலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே குளங்களில் தண்ணீர் நிரம்பி வருவதும் பல்வேறு பகுதிகளில் குளம் தூர்வாரும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவதையும் காண முடிகிறது. கடலூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லி மீட்டரில் பின்வருமாறு- பரங்கிப்பேட்டை - 102.4, லக்கூர் - 101.0, தொழுதூர் - 95.0, பெல்லாந்துறை - 73.0,குறிஞ்சிப்பாடி - 68.0,சிதம்பரம் - 67.0,ஸ்ரீமுஷ்ணம் - 57.3,கீழ்செருவாய் - 50.0, அண்ணாமலைநகர் - 49.2,புவனகிரி - 49.0, வேப்பூர் - 47.0, சேத்தியாதோப்பு - 43.4 காட்டுமயிலூர் - 40.0,காட்டுமன்னார்கோவில் - 34.0, லால்பேட்டை - 28.0, வடக்குத்து - 28.0, கொத்தவாச்சேரி - 22.0,மீ-மாத்தூர் - 16.0, கடலூர் - 13.2, கலெக்டர் அலுவலகம் - 11.0, விருத்தாசலம் - 10.0, பண்ருட்டி - 10.0,வானமாதேவி - 10.0, குப்பநத்தம் - 9.4 எஸ்.ஆர்.சி. குடிதாங்கி - 9.௦ கடலூர் மாவட்டத்தில் மொத்தம் - 1042.90 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.

    • மேலூரில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
    • தேவையான அளவுக்கு உயரழுத்த மின்சாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் நிம்மதியாக தூங்க முடியவில்லை. தற்போது 2நாட்களாக இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் பகல் நேரங்களிலும் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

    மேலும் பகல் நேரங்களில் மிக குறைந்த மின்னழுத்தமே பிரச்சினை ஏற்படுகிறது. வீட்டில் இயக்கப்படும் மோட்டார், பிரிட்ஜ், கிரைண்டர், மிக்ஸி, வாஷிங் மெஷின் ஆகியவை செயல்படுவதில்லை. இதனால் வெளியே செல்பவர்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாத ஒரு அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    கடை மற்றும் வீடுகளிலும் பல்புகள் அவ்வப்போது மினிட்டாம்புச்சியை மின்னுவது போல் விட்டுவிட்டு வருகிறது. இதனால் பல்புகள் செயலிழந்து விடுகிறது. எனவே மேலூர் நகர்பகுதியில் அறிவிக்காத மின்வெட்டை உடனடியாக நிறுத்த வேண்டும்.

    குறைந்த அழுத்த மின்சாரம் வருவதை சரி செய்து தேவையான அளவுக்கு உயரழுத்த மின்சாரம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி கொள்கிறது.
    • மின்வெட்டு ஏற்படுவதால் குழந்தைகள் உள்ளிட்ட பலரும் அவதிக்குள்ளாகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் வசிக்கும் பொது மக்களின் நலன் கருதி குத்தாலத்தில் அமைந்துள்ள திட்டச்சேரி துணை மின் நிலையத்திலிருந்து மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அகரக்கொந்தகையில் இருந்து வாழ்மங்கலம் செல்லும் மின் கம்பிகள் சேதமடைந்து மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் வயல் பகுதியில் காற்று வேகமாக வீசும் போது மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டு அறுந்து விழுந்து மின் வெட்டு ஏற்படுகிறது.

    மேலும் மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி கொள்வதால் அடிக்கடி மின்மாற்றில் உள்ள வயர்கள் அறுந்து விடுகிறது.இதனால் பல மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது.அவ்வாறு ஏற்படும் மின்தட்டுப்பாடு பல மணி நேரம் நீடிப்பதால் பள்ளி குழந்தைகள் உள்ளிட்ட பலரும் அவதிக்குள்ளாகின்றனர்.

    மேலும் வாழ்மங்கலம் பகுதி பொதுமக்களுக்கு பயன்பாட்டிற்கு போதிய குடிநீர் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

    இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மின்சாரம் துண்டிக்கப்பட்ட காரணத்தால் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் தூக்கமின்றி தவிப்பு.
    • பொதுமக்களின் போராட்டத்தால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிப்பு.

    தமிழகத்தில் ஆங்காங்கே அவ்வபோது மின்வெட்டு ஏற்படுவதாக புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில், சென்னைக்கு உட்பட்ட உதண்டி, பனையூர், அக்கரை, ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாள்தோறும் மின்தடை ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    இதேபோல், நேற்று இரவு 8 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் நள்ளிரவை கடந்தும் வராததால் பொது மக்கள் அவதியடைந்தனர்.

    மின்சாரம் துண்டிக்கப்பட்ட காரணத்தால் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் தூக்கமின்றி தவித்து வருகின்றனர்.

    இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பொதுமக்களின் போராட்டத்தால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. 

    • கடந்த சில வாரங்களாக ஆங்காங்கே மின்வெட்டு மக்களை வாட்டி வதைக்கிறது.
    • தொழிற்சாலைகளின் உரிமையாளர்களோ உற்பத்தி பாதிக்கப்படுவதாக புலம்புகின்றனர்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில வாரங்களாக ஆங்காங்கே மின்வெட்டு மக்களை வாட்டி வதைக்கிறது. கடந்த சில நாட்களாக ஆலந்தூரில் இரவு நேரங்களில் தொடர் மின் வெட்டு நிலவுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். அனகாபுத்தூர், பொழிச்சலூர் மற்றும் பல்லாவரம் பகுதிகளிலும் இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    திருவள்ளூர் சிட்கோ தொழிற்பேட்டையில் கடந்த இரு நாட்களாக மின்வெட்டு இருப்பதால் பல கோடி ரூபாய் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருப்பதாக தொழிற்சாலை உரிமையாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர். இந்தப் பிரச்சினை நான்கு மாதங்களாக இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    காலையில் அலுவலகத்திற்கும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் சென்று விட்டு திரும்பி வந்து வீட்டில் தூங்கலாம் என்று நினைத்தால், இரவு நேரங்களில் பல மணி நேர மின்வெட்டு ஏற்பட்டு தூக்கமே இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முதியவர்கள், நோயாளிகள், கருவுற்ற தாய்மார்கள், குழந்தைகள் ஆகியோர் இரவு மற்றும் பகலில் அவ்வப்போது ஏற்படும் மின்வெட்டு காரணமாக தவிக்கின்றனர். தொழிற்சாலைகளின் உரிமையாளர்களோ உற்பத்தி பாதிக்கப்படுவதாக புலம்புகின்றனர்.

    அம்மா ஆட்சிக் காலத்தில் மின் மிகை மாநிலமாக இருந்த தமிழகம் இன்று மின் குறை மாநிலமாக மாறியிருக்கிறது. இந்த நிலைமை நீடித்தால், அம்மா ஆட்சிக் காலத்தில் பொற்காலமாக இருந்த தமிழகம் விரைவில் கற்காலமாக மாறிவிடும் என்று எச்சரிக்கிறேன். தொழில்கள் வளர வேண்டும், தொழிலாளர்கள் வாழ வேண்டுமென்றால், தற்போது தமிழ்நாட்டில் நிலவி வரும் மின்வெட்டினை உடனே போக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிலை நீடித்தால், மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஆலங்குடியில் பகுதியில் 5 மணி நேர மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்
    • மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது.

    ஆலங்குடி:

    ஆலங்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து பொதுமக்களை வாட்டி வந்தது. மதிய நேரங்களில் பொதுமக்கள் வெயிலின் உக்கிரத்தை தாங்க முடியாமல் வீட்டுக்குள் முடங்கினர். இந்நிலையில் நேற்று இரவு திடீரென கடும் சூறாவளி காற்று வீசியது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் வாகனங்களை ஓட்ட முடியாமல் பெரும் அவதிக்குள்ளாயினர். இதனை தொடர்ந்து திடீரென மழை பெய்தது. சூறாவளி காற்றால் ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. இதனால் மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இதனால் நேற்று இரவு 7 மணி அளவில் ஆலங்குடி பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சுமார் அரை மணி நேரத்தில் மழை நின்று விட்ட நிலையில் 5 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாயினர். இதனை தொடர்ந்து சுமார் 12 மணி அளவில் மின்சாரம் மீண்டும் வந்தது.

    • நேற்று இரவு 8 மணி அளவில் லேசான மழை பெய்தது.
    • இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் வீடுகளில் இருக்கும் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி ராமநத்தம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு 8 மணி அளவில் லேசான மழை பெய்தது. இதனால் ராமநத்தம் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கபட்டது. மேலும் வாகையூரில் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் வீடுகளில் இருக்கும் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். லேசான மழை பெய்தால் இந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்து விடுகின்றனர். இதனையடுத்து அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் நாள் கணக்கில் மின்சாரம் வழங்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதுகுறித்து மின்சார துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

    • ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயல் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.
    • மின்வெட்டால் பொதுமக்கள் வீட்டுக்குள் இருக்க முடியாமல் அவதி அடைந்தனர்.

    திருநின்றவூர்:

    சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று முன்தினம் 109 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. இதனால் பெரும்பாலானவர்கள் பகல் நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்த்து வருகிறார்கள். எனினும் வீட்டுக்குள் இருக்கும்போது கூட வெப்பத்தின் தாக்கம் காரணமாக புழுக்கத்தால் மக்கள் தவிக்கிறார்கள். கடந்த 3 நாட்களாக கொளத்தூர், திரு.வி.க.நகர், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலைமறியல் மற்றும் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயல் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டுக்குள் இருக்க முடியாமல் அவதி அடைந்தனர்.

    நேற்று இரவும் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டதால் இருளில் தவித்தனர். சுமார் ஒரு மணிநேரம் முதல் 2 மணி நேரம் வரை மின்தடைக்கு பின்னர் மீண்டும் மின்வினியோகம் சீரானது.

    பட்டாபிராம், மேற்கு கோபாலபுரம் பகுதியில் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வருகிறது. மாடர்ன் சிட்டியில் நேற்று மதியம் 2 மணிக்கு தடை பட்ட மின்சாரம் இரவு 8 மணிக்கு சீரானது. இதே போல் கோபாலபுரம் பகுதியிலும் மின் வினியோகம் தடைபட்டது.

    ஆவடி பகுதியில் காமராஜர் புதிய ராணுவ சாலை, தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய குடியிருப்பு உள்ளிட்ட பல இடங்களிலும் தொடர்ந்து மின்சாரம் தடைபட்டது. இன்று காலையும் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொது மக்கள் புழுக்கத்தால் தவித்தனர். திருமுல்லைவாயல் பகுதியில் தினமும் இரண்டு மணி நேரம் தொடர் மின் தடை ஏற்படுவதாக பொது மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். மின்தடை தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது சரியான பதில் கூறுவதில்லை என்று ஆதங்கத்துடன் கூறினர்.

    இதேபோல் திருநின்றவூர் பகுதியில் தொடர் மின்வெட்டால் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் சங்க தலைவர் சாலமன் தலைமையில் வியாபாரிகள் மின்வாரிய அதிகாரியை சந்தித்து முறையிட்டனர்.

    • தொடரும் மின்வெட்டால் தேர்விற்கு படிக்கும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமம் அடைந்து உள்ளனர்.
    • கடைகளில் வியாபாரிகள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வியாபாரம் செய்யும் நிலை நீடித்து வருகிறது.

    திருவள்ளூர்:

    தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கி கடும் வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் தினமும் வெப்பத்தின் அளவு தொடர்ந்து அதிகரித்த படி இருக்கிறது. மேலும் வெயிலின் உக்கிரம் வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் வாட்டி வதைக்கிறது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை உள்ளது.

    இந்தநிலையில் திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. தினமும் பலமணி நேரம் அவ்வப்போது மின் தடை ஏற்படுவதால் வீட்டில் உள்ள நோயாளிகள், வயதானோர், குழந்தைகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இரவு நேரத்தில் தொடரும் மின்வெட்டால் தேர்விற்கு படிக்கும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமம் அடைந்து உள்ளனர். கடைகளில் வியாபாரிகள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வியாபாரம் செய்யும் நிலை நீடித்து வருகிறது. காலை முதல் இரவு வரை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை மின் தடை ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். ஊத்துக்கோட்டையில் இன்று காலை 6 மணிக்கு மின்தடை ஏற்பட்டது. பின்னர் காலை 8.30 மணிக்கு மீண்டும் மின்சாரம் வினியோகிக்கப்பட்டது.

    மீண்டும் இரவு வரை மின்தடை விட்டு விட்டு ஏற்படும் என்று அப்பகுதி மக்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர். இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, அடிக்கடி மின்தடை ஏற்படுவது குறித்து சரியான காரணத்தை அதிகாரிகள் கூறுவதில்லை. திருவள்ளூர் பகுதியில் மின்சாரம் தடையின்றி கிடைக்க மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்வெட்டு குறித்து முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்றனர்.

    இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது மின்தடைக்கான காரணத்தை கூற மறுத்துவிட்டனர்.

    • போதுமான நிலக்கரி கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது.
    • எரிவாயு மூலம் 9 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.

    புதுடெல்லி :

    கோடை காலம் தொடங்குவதால் வெயில் அதிகரித்துள்ளது. அதனால், மின்சார தேவையும் உயர்ந்துள்ளது.

    இதை கருத்தில்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க மத்திய மின்துறை மந்திரி ஆர்.கே.சிங் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. மின்சாரம், நிலக்கரி, ரெயில்வே ஆகிய அமைச்சகங்களின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

    இந்த கூட்டத்தில், கோடை காலத்தில் மின்வெட்டு இல்லாதவகையில் பார்த்துக்கொள்ளுமாறு மின் உற்பத்தி நிறுவனங்களை ஆர்.கே.சிங் கேட்டுக்கொண்டார்.

    கோடை காலத்தில் மின்சாரத்தின் தேவை அதிகரிக்கும் என்பதால், நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்குமாறு வலியுறுத்தினார்.

    மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நிலக்கரி ஒதுக்கீடு செய்வதில் ஒளிவுமறைவற்ற அணுகுமுறையை மேற்கொள்ளுமாறு மத்திய மின்சார ஆணையத்தை கேட்டுக்கொண்டார்.

    மத்திய மின்சார ஆணையத்தின் கணக்குப்படி, ஏப்ரல் மாதம், உச்சபட்ச மின்சார தேவை 229 ஜிகாவாட்டாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை பூர்த்தி செய்ய பன்முனை வியூகம் ஒன்றை மத்திய மின்துறை அமைச்சகம் வகுத்துள்ளது.

    அதன்படி, நிலக்கரியால் இயங்கும் மின்உற்பத்தி நிலையங்களில் பராமரிப்பு பணியை மேற்கொள்ளுமாறு மின்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வெளிநாட்டு இறக்குமதி நிலக்கரியை பயன்படுத்தும் மின்உற்பத்தி நிலையங்கள், இம்மாதம் 16-ந் தேதியில் இருந்து தங்களது முழுதிறனை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    போதுமான நிலக்கரி கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. நிலக்கரி கொண்டு செல்ல 418 பெட்டிகளை அளிக்க ரெயில்வே அமைச்சகம் சம்மதம் தெரிவித்துள்ளது.

    இதுதவிர, கோடை காலத்தில் ஏற்படும் அதிகபட்ச மின்சார தேவையை பூர்த்தி செய்ய எரிவாயுவை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையங்களும் களத்தில் இறக்கப்பட்டுள்ளன. எரிவாயு மூலம் 9 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். போதிய எரிவாயு வினியோகம் செய்வதாக 'கெயில்' நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

    இம்மாத இறுதியில் உற்பத்தியை தொடங்கும் புதிய நிலக்கரி மின்சார உற்பத்தி நிறுவனங்கள் மூலம் 2 ஆயிரத்து 920 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.

    இந்த நடவடிக்கைகள் மூலம், கோடைகால மின்சார தேவை பூர்த்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×