search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒற்றை தலைமை விவகாரம்"

    • பொதுக்குழுவை தடுத்து நிறுத்த ஓ.பி.எஸ். தீவிரமாக முயற்சித்து வருகிறார்.
    • எடப்பாடி பழனிசாமி அணியினர் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் அடுத்த மாதம் (ஜூலை) 11-ந்தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

    நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் அனுமதி அளித்திருந்த 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக இரண்டு தரப்புக்கும் இடையே மோதல் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது.

    இதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பொதுக் குழு கூட்டத்தை நடத்த விடக்கூடாது என்பதில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    ஆனால் எடப்பாடி பழனிசாமியோ திட்டமிட்டபடி பொதுக்குழுவை நடத்தி ஒற்றை தலைமை தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.

    இது தொடர்பாக அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை திரட்டி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகி றார்.

    நேற்று தொடங்கிய ஆலோசனை இன்று 2-வது நாளாக நடைபெற்றது. இந்த ஆலோசனையில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களான அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க. வக்கீல் அணியில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு வக்கீல்கள் மற்றும் சட்ட நிபுணர்களும் பங்கேற்றனர்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுக்குழுவை திட்டமிட்ட படி நடத்துவது பற்றியும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களின் எதிர்ப்பை சட்டரீதியாக சந்தித்து வெற்றி பெறுவது குறித்தும் எடப்பாடி பழனிசாமி விரிவாக ஆலோசனை நடத்தினார்.

    நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், சட்ட விரோதமாக நடத்தப்பட்ட பொதுக்குழுவுக்கு எதிராக கோர்ட்டை நாடப்போவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கூறி இருக்கிறார்கள். இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான வைத்திலிங்கம் கூறும்போது, இன்னும் 3 நாட்களில் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.

    ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஜூலை 11-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கூறி தேர்தல் ஆணையத்தில் ஆன்லைன் மூலமாக மனு அளித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐகோர்ட்டை நாடவும் முடிவு செய்து உள்ளனர்.

    இப்படி ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகளுக்கு உரிய பதிலடி கொடுக்கும் வகையில் மனுக்களை தாக்கல் செய்வது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி சட்ட நிபுணர்களின் கருத்துக்களை கேட்டு தயாராகி வருகிறார்.

    ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளதாக கூறப்படும் மனுக்கள் தொடர்பாக உத்தரவிடும் முன்பு தங்கள் கருத்துக்களையும் கேட்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் தேர்தல் ஆணையத்தில் ரிட் மனு ஒன்றும் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக இன்னும் சில தினங்களில் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

    அதில் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியில் இருக்கும் ஆதரவு பற்றியும், ஒற்றை தலைமை குறித்தும் முக்கியமான பல அம்சங்கள் இடம்பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    நேற்று முன்தினம் பரபரப்புடன் நடந்து முடிந்த பொதுக்குழு கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட பிரதான மனு தொடர்பான வழக்கு விசாரணை இன்னும் முடிவுக்கு வராமலேயே உள்ளது. அதிகாரம் இல்லாத பதவிகளில் உள்ள ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு பொதுக் குழுவை கூட்டுவதற்கு அதிகாரம் இல்லை என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு வருகிற 11-ந்தேதிக்கு வழக்கு விசாரணை ஏற்கனவே ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    அன்றைய தினம்தான் மீண்டும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நிலுவையில் உள்ள இந்த வழக்குக்கு உரிய பதில் மனுவை தாக்கல் செய்வ தற்கும் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.

    இதுபோன்ற சட்ட பிரச்சினைகளை சமாளித்து வருகிற 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவை திட்டமிட்ட படி நடத்தி காட்ட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி அணியினர் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர்.

    அதே நேரத்தில் பொதுக்குழுவை தடுத்து நிறுத்த ஓ.பி.எஸ். தீவிரமாக முயற்சித்து வருகிறார். இந்த தொடர் மோதல் காரணமாக அ.தி.மு.க.வில் பரபரப்பு நீடித்துக் கொண்டே செல்கி றது.

    • எதிராளிக்கு எதிராளியே நண்பன் என்ற ரீதியில் சசிகலாவுடன் நெருங்கத் தொடங்கினார் ஓ.பி.எஸ். தனக்கு எதிராக உருவாகிய வியூகத்தை உடைக்க எடப்பாடியும் ஆயத்தமானார்.
    • அதுதான் இனி ஓ.பி.எஸ். ஒருங்கிணைப்பாளராக இருக்கக்கூடாது. ஒற்றை தலைமையை ஏற்படுத்தி விட வேண்டும் என்பதில் எடப்பாடி தீவிரமாக செயல்பட்டார்.

    சென்னை:

    எந்தப்பக்கம் போனாலும் கட்டையை போடுறாங்களே என்ற ரீதியில் தான் அ.தி. மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் அடுத்த என்ன செய்யலாம் என்று யோசித்து வருகிறார்.

    சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயிலுக்கு போனதும் ஆட்சியையும், கட்சியையும் தங்கள் வசமாக்க ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமியும், தனியாக கோஷ்டியாக இருந்த ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து கொண்டார்கள்.

    ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் இணைந்து கொண்டார்களே தவிர அவர்ளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லை என்பது வெளிப்படையாகவே தெரிய தொடங்கியது.

    அரியணையை எடப்பாடி பழனிசாமிக்கு கொடுத்துவிட்டு ஜெயில் வாசம் முடிந்து திரும்பினார் சசிகலா. தான் ஜெயிலில் இருந்தபோதே தனது எதிராளியான ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து எடப்பாடி பழனிசாமி தன்னையே கட்சியை விட்டு தூக்கியதை சசிகலாவால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.

    எதிராளிகளாக மாறிய இருவரையும் வீழ்த்தி கட்சியை கைப்பற்ற சசிகலா அமைத்த வியூகம் எதுவும் பலன் கொடுக்கவில்லை. ஆட்சி இருந்தவரை துணை முதல்-அமைச்சர் எப்போது தான் முதல்-அமைச்சர் ஆவது என்ற எண்ணம் ஓ.பன்னீர்செல்வத்தை தூங்க விடாமல் துரத்தியது.

    காய்களை நகர்த்த தொடங்கினார். எதிராளிக்கு எதிராளியே நண்பன் என்ற ரீதியில் சசிகலாவுடன் நெருங்கத் தொடங்கினார் ஓ.பி.எஸ்.

    தனக்கு எதிராக உருவாகிய வியூகத்தை உடைக்க எடப்பாடியும் ஆயத்தமானார். அதுதான் இனி ஓ.பி.எஸ். ஒருங்கிணைப்பாளராக இருக்கக்கூடாது. ஒற்றை தலைமையை ஏற்படுத்தி விட வேண்டும் என்பதில் எடப்பாடி தீவிரமாக செயல்பட்டார்.

    ஒவ்வொரு கட்டத்திலும் சூழ்நிலைகளும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே மாறியது. ஓ.பி.எஸ்சுடன் இருந்தவர்களை தன் பக்கம் இழுக்க எடப்பாடி பழனிசாமி நினைத்தார். ஆனால் அவர் எதிர்பாராத வகையில் ஒவ்வொருவராக நழுவி எடப்பாடி பக்கம் வந்து சேர்ந்தார்கள்.

    65 மாவட்ட செயலாளர்கள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், கட்சி தொண்டர்கள் என்று யானை பலம் வந்ததும், இனி போட்டு பார்க்கலாம் என்று முடிவு செய்துவிட்டார். அதனாலேயே பொதுக்குழு கூட்டத்தில் 'ஒற்றை தலைமை' என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

    ஒற்றை தலைமை என்றால் அது எடப்பாடி பழனிசாமிதான் என்று முடிவு செய்துவிட்டனர். பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்யும் பணிகள் விறு விறு என்று நடந்தன.

    'நம்பர் ஒன்' என்ற தனது ஆசை தவிடுபொடியாகி விடும் என்பதை உணர்ந்த ஓ.பி.எஸ். ஒற்றை தலைமை வேண்டாம் என்று பேசிப் பார்த்தார். எடுபடவில்லை. கோர்ட்டு மூலம் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து கோர்ட்டுக்கு சென்றார். முதல் தீர்ப்பு ஏமாற்றம் அளித்ததால் மேல் முறையீடு செய்தார்கள். விடிய விடிய விசாரணை நடந்தது. கோர்ட்டும், ஏற்கனவே முடிவு செய்த 23 தீர்மானங்களை மட்டும் தான் நிறைவேற்ற வேண்டும். புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என்று உத்தரவிட்டது.

    விடிய விடிய கண்விழித்து காத்து இருந்ததற்கு பலன் கிடைத்தது என்று சற்று ஆறுதல் அடைந்தார். ஆனால் அரசியல் சதுரங்கத்தில் தனது ஆட்டத்தை அதிரடியாக தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி.

    அனைத்து மாவட்டங்களிலும் தனது ஆதரவாளர்கள் மூலம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களிடம் மின்னல் வேகத்தில் கையெழுத்து பெற்றார்கள். கூட்டம் தொடங்கியதும் அனைத்து தீர்மானங்களையும் நிராகரித்து விட்டு ஒற்றை தலைமை என்ற தீர்மானத்தோடு மீண்டும் பொதுக்குழு என்ற அறிவிப்பு ஓ.பி.எஸ்.சை அதிர வைத்தது.

    பொதுக்குழுவுக்கு செல்லும் போதாவது தொண்டர்கள் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். மாறாக எதிர்ப்பை மட்டுமே அவரால் சம்பாதிக்க முடிந்தது. சோர்ந்து போன ஓ.பி.எஸ். தரப்பினர் நேற்று இரவு பண்ணை வீட்டில் கூடி ஆலோசித்த தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த கூட்டத்தில் சசிகலா தரப்பின் ஆதரவும் இருந்ததாக கூறப்படுகிறது. அ.தி.மு.க.வில் ஜெயலலிதாவால் முதல்வராக்கப்பட்டாலும் முதல் நிலையை அவரால் இன்று வரை எட்டிப்பிடிக்க முடியவில்லை. இப்போதும் அவர் போடும் திட்டப்படி சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரோடு இணைந்து புதிய முயற்சியை எடுத்தாலும் 2-ம் இடம் தான் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

    இந்த முகாமில் இப்படி நடக்க... எடப்பாடி பழனிசாமி முகாமிலும் சசிகலா, டி.டி.வி.தினகரனோடு சேர்ந்து வந்தால் அதையும் எதிர்கொள்வது பற்றி ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    • பதவி வெறி அவர்களின் அறிவை மயக்கிவிட்டது.
    • சட்டத்தை மறந்து, நீதிபதிகளின் உத்தரவை மறந்து அவர்கள் நடத்திய நாடகம் சர்வாதிகாரத்தின் உச்சம் என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இருந்து வெளியேறிய ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மாலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொதுக்குழுவில் 23 தீர்மானங்களையும் நிராகரிக்க உரிமை இல்லை. அதேபோல் அவர்கள் தேர்வு செய்த அவைத்தலைவர் தேர்வும் செல்லாது. தீர்மானங்கள் ரத்து ஆகும் போது பொதுக்குழு உறுப்பினர்களே ரத்து ஆகி விட்டதாகத்தானே அர்த்தம்.

    அப்படி இருக்கும் போது அவைத்தலைவரை எப்படி தேர்வு செய்ய முடியும். பதவி வெறி அவர்களின் அறிவை மயக்கிவிட்டது. சட்டத்தை மறந்து, நீதிபதிகளின் உத்தரவை மறந்து அவர்கள் நடத்திய நாடகம் சர்வாதிகாரத்தின் உச்சம்.

    பொதுக்குழுவை கூட்டுவதற்கு அவைத்தலைவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்குத்தான் அந்த அதிகாரம் உள்ளது. நேற்று நடந்தது பொதுக்குழு கூட்டமே அல்ல.

    ஓ.பன்னீர்செல்வம் எப்போதுமே பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறார். அவரை பொறுத்தவரை இரட்டை தலைமை தான் கட்சிக்கு நல்லது. எதிர்காலத்தில் ஆட்சியை பிடிக்க முடியும் என்றார்.

    ஆனால் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நிராகரித்துவிட்டார்கள். கட்சி இருக்கும் நிலையில் ஒற்றை தலைமை தான் கட்சியின் வளர்ச்சிக்கு நல்லது. சிறப்பாக செயல்பட முடியும்.

    ஒற்றை தலைமை என்ற திட்டத்தை எக்காரணத்தை கொண்டும் கைவிட முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டார்கள்.

    • ஓ.பன்னீர்செல்வம், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவே டெல்லி சென்றிருப்பதாக கூறியுள்ள போதிலும், அவரது டெல்லி பயணத்தின் பின்னணியில் கட்சி விவகாரம் மறைந்திருப்பதாகவே பேசப்படுகிறது.
    • அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி அடுத்த மாதம் நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டம் தொடர்பாகவும் அதில் ஒற்றை தலைமை பதவியை ஏற்பது பற்றியும் வியூகம் வகுத்து வருகிறார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை கோஷம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திலும் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் கட்சியை வழி நடத்தி வந்த நிலையில் கடந்த வாரம் திடீரென ஒற்றைத் தலைமை கோஷத்தை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் எழுப்பினார்கள்.

    ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்தான் ஒற்றை தலைமை விவகாரம் முதலில் எழுப்பப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியை தொடர்ந்து அ.தி.மு.க.வில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

    இதன் பின்னர் ஒற்றை தலைமையே வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும், இரட்டை தலைமையே நீடிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் குரல் எழுப்பி வந்தனர்.

    இந்த நிலையில்தான் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமைக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இதற்கு எடப்பாடி பழனிசாமியை முன்நிறுத்தி கட்சியின் முன்னணி நிர்வாகிகள் காய் நகர்த்தி உள்ளனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்டத்தில் இருந்து வெளியேறியதும், பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என்று அவரது ஆதரவாளர்கள் காட்டமாக கருத்து தெரிவித்திருப்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதைத் தொடர்ந்து அ.தி.மு.க.வில் அடுத்து என்ன நடக்க போகிறது? என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. அடுத்த மாதம் 11-ந்தேதி மீண்டும் கூட்டப்பட்டுள்ள பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை தொடர்பாக தீர்மானம் போடப்படும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் அதனை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்பதில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் உறுதியாக உள்ளனர்.

    இதனை மனதில் வைத்து தான் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கருத்து தெரிவித்துள்ளார்.

    பொதுக்குழு கூட்டத்தில் நடந்த சம்பவங்கள் கோர்ட்டு அவமதிப்பு என்றும் இதனை எதிர்த்து வழக்கு தொடரப் போகிறோம் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

    இதன் மூலம் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் விரைவில் மனுதாக்கல் செய்யப்பட உள்ளது. அதில் பொதுக்குழு கூட்டத்தில் நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தையும் பட்டியலிட்டு மனுவாக அளிக்க உள்ளனர்.

    பொதுக்குழுவுக்கு முந்தைய நாள் இரண்டு நீதிபதிகள் அளித்த தீர்ப்பை சுட்டிக் காட்டியும், அதற்கு எதிராக பொதுக்குழு கூட்டம் நடந்து முடிந்துள்ளது எனவும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த விவகாரத்தில் சட்ட ரீதியாக அனைத்தையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவாளர்களும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரின் சட்ட நடவடிக்கைளை எதிர்கொள்ள தயாராகி வருகிறார்கள்.

    இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு மூத்த வக்கீல் ஒருவர் கூறும்போது, ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ள மனுக்களுக்கு பதில் மனு தாக்கல் செய்ய நாங்களும் தயாராகவே உள்ளோம் என்று தெரிவித்தார்.

    பொதுக்குழு உறுப்பினர்களின் முழு ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது. எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்களின் ஆதரவையும் அவர் பெற்று உள்ளார். தேவைப்பட்டால் இதனை கோர்ட்டில் தெரிவிப்போம் என்றும் அவர் கூறினார்.

    நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்ட நிகழ்வுகள் செல்லாது என்பதை நிரூபிப்பதற்கு தேவையான சட்ட நுணுக்கங்கள் பற்றி ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு வக்கீல்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில் பொதுக்குழு உறுப்பினர்களின் தற்போதைய ஆதரவை வைத்துக் கொண்டு தலைமை பதவியை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர்.

    இது தொடர்பாக இரு தரப்பினரும் திரைமறைவு வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    ஓ.பன்னீர்செல்வம், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவே டெல்லி சென்றிருப்பதாக கூறியுள்ள போதிலும், அவரது டெல்லி பயணத்தின் பின்னணியில் கட்சி விவகாரம் மறைந்திருப்பதாகவே பேசப்படுகிறது.

    அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி அடுத்த மாதம் நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டம் தொடர்பாகவும் அதில் ஒற்றை தலைமை பதவியை ஏற்பது பற்றியும் வியூகம் வகுத்து வருகிறார். எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையேயான போட்டியில் வெல்லப்போவது யார்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    • மண்டபத்திற்கு வெளியே தனியாக ஒரு அரங்கம் அமைக்கப்பட்டு அதில் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்து போடுவதற்காக மேஜைகள் போடப்பட்டு இருந்தன.
    • இதே போல புதுவை, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகம், கேரளா, டெல்லி, அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்த உறுப்பினர்கள் கையெழுத்து போடவும் வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை என்ற சர்ச்சை வெடித்த நிலையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே பனிப்போர் நிலவியது.

    கடந்த வாரம் இந்த மோதல் உச்ச கட்டத்தை அடைந்தது. பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் பகிரங்கமாக தெரிவித்தார்.

    ஆனால் திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து இந்த விவகாரம் கோர்ட்டு வரை சென்றது. ஐகோர்ட்டில் பொதுக்குழு கூட்டுவதற்கு தடை இல்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மேல் முறையீடு செய்யப்பட்டது. நேற்று விடிய விடிய நடந்த இந்த வழக்கில் பொதுக்குழுவில் ஏற்கனவே உள்ள 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்றும், புதிதாக தீர்மானங்கள் கொண்டு வரக்கூடாது என்றும் நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பு கூறினார்கள்.

    இன்றைய பொதுக்குழுவில் ஒற்றை தலைமையை கொண்டு வந்து எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்வதற்கு ஏற்பாடுகள் நடந்தது.

    இதற்கு அ.தி.மு.க.வில் ஆதரவும் பெருகியது. 65-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருப்பது தெரியவந்தது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் இன்று காலை கூடியது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து பொதுக்குழு உறுப்பினர்கள் நேற்றே சென்னைக்கு வரத் தொடங்கினார்கள்.

    இன்று அதிகாலை 5 மணியில் இருந்தே பொதுக்குழு உறுப்பினர்கள் அரங்கத்திற்கு வரத்தொடங்கினார்கள்.

    மண்டபத்தின் வெளிப்புற வாயிலில் 2,500-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவன பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    கடும் சோதனைகளுக்கு பிறகு அடையாள அட்டை இருந்தவர்கள் மட்டும் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். பொதுக்குழு உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை இல்லாதவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    காலை 7 மணி அளவிலேயே பெரும்பாலான உறுப்பினர்கள் மண்டபத்தில் வந்து அமர்ந்தனர். அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அனைவரும் அமர வைக்கப்பட்டனர்.

    மண்டபத்திற்கு வெளியே தனியாக ஒரு அரங்கம் அமைக்கப்பட்டு அதில் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்து போடுவதற்காக மேஜைகள் போடப்பட்டு இருந்தன.

    இதே போல புதுவை, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகம், கேரளா, டெல்லி, அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்த உறுப்பினர்கள் கையெழுத்து போடவும் வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.

    அனைத்து உறுப்பினர்களும் கையெழுத்திட்ட பின் மண்டபத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    காலை 9 மணிக்கு பிறகு முக்கிய தலைவர்கள் ஒவ்வொருவராக மண்டபத்திற்கு வரத் தொடங்கினார்கள்.

    இதில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் இந்த கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் என முதலில் தகவல் வெளியானது.

    ஆனால் பொதுக்குழு தொடர்பான தீர்ப்பில் தனக்கு சாதகமான தீர்ப்பு வந்ததால் அவர் கூட்டத்தில் பங்கேற்க முடிவு செய்தார்.

    இதையடுத்து ஓ.பன்னீர் செல்வமும் சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து தனது பிரசார வாகனத்தில் ஆதரவாளர்களுடன் புறப்பட்டார்.

    கோயம்பேட்டில் இருந்து வானகரம் வரை கட்சி கொடிகளுடன் திரண்டிருந்த தொண்டர்கள் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ஓ.பன்னீர் செல்வம் வரும் போது அவருக்கு ஆதரவாகவும், எடப்பாடி பழனிசாமி வரும் போது அவருக்கு ஆதரவாகவும் வாழ்க கோஷம் எழுப்பினார்கள்.

    இதற்காக பல இடங்களில் சிறிய மேடை அமைத்து இசை நிகழ்ச்சிகள் மற்றும் குதிரைகளில் வீரர்கள் நின்று வரவேற்பு, கரகாட்டம், செண்டை மேளங்கள் முழங்க வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    கூட்டம் நடந்த மண்டபத்திற்குள் நுழைய முடியாத அளவுக்கு கடுமையான கூட்டம் அலை மோதியது.

    எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வந்த வாகனங்கள் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தது. இதனால் அவர்கள் 2 பேரும் பொதுக்குழு கூட்டத்திற்கு தாமதமாக வந்து சேர்ந்தனர்.

    மண்டபத்திற்கு முதலில் ஓ.பன்னீர்செல்வம் வந்து சேர்ந்தார். அப்போது அவரது வாகனத்தை அ.தி.மு.க. தொண்டர்கள் சூழ்ந்து கொண்டு துரோகி ஓ.பி.எஸ். என கோஷம் எழுப்பினார்கள்.

    பின்னர் காரை விட்டு இறங்கிய ஓ.பன்னீர் செல்வம் கூட்டம் நடந்த மண்டபத்திற்குள் நுழைந்தார். அவரை பார்த்ததும் அங்கிருந்த தொண்டர்கள் ஒற்றை தலைமை வேண்டும் ... ஒற்றை தலைமை வேண்டும்... துரோகி ஓ.பி.எஸ். என தொடர்ந்து கோஷங்கள் எழுப்பியவாறு இருந்தனர்.

    மேலும் ஓ.பன்னீர் செல்வத்தை வெளியே செல்லும் படி பொதுக்குழு உறுப்பினர்கள் பெரும்பாலானோர் கூச்சல் போட்டனர். எடப்பாடி அணியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஓ.பன்னீர் செல்வம் அதிர்ச்சி அடைந்தார்.

    அப்போது முன்னாள் அமைச்சர் ப.வளர்மதி அங்கிருந்து எழுந்து சென்று தொண்டர்களை அமைதிபடுத்தினார். தொண்டர்கள் மத்தியில் அவர் 'ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை' என்ற எம்.ஜி.ஆரின் பாடலை சொல்லியபடியே சமாதானப்படுத்தினார்.

    இதனால் மண்டபத்திற்குள் பரபரப்பு ஏற்பட்டது.

    சிறிது நேரத்தில் எடப்பாடி பழனிசாமியும் கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அவரை பார்த்ததும் எடப்பாடி பழனிசாமி வாழ்க, கட்சியின் பொதுச்செயலாளரே வருக என வாழ்த்து கோஷம் எழுப்பினார்கள்.

    எடப்பாடி பழனிசாமி படங்களுடன் கூடிய போர்டுகளை கையில் ஏந்தி மேளதாளத்துடன் உற்சாகத்துடன் அவருக்கு வரவேற்பு கொடுத்தனர்.

    தொண்டர்கள் வரவேற்பை பெற்று கொண்ட எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். 2 தலைவர்களும் தாமதமாக வந்ததால் 10 மணிக்கு கூட வேண்டிய பொதுக்குழு கூட்டம் தாமதமாக 11.30 மணிக்கு மேல் தொடங்கியது.

    தற்காலிக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

    இந்த கூட்டத்தில்2,665 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் 2 தலைவர்களும் கலந்து கொண்ட சூழ்நிலையில் ஒற்றை தலைமை கோஷம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பொதுக்குழு கூட்டத்தையொட்டி மண்டபத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஓ.பன்னீர்செல்வத்தின் நெருங்கிய ஆதரவாளரான அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பொதுக்குழு கூட்ட அரங்கில் நுழைந்து மேடையில் ஏறினார்.
    • அப்போது துரோகி வைத்திலிங்கமே வெளியே போ என்று அ.தி.மு.க. தொண்டர்கள் கோஷமிட்டதால் பொதுக்குழு கூட்ட அரங்கில் பரபரப்பு நிலவியது.

    அ.தி.மு.க. பொதுக்குழு இன்று பரபரப்பான சூழலில் கூடுகிறது. இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வந்திருந்தனர்.

    ஓ.பன்னீர்செல்வத்தின் நெருங்கிய ஆதரவாளரான அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பொதுக்குழு கூட்ட அரங்கில் நுழைந்து மேடையில் ஏறினார்.

    அப்போது அ.தி.மு.க. தொண்டர்கள் வைத்திலிங்கத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். துரோகி வைத்திலிங்கமே வெளியே போ என்று அ.தி.மு.க. தொண்டர்கள் கோஷமிட்டதால் பொதுக்குழு கூட்ட அரங்கில் பரபரப்பு நிலவியது. இதை தொடர்ந்து வைத்திலிங்கம் பொதுக்குழு மேடையில் இருந்து கீழே இறங்கினார்.

    • சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் இருந்து மதுரவாயல், வானகரம் வரை போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது.
    • வாகனங்கள் ஊர்ந்த படியே சென்று கொண்டிருந்தன. சாலையின் இரு புறங்களிலும் இந்த போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று காலை நடைபெறுகிறது.

    இதில் பங்கேற்பதற்காக இன்று காலையிலேயே அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் பொதுக்குழு நடைபெறும் இடத்துக்கு வரத்தொடங்கினார்கள். காலை முதலே கார்கள் மற்றும் பல்வேறு வாகனங்களில் அ.தி.மு.க. வினர் கட்சி கொடியுடன் பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக கூட்டம் நடை பெறும் இடத்துக்கு வந்தனர்.

    இதனால் கோயம்பேடு, மதுரவாயல், வானகரம் ஆகிய இடங்களில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. நேரம் செல்லச்செல்ல வாகன நெரிசல் அதிகரித்துக்கொண்டே சென்றது.

    சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் இருந்து மதுரவாயல், வானகரம் வரை போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. வாகனங்கள் ஊர்ந்த படியே சென்று கொண்டிருந்தன. சாலையின் இரு புறங்களிலும் இந்த போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

    இதனால் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். வேலைக்கு சென்றவர்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்ற மாணவ-மாணவிகள் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள்.

    இந்த போக்குவரத்து நெரிசலில் அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் ஒன்று சிக்கியது. உடனே போலீசார் களத்தில் இறங்கி அந்த ஆம்புலன்சுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.

    போக்குவரத்து நெரிசல் காரணமாக புழல்-தாம்பரம் வெளிவட்ட சாலையில் இருந்து கனரக வாகனங்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க.வில் பொதுக்குழு உறுப்பினர்கள் 2,640 பேர் உள்ளனர்.
    • அவர்கள் அனைவருக்கும் தனித்தனியாக கையெழுத்திட்டு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் அனுப்பி உள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நாளை காலை நடக்கிறது.

    இதில் ஒற்றை தலைமை பற்றிய தீர்மானம் கொண்டுவந்து எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளதால் இதை தடுக்கும் நடவடிக்கைகளை ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்டார். ஆனால் அவரது முயற்சி கைகூடவில்லை.

    இந்த நிலையில் பொதுக்குழு கூட்டத்தை தடுக்கும் நடவடிக்கையாக ஓ.பன்னீர் செல்வம் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் பொதுக்குழு கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என்று கூறி உள்ளார்.

    அ.தி.மு.க.வில் பொதுக்குழு உறுப்பினர்கள் 2,640 பேர் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தனித்தனியாக கையெழுத்திட்டு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் அனுப்பி உள்ளார்.

    பொதுக்குழு உறுப்பினர்களில் 100 பேர் முதல் 150 பேர் மட்டுமே ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக உள்ளனர். எனவே மற்றவர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர். அவர்களில் பலர் தற்போது எடப்பாடி பழனிசாமி வீட்டிலேயே இருக்கிறார்கள். மற்றவர்கள் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

    இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம், பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

    • நாளை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திற்கு 2700 பேருக்கு அழைப்பு விடுவிக்கப்பட்ட நிலையில் ஏராளமானோர் இன்றே சென்னை வர தொடங்கி உள்ளனர்.
    • இதனால் சென்னையில் உள்ள பெரும்பாலான ஓட்டல்களிலும் அறைகள் நிரம்பி உள்ளன.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் அவர்களை சந்தித்து ஆதரவு கூறி வந்தனர்.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு நாட்கள் செல்ல செல்ல வளர்பிறை போல ஆதரவாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    அதே வேளையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தேய்பிறை போல் அவருக்கு ஆதரவாளர்கள் குறைந்து வருகிறார்கள். நேற்றும், இன்றும் எடப்பாடி பழனிசாமி வீட்டு முன்பு ஆதரவாளர்கள் கூட்டம் திரண்டு வந்தபடியே இருந்தனர்.

    பரபரப்பான இந்த சூழ்நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயன், தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் வேளச்சேரி அசோக் ஆகியோர் இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

    இது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த தரப்பில் முக்கிய நிர்வாகிகளாக வெல்லமண்டி நடராஜன், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் உள்பட குறிப்பிட்ட சிலரே ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவாக உள்ளனர்.

    எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்த வேளச்சேரி அசோக் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் பிளவு ஏற்படக்கூடாது. ஊர் கூடி தேர் இழுப்போம், அனைவரும் ஒன்று கூடி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அடுத்த சட்டமன்ற தேர்தலை வென்று கோட்டையை பிடிப்போம். அம்மாவின் வழியில் அ.தி.மு.க.வின் பொற்கால ஆட்சியை வழங்குவோம்.

    அனைவரும் ஒற்றைத் தலைமையை ஆதரிப்போம். எடப்பாடி பழனிசாமி கரத்தை வலுப்படுத்துவோம்.

    ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்டத்திற்கு செல்வார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எடப்பாடி பழனிசாமியின் கிரீன்வேஸ் இல்லத்தில் இன்றும் காலையில் இருந்தே ஏராளமான மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், அணி நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், கிளை செயலாளர்கள் என ஏராளமான தொண்டர்கள் ஒன்று திரண்டு ஆதரவு தெரிவித்ததால் அந்த பகுதி திருவிழா கூட்டம் போல் காணப்பட்டது. அனைவரும் பூங்கொத்து கொடுத்தும், சால்வை, மாலை அணிவித்தும் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    அவர்களை தோளில் தட்டி கொடுத்து நன்றி தெரிவித்ததுடன் அனைவரும் ஒன்று கூடுவோம் என்று உற்சாகப்படுத்தினார்.

    நாளை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திற்கு 2700 பேருக்கு அழைப்பு விடுவிக்கப்பட்ட நிலையில் ஏராளமானோர் இன்றே சென்னை வர தொடங்கி உள்ளனர்.

    இதனால் சென்னையில் உள்ள பெரும்பாலான ஓட்டல்களிலும் அறைகள் நிரம்பி உள்ளன.

    • எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அதை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை.
    • இந்த நிலையில் நாளை பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது. கடந்த 9 நாட்களாக அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை கருத்து வலுத்து வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஒற்றை தலைமை என்பதை எதிர்த்து வருகிறார்.

    எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அதை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. இந்த நிலையில் நாளை பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    நாளை பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வம் இன்று தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தேனி சையது கான், கன்னியாகுமரி அசோகன் வெல்லமண்டி நடராஜன், வைத்தியலிங்கம், குன்னம் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் மனோஜ் பாண்டியன், தர்மர் எம்.பி. ஆகியோரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

    • அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ள மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
    • என்றாலும் அ.தி.மு.க.வில் பொருளாளர் என்ற அடிப்படையில் அவரிடம் இன்று வரவு-செலவு கணக்குகள் கொடுக்கப்பட்டன.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் பதவி வகிக்கும் ஓ.பன்னீர்செல்வம் பொருளாளர் பதவியையும் வகித்து வருகிறார். பொதுக்குழு கூட்டங்களில் பொருளாளர்தான் கட்சியின் வரவு-செலவு விவரங்களை வாசித்து தாக்கல் செய்வார்.

    அதற்கு பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படும். அதுதான் கட்சியின் அதிகாரப்பூர்வ வரவு-செலவு கணக்காக எடுத்துக்கொள்ளப்படும்.

    தற்போது எடப்பாடி பழனிசாமி அணியுடன் உரசல் ஏற்பட்டு இருப்பதால் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ள மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. என்றாலும் அ.தி.மு.க.வில் பொருளாளர் என்ற அடிப்படையில் அவரிடம் இன்று வரவு-செலவு கணக்குகள் கொடுக்கப்பட்டன.

    நாளை அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் வாசிப்பதற்காக இந்த வரவு-செலவு கணக்கு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் கூட்டத்திற்கு வராதபட்சத்தில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

    • நாளை நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இரட்டை தலைமைக்காக விதிகளை நீக்கிவிட்டு 2017-ம் ஆண்டுக்கு முன்பு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்ற பழைய விதிகளை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
    • அதற்காக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஆலோசித்து வருகிறார்கள். இது தொடர்பாக தீர்மானம் கொண்டு வந்து இரட்டை தலைமையை முழுமையாக நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளருக்கு தான் முழு அதிகாரமும் இருந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த 2017-ம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கட்சியை இணைந்து வழிநடத்தி செல்லும் வகையில் பொதுச்செயலாளர் பதவிக்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.

    இந்த இரட்டை தலைமையால் கட்சியினரின் அதிகாரம் இருவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நாளை நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இரட்டை தலைமைக்காக விதிகளை நீக்கிவிட்டு 2017-ம் ஆண்டுக்கு முன்பு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்ற பழைய விதிகளை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

    அதற்காக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஆலோசித்து வருகிறார்கள். இது தொடர்பாக தீர்மானம் கொண்டு வந்து இரட்டை தலைமையை முழுமையாக நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் ஒற்றை தலைமையில் பொதுச்செயலாளருக்கே அனைத்து அதிகாரமும் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    ×