search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காஞ்சிபுரம்"

    • சலவை தொழிலாளி மகன் சிவில் நீதிபதியாக தேர்வு பெற்று அசத்தியுள்ளார்.
    • தனது பணிக்காலத்தில் நேர்மையாகவும் வழக்குகளை விரைந்து முடிக்க முயலுவேன் என தெரிவித்தார்.

    காஞ்சிபுரத்தில் சலவை தொழிலாளி மகன் சிவில் நீதிபதியாக தேர்வு பெற்று அசத்தியுள்ளார்.

    காஞ்சிபுரம் சேக்குப்பேட்டை சாலியர் தெற்கு தெருவில் வசிக்கும் சலவை தொழிலாளியான கணேசன் - மேகலா தம்பதியரின் இரண்டாவது மகனான பாலாஜி, சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார்.

    அதன் பின்னர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சிவில் நீதிபதிக்கான முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்று நவம்பர் மாதம் நடைபெற்ற இறுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

    அதனைத் தொடர்ந்து ஜனவரி 30 ஆம் தேதி நடைபெற்ற நேர்முகத் தேர்வில் சிறப்பாகச் செயல்பட்டு, கடந்த 11-ம் தேதி வெளியான முடிவுகளின் படி சிவில் நீதிபதியாக தேர்ச்சி பெற்றார் பாலாஜி.

    நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்றது குறித்துப் பேசிய பாலாஜி, "நாள்தோறும் 8 மணி நேரம் இத்தேர்விற்காக பயிற்சி மேற்கொண்டு வெற்றி பெற்றுள்ளேன். தனது பணிக்காலத்தில் நேர்மையாகவும் வழக்குகளை விரைந்து முடிக்க முயலுவேன்" என தெரிவித்தார்.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து முசரவாக்கம் காலனியை சேர்ந்த தொழிலாளியான சீராளன் என்பவரை கைது செய்தனர்.
    • சீராளன் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

    காஞ்சிபுரம்:

    பாலுசெட்டி சத்திரம் அருகே உள்ள திருப்புட்குழி பகுதியை சேர்ந்தவர் கண்ணியப்பன். இவரது மனைவி பார்வதி (வயது66). கடந்த 7.12.2018-ம் ஆண்டு திருப்புட்குழி ஏரிக்கரை அருகில் உள்ள நிலத்தில் பார்வதி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முசரவாக்கம் காலனியை சேர்ந்த தொழிலாளியான சீராளன் என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி எழிலரசி தீர்ப்பு அளித்தார். அதில், சீராளன் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

    • உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டது.
    • பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியவற்றை கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

    சென்னை:

    தமிழகத்தில் அரசின் சேவைகள் மற்றும் திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடையவும், அவை பொதுமக்களுக்கு முறையாக சென்றடைகிறதா? என்பதை உறுதி செய்யவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் மக்களை நாடி, மக்கள் குறைகேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு எந்திரம் களத்திற்கே வரும் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்"என்ற புதிய திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த நவம்பர் மாதம் அறிவித்தார்.

    (4-வது புதன்கிழமைகளில்) ஒருநாள் வட்ட அளவில் தங்கி ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்க வேண்டும். மேலும் அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தடையின்றி மக்களை சென்றடை வதை உறுதி செய்ய வேண்டும்.

    ஆய்வு செய்யப்படும் வட்டத்தில் கலெக்டர்கள் காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை தங்கி இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம் தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கப்பட்டது.

    சென்னை நீங்கலாக அனைத்து மாவட்ட கலெக்டர்களும் ஒவ்வொரு வட்டத்தை தேர்வு செய்து இன்று காலை 9 மணி முதல் கிராமங்களில் அதிகாரிகளுடன் முகாமிட்டனர். அவர்கள் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரி, பள்ளிகள், அரசு விடுதிகள், பூங்கா, சமூக நல மையங்கள், பஸ் நிலையம், பொது கழிப்பிடம், போக்குவரத்து சேவை, குடிநீர் வசதி, அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்து திட்டப்பணிகள், பொது மக்களின் குறைகள் குறித்து கேட்டறிந்து மனுக்கள் பெற்றனர்.

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின்படி மாவட்ட கலெக்டர்கள் காஞ்சிபுரம், திருப்போரூர், ஊத்துக்கோட்டை வட்டங்களில் முகாமிட்டு உள்ளனர்.

    காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் காலை 9 மணியளவில் வந்தார். பின்னர் அவர் அதிகாரிகளுடன் புதிய திட்டம் குறித்தும் அதனை செயல்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

    இதைத் தொடர்ந்து இ-சேவை மையம், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரேசன் கடைகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையங்கள், சத்துணவு மையங்கள், நேரடி நெல் கொள்முதல் நிலையம், நகர்ப்புற கூட்டுறவு கடன் சங்கங்கள், விவசாய கிடங்கு, பள்ளிகளை பார்வையிட்டார்.

    பின்னர் வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், ஊராட்சி அலுவலகம், மாநகராட்சி அலுவலகங்களில் கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆய்வு செய்தார். அப்போது அலுவலகங்களில் இருந்த பொதுமக்களிடம் குறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை ஆய்வின் போது சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் தெரிவித்த கருத்துக்களின் மீது ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    இதைத் தொடர்ந்து மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை கலெக்டர் கலைச்செல்வி மோகன் பொதுமக்களுடன் கலந்துரையாடி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.

    பின்னர் அரசு விடுதிகள், பூங்கா, அறிவுசார் மையம், சமூக நலத்துறையின் மூலம் பதிவு செய்யப்பட்ட மையங்கள், பஸ் நிலையம், பொது கழிப்பிடம், பஸ் போக்கு வரத்து, அரசு ஆஸ்பத்திரிகளில் ஆய்வு செய்து இரவு தங்குகிறார்.

    நாளை காலை 6 மணி முதல் காலை 8.30 மணி வரை மீண்டும் ஆய்வுப் பணி நடக்கிறது. திடக்கழிவு மேலாண்மை, சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகள், குடிநீர் வசதி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியவற்றை கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை வட்டத்தில் கலெக்டர் பிரபு சங்கர் தங்கி ஆய்வுப் பணியில் ஈடுபட்டார். காலை 9 மணி முதல் கச்சூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அம்மம்பாக்கம் கிராமம், மதுரா சீத்தஞ்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, அங்கன்வாடி மையம், பெருஞ்சேரியில் உள்ள ரேசன் கடை, எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம், பெரியபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஊத்துக்கோட்டையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    இதைத் தொடர்ந்து மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை அரசு அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்களின் மீது ஆய்வு கூட்டம் கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் நடை பெற்றது. பின்னர் பொது மக்களிடம் கலந்துரையாடி பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெறப்பட்டது.

    மாலை 6.30 மணிக்கு ஊத்துக்கோட்டையில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணவர்கள் விடுதி, பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு நடைபெறுகிறது. பின்னர் இரவு அம்மம் பாக்கம் கிராமத்தில் கலெக்டர் பிரபுசங்கர் தங்குகிறார். நாளை (1-ந்தேதி) மீண்டும் ஆய்வு பணியை தொடங்கும் கலெக்டர் பிரபுசங்கர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், ஊத்துக்கோட்டை பேரூராட்சி சிட்ரப்பாக்கத்தில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் தூய்மை பணிகள், குடிநீர் வினியோகம், கச்சூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்கிறார்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர் வட்டத்தில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற்றது. மாவட்டத்திற்கு புதிதாக பொறுப்பேற்று உள்ள கலெக்டர் அருண்ராஜ் காலை 9 மணி அளவில் திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் அனைத்து துறை அதிகாரிகளுடன் திருப்போரூர் பேரூராட்சி பகுதியில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டம், திடக்கழிவு மேலாண்மை திட்டம், அரசு மருத்துவமனை, அரசு பள்ளிகள், சத்துணவு கூடங்களில் ஆய்வு செய்தார்.

    இதைதொடர்ந்து கேளம்பாக்கம், அருங்குன்றம், ஒரகடம், ஆமூர், கீழூர் ஆகிய கிராமங்களில் வளர்ச்சி பணிகளை ஆய்வு மேற் கொண்டு கிராமமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். கோவளம், கே.ஆர்.குப்பம் ஊராட்சிகளில் ஊராட்சி பதிவேடுகளை ஆய்வு செய்தார். நெம்மேலியில் செயல்பட்டு வரும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளை பார்வையிட்டார்.

    ஆலத்தூர் கிராமத்தில் பயனாளிகளுக்கு பட்டாக்களை கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார். பின்னர் மதியம் திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து மக்களின் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார்.

    இன்று மாலை தண்டலம் மயிலை, நாவலூர், கீழூர், ஆமூர் ஊராட்சிக்குட்பட்ட பல கிராமங்களில் தெரு விளக்குகளின் செயல்பாடுகள் மற்றும் பூங்காக்கள், பேருந்து நிலையங்களில் ஆய்வு மேற்கொள்கிறார். இரவு திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் கலெக்டர் அருண்ராஜ் தங்குகிறார்.

    நாளை காலை செம்பாக்கம், நெல்லிக்குப்பம், கொட்டமேடு, முட்டுக்காடு, கோவளம் வடநெம்மேலி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் குடிநீர் விநியோகம், தூய்மை பணிகள், திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து கலெக்டர் அருண் ராஜ் ஆய்வு மேற்கொள்கிறார். பின்னர் ஆலத்தூர், பையனூர், தண்டலம், மடையத்தூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

    உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தை பொது மக்கள் வரவேற்று உள்ளனர். மாவட்ட கலெக்டர் முதல் அதிகாரிகள் அனைவரும் பொதுமக்கள் இருக்கும் இடத்திற்கே வந்து குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதால் இந்த திட்டத்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    • 7 மகரிஷிகள் சிவவழிபாடு செய்ததாக சொல்லப்படுகிறது.
    • காஞ்சிபுரத்திலும் சப்தஸ்தான தலங்கள் இருக்கின்றன.

    தமிழ்நாட்டின் பல இடங்களில் சப்த ஸ்தானம் எனப்படும் ஏழு இடங்களூம், அது தொடர்புடைய ஏழு ஆலயங்களும் இருக்கின்றன. அவற்றில் ஐக்கியமான சப்தஸ்தான தலமாக திருவையாறைச் சுற்றி அமைந்த 7 ஊர்களூம், அதில் அமைந்த ஆலயங்களும் போற்றப்படுகின்றன. திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருச்சோற்றுத்துறை, திருபிநய்த்தானம், திருப்பழனம், திருவேதிக்குடி, திருவையாறு ஆகிய இந்த ௭ ஊர்களிலும் சப்தரிஷிகள் எனப்படும் 7 மகரிஷிகள் சிவவழிபாடு செய்ததாக சொல்லப்படுகிறது.

    அதேபோல் காஞ்சிபுரத்திலும் சப்த ஸ்தான தலங்கள் இருக்கின்றன. ஒரு முறை பிரம்மதேவன், 'காஞ்சியில் செய்யப்படும் வழிபாடுகளும், தர்மங்களும் பன்மடங்கு பலன் தரக்கூடியது என்று சப்த ரிஷிகளிடம் எடுத்துரைத்தார். அவரது அறிவுரைப்படி சப்த ரிஷிகளான அங்கிரஸ், அத்ரி, காசியபர், குச்சர், கவுதமர், வசிஷ்டர், பிருகு ஆகியோர் காஞ்சிபுரத் தில் உள்ள வியாச சாந்தலீசுவரர் என்ற கோவிலுக்கு அருகில் தனித்தனியாக சிவலிங்கம் அமைத்து வழிபட்டனர்.

    அந்த சிவலிங்கங்கள், அந்த ரிஷி களின் பெயர்களிலேயே அழைக்கப்படுகின்றன. அவை அமைந்த இடங்களும் 'சப்த ஸ்தான தலங்கள்' என்று பெயர் பெற்று விளங்குகின்றன. அவற்றைப் பற்றி இங்கே பார்ப்போம்.

     அங்கீராரீசுவரர் கோவில் (அங்கீரசம்)

    காஞ்சிபுரத்தில் உள்ள சிவ சப்தஸ்தான திருத்தலங்களில் முதலாவது கோவிலாக அமைந்திருப்பது தான் அங்கீராரீசுவரர் கோவில், இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை பிரதிஷ்டை செய்தவர் அங்கீரச முனிவர். அதனால்தான் இந்த ஆலய இறைவனின் திருப்பெயர், 'அங்கீராரீசுவரர்' என்றானது. இந்த ஆலயத்தில் சப்த ரிஷிகளில் மற்றவர்களான அத்ரி, காசியபர், குச்சர்,பிருகு, கவுதமர், வசிஷ்டர் ஆகியோரும் வழிபாடு செய்திருக்கிறார்கள். இத்தலம் பற்றிய குறிப்புகள் காஞ்சி புராணத்தில் தனிப்படலமாக சொல்லப்பட்டிருக்கிறது.

    காஞ்சிபுரத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள சிறிய காஞ்சிபுரம் என்று அழைக்கப்படும் இடம் அந்த காலத்தில் 'விஷ்ணு காஞ்சி என்று அழைக்கப்பட்டது. இங்குள்ள கண்ணப்பன் தெரு புளியந்தோப்பில் சாந்தலீஸ்வரர் கோவில் இருக்கிறது. இதன் அருகில்தான் அங்கிராரீசுவரர் கோவில் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் தூரத்தில் வெங்குடி என்ற ஊர் உள்ளது. இதன் பஸ் நிறுத்தத்தில் இருந்து தென்திசையில் சென்றால் கோவிலை அடையலாம்.

     அத்திரீசுவரர் கோவில் (அத்திரீசம் - குச்சேசம்)

    அத்ரி முனிவரும், குச்சர் முனிவரும் தனித் தனியாக ஒரே இடத்தில் சிவலிங்கங் களை பிரதிஷ்டை செய்து வழிபட்ட இடம் இது. இங்கே ஒரே கருவறையில் இரண்டு சிவலிங்கங் கள் இருக்கின்றன. அத்ரி முனிவர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் ஆவுடையாருடனும், குச்சர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் வெறும் பாண வடிவிலும் காணப்படுகின்றன. காஞ்சிபுரம் சப்தஸ்தான தலங்களில் இந்த ஆலயம். இரண்டாம் மற்றும் மூன்றாம் கோவிலாக அமைந்திருக்கிறது.

    இந்த தலம் பற்றிய குறிப்பு களும், காஞ்சி புராணத்தில் தனிப் படலமாக சொல்லப்பட்டிருக்கிறது. இரண்டு தலங்களும் ஒரே இட இடத்தில் அமைந்திருந்தாலும் இங்கே அத்ரி முனிவர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கமே பிரதானம் என்பதால், இந்த ஆலயம் 'அத்திரீகவரர் கோவில் என்றே அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் சப்த ரிஷிகளில் மற்றவர் களும் வழிபாடு செய்துள்ளனர். இந்த ஆலயம் அங்கீராரீசுவரர் கோவிலின் அருகாமையிலேயே இருக்கிறது.

     காசிபேசுவரர் கோவில் (காசிபேசம்)

    காஞ்சிபுரம் சப்தஸ்தான தலங்களில் 4-வது தலம் இதுவாகும். காசியப முனி வரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம் இங்கே மூலவராக இருக்கிறது. காசியப முனிவர் காஞ்சியில் தங்கியிருந்து சிவபூஜை செய்ததுடன், சிவனை நோக்கி தியானம் செய்தும், பல தர்ம காரியங்களில் ஈடுபட்டும் இத்தல இறைவனை வழிபாடு செய்திருக்கிறார். சிவலிங்க மூர்த்தம் மட்டுமே உள்ளதாக அறிப்படும் இத்தலம் பற்றிய குறிப்புகளும், காஞ்சி புராணத்தில் காணப்படுகிறது.

    காசியப முனிவர் பிரதிஷ்டை செய்து வணங்கியதால், இத்தல மூலவர் 'காசிபேசுவரர்' என்று அழைக்கப்படுகிறார். வெங்குடி பஸ் நிறுத்தத்தில் இருந்து தென்திசையில் சென்றால் வேகவதி ஆற்றங்கரை அம்மன் கோவில் இருக்கும். அந்தக் கோவில் வளாகத்தில் இடதுபுறம் சிறிய கோவிலாக இந்த காசிபேசுவரர் கோவில் இருக்கிறது.

     வசிட்டேசுவரர் கோவில் (வசிட்டேசம்)

    சப்தஸ்தான தலங் களில் 5-வதாக வைத்து போற்றப்படும் ஆலயம் இது. வசிஷ்டர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கம் என்பதால், இத்தல இறைவன் 'வசிட்டேசுவரர்' என்று அழைக்கப்படுகிறார். இந்த சிவலிங்கமானது வெடித்துச் சிதறி, பின்னர் வசிஷ்டரின் வழிபாட்டால் மீண்டும் ஒன்று கூடியதாக சொல்லப்படுகிறது. எனவே இத்தல இறைவனுக்கு 'வெடித்து கூடிய வசிட்டேசுவரர்' என்ற பெயரும் உண்டு. இத்தலம் பற்றியும் காஞ்சி புராணத்தில் தனிப்படலமாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்த ஆலயம் வேகவதி ஆற்றின் கரையில் உள்ள வியாச சாந்தலீசுவரர் கோவிலின் எதிர்புறம் உள்ள குளக்கரையின் தென்புலத்தில் அமைந்திருக்கிறது.

     கவுதமேசுவரர் கோவில் (கவுதமேசம்)

    காஞ்சிபுரம் சப்தஸ்தான தலங்களில் கடைசி தலமாகவும், ஏழாவது தலமாகவும் இருப்பது, கவுதமேசுவரர் கோவில் கவுதம முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கம் என்பதால் இத்தல இறைவனுக்கு 'கவுதமேசுவரர்' என்று பெயர் வந்தது. இந்த ஆலயம் பற்றிய தகவல்களும், காஞ்சி புராணத்தில் தனிப்படலமாக காணப்படுகிறது. காஞ்சியின் தென்புலத்தில் உத்திரமேரூர் செல்லும்

    சாலையில் அரசு நகர் வெளிங்கப்பட்டரை அருகில் அரச மரத் தெருவில் இந்த ஆலயம் இருக்கிறது. காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும், வேகவதி ஆற்றின் முற்பகுதியிலும் கவுதமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

     பார்க்கவேசுவரர் கோவில் (பார்க்கவேசம்)

    பிருகு முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கம் உள்ள இந்த ஆல யம், காஞ்சிபுரம் சப்தஸ்தான தலங்களில் 6-வது தலமாக போற்றப்படுகிறது. பிருகு முனிவர் வழிபட்ட மூர்த்தி என்பதால், இத்தல இறைவன் 'பார்க்க வேசுவரர்' என்றும் 'பார்க்கீசுவரர்' என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலம் பற்றிய குறிப்புகளும், காஞ்சிபுராணத்தில் தனிப் படலமாக சொல்லப்பட்டுள்ளது. காஞ்சியின் தென்புலத்தில் இருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில் ஒரிக்கை அரசு நகர் பகுதியில் இத்தலம் அமைந்திருக்கிறது. காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் வேகவதி ஆற்றின் அருகில் இந்தக் கோவில் இருக்கிறது.

    • விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்
    • தங்களது கைபேசி மூலமாகவோ, தாங்களாகவே ஆதார் எண்ணை உறுதி செய்து கொள்ளலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஜனவரி மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் வருகிற 23-ந்தேதி காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

    விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம். மேலும் பி.எம். கிசான் திட்டத்தில் அடுத்து விடுவிக்கப்பட உள்ள தவணைத்தொகையினை பெறும் வகையில் அனைவரும் கிசான் கணக்கினை புதுப்பிக்க வேண்டும். பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது கைபேசி மூலமாகவோ, தாங்களாகவே ஆதார் எண்ணை உறுதி செய்து கொள்ளலாம். http://pmkisan.gov.in எனும் இணையதளத்தில் சென்று ஆதார் இ-கே.ஒய்.சி. எனும் பக்கத்திற்கு சென்று ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் ரெயில்வே சாலையில் தலைமை அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு தினந்தோறும் காஞ்சிபுரத்தை சுற்றி உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். காஞ்சிபுரம் மட்டும் இன்றி அருகில் உள்ள திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். ஏராளமானோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த ஆஸ்பத்திரியில்அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ பிரிவு, நுண்கதிர் பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு, இயன்முறை சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, காது, மூக்கு தொண்டை சிகிச்சை பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகின்றன.

    காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் போதி கட்டமைப்பு வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுபவர்கள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இங்குள்ள காய்ச்சலுக்கான வார்டில் நோயாளி ஒருவருக்கு குளுக்கோஸ் ஏற்றும் பாட்டிலை தொங்கவிட உரிய ஸ்டாண்டு இல்லாததால் அதனை துடைப்பத்தின் நுனியில் கட்டி வைத்து பயன்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த புகைப்படும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    மருத்துவ கட்டமைப்பில் பெரும் வளர்ச்சி அடைந்து உள்ள நிலையில் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்தியில் நிலவும் இந்த நிலை பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இங்குள்ள காய்ச்சலுக்கான வார்டுகள் முறையாக பராமரிக்கப்படாமல் காணப்படுகிறது. நோயாளிகளுக்கான படுகையிலும் போதிய வசதிகள் இல்லை. குளுக்கோஸ் மற்றும் நரம்பு வழியாக ஏற்றும் மருந்துகளை தொங்கவிடுவதற்காக பயன்படுத்தும் ஸ்டாண்டுகள் பெரும்பாலான படுக்கைகளில் இல்லை.

    இதனால் தரையை துடைக்க பயன்டுத்தும் துடைப்பத்தின்(மாப்)பின் அடிப்பகுதியில் உள்ள துணியை நீக்கி விட்டு அதன் கம்புகளை மட்டும் நோயாளிகளின் படுக்கையுடன் கட்டி வைத்து உள்ளனர். அதில் குளுக்கோஸ் மற்றும் நரம்பு வழியாக செலுத்தும் மருந்து பாக்கெட்டுகளை தொங்கவிட்டு பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    பல நோயாளிகளின் படுக்கையில் இந்த துடைப்ப நுனி கட்டி வைக்கப்பட்டு உள்ளன. மேலும் பல இடங்களில் அங்குள்ள மின்விளக்கு சுவிட்சுகள் பெயர்ந்து தொங்கியபடி ஆபத்தான நிலையில் உள்ளது.


    கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த படி உள்ளது. ஆனால் காய்ச்ச்சல் வார்டில் போதிய படுக்கை இல்லாததால் பொது வார்டில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பொது வார்டுக்கு வரும் இதய நோயாளிகள், சிறுநீரகப் பிரச்சினையுடன் வரும் நோயாளிகள் சிரமம் அடையும் நிலை ஏற்பட்ட உள்ளது.

    இது தொடர்பாக காய்ச்சல் வார்டில் அனுமதிக்கப்பட்ட திருவண்ணாமலையைச் சேர்ந்த நோயாளி ஒருவர் கூறும்போது, காய்ச்சல் வார்டில் ஒவ்வொரு படுக்கையிலும் குளுக்ககோஸ் மற்றும் மருந்து பாக்கெட்டுகளை தொங்க விட துடைப்பத்தின் நுனிகள் மட்டுமே உள்ளன. இதுபற்றி ஊழியர்களிடம் கேட்டால் எந்த பதிலும் கூறுவதில்லை. ஆஸ்பத்தரியில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றார்.

    செய்யூரைச் சேர்ந்த மற்றொரு நோயாளி கூறும்போது, துடைப்பத்தின் கீழ்பகுதியில் உள்ள துணி இருந்த பகுதியை அகற்றி விட்டு அதனை ஸ்டாண்டாக பயன்படுத்தி வருகிறார்கள். நோயாளிகளின் படுக்கையில் இந்த நுனிகளில் சரியாக கட்டப்படாமல் சரிந்து விழுகிறது. எனக்கு குளுக்கோஸ் அந்த துடைப்பத்தின் கம்பில் கட்டிதான் ஏற்றினார்கள். நான் கைகளை அசைக்கும் போதெல்லாம் அது நழுவி என் மீது விழுந்தது என்று வேதனையுடன் தெரிவித்தார்.

    இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணின் கூறும்போது:-

    காய்ச்சல் வார்டில் கொசுவலை கட்டுவதற்காக துடைப்பத்தின் கம்புகளை சிலர் பயன்படுத்தி உள்ளனர். அதில் குளுக்கோஸ் மற்றும் மருந்து பாக்கெட்டுகள் தொங்க விட்டு பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்து ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது. அங்கு 32 ஸ்டாண்டுகள் உள்ளன என்றார்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில்

    காய்ச்சலுக்கு சிகிச்சை பெற ஆண்கள் மற்றும் பெண்கள் வார்டு என தனி தனி வார்டுகள் உள்ளன. ஆனால் காய்ச்சலுக்கான ஆண்கள் வார்டில் 10 படுக்கைகளும், பெண்கள் வார்டில் 12 படுக்கைகள் மட்டுமே உள்ளன.

    இதனால் வைரல் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் மற்றும் கொரோனா பாதித்து வருபவர்களுக்கு தனித்தனி வார்டு இல்லாததால் அந்த நோயாளிகளை பொது வார்டில் வைத்து சிசிச்சை அளிக்கும் நிலை காணப்படுகிறது. இதனால் பொது வார்டில் இருப்பவர்களுக்கு காய்ச்சல் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வசதிகள் மிகவும் மோசமாக உள்ளது என்றனர்.

    • காஞ்சிபுரம் நாற்திணைகளும் ஒருங்கே அமையப் பெற்ற நிலப்பரப்பாகும்.
    • காஞ்சியைச் சுற்றியுள்ள மலைத்தொடர்களும், குன்றுகளும் குறிஞ்சித் திணைக்கு உட்பட்டதாகும்.

    வேகவதி, பாலாறு, செய்யாறு ஆகிய ஆறுகள் ஓடுகின்ற காஞ்சியில் பண்டைய காலத்திலிருந்தே வைணவம் தழைத்து வளர்ந்துள்ளது.

    திருமால் உறைவிடங்களாக தமிழ் நிலத்தின் நாற்திணைகளிலும் வைணவக்கடவுள் வழிபாடு சிறப்புற்றிருந்தது என்பதைக் காண்கிறோம்.

    காஞ்சிபுரம் நாற்திணைகளும் ஒருங்கே அமையப் பெற்ற நிலப்பரப்பாகும்.

    காஞ்சியைச் சுற்றியுள்ள மலைத்தொடர்களும், குன்றுகளும் குறிஞ்சித் திணைக்கு உட்பட்டதாகும்.

    இப்பகுதி முழுவதும் காடு சூழ்ந்த முல்லைப் பகுதியாகவும், மூன்று ஆறுகள் ஓடுகின்ற செழித்த வேளாண் பூமியாக

    மருதத்திணையாகவும், கடல் மல்லை போன்ற கடற்கரைப் பட்டினம் கொண்ட நெய்தல் நிலமாகவும், காஞ்சீபுரம்

    அன்றிலிருந்து இன்று வரை விளங்குகிறது.

    இத்தகு புவியியல் அமைப்பு சார்ந்த இந்நிலப்பரப்பில் தமிழ் மரபின் நாற்திணைக்கும் தலைவனாக திருமால் விளங்கியுள்ளமையும் அறிய முடிகிறது.

    பக்தி இயக்கக்காலத்தில் வைணவம் காஞ்சியில் பொது சமயமாக தொழிலாளர், பழங்குடியினர், விலக்கப்பட்டோர் ஆகியோரையும் அரவணைத்துச் செல்லும் அருள் நெறியாக தழைத்திருந்தது என்றால் அது மிகையில்லை.

    திருமாலின் 108 திவ்விய தேங்களில் பெருமாள் கோவில் என அழைக்கப்பட்ட திருத்தலம் அமைந்ததால் தனிச் சிறப்புப் பெற்ற ஊர் காஞ்சியாகும்.

    • கார்த்திகை மாதத்தை ராசியின் பெயரால் ‘விருச்சிக மாதம்‘ என்பர்.
    • காஞ்சீபுரத்தில் உள்ள ஜோதி லிங்கமான கச்சபேசப் பெருமானை வழிபடுவது, மிகுந்த பலன் தரும்.

    கார்த்திகை மாதத்தை ராசியின் பெயரால் 'விருச்சிக மாதம்' என்பர்.

    இந்த வீடு அனல் கிரகமான செவ்வாயின் வீடாகும்.

    சூரியனுக்கு இம்மாதத்தில் வழிபாடு செய்வதால் பரம்பரை சொத்துக்களால் பயன் உண்டாகும்.

    அவை நம்மை விட்டுப் போகாது. கண் சம்பந்தமான நோய்கள் அணுகாது. பார்வையின் சக்தி மேம்படும்.

    கார்த்திகை மாதத்து ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனை வழிபடுவது, ஜோதிர் லிங்கங்களை வழிபடுவது முதலானவை மிகுந்த புண்ணியத்தை அளிக்கின்றன.

    காஞ்சீபுரத்தில் உள்ள ஜோதி லிங்கமான கச்சபேசப் பெருமானை வழிபடுவது, மிகுந்த பலன் தரும்.

    கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள சூரிய தீர்த்தத்தில் முழ்கி, அதன் கரையிலுள்ள

    இஷ்டலிங்கப் பெருமானையும், கசபேசப் பெருமானையும் வழிபட்டால், நினைத்த காரியம் நல்லபடியே நடக்கும்.

    • பெருமாள் `தாமோதரன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
    • நாபிக்கமலத்திற்குக் கீழே நீண்ட தழும்புடன் பெருமாள் காட்சி தருவது அபூர்வம்.

    மாலவனின் திருநாமங்கள் ஆயிரம். அந்த ஆயிரம் திருநாமங்களில் பன்னிரு திருநாமங்களான கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், திருவிக்ரமன், வாமணன், ஸ்ரீதரன், ரிஷிகேசன், பத்மநாபன், தாமோதரன் முதலானவை மிகவும் புகழ் பெற்றவை. இங்கே நாம் பார்க்க இருப்பது, தாமோதரன் என்ற திருநாமத்துடன் பெருமாள் வீற்றிருக்கும் ஒரு ஆலயத்தைத்தான்.

    பக்தர்களிடம் என்றென்றும் நீங்காத அன்புடையவர், பக்தர்களால் எப்போதும் தேடப்படுபவர், தாய் யசோதையால் கயிற்றினால் கட்டப்பட்ட காரணத்தினால் வயிற்றில் தழும்பினை ஏற்றுக்கொண்டவர், தாமோதரன். சமஸ்கிருதத்தில் `தாமா' என்றால் `கயிறு', `உதாரம்' என்றால் `வயிறு' என்று பொருள்படும். இதனாலேயே பெருமாள் `தாமோதரன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    காஞ்சிபுரத்திற்கு அருகில் புகழ்பெற்ற தாமல் என்ற கிராமத்தில் அமைந்துள்ள தலம், திருமாலழகி உடனாய தாமோதரப் பெருமாள் திருக்கோவில். இத்திருத்தலத்தில் நாபிக்கமலத்திற்குக் கீழே நீண்ட தழும்புடன் பெருமாள் காட்சி தருவது எங்கும் காணப்படாத அபூர்வ காட்சியாகும்.

    சுமார் ஆயிரம் ஆண்டு களுக்கு முன் இத்திருக்கோவில், மத்வ சமூகத்தைச் சேர்ந்தவர் களால் ஆராதனை செய்யப்பட்டு வந்தது. காலப்போக்கில் வைணவர்களுக்கு தானமாக இந்த கோவில் வழங்கப்பட்டதால் 'தானமல்லபுரம்' என்று அழைக்கப்பட்டுள்ளது.

    பின்னர் மருவி இவ்வூர் 'தாமல்' என்றானதாக தெரிகிறது. கி.பி. 556-ம் ஆண்டு பல்லவர் செப்பேடுகளில் தாமல் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. தாமலில் பிறந்த பல்கண்ணன் எனும் புலவர், பாண்டியன் அறிவுடைநம்பியின் அவையில் வீற்றிருந்தவர். இவரை தாமப் பல்கண்ணனார் என்று அழைப்பர். இவருக்கு கொடையாக அளிக்கப்பட்ட ஊர் என்பதால் 'தானமல்லம்' என்று அழைக்கப்பட்டு, பின் மருவி 'தாமல்' என்று ஆகியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

    வெண்ணெய் திருடும் குழந்தை கண்ணன் மீது, அக்கம் பக்கத்தவர்கள் யசோதையிடம் குறை சொல்லிக் கொண்டே இருந்தார்களாம். யசோதாதேவி கண்ணனின் விஷமத்தைக் பொறுக்க முடியாமல், ஒரு கயிற்றைக் கொண்டு உரலுடன் சேர்த்துக் கட்டிவிட்டாள். அன்பிற்குக் கட்டுப்பட்டு கண்டுண்ட கண்ணன், உரலுடன் இரண்டு மரங்களுக்கு இடையில் புகுந்து இரு தேவர்களுக்கு சாப விமோசனம் அளித்தருளினான். இதைக்கண்டு அனைவரும் வியந்து போனார்கள். கண்ணனின் வயிற்றில் கயிறு பதிந்து, அது வடுவாக மாறியது.

    வயிற்றில் பதிந்த வடுவின் காரணமாக அவருக்கு 'தாமோதரன்' என்ற திருப்பெயர் உண்டானது. கண்ணனின் இந்த லீலைகளில் மனதைப் பறிகொடுத்த மகரிஷிகள் சிலர், பெருமாளிடம் "இதே திருப்பெயருடன் இத்தலத்தில் எழுந்தருளி மக்களைக் காத்தருள வேண்டும்" என்று பிரார்த்தித்துக் கொண்டனர். அதை ஏற்றுக்கொண்ட பெருமாள், மகாலட்சுமித் தாயாருடன் தாமல் திருத்தலத்தில் தாமோதரன் என்ற திருநாமம் கொண்டு எழுந்தருளினார். இத்தலத்துப் பெருமாள் கேட்டதைக் கொடுக்கும் தாமோதரனாகவும், கேட்டதைக் கொடுக்கும் திருமாலழகியாக தாயாரும் எழுந்தருளி பக்தர்களின் பிரார்த்தனை களைப் பூர்த்தி செய்து வருகிறார்கள்.

    ராஜகோபுரமின்றி சுற்றுச் சுவர்களுடன் காட்சி தரும் இக் கோவிலின் நுழைவாசல் பகுதியில், இரண்டு கருடாழ்வார்கள் சுதைச் சிற்பமாக வீற்றிருக்கிறார்கள். மூலவர் தாமோதரப் பெருமாள் கருவறையில் உபய நாச்சியார்களோடு அழகு மிளிரக் காட்சி தந்து அருள்வதைக் காணக் கண்கோடி வேண்டும். இத்திருத் தலத்தில் தாமோதரன் நான்கு திருக்கரங்களோடு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கிறார். நான்கு திருக்கரங்களும் முறையே சங்கு, சக்கரம் ஏந்தியும், வரத, ஊரு ஹஸ்த முத்திரைகளுடனும் காணப்படுகின்றன.

     ஆலயத்தின் அர்த்த மண்டபத்தில் அமைந்துள்ள தேவியர்களுடன் உற்சவர் வீற்றிருக்கிறார். ஸ்ரீதேவி- பூதேவி உடனாய தாமோதரப் பெருமாள் என்பது இவரது பெயர். திருமாலழகி என்ற அழகிய திருநாமத்தோடு, தனிச் சன்னிதியில் அமர்ந்த கோலத்தில் தாயார் காட்சியளிக்கிறார்.

    இந்த தாயாருக்கு நான்கு கரங்கள் உள்ளன. இவரது உற்சவத் திருமேனியின் திருநாமமும் திருமாலழகி என் பதுதான். மற்றொரு தனிச் சன்னிதியில் ஆண்டாள் காட்சி தருகிறார். இச்சன்னிதியில் ஆண்டாளின் உற்சவர் திருமேனியும் இருக்கிறது. முன் மண்டபத்தில் விஷ்வக்சேனர், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருப்பாணாழ்வார், குமுதவல்லி, திருமங்கையாழ்வார், திருக்கச்சி நம்பி, ராமானுஜர், வேதாந்த தேசிகர் முதலான ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியார்களின் சிலை வடிவங்கள் காணப்படுகின்றன. ஆஞ்சநேயர் ஒரு சிறிய சன்னிதியில் எழுந்தருளியுள்ளார்.

    பொதுவாக பெருமாள் நெற்றியில் திருமண், ஸ்ரீசூர்ணத்துடன் காட்சியளிப்பது வழக்கம். ஆனால் இத்தலத்தில் மூலவர் தாமோதரப் பெருமாள், ரோகிணி நட்சத்திரம் அன்று நெற்றியில் கஸ்தூரி திலகத்துடன் ராஜ அலங்காரத்தில் அருள்கிறார். மத்வர்களுக்கு மதிப்பு தரும் வகையில் இத்தல உற்சவர் தினமும் கஸ்தூரித் திலகத்துடன் காட்சி தருகிறார். வைகானஸ ஆகம விதிப்படி இத்தலத்தில் வழிபாடுகள் நடைபெறுகின்றன. இத்தலத்தின் தீர்த்தம் விபுல ஸரஸ் என்பதாகும். தல விருட்சமாக வில்வம் மற்றும் புன்னை மரங்கள் உள்ளன.

    இத்தலத்து மூலவரின் கால்களில் வெள்ளிக் கொலுசுகள் மின்னுகின்றன. குழந்தைச் செல்வம் வேண்டுபவர்கள் இத்தலத்திற்கு வந்து தாமோதரப் பெருமாளை வணங்கி, குழந்தைச் செல்வம் தந்தருளுமாறு வேண்டிக்கொள்கிறார்கள். தாமோதரப் பெருமாளின் திருவருளால் மழலைச் செல்வம் வாய்க்கப் பெற்ற பின்னர், இத்தலத்திற்கு வந்து பெருமாளுக்கு வெள்ளிக்கொலுசை சமர்ப்பித்து வணங்கி மகிழ்கிறார்கள்.

    இவ்வாலயத்தில் சித்திரையில் மகாசாந்தி ஹோமம் மற்றும் கோடை உற்சவம், வைகாசி மாதத்தில் வஸந்த உற்சவம், ஆனி மாதத்தில் தாமோதரப் பெருமாள் லட்சார்ச்சனை, கருட சேவை, அன்னக்கூட திருப்பாவாடை உற்சவம், ஆடியில் தாயாருக்கு திருவிளக்கு பூஜை, ஆவணியில் பவித்ரோத்சவம், புரட்டாசி மாதம் முழுவதும் திருப்பதி ஸ்ரீனிவாச திருக்கோலத்தில் பெருமாள் சேவை சாதித்தல், கார்த்திகையில் ஆஞ்சநேயர் லட்சார்ச்சனை, மார்கழியில் ஆண்டாள் போகி உற்சவம், மாசியில் மாசி மகம், பங்குனியில் பங்குனி உத்திரத் திருக்கல்யாண உற்சவம் முதலான விழாக்கள் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.

    இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை, பக்தர்களின் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    சென்னையில் இருந்து வேலூா் செல்லும் நெடுஞ்சாலையிலும், காஞ்சிபுரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் தாமல் கிராமம் உள்ளது. திருப்புட்குழி என்ற இடத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆலயத்தை அடையலாம்.

    • மணிகண்டீஸ்வரர் லிங்கம் 1350 வருடங்கள் பழமையானது.
    • மணிகண்டீஸ்வரர் குறிப்புகள் காஞ்சி புராணத்தில் தனிப்படலமாக உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே தேவரியம்பாக்கம் ஊராட்சி தோண்டான்குளம் கிராமத்தில் உள்ள மணிகண்டீஸ்வரர் லிங்கம் 1350 வருடங்கள் பழமையானது. இந்த லிங்கம் வெட்ட வெளியில் இருப்பதை கண்டு, கிராம மக்கள் கோவில் கட்டமுடிவு செய்தனர். இதற்காக கால்கோள் பூஜை திருவாரூர் சிவ நடராஜன் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஆலய திருப்பணிக் குழுவினர், தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமார் மற்றும் தோண்டான்குளம் கிராமம், தேவரியம்பாக்கம் ஊராட்சி மக்கள் செய்து இருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    தலவரலாறு

    பிரம்மன், திருமால் உள்ளிட்ட அனைத்து தேவர்களும் மணிகண்டீஸ்வரரை வழிபட்டு உள்ளனர். மணிகண்டீஸ்வரர் பற்றிய குறிப்புகள் காஞ்சி புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு பொதுவாக காணப்படுகிறது. திருப்பாற்கடலை கடைந்த போது தோன்றிய நஞ்சுவால் துயரம் அடைந்த, தங்களைக் காத்துக்கொள்ளும் பொருட்டு அந்ந நஞ்சை இறைவனுக்கு கொடுத்து உண்ணுமாறு செய்த பாவம் நீங்கும்படி பிரம்மன், திருமால் ஆகியோர் தங்களை காத்த இறைவனின் மணிகண்டத்திற்கு (கண்டம்-கழுத்து) போற்றி செய்யும் வகையில் `மணிகண்டம்' எனும் பெயரிலேயே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு தங்களின் பாவத்தை போக்கிக் கொண்டனர் என்பது தல வரலாறாகும்.

    சிவன் அருள் பெற்ற இங்குள்ள குளம் மனிதர்களால் தோண்டப்படாமலே சுவையான நீரூற்று பெற்று இயற்கையாகவே அமைந்ததன் பொருட்டு தோண்டாகுளம் என்றும் பின் தோண்டாங்குளம் என்றும் மருவியது.

    • தடுப்பு கட்டைகள் உடைந்து விழுந்ததில் அருகே நின்றிருந்த இருசக்கர வாகனங்கள் நசுங்கியது.
    • சரக்கு ரெயில் விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து காயில் ஏற்றி வந்த சரக்கு ரெயில் காஞ்சிபுரம் பழைய ரெயில் நிலைத்தில் விபத்தில் சிக்கியது. தண்டவாளத்தில் இருந்த தடுப்புகளை உடைத்து கொண்டு அருகில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.

    வாகனங்கள் மீது ரெயில் மோதியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில், ரெயில் தண்டவாளத்தில் இருந்து வெளியேறி சாலைக்கு வந்து நின்றது. சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்தில் சிக்கிய சம்பவம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • 649 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 22 லட்சம் கடன் உதவிகளை கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முக சுந்தரம் வழங்கினார்.
    • கூடுதல் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் இணைப்பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் முதல் முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 7 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், 10 மருந்தகங்கள், பணியாளர் கூட்டுறவு சங்கங்கள், காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் 602 கூட்டுறவு நியாய விலை கடைகளில் கியூ ஆர் கோடு மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் நடைமுறையை கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம் அறிமுகம் செய்து வைத்தார்.

    இதனால் பொதுமக்கள் தாங்கள் வாங்கும் பொருள்களுக்கு நேரடியாக பணம் வழங்காமல் ஸ்மார்ட் போன் மூலமாக கியூ ஆர் கோடை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். இதற்கு வர வேற்பு உள்ளது.

    இதை தொடர்ந்து 649 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 22 லட்சம் கடன் உதவிகளை கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முக சுந்தரம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் முருகன், காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் இணைப்பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×