search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒற்றை தலைமை விவகாரம்"

    • கோர்ட்டு உத்தரவுபடி பொதுக்குழு கூட்டத்துக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். தனி நபர் அரங்கில் கூட்டம் நடைபெறுவதால் இதில் தலையிட முடியாது.
    • பொது வெளியில் நடந்தால் மட்டுமே கூட்டத்திற்கு அனுமதியோ, மறுப்போ கூற முடியும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சினை ஏற்பட்டுள்ள நிலையில் நாளை அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

    சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்றும் இதற்கு அனுமதி தரக்கூடாது என்றும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆவடி போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

    இதற்கு ஆவடி போலீஸ் தரப்பில் இன்று கூறப்பட்டு இருப்பதாவது:-

    கோர்ட்டு உத்தரவுபடி பொதுக்குழு கூட்டத்துக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். தனி நபர் அரங்கில் கூட்டம் நடைபெறுவதால் இதில் தலையிட முடியாது.

    பொது வெளியில் நடந்தால் மட்டுமே கூட்டத்திற்கு அனுமதியோ, மறுப்போ கூற முடியும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கையை ஆவடி போலீஸ் நிராகரித்தது.

    • சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்திற்கு நேற்று இரவு முதல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
    • ராயப்பேட்டை துணை போலீஸ் கமிஷனர் தலைமையில் 70 போலீசார் அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நாளை சென்னை வானகரத்தில நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு தரவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழக அலுவலகத்திற்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதை ஏற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்திற்கு நேற்று இரவு முதல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. ராயப்பேட்டை துணை போலீஸ் கமிஷனர் தலைமையில் 70 போலீசார் அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.

    ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அங்கு அத்துமீறி நுழைந்து ஏதாவது செய்து விடக்கூடாது என்பதற்காக இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. 70 போலீசார் தவிர எடப்பாடி பழனிசாமி அணியினரும் அங்கு கூடுதலாக இருந்தனர்.

    அ.தி.மு.க. தலைமை கழகத்தில் 70 போலீசார் குவிக்கப்பட்டதும் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. ஏதோ சர்ச்சை ஏற்பட்டு விட்டதாக கருதினார்கள்.

    இதை அறிந்ததும் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் போடப்பட்டு இருந்த பாதுகாப்பு அவசரம் அவசரமாக விலக்கி கொள்ளப்பட்டது. 70 போலீசாரும் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இருந்து வேகவேகமாக கலைந்து சென்றனர்.

    போலீசார் ஏன் பாதுகாப்பிற்கு வந்தனர். எதற்காக திடீரென திரும்பி சென்றனர் என்ற விவரம் அறிவிக்கப்படவில்லை.

    • நாளை நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.
    • அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் 2500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நாளை (23-ந்தேதி) காலை 10 மணிக்கு நடக்கிறது.

    இதற்காக வெளியிடப்பட்ட அறிவிப்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையெழுத்திட்டு இருந்தனர்.

    பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் பற்றி ஆலோசனை நடத்துவதற்காக கடந்த 14-ந்தேதி தலைமை கழகத்தில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது.

    அந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி தரப்பினர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தை போல கட்சியை வழிநடத்த ஒற்றை தலைமை வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். அதற்கு ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கட்சியில் பிரச்சினை ஏற்பட்டது. ஒற்றை தலைமை தொடர்பாக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் குரல் எழுப்பினார்கள்.

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே தங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

    கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இந்த ஆலோசனை நீடித்தது. இதனால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வீடுகளில் அவர்களின் ஆதரவாளர்கள் குவிந்து வந்தனர். இதனால் கடந்த 9 நாட்களாக அ.தி.மு.க.வில் பரபரப்பு நிலவுகிறது.

    எடப்பாடி பழனிசாமி, ஓபன்னீர்செல்வம் இடையே ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினை தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இதில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். எனவே பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் பதவிக்கு கொண்டுவரும் தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது.

    இதைவிரும்பாத ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்தார். இதை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஏற்க மறுத்தனர். இதனால் பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதை தடுக்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் முயற்சி மேற்கொண்டனர்.

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த மாவட்ட செயலாளர் பென்ஜமின் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

    ஆனால் அதேநேரத்தில் பொதுக்குழு கூட்டத்துக்கு அனுமதி மறுக்கும்படி ஓ.பன்னீர்செல்வம் சார்பில் ஆவடி போலீஸ் கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆவடி போலீஸ் கமிஷனர் நிராகரித்து விட்டார்.

    இந்த நிலையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பொதுக்குழு கூட்டம் நாளை (23-ந்தேதி) காலை 10 மணிக்கு நடக்கிறது.

    செயற்குழு, பொதுக்குழு கூட்டத்துக்கு கட்சியின் 68 ஆண்டுகால மூத்த உறுப்பினரான தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. எனவே புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வைத்திருக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

    பொதுக்குழு தொடங்கியதும் முதலில் தற்காலிக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் நிரந்தர அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதன் பிறகு அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

    பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வர யார் யார் ஆதரவு தருகிறீர்கள் என்று அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் தமிழ்மகன் உசேன் கேட்பார். ஆதரவு தெரிவிப்பவர்கள் கைகளை உயர்த்தி காண்பிக்க வேண்டும்.

    பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கும் நிலையில் பொதுச்செயலாளர் பதவியை கொண்டுவருவதற்கான சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்படும். பொதுச்செயலாளர் பதவிக்கான தீர்மானம் நிறைவேற்றப்படும் நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுகிறார்.

    பொதுக்குழு கூட்டத்திலேயே அவரை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது. அல்லது பொதுக்குழு கூட்டத்துக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்யும் நடவடிக்கைகள் தொடங்கும்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் மற்ற 23 தீர்மானங்களும் கொண்டு வந்து நிறைவேற்றப்படும்.

    இதற்கிடையே நாளை நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் 2500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் அ.தி.மு.க.வில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் பட்டியலில் 12 மாவட்ட செயலாளர்கள் இருந்தனர். அதில் 2 மாவட்ட செயலாளர்கள் இன்று எடப்பாடி பழனிசாமி பக்கம் மாறி சென்றனர்.
    • நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, விருதுநகர் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் இடையே மோதல் முற்றி வரும் நிலையில் 8-வது நாளாக தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    இருவரையும் தொண்டர்கள், நிர்வாகிகள் சந்தித்து ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

    ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் பட்டியலில் 12 மாவட்ட செயலாளர்கள் இருந்தனர். அதில் 2 மாவட்ட செயலாளர்கள் இன்று எடப்பாடி பழனிசாமி பக்கம் மாறி சென்றனர்.

    நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, விருதுநகர் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்.

    மேலும் மதுரை மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பாவும் சந்தித்து பேசினார்.

    தொடர்ந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்த எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆதரவை ஏற்றுக் கொண்டார். இதே போல ஓ.பன்னீர்செல்வமும் அவரது வீட்டில் கூடியிருந்த தொண்டர்களை சந்தித்தார்.

    ஓ.பன்னீர்செல்வத்தை ஆருத்ரா நேவிஸ் பிரபாகர், அமலன் சாம்ராஜ் ஆகியோர் சந்தித்தனர். அடுத்த கட்ட நகர்வு குறித்து 2 தலைவர்களும் ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுக்குழு நடைபெறும் வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
    • 2750 பேர் அமரக்கூடிய வகையில் இருக்கைகள் போடப்படுகின்றன. சிறப்பு விருந்தினர்களுக்கு அனுமதி இல்லாததால் சுமார் 1000 இருக்கைகள் குறைக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டு உள்ளது.

    பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார். திட்டமிட்டபடி நாளை மறுநாள் பொதுக்குழுவை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர்.

    இதற்கிடையில் பொதுக்குழுவில் நிறைவேற்ற பொதுவான 23 தீர்மானங்கள் இறுதி செய்யப்பட்டு உள்ளன. 12 பேர் கொண்ட தீர்மான குழுவினர் இதனை இறுதி செய்து இருவருக்கும் கொடுத்துள்ளனர். அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. முடக்குவது கண்டித்தும், ஆளும் கட்சியினர் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் தீர்மானங்கள் கொண்டு வரப்படுகிறது.

    இது தவிர முல்லைப் பெரியாறு அணை, மேகதாது, காவிரி பிரச்சினை போன்ற பொதுவான பிரச்சினைக்குரிய தீர்மானங்களும் இடம்பெறுகின்றன.

    இந்த தீர்மானங்களை யார்-யார் முன்மொழிவது, வழிமொழிவது என்பது போன்ற பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் அடங்கிய தீர்மான குழு கொண்டு வந்துள்ள இத்தீர்மானங்கள் பொதுக்குழுவில் வைக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.

    ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் இதில் இடம்பெறவில்லை. ஒற்றை தலைமை தீர்மானத்தை பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானமாக கொண்டு வர எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    இது குறித்து கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    பொதுக்குழுவில் முதலில் 15 தீர்மானங்கள் கொண்டு வரலாம் என ஆலோசிக்கப்பட்டது. பின்னர் 18 ஆகவும், இறுதியாக 23 ஆகவும் முடிவு செய்யப்பட்டது. இந்த தீர்மானங்களில் ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் இடம்பெறவில்லை.

    பொதுக்குழு நடப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. பொதுக்குழுவில் வைத்து ஒற்றை தலைமை பிரச்சினை குறித்து விவாதிக்கக் கூடும். அப்போது சிறப்பு தீர்மானமாக கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பதால் ஒற்றை தலைமை யார்? என்ற பொருள் வைக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.

    ஆனால் ஒற்றை தலைமை சிறப்பு தீர்மானம் செல்லுபடியாகுமா? ஆகாதா? என்பது கட்சியின் சட்ட விதிகளுக்கு உட்பட்டது. அதனால் ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே தேர்ந்து எடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டிய பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தீர்மானம் கொண்டு வருவது சட்டப்படி முறையல்ல. அது செல்லுபடி ஆகாது என கோர்ட்டிற்கு செல்லவும் வாய்ப்பு உள்ளது.

    எனவே இந்த பொதுக்குழுவில் ஒற்றை தலைமை பிரச்சினையை பற்றி விவாதிக்காமல் அடுத்து ஒரு சிறப்பு பொதுக்குழுவை கூட்டி அதனை தீர்மானமாக கொண்டு வந்தால் கட்சிக்குள் பிரச்சினை இருக்காது.

    ஆனால் எடப்பாடி பழனிசாமி தற்போது உள்ள வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள தயாராகி வருகிறார். இதனால் பொதுக்குழுவில் சலசலப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    ஒற்றை தலைமை இல்லாததால் கட்சியில் முடிவு எடுப்பது தாமதம் ஆகிறது. இது கட்சியின் செயல்பாட்டிற்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் தாமதமான முடிவால் பா.ஜ.க. போராட்ட அறிவிப்பை முன்னெடுத்து செல்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையில் பொதுக்குழு நடைபெறும் வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    2750 பேர் அமரக்கூடிய வகையில் இருக்கைகள் போடப்படுகின்றன. சிறப்பு விருந்தினர்களுக்கு அனுமதி இல்லாததால் சுமார் 1000 இருக்கைகள் குறைக்கப்பட்டு உள்ளது. சைவ-அசைவ உணவு, தண்ணீர் பாட்டில், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.பென்ஜமின் தலைமையில் நடந்து வருகிறது. போலீஸ் பாதுகாப்புடன் பொதுக்குழுவை சுமூகமாக நடத்தி முடிக்க எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் திட்டமிட்டு உள்ளனர்.

    • 23-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • பொதுக்குழு கூட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வமும், அவரது ஆதரவாளர்களும் மேற்கொண்ட முயற்சிகள் கை கொடுக்கவில்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னையில் ஜூன் 23-ந்தேதி நடைபெறும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தனர்.

    அந்த கூட்டத்தில் என்னென்ன தீர்மானங்கள் கொண்டு வருவது என்பது பற்றி ஆலோசனை நடத்துவதற்காக சமீபத்தில் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கூட்டம் நடத்தப்பட்டது.

    அந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வுக்கு இரட்டை தலைமைக்கு பதில் ஒற்றை தலைமை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அ.தி.மு.க.வை முன்பு போல விறுவிறுப்பாக செயல்பட வைக்க ஒற்றைத் தலைமை முறையே சிறந்தது என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வலியுறுத்தினார்கள்.

    இதற்கு ஓ.பன்னீர் செல்வமும், அவரது ஆதரவாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அ.தி.மு.க.வில் மிகப்பெரிய பூகம்பம் வெடித்து உள்ளது. மீண்டும் அ.தி.மு.க. தலைவர்கள் இரு பிரிவாக பிரிந்து காரசாரமாக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

    ஒற்றைத்தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை சமரசம் செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இரட்டை தலைமையில் உறுதியாக இருக்கும் ஓ.பன்னீர் செல்வம் தனக்கு எதிராக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்று கருதுகிறார்.

    எனவே 23-ந்தேதி நடத்த திட்டமிட்டுள்ள அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதி உள்ளார். ஆனால் இதை ஏற்க எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

    23-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    பொதுக்குழு கூட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வமும், அவரது ஆதரவாளர்களும் மேற்கொண்ட முயற்சிகள் கை கொடுக்கவில்லை. அ.தி.மு.க.வில் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருப்பதால் அந்த அணியினர் பொதுக்குழு கூட்டத்தை நடத்தி முடிக்க ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    நேற்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் வானகரம் திருமண மண்டபத்துக்கு சென்று பொதுக்குழு கூட்டத்தை எப்படி நடத்துவது என்று ஆய்வு செய்தனர். இன்றும் அவர்கள் பொதுக்குழு உறுப்பினர்களில் யார், யாரை எந்தெந்த பகுதிகளில் அமர வைக்க வேண்டும் என்று ஆய்வு செய்தனர்.

    இதனால் 23-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூடுவது உறுதியாகி இருக்கிறது.

    இதற்கிடையே அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. நேற்று அந்த மனுக்கள் மீதான விசாரணை நடந்தது. இன்று 2-வது நாளாகவும் வக்கீல்கள் வாதம் நடத்தினார்கள்.

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடர்பாக கோர்ட்டு என்ன முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கோர்ட்டு இதில் தலையிட மறுத்தாலோ அல்லது எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தாலோ அது ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறும்.

    இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி அணியினர் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு சட்ட ரீதியாகவும் தயாராகி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் இருந்து ஆதரவு கடிதங்கள் பெறப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. பொதுக்குழுவில் சுமார் 2700 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் சுமார் 2300 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் கொடுத்துள்ளனர். அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மூலம் இந்த கடிதம் பெறப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை 23-ந் தேதி திட்டமிட்டபடி நடத்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் எழுதி கையெழுத்திட்டுள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் அவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    இதனால் 90 சதவீதம் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதன் அடிப்படையில் அ.தி.மு.க. பொதுக்குழுவை உரிய நேரத்தில் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    ஏற்கனவே திட்டமிட்டப்படி தீர்மானக்குழு வரையறுத்துள்ள தீர்மானங்களை பொதுக்குழுவில் தாக்கல் செய்து ஒப்புதல் பெற எடப்பாடி பழனிசாமி அணியினர் முடிவு செய்து உள்ளனர். அப்போது ஒற்றைத்தலைமை தீர்மானமும் கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.

    குறிப்பாக பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பதவிக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை தடுத்து நிறுத்த ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அதற்கு வெற்றி கிடைக்குமா என்பது தெரியவில்லை. அதே நேரத்தில் அவர் தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அந்த கடிதத்தில் அவர், "இரட்டை தலைமையில் இருப்பவர்கள் கையெழுத்து போட்டு கொடுத்தால் மட்டுமே அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும். அ.தி.மு.க.வில் ஒற்றைத்தலைமை கொண்டு வரப்பட்டால் அதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க கூடாது" என்று கூறி இருப்பதாக தெரியவந்துள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றும் நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் கோரிக்கையை தலைமை தேர்தல் ஆணையம் ஏற்குமா என்பது சந்தேகம் என்று அரசியல் நிபுணர்கள் கூறி உள்ளனர்.

    • கடந்த 5 நாட்களாக நடந்து வரும் சர்ச்சை இன்று 6-வது நாளாக நீடித்தது.
    • எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே இன்று மதியம் வரை சமரசம் ஏற்படவில்லை. இதனால் இந்த விவகாரத்தில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    சென்னை:

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அ.தி.மு.க.வின் வேகம் குறைந்துவிட்டது என்று பல்வேறு தரப்பினராலும் கூறப்பட்டு வருகிறது.

    அ.தி.மு.க.வில் உள்ள இரட்டை தலைமை முறை தான் இதற்கு காரணம் என்பது மக்கள் மனதில் பொதுவான எண்ணமாக உள்ளது. முக்கிய பிரச்சினைகளில் முடிவுகள் எடுக்க தாமதம் ஏற்படுவதால் இரட்டை தலைமையை மாற்றிவிட்டு ஒரே தலைமையின் கீழ் அ.தி.மு.க.வை கொண்டுவர வேண்டும் என்பது பெரும்பாலான தொண்டர்களின் விருப்பமாக உள்ளது.

    தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ஒற்றை தலைமையை வருகிற 23-ந்தேதி நடக்கும் பொதுக்குழுவில் தீர்மானமாக கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும் தீவிரமாக உள்ளனர். ஆனால் ஒற்றை தலைமை வேண்டாம் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தி வருகிறார்.

    கடந்த 5 நாட்களாக நடந்து வரும் சர்ச்சை இன்று 6-வது நாளாக நீடித்தது. எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே இன்று மதியம் வரை சமரசம் ஏற்படவில்லை. இதனால் இந்த விவகாரத்தில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    6-வது நாளாக இன்று எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சென்னையில் உள்ள தங்களது வீட்டில் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்கள். இன்று காலையிலேயே எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு தம்பி துரை, சி.பாஸ்கர், மோகன் ஆகிய 3 தலைவர்களும் வந்துள்ளனர். அவர்கள் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்கள்.

    அதன்பிறகு அங்கிருந்து தம்பிதுரை மட்டும் புறப்பட்டு ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு சென்றார். அங்கு ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். நீண்டநேரம் இந்த பேச்சுவார்த்தை நீடித்தது.

    நேற்று முன்தினமும் ஓ.பன்னீர்செல்வத்துடன் தம்பிதுரை சந்தித்து பேசி இருந்தார். இன்று 2-வது நாளாக அவர்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடந்தது. அதில் என்ன முடிவு எட்டப்பட்டது? என்பது வெளியிடப்படவில்லை.

    இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு அ.தி.மு.க.வின் அனைத்து அணிகளின் தலைவர்கள் சாரை சாரையாக வந்தனர். முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தளவாய் சுந்தரமும் வந்திருந்தனர்.

    மாணவர் அணி செயலாளர் எஸ்.ஆர்.விஜய குமார், மாணவர் அணி மாநில துணை செயலாளர் வழக்கறிஞர் ஆ.பழனி மற்றும் மாவட்ட மாணவர் அணி செயலாளர்ர்கள், நிர்வாகிகள் ஏராளமான பேர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்று ஆதரவு தெரிவித்தனர்.

    இதேபோல் எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் என்.ஆர்.சிவபதி, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் டாக்டர் சுனில் ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்று ஆதரவு தெரிவித்தனர்.

    இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வேடசந்தூர் பரமசிவம் தலைமையிலும் கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர்.

    தேனி மாவட்ட பொறுப்பாளர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தேனி நகர செயலாளர் கிருஷ்ண குமார், பொருளாளர் சோலை ராஜா, முன்னாள் நகர செயலாளர் ராமர், கம்பம் ஒன்றிய செயலாளர் இளைய நம்பி உள்பட தேனி மாவட்ட நிர்வாகிகள் திரண்டு வந்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

    அனைத்து அணி தலைவர்களும் நிர்வாகிகளும் இன்று எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு திரண்டு வந்ததால் அடையார் கிரீன்வேஸ் சாலை பகுதி திருவிழா கோலாகலமாக காணப்பட்டது. அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் செல்வாக்கை உறுதி படுத்தும் வகையில் இன்று அவரது ஆதரவாளர்கள் திரண்டது குறிப்பிடத்தக்கது.

    முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியுடன் இன்று காலை நீண்ட நேரம் பேசினார். பிறகு அவர் காரில் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

    11.15 மணியளவில் அவர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினார். நேற்று இரவும் ஓ.பன்னீர் செல்வத்துடன் செங்கோட்டையன் பேசியது குறிப்பிடத்தக்கது.

    ஓ.பன்னீர்செல்வத்தை எப்படியாவது சமரசம் செய்துவிட வேண்டும் என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். இதற்காக இன்று காலை செங்கோட்டையன், தம்பிதுரையை தொடர்ந்து மேலும் சிலர் ஓ.பி.எஸ். வீட்டுகு சென்றனர். ஆனால் மதியம் வரை சுமூக முடிவு எட்டப்படவில்லை.

    ஓ.பன்னீர்செல்வமும் இன்று காலை முதல் தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அவரை வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன். அரியலூர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.

    எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அடுத்தடுத்து ஆலோசனையை தீவிரப்படுத்துவதால் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் அவர்களது ஆதரவாளர்கள் சென்னைக்கு வரத் தொடங்கி உள்ளனர்.

    • பொதுக்குழு கூட்டத்துக்கான தீர்மானம் தயாரிப்பதற்காக ஒரு குழு போடப்பட்டுள்ளது.
    • இந்த குழுவினர் தலைமை கழகத்தில் கூடி தீர்மான தயாரிப்பில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாகி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் வலுத்து வருகிறது.

    இந்த நிலையில் தலைமை கழகத்தில் நடந்தது என்ன என்பது பற்றி கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    பொதுக்குழு கூட்டத்துக்கான தீர்மானம் தயாரிப்பதற்காக ஒரு குழு போடப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தலைமை கழகத்தில் கூடி தீர்மான தயாரிப்பில் ஈடுபட்டனர்.

    அதில், அ.தி.மு.க.வின் எதிர்கால வளர்ச்சிக்கு ஒற்றை தலைமை கொண்டு வர வேண்டும் என்பதும் ஒரு தீர்மானமாக விவாதிக்கப்பட்டது. ஒற்றை தலைமை கொண்டுவர வேண்டும் என்பதுதான் தீர்மானமே தவிர அந்த ஒற்றை தலைமை எடப்பாடி பழனிசாமியா? ஓ.பன்னீர்செல்வமா? என்பது பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறிய பிறகு ஆலோசித்து எடுக்க வேண்டிய முடிவு. இது ஒரு பக்கம்.

    மேலும் தீர்மானங்கள் இறுதி செய்யப்பட்ட பிறகு எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அனுப்பி வைக்கப்படும். அதை அவர்கள் படித்து ஒப்புதல் கொடுத்த பிறகே தீர்மான புத்தகம் தயார் செய்யப்படும்.

    எனவே தீர்மானத்தில் ஏதாவது திருத்தம் செய்ய வேண்டும் என்றாலும் அவர்கள் இருவரும் செய்து கொள்ள முடியும். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி அமைதியாக சேலத்துக்கு சென்று விட்டார்.

    அதேபோல் ஓ.பன்னீர் செல்வமும் வீட்டில் அமைதியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் தலைமை கழகத்துக்கு வந்து தேவையில்லாமல் கருத்துக்களை வெளியிட்டது தான் பிரச்சினையை வளர்த்து விட்டது.

    இப்போது எடப்பாடி பழனிசாமியும் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம். அவரும் சென்னை வந்து இருக்கிறார். பிரச்சினை மேலும் மேலும் சூடாகி வருகிறது.

    பிரசவத்துக்கு முன்பே குழந்தை ஆண்தான், பெண் தான் என்று சொல்லி சண்டை போடுவது போல் இருக்கிறது. எல்லாம் ஜெயலலிதா என்ற ஒற்றை தலைமை இல்லாமல் போனதன் விளைவுதானே என்றார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையே சமாதான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • அ.தி.மு.க.வில் நீடித்து வரும் ஒற்றை தலைமை சர்ச்சை அக்கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் சூடு பிடித்துள்ளது. கடந்த 4 நாட்களாக இந்த விவகாரம் கட்சிக்குள் கடும் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

    ஒற்றை தலைமை விவகாரத்தை குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார்.

    இதற்கு எடப்பாடி பழனிசாமியோ, அவரது ஆதரவாளர்களோ எந்த விதமான கருத்துக்களையும் கூறாமலேயே உள்ளனர்.

    சென்னையில் கடந்த 14-ந்தேதி நடைபெற்ற மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர்தான் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

    இதுபற்றி எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் எடப்பாடி பழனிசாமி நேற்று காலையில் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

    அங்கு திருமண விழா ஒன்றில் பங்கேற்ற அவர் இன்று ஆரணியில் கோவில் கும்பாபிஷேக விழாவிலும் கலந்து கொண்டார்.

    இந்த நிலையில் இன்று இரவு எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்புகிறார். நாளை அவர் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபடுகிறார். இந்த கூட்டத்தில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    ஒற்றை தலைமைக்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது தொடர்பாகவும், வருகிற 23-ந்தேதி நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்குழுவில் எப்படி செயல்படுவது என்பது பற்றியும் நாளை நடைபெறும் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்துக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தனது நிலைப்பாட்டை தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே மாவட்ட செயலாளர்களை தங்கள் பக்கம் தக்க வைப்பதற்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சென்னையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நாளை ஓ.பன்னீர்செல்வம் தனியாக ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    எடப்பாடி பழனிசாமி நாளை சென்னையில் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வமும் தனியாக ஆலோசனை நடத்த முடிவு செய்திருப்பது அ.தி.மு.க.வில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் தொடர்பாக தீர்மான குழுவினர் இன்று ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் கூடி ஆலோசனை நடத்தினர்.

    இந்த கூட்டத்தில் செம்மலை, ஆர்.பி.உதயகுமார், பொன்னையன், வைகை செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ஒற்றை தலைமை விவகாரத்தில் அ.தி.மு.க.வில் மோதல் முற்றியுள்ளது. இதனால் அந்த கட்சி உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் போட்டி போட்டு அழைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தனித்தனி அழைப்பை பல மாவட்ட செயலாளர்கள் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

    இருவரும் (எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம்) இணைந்து அழைப்பு விடுக்க வேண்டும் என்றும், அதுவே கட்சியின் நலனுக்கு உகந்தது என்றும் மாவட்ட செயலாளர்கள் பலர் தெரிவித்துள்ளதாக வும் தகவல் வெளியாகி உள்ளது.

    இதற்கிடையே ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையே சமாதான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான தம்பிதுரை நேற்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அப்போது ஒற்றை தலைமை விவகாரத்தில் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக இருவரும் விவாதித்தனர்.

    இந்த நிலையில் இன்று தம்பிதுரை சென்னையில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது ஒற்றை தலைமையால் ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்ப்பது தொடர்பாக இருவரும் விவாதித்தனர்.

    ஒற்றை தலைமை விவகாரம் தீராத நிலையில் அ.தி.மு.க.வில் நடைபெற்று வரும் அடுத்தடுத்த நிகழ்வுகள் அந்த கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    இதற்கிடையே ஓ.பன்னீர் செல்வம் இன்று 4-வது நாளாக ஆதரவாளர்களுடன் சென்னையில் ஆலோசனை நடத்தினார். கடந்த 14-ந்தேதி ஒற்றை தலைமை விவகாரம் பிரச்சினையாக எழுந்த போதில் இருந்தே ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    இன்று ஓ.பி.எஸ். நடத்திய கூட்டத்தில் வைத்திலிங்கம், மைத்ரேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க.வில் நீடித்து வரும் ஒற்றை தலைமை சர்ச்சை அக்கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×