search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்"

    • தமிழக அரசு 2022-23 ம் ஆண்டுக்கான நெல்லுக்கான ஊக்க தொகையாக சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 75 ம், சன்னரக நெல்லுக்கு ரூ.100 ம் ஊக்க தொகையாக அறிவித்துள்ளது.
    • போதுமான விலை அறிவிக்காததால் தமிழக அரசு மீது விவசாயிகள் அதிருப்தியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

    திருச்சி,

    தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பூ. விஸ்வநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

    தமிழக அரசு 2022-23 ம் ஆண்டுக்கான நெல்லுக்கான ஊக்க தொகையாக சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 75 ம், சன்னரக நெல்லுக்கு ரூ.100 ம் ஊக்க தொகையாக அறிவித்துள்ளது.

    மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.100 விலை அறிவித்துள்ளது. போதுமான விலை அறிவிக்காததால் தமிழக அரசு மீது விவசாயிகள் அதிருப்தியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

    தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் நெல் குவிண்டாலுக்கு ரூ. 2500 விலை உயர்த்தி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆட்சியில் அமர்ந்த பிறகு விவசாயிகளை ஏமாற்றுகின்றனர்.

    ஒரு ஏக்கர் நெல் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரத்துக்கு மேல் செலவாகிறது. கடைசியில் விவசாயிகளுக்கு சொற்ப தொகை கிடைப்பதே சவாலாக இருக்கிறது. ஆகவே தேர்தல் வாக்குறுதிபடி நெல்லின் விலையை தமிழக அரசு உயர்த்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இன்னும் சில விவசாயிகள், கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் அறுவடை பருவம் தாண்டியும் நெற்பயிரை அறுவடை செய்யாமல் விட்டு வைத்துள்ளனர்.
    • கடந்த சில நாட்களாக இப்பகுதியில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, கோவத்தகுடி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் கோடை சாகுபடியாக நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தற்போது நெற்பயிர்கள் அறுவடை பருவத்தை எட்டியுள்ளதால் விவசாயிகள் நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணியை தொடங்கி விட்டனர்.

    கோவத்தகுடி அரசு கொள்முதல் நிலையம் இன்னும் திறக்கப்படாத நிலையில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய அரசு கொள்முதல் நிலையம் முன்பு கொட்டி வைத்து கடந்த ஒரு வார காலமாக காத்து கிடக்கின்றனர் இன்னும் சில விவசாயிகள், கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் அறுவடை பருவம் தாண்டியும் நெற்பயிரை அறுவடை செய்யாமல் விட்டு வைத்துள்ளனர். மேலும் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். விவசாயிகளின் சிரமத்தை அரசு உணர்ந்து உடனடியாக கோவத்தகுடி அரசு கொள்முதல் நிலையத்தை திறந்து, நெல் கொள்முதல் செய்யும் பணியை விரைவில் தொடங்க வேண்டுமென விவசாயிகள் அரசு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அட்மா திட்டத்தில் இயற்கை வேளாண்மை முறையில் பாரம்பரிய நெல் சாகுபடி குறித்த தொழில்நுட்ப பயிற்சி மாவட்ட அளவவில் நடைப்பெற்றது.
    • பயிற்சியில் 50 க்கும் மேலான விவசாயிகள் ஆர்வமாக கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

    ஆத்தூர்:

    ஆத்தூர் அருகே உள்ள கல்பகனூர் கிராமத்தில் அட்மா திட்டத்தில் இயற்கை வேளாண்மை முறையில் பாரம்பரிய நெல் சாகுபடி குறித்த தொழில்நுட்ப பயிற்சி மாவட்ட அளவவில் நடைப்பெற்றது. அட்மா திட்ட தலைவர் டாக்டர் செழியன் கலந்துகொண்டு தலைமை வகித்தார்.

    வேளண்மை உதவி இயக்குனர் குமாரசாமி முன்னிலை வகித்தார். அவர் கூறுகையில் தற்போது உள்ள ஆத்தூர் வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலகம் இனி தென்னங்குடிபாளையம் சேவை மையத்தில் செயல்படும் என தெரிவித்தார்.

    வேளாண்மை அலுவலர் ஜானகி வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் செயல்படும் திட்ட ங்கள் மானியங்கள் குறித்தும், வேளாண்மை விரிவாக்க மையம் இடுப்பொருட்கள் விபரம், இயற்கை முறை சாகுபடி தொழில்நுட்பங் களை பற்றி கூறினார்.

    வட்டார தொழில்நுட்ப மேலளார் சுமித்ரா, சேலம் வேளாண் அறிவியல் நிறுவனத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன், உதவி வேளாண்மை அலுவலர் பிரவீன் ஆகியோர் பேசினார்கள். பயிற்சிக்கான ஏற்பாடுகளை கல்பகனூர் துணைத் தலைவர் செல்வம், உதவி தொழில்நுட்ப மேலாளர் தமிழ்ச்செல்வி, திலகவதி ஆகியோர் செய்து இருந்தனர்.

    பயிற்சியில் 50 க்கும் மேலான விவசாயிகள் ஆர்வமாக கலந்துகொண்டு பயன்பெற்றனர். முடிவில் அனைத்து விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

    • காவிரி டெல்டா பகுதிக்கு தேவையானவிதைநெல் உற்பத்தி திருப்பூரில் நடக்கிறது.
    • 20 இடங்களில், நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டது.

    குடிமங்கலம்,

    திருப்பூர் மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டன. முதல் கட்டமாக பிப்ரவரி மாதம் முத்தூர், வெள்ளகோவில், குட்டப்பாளையம், கீரனூர், குடிமங்கலம், மடத்துக்குளம், ருத்ராபாளையம் பகுதிகளில் திறக்கப்பட்டன.அதற்கு பிறகு அலங்கியம் உட்பட தாராபுரம் தாலுகாவில் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டன.

    காவிரி டெல்டா பகுதிக்கு தேவையானவிதைநெல் உற்பத்தி திருப்பூரில் நடக்கிறது. விதை நிறுவனங்கள், விவசாயிகளிடம் இருந்து நெல்லை நேரடியாக கொள்முதல் செய்கின்றன. மற்ற நெல்லை நுகர்வோர் வாணிப கழகம் கொள்முதல் செய்கிறது.இந்தாண்டு சன்ன ரகம் நெல் கிலோ 21.65 ரூபாய், மோட்டா ரகம் 21.15 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டது .ஆன்லைன்பதிவில் சுணக்கம் ஏற்பட்டதால்விவசாயிகள்தனியார் வியாபாரிகளுக்கு கிலோ 13 முதல் 15 ரூபாய்க்கு நெல்லை வழங்கினர். ஆன்லைன் பதிவில் சுணக்கம் ஏற்பட்டதால் சில நாட்கள் காத்திருந்த பிறகே நெல் மூட்டைகளை வழங்க முடிந்தது.

    திருப்பூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் மையங்களில் போதிய மேற்கூரை வசதியில்லை. மாறாக திறந்தவெளி களத்தில் மூட்டைகள் அடுக்கப்பட்டிருந்தன. பாலிதீன் சாக்குகளால் மூடி வைத்து பாதுகாத்தனர்.அப்படியிருந்தும் எதிர்பாராத திடீர் மழையால் நெல்மூட்டைகள் நனைந்து சேதமாகின. எனவே நிரந்தரமான மேற்கூரையுடன் கூடிய கிடங்குகளை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் குணசேகரனிடம் கேட்டபோது, திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் வசதிக்கு தகுந்தபடி 20 இடங்களில், நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டது. இறுதியாக ருத்ராபாளையத்தில் இன்னும் கொள்முதல் நடந்து வருகிறது.இதுவரை21 ஆயிரத்து 102 மெட்ரிக் டன் அளவுக்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. போதிய பாலிதீன் சாக்குகளால் மூடப்பட்டிருந்ததால் மழையால் பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றார்.

    உழவர் உழைப்பாளர் கட்சியின் மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில், எதிர்பார்த்த அளவை காட்டிலும் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆன்லைன் பதிவால் காலதாமதம் ஏற்பட்டது. நெல் கொள்முதல் மையங்களில் மழையால் நெல் மூட்டைகள் சேதமாகின்றன. வேலை உறுதி திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு திட்டங்களில் கூடுதலாகநெல் மூட்டைகள் அடுக்கும் மேற்கூரையுடன் கூடிய கிடங்குகள் அமைக்கலாம். கிடங்குகள் விரைவில் நிரம்பிவிட்டால் வெட்ட வெளியில் மூட்டைகள் அடுக்கப்படுகின்றன. இந்நிலை மாற வேண்டும். ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் நெல் இருப்பு மையங்களை படிப்படியாக அமைத்து வைக்க வேண்டும்என்றார்.

    • வத்திராயிருப்பில் நெல் கொள்முதல் நிலையம் தொடக்கம் தொடங்கப்பட்டது.
    • விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    வத்திராயிருப்பு,

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசு கொள்முதல் நிலையம் உடனடியாக திறக்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுத்தனர்.

    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தாலுகா பகுதியில் கான்சாபுரம், கூமாபட்டி, வத்திராயிருப்பு, தம்பிபட்டி ஆகிய பகுதிகளில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.

    தற்போது அறுவடை செய்த நெல்லை விவசாயிகளிடம் கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

    வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்து இருந்தோம். இந்தாண்டு தொடர் மழையின் காரணமாக நல்ல விளைச்சலை சந்தித்து தற்போது நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.

    விவசாயிகளின் கோரிக்கை ஏற்று தற்போது நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் வரவேற்கிறோம். தற்போது கொள்முதல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கொள்முதல் நிலையம் தொடங்க நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×