search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 232840"

    • பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
    • எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் ஒற்றை தலைமையாக வரவேண்டும் என பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    ஒற்றை தலைமை விவகாரத்தால் அதிமுகவில் மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது. அதில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரான தனது ஒப்புதல் இன்றி வருகிற 11-ந்தேதி பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    கட்சியின் சட்ட விதிகளை திருத்தி ஒற்றை தலைமையை கொண்டு வருவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதால், பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் இன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செயற்குழு, பொதுக்குழுவை சேர்ந்த 2,441 பேரின் ஆதரவுடன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் ஒற்றை தலைமையாக வரவேண்டும் என 2,441 பேரும் தனித்தனியே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நிர்வாகிகள் கோரிக்கைக்கு இணங்க அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக ஜெயக்குமார் பேட்டி
    • 11ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும் என்கிறார்.

    சென்னை:

    அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினடையே பிளவு ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இன்றைய அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லாது என ஓபிஎஸ் தெரிவித்திருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. தலைமை நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்கவில்லை

    ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், நிர்வாகிகள் கோரிக்கைக்கு இணங்க அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாகவும், 75 தலைமை கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்து கொண்டதாகவும் கூறினார்.

    'அதிமுகவுக்கு பல துரோகங்களை செய்தவர் ஓபிஎஸ். துரோகத்தின் அடையாளம் ஒ.பி.எஸ். எந்த அதிமுக தொண்டனும் திமுகவோடு உறவு பாராட்டமாட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் மாறிவிட்டார். 11ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்' என்றும் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.

    சட்ட ரீதியாக இந்த கூட்டம் நடைபெற்றது என்றும், கூட்டத்தை கூட்ட தலைமை நிலைய செயலாளருக்கு அதிகாரம் உள்ளது என்றும் பொன்னையன் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிமுக தலைமை அலுவலகத்தில் 75 தலைமை நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
    • பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

    சென்னை:

    அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஓ.பன்னீர்சல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினடையே பிளவு ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது. இன்றைய அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லாது என ஓபிஎஸ் தெரிவித்திருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது.

    இக்கூட்டத்தில், 75 தலைமை நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையின் முடிவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதவிர அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு, புதிய பொருளாளராக கே.பி.முனுசாமி தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • அடுத்து நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுக்க தீவிரம்
    • ஓ.பன்னீர்செல்வம் நாளை மறுநாள் அ.தி.மு.க. தலைமைக் கழகத்திற்கு சென்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்


    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை கோஷம் தீவிரமடைந்த நிலையில், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பொதுக்குழு கூட்டத்திலும் குழப்பம் நீடித்தது. இதனால் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் பொதுக்குழு முடிந்தது. அடுத்து நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த சூழ்நிலையில் டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் நேற்று சென்னை திரும்பினார். சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வதற்காக இன்று மதியம் விமானம் மூலம் மதுரை வந்தார். அவருக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். கட்சியின் பொதுச்செயலாளர் ஓபிஎஸ் என ஆதரவாளர்கள் முழக்கம் எழுப்பினர்.

    பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், "அதிமுக தொண்டர்கள் என் பக்கமே உள்ளனர்" என்றார்.

    'அதிமுகவில் நடைபெறும் சம்பவங்கள் யாரால் நடத்தப்படுகிறது என்பது விரைவில் வெளிச்சத்துக்கு வரும். யாரால் சதிவலை பின்னப்பட்டது என்பது விரைவில் வெளிச்சத்துக்கு வரும். சதிவலையை பின்னியவர்களுக்கு உரிய தண்டனையை மக்களே வழங்குவார்கள். ஜெயலலிதாவின் இதயத்தில் இருந்து என்னை யாராலும் நீக்க முடியாது' என்றும் ஓபிஎஸ் கூறினார்.

    நாளை மறுநாள் ஓ.பன்னீர்செல்வம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தற்கு சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். அன்று அமாவாசை தினம் என்பதால் ஓ.பன்னீர்செல்வம் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க.வை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வகையில் அவரது அறிவிப்புகள் இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் ரகசிய திட்டங்களை முறியடிக்க எடப்பாடி பழனிசாமி அணியினரும் தயாராகி வருகின்றனர்.

    • அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.
    • அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எவ்வித தடையும் நீதிபதிகள் விதிக்கவில்லை என துணை ஒருங்கிணைப்பாளர் கூறியுள்ளார்.

    சென்னை:

    அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை. அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக் கூடாது என இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளனர்.

    இந்நிலையில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

    நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கிறோம். அதன்படி செயல்படுவோம். அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. இன்றைய அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எவ்வித தடையும் நீதிபதிகள் விதிக்கவில்லை. இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பார் என தெரிவித்துள்ளார்.

    • அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு செல்ல வேண்டாம் என பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்.
    • பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கில் சுமார் 3 மணி நேரம் உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

    சென்னை:

    அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து உள்ள நிலையில், கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நாளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை பற்றிய தீர்மானம் கொண்டுவந்து எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி வந்தார். ஆனால் அவரது முயற்சி கைகூடவில்லை.

    நாட்கள் செல்ல செல்ல எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்ததால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு செல்ல வேண்டாம் என பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. சுமார் 3 மணி நேர விசாரணையில், பொதுக்குழு கூட்டம் தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டன. அதன்பின்னர் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

    அதன்படி இன்று இரவு தீர்ப்பு வழங்கினார் நீதிபதி. அனைத்து தரப்பு வாதங்களையும் பரிசீலனை செய்த நீதிபதி, அதிமுக பொதுக்குழு கூட்டத்தை திட்டமிட்டபடி நாளை நடத்தலாம் என உத்தரவிட்டார். இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர். 

    • அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தள்ளிவைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி வருகிறார்.
    • எதிர் மனுதாரர்களான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், நாளை நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த அதிமுக உறுப்பினரான சி.பாலகிருஷ்ணன் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், எதிர் மனுதாரர்களான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்திருந்தது. அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது. அதேசமயம் பொதுக்குழு கூட்டம் நடத்துவது தொடர்பாக எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

    இதேபோல், அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் இன்று இரவு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நாளை நடக்கிறது. இதில் ஒற்றை தலைமை பற்றிய தீர்மானம் கொண்டுவந்து எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுக்குழு கூட்டத்தை தள்ளிவைக்க வேண்டும் என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பாக, கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கு கடிதம் எழுதினார். ஆனால், இதனை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை.

    • ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நிராகரிப்பு மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
    • வழக்கு தொடர்ந்த சூரியமூர்த்தி கட்சியின் உறுப்பினரே இல்லை என அதிமுக வழக்கறிஞர் தெரிவித்தார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி திண்டுகல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த மனுவை நிராகரிக்கும்படி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நிராகரிப்பு மனுவை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணை 22ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால், அதிமுக பொதுக்குழு கூட்டம் 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், இந்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்கவேண்டும் என சூரியமூர்த்தி புதிய மனுவை தாக்கல் செய்தார். அந்த மனு இன்று நீதிபதி பிரியா முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது அதிமுக சார்பில் பதில் மனு தாக்கல் செய்வதற்கு அவகாசம் வேண்டும் என தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் சபாநாயகர் தனபால் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் வாதாடும்போது, பொதுக்கூட்டத்தை தள்ளி வைக்கக் கோரி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியிருந்ததால், அந்த கூட்டத்தை எதிர்த்த மனு காலாவதியாகிவிட்டதாக கருதவேண்டும் என்றார்.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழுவை கூட்ட முடியும் என்றும், தள்ளி வைக்க ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ் கடிதம் எழுதியதாக அவரது வழக்கறிஞர் குறிப்பிட்டார். ஓபிஎஸ் எழுதிய கடிதம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    தொடர்ந்து அதிமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் சூரியமுர்த்தி கட்சியின உறுப்பினரே இல்லை என்று தெரிவித்தார்.

    இதற்கு சூரியமூர்த்தி தரப்பு வழக்கறிஞர் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். சூரியமூர்த்தி கட்சியின் உறுப்பினர் என்பதற்கு ஆதாரம் இருப்பதாகவும், உறுப்பினர் இல்லை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் வழக்கறிஞர் கூறினார்.

    இதையடுத்து பொதுக்குழு கூட்டத்தை தள்ளிவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரிய மனு மீதான விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தார் நீதிபதி. இந்த மனுவுக்கு நாளை பதில் அளிக்கும்படி எதிர்மனுதாரர்களுக்கு உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தார்.  

    • அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை வலுத்துள்ள நிலையில் ஓபிஎஸ் ஆலோசனை.
    • கூட்டத்தில் தம்பிதுரை, வைத்திலிங்கம், மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு.

    சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முக்கிய நிர்வாகிகள் உடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்துகிறார்.

    அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை வலுத்துள்ள நிலையில் ஓபிஎஸ் ஆலோசனை நடத்துகிறார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் தம்பிதுரை, வைத்திலிங்கம், மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

    ×