search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேஷன் கடைகள்"

    • சாா்ஜ்போட்டு வைத்து மின்தடை நாளில் நியாய விலைக் கடைகள் செயல்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்யாமல் கடைகளைப் பூட்டிச் செல்கின்றனா்.

    திருப்பூர் : 

    திருப்பூா் வடக்குப் பகுதியில் மின் தடையின்போது நியாய விலைக் கடைகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து பொதுத் தொழிலாளா் நல அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத்துக்கு, அனைத்து பொதுத் தொழிலாளா் நல அமைப்பின் பொதுச் செயலாளா் ஆ.சரவணன் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- திருப்பூா் வடக்கு பகுதிகளுக்குட்பட்ட 15 வேலம்பாளையம், அனுப்பா்பாளையம், ஆத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடையைக் காரணம் காட்டி சில நியாய விலைக் கடை ஊழியா்கள் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்யாமல் கடைகளைப் பூட்டிச் செல்கின்றனா்.

    நியாய விலைக்கடைகளில் வைத்துள்ள ஸ்டாா்ட் ஸ்கேனா் எந்திரம், எலக்ட்ரானிக் எடை அளவை எந்திரம் ஆகியவற்றை மின்தடைக்கு முந்தைய நாளே சாா்ஜ்போட்டு வைத்து மின்தடை நாளில் நியாய விலைக் கடைகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகாரிகளின் ஆய்வின்போது ரேஷன் பொருட்கள் வாங்க வரும் மக்கள் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.
    • புதியசெல்போன் செயலி மூலம் ரேஷன் கடைகளில் ஆய்வுநடத்த மாவட்ட அதிகாரிகள் தயாராகிவருகின்றனர்.

    திருப்பூர்:

    ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்பட்ட பொருட்கள், இருப்பு விவரங்கள் குறித்து மாவட்ட கலெக்டர், டி.ஆர்.ஓ., - மாவட்ட வழங்கல் அலுவலர், கூட்டுறவு சார்பதிவாளர், நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

    பாய்ன்ட் ஆப் சேல் மெஷினை நிறுத்தி ஆய்வு நடத்தப்படுகிறது. இதனால் அதிகாரிகளின் ஆய்வின்போது ரேஷன் பொருட்கள் வாங்க வரும் மக்கள் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.

    இதனை தவிர்க்க ரேஷன் கடைகளில் ஆய்வு செய்வதற்காக பிரத்யேக செயலி உணவு துறையால் உருவாக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சக்ரபாணி, அறிமுகப்படுத்தினார். இதையடுத்து திருப்பூர் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகளின் செல்போனில் இந்த செயலி நிறுவப்பட்டு வருகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் 1,135 ரேஷன் கடைகள் உள்ளன. புதியசெல்போன் செயலி மூலம் ரேஷன் கடைகளில் ஆய்வுநடத்த மாவட்ட அதிகாரிகள் தயாராகிவருகின்றனர்.

    ரேஷன் கடைக்கு செல்லும் ஆய்வு அதிகாரி தனது செல்போன் செயலியில், யூசர்நேம், பாஸ்வேர்டு அளித்து, புதிய ஆய்வுக்கான பகுதியை உருவாக்குவார். மாவட்டம், தாலுகா, ரேஷன் கடை எண் விவரங்களை அளிப்பார். உடனடியாக கடை பொறுப்பாளர் பெயர், கடை அமைவிடம் உள்பட முழு விவரம் காட்டப்படும்.

    பொருட்கள் இருப்பு, கடை குறித்த ஆய்வு, இதர ஆய்வு என்கிற 3 பிரிவில் ஆய்வு மேற்கொள்ளலாம். பொருட்கள் இருப்பு பிரிவை தேர்ந்தெடுத்து குறிப்பிட்ட பொருளின் பெயரை அதிகாரி பதிவு செய்வார். உடனடியாக அந்த கடையின் பாய்ன்ட்ஆப்சேல் மெஷினில் பதிவாகியுள்ள விவரங்கள் அடிப்படையில் விற்பனை, பொருட்கள் இருப்பு ஆகியன செயலியில் காட்டப்படும்.

    நேரடி ஆய்வுமூலம் குறிப்பிட்ட அளவில் பொருள் இருப்பு உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு முரண்பாடு இருப்பின், அவ்விவரங்களையும் அபராத தொகையையும் செல்போன் செயலியிலேயே ஆய்வு அதிகாரி பதிவு செய்து விடுவார்.

    இதேபோல் ரேஷன் கடை சரியான நேரம் இயங்குகிறதா, பணியாளர், மின் இணைப்பு, எலக்ட்ரானிக் தராசு, பொருள் இருப்பு, பாய்ன்ட் ஆப் சேல் மெஷின் செயல்பாடு ஆகிய பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து ஆம், இல்லை என பதிவு செய்யும் வசதியும் உள்ளது.செயலியை பயன்படுத்துவது எளிதாக புரிந்து கொள்ள படவிளக்கத்துடன் கூடிய விளக்க கையேடு வழங்கப்பட்டுள்ளன.குறைகள் கண்டறிந்து களையப்பட்ட பின், ரேஷன் கடை ஆய்வுகள் முழுமையாக இந்த செயலி மூலமாகவே மேற்கொள்ளப்படும் என்கின்றனர் வழங்கல் பிரிவு அதிகாரிகள்.

    • வடக்குப்பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் காலை 10 மணிக்கு மேல் திறந்து, மதியம் ஒரு மணிக்குள் அடைத்து விடுகின்றனர்.
    • ரேஷன் கடைகளை உரிய நேரத்தில் திறந்து, மக்களுக்கு பொருட்கள் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பு பொதுச்செயலாளர் சரவணன் திருப்பூர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூரில் உள்ள ரேஷன் கடைகள் சரியான நேரத்துக்கு திறப்பதில்லை. வடக்குப்பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் காலை 10 மணிக்கு மேல் திறந்து, மதியம் ஒரு மணிக்குள் அடைத்து விடுகின்றனர். மாலை, 4 மணிக்கு திறந்து 5:30 மணிக்குள் அடைத்து விட்டு செல்கின்றனர். மாதந்தோறும் 1, 30, 31-ந் தேதிகளில் கடைகளை திறப்பதே இல்லை. போயம்பாளையத்தில் உள்ள ரேஷன் கடையில் 31ந் தேதி விடுமுறை என இரண்டு நாட்களுக்கு முன்னரே தகவல் பலகையில் எழுதி வைத்து விடுகின்றனர். ரேஷன் கடைகளை உரிய நேரத்தில் திறந்து, மக்களுக்கு பொருட்கள் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக பெறப்படுகின்றன.
    • நவம்பர் 14-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

    அந்த இடங்களை நிரப்ப கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.

    அதன் அடிப்படையில் சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ரேசன் கடைகளுக்கு ஊழியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

    4 மாவட்டங்களிலும் மொத்தம் 1043 பேர் பணியில் நியமிக்கப்பட இருக்கிறார்கள். இந்த பணிகளுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு விண்ணப்ப கட்டணம் போன்ற விவரங்கள் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.

    சென்னை மாவட்டத்தில் 48 விற்பனையாளர்கள் 296 கட்டுனர் பணியிடங்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 114 விற்பனையாளர், 160 கட்டுனர்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 157 விற்பனையாளர் 21 கட்டுனர்கள், திருவள்ளூர் மாவட்டத்தில் 198 விற்பனையாளர்கள், 39 கட்டுனர் பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்படுகின்றன.

    விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக பெறப்படுகின்றன. அடுத்த மாதம் (நவம்பர்) 14-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

    • ரேஷன் அரிசி கடத்தல் புள்ளிகள் 111 பேர் குண்டர் தடுப்பு சட்டத்திற்கு இணையான கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • கடந்த ஓராண்டு காலத்தில் 11 ஆயிரத்து 8 அரிசி கடத்து வழக்குகளில், 11,121 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். 2008 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    திருச்சி:

    கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் இன்று திருச்சி வருகை தந்தார். திருச்சி அண்ணா நகர் கூட்டுறவு வங்கியில், உறுப்பினர்களுக்கு கடனுதவிகளை வழங்கினார்.

    தொடர்ந்து கல்லுக்குழி நியாய விலைக்கடையினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து டி.வி.எஸ். டோல்கேட் மின்வாரிய அலுவலகம் அருகில் உள்ள சுப்பிரமணியபுரம் நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் ஆய்வு செய்தார்.

    திருச்சி மாவட்டத்தில் 60,000 ஹெக்டேர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் திருச்சி மாவட்டத்திற்கு 40 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உடனடியாக தேவையாக இருக்கிறது. அதில் தற்போது பத்து உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் மழைக்காலங்களில் வருடா வருடம் நெல் நனைகின்றது. தற்போதைய நிலையில் தமிழகத்தில் 13½ லட்சம் மெட்ரிக் டன் நெல்லை பாதுகாக்க மூடிய குடோன்களும், மூன்றரை லட்சம் மெட்ரிக் டன் நெல்லை பாதுகாக்க வாடகை குடோன்களும் உள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் 109 தார்பாய்களான தற்காலிக குடன்களும் திறக்கப்பட்டுள்ளன.

    தற்போது டெல்டா மாவட்டங்களில் 2.6 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை பாதுகாக்கும் வகையில் 20 இடங்களில் புதிய குடோன்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தமிழக கூட்டுறவு வங்கிகளில் 67 ஆயிரம் கோடி டெபாசிட் தொகை உள்ளது. அதில் 40 ஆயிரம் கோடி நகை கடனாகவும், பத்தாயிரம் கோடிக்கு மேல் வேளாண் கடனாகவும். மேலும் பத்தாயிரம் கோடி இதர கடன்கள் என மொத்தம் 60,000 கோடி கடன் வழங்கப்படுகிறது.

    பொது சுகாதார திட்டத்தின் கீழ் நம்ம பகுதி, நம்ம ரேஷன் கடை என்ற திட்டத்தின் படி ரேஷன் கடைகளை மக்கள் விரும்பும் இடமாக மாற்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருச்சி மாவட்டத்தில் 75 ரேஷன் கடைகள் புதுப்பிக்கப்பட உள்ளன. மேலும் புதிதாக கட்டக்கூடிய ரேஷன் கடைகளில் கழிப்பிட வசதி, மாற்றுத்திறனாளிகள் வரும் வசதி, வயதானவர்கள் உட்கார வசதி ஏற்படுத்தப்படும்.

    இங்கு சிவில் சப்ளை சி.ஐ.டி.க்கு என தனி பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக அரிசி கடத்தல் தடுக்கப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் கூட 120 மெட்ரிக் டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் 100 மெட்ரிக் டன் அரிசி பிடித்துள்ளோம். இதில் முக்கிய கடத்தல் புள்ளியான சக்கரவர்த்தி என்பவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

    ரேஷன் அரிசி கடத்தல் புள்ளிகள் 111 பேர் குண்டர் தடுப்பு சட்டத்திற்கு இணையான கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் கடந்த ஓராண்டு காலத்தில் 11 ஆயிரத்து 8 அரிசி கடத்து வழக்குகளில், 11,121 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். 2008 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    அரிசி கடத்தலை தடுக்க மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ரேஷன் கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். 3,997 காலிப்பணியிடங்களை மிக விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக ரேஷன் பொருட்கள் வாங்கவில்லை என்றால் காடுகள் ரத்து செய்யும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. பொருள் தேவையில்லாதவர்கள் கௌரவ கார்டு பெற்றுக்கொள்ளலாம். இரண்டு தினங்கள் டெல்டா மாவட்டங்களில் முழுமையாக ஆய்வு மேற்கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் விவசாயிகளின் தேவைகளை அறிந்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

    • ரேஷன் கடைகளில் அரிசி வாங்கும் அட்டைதாரர்களுக்கு விருப்பத்தின் பேரில் தற்போது கோதுமை வழங்கப்பட்டு வருகிறது.
    • ரேஷன் அட்டைதாரர்கள் அரிசிக்கு பதிலாக அவர்களின் சொந்த விருப்பத்தின் பேரில் 2 கிலோ கேழ்வரகை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் 8.4.2022 அன்று உணவுத்துறை அமைச்சர், பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உரிம அளவில் ஒரு பகுதியாக, ஒரு குடும்பத்திற்கு 2 கிலோ கேழ்வரகை (ராகி) அரிசிக்குப் பதிலாக வழங்கும் திட்டம் ஒரு முன்னோடி திட்டமாக நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.

    இந்த அறிவிப்பை அடுத்து அரசுக்கு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

    2018-ம் ஆண்டில் இருந்து தமிழகத்தில் கேழ்வரகு பயிரிடப்படும் பகுதியும், உற்பத்தியின் அளவும் உயர்ந்த வண்ணம் உள்ளன. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கேழ்வரகு அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. கொள்முதல் இந்த திட்டத்தின்படி நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்ட அரிசி ரேஷன் அட்டைதாரர்கள், அரிசிக்கு பதிலாக அவர்களின் சொந்த விருப்பத்தின் பேரில் 2 கிலோ கேழ்வரகை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். அதற்காக, நீலகிரி மாவட்டத்திற்கு 920 டன் கேழ்வரகும், தர்மபுரி மாவட்டத்திற்கு 440 டன் கேழ்வரகும் என சேர்த்து மொத்தம் 1,360 டன் கேழ்வரகு தேவைப்படுகிறது.

    ரேஷன் கடைகளில் அரிசி வாங்கும் அட்டைதாரர்களுக்கு விருப்பத்தின் பேரில் தற்போது கோதுமை வழங்கப்பட்டு வருகிறது. கோதுமை, இந்திய உணவு கழகத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. கேழ்வரகையும் இந்திய உணவு கழகத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்திற்கு கேழ்வரகு எவ்வளவு தேவையோ, அதற்கேற்ப கோதுமை ஒதுக்கீட்டை சரி செய்துகொள்ள முடியும். அதுபற்றி இந்திய உணவு கழகத்திடம் கோரிக்கை வைக்க வேண்டும்.

    கோதுமைக்கு பதிலாக கேழ்வரகை கொள்முதல் செய்வதால் கூடுதல் செலவு எழ வாய்ப்பில்லை. ஏனென்றால், கோதுமை கிலோவுக்கு ரூ.2 என்றும், கேழ்வரகு கிலோவுக்கு ரூ.1 என்றும் இந்திய உணவு கழகத்தின் மூலம் வழங்கப்படுகிறது என்று உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் கூறியுள்ளார். நிர்வாக ஒப்புதல் அவரது கருத்துகளை அரசு கவனமுடன் பரிசீலித்தது. அதை ஏற்றுக்கொண்டு, ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் பரீட்சார்த்த முறையில், அரிசிக்கு பதிலாக மாதமொன்றுக்கு ஒரு குடும்பத்திற்கு அவர்களின் விருப்பத்தின் பேரில் 2 கிலோ கேழ்வரகை வழங்கும் முன்னோடி திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதலை வழங்கி தமிழக அரசு உத்தரவிடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×