search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229890"

    • அன்னைக்கு ஒன்பது விதமான ஆபரண-அலங்காரங்கள், நிவேதனங்கள் என்று செய்து அவளருளை வேண்டிப் பிரார்த்திக்கிறாராம்.
    • விரதத்தை பக்தி-சிரத்தையுடன் கடைப்பிடிப்பவன் வாழ்வில் வறுமை நீங்கி சகல சம்பத்துக்களையும் பெற்று வாழலாம் என்று கூறுகிறார்.

    நவராத்திரி விரதமும் புராண கதைகளும்நவராத்திரி என்பது சாதாரணமாக ஆவணி கடைசி அல்லது புரட்டாசியில் வருவது மட்டுமே நமக்கு தெரியும். ஆனால் அம்பிகையை வழிபட நான்கு நவராத்திரிகள் உண்டென்பது தெரியுமா?. புரட்டாசியில் வரும் சரன் நவராத்ரி என்று பெயர். இது போலவே வசந்த காலத்தில் ராம நவமிக்கு முன் வருவது வசந்த நவராத்த்ரி என்பர். இது போலவே மற்ற இரு ருதுக்களிலும் நவராத்ரி உண்டு. அது பற்றி பின்னர் வேறு இடுகையில் காணலாம். இன்று நாம் காண இருப்பது புராணங்களில் பலரால் செய்யப்பட்ட நவராத்திரி விரதங்களும் அதன் பலனாக அவர்கள் அடைந்தவைகளும் மட்டுமே. கீழே கூறப்பட்டுள்ள சம்பவங்கள் தேவி பாகவதத்தில் வேத வியாசர் கூறியவை.

    இராமாயணத்தில் நவராத்ரி:

    வனவாசத்தில் சீதா தேவியை இழந்த ராமர் சுக்ரீவனுடன் ஏற்பட்ட தொடர்பில் சுக்ரீவனது உதவியை நாடி, அவனுக்காக வாலியை வதம் செய்கிறார், பின்னர் சுக்ரீவனுக்கு அரசுப்பட்டத்தை அளிக்கிறார். அவ்வாறு அரசுரிமை பெற்ற சுக்ரீவன் ராமனுக்கு செய்ய வேண்டிய உதவியினை மறந்து சுக போகங்களில் மூழ்கிவிடுகிறான். அப்போது ராமர் வருந்தியிருக்கையில் அங்கு வந்த நாரதர் ராமனது கலக்கத்தை போக்கும் விதமாக அவனிடத்திலே தேவியின் நவராத்ரி விரதத்தை கடைபிடித்து வெற்றியை கைப்பற்ற கூறுகிறார். ராமனோ, தானிருப்பதோ கானகம், அங்கே எப்படி இம்மாதிரி விரதம்/விழா போன்றவற்றை கடைபிடிக்க இயலும் என்று கேட்க, நாரதர் 'வன்ய நவராத்ரி' பற்றி கூறி அதனை கடைபிடிக்க கூறுகிறார். வனத்தில் இருக்கும் மூலிகைகளைக் கொண்டு செய்வது வன்ய நவராத்திரி என்று பெயர். கூறியதுடன் நில்லாத நாரதர், தாமே முன்னிருந்து அவ்விரத பூஜைகளை ராமனுக்கு செய்து கொடுக்கிறார். இந்த நவராத்திரி விரத பலனே ராமனுக்கு ஊக்கம் அளித்ததாம். இதன் பிறகே லக்ஷ்மணனை அனுப்பி சுக்ரீவனுக்கு தனது நிலையினை எடுத்துரைக்க வைத்து அவனது முயற்சியை பெறுகிறார் என்று கூறப்பட்டிருக்கிறது.

    மஹாபாரதத்தில் நவராத்ரி:

    சியமந்தக மணியினை திருடியதாக ஸ்ரீ கிருஷ்ணர் மீது குற்றம் சாட்டப்பட்ட போது கிருஷ்ணர் அந்த மணியினை மீட்பதற்காக காட்டில் இருக்கும் ஜாம்பவானுடன் போருக்குச் செல்கிறார். அப்போது கிருஷ்ணனின் தந்தையான வசுதேவர் தமது மகனது முயற்சி வெற்றியடைய நவராத்திரி விரதத்தைக் கடைப்பிடிக்கிறார். ஒன்பது நாட்களிலும் அன்னைக்கு ஒன்பது விதமான ஆபரண-அலங்காரங்கள், நிவேதனங்கள் என்று செய்து அவளருளை வேண்டிப் பிரார்த்திக்கிறாராம். அவற்றின் பலனாக கிருஷ்ணன் ஜாம்பவானை வென்று சியமந்தக மணியினை திரும்ப பெற்றதுடன் இல்லாது ஜாம்பவானின் புத்ரியான ஜாம்பவதியை திருமணமும் செய்து கொள்கிறார். மீட்ட சமந்தக மணியின் உரிமையாளரான சத்ரஜித்திடம் அதை ஒப்படைக்கையில் அவனும் தமது தவறை உணர்ந்து தனது மகளான சத்ய பாமாவை கிருஷ்ணருக்கு மணம் செய்விக்கிறான். இதெல்லாம் நவராத்ரி விரதத்தை ஆரம்பித்த வசுதேவர் அதை முடிக்கும் 9 தினங்களுக்குள்ளாக நடந்ததாகவும், கிருஷ்ணர் திரும்புகையில் விஜய தசமி கொண்டாடப்பட்டதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

    சுசீலனது கதை:

    முன்னொரு காலத்தில் கோசல தேசத்தில் சுசீலன் என்று ஒரு வியாபாரி இருந்தான். அவன் தனது வியாபாரத்தில் பெரும் நஷ்டத்தை அடைந்து வறுமையால் வருந்தினான். அவன் குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு உணவளிக்கவும் இயலாது இருக்கும் காலத்தில் கூட அவன் கர்மானுஷ்டானங்களை விடாது செய்து வந்தான். வறுமையால் வரும் அசுயை, சபலம் போன்றவை நெருங்காது தர்ம சிந்தனையுடன் இருந்தான். ஒருநாள் தமது குடும்பம் உண்ண எப்பொருளையும் சம்பாதிக்க இயலாத நிலையில் இருக்கையில் ஒரு அந்தணனை காண நேர்கிறது. அப்போது சுசீலன் அந்த அந்தணரிடம் தனது குறைகளைச் சொல்லி தமது குடும்பத்துக்கு உணவு பற்றாக்குறை தீரவும், திருமண வயதை நெருங்கும் தனது பெண் குழந்தைக்கு காலத்தே விவாஹம் நடக்கவும் ஏதேனும் விரதம், பூஜை, தவம் போன்றவை இருக்கிறதா என்று அறிய விரும்புவதாக கூறுகிறான். அப்போது அந்தணர் அவனுக்கு நவராத்திரி விரதத்தைப் பற்றிச் சொல்கிறார். இவ்விரதத்தை பக்தி-சிரத்தையுடன் கடைப்பிடிப்பவன் வாழ்வில் வறுமை நீங்கி சகல சம்பத்துக்களையும் பெற்று வாழலாம் என்று கூறுகிறார். சுசீலனும் அவ்வாறே பக்தி சிரத்தையுடன் நவராத்திரி விரதமிருந்து ஒன்பதாம் நாள் அன்னையின் தரிசனம் கிடக்கப் பெற்று அவனுக்கு தீர்க்க ஆயுளும், சகல-சம்பத்துக்களையும் அருளினாள்.

    நவராத்திரியில் ஒன்பது தினங்களும் பூஜிக்க வேண்டிய அன்னையின் சக்திகள் பின்வருமாறு:

    குமாரி, திரிமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளிகா, சண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்திரா. இவர்களைப் பூஜிக்கையில் இந்த சக்திகளுக்கு மூலகாரணியான பராம்பிகையை உரிய தியான ஸ்லோகங்களால் தியானித்து பின்னர் பூஜை, ஜபம், ஹோமம் போன்றவற்றை இந்த சக்திகளுக்குச் செய்யவேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த 9 சக்திகளின் தியான ஸ்லோகத்தையும் அதன் பொருளுடனும் இப்பதிவினை நிறைவு செய்வோம். 

    • நவம் என்பது ஒன்பது. நவராத்திரி என்பது விரமிருந்து வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.
    • இலட்சுமி தேவி செல்வத்தின் தெய்வம். மலரின் மென்மையுடன் அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள்.

    சக்தி வழிபாட்டுகுரிய விரதங்களில் வெள்ளிக்கிழமை விரதம், பௌர்ணமி விரதம், நவராத்திரி விரதம் என்பன மிகவும் முக்கியமானவை. சிவனை வழிபடத் தகுந்த ஒரு ராத்திரி சிவராத்திரி. சக்தியை வழிபடத் தகுந்த ஒன்பது ராத்திரி நவராத்திரி. நவம் என்பது ஒன்பது. நவராத்திரி என்பது விரமிருந்து வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதனால் இந்த விழா வீடு என்ற கோயிலுக்கு ஒரு'பிரம்மோற்சவம்' என்றும் கூறப்படுகிறது. அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாளும், அவற்றுள் முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாதான்.

    சாரதா நவராத்திரி

    ஆண்டிற்கு நான்கு நவராத்திரிகள் உண்டு . சக்தியைச் சித்திரை மாதத்தில் வழிபடுவது வசந்த நவராத்திரி எனப்படும். ஆஷாட நவராத்திரி ஆடி மாதத்தில் வரும் நவராத்திரியாகும். புரட்டாசி மாதத்தில் வழிபடுவது பாத்ரபத நவராத்திரி அல்லது சாரதா நவராத்திரி எனப்படும். புரட்டாசி மாதம் அமாவாசை அடுத்த நாள் வரும் நவராத்திரியை எல்லோரும் கொண்டாடுகிறார்கள். புரட்டாசி மாதத்தின் வளர் பிறையில் பிரதமை திதியில் ஆரம்பித்து ஒன்பது திதியுடன் பத்தாவது திதியான தசமி திதியுடன் நிறைவுபெறுகிறது நவராத்திரி விழா. நவராத்திரி விழா இரவு நேரத்தில் தான் பூஜை செய்யப்படும். இந்த பூஜை தேவர்கள் செய்யப்படுவதாக கருதப்பட்டு இரவில் நாவராத்திரியை வழிபடுவார்கள். புரட்டாசி மாதத்தில் சரத்காலம் என்று கூறுவர். இந்த சரத்காலத்தில் வரும் நவராத்திரியை சாரதா நவராத்திரி சிறப்பாக கொண்டாடுவார்கள். இந்த ஒன்பது நாட்களுடன் ஒரு நாளைச் கூடுதலாகச் சேர்த்து தசராவாகக் கொண்டாடப்படுகிறது. மைசூரிலுள்ள சாமுண்டேஸ்வரி அம்பிகைக்கு தசராவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வங்காளத்தில் துர்க்கா பூஜை என்ற பெயரோடு கொண்டாடுகிறார்கள்.

    கன்னியர்கள் வழிபாடு

    நவராத்திரி வழிபாடு பெண்களுக்கே உரியது. எல்லா வயதுடைய, பருவத்தைச் சார்ந்த பெண்கள் நவராத்திரி வழிபாட்டில் ஈடுபடலாம். நவராத்திரி வழிபாட்டால் பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சியின் பயன். கன்னிகள் பெறுவது திருமணப் பயன். சுமங்கலிகள் பெறுவது மாங்கலயப் பயன். மூத்த சுமங்கலிகள் பெறுவது மனமகிழ்ச்சி, மன நிறைவு; எல்லோரும் பெறுவது பரிபூரண திருப்தி. நவராத்திரியில் கன்னி வழிபாடு என்பது ஒரு வகை. நவராத்திரியின் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கன்னியை ஒவ்வொரு தேவியாக பாவனை செய்து வழிபடுவது ஒரு முறை. இதனால், நவராத்திரி வழிபாட்டில் மிகப் பலகன்னியர்களும், அவர்களின் குடும்பத்தாரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவ்வாறு வழிபாட்டில் பலர் பங்கேற்பது என்பது நவராத்திரியின் விழாவின் குறிக்கோள்களில் ஒன்றாகும்.

    கொலுவைத்து கொண்டாட்டம்

    நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பல வித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதே. ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களுக் கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றாள்.

    நவசக்திகளுக்கான வழிபாடு

    புரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமையில் தொடங்கி விஜயதசமியில் நவராத்திரி முடிகிறது. முதல் ஒன்பது நாட்களில் முப்பெரும் தேவியரை வழிபடவேண்டும். முதல் மூன்று நாட்கள் துர்க்கையின் வழிபாடு. நடுவில் உள்ள மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு. கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு. முப்பெரும் சக்திகளில், ஒவ்வொரு சக்திக்கும் மும்மூன்று அம்சங்கள் உள்ளன. துர்க்கை: 1. மகேசுவரி, 2. கௌமாரி , 3. வராகி. இலட்சுமி: 4. மாகலெட்சுமி 5. வைஷ்ணவி 6. இந்திராணி. சரஸ்வதி : 7. சரஸ்வதி 8. நாரசிம்மி , 9. சாமுண்டி. நவராத்திரியின் போது இந்த ஒன்பது தேவியர்களையும் முறையாக வழிபடுகிறோம். ஒரு தேவியை முதன்மையாகவும், மற்றவர்களைப் பரிவார தெய்வங்களாகவும் கொள்ளவேண்டும்.

    வீரம் தரும் துர்க்கை

    துர்க்கையானவள் வீரத்தின் தெய்வம். வீரர்களின் தொடக்கத்திலும், முடிவிலும் வழிப்படும் தெய்வம் இவள் நெருப்பின் அழகுடன் ஆவேசப் பார்வை கொண்டவள் சிவபிரியையான துர்க்கை இச்சா சக்தி. கொற்றவைஎன்றும் காளி என்றும் குறிப்பிடுவர். வன துர்க்கை, சூலினி துர்க்கை , ஜாதவே தோதுர்க்கை, ஜ்வாலா துர்க்கை, சாந்தி துர்க்கை சபரி துர்க்கை, தீப் துர்க்கை, சூரி துர்க்கை லவண துர்க்கை இவர்கள் துர்க்கையின் அம்சங்கள்.

    செல்வம் தரும் லட்சுமி

    இலட்சுமி தேவி செல்வத்தின் தெய்வம். மலரின் மென்மையுடன் அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள். இவள் விஷ்ணு பிரியை, கிரியா சக்தி. இலட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருக்கிறாள். இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது. முக்கியமாக, இவள் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள். இவளுக்குத் தனிக் கோயில் இருக்குமிடம் திருப்பதியிலுள்ள திருச்சானூர். அஷ்ட இலட்சுமியாக அருள் பாலிக்கிறாள் ஆதி லட்சுமி, மாக இலட்சுமி, தன இலட்சுமி, தானிய இலட்சுமி, சந்தான இலட்சுமி, வீர இலட்சுமி, விஜய இலட்சுமி , கஜ இலட்சுமி . இவர்கள் இலட்சுமியின் அம்சங்கள்.

    சகல வித்தை தரும் சரஸ்வதி

    சரஸ்வதி தேவி கல்வியின் தெய்வம். இவள் அமைதிப் பார்வையுடன் வைரத்தின் அழகுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள்.. பிரம்பிரியை. ஞான சக்தி. நவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில் மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும்போது, சரஸ்வதியை வாகனம் செய்வது முறையாகும். இது தேவியின் அவதார நாள். சரஸ்வதி பூஜை சிரவணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவு பெறுகிறது. ஆயுதபூஜையாகவும் கொண்டாடுகின்றனர். சமுதாயத்தில் தொழில் , புலமை என்ற இரண்டே பிரிவுகளில் அடங்குகிறது. ஒன்று புலமை ஞானம், இரண்டு தொழில் ஞானம். புலமை பெறுவதும் ஒரு தொழில்தான், இது ஞானத்துடன் தொடர்புடையது. எனவே, ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியைப் பூஜிப்பது சரஸ்வதி பூஜை. சரஸ்வதி தேவியும் வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதி என அஷ்ட சரஸ்வதியாக போற்றப்படுகிறாள்.

    விஜயதசமி

    நவராத்திரியின் எட்டாம் நாளை மகா அஷ்டமி அதாவது துர்க்காஷ்டமி என்றும், ஒன்பதாம் நாளை மகா நவமி என்றும் குறிப்பிடுவது வழக்கம். இவை மேலான நாட்களாகும். ஒன்பது நாட்கள் மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி, பத்தாம் நாள் அவனை அம்பெய்து வதம் செய்தாள். இந்நாளே விஜயதசமி - வெற்றி தருகிற நாள். பல குழந்தைகள் கல்வியினை இன்றுதான் ஆரம்பிப்பார்கள். இன்று தொடங்கும் அனைத்துநற்காரியங்களும் வெற்றி தரும் என்பது நம்பிக்கை. வால்மீகி இராமாயணத்தில் புரட்டாசியில் வரும் தசமி (விஜய தசமி) அன்று இராமன், இராவணனுடன் போர் செய்ய உகந்த நாள் என்று அன்று போருக்கு புறப்பட்டதாக இருக்கிறது. பத்தாவது நாளான விஐயதசமி அன்று புதிய கல்வி கற்பதைத் தொடங்குவார்கள். பாண்டவர்கள் அஞ்ஞானவாசம் முடிந்து அர்ச்சுனன்தான் ஒரு ஆண்டு காலமாக கட்டி வைத்திருந்த யுதங்களை எல்லாம் விஜய தசமி அன்று மீண்டும் எடுத்து உயிர்ப்பித்துகொண்டான்.

    • புரட்டாசி சனி விரதம் இருந்து பெருமாளை தரிசிப்பதை மிகப் பெரும் புண்ணியமாகக் கருதுகிறார்கள் பக்தர்கள்.
    • புரட்டாசி வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழா, மங்கையர் விழா.

    தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் புரட்டாசிக்கு தனி மகிமை உண்டு. இது, மகா விஷ்ணுவுக்கு உகந்த மாதம். ஒவ்வொரு மாதத்திலும் விரத நாட்கள் இருக்கின்றன. ஆனால் புரட்டாசியோ விரதத்துக்காகவே அமைந்த மாதம்.

    திருப்பதி, திருவரங்கம் உள்ளிட்ட கோயில்கள் மட்டுமின்றி அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் புரட்டாசித் திருவிழா, சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகளுடன் அமர்க்களப்படும். புரட்டாசி சனிக்கிழமைகளில் கருட வாகனத்தில் பெருமாள் பவனி வருவதே கொள்ளை அழகுதான். புரட்டாசி சனி விரதம் இருந்து பெருமாளை தரிசிப்பதை மிகப் பெரும் புண்ணியமாகக் கருதுகிறார்கள் பக்தர்கள்.

    புரட்டாசிக்கு மேலும் மகிமை சேர்ப்பது, நவராத்திரி விரதம். புரட்டாசி வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழா, மங்கையர் விழா.

    விக்ரக ரூபமாக எல்லோருக்கும் அருள் புரிய நாராயணன் திருமலையில் கோவில் கொண்டான். ஆதிசேஷனை மலையாக வளரும்படி செய்து, அதில் சேஷகிரி வாசனாக ஸ்ரீனிவாசனாக நின்ற கோலத்தில் அருள்புரிகிறான். நின்ற கோலம் ஏன் என்றால், அடி முதல் முடி வரை நாம் தரிசித்து மகிழத்தான் நம் பாவம் போக்கும் தரிசனம் அது. அப்படிப்பட்ட திருவேங்கடவன் பூமிக்கு வந்து உதித்த மாதம் புரட்டாசி.

    நவராத்திரி செப்டம்பர் மாதம் 28 ம் தேதி தொடங்குகிறது. அக்டோபர் 5ம் தேதி சரஸ்வதி பூஜையும் [ஆயுதபூஜை என்றும் அழைப்பார்கள்], 6ம் தேதி விஜயதசமியும் கொண்டாடப் படுகிறது.இந்த பத்து நாட்களும், கொலு வைத்து, அக்கம் பக்கத்தார் அனைவரையும் அழைத்து உபசரித்து, வெற்றிலைப் பாக்கு, பரிசுப் பொருட்கள் கொடுத்து அனுப்புவது வழக்கம்.

    நவராத்திரி என்றாலே, நம் நினைவுக்கு முதலில் வருவது சுண்டல்தான்.

    தினம் ஒரு சுண்டல் செய்து, அனைவருக்கும் அளித்து மகிழுங்கள்.

    சுண்டல் குறிப்பு:

    தேவையானப்பொருட்கள்:

    *பச்சை அல்லது வெள்ளை பட்டாணி - ஒரு கப்

    *இஞ்சி - பச்சை மிளகாய் விழுது - குறிப்பில் உள்ளவாறு

    *கடுகு - ஒரு தேக்கரண்டி

    *கறிவேப்பிலை - ஒரு கொத்து

    *பெருங்காயப்பொடி - ஒரு சிட்டிகை

    *உப்பு - தேவைக்கேற்ப

    *மாங்காய் (பொடியாக நறுக்கினது) - 2 மேசைக்கரண்டி

    செய்முறை:

    பச்சை பட்டாணியை குறிப்பில் உள்ள முறையில் ஊற வைத்து எடுத்து, ப்ரஷர் பானில் ஒரு விசில் வரை வேக வைத்து, வடித்து எடுத்துக் கொள்ளவும்.பயறில் இஞ்சி பச்சை மிளகாய் விழுதைச் சிறிது நேரம் பிசறி வைக்கவும்.வாணலியில் தாளிக்க எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயப் பொடி போட்டுத் தாளித்து, பிசறி வைத்திருக்கும் பயறையும், உப்பையும் போட்டு கிளறி இறக்கவும்.இறக்கினவுடன் மாங்காயையும், கொத்தமல்லியையும் சேர்த்துக் கலக்கவும்.

    குறிப்பு:

    கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு முதலியவற்றைத் தவிர மற்ற பயறுகள் அனைத்தையும், ஒரு கப் பயறுக்கு அரை தேக்கரண்டி சமையல் சோடா என்ற அளவில் போட்டு குறைந்தது 10 மணி நேரம் ஊற வைக்கவும். வேகவைப்பதற்கு முன்பு, நன்கு சோடா போகக் கழுவி விட்டு, பயறு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு ப்ரஷர் குக்கரில் வேகவிடவும். ஒரு அங்குல இஞ்சித்துண்டு, 4 பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து விழுதாக அரைத்து வெந்த பயற்றில் சிறிது நேரம் பிசறி வைத்து விட்டுத் தாளித்துக் கிளறினால், வாயு உபத்திரவம் இருக்காது. ருசியாகவும் இருக்கும்.

    • 2 வயது சிறுமியை குமாரி அவதாரத்தில் வணங்க வேண்டும்.
    • 9 நாட்களும் இதன்படி பூஜைகள் செய்தால் அளவற்ற பலன்களை பெறலாம்.

    பராசக்தி நவராத்திரியை முன்னிட்டு மூன்று சக்திகளாக 9 நாட்களும் எந்தெந்த வடிவில் நமக்கு காட்சித் தருகிறார்கள்? அவர்களை எப்படி வணங்க வேண்டும்? என்ன நைவேத்தியம் செய்ய வேண்டும்? அதனால் என்ன பலன் கிடைக்கும்? என்பன போன்றவற்றை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். "மாலைமலர்" வாசகர்களுக்காகவே நவராத்திரி 9 நாட்கள் வழிபாட்டை தொகுத்து கொடுத்துள்ளோம். 9 நாட்களும் இதன்படி பூஜைகள் செய்தால் அளவற்ற பலன்களை பெறலாம்.

    1-வது நாள்

    வடிவம்: மகேஸ்வரி (மது கைடவர் என்ற அசுரனை அழித்தவள்)

    பூஜை : 2 வயது சிறுமியை குமாரி அவதாரத்தில் வணங்க வேண்டும்.

    திதி : பிரதமை

    கோலம் : அரிசி மாவால் பொட்டுக் கோலம் போட வேண்டும்.

    பூக்கள் : மல்லிகை, சிவப்பு நிற அரளி, வில்வ பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    நைவேத்தியம் : வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, சுண்டல், பருப்பு வடை.

    ராகம் : தோடி ராகத்தில் பாட வேண்டும்.

    பலன் : வறுமை நீங்கும், வாழ்நாள் பெருகும்.

    2-வது நாள்

    வடிவம் : ராஜராஜேஸ்வரி (மகிஷனை வதம் செய்ய புறப்படுபவள்)

    பூஜை : 3 வயது சிறுமியை கவுமாரி வடிவமாக வணங்க வேண்டும்.

    திதி : துவிதியை

    பூக்கள் : முல்லை, துளசி, மஞ்சள்நிற கொன்றை, சாமந்தி, நீல சம்பங்கி பூக்களால் பூஜிக்க வேண்டும்.

    நைவேத்தியம் : புளியோதரை, எள் பாயாசம், தயிர்வடை, வேர்க்கடலை சுண்டல், எள் சாதம்.

    ராகம் : கல்யாணி ராகத்தில் கீர்த்தனைகள் பாடலாம்.

    கோலம் : மாவினால் கோலம் போட வேண்டும்.

    பலன் : நோய்கள் நீங்கும், உடல் ஆரோக்கியம் பெருகும்.

    3-வது நாள்

    வடிவம் : வாராகி (மகிஷனை அழித்தவள்)

    பூஜை : 4 வயது சிறுமியை கல்யாணி வேடத்தில் பூஜித்து வணங்க வேண்டும்.

    திதி : திருதியை

    கோலம் : மலர் கோலம் போட வேண்டும்.

    பூக்கள் : செண்பக மொட்டு, குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    நைவேத்தியம் : கோதுமை சர்க்கரை பொங்கல், காராமணி சுண்டல்.

    ராகம் : பாட வேண்டிய ராகம் காம்போதி.

    பலன் : தனதான்யம் பெருகும் வாழ்வு சிறப்பாக அமையும்.

    4-வது நாள்

    வடிவம் : மகாலட்சுமி (சிங் காசனத்தில் வெற்றி திருக் கோலம்)

    பூஜை : 5 வயது சிறுமிக்கு ரோகிணி வேடத்தில் பூஜிக்க வேண்டும்.

    திதி : சதுர்த்தி

    கோலம் : அட்சதை கொண்டு படிக்கட்டு போல கோலமிட வேண்டும்.

    பூக்கள் : செந்தாமரை, ரோஜா பூக் களால் அர்ச்சிக்க வேண்டும்.

    நைவேத்தியம் : தயிர் சாதம், அவல் கேசரி, பால் பாயாசம், கற்கண்டு பொங்கல், கதம்ப சாதம், உளுந்துவடை, பட்டாணி சுண்டல்.

    ராகம் : பைரவி ராகத்தில் பாடலாம்.

    மாலை : கஸ்தூரி மஞ்சள், முத்து போன்றவற்றால் மாலை செய்து போடலாம்.

    பலன் : கடன் தொல்லை தீரும்.

    5-வது நாள்

    வடிவம் : மோகினி (சும்ப நிசும்பனின் தூதர்கள் தூது போன நாள்)

    பூஜை : 6 வயது சிறுமியை வைஷ்ணவி வேடத்தில் பூஜிக்க வேண்டும்.

    திதி : பஞ்சமி

    கோலம் : கடலை மாவால் பறவை கோலம் போட வேண்டும். வாசனை தைலத்தால் அலங்கரிக்க வேண்டும்.

    பூக்கள் : கதம்பம், மனோரஞ்சிதம் பூக்களால் பூஜிக்க வேண்டும்.

    நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல், கடலை பருப்பு வடை, பாயாசம், தயிர் சாதம், பால் சாதம், பூம்பருப்பு சுண்டல்.

    ராகம் : பஞ்சமாவரணை கீர்த்தனைகள் பாட வேண்டும். பந்துவராளி ராகமும் பாடலாம்.

    பலன் : நாம் விரும்பும் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.

    6-வது நாள்

    வடிவம் : சண்டிகாதேவி (சர்ப ராஜ ஆசனத்தில் அமர்ந்திருக்கும் கோலம்) பூஜை : 7 வயது சிறுமியை இந்திராணி, காளிகாவாக நினைத்து பூஜிக்க வேண் டும்.

    திதி : சஷ்டி.

    கோலம் : கடலை மாவினால் தேவி நாமதத்தை கோலமிட வேண்டும்.

    பூக்கள் : பாரிஜாதம், விபூதிப் பச்சை, செம்பருத்தி, சம்பங்கி, கொங்கம்.

    நைவேத்தியம் : தேங்காய் சாதம், தோங்காய் பால்பாயாசம், ஆரஞ்சு பழம், மாதூளை, பச்சைப்பயறு சுண்டல், கதம்ப சாதம்.

    ராகம் : நீலாம்பரி ராகத்தில் பாடலாம்.

    பலன் : வழக்குகளில் வெற்றி உண்டாகும். கவலைகள் நீங்கி பொருட்கள் சேரும்.

    7-வது நாள்

    வடிவம் : சாம்பவித் துர்க்கை (பொற்பீடத்தில் ஒரு பாதம் தாமரை மலரில் இருக்க வீணை வாசிக்கும் தோற்றம்)

    பூஜை : 8 வயது சிறுமியை பிராக்மி மகா சரஸ்வதி, சுமங்கலியாக கருதி பூஜிக்க வேண்டும்.

    திதி : சப்தமி. கோலம் : நறுமண மலர்களால் கோலமிட வேண்டும்.

    பூக்கள் : தாழம்பூ, தும்பை, மல்லிகை, முல்லை.

    நைவேத்தியம் : எலுமிச்சம் பழசாதம், பழ வகைகள், வெண்பொங்கல், கொண்டக்கடலை சுண்டல், பாதாம் முந்திரி பாயாசம், புட்டு.

    ராகம் : பிலஹரி ராகத்தில் பாடி பூஜிக்க வேண்டும்.

    பலன் : வேண்டும் வரம் அனைத்தும் கிடைக்கும்.

    8-வது நாள்

    வடிவம் : நரசிம்ம தாரினி (கரும்பு வில்லுடன் சுற்றிலும் அணிமா முதலிய அஷ்ட சக்திகளுடன் ரக்த பீஜனை சம்காரம் செய்த வடிவம்)

    பூஜை : 9 வயது சிறுமியை மகா கவுரியாக பூஜிக்க வேண்டும்.

    திதி : அஷ்டமி

    கோலம் : பத்ம கோலம்

    பூக்கள் : மருதோன்றி, சம்பங்கி பூக்கள், வெண்தாமரை, குருவாட்சி.

    நைவேத்தியம் : பால்சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை சுண்டல்.

    ராகம் : புன்னகை வராளி ராகத்தில் பாடி பூஜிக்கலாம்.

    பலன் : நமக்கு இஷ்ட சித்தி உண்டாகும்.

    9-வது நாள்

    வடிவம் : பரமேஸ்வரி, சுபத்ராதேவி (கையில் வில், பாணம், அங்குசம், சூலத்துடன் தோற்றம்)

    பூஜை : 10 வயது சிறுமியை சாமுண்டி வடிவில் வழிபட வேண்டும்.

    திதி : நவமி

    கோலம் : வாசனைப் பொடிகளால் ஆயுதம் போன்ற கோலம் போட வேண்டும்.

    பூக்கள் : தாமரை, மருக்கொழுந்து, துளசி, வெள்ளை மலர்கள்.

    நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல், உளுந்து வடை, வேர்க்கடலை சுண்டல், கடலை, எள் பாயாசம், கேசரி, பொட்டுக் கடலை, எள் உருண்டை.

    ராகம் : வசந்த ராக கீர்த்தனம் பாடி தேவியை மகிழ்விக்க வேண்டும்.

    பலன் : ஆயுள், ஆரோக்கியம் பெருகும். சந்ததிகள் சவுக்கியமாக இருப்பார்கள்.

    10-வது நாள்

    வடிவம் : அம்பிகை. இவளுக்கு விஜயா என்ற பெயரும் உண்டு (ஸ்தூல வடிவம்)

    திதி : தசமி

    பலன் : புரட்டாசி மாதம் சுக்ல பட்சமியே விஜயதசமி. மூன்று சக்திகளும், தீய சக்தியை அழித்து, வெற்றி கொண்ட அனைவருக்கும் நன்மைகளை அள்ளித்தந்து அருள் பாலிக்கும் சுபநாள். இன்று தொடங்கும் எல்லா காரியங்களும் வெற்றி மீது வெற்றி பெறும்.

    நைவேத்தியம் : பால் பாயாசம், காராமணி சுண்டல், இனிப்பு வகைகள்.

    பூக்கள் : வாசனைப் பூக்கள். 

    • கொல்கட்டா போன்ற வட மாநிலங்களில் முக்கிய நகரங்களில் இந்தப் பண்டிகை துர்கா பூஜையாகக் கொண்டாடப்படுகிறது.
    • நவராத்திரி விரதமிருப்போர் வீடுகளுக்குச் சென்று தாம்பூலம் வாங்குவோரின் இல்லங்களிலும் தேவி குடிகொண்டிருப்பாள் என்பது ஐதீகம்.

    ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் 9 நாட்கள் தேவியை பூஜை செய்து வழிபடும் நவராத்திரி கொண்டாட்டங்கள் இன்று வழக்கமான உற்சாகத்துடன் நாடு முழுவதும் தொடங்கியது.

    வட மாநிலங்களில் துர்கா பூஜையாகவும், தமிழகத்தில் சரஸ்வதி பூஜையாகவும், கர்நாடகத்தில் தசரா பண்டிகையாகவும் இந்த விழா சிறப்பாகக் கொண்டாடப்படும்.

    நவராத்திரியின் போது, வீரத்தை அளிக்கும் பார்வதியையும், தனத்தை அளிக்கும் லட்சுமி தேவியையும், கடைசி 3 நாட்கள் கல்வியை வழங்கும் சரஸ்வதியையும் விரதமிருந்து வழிபடுவதே இந்த பண்டிகையின் சிறப்பாகும்.

    கொல்கட்டா போன்ற வட மாநிலங்களில் முக்கிய நகரங்களில் இந்தப் பண்டிகை துர்கா பூஜையாகக் கொண்டாடப்படுகிறது.

    9 நாட்கள் சாந்தரூபியாக தவம் மேற்கொண்டு வீற்றிருக்கும் தேவியானவள், 10ஆம் நாளின் (தசரா) விசுவரூபியாக அசுர பலத்துடன் ஆக்ரோஷமாக உருவெடுத்து, மகிஷாசுரனை வதம் செய்து மக்களுக்கு மகிழ்ச்சி நல்கும் ஆனந்த ரூபியாக காட்சியளிப்பதையே இந்த 10 நாட்கள் விழா குறிக்கிறது.

    துன்பத்தை - அசுரர்களை துர்க்கையானவள் வீழ்த்தி வெற்றிபெறும் நாளே விஜயதசமி (விஜயம்-வெற்றி+தசம்- 10) என்று அழைக்கப்படுகிறது.

    நவராத்திரி பண்டிகை தொடங்கியதையொட்டி, தமிழகத்தில் உள்ள கோயில்கள் உட்பட அனைத்து கோயில்களிலும் வீற்றிருக்கும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

    வீடுகளில் பெண்கள் கொலுவைத்து தங்களின் விரதத்தைத் தொடங்கினர். உறவினர்களையும், அண்டை வீட்டில் உள்ள பெண்களையும் வரவழைத்து, தேவியர் பெருமைகளை உணர்த்தும் பாடல்களை பாடி சிறப்பு பூஜைகள் செய்தனர்.

    பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு தாம்பூலம் வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள்.

    தங்கள் வீடுகளில் கல்வி, செல்வம், வீரம் தழைக்க வேண்டியும், கணவன் உள்ளிட்ட குடும்பத்தில் உள்ள அனைவரின் நலம் போற்றியும் கொலு வைக்கும் பெண்கள், மற்றவர்களுக்கு தாம்பூலம், பிரசாதங்களை வழங்குகிறார்கள்.

    நவராத்திரி விரதமிருப்போர் வீடுகளுக்குச் சென்று தாம்பூலம் வாங்குவோரின் இல்லங்களிலும் தேவி குடிகொண்டிருப்பாள் என்பது ஐதீகம் என்பதால், ஒருவருகொருவர் உறவினர், நண்பர்களின் வீடுகளுக்கு பரஸ்பரம் சென்று பூஜைகளில் பங்கேற்று தாம்பூலம் பெற்று வருகிறார்கள்.

    ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் காங்ரா மாவட்டத்தில் உள்ள பிரஜேஸ்வரி கோயிலில் நடைபெற்ற நவராத்திரி தொடக்கவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

    • பொம்மைகளில் ஒரு சிலவற்றை மட்டும் படியிலேயே படுத்தபடி வைத்துவிடுங்கள்.
    • அம்பிகை தன் அருளை தன் பக்தர்களுக்கு அவர்கள் இல்லத்திற்கே வந்து வாரி வழங்குகிறாள்.

    கொலுவின் கடைசி நாளான விஜயதசமியன்று இரவு பாலை நைவேதனம் செய்து பாலை ஏதாவது ஒரு படியில் வைத்து விட வேண்டும்.

    பின்னர் பொம்மைகளில் ஒரு சிலவற்றை மட்டும் படியிலேயே படுத்தபடி வைத்துவிடுங்கள்.

    மறுநாள் காலையில் பொம்மைகளை எடுத்து வைத்து விடலாம்.

    கொலு வீற்றிருக்கும் அம்பிகை தன் அருளை தன் பக்தர்களுக்கு அவர்கள் இல்லத்திற்கே வந்து வாரி வழங்குகிறாள்.

    • நவராத்திரியின் ஒவ்வொரு நாளிலும் அன்னை பராசக்தியை ஒவ்வொரு ரூபத்தில் ஆராதனை செய்கிறோம்.
    • உபசாரங்களை தேவி பராசக்தி அன்புடன் ஏற்றுக் கொண்டு நமக்கு நல்வாழ்வு தருவாள்.

    நவராத்திரியின் 9 நாட்களும் ஒவ்வொரு அம்பிகைக்கும் ஒவ்வொரு விதமான மந்திரங்கள் சொல்லி பூஜிக்க வேண்டும்.

    அவற்றை இங்கு தொகுத்துள்ளோம்.

    முதல் நாள்:

    மஹா கணபதி பூஜையுடன் தொடங்கி கலச பூஜை செய்து, துர்கையை தியானம் செய்து கலசத்தில் ஆவாஹனம் செய்து துர்கா அஷ்டோத்திரம் படித்து பூஜை செய்யலாம். மஹிஷாசுரமர்த்தினி மந்திரம் பாராயணம் செய்யலாம்.

    இரண்டாம் நாள்:

    இக்சா சக்தியான துர்கையை துர்கா அஷ்டோத்திரம் படித்து பூஜை செய்து ஸ்ரீ லலிதா திரிசதி, ஸ்ரீ காமாட்சி மந்திரம் பாராயணம் செய்யலாம்.

    மூன்றாம் நாள்:

    துர்கா அஷ்டோத்திர பூஜை. ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் மற்றும் ஸ்ரீ லலிதா நவரத்ன மாலா பாராயணம்.

    நான்காம் நாள்:

    ஸ்ரீமகாலக்ஷ்மியை தியானம் செய்து லக்ஷ்மி அஷ்டோத்திர பூஜை செய்தல் நல்லது. ஸ்ரீ கனக தாரா மந்திரம், ஸ்ரீ அன்ன பூர்ணாஷ்டகம், அஷ்டலக்ஷ்மி மந்திரம் பாராயணம் செய்யலாம். எல்லா நாட்களிலுமே பூஜையின் முடிவில் ஸ்ரீ துர்கா லக்ஷ்மி ஸரஸ்வதீப்யோ நம: என்று கூறி மலர்களுடன், குங்குமம், அட்சதை ஆகியவற்றை அம்மாளிடம் சமர்ப்பிக்கவும்.

    ஐந்தாம் நாள்:

    லக்ஷ்மி அஷ்டோத்திர பூஜை செய்து ஸ்ரீ கனகதாரா மந்திரம், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். ஸ்ரீ மகாலக்ஷ்மி அஷ்டகமும் பாராயணம் செய்வது நன்மை தரும்.

    ஆறாம் நாள்:

    லக்ஷ்மி அஷ்டோத்திரம் அல்லது மகாலக்ஷ்மி ஸஹஸ்ரநாம பூஜை செய்தல் சிறப்பானது.

    ஏழாம் நாள்:

    ஸ்ரீ சரஸ்வதி அஷ்டோத்திர பூஜை செய்து, ஸ்ரீ சாரதா புஜங்க மந்திரம் மற்றும் ஸ்ரீ தேவி கட்கமாலா முதலியவை பாராயணம் செய்யலாம்.

    எட்டாம் நாள்:

    சரஸ்வதி அஷ்டோத்திர பூஜை செய்து, ஸ்ரீ தேவி நவரத்னமாலா மற்றும் ஸ்ரீ பவானி புஜங்கம் பாராயணம் செய்யலாம்.

    ஓன்பதாம் நாள்:

    சரஸ்வதி அஷ்டோத்திரம், லக்ஷ்மி அஷ்டோத்திரம் மற்றும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் சிறந்த பலன் தரும்.

    கன்னிகா பூஜை

    நவராத்திரியின் ஒவ்வொரு நாளிலும் அன்னை பராசக்தியை ஒவ்வொரு ரூபத்தில் ஆராதனை செய்கிறோம். ஏழு அல்லது பத்து வயதுக்குட்பட்ட சிறு பெண் குழந்தைகளை நம் இல்லத்திற்கு அழைத்து அவர்களை அன்னை பாலா திரிபுரசுந்திரியாக பாவித்து நல்விருந்தளித்து, புத்தாடை, அணிகலன்களான வளையல், சீப்பு, கண்ணாடி முதலியவற்றை தேங்காய், பழம், வெற்றிலை பாக்குடன் அளிப்பது அம்பிகை பக்தர்களின் வழக்கம். முதல் நாளில் ஒரு குழந்தையில் தொடங்கி விஜயதசமி அன்று நவகன்னிகைகளுக்கு மேற்கூறியவாறு உபசாரங்கள் செய்யலாம். அல்லது இப்படி செய்ய இயலாதவர்கள் கடைசி நாளில் ஒன்பது கன்னிகைகளுக்கும் ஒரு சேர விருந்தளித்து ஆடை, அணிகலன்கள் அளிக்கலாம். இந்த உபசாரங்களை தேவி பராசக்தி அன்புடன் ஏற்றுக் கொண்டு நமக்கு நல்வாழ்வு தருவாள். 

    • அம்பிகை அவன் வேண்டுதலை பூர்த்தி செய்து அரக்கர்களையும், பகைவர்களையும் அழித்துப் பின் ஒரு புதுயுகத்தினையே உண்டு பண்ணுகிறாள்.
    • நான் உனக்கு சகல சுகங்களையும், சௌபாக்கியங்களையும் அளிப்பேன் என்கிறாள் அம்பிகை தேவி.

    கொலு வைப்பது குறித்து பதினெட்டு புராணங்களில் ஒன்றான மார்க்கண்டேய புராணத்தில் சொல்லப்பட்டுள்ளதை இங்கே காணலாம்.

    தன் எதிரிகளை வெற்றிக் கொள்வதற்காக மகாராஜா சுரதா குரு சுமதாவின் ஆலோசனையைக் கேட்கிறார்.

    குரு கூறியபடி பரிசுத்தமான ஆற்று மணலைக் கொண்டு காளிரூபத்தை செய்கின்றான். அதை காளியாக அலங்கரித்து, தெய்வத்தின் மீது பற்றுடன் உண்ணா நோன்பிருந்து மனதாலும் மெய்யாலும் வேண்டுகிறான்.

    அம்பிகை அவன் வேண்டுதலை பூர்த்தி செய்து அரக்கர்களையும், பகைவர்களையும் அழித்துப் பின் ஒரு புதுயுகத்தினையே உண்டு பண்ணுகிறாள்.

    ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையினால் என்னைப் பூஜித்தால் நான் உனக்கு சகல சுகங்களையும், சௌபாக்கியங்களையும் அளிப்பேன் என்கிறாள் அம்பிகை தேவி

    இதனால் தான் நவராத்திரியில் கொலு வைத்து அம்மனை பூஜிக்கிறோம்.

    • மூன்று தேவியருக்கும் தனித்தனியாக உள்ள இந்த பதினெட்டு நாமாவளிகளும் மிகுந்த சக்தி வாய்ந்தவை.
    • செல்வத் திருமகளே! மோகனவல்லியே!எல்லாரும் கொண்டாடும் வேதவல்லியே!

    நவராத்திரி நேரத்தில் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் எனச் சொல்ல நேரமில்லாதவர்கள் இந்த சிறிய நாமாவளிகளைச் சொல்லலாம். மூன்று தேவியருக்கும் தனித்தனியாக உள்ள இந்த பதினெட்டு நாமாவளிகளும் மிகுந்த சக்தி வாய்ந்தவை.

    துர்க்கா தேவி

    ஓம் துர்க்காயை நம

    ஓம் மகா காள்யை நம

    ஓம் மங்களாயை நம

    ஓம் அம்பிகாயை நம

    ஓம் ஈஸ்வர்யை நம

    ஓம் சிவாயை நம

    ஓம் க்ஷமாயை நம

    ஓம் கௌமார்யை நம

    ஓம் உமாயை நம

    ஓம் மகாகௌர்யை நம

    ஓம் வைஷ்ணவ்யை நம

    ஓம் தயாயை நம

    ஓம் ஸ்கந்த மாத்ரே நம

    ஓம் ஜகன் மாத்ரே நம

    ஓம் மகிஷ மர்தின்யை நம

    ஓம் சிம்ஹ வாஹின்யை நம

    ஓம் மாகேஸ்வர்யை நம

    ஓம் திரிபுவனேஸ்வர்யை நம

    லெட்சுமி ஸ்ரீதேவி

    ஓம் மகாலக்ஷ்ம்யை நம

    ஓம் வரலெக்ஷ்ம்யை நம

    ஓம் இந்த்ராயை நம

    ஓம் சந்த்ரவதனாயை நம

    ஓம் சுந்தர்யை நம

    ஓம் சுபாயை நம

    ஓம் ரமாயை நம

    ஓம் ப்ரபாயை நம

    ஓம் பத்மாயை நம

    ஓம் பத்மப்ரியாயை நம

    ஓம் பத்மநாபப் ப்ரியாயை நம

    ஓம் சர்வ மங்களாயை நம

    ஓம் பீதாம்பரதாரிண்யை நம

    ஓம் அம்ருதாயை நம

    ஓம் ஹரிண்யை நம

    ஓம் ஹேமமாலின்யை நம

    ஓம் சுபப்ரதாயை நம

    ஓம் நாராயணப் பிரியாயை நம

    சரஸ்வதி தேவி

    ஓம் சரஸ்வத்யை நம

    ஓம் சாவித்ர்யை நம

    ஓம் சாஸ்த்ர ரூபிண்யை நம

    ஓம் ஸ்வேதா நநாயை நம

    ஓம் ஸ§ரவந்திதாயை நம

    ஓம் வரப்ரதாயை நம

    ஓம் வாக்தேவ்யை நம

    ஓம் விமலாயை நம

    ஓம் வித்யாயை நம

    ஓம் ஹம்ஸ வாகனாயை நம

    ஓம் மகா பலாயை நம

    ஓம் புஸ்தகப்ருதே நம

    ஓம் பாஷா ரூபிண்யை நம

    ஓம் அக்ஷர ரூபிண்யை நம

    ஓம் கலாதராயை நம

    ஓம் சித்ரகந்தாயை நம

    ஓம் பாரத்யை நம

    ஓம் ஞானமுத்ராயை நம

    நவராத்திரி ஸ்லோகம்

    கிராவஹர் தேவீம் த்ருஹிண க்ருஹிணீ மாகமவிதோ

    ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸ ஹசரீ மத்ரித நயாம்!

    துரீயா காபி த்வம் துரதிகம் நிஸ்ஸீம மஹிமா

    மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷி!!

    பொருள்: இறைவனோடு இணைந்திருக்கும் சக்தியே! வேதங்களின் உட்பொருளை உணர்ந்தவர்கள் உன்னை சரஸ்வதி என்றும்,

    லட்சுமி என்றும், சிவனின் பத்தினியாகிய பார்வதி என்றும் பலவிதமாகக் கூறுகிறார்கள். மனதிற்கும் வாக்கிற்கும் அப்பாற்பட்டவளே! எல்லையற்ற மகிமை கொண்டவளே! மகாமாயாவாக இருந்து

    உலகை இயக்கச் செய்து பிரமிக்க வைப்பவளே! அருள்புரிவாயாக.

    துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி வழிபாடு

    அம்பாள் (துர்க்கை)

    காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி

    காசி விசாலாட்சி கருணாம்பிகையே!

    தருணம் இதுவே தயை புரிவாயம்மா!

    பொன் பொருள் எல்லாம்

    வழங்கி எம்மை வாழ்த்திடுவாயம்மா!

    ஏன் என்று கேட்டு என் பசி தீர்ப்பாய்

    என் அன்னை நீயே அம்மா!

    மங்களம் வழங்கிடும் மகாசக்தியே!

    மங்கலத் தாயே நீ வருவாயே!

    என்னுயிர் தேவியே! எங்கும் நிறைந்தவளே!

    எங்கள் குலவிளக்கே! நீ வருவாயே!

    பயிர்களில் உள்ள பசுமையில்

    கண்டேன் பரமேஸ்வரி உனையே!

    சரண் உனை அடைந்தேன்

    சங்கரி தாயே, சக்தி தேவி நீயே!

    அரண் எனக் காப்பாய்

    அருகினில் வருவாய் அகிலாண்டேஸ்வரியே!

    லட்சுமி

    செல்வத் திருமகளே! மோகனவல்லியே!

    எல்லாரும் கொண்டாடும் வேதவல்லியே!

    எண் கரங்களில் சங்கு சக்கரம்

    வில்லும் அம்பும் தாமரை

    மின்னும் கரங்களில் நிறைகுடம்

    தளிர்த் தாம்பூலம் அணி சியாமளையே!

    வரத முத்திரை காட்டியே

    பொருள் வழங்கும் அன்னையே!

    சிரத்தினில் மணி மகுடம்

    தாங்கிடும் சிந்தாமணியே!

    பல வரம் வழங்கிடும் ரமாமணியே!

    வரதராஜ சிகாமணியே!

    தாயே! தனலட்சுமியே!

    சகல வளமும் தந்திடுவாய்

    சரஸ்வதி

    கலைவாணி நின் கருணை தேன்மழையே

    விளையாடும் என் நாவில் செந்தமிழே

    அலங்கார தேவதையே வனிதாமணி

    இசைக்கலை யாவும் தந்தருள்வாய் கலைமாமணி!

    மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும்

    அருள் ஞானக்கரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும்

    ஸ்ருதியோடு லயபாவ ஸ்வரராக ஞானம்

    சரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம்!

    வீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம்

    வேணுவில் வரும் நாதம் வாணி உன் சக்ரபாதம்

    வானகம் வையகம் உன் புகழ் பாடும்.

    நவராத்திரி பாடல்

    மங்கள ரூபிணி மதியளி சூலினி மன்மத பாணியளே

    சங்கடம் நீங்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சவுந்தரியே

    கங்கண பாணியன் கனிமுகம் கண்டநல் கற்பகக் காமினியே

    ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்கநிவாரணி காமாட்சி

    கான் உறுமலர் எனக் கதிர் ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள்

    தான்உறு தவஒளி தார்ஒளிமதி ஒளி தாங்கியே வீசிடுவாள்

    மான்உறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்

    ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

    சங்கரி சவுந்தரி சதுர்முகன் போற்றிட சபையினில் வந்தவளே

    பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே

    எம்குலம் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்த நல் துர்க்கையளே

    ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

    தணதண தந்தண நவில்ஒளி முழங்கிட தண்மதி நீ வருவாய்

    கணகண கங்கண கதிர்ஒளி வீசிட கண்மணி நீ வருவாய்

    பணபண பம்பண பறைஒலி கூவிட பண்மணி நீ வருவாய்

    ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

    பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே

    கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக் கொடுத்த நல் குமரியளே

    சங்கடம் தீர்த்திட சமர் அது செய்த நல் சக்தி எனும் மாயே

    ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

    எண்ணியபடி நீ அருளிட வருவாய் எம் குலதேவியளே

    பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்

    கண்ணொளி அதனால் கருணையே காட்டி கவலைகள் தீர்ப்பவளே

    ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

    இடர் தருதொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய்

    சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய்

    படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்

    ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

    ஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி

    ஜெய ஜெய துர்க்கா ஸ்ரீபரமேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி

    ஜெய ஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெய ஜெய ஸ்ரீதேவி

    ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி.

    • தினம் ஒரு வேடமிட்டு தெரிந்தவர்கள் வீடுகளுக்கு கொலு பார்க்க வாருங்கள் என அழைப்பு விடுக்க அனுப்புவார்கள்.
    • அம்பிகையை முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும்; அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியின் அம்சமாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் முப்பெரும் சக்தியரை வழிபடுவார்கள்.

    ஒரு வருடம் கெடாத தேங்காய்: நவராத்திரி சமயத்தில் நெமிலி திரிபுரசுந்தரி கோயிலில் கலசத்தில் வைக்கப்படும் தேங்காய் அடுத்த வருடம் வரை கெடாமலிருக்கும். அந்தத் தேங்காயை மறுவருட நவராத்திரியின்போது உடைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கின்றனர்.

    அம்பிகையின் வாகனத்திற்கு தேங்காய் நீர்: மும்பை மும்பாதேவி ஆலயத்தில் ரிஷப வாகனத்தில் அமர்ந்து காட்சி தருகிறாள் அம்பிகை. இங்கே நவராத்திரி ஒன்பது நாட்களும் தேங்காய் உடைத்து அதன் நீரை அம்பிகையின் வாகனத்தில் ஊற்றி விடுகின்றனர். நவராத்திரி நாட்களில் வளர்க்கப்படும் ஹோமத்தின் சாம்பலை புருவத்தில் பூசிக் கொள்கின்றனர்.

    ஆண்டுக்கு இருமுறை நவராத்திரி கொண்டாடவேண்டும்: ஆண்டுக்கு இருமுறை நவராத்திரி கொண்டாடவேண்டும் என்று தேவி புராணம் கூறுகிறது. சித்திரையில் வரும் நவராத்திரிக்கு வசந்த நவராத்திரி என்றும், புரட்டாசியில் வரும் நவராத்திரிக்கு சாரதா நவராத்திரிஎன்றும் பெயர்.இவ்விரு காலங்களும் எமனுடைய கோரைப்பற்களுக்குச் சமமாகும். கோடை, குளிர் என பருவகாலம் மாறும்போது நோய்நொடிகள் பரவும். இந்த ஆபத்திலிருந்து மக்களைக் காக்கும்படி தேவியைப் பூஜிக்கவேண்டும் என்பதால் இவ்விழாவை நடத்தினர். ஆனால், கோடையில் நடந்த சித்திரை நவராத்திரி காலப்போக்கில் மறைந்து விட்டது. புரட்டாசி சாரதா நவராத்திரியே இப்போது வழக்கத்தில் உள்ளது.

    அம்மன் விரும்பும் நவராத்திரி: நவராத்திரி அம்பாளுக்கு மிகவும் விருப்பமான பண்டிகை. பகலும், இரவுமாக ஒன்பது நாட்கள் பூஜை செய்வது நவராத்திரி விரதம். ஆண்டுக்கு நான்குமுறை நவராத்திரி வந்தாலும் புரட்டாசி அமாவாசைக்குப் பின் வரும் சாரதா நவராத்திரியைத்தான் இமயம் முதல் குமரி வரை கொண்டாடுகிறார்கள். நவராத்திரி விழாவை தமிழகத்தில் பொம்மைக் கொலு என்றும்; வங்கத்தில் துர்க்கா பூஜை எனவும்; வடக்கே ராம் லீலா உற்சவமாகவும், கர்நாடகா, குலசேகரப்பட்டினம், குலுமணாலி, ஜகதல்பூர் தண்டேஸ்வரி ஆலயம் போன்ற இடங்களில் தசரா பண்டிகையாகவும் கொண்டாடுகின்றனர். இவ்விழாக் கொண்டாட்டத்தில் பெண் குழந்தைகளுக்குத்தான் ஏக குஷி. ஏனெனில் அவர்களை தினம் ஒரு வேடமிட்டு தெரிந்தவர்கள் வீடுகளுக்கு கொலு பார்க்க வாருங்கள் என அழைப்பு விடுக்க அனுப்புவார்கள். நவராத்திரி கொண்டாடுவதில் குடும்பத்தில் பெரியவர் முதல் சின்னஞ்சிறுவர்கள் வரை அனைவர் பங்கும் உண்டு. இதனால் ஒற்றுமை, மரியாதை, பக்தி உணர்வு அதிகமாகும். கலைத்திறன், கற்பனைத்திறன், பொறுமை, சுறுசுறுப்பு, கைவேலைத்திறன், பாட்டு, நடனத் திறன்களும் வெளிப்படும். நிவேதனப் பொருட்கள் விதம் விதமாய் செய்வதால் சமையல் கலை போற்றப்படுகிறது. விதவிதமான வேடங்கள் போடும்போது ஒப்பனைத்திறன் ஒளிர்கிறது. இவை அனைத்தினாலும் மன மகிழ்ச்சியும், பாராட்டும் கிடைக்கும். பூஜை மகிமையால் மனை சிறக்கும்; மகாசக்தி அருளால் மங்களம் பெருகும்; நினைத்தது நிறைவேறும். எனவே தான் நவராத்திரி சுபராத்திரி எனப்படுகிறது.

    நவராத்திரி பூஜையை தெய்வங்களும், தேவர்களும்கூட செய்து பலன் பெற்றுள்ளனர். நாரதர் அறிவுரைப்படி ராமர் கடைப்பிடித்து ராவணனை அழித்து சீதையை மீட்டு வந்தார். கண்ணபிரான், சியமந்தக மணி காரணமாக அடைந்த அபவாதம் இப்பூஜை செய்ததால் நீங்கியது. பஞ்சபாண்டவர்கள் பாரதப் போரில் வென்றதும் இந்த பூஜை செய்ததால்தான். தீய சக்தி மேலோங்கும்போது காத்திட வேண்டினால் அம்பாள் சண்டிகையாக ஒன்பது கோடி வடிவங்கள் எடுத்து தீமையை அழித்து நன்மை செய்வாள் என தேவி மகாத்மியம் கூறுகிறது. நவராத்திரியில் 9 நாட்களும் பூஜை விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இயலாதவர்கள் அஷ்டமி நாளில் மட்டுமாவது விரதம் இருந்து பூஜை செய்யலாம். விஜயதசமி தினத்தில் அம்பிகை அசுரர்களை அழித்து வெற்றிவாகை சூடினாள். ஆணவம் - சக்தியாலும், வறுமை-செல்வத்தினாலும், அறியாமை-ஞானத்தினாலும் வெற்றி கொள்ளப்பட்ட தினம் என்பதால் வீரம், செல்வம், கல்விக்கு உரிய தேவியரான துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என முப்பெரும் தேவியர்க்கும் உரியதாக இதை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். அன்றைய தினம் புதிதாகத் தொடங்கும் எல்லாக் காரியங்களும் எளிதாக வசமாகும் என்பது ஐதீகம். அன்று அபிராமி அந்தாதியினைப் படிப்பது மிகச் சிறந்த பலன் தரும்.

    மூன்று சக்தியை ஒன்றாக வழிபடும் நவராத்திரி: நவராத்திரி நாட்களில் அம்பிகையை வெவ்வேறு வடிவங்களில் அலங்கரித்து வழிபடுவர். அம்பிகையை முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும்; அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியின் அம்சமாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் முப்பெரும் சக்தியரை வழிபடுவார்கள். நவராத்திரியின் முதல் நாள் தேவியான மகேஸ்வரி பாலா, மது கைடபர் அழிவுக்குக் காரணமான தேவி. இரண்டாம் நாள் வழிபடப்படும் கவுமாரி, குமாரியாகப் போற்றப்படுகிறாள். அவளே ராஜ ராஜேஸ்வரியாகவும் ஆராதிக்கப்படுகிறாள். மூன்றாவது நாளுக்கு உரியவாராகி, கன்யா கல்யாணி என்று அழைக்கப்படுகிறாள். நான்காம் நாளில் அருள்பவள், மகாலட்சுமி. இவள் ரோகிணி என்று அழைக்கப்படுகிறாள். ஐந்தாம் நாள் வைஷ்ணவியாகவும் மோகினியாகவும் அலங்கரிப்பர். ஆறாவது நாளுக்குரிய தேவிவடிவம். இந்திராணி. அன்று சர்ப ராஜ ஆசனத்தில் தேவி அமர்ந்திருக்கும் கோலத்தில் பூஜை செய்வது வழக்கம். ஏழாம் நாள், தேவி மகாசரஸ்வதி, சுமங்கலி என அழைக்கப்படுகிறாள். எட்டாவது நாள் தேவியானவள் நரசிம்மிதருமி. நரசிம்மி வடிவின் சினம் தணிந்த கோலம் இது. அன்று அன்னை அன்பே உருவாக அருள்பாலிக்கிறாள். ஒன்பதாம் நாள் அம்பிகை, சாமுண்டி மாதா, அம்பு, அங்குசம் தரித்த லலிதா பரமேஸ்வரியாக அன்னையை வழிபடுவது வழக்கம்.பத்தாம் நாள் அசுரர்களை அழித்து அம்பிகை பெற்ற வெற்றியைக் குறிக்கும் விஜயதசமி. அன்று அன்னை வெற்றித் திருமகளாக அலங்கரிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள். இந்த வடிவங்களில் தேவியைத் தரிசித்து வழிபடுவதால் நவநிதிகளும் பெற்று, நீடுழி வாழ்வர் என்பது ஐதிகம்.

    • அலங்கரிக்கப்பட்ட அன்னையின் திருவுருவம் நெய்க்குளத்தில் அதிஅற்புதமாகப் பிரதிபலிக்கும்.
    • நவராத்திரி சமயத்தில், குலு பள்ளத்தாக்கிலுள்ள முந்நூறுக்கும் மேற்பட்ட மலை தெய்வங்கள் பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக வந்து ரகுநாத் ஜீக்கு மரியாதை செய்வார்கள்.

    திருமீயச்சூர் லலிதாம்பிகையின் நெய்க்குள தரிசனம் மிகப் பிரபலமானது. விஜயதசமி அன்று அம்பாள் கருவறை முன் 15 அடி நீளத்திற்கு வாழை இலை போட்டு, அதில் 4 அடி அகலம், 1 1/2 அடி உயரத்திற்கு சர்க்கரைப் பொங்கலைப் பரப்புவர். அதன் நடுவே குளம்போல் அமைத்து அதனை நெய்யினால் நிரப்புவர். அதன் பின்னரே கருவறையின் திரையை விலக்குவர். அலங்கரிக்கப்பட்ட அன்னையின் திருவுருவம் நெய்க்குளத்தில் அதிஅற்புதமாகப் பிரதிபலிக்கும். இந்த நெய்க்குள தரிசனத்தினைக் காண்போருக்கு மறுபிறவியே இல்லை என்பது நம்பிக்கை. முத்தாரம்மன் சமேத ஞான மூர்த்தீஸ்வரர் ஆலய தசரா, கிராமியக் கலை விழாவாகப் புகழ்பெற்றது. குலசையில் தசரா விழா பன்னிரண்டு நாட்கள் கோலாகலமாக நடக்கும். பக்தர்கள் சுமார் ஒருமண்டலம் விரதமிருந்து ஏதேனும் ஒரு தெய்வம்போல் வேடம் அணிந்து சுவாமி ஊர்வலம் வரும்போது கூடவே வருவார்கள். காளி வேடத்தை ஆண்கள் மட்டுமே புனைவார்கள். ஊர்வலத்தில் கரகாட்டம், மயிலாட்டம், மேளம், தாளம், தாரை, தப்பட்டை, ஒயிலாட்டம் என கிராமியக் கலைகளும் இடம்பெறும். ஒவ்வொரு வருடமும் இவ்விழா கலை நயத்தோடும் மிகுந்த பக்தியுடனும் சிறப்பாக நடைபெறும்.

    இமயமலையில் அமைந்துள்ள குலுமணாலியில் இவ்விழா 10 நாட்கள் நடக்கும். இத்தலத்தில் அருள்புரியும் ரகுநாத் ஜீ தெய்வத்தை ஸ்ரீராமனே தன் கட்டை விரல் அளவில் செய்து கொடுத்திருப்பதாக தல வரலாறு சொல்கிறது. நவராத்திரி சமயத்தில், குலு பள்ளத்தாக்கிலுள்ள முந்நூறுக்கும் மேற்பட்ட மலை தெய்வங்கள் பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக வந்து ரகுநாத் ஜீக்கு மரியாதை செய்வார்கள். விதவிதமான கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். பதினோராம் நாள் அனைவரும் வீடு திரும்புவார்கள். சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ளது ஜகதல்பூர். இத்தல நாயகி தண்டேஸ்வரி. இங்கே ஒரு நாள் அல்ல இருநாள் அல்ல எழுபத்தைந்து நாட்கள் தசரா விழாவைக் கொண்டாடுவார்கள். இப்பகுதி பழங்குடியினர் அவரவர் பிரிவுக்கு உட்பட்ட ஆலய தெய்வச் சிலைகளை அலங்கரித்து தண்டேஸ்வரி ஆலயத்திற்கு ஊர்வலமாக எடுத்து வருவார்கள். பின் தண்டேஸ்வரி முன் வைத்து பூஜித்து, மரியாதை செய்வர். அதன்பின் தினமும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். இந்த எழுபத்தைந்து நாட்களும் யாரும் வீட்டில் இருக்க மாட்டார்கள். தண்டேஸ்வரி ஆலய சுற்றுப்புறத்திலேயே தங்கி சமைத்து சாப்பிட்டு கலைநிகழ்ச்சி நடத்தி தூங்கி வெட்ட வெளியிலேயே இருப்பர். எழுபத்தாறாம் நாள்தான் அவரவர் தெய்வங்களுடன் இல்லம் திரும்புவர்.

    கோவை பொள்ளாச்சி சாலையில் உள்ள மகாலட்சுமி மந்திர் என்னும் அழகிய ஆலயத்தில் சரஸ்வதி, துர்கா, மகாலட்சுமி ஆகிய மூன்று தேவிகளும் கருவறையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இந்த ஆலயத்தில் நவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கும். மிகப் பெரிய அளவில் இங்கு கொலு வைக்கப்படுவதுண்டு. தினசரி இந்த கொலுவைக் காண நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். விஜயதசமி அன்று புதிதாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் பெற்றோருடன் இங்கு கூடுகின்றனர். அன்று அவர்களுக்கு சரஸ்வதி தேவியின் முன்பாக எழுதத் தொடங்கி வைக்கின்றனர். அன்னையின் முன்புள்ள பளிங்கு மண்டபத்தில் நூற்றுக் கணக்கான குழந்தைகள் இப்படி அமர்ந்து எழுதத் தொடங்குவது நம்மை சிலிர்க்க வைக்கும் காட்சியாகும். பொதுவாக, விஜயதசமி பல நல்ல செயல்களைத் தொடங்கவும் வியாபாரங்களைத் தொடங்கவும் நல்ல நாள். எனவே அன்னையை இந்த நவராத்திரியின் போது பல உருவங்களில் நாம் வழிபடுவதுடன் விஜயதசமியன்றும் வழிபட்டு, பாவம் தொலைத்து நலனும் அருளும் பெறுவோமாக !

    வைணவ திருத்தலங்களுள் முதன்மையானதாகப் போற்றப்படும் திருவரங்கத்தில் அரங்க நாயகியாக அருள்பாலிக்கும் தாயார், நவராத்திரி நாட்களில் தினமும் மாலையில் புறப்பாடு கண்டருள்வார். புறப்பாடு ஆகும் முன் சங்கநாதம் ஒலிக்கும். பிராகாரங்களை ஒருமுறை வலம் வந்தபின் கொலு மண்டபத்தில் வீற்றிருந்து பின்னர் இரவு 8.30 மணிவாக்கில் மூலஸ்தானம் எழுந்தருள்வார். அதுவரை நாதஸ்வரக் கச்சேரிகள் நடக்கும். மூலஸ்தானத்துக்கு முன்மண்டபத்தில் அன்னை எழுந்தருளும்போது கோயில் யானை துதிக்கையை உயர்த்தி நமஸ்கரிக்கும். மௌத்ஆர்கனை வாயில் வைத்து ஒலி எழுப்பும். பின்னர் பேஷ்கார் எனப்படும் கோயில் அதிகாரிக்கு தாம்பூலம் கொடுக்கும். இதை வேடிக்கை பார்ப்பதற்காகவே குழந்தைகள், பெரியவர்கள் என்று கூட்டம் வரும். நவராத்திரி ஏழாம் நாள் தாயாரின் திருவடிகள் வெளியில் தெரியும்படி அலங்காரம் செய்யப்பட்டு புறப்பாடு ஆகும். இந்தத் திருவடி சேவையைக் காண பக்தர்கள் ஆலயத்தில் குவிந்துவிடுவார்கள். அந்த ஒரு நாள்தான் தாயாரின் திருவடிகள் தரிசனம் கிடைக்கும்.

    ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள திருக்கூடலையாற்றூரில் நர்தன வல்லபேஸ்வரர் கோயிலில் இரண்டு அம்மன் சன்னதிகள் உள்ளன. இவற்றுள் ஞானசக்தி அம்மன் சன்னதியில் குங்குமமும்; பராசக்தி அம்மன் சன்னதியில் விபூதியும் பிரசாதமாகத் தரப்படுவது வித்தியாசமானது.

    இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி, ஆதி சக்தி, பராசக்தி, குடிலா சக்தி என ஆறு அம்சங்களையும் ஒருங்கே கொண்டு தேவி அருள்பாலிக்கும் தலங்கள் ஒன்பது. அவை காஞ்சி காமாட்சி, ஸ்ரீசைலம் பிரமராம்பாள் தேவி, கோல்ஹாப்பூர் மகாலக்ஷ்மி, உஜ்ஜயினி காளிகாதேவி, கயா மங்களாதேவி, அலகாபாத் அலோபிதேவி, உத்தரப்பிரதேசம் விந்தியவாசினி, நேபாளம் குஹ்யகேஸ்வரி, வாரணாசி விசாலாட்சி.

    சக்கரப்பள்ளி, அரிமங்கை, சூலமங்கலம், நந்தி மங்கலம், பசுபதிமங்கலம், தாழை மங்கலம், புள்ளமங்கலம் ஆகிய ஏழு ஊர்களையும் சப்தமங்கலத் தலங்கள் என்று கூறுவர். இத்தலங்களில் முறையே பிராமி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டியாக அம்பிகை பூஜை செய்ததாகக் கூறுகின்றனர்.

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் இருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் சாலையில் சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது காட்டுச் செல்லூர் என்னும் கிராமம். இங்கே உள்ள வேம்பி அம்மன் கோயிலில் சுமார் 1200 ஆண்டுகள் பழைமைவாய்ந்த துர்க்கை அம்மனின் திருமேனி உள்ளது. நின்ற கோலத்தில் காட்சி அளிக்கும் இந்த துர்க்கை அம்மன் சிற்பம் நான்கு திருக்கரங்களுடன் காணப்படுகிறது. மேல் இருகரங்களில் பிரயோகச் சக்கரமும், சங்கும், கீழ் வலக்கரத்தில் ஞான முத்திரையும் திகழ, கீழ் இடக்கரத்தை இடுப்பில் வைத்து அற்புத தரிசனம் தருகிறாள். இக்கரத்தில் கிளி ஒன்று ஏறிச் செல்வது போல் அமைந்திருப்பது சிறப்பாகும். விஜயதசமி அன்று அம்பு போடும் திருவிழா இங்கு மிக விசேஷம்.

    • எங்கள் வீட்டில் எப்போதும் நிலைத்திருப்பாயாக! என்று சொல்லிக்கொண்டே விளக்கேற்ற வேண்டும்.
    • காசியில் தினமும் மாலையில் ஜலதீபங்களை ஏற்றி கங்கைநதியை வழிபடுவது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தும்.

    நவராத்திரி காலத்தில் விடிய விடிய விளக்கு எரிவது வீட்டிற்கு செல்வ வளத்தை தரும்.

    *விளக்கில் இருக்கும் ஐந்து முகங்கள் அன்பு, மனஉறுதி, நிதானம், சமயோசிதம், சகிப்புத்தன்மை ஆகிய நற்பண்புகளும் பெண்களுக்கு அவசியம் என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளன.

    *தரையில் விளக்கேற்றி வைக்கக்கூடாது. மரப்பலகையில் கோலமிட்டு, அதன் மேல் விளக்கு இருக்க வேண்டும். விளக்கிற்கு மலர் சூடுவது மிகநல்லது.

    *தீபலட்சுமியாகப் போற்றப்படும் திருவிளக்கிற்கு சந்தனம், குங்குமம் இடுவது அவசியம். தீபலட்சுமியே! எங்கள் வீட்டில் எப்போதும் நிலைத்திருப்பாயாக! என்று சொல்லிக்கொண்டே விளக்கேற்ற வேண்டும்.

    *அம்மன் கோயில்களில் மாவிளக்கு வழிபாடு செய்வது சிறப்பானது. உடல் ஆரோக்கியம் பெற செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நேர்த்திக்கடனாக மாவிளக்கேற்றி வழிபடுவது வழக்கம்.

    *நாயன்மார்களில் நமிநந்தியடிகள், கணம்புல்லர், கலியநாயனார் ஆகியோர் விளக்கு வழிபாட்டினால் சிவன் அருளைப் பெற்றவர்கள். வேதாரண்யம் வேதபுரீஸ்வரர் கோயிலில் அணைய இருந்த விளக்கைத் தூண்டிய எலி மறுபிறவியில் மகாபலிச்சக்கரவர்த்தியாகப் பிறந்தது.

    *விளக்கேற்ற எக்காலமும் உகந்தது பஞ்சுத்திரி. விழா நாட்களில் தாமரைத்தண்டுத்திரியால் விளக்கேற்ற முன்வினைப்பாவம் தீரும். எருக்கம் பட்டைத்திரியால் விளக்கேற்ற செல்வம் சேரும்.

    *விளக்கை ஒருமுகம் ஏற்ற ஓரளவு பலனும், இரண்டுமுகம் ஏற்ற குடும்ப ஒற்றுமையும், மூன்றுமுகம் ஏற்ற புத்திரபாக்கியமும், நான்குமுகம் ஏற்ற செல்வவளமும், ஐந்து முகம் ஏற்ற சகலசவு பாக்கியமும் உண்டாகும்.

    *கிழமைகளில் செவ்வாய், வெள்ளியும், திதிகளில் அமாவாசை, பவுர்ணமியும், நட்சத்திரத்தில் கார்த்திகையும், பிரதோஷமும், தமிழ் மாதப்பிறப்பு நாளும் கோயில்களில் திருவிளக்கு பூஜை நடத்த உகந்தவை.

    *கிழக்குநோக்கி விளக்கேற்ற துன்பம் நீங்கும். மேற்கு நோக்கி ஏற்றுவதால் கடன்தொல்லை அகலும். வடக்குநோக்கி ஏற்ற செல்வவளம் பெருகும். தெற்கு நோக்கி ஏற்றுவது கூடாது.

    *நதிகளில் ஏற்றி வைக்கும் தீபத்தை ஜலதீபம் என்பர். காசியில் தினமும் மாலையில் ஜலதீபங்களை ஏற்றி கங்கைநதியை வழிபடுவது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தும்.

    *திருவிளக்குபூஜை நடத்துவது புண்ணியம் மிக்கதாகும். பலர் கூடி ஒரே மனதுடன் பூஜையில் கலந்து கொள்ளும்போது, யாகம் செய்வதற்கு ஈடானதாக ஆகிறது. கூட்டுப் பிரார்த்தனையானயால் இறையருளை எளிதாகப் பெற முடியும்.

    ×