search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229393"

    • கந்தர்வகோட்டை ஆபத் சகாயேஸ்வரர் கோவிலில் முப்பெரும் விழா நடைபெற்றது
    • விழாவை முன்னிட்டு சுவாமி அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அமராவதி உடனுறை ஆபத் சகாயேஸ்வரர் திருக்கோவிலில் திருவாசகம் முற்றோதல், முதலாம் ஆண்டு நிறைவு விழா, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் திருமேனி திருவீதி உலா மற்றும் திருமுறைகள் திருவீதி உலா ஆகிய முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.விழாவை முன்னிட்டு சுவாமி அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    கோவில் கிழக்கு கோபுரத்திலிருந்து நால்வர் திருமேனிகள் மற்றும் திருமறைகள் அடங்கிய பெட்டிகளை சிவன் அடியார்கள் தங்களின் சிரமேல் வைத்து பக்தி பெருக்குடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கைலாய வாத்தியம் முழங்க திரு வீதிஉலா நடைபெற்றது.திருவீதி உலாவின் போது சிவன் அடியார்களுக்கும், பக்தர்களுக்கும் ஆங்காங்கே பொதுமக்கள் நீர்மோர், இளநீர், பிஸ்கட் உள்ளிட்ட உணவு வழங்கினர். நிகழ்ச்சியில் சென்னை, பட்டுக்கோட்டை, திருச்சி, கந்தர்வகோட்டை சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிவனடியார்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும் கலந்து கொண்டனர்.விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கந்தர்வகோட்டை சிவனடியார்கள், பக்தர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


    • குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு விழா மற்றும் நீதிபதிக்கு பாராட்டு விழா நடைபெற்றது
    • இவ்விழாவிற்கு வக்கீல் சங்க தலைவரும் அரசு வழக்கறிஞருமான சாகுல்ஹமீது தலைமை வகித்தார்

    குளித்தலை:

    கரூர் மாவட்டம், குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சங்க ஆண்டு விழா மற்றும் பணி மாறுதலாகி செல்லும் நீதிபதி தினேஷ்குமாருக்கு பாராட்டு விழா நடைபெற்றது, இவ்விழாவிற்கு வக்கீல் சங்க தலைவரும் அரசு வழக்கறிஞருமான சாகுல்ஹமீது தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி பாலமுருகன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பிரகதீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் நாகராஜன் அனைவரையும் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சார்பு நீதிபதி சமுத்திரக்கனி வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதி குறித்து வாழ்த்துரை வழங்கினார். விழாவில் அரசு வக்கறிஞர் நீலமேகம், துணைத் தலைவர் முருகேசன், இணை செயலாளர் சரவணன், துணைத் தலைவர் சுதா மற்றும் வழக்கறிஞர்கள் மது, சந்திரசேகர், மது, பிரபு, தோகைமலை குமார், சரவணன், மேட்டு மருதூர் குமார், கார்த்திகேயன், காத்தலிங்கம், நிகில்அரவிந்த் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் மருதூர் தமிழரசன் நன்றியுரையாற்றினார்.


    • கறம்பக்குடி அருகே வெட்டன்விடுதியில் புதிய கால்நடை மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது
    • இதில் எம்.எல்.ஏ. முத்துராஜா கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் கணக்கன் காடு ஊராட்சியில் இயங்கி வந்த கால்நடை மருத்துவமனையின் கட்டிடம் பழுதான நிலையில் இருந்தது. இதனை இடித்து விட்டு புதிய கால்நடை மருத்துவமனை அமைத்து தர வேண்டும் என்று வெட்டன் விடுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமமக்கள் எம்.எல்.ஏ. முத்துராஜாவிடம் கோரிக்கை வைத்தனர்.இந்த கோரிக்கையை ஏற்ற எம்.எல்.ஏ. முத்துராஜா சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய கால்நடை மருத்துவமனை கட்டுவதற்கு உத்தரவு பிறப்பித்தார்

    . இந்த உத்தரவின் படி வெட்டன் விடுதி கிராமத்தில் ரூ.48 லட்சம் மதிப்பில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.இதில் எம்.எல்.ஏ. முத்துராஜா கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவரும் கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளருமான தவ பாஞ்சாலன், கறம்பக்குடி ஒன்றிய பெருந்தலைவர் மாலா ராஜேந்திர துரை, மாவட்டத் துணைச் செயலாளர் கருப்பையா, ஆணையர் கருணாகரன், சுப்பிரமணியன், ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • திருமானூரில் தொடக்கக்கல்வி துறையில் விருது-ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது
    • நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் பி.பரிமளம் தலைமை தாங்கினார்

    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளிக்கல்வி துறையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றும் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா வட்டார கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் பி.பரிமளம் தலைமை தாங்கினார். எஸ்.எஸ்.ஏ. மேற்பார்வையாளர் பெ.ஜெயபாரதி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர் என அனைவரையும் பாராட்டி நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினர்.

    • மாரியம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜை நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே வெண்பாவூர் வனப்பகுதியில் தண்ணீர் பந்தல் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பாலையூரை சேர்ந்த பொதுமக்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு படையல் செய்தும் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி, அலகு குத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டை வடகாட்டில் நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு முத்துமாரியம்மன் கோயில் அப்பகுதியிலுள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றாக திகழ்கிறது. இக்கோயிலின் சித்திரை திருவிழா கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை காப்புக்கட்டுதலோடு தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான வைரத்தேரோட்டம் வான வேடிக்கையுடன் நடைபெற்றது. தேரோட்ட விழாவில் வடகாடு, கொத்தமங்கலம், மாங்காடு மற்றும் அணவயல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    • விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் அருகே வெள்ளக்கரை கிராமத்தில் 60 அடி உயர கொடியேற்று விழா நடைபெற்றது.
    • விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் அருகே வெள்ளக்கரை கிராமத்தில் 60 அடி உயர கொடியேற்று விழா நடைபெற்றது.


    கடலூர்:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் அருகே வெள்ளக்கரை கிராமத்தில் 60 அடி உயர கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவிற்கு கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமை ஏற்று கட்சி கொடி ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் செந்தில், நிர்வாகிகள் கார்முகில், அஞ்சாபுலி, விஜி, சரத், ராஜன், சதா, ரஞ்சித், அருள், சுந்தரமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.




    • பொன்னமராவதி அருகே மூலங்குடி கிராமத்தில் நடைபெற்றது
    • ஏராளமான பொதுமக்கள் மீன்களை அள்ளிச்சென்றனர்

    பொன்னமராவதி,

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மூலங்குடி கிராமத்தில் உள்ள பெரிய கண்மாயில் மீன் பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மீன்பிடித் திருவிழா நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும் ஊர் ஒற்றுமைக்காகவும் நடைபெறும்.அதன்படி இந்த ஆண்டும் பொன்னமராவதி பகுதிகளில் தினசரி மீன்பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொன்னமராவதி அருகே உள்ள மூலங்குடி கிராமத்தில் உள்ள பெரியகம்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவிற்காக சுற்றுவட்டார பகுதியைச்சேர்ந்த ஆயிரக்கணக்கான கிராம மக்கள் குவிந்தனர்.பின்னர் ஊர் முக்கியஸ்தர்கள் வெள்ளை வீசி, போட்டியை தொடங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து ஒரே நேரத்தில் கிராம மக்கள் போட்டி போட்டுக் கொண்டு கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறைப்படி ஊத்தா, வலை, பரி, கச்சா ஆகியவைகளை கொண்டுலாவகமாக மீன் பிடித்தனர். ஒவ்வொருவர் கைகளுக்கும் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குறவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன. அதனை மகிழ்ச்சியுடன் மக்கள் வீட்டிற்கு அள்ளிச் சென்றனர்.

    • சிறுவளூர் அரசு உயர்நிலை பள்ளியில் நடைபெற்றது
    • பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது

    அரியலூர், 

    அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக பூமி தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், அவர் பேசும்போது, மனிதன் பேராசையால் பூமியின் இயற்கை வளம் அதிகமாக சுரண்டப்படுகிறது. உலகில் உயிர் வாழ சாதகமான சூழல் கொண்ட ஒரே கிரகம் பூமி மட்டுமே . ஆனால் சுற்று சூழல் நாளுக்கு நாள் மோசம் அடைந்து வருகிறது. பூமியை காக்க காடுகளின் பரப்பை அதிகரிக்க வேண்டும். மரங்கள் அதிகம் வளர்க்க வேண்டும் என்று அவர் பேசினார். இதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தனலட்சுமி,ரமேஷ், கோகிலா, தங்கபாண்டி, வீரபாண்டி, கபிலஷா ஆகியோர் செய்திருந்தனர்.

    • அரியலூரில் 7-ம் ஆண்டு புத்தக திருவிழாவை தொடங்கி வைத்து பேச்சு
    • புதிய, புதிய புத்தகங்களை வாங்கி படிக்க அறிவுரை

    அரியலூர்,

    அரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், தமிழ்பண்பாட்டு பேரமைப்பு, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் இணைந்து 7ஆம் ஆண்டு புத்தகத்திருவிழா தொடங்கியது.கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி வரவேற்று பேசினார், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் புத்தகதிருவிழா அரங்கினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.அப்போது அவர் கூறியதாவது,நமது மாவட்டம் சிறிய மாவட்டம். மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் புத்தகங்கள் விற்பனையாகும். மாவட்ட மக்கள் பெருமளவு திரண்டு வந்து புத்தகங்கள் வாங்க வேண்டும். நமது முதல்-அமைச்சர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அரசுப் பள்ளியில் படித்து உயர்க்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் ஒன்று தான் நான் முதல்வன் திட்டம். இது போன்றத்திட்டங்களை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.புத்தக வாசிப்பு அனைவரையும் உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்லும். மாணவர்கள், புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள வேண்டும். அதற்காக புதிய புதிய புத்தகங்களை வாங்கி படிக்க வேண்டும். நான் கலந்து கொள்ளும் புத்தக கண்காட்சிகளில் நிச்சயம் புத்தகங்களை வாங்கி வருவேன். அதுபோல, இன்றைய தினமும் புத்தகங்களை வாங்கியுள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான்அப்துல்லா, எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பா, கண்ணன், நகராட்சி தலைவர் சாந்திகலைவாணன், தமிழ்பண்பாட்டு பேரவை தலைவர் சீனிபாலகிருஷ்ணன், பொறுப்பாளர்கள் புலவர் இளங்கோ, புகழேந்தி, நல்லப்பன், ஆர்டிஓ ராமகிருஷ்ணன், தாசில்தார் கண்ணன், சந்திரசேகர், பள்ளி சரக ஆய்வாளர் பழனிசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்,நிகழ்ச்சி முடிவில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதரஇயக்க திட்ட இயக்குனர் முருகண்ணன் நன்றி கூறினார்.

    • திருச்சியில் எங்கள் முதல்வர் எங்கள் பெருமை என்ற தலைப்பில் கண்காட்சி
    • நடிகர் திலகம் பிரபு திறந்து வைத்தார்

    திருச்சி.

    திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் "எங்கள் முதல்வர் எங்கள் பெருமை" என்கிற தலைப்பில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வதுபிறந்த நாளை கொண்டாடும் வகையில் இந்த கண்காட்சியை தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு ஏற்பாடு செய்யதிருந்தார். இந்த புகைப்பட கண்காட்சியை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், பள்ளி கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் திரைப்பட நடிகர் பிரபு திறந்து வைத்து பார்வையிட்டார்.நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர்கள் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ., வைரமணி, எம்.எல்.ஏ.க்கள் இனிகோ இருதயராஜ், பழனியாண்டி, சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், கதிரவன், அப்துல் சமது, முன்னாள் எம்.எல்ஏ. அன்பில் பெரியசாமி, மாநகரச் செயலாளர்கள் மேயர் அன்பழகன், ஆணையர் வைத்திநாதன், மண்டலக்குழுத் தலைவர் மதிவாணன், துணை மேயர் திவ்யா, மாவட்ட ஊராட்சித் தலைவர் தர்மன் ராஜேந்திரன், சேர்மன் துரைராஜ்,மண்டலக்குழுத் தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்காதேவி, ஜெயநிர்மலா, தில்லைநகர் கண்ணன், பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ், இளங்கோ, நாகராஜன், கமால் முஸ்தபா, ராம்குமார், சிவா, ராஜ் முகம்மது, அ.த.த. செங்குட்டுவன், லீலா வேலு, ஸ்ரீரங்கம் ஜெயக்குமார், கருணாநிதி, கவுன்சிலர்கள் காஜாமலை விஜய், கலைச்செல்வி, ராமதாஸ், மஞ்சுளா பாலசுப்பிரமணியன், செல்வி மணி, கே.கே.கே.கார்த்திக் பந்தல் ராமு, ஆர்.சி.ராஜா, அந்தோணிசாமி, துறையூர் ஒன்றியத்திலிருந்து நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.பின்னர் நடிகர் பிரபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-நான் சிறுவயது முதல் தளபதி மு.க.ஸ்டாலினோடு பழகி வருகிறேன். அவருடைய கடின உழைப்பு என்ன என்பது எனக்கு நன்றாக தெரியும். படிப்படியாக உயர்ந்து இன்று முதல்வர் என்ற இந்த இடத்திற்கு வந்துள்ளார். இந்த புகைப்பட கண்காட்சியில் அவர் கழகத்திற்காக செய்த பணியும், அதனால் அவர் இளைஞர் அணி தலைவராகவும், மேயராகவும், இன்று முதல்வராகவும் உயர்ந்துள்ளார். அதேபோல் அவர் மக்களுக்காக எவ்வளவு பணி மற்றும் தியாகங்களை செய்துள்ளார். இந்த கண்காட்சியே அதற்கு சான்றாக உள்ளது.திருச்சி என்பது நம்ம ஊரு என எங்க அய்யா, அன்பில் தர்மலிங்கம் இவர்களோடு நான் இங்கு வாழ்ந்திருக்கிறேன், வளர்ந்திருக்கிறேன். திருச்சியில் இருக்கக்கூடிய இடங்கள், அநேக தெருக்கள் பரிச்சயமானது. எனக்கு மாட்டு வண்டியில் ஊரை சுற்றிய பகுதிகள்தான் ஞாபகம் வருகிறது.இதுமட்டுமின்றி எனக்கு இந்த ஊரில் நிறைய உறவினர்கள், நண்பர்கள் இருக்கிறார்கள். எங்க ஐயா சொல்வது உறவினர்கள் எவ்வளவு முக்கியமோ, அதற்கு இணையாக நண்பர்களும் முக்கியம் என்று கூறுவார். எங்கள் அண்ணன் மு.க.ஸ்டாலின் இன்று எப்படி தமிழக மக்களுக்கு பல நன்மைகளை தொடர்ந்து செய்து வருகிறாரோ, அதேபோல் இனிவரும் கூடிய காலங்களிலும் செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.அவருடைய உடல் நலம் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் என்று எங்களுடைய ஐயாவிடமும், டாக்டர் கலைஞரிடமும் வேண்டிக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.பாலக்கரையில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ஒரு சிலை திறப்பது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், எங்கள் அண்ணன் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் இருக்கிறார்கள். அந்த சிலை திறப்பதில் ஒரு சில அடிப்படை பிரச்சினைகள் இருப்பதால் விரைவில் அவர்கள் அதை திறந்து வைப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.

    • ஆலங்குடியில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது
    • குரு பகவான் ஒவ்வொரு ராசியிலும் ஓராண்டு காலம் அமர்ந்து அருள் பாலித்து வருவார்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இரண்டாவது குரு ஸ்தலமாக விளங்கும் நாமபுரீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது. குரு பகவான் ஒவ்வொரு ராசியிலும் ஓராண்டு காலம் அமர்ந்து அருள் பாலித்து வருவார். ஒரு ஆண்டு முடிந்து அடுத்த ஆண்டு அடுத்த ராசிக்கு பெயர்ந்து செல்வது குரு பெயர்ச்சி என்று வணங்கப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு ராசியிலும் குரு பகவான் பெயர்ச்சி அடையும் நிலையில் ஒவ்வொரு ராசியை சேர்ந்தவர்களுக்கும் பலவிதமான பயன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இந்த ஆண்டு நேற்று இரவு 11.27 மணிக்கு குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ந்து சென்றார். இதனைத் தொடர்ந்து நாமபுரீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழாவினையொட்டி குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, சந்தன காப்பு அலங்காரம் சாத்தப்பட்டு, சிறப்பு கூட்டு வழிபாடு நடைபெற்றது. இதில் ஆலங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


    ×