search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 232927"

    • நாளை வரை பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
    • சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமிக்கு பவுர்ணமி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவில் தரை மட்டத்தில் இருந்து 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை 4 நாட்கள், பவுர்ணமி 4 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

    ஆனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு கடந்த 11-ந்தேதி முதல் நாளை (14-ந்தேதி) வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

    இன்று பவுர்ணமி என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி கோவில் அடிவாரத்தில் குவிந்தனர். மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் முககவசம் அணிந்தவர்கள் மட்டுமே சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

    சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு பால், பழம், இளநீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமிக்கு பவுர்ணமி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இந்த வழிபாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். புத்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • இன்று அதிகாலை பவுர்ணமி தொடங்கியதால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
    • கிரிவல பாதை முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியது.

    திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் சென்று வருகின்றனர்.

    மாதந்தோறும் வரும் பவுர்ணமி மட்டுமின்றி முக்கிய விஷேச நாட்களிலும் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    ஆனி மாதத்திற்கான பவுர்ணமி இன்று (புதன்கிழமை) அதிகாலை 3.18 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12.52 மணிக்கு நிறைவடைகிறது.

    இன்று அதிகாலை பவுர்ணமி தொடங்கியதால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவல பாதை முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியது. நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.

    சென்னை, வேலூர் உள்பட முக்கியமான நகரில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

    • ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி விரத தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
    • ஆனி மாதம் வளர்பிறை பவுர்ணமியில் மஹா விஷ்ணுவுக்கு உகந்த விரதம் வருகிறது.

    அமாவாசை என்பது முன்னோர்களை வழிபட முக்கியமானது என்பதுபோல், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று ஓர் விரத தினமாக அமைந்திருக்கிறது. அவை பற்றிய தொகுப்பை இங்கே காணலாம்.

    சித்திரை மாதம் பவுர்ணமியை சித்ரா பவுர்ணமி என்று சொல்வர். அன்று விரதம் இருந்து சித்ரகுப்த பூஜை செய்யப்படும்.

    வைகாசி மாதம் பவுர்ணமி வைகாசி விசாகம் ஆகும். அன்று நீராடி வைசாக தானம் என்று தயிர் சாதம், பானகம், நீர் மோர் ஆகியவற்றை தானமாக கொடுப்பது சிறந்தது.

    ஆனி மாதம் வளர்பிறை பவுர்ணமியில் கோபத்ம விரதம் என்று மஹா விஷ்ணுவுக்கு உகந்த விரதம் வருகிறது. அந்த விரதத்தை பெண்கள் விசேஷமாக கடைப்பிடிக்கிறார்கள்.

    ஆடி மாதம் பவுர்ணமி அன்று வட சாவித்ரி விரதம் மற்ற மாநிலங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஆடி மாத பவுர்ணமியில் கோகிலா விரதம் என்பதும் வட மாநிலங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது.

    ஆவணி மாதம் பவுர்ணமி அன்று ரட்ஷா பந்தனம் ஆகும். ரிக், யஜுர் வேதங்களுக்கு உபாகர்மம் எனப்படும் ஆவணி அவிட்டம் அனுசரிக்கப்படும்.

    புரட்டாசி பவுர்ணமி அன்று உமாமஹேஸ்வர விரதம். அன்று பார்வதி பரமேஸ்வரர்களை விரதம் இருந்து பூஜிப்பதால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்று சிவ ரகசியம் குறிப்பிடுகிறது. புரட்டாசி மாத பவுர்ணமிக்கு அடுத்த நாள் முதல் தேய்பிறை முழுவதும் மஹாளயபட்சம் என்று முன்னோர்களை வழிபட வேண்டும். அதற்கு மறுநாளில் இருந்து சாரதா நவராத்திரி ஆகும். துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகளை கொலு பொம்மைகளில் ஆவாஹனம் செய்து ஒன்பதாவது நாள் சரஸ்வதி பூஜை அன்று சரஸ்வதியை வழிபட்டால் கல்வியில் தேர்ச்சி பெறலாம். பத்தாவதுநாள் விஜயதசமி ஆகும்.

    ஐப்பசி மாதம் பவுர்ணமி அன்று எல்லா சிவன் கோவில்களிலும் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடத்தப்படும். அன்றைய தினம் கவுமுதீ ஜாகரண விரதம் என்று வட நாட்டில் விசேஷமாக அனுஷ்டிக்கப்படும். அன்று இரவில் நிலவு ஒளியில் லட்சுமி பூஜை செய்யப்படும். ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி அன்று நரக சதுர்த்தசி எனப்படும் தீபாவளி பண்டிகை நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.

    கார்த்திகை மாதம் பவுர்ணமி அன்று எல்லா வீடுகளிலும், சிவாலயங்களிலும், விஷ்ணு ஆலயங்களிலும் வரிசையாக கார்த்திகை தீபம் ஏற்றப்படும். அன்றைய நாளில் தீப தானம் செய்வது பெரும் புண்ணியத்தை அளிக்கும். மகாபலிக்கு மஹா விஷ்ணு வரம் அளித்த தினம். அன்று பக்தேஸ்வர விரதம் என்று வட மாநில பெண்கள் பரமேஸ்வர பூஜை செய்வார்கள்.

    மார்கழி மாதம் முழுவதும் தேவர்களுக்கு விடியற்காலம் என்பதால் அதிகாலையிலேயே எல்லா கோவில்களிலும் அபிஷேகம், பூஜை நடைபெறும். கடவுளுக்கு பொங்கல் நிவேதனம் செய்த பக்தர்களுக்கு வினியோகம் செய்வார்கள். மார்கழி மாதம் பவுர்ணமி அன்று திருவாதிரை உற்சவம். எல்லா சிவன் கோவில்களிலும் நடராஜப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். சிவகாமி அம்மையுடன் நடராஜப்பெருமானுக்கு சிதம்பரத்தில் விசேஷ அபிஷேகமும், புறப்பாடும் சிறப்பாக இருக்கும்.

    தைமாதம் பவுர்ணமி அன்று தைப்பூச விழாவானது மத்யார்ஜுனம் என்ற திருவிடைமருதூர் தலத்திலும், வடலூர், பழனி முதலிய தலங்களிலும் உற்சவம் சிறப்பாக நடைபெறும். மாசி மாதம் சுக்ல பஞ்சமி 'வசந்த பஞ்சமி' எனப்படும். வசந்த ருது ஆரம்பிக்கப் போவதாக பார்வதி பரமேஸ்வர வழிபாடு செய்வார்கள்.

    மாசி மாதம் பவுர்ணமி தினமானது மாசி மகம் ஆகும். அதற்கு பத்து நாட்கள் முன்னதாகவே உற்சவம் ஆரம்பித்து, பஞ்ச மூர்த்திகள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வருதல் நடைபெறும். பவுர்ணமி அன்று தீர்த்தவாரி. ஆகாமாவை என்ற நான்கு முக்யமான பவுர்ணமிகளில் இதுவும் ஒன்று. மாசி மாதம் முழுவதுமே மகாஸ்நானம் என்று தினமும் நதியில் நீராடி கம்பளி, சந்தனக்கட்டை, பசு முதலான தானங்களை செய்வது புண்ணியமாக கருதப்படுகிறது. மாசி மாதம் பவுர்ணமி அன்று பன்னிரண்டு வருஷத்துக்கொரு மஹாமகம் கும்பகோணத்திலும், பிரயாகை, ஹரித்வார் முதலான இடங்களில் கும்பமேளாவும் நடக்கும் அந்த இடங்களில் நீராடிய பின்னர் தானம் செய்வது விசேஷமானது.

    பங்குனி மாதம் பவுர்ணமி அன்று ஹோலிகா என்றும் ஹோலி பண்டிகை வடநாட்டில் மிக்க கோலாகலத்துடன் கொண்டாடப்படுகிறது.

    • பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு கிரிவலம் வருவார்கள்.
    • பவுர்ணமி மட்டுமின்றி முக்கிய விசேஷ நாட்களிலும் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிப்படுவதால் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்வார்கள்.

    மாதந்தோறும் வரும் பவுர்ணமி மட்டுமின்றி முக்கிய விசேஷ நாட்களிலும் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை (புதன்கிழமை) அதிகாலை 3.18 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12.52 மணிக்கு நிறைவடைகிறது.

    பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்வதற்காக முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றது.

    • பவுர்ணமி அன்று கிரிவலம் வருவது புண்ணியமாக கருதப்படுகிறது.
    • லட்சகணக்கான சிவ பக்தர்கள் இங்கு பவுர்ணமி அன்று கிரிவலம் வருகின்றனர்.

    திருவண்ணாமலையில் இருக்கும் அருணாச்சலேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் இருக்கும் மிக பழமை வாய்ந்த கோயிலாகும். பஞ்சபூதங்களில் ஒன்றான அக்னி வடிவத்தில் ஈசன் இங்கு உருவெடுத்துள்ளதால் பக்தர்களிடையே இதற்கு மேலும் சிறப்புண்டு. சென்னையிலிருந்து 180 கி.மீ தொலைவில் உள்ளது. சிவன் இங்கு மலை வடிவத்தில் தோன்றுவதால் அண்ணாமலை என்றும் அழைக்கப்படுகிறார்.

    ஓவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கமாகவும் புண்ணியமாகவும் கருதப்படுகிறது. லட்சகணக்கான சிவ பக்தர்கள் இங்கு பவுர்ணமி அன்று கிரிவலம் வருகின்றனர். ஒரு முறை இந்த மலையை சுற்றி வருவதற்கு 14 கி.மீ நடக்கவேண்டும். இதை மேற்கொள்ளும் அனைத்து பெரியவர்கள், சிறியவர்கள் அனைவரும் மன அமைதிபெறுவார்கள். உடல் முழு உற்சாகம் அடையும் என்பது பக்தர்களிடையே உள்ள நம்பிக்கையாகும்.

    கிரிவலம் வரும் வழியில் முதலில் தோன்றுவது இந்திரலிங்கம். இந்தலிங்கம் கிழக்கே பார்த்து அமைக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கம் பூலோக தேவனான இந்திரதேவனால் நிறுவப்பட்டது. சூரியன் மற்றும் சுக்கிரனின் ஆட்சியில் உள்ள லிங்கம் வணங்கும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும் பெருத்த செல்வமும் வழங்கும்.

    கிரிவலம் வரும் வழியில் இரண்டாவது லிங்கம் அக்னிலிங்கம். இந்த லிங்கம் தென்கிழக்கு திசையை நோக்கி உள்ளது. இந்த லிங்கத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இது கிரிவலம் செல்லும் வழியில் இடது புறம் இருக்கும் ஒரே லிங்கம் ஆகும். அக்னிலிங்கத்தை பிரார்த்தனை செய்யும் பக்தர்கள் நோயின்றி முழு ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என நம்பப்படுகிறது. இந்த லிங்கத்தின் கிரகம் சந்திரன். மேலும் சந்திரகிரகம் என்பதால் வாழ்க்கையில் வரும் இடைஞ்சல்களை அகற்றும் சக்தியுள்ளது என நம்புகிறார்கள். இந்த லிங்கம் தாமரை தெப்பகுளத்திற்கு அருகே உள்ளது.

    மூன்றாவது லிங்கமாக அமைந்துள்ள லிங்கம் எமலிங்கம். இந்த லிங்கம் தெற்கு திசையை நோக்கி உள்ளது. எம தர்மனால் நிறுவப்பட்ட லிங்கம் என கூறப்படுகிறது. இது செவ்வாய் கிரகத்திற்கு உட்பட்ட லிங்கம். இதனருகில் சிம்ம தீர்த்தம் எனப்படும் தெப்பகுளம் அமைந்துள்ளது. இதை வேண்டுபவர்கள் பண நெருக்கடி இல்லாமல் சந்தோஷமாக வாழலாம்என நம்பப்படுகிறது.

    நான்காவதாக உள்ள லிங்கம் நிருதி லிங்கம். இதன் திசை தென்கிழக்காகும். இதனுடைய கிரகம் ராகுவாகும். பூதங்களின் ராஜாவால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. சனி தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பகுளம் இதனருகில் உள்ளது. இதை வேண்டும் பக்தர்கள் நிம்மதியாக பிரச்சினைகளின்றி வாழலாம்.

    ஐந்தாவதாக உள்ள லிங்கம் வருண லிங்கம். இதற்குரிய திசை மேற்கு. மலைதரும் வருணதேவனால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது.

    இந்த லிங்கத்தை ஆட்சி செய்யும் கிரகம் சனி பகவான். இங்கு வருண தீர்த்தம் என்னும் தெப்பக்குளம் உள்ளது. சமூகத்தில் முன்னேற்றமடையவும் கொடிய நோய்களில் இருந்து தப்பிக்கவும் இந்த லிங்கத்தை பக்தர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    ஆறாவதாக உள்ள லிங்கம் வாயு லிங்கம். இந்த லிங்கம் வடமேற்கு திசையை நோக்கி உள்ளது. வாயு பகவானால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இதை ஆட்சி செய்யும் கிரகம் கேதுவாகும். இந்த லிங்கத்தை சேவித்து வந்தால் இருதயம், வயிறு, நுரையீரல், மற்றும் பொதுவாக வரும் நோய்களில் இருந்து காத்து கொள்ளலாம்.

    ஏழாவது லிங்கம் குபேர லிங்கம். வடதிசையை நோக்கியுள்ள இந்த லிங்கம் குருவை ஆட்சி கிரகணமாக கொண்டுள்ளது. செல்வத்தை வழங்கும் குபேர தெய்வத்தினால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. பக்தர்கள் செல்வ செழிப்புடன் திகழ இந்த லிங்கத்தை பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    கிரிவலத்தில் உள்ள கடைசி லிங்கம் ஈசானிய லிங்கம். வடகிழக்கை நோக்கி உள்ள இந்த லிங்கம் ஈசானிய தேவரால் நிறுவப்பட்டது. புதன் கிரகம் இந்த லிங்கத்தை ஆட்சி செய்கிறது. இந்த லிங்கத்தை சேவித்து வரும் பக்தர்கள் மன அமைதி யுடனும், அனைத்து காரியங்களிலும் வெற்றி கொண்டு திகழ்வார்கள்.

    • ஆன்மீக மையத்தின் 56-வது பவுர்ணமி
    • அனைவருக்கும் அன்ன தர்மம் நடந்தது.

    நாகர்கோவில் :

    மருந்துவாழ் மலை அய்யா வைகுண்டர் ஆன்மீக மையத்தின் 56-வது பவுர்ணமி தவமும், பணிவிடையும் 108 முறை அய்யா சிவ சிவ அரகரா மந்திரமும், கிரிவலமும் நடந்தது.

    இதில் தலைவர் வைகுண்டமணி பொருளாளர், நிறுவனர் செல்வகுமார், இணை செயலாளர் ரெத்தினசாமி, துணை செயலாளர் வைகுண்டராஜா, துணை பொருளாளர் அருந்ததி, நிர்வாகிகள் நாகராஜன், ராமச்சந்திரன், வாசுகி, வெங்கடேஷ், செயற்குழு உறுப்பினர் விமலா சரவ ணன், அமுதராஜன், கவுரவ ஆலோசகர் சந்திரசேகரன், மேலாண்ைம உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அன்ன தர்மம் நடந்தது.

    ×