search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாப்ட்வேர்கள்"

    • சொத்துவரி உயர்வு வரும் ஜூலை 1-ந் தேதி செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • புதிய வரி உயர்வுக்கான சாப்ட்வேர்கள் உருவாக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    ஈரோடு:

    தமிழக அரசு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி பொது சீராய்வு செய்திட அரசாணை பிறப்பித்தது. இதன்பேரில் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி சீராய்வு தொடர்பான கூட்டம் நடத்தி மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இதில், ஈரோடு மாநகராட்சியில் கடந்த ஏப்ரல் மாதம் 11-ந் தேதி சொத்து வரி பொது சீராய்வு கூட்டமும் கடந்த மே மாதம் 24-ந் தேதி நடத்தப்பட்ட அவசர கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஒப்புதலுடன் சொத்து வரி உயர்வுக்கு ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதை தொடா்ந்து ஈரோடு மாநகராட்சியில் அரசாணைப்படி கடந்த 1-4-2022-ம் தேதியில் இருந்து புதிய சொத்து வரி அமல்படுத்தப்பட்டு, இந்த வரி உயர்வினை வரும் ஜூலை 1ம் தேதி செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி உதவி ஆணையர்(கணக்கு) குமரேசன் கூறியதாவது:-

    விலைவாசி உயர்வு, பணியாளர்களின் ஊதிய உயர்வு, பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை தேவை மற்றும் மாநகராட்சியில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தி பராமரிப்பு செய்தல் போன்றவற்றிற்கு தேவைப்படும் கூடுதல் செலவினம், மாநகராட்சி செலுத்த வேண்டிய கடன் தொகை மற்றும் பிற துறைகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகை ஆகியவற்றை கருத்தில் கொண்டும், பொதுமக்களுக்கு சிறப்பான சேவைகளை அளிக்க ஏதுவாகவும் அரசாணையில் அறிவுறுத்தியுள்ளவாறு, கோயம்புத்தூர் மாநகராட்சி சட்டம் 1981 அத்தியாயம் 5 பிரிவு, 118ல் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றியும் மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட கூட்ட பொருட்களின் அடிப்படையில் ஈரோடு மாநகராட்சியில் சொத்து வரி உயா்வு பொது சீராய்வு செய்யப்பட்டது.

    இதையடுத்து புதிய வரி உயர்வு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் 600 சதுர அடிக்கு குறைவான பரப்பளவில் இருந்தால் பழைய வரி தொகையில் கூடுதலாக 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

    601 சதுர அடி முதல் 1200 சதுர அடிக்குள் இருந்தால் 50 சதவீதமும், 1,201 சதுர அடி முதல் 2800 சதுர அடி வரை இருந்தால் 75 சதவீதமும், 2,800 சதுர அடிக்கு மேல் இருந்தால் 100 சதவீதம் வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது.

    அதேபோல், காலியிடங்களுக்கு ஏற்கனவே உள்ள வரியில் இருந்து 100 சதவீத உயர்வும், பள்ளி, கல்வி நிறுவனங்களுக்கு 50 சதவீதம் உயர்வும், தொழிற்சாலைகளுக்கு 100 சதவீதமும், வணிக நிறுவனங்களுக்கு 150 சதவீதமும் வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு அரசாணைப்படி கடந்த 1-4-2022ம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது.

    ஆனால், மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அதன்பிறகு தான் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளதால், அது அரசு கெஜட்டில் பதிவு செய்வதற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புதிய வரி உயர்வுக்கான சாப்ட்வேர்கள் உருவாக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்த வரி உயர்வு வரும் ஜூலை 1-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

    முதல் அரையாண்டிற்கான புதிய வரியை வரும் செப்டம்பர் 30-ந் தேதிக்குள்ளும், 2-ம் அரையாண்டிற்கான வரியை வரும் அக்டோபர் 1-ந் தேதி முதல் ஆண்டு(2023) மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் செலுத்தலாம். புதிய வரி விதிப்புக்கு மக்கள், மாநகராட்சி அலுவலகத்தில் உரிய விண்ணப்பத்தை பூா்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×