search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "களக்காடு"

    • நாகராஜ் ஜெ.ஜெ.நகர் விலக்கு அருகே தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.
    • சோமசுந்தரம் நாகராஜிடம் அரிவாளை காட்டி மிரட்டி, ரூ. 300 ஐ எடுத்துக் கொண்டார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூர், மெயின்ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 57). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் ஜெ.ஜெ.நகர் விலக்கு அருகே தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த வடக்கு கள்ளிகுளத்தை சேர்ந்த அப்பாவு மகன் மாடசாமி என்ற சோமசுந்தரம் (37) நாகராஜிடம் செலவுக்கு ரூ. 500 கேட்டுள்ளார். அதற்கு நாகராஜ் பணம் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சோமசுந்தரம் அரிவாளை காட்டி மிரட்டி, அவரது சட்டை பையில் வைத்திருந்த ரூ. 300 ஐ எடுத்துக் கொண்டார். மேலும் இதுபற்றி போலீசில் புகார் செய்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

    இதுபற்றி நாகராஜ் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, சோமசுந்தரத்தை தேடி வருகிறார்.

    • சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.
    • சுவாமி, அம்பாள் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தனர்.

    களக்காடு:

    களக்காடு சத்தியவா கீஸ்வரர் கோமதி அம்பாள் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவின் தொடர்ச்சியாக பட்டிட பிரவேச விழா நடந்தது.

    இதையொட்டி சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து சுவாமி, அம்பாள் விஷேச அலங்காரத்தில் காட்சி அளித்தனர். சிறப்பு தீபாராதனைகளுக்கு பின் சுவாமி, அம்பாள் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை களக்காடு பக்தர் பேரவையினர் செய்திருந்தனர்.

    • செந்தில்குமார் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
    • போலீசார் சாதுர்யமாக செந்தில்குமாரை பிடித்து, போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே சிங்கிகுளம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சிங்கிகுளம், நவீன் நகரை சேர்ந்த தொழிலாளி செந்தில்குமார் (வயது 43) என்பவர் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    உடனே போலீசார் அவரை பிடிக்க முயற்சி செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்துள்ளார்.

    இருப்பினும் போலீசார் சாதுர்யமாக செயல்பட்டு செந்தில்குமாரை பிடித்து, களக்காடு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    இதுகுறித்து களக்காடு இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி செந்தில்குமாரை கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து 42 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • கீழப்பத்தை வடக்குத் தெருவை சேர்ந்த ரமேஷ் (33) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
    • குற்றவாளிகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்வதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கீழவடகரை கிராமத்தில் ஒரு தோட்டத்தில் மின்சார வேலியில் சிக்கி கரடி உயிரிழந்தது.

    இது தொடர்பாக வனத்துறையினர் நடத்திய விசாரணையில் மர்ம கும்பல் மின்சார வேலி அமைத்து கடமான், பன்றி, முயல், உடும்பு போன்ற வனவிலங்குகளை தொடர்ந்து வேட்டையாடி கறியை பங்கு போட்டது தெரியவந்தது.

    இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் தலைமையில் களக்காடு வனசரகர் பிரபாகரன் மற்றும் வனத்துறையினர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    இவர்கள் கடந்த 15-ந்தேதி தோட்டக் காவலாளியான நாகன்குளத்தை சேர்ந்த கணேசனை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று இந்த வழக்கில் தொடர்புடைய கீழப்பத்தை வடக்குத் தெருவை சேர்ந்த ரமேஷ் (33) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் வன விலங்குகளை வேட்டையாடி களக்காடு சுற்று வட்டாரத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் கறியை பங்கு போட்டுள்ளதாகவும், குற்றவாளிகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்வதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    தலைமறைவாகியுள்ள 20-க்கும் மேற்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று வனத்துறை தனிப்படையினர் கூறினர்.

    • அய்யப்பன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • ஈஸ்வரிக்கும், சீனித்துரைக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மலையடிபுதூர் பருத்திவிளை தெருவை சேர்ந்தவர் ராமையா மகன் அய்யப்பன் (வயது35). தொழிலாளி.

    இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள சுடலை கோவிலில் புகுந்து சாமி சிலையை சேதப்படுத்தினார். இதனைதொடர்ந்து அவரை கைது செய்ய வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அய்யப்பனின் மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தினால் தான் அய்யப்பன் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    அய்யப்பனுக்கும், அவரது மனைவி ஈஸ்வரிக்கும் (வயது29) கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1 மகளும், 2 மகன்களும் உள்ளனர். அதே ஊரை சேர்ந்தவர் சீனித்துரை. விவசாயி. இவரது தோட்டத்திற்கு ஈஸ்வரி வேலைக்கு சென்றுள்ளார். இந்த பழக்கத்தின் காரணமாக ஈஸ்வரிக்கும், சீனித்துரைக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

    கடந்த 12-ந்தேதி அய்யப்பன் வீட்டிற்கு வந்த போது, ஈஸ்வரியும், சீனித்துரையும் பேசிக் கொண்டிருந்ததை பார்த்தார். இதனால் மனம் உடைந்த அவர் மனைவியை கண்டித்துள்ளார். இருப்பினும் அவருக்கு ஆத்திரம் குறையாததால் வீட்டில் உள்ள துணிகளுக்கு தீ வைத்துள்ளார்.

    பின்னர் சுடலை கோவிலுக்குள் சென்று சாமி சிலையை சேதப்படுத்தியுள்ளதும் விசாரணையில் அம்பலமானது.

    இதுகுறித்து அய்யப்பனின் தந்தை ராமையாவும் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். அத்துடன் அய்யப்பனின் உறவினர்களும், கிராம மக்களும் இருவரையும் கைது செய்ய கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனைதொடர்ந்து ஏர்வாடி இன்ஸ்பெக்டர் ஆதம் அலி, சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் அய்யப்பனை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரியை கைது செய்தனர். இதுதொடர்பாக தலைமறைவாக உள்ள சீனித்துரையை தேடி வருகின்றனர். 

    • முத்துப்பாண்டி குடும்பத்தினருக்கும், வேல்ராணிக்கும் தகராறு இருந்து வருகிறது.
    • சரவணன், ராஜம்மாள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சீவலப்பேரி தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர் அப்பகுதியில் ஓட்டல் வைத்துள்ளார். இவரது வீட்டு முன்புள்ள பாதையை பயன்படுத்துவது தொடர்பாக இவரது குடும்பத்தினருக்கும், அதே பகுதியை சேர்ந்த மணி மகள் வேல்ராணிக்கும் தகராறு இருந்து வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன் இது சம்பந்தமாக அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் முத்துப்பாண்டியின் மோட்டார்சைக்கிளை வேல்ராணியும், அவரது தங்கை ராஜலெட்சுமியும் அடித்து உடைத்து, சேதப்படுத்தினர். இதுகுறித்து முத்துப்பாண்டியின் மனைவி ராஜம்மாள் களக்காடு போலீசில் புகார் செய்தார்.

    சம்பவத்தன்று அந்த வழியாக வந்த முத்துபாண்டியின் மகன் சரவணனிடம் (வயது 27) வேல்ராணி, அவரது தங்கை ராஜலெட்சுமி, ராஜலெட்சுமி மகன் அஜெய்செல்வன் ஆகியோர் எங்களை பற்றி எப்படி போலீசில் புகார் செய்யலாம் என்று கேட்டனர். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது சரவணன் தகராறை செல்போனில் படம் எடுத்தார். இதைப்பார்த்த வேல்ராணி உள்பட 3 பேரும் செல்போனை தட்டி விட்டதுடன் சரவணனை கம்பால் தாக்கினர். இதனை தடுக்க சென்ற சரவணனின் தாயார் ராஜம்மாளையும் (50) கீழே தள்ளி தாக்கினர். பின்னர் கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதனால் காயம் அடைந்த சரவணன், அவரது தாயார் ராஜம்மாள் ஆகியோர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சரவணன் பணகுடி பேரூராட்சி அலுவலகத்தில் பொறியாளராக பணி புரிந்து வருகிறார். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வேல்ராணி உள்பட 3 பேரையும் தேடி வருகிறார்.

    • கீழவடகரையில் உள்ள ஒரு தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கி கரடி உயிரிழந்தது.
    • மின்வேலியில் சிக்கி உயிரிழக்கும் விலங்குகளை இவர்கள் குழி தோண்டி புதைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.

    களக்காடு:

    களக்காடு அருகே பத்மநேரி பீட் கீழவடகரையில் உள்ள ஒரு தோட்டத்தில் அமைக்கப்பட்ட சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி கரடி உயிரிழந்தது.

    இதனை சிலர் குழி தோண்டி புதைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசா ரணையில் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஒரு கும்பல் சட்டவிரோத மின்சார வேலி அமைத்து கடமான், பன்றி, உடும்பு, முயல் போன்ற வனவிலங்குகளை வேட்டையாடியதும், அதன் கறிகளை பங்கு போட்டதும் அம்பலமானது.

    மேலும் மின்வேலியில் சிக்கி உயிரிழக்கும் கரடி போன்ற விலங்குகளை இவர்கள் குழி தோண்டி புதைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.

    இந்த வேட்டை கும்பலில் சிக்கி 100-க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் உயிரிழந்திருக்கலாம் என்று வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக தோட்டக் காவலாளியான நாகன்குளத்தை சேர்ந்த கணேசன் (54) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வேட்டையாடப்பட்ட வனவிலங்குகளின் கறியை முக்கிய பிரமுகர்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் பங்கு போட்டதும் கண்டுபிடிக்க ப்பட்டுள்ளது. விசா ரணைக்கு பின் கணேசனை வனத் துறையினர் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர் படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள கீழவடகரையை சேர்ந்த கசாலி கண்ணன், ஜெயராஜ், பாலன் உள்பட 20க்கும்.மேற்பட்டவர்களை கைது செய்ய களக்காடு துணை இயக்குனர் ரமேஷ்வரன் தலைமையில் வனசரகர்கள் களக்காடு பிரபாகரன், கோதையாறு சிவலிங்கம், வனத்துறை ஊழியர்கள் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு ள்ளனர். தலைமறைவாகி உள்ளவர்கள் பிடிபட்டால் மேலும் பல்வேறு தகவல்கள் வெளிவரும் என்று வனத்துறையினர் நம்புகின்றனர்.

    இதற்கிடையே கீழவட கரை மலையடி வாரத்தில் வேறு எங்காவது வன விலங்குகள் புதைக்கப்பட்டுள்ளதா என்றும் சோதனை நடத்தி வருகின்றனர். வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளையும் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் வனத்துறையினர் கருதுகின்றனர்.

    எனவே மலையடிவார தோட் டங்களில் வெடிகுண்டு தயார் செய்ததற்கான அறிகுறிகள் தென்படுகிறதா? என்றும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

    • களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் மதியம் வரதராஜ பெருமாள், வெங்கடாசலபதி, தேவியர்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது
    • வரதராஜபெருமாளும், வெங்கடாசலபதி சுவாமிகளும் விஷேச அலங்காரத்தில் காட்சி அளித்தனர்.

    களக்காடு:

    களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் 3-வது புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு கருட சேவை விழா நடந்தது. இதையொட்டி மதியம் வரதராஜ பெருமாள், வெங்கடாசலபதி, தேவியர்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இரவில் வரதராஜபெருமாளும், வெங்கடாசலபதி சுவாமிகளும் விஷேச அலங்காரத்தில் காட்சி அளித்தனர்.

    அதனைதொடர்ந்து வரதராஜபெருமாளும், வெங்கடாசலபதி சுவாமிகளும் தனித்தனி கருட வாகனங்களில் எழுந்தருளி, ரதவீதிகளில் உலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். வரும் 15-ந் தேதியும் கருட சேவை உற்சவம் நடக்கிறது.

    • காட்டு பன்றிகள் கூட்டம் அவரது விளைநிலங்களில் புகுந்து வாழைகளை சாய்த்து அதன் குருத்துகளை தின்று அட்டகாசம் செய்துள்ளன.
    • வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் பாராமுகமாக உள்ளனர்.

    களக்காடு:

    களக்காடு தலையணை மலையடிவாரத்தில் உள்ள கள்ளியாறு பகுதியில் களக்காட்டை சேர்ந்த விவசாயி மல்லிகைராஜ்க்கு (வயது40) சொந்தமான விளைநிலங்கள் உள்ளன.

    வாழைகள்

    இதில் அவர் வாழை, பயிர் செய்துள்ளார். இந்நிலையில் காட்டு பன்றிகள் கூட்டம் அவரது விளைநிலங்களில் புகுந்து வாழைகளை சாய்த்து அதன் குருத்துகளை தின்று அட்டகாசம் செய்துள்ளன.

    இதனால் 50-க்கும் மேற்பட்ட வாழைகள் நாசமானது. இந்த வாழைகள் ஏத்தன் ரகத்தை சேர்ந்தது ஆகும். இதனால் அவருக்கு ஆயிரக்கணக்கன ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    தொடர் அட்டகாசம்

    இப்பகுதியில் ஏற்கனவே ஒற்றை காட்டு யானையும் தென்னை, பனை மரங்களை சாய்த்து வரும் நிலையில் காட்டு பன்றிகளும் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதால் விவசாயிகள் செய்வதறியாது தவிக்கின்றனர்.

    வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் உயிரை பணயம் வைத்து, கடுமையாக போராடி வருகின்றனர். இதுபற்றி களக்காடு ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முருகன் கூறியதாவது:-

    இழப்பீடு

    அதிகரித்து வரும் வனவிலங்குகள் அட்ட காசத்தை தடுக்கவும், பயிர்கள் நாசமாகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் பாராமுகமாக உள்ளனர்.

    வனவிலங்குகள் அச்சுறுத்தலால் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே யானை, காட்டு பன்றிகளை விளைநிலங்களுக்குள் வராமல் விரட்டவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல்வேறு அம்மன் கோவில்களில் இருந்து வரும் சப்பரங்கள் ஒரே இடத்தில் காட்சி கொடுக்கும் வைபவம் நடத்தப்படுவது வழக்கம்.
    • இந்த வருடம் 13-ம் ஆண்டு தசரா காட்சி நேற்று இரவில் வெகு விமர்சையாக நடந்தது.

    களக்காடு:

    களக்காட்டில் தசரா திருவிழாவை முன்னிட்டு பல்வேறு அம்மன் கோவில்களில் இருந்து வரும் சப்பரங்கள் ஒரே இடத்தில் காட்சி கொடுக்கும் வைபவம் நடத்தப்படுவது வழக்கம்.

    ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த திருவிழா ரத்து செய்யப்பட்டது.இந்த வருடம் 13-ம் ஆண்டு தசரா காட்சி நேற்று இரவில் வெகு விமர்சையாக நடந்தது.

    இதையொட்டி களக்காடு நாடார் புதுத்தெரு முப்பிடாதி அம்மன், சிதம்பரபுரம் உச்சினிமாகாளி அம்மன், பாரதிபுரம் உச்சினிமாகாளி அம்மன், மேலரதவீதி கற்பகவல்லி அம்மன், கோவில்பத்து துர்க்கா பரமேஸ்வரி அம்மன், கோவில்பத்து முப்பிடாதி அம்மன், விஸ்வகர்மா தெரு சந்தனமாரி அம்மன், தோப்புத்தெரு அங்காள பரமேஸ்வரி அம்மன், கழுகேற்றி முக்கு முப்பிடாதி அம்மன், கப்பலோட்டிய தமிழன் தெரு முப்பிடாதி அம்மன் கோவில்களில் இருந்து புறப்பட்டு வந்த 10 அம்மன் சப்பரங்களும் களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோமதி அம்பாள் கோவில் முன்பு ஒரே இடத்தில் எழுந்தருளி காட்சி அளித்தனர்.

    இவர்களுடன் சத்தியவா கீஸ்வரர், கோமதி அம்மன், வரதராஜபெருமாளும் காட்சி கொடுத்தனர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ராமசாமி ஜான் டக்லஸ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார்.
    • நாய் எதிர்பாராதவிதமாக ராமசாமி சென்ற மோட்டார் சைக்கிளில் பாய்ந்தது.

    நெல்லை:

    களக்காடு அருகே உள்ள பூதத்தான் குடியிருப்பை சேர்ந்தவர் ராமசாமி(வயது 68). இவர் நேற்று புலவன் குடியிருப்பு தெற்கு தெருவை சேர்ந்த ஜான் டக்லஸ்(35) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார்.

    அப்போது சாலையின் குறுக்காக ஓடிய நாய் எதிர்பாராதவிதமாக ராமசாமி சென்ற மோட்டார் சைக்கிளில் பாய்ந்தது. இதனால் மோட்டார் சைக்கிள் சாலையில் சறுக்கியதில் ராமசாமி தவறி கீழே விழுந்தார்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ஜான் டக்லசிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நகராட்சியில் நடந்து வரும் குப்பைகள் சேகரிக்கும் பணிகளை நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் விஜயலெட்சுமி ஆய்வு மேற்கொண்டார்.
    • ஆய்வின் போது ஆணையாளர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    களக்காடு:

    களக்காடு நகராட்சியில் நேற்று நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் விஜயலெட்சுமி ஆய்வு மேற்கொண்டார்.

    அவர் நகராட்சியில் நடந்து வரும் குப்பைகள் சேகரிக்கும் பணி, உரகிடங்கு பணிகள், மாணிக்கம் குளத்தில் தூர்வாரப்பட வேண்டிய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அவருடன் ஆணையாளர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார், மேற்பார்வையாளர்கள் சண்முகம், வேலு உள்பட பலர் சென்றனர்

    ×