search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடியிருப்பு"

    • குடியிருக்க வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுவசதி வாரியம் மூலம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.
    • குடியிருப்பவர்கள் உடல்நலம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர் .

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசி சூளை பகுதியில் 448 வீடுகளுடன்அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. குடியிருக்க வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுவசதி வாரியம் மூலம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. இங்குள்ள வீடுகளிலிருந்து வெளியாகும் கழிவுநீர் குடியிருப்புகளுக்கு மத்தியில்தெப்பக்குளம்போல தேங்கி நிற்பதால் குடியிருப்பவர்கள் உடல்நலம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர் .

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில் , இங்கு கழிவுநீர் வெளியேற எந்தவித முன் எச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் அனைத்து வீடுகளின் கழிவுநீரும் பல மாதஙகளாக குடியிருப்புகளுக்கு மத்தியில் சேறும் சகதியுமாய் தேங்கி நிற்கிறது. இதில் ஏராளமான கொசு மற்றும் புழுக்கள் உற்பத்தியாகி அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவுகிறது. குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அத்துடன் அங்குள்ள சிறுவர் சிறுமியர்கள் தேங்கி நிற்கும் சாக்கடை குழியின் ஆழம் தெரியாமல் அங்கு விளையாடுவதால் விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இது பற்றி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் மற்றும் கலெக்டர் உள்ளிட்டோருக்கு பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் எந்த பயனுமில்லை. எனவே அடுத்தகட்ட நடவடிக்கையாக குடியிருப்பவர்கள் சார்பாக போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.

    • பேரவை கூட்டம் ஒன்றிய தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்றது.
    • நீர் நிலைகளில் குடியிருக்கும் மக்களுக்கு மாற்றிடமும், வீடும் வழங்க வேண்டும்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த எடையூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய 26-வது பேரவை கூட்டம் ஒன்றிய தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்றது.

    பேரவை கொடியை மாவட்ட குழு உறுப்பினர் குஞ்சம்மாள் ஏற்றினார். விவசாய தொழிலாளர்களின் தலைவரும் சுதந்திர போராட்ட வீரருமான சீனிவாசராவ் படத்திற்கு விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் முருகையன் மாலை அணிவித்தார்.

    இதில் மாரிமுத்து எம்.எல்.ஏ., விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் உமேஷ்பாபு, முன்னாள் ஒன்றியக்குழு துணைத்த லைவர் தெட்சிணா மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.கூட்டத்தில் ஒன்றிய தலைவராக ராஜா, செயலாளராக சிவசந்திரன், பொருளாளராக வேலுக்கன்னு, துணை தலைவர்களாக குஞ்சம்மாள், பாலசுப்ரமணியன், ரவி, துணை செயலாளர்களாக தனிக்கொடி சரவணன், இந்திராணி ஆகியோரும் 35 பேர் கொண்ட ஒன்றிய குழுவும் தேர்வு செய்யப்பட்டனர்.

    கூட்டத்தில் நீர் நிலைகளில் குடியிருக்கும் மக்களை நீதிமன்றம் உத்தரவை காட்டி அப்புறப்படுத்தும் அரசின் எண்ணத்தை கைவிட வேண்டும். நீர் நிலைகளில் குடியிருக்கும் மக்களுக்கு மாற்றிடமும், வீடும் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • மழைக்காலங்களில் மழைநீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்தது.
    • வடிகாலில் புல்பூண்டுகள், குப்பைகளை அகற்றும் பணி.

    மெலட்டூர்:

    பாபநாசம் தாலுக்கா, வடக்குமாங்குடி ஊராட்சி யின் முக்கிய வடிகால் வாய்க்காலில் பல இடங்களில் வாய்க்காலின் பெரும்ப குதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் மழைக்காலங்களில் மழைநீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்து தெருக்களை சுற்றி தேங்கி நிற்கும் நிலை இருந்து வருகிறது.

    தற்போது பலமாக காற்று வீசி வருவதாலும், கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடிகால் சுத்தம் செய்யும் பணி ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி கனகராஜ் மேற்பார்வையில் நடைபெற்றது.

    வடிகால் வாய்க்காலில் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றவும், வடிகாலில் தண்ணீர் தேங்காமல் இருக்கவும் வடிகாலில் புல்பூண்டுகள் குப்பைகள் அகற்றும் பணி நடைபெற்றது. வடிகால் வாய்க்காலை சுத்தம் நடவடிக்கை எடுத்த ஊராட்சி நிர்வாகத்திற்கு கிராம மக்கள் நன்றி பாராட்டினர்.

    • அதிக குளிர் காற்று வீசுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    • அலைகளின் சீற்றத்தால் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது.

    சீர்காழி:

    மாண்டஸ் புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் சீற்றம் மற்றும் கனமழை பெய்து வருகிறது.

    அதிக குளிர் காற்று வீசுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    கடல் சீற்றத்தின் காரணமாக கடலோர கிராமங்களான தொடுவாய், மடவாமேடு, உள்ளிட்ட கிராமங்களில்10 அடிக்கு மேல் கடல் அலைகளின் சீற்றத்தால் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது.

    இதனால் அப்பகுதி மீனவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    கடல் நீர் புகுந்த தொடுவாய் கிராம மக்கள் அதே பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியிலும் புயல் பாதுகாப்பு மைய ங்களுக்கு தங்கியுள்ளனர்.

    இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, முகாமில் தங்கி உள்ள மக்களை நேரில் பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    300-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பால், பிரட் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

    அவருடன் சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமெக், இன்ஸ்பெக்டர் பாலச்சந்தர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியன் சார்பில் புதிதாக கட்டப்பட்டு உள்ள 4,644 குடியிருப்பு களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.
    • 461 பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளையும், சுயமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 30 பயனாளிகளுக்கு பணி ஆணைகளையும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

    நாமக்கல்:

    அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் அடிப்படையில் ரூ.405 கோடி செலவில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியன் சார்பில் புதிதாக கட்டப்பட்டு உள்ள 4,644 குடியிருப்பு களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.

    இதை அடுத்து 4500 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும் சுயமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 105 தொகுதிகளில் வசிக்கும் 11,300 பயனாளிகளுக்கு தனி வீடுகள் கட்டுவதற்கு தலா ரூ.2.10 லட்சம் வீதம் ரூ.237.3 கோடி மதிப்பிலான பணி ஆணைகளும் வழங்கப்பட்டன.

    இதை ஒட்டி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 461 பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளையும், சுயமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 30 பயனாளிகளுக்கு பணி ஆணைகளையும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். இதில், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, மாவட்ட வருவாய் அதிகாரி மணிமேகலை, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், உதவி பொறியாளர் சங்கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குப்பைகள் மட்டுமின்றி இறந்து போன விலங்குகளையும் கொண்டு வந்து சிலர் வீசுகின்றனர்.
    • சாய் குரு கார்டன் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    பல்லடம் : 

    பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி சாய் குரு கார்டன் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள ஓடையில் குப்பைகள் கொட்டி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பைகள் மட்டுமின்றி இறந்து போன விலங்குகளையும் கொண்டு வந்து சிலர் வீசுகின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் ஏற்பட்டு மக்கள் வசிக்கவே இயலாத சூழ்நிலை நிலவுவதாக பலமுறை புகார் அளித்தும் குப்பைகள் அகற்ற இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    • ஜீவா நகர், ராமதாஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.
    • வடிகால் வசதி இல்லாத நிலையில் பல அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியுள்ளது.

    உடுமலை :

    உடுமலை அருகே குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் தனி தீவாக மாறி உள்ளது. உடுமலை அருகே உள்ள கணக்கம்பாளையம் ஊராட்சி ஜீவா நகர் ,ராமதாஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக தாழ்வான பகுதியான இந்த குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்தது.

    சரியான வடிகால் வசதி இல்லாத நிலையில் பல அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியுள்ளது. மேலும் குப்பைக் கழிவுகள் மற்றும் சாக்கடை கழிவு நீரும் சேர்ந்து தேங்கியுள்ளதால் துர்நாற்றம், கொசு உற்பத்தி என சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது.இப்பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியில் வர முடியாத நிலை உள்ளதோடு பல வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீர் நான்கு நாட்களாக வடியாமல் உள்ளதால் பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் கடுமையாக பாதித்து வருகின்றனர்.

    எனவே தேங்கியுள்ள நீரை அகற்றவும் உரிய மழை நீர் வடிகால் வசதிகள் மேற்கொள்ளவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

    • தமிழ்நாடு அரசு குடிசைமாற்று வாரியத்தால் அமைக்கப்பட்ட குடியிருப்பு பகுதியில் 1200 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
    • 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் வசிக்கிறார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி துணைமேயர் பாலசுப்பிர மணியம், அரசு போக் குவர த்துக்கழக மேலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாநகராட்சி 5வது வார்டுக்கு உட்பட்ட வாவிபாளையம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுகுடிசைமாற்று வாரியத்தால் அமைக்கப்ப ட்ட குடியிருப்பு பகுதியில் 1200 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் வசிக்கிறார்கள். நான் இப்பகுதிக்கு ஆய்வுக்கு சென்றபோது, போதிய போக்குவரத்துவசதியின்றி மிகவும் சிரமப்படுவதாக, இக்குடியிருப்பில் வசிக்கின்ற மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள் தெரிவித்தனர். எனவே, இங்கு வசிக்கும் பொது மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, குடிசைமாற்று வாரியம் குடியிருப்பு பகுதியில் அரசு பேருந்து நின்று செல்லும் வகையில் பஸ் நிறுத்தம் ஏற்படுத்தி தர வேண்டும்.

    மேலும், வாவிபாளையம் வரை வந்து செல்லும் அரசு பேருந்து எண் 11சி, 46,55, 11 மற்றும் கணக்கம்பாளையம் வரை வந்து செல்லும் பேருந்து எண் 43 ஆகியவற்றின் வழித்தடத்தை மேற்கண்ட குடியிருப்பு பகுதிக்கு வந்து செல்லும் வகையில் நீட்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறி உள்ளார்.

    • மழைக்காலத்திலும் தண்ணீர் தேங்கி, பொதுமக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டு வருகின்றது.
    • நடவடிக்கை எடுக்காததால் அந்த வார்டு பொதுமக்கள் முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி, 14-வது வார்டுக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் முறையான வடிகால் அமைக்கப்படாத காரணத்தினால் ஒவ்வொரு மழைக்காலத்திலும் தண்ணீர் தேங்கி, பொதுமக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டு வருகின்றது.

    இது சம்பந்தமாக முதல் மன்ற கூட்டத்திலேயே எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 14-வது வார்டு உறுப்பினர்ஜகபர் அலி கோரிக்கை வைத்து, பேரூராட்சி மன்றத்தின் 27-வது தீர்மானமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

    மேலும், மழைக்காலம் நெருங்குவதை கருத்தில் கொண்டு இரண்டு மாதங்களுக்கு முன்னரே 14-வது வார்டு பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி பேரூராட்சி நிர்வாகத்திடம் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தது.

    இருந்தாலும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த அந்த வார்டு பொதுமக்கள் முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    பின்னர், பேரூராட்சி மன்ற தலைவர் மும்தாஜ் நவாஸ்கான் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களிடமிருந்து மனுவை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    போர்க்கால அடிப்படையில் மழைநீர் வடிகால் அமைக்கப்படாவிட்டால் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என கூறி பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • அரசு சார்பில் மாதம் 1,500 ரூபாய் உதவித்தொகை பெற்று வருகிறார்கள்.
    • ஒரே வீட்டில் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் நல்லாத்துபாளையம் பகுதியை சேர்ந்த தம்பதி முருகேசன் - கலாவதி. முருகேசன் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 20 வயதில் சக்திவேல் என்ற மகன் உள்ளார். இதனிடையே பிறந்தது முதல் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட சக்திவேலுக்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையாத நிலையில் ,அரசு சார்பில் மாதம் 1,500 ரூபாய் உதவித்தொகை பெற்று வருகிறார்கள்.

    இந்தநிலையில் மகனுக்கு மனநிலை பாதிக்கப்பட்டதன் காரணமாக தொடர்ந்து ஒரே வீட்டில் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் வீடு வழங்க கூறி மனு அளித்த நிலையில் அதிகாரிகள் ஒரு லட்சம் வரை கட்ட கூறியுள்ளனர். எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் மகனின் வாழ்க்கையையும், குடும்ப சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு தங்களுக்கு அரசு சார்பில் இடம் வழங்க வேண்டுமென திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

    • பெருந்துறை பழைய பஸ் நிலையம் பகுதியில் 32 வீடுகள் கொண்ட போலீஸ் குடியிருப்பு வளாகத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
    • சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய குடியிருப்பு வளாகத்தை திறந்து வைத்தார்.

    பெருந்துறை:

    பெருந்துறை பழைய பஸ் நிலையம் பகுதியில் 48 சென்ட் பரப்பளவில் ரூ.5 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 32 வீடுகள் கொண்ட போலீஸ் குடியிருப்பு வளாகத்தின் திறப்பு விழா நடைபெற்றது.

    சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய குடியிருப்பு வளாகத்தை திறந்து வைத்தார். இதன் தொடர்ச்சியாக பெருந்துறை குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் குத்துவிளக்கேற்றி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பெருந்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல், இன்ஸ்பெக்டர்கள் மசூதா பேகம், நிர்மலா, பெரியசாமி, சப்-,ன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், ஜீவானந்தம், கல்பனா, வேலுச்சாமி, தங்கமுத்து, கருப்புசாமி, நாகராஜ் மற்றும் போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்க்கும் குறைவாக இருத்தல் வேண்டும்.
    • ஒப்புதல் பெறப்பட்ட பயனாளிகள் வீடுகளை ஒதுக்கீடு பெற பயனாளி பங்களிப்பு தொகையாக ரூ.73 ஆயிரத்தை செலுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் "அனைவருக்கும் வீடு" திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட வல்லம் அய்யனார் கோவில் திட்டப்பகுதியில் 384 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்த குடியிருப்புகளை ஒதுக்கீடு பெறுவதற்கு நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்க்கும் குறைவாக இருத்தல் வேண்டும். மேலும், சொந்த நிலம் மற்றும் வீடற்ற பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினராக இருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்கள் தங்கள் விண்ணப்பத்துடன் குடும்ப தலைவர் மற்றும் தலைவி ஆகியோரின் ஆதார் அடையாள அட்டை, உணவுப் பங்கீடு அட்டை மற்றும் வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகிய ஆவணங்களின் நகல்களை இணைத்து தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அய்யனார் கோவில் திட்டப் பகுதியிலுள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தை, அலுவலக வேலை நாட்களில் நாளை வரை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அணுகி பயன்பெறலாம். தகுதியான பயனாளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் ஒப்புதல் பெறப்பட்டு குடியிருப்புகள் ஒதுக்கப்பட உள்ளன. ஒப்புதல் பெறப்பட்ட பயனாளிகள் வீடுகளை ஒதுக்கீடு பெற பயனாளி பங்களிப்பு தொகையாக ரூ.73 ஆயிரத்தை செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு 8667350694, 8667756031 மற்றும் 8523962235 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×